கடல்வீரன் கொலம்பஸ்/தெய்வம் காத்தது

10



தெய்வம் காத்தது

பரியா மாநிலத்தைக் கண்டுபிடித்த பிறகு, இஸ்பானியோலாவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பரியா ஒரு சொர்க்கமாகவும், இஸ்பானியோலா ஒரு நரகமாகவும் தான் தோன்றியது கொலம்பசுக்கு. உண்மையிலேயே இஸ்பானியோலா அவனை வாட்டி வதைக்கும் நரகமாகமாறி விட்டது.

பிரான்சிஸ்கோ ரோல்டான் என்பவனை கொலம்பஸ் இஸ்பானியோலாவின் தலைமை நீதிபதியாக நியமித்திருந்தான், அந்தத் தலைமை நீதிபதி கொலம்பசை எதிர்க்கும் புரட்சிக்காரனாக மாறிவிட்டான். நீதிபதி ரோல்டான், ஸ்பானியர்களிடையே இனவெறியைத் தூண்டிவிட்டுத் தனக்கு ஆள் சேர்த்துக்கொண்டான், ஸ்பானியர்களாகிய நாம் ஒரு ஜினோவாக்காரனுக்கா ஆட்பட்டிருப்பது என்று கேட்டுக் கிளர்ச்சி மூட்டினான். ரோல்டான் இஸ்பானியோலாவில் சில பகுதிகளைத் தன் வசப்படுத்திக் கொண்டான். தன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட ஸ்பானியர்களுக்கு, அவன் ஏராளமான தங்கமும். அதிக அடிமைகளும், வைத்துக்கொள்ள உரிமையளித்தான். ஸ்பெயினிலிருந்து நிறைய உணவு வரவழைத்துத் தருவதாக வாக்களித்தான். ஸ்பானியர்கள் இந்தியர்களை அடிமையாக வைத்துக் கொள்ள உரிமையளித்த அதே ரோல்டான், இந்தியர்களை வசப்படுத்த அவர்களுக்குள்ள வேலையைக் குறைப்பதாகவும், மேற்கொண்டு அவர்களில் யாரையும் அடிமைப் படுத்துவதில்லை என்றும் கொடுமைப் படுத்துவதில்லை என்றும் வாக்களித்தான். இதை நம்பிய சில ஏமாந்த சிவப்பு இந்திய இனத்தலைவர்கள் அவன் பக்கம் அனுசரணையாக நடந்து கொண்டார்கள். பார்த்தலோமியோ கொலம்பஸ் முதலில் சிவப்பு இந்தியத் தலைவர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டான். பிறகு ரோல்டானைப் பிடித்துத் தண்டிக்க விருந்தபோது, அந்தப் புரட்சிக்கார நீதிபதி எழுபது துப்பாக்கி வீரர்களுடன் சாரகுலா என்ற இடத்திற்கு ஓடி விட்டான்.

காரலாஜல் தலைமையில் மூன்று கப்பல்கள் நிறையக் கொலம்பஸ் ஸ்பெயினிலிருந்து உணவு ஏற்றிவிட்டானல்லவா? அந்தக் கப்பல்கள் சாண்டா டோமிங்கோவுக்கு வழி தெரியாமல் அதைக் கடந்து வந்துவிட்டன. அவை சாரகுலாவை அடைந்தன. காரலாஜல் கொலம்பசிடம் உண்மையன்புள்ளவன். ஆனால், அந்தக் கப்பலில் ஏறி வந்த சிறைக்கைதிகள் சிலரும், வேறு சில மாலுமிகளும் ஒன்று சேர்ந்து, கூட்டமாகக் கரைக்குச் சென்று புரட்சிக்காரன் போல்டானுடன் சேர்ந்து கொண்டனர். புதிய பலம் பெற்ற ரோல்டான், லாவீகா கோட்டைமீது படையெடுத்துச் சென்றான்.

