கடல்வீரன் கொலம்பஸ்/கதை முடிந்தது

11

கதை முடிந்தது


அலுப்பும், சலிப்பும் நிறைந்த தன் நீண்ட நான்காவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் வந்து சேர்ந்தான் கொலம்பஸ். தன் பயணத்தின் விவரங்களைக் குறித்து, அரசர்க்கும், அரசியார்க்கும் டீகோ மெண்டஸ் வசம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினான். அரசரும், அரசியாரும் கொலம்பசுக்கு வேறு எதுவும் செய்யவில்லை என்றாலும், அவனை நேரில் அழைத்துப் பயணம் பற்றி விசாரிக்கக் கூட இல்லை. வெளிநாடு. சென்று வந்த ஒரு கப்பல் தலைவனுக்கு கிடைக்க வேண்டிய மிகக் குறைந்த இந்த மரியாதை கூடத் தனக்குக் கிடைக்கவில்லையே என்பதை எண்ணி நொந்து போனான் கொலம்பஸ்.

கொலம்பஸ் ஸ்பெயின் வந்து சேர்ந்த சமயத்தில், செகோவியா என்ற ஊரில் தங்கியிருந்த அரசி இசபெல்லா நோய் வாய்ப்பட்டிருந்தாள். அது காரணமாகவே கொலம்பஸ் அழைக்கப் பெறவில்லை என்று அரசாங்கச் சார்பில் கூறப்பட்டது. நோயினால், துன்புற்றிருக்கும் அரசியாரைக் கொலம்பஸ் வந்து சந்தித்துத் தன் துயரக் கதைகளைக் கூறினால், அது அரசியாரின் உடல் நிலையைப் பாதிக்கும் என்று அரசர் கருதினார். ஆகவே, கண்டிப்பாகக் கொலம்பசுக்கு அரசியைக் காணும்: அனுமதி வழங்கப்படக் கூடாதென்று அவர் கட்டளையிட்டிருந்தார்.

மெடினா டெல்காம்போ என்ற நகரில் இருந்த போது ஸ்பெயின் நாட்டின் பேரரசி இசபெல்லா 1504 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் நாளன்று உலகவாழ்வை நீத்தாள். அவள் இறந்து போனதை எண்ணிப் பெருந்துயர் உற்றவன் கொலம்பஸ் ஒருவனே! இந்தப் பரந்த உலகில் அவனுக்கு ஆதரவளித்த ஒரே இதயம் அரசி இசபெல்லாவினுடையதுதான் மன்னாதி மன்னர்கள் இந்த மாநிலத்தில் பலர் இருந்தாலும், அவனுடைய மதிப்பை உள்ளபடியே கணித்தறிந்தவள் அவள் ஒருத்தியேதான் பின்னும் பின்னும், அவன் மீது பழியும் குற்றமும் பலர். சாட்டிய போதும், அவனுக்கு அனுசரணையாக நின்று அவனுடைய துயரத்தைத் துடைத்த அன்னை போல் இருந்தவள் அவள் ஒருத்தியேதான்! அரசர் பெர்டினான்ட் கூட் கொலம்பசை ஒரு தலைவலியாகவே கருதினார். ஆனால், அரசியாரின் மனத்தை வருத்தக் கூடாதென்றே அவர் கொலம்பசுக்கு ஆதரவு தருவதில் பங்கு கொண்டார். அரசி இசபெல்லா மட்டும் இல்லாதிருந்தால், கொலம்பஸ் தான் கண்ட கனவுகளை உள்ளத்திலே அழுத்தி அழுத்தவைத்துக் கொண்டு பித்தம் பிடித்தவனாய்ப் போயிருப்பான், அல்லது, நடைப் பிணமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்திருப்பான். தனக்கு ஆதரவு தந்த அரசியின் ஈமச் சடங்குகளில் கலந்து கொள்ளக் கூட கொலம்பசால் முடியவில்லை. அவனுடைய மூட்டுவாதம் அதிகமாகி அவனைப் படுத்த படுக்கையாக்கி விட்டது.

