ஔவையார் முதலிய எழுவர் பாடல்கள்

தனிப்பாடல் திரட்டு மூலம்
என்னும் நூலின்
தொகுப்பில் உள்ளவை
பக்கம் 42 & 43
குறிப்புரை - செங்கைப் பொதுவன்

ஔவையார் முதலிய எழுவர் எனக் கூறப்படுபவர்கள் இப் பகுதியிலுள்ள பாடல்களைப் பாடிய அறுவரும் திருவள்ளுவ நாயனார் எனக் குறிப்பிடப்படும் புலவரும் ஆகிய எழுவர். திருவள்ளுவ நாயனாரின் தனிப்பாடல்களை விக்கிமூலத்தில் தனியே காணலாம்.

ஔவையோடு பிறர்

தொகு
உப்பை
அத்தி முதலேறும்பீ ஆனவுயிர் அத்தனைக்கும்
சித்தம் மகிழ்தளிக்கும் தேசிகன் – முற்றவே
கற்பித்தான் போனானோ காக்கக் கடனிலையோ
அற்பனோ அன்னாய் அரன். 74
அன்னாய்! யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?
அதிகமான்
கருப்பைக்குள் முட்டைக்குள் கல்லினுள் தேரைக்கும்
விருப்புற் றமுதளிக்கும் மெய்யன் – உருப்பெற்றால்
ஊட்டி வளர்க்கானோ ஓநெடுவாய் அன்னாகேள்
வாட்டம் உனக்கேன் மகிழ். 75
அன்னா ! கேள்! கருப்பைக்குள் வளரும் குழந்தைக்கும், முட்டைக்குள் வளரும் குஞ்சுக்கும், கல்லுக்குள் வாழும் தேரைக்கும் உணவூட்டுபவன் உனக்கும் உணவளிப்பான்.
உறுவை
சண்டைப்பைக் குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்
அண்டத் துயிர்பிழைப்ப தாச்சரியம் – மண்டி
அலைகின்ற அன்னாய் அரனுடைய உண்மை
நிலைகண்டு நீயறிந்து நில். 76
தாய் அருந்தும் உணவை அவள் வயிற்றுக்குள் உள்ள குழந்தமை உண்டு உயிர் வாழ்வது ஆச்சரியம். இதனால் அரனின் உண்மையை நீ உணர்துகொள்.
கபிலர்
கண்ணுழையாக் காட்டில் கருங்கல் தவளைக்கும்
உண்ணும் படியறிந்தே ஊட்டுமவர் – கண்ணும்
நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்
தமக்குத் தொழிலென்ன தான. 77
கருங்கல்லுக்குள் இருக்கும் தவளையும் உண்ணும்படி படியளப்பவர்க்கு நமக்கும், நம்போல் அன்புடையார்க்கும் படியளப்பதைத் தவிர வேறு வேலை என்ன?
வள்ளியம்மை
அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன்தான்
இன்னும் வளர்க்கானோ என்றாயே – மின்னவரம்
சூடும் பெருமான் சுடுகாட்டில் நின்றுவிளை
யாடும் பெருமா னவன். 78
தாய் வயிற்றில் இருக்கும்போது சத்தூட்டி வளர்த்த சிவன் இன்னும் வளர்ப்பான்.
வேழம் உடைத்து மலைநாடு மேதக்கச்
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.
மலைநாடு என்னும் சேரநாடு யானையால் வளம் மிக்கது. சோழநாடு சோற்றால் வளம் பெற்றது. தென்னாடு என்னும் பாண்டியநாடு முத்தால் வளம் பெற்றது. தொண்டைநாடு சான்றோரால் வளம் பெற்றது.