அப்போது சாண்டா டோமிங்கோவில் இருந்த கொலம்பசிடம் மதிப்பு வைத்திருந்த உண்மையான ஸ்பானியர்கள் பலர் பலவிதமான உடல் நோய்களுக்கு ஆளாகிப் படுக்கைகளில் கிடந்தனர். அதனால் புரட்சிக்காரர்களை எதிர்த்துப் போராட முடியாமல் கொலம்பஸ் சகோதரர்கள் ரோல்டானைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

சமாதானப் பேச்சு ஏறக்குறைய ஓராண்டுகாலம் நடைபெற்றது. தடவைக்குத் தடவை ரோல்டான் எதிர்ப்பைக் கைவிடுவதற்குரிய தன் கேள்விகளை அதிகப்படுத்தினான், கடைசியாக ரோல்டான்மீது உள்ள குற்றச்சாட்டுகளெல்லாம் சரியானவையல்ல என்று அறிவித்து, அவனை மீண்டும் தலைமை நீதிபதி பதவியில் அமர்த்தினான் கொலம்பஸ். ரோல்டானின் ஆட்களில் ஸ்பெயின் திரும்ப விரும்பியவர்கள் எல்லோருக்கும், கட்டணமில்லாமல் கப்பலில் செல்லும் வாய்ப்பும், அவர்கள் வரியில்லாமல் தங்கம் எடுத்துச் செல்லவும் அனுமதியும் அளித்தான் கொலம்பஸ். ஸ்பெயின் செல்லாதவர்கள், சாரகுலாவில் நிலங்கள் பெற்றுக் கொள்ளலாமென்று அறிவித்தான.

ரோல்டானுக்காக கொலம்பஸ் வழங்கிய இந்தச் சலுகையின் மூலம், ஸ்பானியர்கள், விளை நிலங்களில் ஒவ்வொரு பகுதியைத் தங்கள் உடைமையாகப் பெற்றனர். அந்தந்த நிலப்பகுதிகளில் வாழும் சிவப்பு இந்தியர்கள் அனைவரும் அவ்வந்நிலத்தின் உடைமைக்காரனுக்கு அடிமையானான். அந்தந்த நிலங்களில் கிடைக்கும் தங்கம் முழுவதும் அவனவனுக்கே உரிமை. அவன் அரசுக்கும் பெருங்கடல் தளபதிக்கும் வரிகூடக் கொடுக்க வேண்டிய இல்லை. கொலம்பஸ் ஸ்பானியர்களுக்கு அளித்த இந்தச் சலுகையினால் ஸ்பெயினுக்கும் ஸ்பெயின் அரசுக்கும் அப்படி ஒன்றும் அதிகமான நஷ்டம் இல்லை என்பது உண்மைதான்! ஆனால், அந்த நிலங்களின் பரம்பரை உரிமைக்காரர்களான சிவப்பு இந்தியர்களுக்கு இது ஒரு பேரிடியாகவே விழுந்தது. மேலும் அவர்கள் ஸ்பானியர்களுக்கு என்றென்றும் அடிமையாயிருக்க வேண்டிய கொடுமைக்கும் ஆளாயினர். ஆயுத பலமில்லாத அந்தக் கள்ளங்கபடமறியாத மக்கள், எங்கிருந்து வந்தோ குடியேறிய யாரோ ஒருவன் செய்த சட்டத்திற்குத் தங்கள் மனித உரிமைகளைப் பரம்பரை பரம்பரையாக இழக்கும்படி நேரிட்டது. தங்கள் நாட்டுக்கு வந்தவர்களை அன்பு கொண்டு வரவேற்று தங்கள் உடைமைகளையெல்லாம் அள்ளிக் கொடுத்து உபசரித்த அந்த பண்புமிக்க மக்கள் பரம்பரை யடிமைகளாக வேண்டிய இந்தப் பேரிடியை வாய்பேசாது தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