செவிலியில் உள்ள சாண்டா மேரியா தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தான் கொலம்பஸ். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, அவன் அப்போது போதுமான அளவு செல்வம் வைத்திருந்தான் என்றே சொல்ல வேண்டும் ஒப்பந்தப்படி அவனுக்குச் சேரவேண்டிய பல தொகைகள் கிடைக்கவில்லை என்றாலும், ஓரளவு கிடைத்ததே போதுமானதாகத்தான் இருந்தது. அவன் தன் நான்காவது பயணத்தில் கொண்டுவந்த தங்கம் நிறைய இருந்தது. அது தவிர அவனுடைய வரிப் பங்குப் பணமாக கப்பல் தலைவன் காரலாஜல் கொண்டு வந்து சேர்த்த தங்கம் வேறு இருந்தது. அதுவுமல்லாமல் கவர்னர் ஓவாண்டோ வேறு சாண்டா டோமிங்கோ சென்றிருந்தபோது அவனுக்குரியதாக ஒரு பேழை நிறையத் தங்கம் கொடுத்திருந்தான்.

இருந்தாலும் தனக்குச் சேர வேண்டியது முற்றிலும் சேரவில்லை என்ற குறையிருந்தது கொலம்பசுக்கு. ஒப்பந்தப்படி அவனுக்குச் சேரவேண்டிய பொன் முழுவதும் ஒழுங்காகக் கொடுக்கப் பட்டுவந்திருந்தால், அவனும், அவனுடைய சந்ததியினரும், மன்னர்களைக் காட்டிலும் பெரிய செல்வந்தர்களாகியிருக்க முடியும். சிறிது உடல் நலம் ஏற்பட்டவுடன் கொலம்பஸ் அரசர் பெர்டினாண்டைச் சந்திக்கப் புறப்பட்டான். குதிரை வளர்ப்பவர்களின் கட்டுப்பாட்டின் காரணமாக அக்காலத்தில் ஸ்பெயினில் யாரும் மட்டக் குதிரை வைத்துக் கொள்ளக் கூடாதென்று சட்டம். இருந்தது குதிரையில் ஏறிச் சென்றால், கொலம்பசுக்கு அப்போதிருந்த உடல் சிலையில் வேதனை பொறுக்க முடியாததாயிருக்கும். ஆகவே, தனக்கு ஒரு மட்டக்குதிரை வாங்க அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தான் கொலம்பஸ். கருணையுள்ளத்தோடு அரசர் பெர்டினாண்ட் அனுமதி வழங்கினார். மட்டக்குதிரையில் ஏறிப் பயணம் செய்து, அரசர் தங்கியிருந்த செகாவியா என்ற ஊருக்குப் போய்ச் சேர்க்தான். அரசர் பெர்டினாண்ட் அவனை அன்போடு வரவேற்றா. கொலம்பஸ் ஒப்பந்தப்படி கேட்பதெல்லாம் கொடுக்கக் கூடிய நிலையிலோ, மனப்பாங்கிலோ அரசர் இல்லை. கொலம்பஸ் தன் ஒப்பந்தப்படி உள்ள உரிமைகளை யெல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டால், அவனுக்கு நல்ல வரும்படி வரக்கூடிய பெரும் பண்ணை ஒன்றையளிப்பதாகக் குறிப்புக் காட்டினார் அரசர். அதற்கெல்லாம் கொலம்பஸ் சிறிதும் ஒப்புக் கொள்ளவில்லை. கிடைத்தால் முழுவதும் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் அவன், அவனுக்கு எதுவும் கிடைக்காமலே போய்விட்டது.

அரசர் செல்லுமிடமெல்லாம் அவனும் தொடர்ந்து சென்றான். . ஓராண்டு, சென்றபின்னும் அவனுடைய வேண்டுகோள் செவிசாய்க்கப்படவில்லை. அவனுடைய மூட்டுவாதம் அதிகரித்துக் கொண்டேவந்தது. எப்படியும் கடைசியில் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. எல்லாம் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவன் ஓர் உயில் எழுதி வைத்தான்.

