ஔவையார் தனிப்பாடல்கள்/வீரம் எது?
71. வீரம் எது?
கண் பெற்றவர் எல்லோருமே காண்கின்றோம். ஆனால், காண்பது அனைத்துமே நல்ல காட்சியாகுமா? காட்சி என்பது, காண்பவற்றின் உண்மையான தன்மையினைக் கண்டறிவதே ஆகும். இங்ங்னம் கொண்டால், அனைத்தும் இறைவனின் சொரூபமே என்பார்கள் ஆன்றோர்கள். உயர்வென்பதும் தாழ்வென்பதும் காண்பவற்றில் இல்லை. அழகென்பதும் குரூரம் என்பதும் பொருளில் இல்லை. நல்லதென்பதும் தீயதென்பதும் நாட்டில் இல்லை. எல்லாம் ஈசுவர சொரூபமாகிய ஒன்றே; எல்லாம் சமமே. இதனைக் காண்பதுதான் உண்மையான தெளிவான காட்சியாகும் என்பார்கள்.
வீரம் என்பது எதிர்த்தோர் பலரையும் வென்று அழிப்பது ஆகாது. அடங்காத ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே உண்மையான வீரமாகும்.
கல்விக்கு எல்லை கிடையாது. சாகுந்துணையும் கற்பதுதான் உண்மையாகக் கற்பது ஆகும். இடையில் கற்று முடித்தோம் என நினைப்பது பேதைமையாகும்.
'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். பிறரெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்று, திருக்குறள் கூறும். பிறருக்கு ஏவல் செய்து அதன் பயனால் வருவன கொண்டு உயிர் வாழ்வது இழிந்தது. அது உணவே ஆகாது.
ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான்தன் வீரமே வீரம்-என்றானும்
சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்.
"அனைத்தையும் இறைவனின் சொரூபம் என்றபடி ஒன்றாகக் காண்பதே மெய்க் காட்சியாகும். ஐம்புலன்களையும் அடக்கி வென்றவனுடைய வீரமே உண்மையான வீரமாகும். எக் காலத்தாயினும் சோம்பி மடிந்து போகாமல் உயிருள்ள வரைக்கும் அயராது கற்பதே கல்வியாகும். தன்மைப் பிறர் ஏவிப் பணிகொள்ளுகின்ற நிலைக்கு உட்படாமல், தன் உழைப்பினால் விளைவித்துப் பெற்றதனை உண்பதே சிறந்த உணவாகும்” என்பது பொருள்.