கொலம்பசின் துரதிர்ஷ்டம் இத்தோடு நிற்கவில்லை. 1498-ம் ஆண்டில் ஸ்பெயினுக்குத் திருப்பியனுப்பிய சோரியோ என்ற அவனுடைய தலைமைக் கப்பலில் அரசருக்கும் அரசியாருக்கும் அவன் அனுப்பிய குறிப்புப் புத்தகத்தையும், நிலவழி காட்டும் படத்தையும் ஓஜிடா என்பவன் கைப்பற்றிக் கொண்டான். ஒரு கப்பல் தலைவனுக்கு வேண்டிய முக்கியமான இந்த இரண்டு பொருள்களையும் கைப்பற்றிக் கொண்ட ஒஜிடா, அரசியின் அனுமதி பெற்று பரியா மாநிலத்தில் முத்துக் கண்டுபிடிக்க பயணம் புறப்பட்டு விட்டான். அவன் தன்னுடன், நிலப்படம் வரைபவர்களான ஜூலான் டி லாகோசா என்பவனையும் அமெரிகோ லெஸ்பூசி என்பவனையும் அழைத்துச்சென்றான். கொலம்பஸ் மூன்றாவது முறையாகச் சென்ற வழியில் சென்று முத்துக்கள் கிடைக்கும் மார்கரிட்டாவையடைந்து ஏராளமான முத்துக்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான். அரூபா, குராக்காவோ, மராக்கைபோ வளைகுடா முதலியவற்றைக் கண்டுபிடித்துத் திரும்பும் வழியில் சாரகுலா வந்து ரோல்டானுடன் சேர்ந்து கொண்டான். பிறகு அவனுடன் சண்டையடித்துக் கொண்டு, புறப்பட்டு, பஹாமாவில் இறங்கி சிவப்பு இந்தியர்களை வேட்டையாடிப் பிடித்து அடிமைகளாகக் கப்பலில் ஏற்றிக்கொண்டு ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தான், சாண்டா மேரியா கப்பலின் முன்னாள் கப்பலோட்டியான வெரலோன் சேர நைனோ என்பவன் ஒரு முறை பரியா மாநிலம் சென்று ஏரானமான முத்துக்களை ஏற்றிக்கொண்டு வந்தான். நைனா கப்பலின் முன்னாள் கப்பல் தலைவனான வின்சென்ட் யலினஜ் பின்சோன் ஒரு பயணம் சென்று அமேசானைக் கண்டுபிடித்து வந்தான். கொலம்பஸ், தான் கண்டுபிடிக்த நாடுகளுக்கு வைசிராய் என்பது ஏட்டளவில்தான் இருந்தது. அவன் அனுமதியில்லாமலே, அவன் அறியாமலே, கப்பலோட்டத் தெரிந்தவனெல்லாம் அமெரிக்காவுக்குச் சென்று வரத் தொடங்கிவிட்டான்.

அரச சபையிலோ நாளுக்கு நாள் கொலம்பசின் மதிப்புக் குறைந்துவரத் தொடங்கியது. கொலம்பஸ் சகோதரர்களின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பான குற்றச்சாட்டுகள் அதிகமாகிக் கொண்டிருந்தன.

குடியேற்ற நாட்டிலிருந்து திரும்பி வந்த ஸ்பானியர்கள் பெருந் தொல்லைக்காரர்களாயிருந்தார்கள். அரசர் வெளியில் எங்கு சென்றாலும் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு "சம்பளம் சம்பளம்!" என்று கூக்குரலிட்டார்கள். அவரை அசையவிடவில்லை. கொலம்பஸ் மகன்கள் இருவரும் அரசியின் ஏவற்பணி புரியும் பையன்களாய் வேலை பார்த்தார்கள். அரசியுடன் போகும்போது அவர்களைக் கண்ட ஸ்பானியர்கள், கூவிக் கூச்சலிட்டு மட்டந்தட்டிப் பேசினார்கள். "அதோ பார் ! கொசுப்படைத் தளபதியின் மக்கள் போகிறார்கள், ஒன்றும் கிடைக்காத நாடுகளைக் கண்டுபிடித்தவனின் மக்கள் போகிறார்கள் ! ஸ்பானியப்பெருமக்களின் சீரழிவுக்கும் பேரிழவுக்கும் காரணமான அந்த இடுகாடுகளைக் கண்டுபிடித்த கொசுப்படைத் தளபதியின் மக்கள் போகிறார்கள் ! அதோ பார் பார் !” என்று கூவி அந்த இளம் பையன்களை இழித்தும் பழித்தும் பேசினார்கள்.

தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோல்டான் தனியாகச் சில ஊர்களை வசப்படுத்திக் கொண்டு தனியாட்சி நடத்துகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அரசரும் அரசியாரும் மிகக் கவலைப் பட்டார்கள். குடியேற்ற நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைப் போக்குவதற்காக மிகுந்த அதிகாரங்கள் கொடுத்து பிரான்சிஸ்கொ டி போபடில்லா என்பவனை ராயல் கமிஷனராக நியமித்து இந்தியத் தீவுகளுக்கு அனுப்பினார்கள். அவன் உடனடியாகப் புறப்பட்டு வந்திருந்தால், ரோல்டானுடன் கொலம்பஸ் சமாதானம் செய்துகொண்டு அமைதியாக இருந்த காலத்தில் வந்து சேர்ந்திருப்பான். நமக்கு இங்கே வேலையில்லை என்று பேசாமல் திரும்பிப் போயிருப்பான், ஆனால், அவன் புறப்படவே ஓராண்டு ஆயிற்று.

போபடில்லா புறப்பட்டு சாண்டா டோமிங்கோ வந்து சேர்ந்தபோது கொலம்பஸ் சகோதரர்கள் மூவரும் மூன்று இடத்தில் இருந்தனர். கொலம்பஸ் லாசா என்ற ஊரில் இருந்தான். பார்த்தலோமியோ சாரகுலாவில் இருந்தான். சாண்டாடோமிங்கோவில் நிர்வாகத் திறமை சிறிதுமற்ற டீகோ இருந்தான்.

