ஔவையார் தனிப்பாடல்கள்/மறப்பித்தாய்!

90. மறப்பித்தாய்!

தியமான் தருமபுரியில் இருந்து அரசாண்டவன். அதியர் கோமான் எனவும், மழவர் கோமான் எனவும் போற்றப் பெறுபவன். அத்துடன் ஔவையார்பால் அளவு கடந்த நட்பும் அவருடைய தமிழ்ப் பாக்களிடத்தே அளவிறந்த ஈடுபாடும் உடையவன்.

ஒரு சமயம், நெடுநாள் உயிர்வாழ உதவும் அரிதான கரு நெல்லிக்கனி ஒன்று அவனுக்குக் கிடைத்தது. தான் உண்டு தன் வாணாளைப் பெருக்குவதற்கு நினையாமல், அதனைத் தன் அவையிலிருந்த ஔவையாருக்கு வழங்கி மகிழ்ந்தான் அவன். அவனுடைய அந்தச் செயற்கரிய செயலை வியந்து ஔவையார் பாடியதாக வழங்கும் செய்யுள் இது.

புள்வேளுர் என்றொரு ஊரில் பூதன் என்பவன் இருந்தான். வந்தவர்களுக்கு வாரி வழங்கிச் சிறந்திருந்தான். அவனால் உபசரிக்கப்பெற்று இன்புற்றவர் ஔவையார். அவனுடைய அந்தச் சோற்றுக்கொடையின் நினைவு எழுந்தது. அவனுடைய ஊர் அழகிய தாமரை மலர்கள் செறிந்த குளங்களாற் சூழப்பெற்ற வளம் உடையது என்பதனையும் நினைத்தார்.

அந்தப் புள்வேளுரிடத்தே பால்போன்று இனிதான நீருடன் வருகின்ற பெண்ணையாற்றினையும் உளங்கொண்டார். 'உலகுக்கு உறும் பசியினைப் போக்கும் ஆற்றையும் பூதனையும் இவ்விடத்தே மறக்கச் செய்தாய் அதிகமானே’ என்று வாழ்த்தினார். 'வலிதான கூற்றினையும் என் உயிரைப் பற்றி வருவதற்கு ஏவுவதற்கு இல்லாது நின் செயலால் நாக்கை அறுப்பித்தாய்’ என்றும் போற்றினார். அந்தச் செய்யுள் இது.

பூங்கமல வாவிசூழ் புள்வேளுர்ப் பூதனையும்
ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும் - ஈங்கு
மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றின் நாவை
அறுப்பித்தாய் யாமலகந் தந்து.

"வாளாற்றல் மிக்க அதிகமானே! இவ்விடத்தே கரு நெல்லிக்கனி தந்தாய். வன்மையுடைய கூற்றினது நாவையும் அதன்மூலம் அறுந்துபோகச் செய்தாய். அழகிய தாமரைத் தடாகங்கள் சூழ்ந்த புள்ளுரின்கண் இருந்து சோறுட்டு நடத்தி வரும் பூதனையும், இனிதான நீருடன் அவ்விடத்தே வருகின்ற பெண்ணையாற்றினையும் மறக்குமாறு செய்துவிட்டாய் (நீ வாழ்க)" என்பது பொருள்.