தனக்கு வரும் வரிவருமானங்களையெல்லாம் சிலுவைப் போர் நிதிக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிவைத்தான். ஜினோவாவில் தன் பரம்பரையினருக்காக ஒரு மாளிகை எழுப்ப வேண்டுமென்று எழுதி வைத்தான். இஸ்பானியோலாவில் ஒரு தேவாலயம் கட்டி அவன் ஆத்மா சாந்தியடைய நாள் தோறும் தொழுகை நடத்திவர வேண்டும் என்று எழுதி வைத்தான். இந்த நற்செயல்களுக்குப் பயன்படுவதற்காகவாவது அரசர் மனத்தை மாற்றி அத்தனையும் கிடைக்குமாறு ஆண்டவன் அருள் புரியமாட். டாரா என்று எண்ணினான் கொலம்பஸ். கடைசிநேரத்தில், தன் தாயின் அரசுரிமையைக் கேட்டுப் பெற்றுக் கொள்வதற்காக ஜூலானா இளவரசி ஸ்பெயினுக்கு வந்திருந்தாள். தாய் அளித்த சலுகையை மகள் அளிப்பாள் என்ற நம்பிக்கையோடு அவளைக் கண்டு பேசி வரத் தன் சகோதரன் பார்த்தலோமியோவை அனுப்பி வைத்தான் கொலம்பஸ்.

பார்த்தலோமியோ புறப்பட்டுச் சென்ற பின் கொலம்பஸ் உடல் மிகத் தளர்ச்சியுற்றது. 1506 ம் ஆண்டு மே மாதம் 19 ம் நாள் அவன் தன் கடைசி உயிலை எழுதிவைத்தான். தன் மகன் டோன் டீகோவைத் தன் நேர் வாரிசாகக் கொண்டு மற்ற உறவினர்களுக்கும் சிலச்சில உரிமைகளைக் கொடுத்து அந்த உயிலை எழுதி வைத்தான். உயில் எழுதிய மறுநாள் திடீரென்று உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. மதகுரு ஒருவர் அழைத்துவரப்பட்டார். கொலம்பசின் மகன்கள் இருவரும் தம்பி டீகோவும் மெண்டஸ், பீச்சி போன்ற நண்பர்களும் மற்றும் சில நண்பர்களும் உறவினர்களும் படுக்கையைச் சுற்றி நின்று இறை வணக்கம் செய்தார்கள்.

"ஆண்டவனே, உன் கைகளிலே என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று சேசுநாதர் கூறிய அதே சொற்களைத் தன் சொல்லாகக் கூறி கொலம்பஸ் உயிர் நீத்தான்.

ஓர் அரசப்பிரதிநிதிக்கு, மிகப்பெரிய சிறப்புக்குரிய பெருங் கடல்தளபதிக்கு உரிய முறையில் அவன் ஈமச் சடங்குகள் செய்யப்படவில்லை. மிகமிக எளிமையான முறையில் யாரோ மூலையில் கிடப்பவனுக்குச் செய்வது போல் அச்சடங்குகள் செய்யப்பெற்றன.

அவன் இருந்த போதோ, இறந்த போதோ யாரும் அவனுடைய பெருமையை உணரவில்லை. சொல்லப் போனால், கொலம்பசே, தான் கண்டுபிடித்துள்ள இடம் மிகப் பெரியதும், மிக வளமுள்ளதுமான அமெரிக்கக் கண்டம் என்பதை உணர்ந்து கொள்ளவில்லை. காலமும் நேரமும் அவன் பாடுபட்டுக் கண்டுபிடித்ததன் பலனை அனுபவிக்காமல் செய்துவிட்டன.