போபடில்லா துறைமுகத்தில் வந்திறங்கி ஊருக்குள் நுழைந்ததும் முதலில் அவனுக்குக் காட்டப்பட்ட காட்சி ஏழு ஸ்பானியப் பிணங்கள் தொங்கிய ஒரு தூக்கு மரம்தான்! அவன் இன உணர்ச்சி மிக்கவன். அவனுக்கு ஸ்பானியர்களின் பிணங்களைப் பார்த்தவுடன் இரத்தம் கொதித்தது. அவன் இது குறித்து டீகோவை என்ன என்று கேட்டபோது அவன், "நாளை இன்னும் ஐந்து பேர் தூக்கிடத் தயாராக வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான், சிரித்துக்கொண்டே அவன் சொல்லிய இந்தச் செய்தியைக் கேட்டுப் போபடில்லா ஆத்திரம் கொண்டான்.

அந்த ஸ்பானியர்கள் ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தவர்கள். ரோல்டான் உதவியுடன் பிடித்துவரப்பட்டார்கள். இந்த விவரங்கள் போபடில்லாவுக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தன. கலகக்காரன் ரோல்டான் கொலம்பசின் கையாள் ஆகீட்டான் என்றவுடன் அவன் தன் அதிகாரத்தை உடனே செலுத்தத் தொடங்கினான். இந்த நிகழ்ச்சி பற்றிக் கொலம்பஸ் சதோதரர்கள் கூற்றை அவன் கேட்கவே தயாராயில்லை.

அவன் செய்த முதல் வேலை, ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதுதான் அடுத்த வேலை. ஆட்சிப் பொறுப்பிலிருந்த கொலம்பசின் சகோதரன் டோன் டீகோவைப் பிடித்துக் கப்பலில் சிறை வைத்ததுதான். கொலம்பசின் அதிகாரத்திற்கு எங்கும் தடையேற்படுத்தினான். தன் ஆட்சியை குடியேற்றவாதிகள் ஏற்றுக் கொள்வதற்காக யாரும் எங்கும் எவ்விதக் கட்டுப்பாடின்றியும் தங்கம் சேர்க்கலாம் என்று அறிக்கையிட்டான். பிறகு, தன்னை வந்து காணும்படி கொலம்பசுக்கே கட்டளை பிறப்பித்தான். கொலம்பஸ் எப்போதுமே அரச ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பவன். போபடில்லா, அரசரும் அரசியும் அதிகாரங் கொடுத்தனுப்பிய ஆள் என்று அறிந்ததும், அவன் கட்டளைக்குக் கீழ்பணிந்து அவனைப் பார்க்க வந்தான், தன்னைப் பார்க்க வந்த கொலம்பசுடன் போபடில்லா, நாட்டு நிலைமை குறித்துப் பேசவில்லை. ஏன் குழப்பும் எப்படிக் குழப்பம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆராயவில்லை. கொலம்பசைச் சங்கிலிகளால் பிணித்து, நகரத்துச் சிறைச்சாலையிலே அடைத்து வைத்தான்.

படைவீரர்கள் அனைவரும் அப்போது பார்த்த லோமியோ கொலம்பசின் கையில் இருந்தார்கள். அவன் நினைத்திருந்தால், போபடில்லாவைப் பிடித்துச் சிறையிலடைத்துவிட்டோ, சித்திரவதை செய்துவிட்டோ, கொலம்பசை விடுவித்திருக்க முடியும். ஆனால், அரசர்க்கும் அரசியாருக்கும் செலுத்தும் மரியாதை அதுவல்லவே! ஆகவே, கொலம்பஸ் அவனையும் பணிந்து போகும்படி கூறியனுப்பினான். அவனுக்கும் போபடில்லா கொடுத்த பரிசு, இருப்புச் சங்கிலியும் விலங்கும்தான்!

கொலம்பஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்த ஸ்பானியர்கள் பலரின் குற்றச்சாட்டுக்களையும் சேகரித்து ஒரு குற்ற அறிக்கை தயாரித்தான் போபடில்லா. அந்த அறிக்கையையும், விலங்கிட்ட கொலம்பஸ் சகோதரர்கள் மூவரையும், இரண்டு கப்பல்களில் ஏற்றி ஸ்பெயினுக்கு விசாரணைக்கு அனுப்பிவைத்தான்.

கொலம்பசை ஏற்றிச் சென்ற கப்பல் தலைவன் அவனிடம் பெருமதிப்பு வைத்திருந்தான். அவன் தானே விலங்குகளை உடைத்துவிட இருந்தான். ஆனால், கொலம்பஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை. 'அரச ஆணை பெற்ற. ஓர் அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதது அரசர்க்கும் அரசியார்க்கும் கீழ்ப்படியாதது போன்றதாகும். இட்ட விலங்கை அகற்ற இனி அவர்கள்தான் கட்டளை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறி மறுத்துவிட்டான்.

காடிஜ் துறைமுகத்தில் இறங்கிய கொலம்பஸ், அரச உத்தரவு வரும் வரை செலில்லி நகருக்கருகில் உள்ள புனித மடாலயத்தில் போய்த் தங்கினான். விடுதலை செய்து தங்களை வந்து பார்க்கும்படி அரசரும் அரசியாரும் ஆணை அனுப்ப ஆறு வாரங்கள் பிடித்தன. அந்த ஆறு வாரங்களும் கொலம்பஸ் பூட்டிய விலங்குடன், காவலாள் மேற்பார்வையில்தான் மடாலயத்தில் இருந்தான்.

அகற்றப்பட்ட அந்த விலங்குகளையும் சங்கிலியையும், கொலம்பஸ் தன் அறையிலேயே வைத்திருந்தான். எந்த அரசுக்காகத் தான் உலகஞ்சுற்றி நாடுகள் சேர்த்துக் கொடுத்தானோ அந்த அரசு கொடுத்த அந்தப் பரிசை அவன் பத்திரமாகக் காப்பாற்றி வைத்தான். அதுமட்டுமல்ல, அந்த விலங்கையும் சங்கிலியையும் தான் இறந்தபின் தன்னுடன் சேர்த்தே புதைத்துவிட வேண்டும் என்று தன் குடும்பத்தினருக்குக் கட்டளையும் இட்டிருந்தான்.

அரசரும் அரசியாரும் கொலம்பசை வரவழைத்துக் குற்ற விசாரணை நடத்தவில்லை, அவனிடம் அன்பாகப் பேசி நடந்துபோன செயலுக்காக ஆறுதல் கூறினார்கள். நீதியை நிலைநாட்டுவதாகவும் அவன் இழந்த உரிமைகளையும் அதிகாரங்களையும் திருப்பிக் கொடுப்பதாகவும் வாக்களித்தார்கள். நாட்கள் வாரங்களாயின. வாரங்கள் மாதங்களாயின. எதுவும் நடக்கவில்லை. அவர்களுக்கு எத்தணையோ அரசாங்க அலுவல்கள். கொலம்பஸ் விவகாரமும் இஸ்பானியோலாவும் தானா இன்றியமையாதவை!

எட்டு. மாதங்களுக்குப் பிறகு போபடில்லா திருப்பியழைக்கப் பெற்றான். மீண்டும் கொலம்பசை அனுப்பாமல் ஓவாண்டோ என்பவனை கவர்னராக நியமித்து அனுப்பி வைத்தார்கள். ஓலாண்டோ முப்பது கப்பல்களில் 2500 பேருடன் இஸ்பானியோலாவுக்குப் புறப்பட்டுச் சென்றான். கொலம்பசுக்கு, பெருங்கடல் தளபதி, வைசிராய் என்ற பட்டங்களை வைத்துக்கொள்ளும் உரிமை கொடுத்தார்கள். ஓவாண்டாவின் கப்பல்களில் தன் பிரதிநிதியாக ஒருவனை அனுப்பித் தனக்குரிய பகுதிப் பணத்தை வசூலித்துக் கொள்ளவும் அனுமதித்தார்கள்.

இந்த ஏற்பாடுகளெல்லாம் கொலம்பசுக்கும் பிடிக்கவில்லை. மீண்டும்தான் இந்தியத் தீவுகளுக்குச் செல்ல அனுமதி கேட்டான். கப்பல்களும், செலவு தொகையும் கேட்டான். அவனுடைய வற்புறுத்தலை மறுக்க முடியாமல் அரசரும் அரசியாரும் நான்காவது பயணம் மேற் கொள்ள அவனுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், ஓவாண்டோ புறப்பட்டுச் சென்ற ஒரு மாதங் கழித்துத்தான் அவர்கள் இந்த அனுமதியை வழங்கினார்கள்.