நாளாக ஆகத்தான் அவன் பெருமை மக்கள் மனத்தில் இடம் பெற ஆரம்பித்தது. யாரோ நாங்கள் தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தோம் என்று சொலலிக் கொண்டதெல்லாம் தவறான செய்திகள் என்பதும், உண்மையில் அதைக் கண்டுபிடித்தவன் கொலம்பஸ் என்பதும் பிற்காலத்தில் உறுதிப்பட்ட செய்தியாகிவிட்டது. இன்று கொலம்பஸ் உலகவரலாற்றிலே, ஒரு முக்கியமான இடம் பெற்றுவிட்டான். காலகாலத்திற்கும் அவன் பெயர் ஒளி வீசித் திகழும் தன்மையைப் பெற்றுவிட்டது.

கொலம்பஸ் இறந்து மூன்றாண்டுகளானபின், அவனுடைய மகன் டோன் டீகோ இஸ்பானியோலாவின் கவர்னராக நியமிக்கப் பெற்றான். அவனுக்குரிய பரம்பரைப் பட்டங்களும் அளிக்கப் பெற்றன. இச்செயல் மூலம் ஓரளவு கொலம்பசின் விருப்பம் அரசரால் நிறைவேற்றப்பட்டது என்றே சொல்ல வேண்டும். கொலம்பஸ் தெய்வபக்தியுள்ளவன்; அதைக் காட்டிலும் மதபக்தி நிரம்பியவன். சிவப்பு இந்தியர்களை அவன் மனமறிந்து கொடுமைப் படுத்திய துண்டு: அடிமைகளாக்கி விற்றதுண்டு என்றாலும் பல சமயங்களில் அவன் அவர்களிடம் மனிதாபிமான உணர்ச்சியோடு நடந்திருக்கிறான். அவன் அவர்களைக் கொடுமையாக நடத்திய தெல்லாம் கால நெருக்கடியின் காரணமாகத்தான்.

தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கடலிடையிலேயே கழித்த அவன், தன் ஆராய்ச்சி வேட்கையின் காரணமாகப் பெரும் புயல்களையும் அவற்றின் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறான். ஊக்கமும் விடாமுயற்சியும் மிகுந்தவனாக இருந்தும், அவன் தன் செயல்களில் பெருந்தோல்விகளையே காணநேரிட்டது. அதற்குரிய காரணத்தையும் ஆங்காங்கே இக்கதையில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞான வசதிகள் இல்லாத அக்காலத்தில் புத்தம்புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதும், போனவழியே திரும்பி வருவதுமே அரிய காரியங்கள். கொலம்பஸ் பலநேரங்களில் தோல்வியைச் சந்தித்தான் என்றால், அதற்கு அவனுடைய ஊக்கமின்மை காரணமன்று.

ஒன்றைத் தேடுகிறவன், அது உள்ள இடத்தை விட்டு விட்டு மற்ற இடம் அனைத்தையும் தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பும் கதை போலவே கொலம்பஸ் செயல்கள் அனைத்தும் முடிந்திருக்கின்றன. இந்த முறையிலே தான் இந்தியாவைத் தேடிவந்தவன் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான். ஆனால், அமெரிக்கா தன் பெருவளம் முழுவதையும் அவன் கண்ணுக்குக் காட்டாமல் ஏமாற்றிவிட்டது.

கொலம்பகடன் கூடச்சென்றவர்கள், அவன் கொசுப் படைத்தளபதி என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அமெரிக்கா வெற்று நிலமாகத் தோன்றியது. ஆனால் அவனுக்குப் பின்னால் சென்றவர்கள் சிறிது சிறிதாக அந்நிலத்தின் தங்கவளத்தைக் கண்டார்கள். ஆசியாவில்தான் தங்கம் நிறையக் கிடைக்கிறதென்று எண்ணி, இந்தியாவையும் சீனாவையும் பற்றிக் கனவுகண்டு கதை பேசிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் தங்கம் கிடைக்கிற தென்றவுடன் கூட்டங் கூட்டமாக அங்கே குடியேறினார்கள்.

இன்று அமெரிக்கா உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசாகவும், செல்வத்திருநாடாகவும் விளங்குகிறது. இன்றைய அமெரிக்காவின். மூல முதல்வன் கொலம்பஸ் தான்! ஆம்! பெருங்கடல்தளபதி கிரிஸ்டாபர் கொலம்பஸ் தான்!.