கொலம்பஸ் தனது நான்காவது பயணத்தை மேற் கொண்டபோது அவனுக்கு வயது ஐம்பத்தொன்று. வயது அதிகமாகிவிட்டாலும், அப்போதும் அவன் ஒரு சிறந்த மாலுமியாகவே விளங்கினான். அலைகடல் அவனுக்கு விளையாட்டு நிலமாக இருந்தது; அஞ்சாமையும் உறுதியும் நிறைந்திருந்தன. கப்பல்களை நடத்திச் செல்லுவதில் அவன் இணையற்றவனாக விளங்கினான். ஆனால், அவனிடம் இருந்த ஒரே குறை நிர்வாகத் திறமையில்லாமையேயாகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். ஸ்பெயின் அரசாங்கத்தின் பொருளாளனாக இருந்தவன் தன் மைத்துனர் இருவரையும், கப்பல் தலைவர்களாக கூட அழைத்துச் செல்லவேண்டுமென்று கொலம்பசைககேட்டுக் கொண்டான். அவன் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்கு கொலம்பசைக் கட்டாயப்படுத்தினான். கொலம்பசோ முன்பின் ஆராயாமல் அவர்களைக் கப்பல் தலைவர்களாக அமர்த்திக் கொண்டான். அவர்கள் அசகாய சூரர்கள்! கொலம்பஸ் சகோதரர்கள் மட்டும் அவர்களைக் காட்டிலும் வல்லவர்களாக இல்லாமல் இருந்திருந்தால், தாங்களே அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகக் கூறி விடக்கூடியவர்கள்.

கொலம்பஸ் தன் நான்காவது பயணத்தை நான்கு கப்பல்களுடன் தொடங்கினான். இந்த முறை அவனுடைய குறிக்கோள் கியூயாவுக்கும். பரியா மாநிலம் உள்ள கண்டத்திற்கும் இடையே ஒரு கடற் கால்வாய் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதேயாகும். இன்னும் அவன் கியூபாவைச் சீனாவின் ஒரு பகுதியென்றே நினைத்துக் கொண்டிருந்தான். இந்தக் கடற் கால்வாய் வழியாகத்தான் மார்க்கோபோலோ சீனாவிலிருந்து இந்திய மாக்கடலுக்குச் சென்றான் என்று கருதினான் கொலம்பஸ். இந்தியாவில் எங்கேனும் அவன் வாஸ்கோடகாமாவைச் சந்திக்கக்கூடும் என்று கருதிய அரசரும் அரசியாரும், அவனுக்கு ஓர் அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தனர்.

நீரோட்டங்களின் வேகத்தை எதிர்த்துக் காற்றின் உதவியால் செல்லக்கூடிய புதுமுறைக் கப்பல்கள் சிலவற்றைக் கட்ட வேண்டுமென்று கொலம்பஸ் எண்ணியிருந்தான். ஆனால் அதற்கெல்லாம் நேரமுமில்லை அந்த ஆராய்ச்சிகளில் செலவழிக்க அவனிடமோ அரசியிடமோ பணமுமில்லை. கிடைத்த பாய்மரக் கப்பல்களை வைத்துக் கொண்டு பயணம் தொடங்கினான். இந்தக் கப்பல்களைச் செலுத்திச் சென்ற மாலுமிகளும் கப்பல் தலைவர்களும் திறமை மிக்கவர்கள். இந்தக் கப்பல் பிரயாணிகளிலேயே குறிப்பிடத்தக்கது ஓர் ஐரிஷ் வேட்டை நாய்தான்! இதை இந்தியர்களை எதிர்த்து நிற்கும் சமயத்தில் அவர்களை விரட்டிக் கடிக்க விடுவதற்காக கொலம்பஸ் கொண்டு வந்தான்.

இந்தப் பயணத்தில் கப்பலில் வேலைக்கு வந்த மாலுமிகளில் பெரும்பாலோர் இளைஞர்கள். வயதான மாலுமிகளைக் காட்டிலும் இளைஞர்களை அழைத்துச் சென்றதால், வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள். தங்கள் கப்பல் தலைவர்களை மதித்து பணிவுடன் நடந்து கொண்டார்கள். முன் பயணங்களில் வந்த மாலுமிகள், வேலையும் ஒழுங்காகச் செய்ததில்லை. பற்றாக்குறைக்கு, "இவர் என்ன பெரிய ஊரைக் கண்டுபிடித்தார்? கால் காசுக்குப் பெறாத கடல் தீவுகள்!" என்று வேறு பேசினார்கள். இந்தத் தொந்தரவுகன் எல்லாம் இல்லாதொழிந்தன.

கப்பல் தலைவர்கள் மாலுமிகள் எல்லோருக்கும் அரசாங்கம் சம்பளம் கொடுத்தது. ஆறு மாதச் சம்பளம் முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. பயணம் முடிந்து திரும்பி வருபவர்களுக்கு ஒரு பானை பணம் கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. 1502-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் நாள் செலிலித் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் புறப்பட்டன. மே பதினொன்றாம் நாள் சாடிஜ் துறைமுகத்தை யடைந்த கப்பல்கள் காற்றுத் தோதாக இல்லாததால் காத்திருக்க நேரிட்டது. மொரோக்கோவில் உள்ள அர்ஜிலாத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுப் பின் புறப்பட்டு மே இருபதில் லாங்பால்மாஸ் துறைமுகம் அடைந்தன. கானரிப் பெருந் தீவுகளிலிருந்து கப்பல்கள் மேற்கு நோக்கிப் புறப்பட்ட நாள் மே இருபத்தைந்து!

சரியாக இருபத்தொரு நாள் பயணம் செய்து ஜூன் 15-ம் நாள் தென் டொமினிகாவை அடுத்த தீவான மார்ட்டினிக்கில் நங்கூரம் பாய்ச்சி மாலுமிகள் அங்கே மூன்று நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். இந்த மூன்று நாட்களும் ஆள் தின்னும் கரீபியர்களின் தொந்தரவில்லாமல் இருந்தது.

ஜூன் 29-ம் நாள் அவன் கப்பல்கள் சாண்டா டோமிங்கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. சாண்டா டோமிங்கோவிற்குப் போகக் கூடாதென்று அரசரும் அரசியாரும் அவனை மிகவும் எச்சரித்திருந்தார்கள். அங்கு சென்றால் அவனுக்கும் ஓவாண்டோவுக்கும் தகராறு ஏற்படக் கூடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால். அவர்கள் எச்சரிப்பையும் மீறிக் கொலம்பஸ் அந்த ஊர் நோக்கிச் சென்றான். ஓவாண்டோ திருப்பியனுப்பும் கப்பல்களில் கடிதம் எழுதிக் கொடுத்துவிடலாம் என்பதற்காகவே அங்கு சென்றதாக கொலம்பஸ் சமாதானம் கூறினான். மேலும், ஒரு புயல் இரண்டொரு நாளில் உருவாகக் கூடும் என்று எதிர்பார்த்தான்.

சாண்டோ டோமிங்கோவை நெருங்கிய கொலம்பரை தன் கப்பல் தலைவர்களில் தலைமையான ஒருவனைக் கரைக்கு அனுப்பினான். கவர்னர் ஓவாண்டோவுக்கு அந்தக் கப்பல் தலைவன் மூலம் கொலம்பஸ் ஒரு கடிதம் கொடுத்துவிட்டான். தன் கப்பல்கள் அங்கு தங்குவதற்கு அனுமதி கேட்டு எழுதியிருந்தான் கொலம்பஸ். அத்துடன் மட்டுமல்லாமல், இரண்டொரு நாட்களில் புயல் உருவாகக்கூடும் என்ற செய்தியையும் குறிப்பிட்டு. கப்பல்கள் எங்கேனும் புறப்படுவதாயிருந்தால் இரண்டு நாட்களுக்குப்பின், புயல் நின்ற பிறகு புறப்படலாம் என்றும், எல்லாக் கப்பல்களுக்கும் இருபுறமும் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் எச்சரித்தும் எழுதியிருந்தான்.

அகங்காரம் பிடித்த ஓவாண்டோ, கொலம்பஸ் அரும் பாடுபட்டுக் கண்டுபிடித்த ஒரு நாட்டுக்குத்தான் தான் கவர்னராயிருக்கிறான் என்பதையும் எண்ணிக்கூடப் பார்க்காமல், இந்தக் கடிதத்தைத் தன் ஆட்கள் முன்னிலையில் வேடிக்கையாகப் படித்தானாம்! அக்கடிதத்தில் உள்ள சொற்களைப் படிக்கும் போது அவற்றிற்குரிய நடிப்புக்களைச் செய்து காட்டி, நையாண்டி செய்துகொண்டே படித்தானாம்! கூட இருந்தவர்கள் ஆடிப்பாடிப் பரிகசித்தார்களாம்! கொலம்பஸ் தன் கப்பல்களுடன் துறைமுகத்தில் தங்க அனுமதி வழங்க மறுத்துவிட்டான். அத்துடன் நில்லாது, கொலம்பஸ் எச்சரித்திருப்பதையும் பொருட்படுத்தாது தான் முன் ஏற்பாடு செய்திருந்தபடியே தன்னுடன் வந்த கப்பல்களை ஸ்பெயினுக்குத் திருப்பியனுப்பினான்.

அந்தக் கப்பல்கள் மோனா வழியைச் சுற்றிக்கொண்டு இஸ்பானியோலாவின் தென் கரைப்புறமாகச் சென்ற போது புயலடிக்கத் தொடங்கிவிட்டது. தென்கரைப் புறத்தில் ஒரு துறைமுகங்கூடக் கிடையாது. சுழற்காற்றோ வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சீறி வந்தது.. ஓவாண்டோவின் அகங்கார மமதைக்கு அந்தக் கப்பல்கள் எல்லாம் பலியாயின. பத்தொன்பது கப்பல்கள், ஏறியிருந்த ஆட்கள், தங்கம், மற்ற பொருள்களோடு அப்படியே மூழ்கிவிட்டன. ஆறு கப்பல்கள் மூழ்கினாலும், அவற்றில் இருந்த சிலர் எப்படியோ தப்பிப் பிழைத்துக் கரையேறி விட்டார்கள். நான்கு கப்பல்கள், சுழலுக்குத் தப்பிப் பத்திரமாக சாண்டா டோமிங்கோ வந்து சேர்ந்து விட்டன என்றாலும், சேர்ந்த உடனேயே துறைமுகத்திலேயே மூழ்கிப் போயின! அப்படிப்பட்ட நிலையில்தான் உயிருக்குப் போராடிக்கொண்டு, அந்தக் கப்பல்களை மாலுமிகள் காப்பாற்றிக்கொண்டு வர முடிந்தது, தப்பிப் பிழைத்து எவ்வித சேதமுமில்லாமல் திரும்பிவந்து, ஸ்பெயினுக்கும் போய்ச் சேர்ந்தது, அந்தக் கப்பலில்தான் கொலம்பசின் வரித் தங்கத்தை வசூலித்துக்கொண்டு அவனுடைய பிரதிநிதியான கார்லாஜல் புறப்பட்டிருந்தான், கார்லாஜலும், கொலம்பசின் தங்கமும், அந்தச் சிறு கப்பலின் மாலுமிகளும் பத்திரமாக ஸ்பெயின் போய்ச் சேர்ந்தனர்.

கொலம்பசை எத்தனையோ சோதனைகளுக்காட்படுத்திய கடவுள், அந்த நேரத்தில், நியாயத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுடைய தங்கமும் அவனுடைய பிரதிநிதியும் ஏறியிருந்த கப்பலைக் காப்பாற்றி விட்டார் போலும், அதுமட்டுமல்ல, இந்தப் புயலுக்குக் கொலம்பசும் தன் நான்கு கப்பல்களோடு தப்பிவிட்டான்.

சாண்டோ டோமிங்கோவில், அவன் தங்க ஓவாண்டோ அனுமதி மறுத்துவிட்டான். ஆகவே கொலம்பஸ் சாண்டா டோமிங்கோவிற்கு மேற்கே சிறிது தூரத்தில் உள்ள ரியோ ஜயினா ஆற்று முகவாயிலை அடைந்தான்! அந்த இடம் புயலுக்கு மறைவிடமாயிருக்கும் என்று அவன் கணித்தபடியே நடந்தது. மோனாவழியில் புயல் சீறியடித்தபோது ரியோ ஜயினா முகவாயிலில், காற்றின் அசைவுகூட இல்லாமலிருந்தது!

ஆனால், இரவில் வடகாற்றுச் சீறியடித்தது! அதன் கோபத்திற்கு ரியோ ஜயினா முகவாயிலும் ஆளாயிற்று. கொலம்பசின் கப்பல்கள் காற்று வேகத்தில் நங்கூரத்தை அறுத்துக்கொண்டு கடல்வெளியில் தள்ளுண்டு சென்றன. கப்பல்கள் பக்கத்துக்கொன்றாகப் பிரிந்து சென்றன. இருந்தாலும், திறமையும், ஊக்கமும் சுறுசுறுப்பும் உடைய இளம் மாலுமிகளின், விழிப்புணர்ச்சி மிக்க உழைப்பாலும் கடலனுபவத் திறத்தாலும், நான்கு கப்பல்களுமே காற்றை சமாளித்துத் தப்பிவிட்டன. ஒவ்வொரு கப்பலிலும் இருந்தவர்கள், மற்ற மூன்று கப்பல்களுமே மூழ்கிவிட்டன என்று எண்ணிக் கொண்டார்களாம்! ஆனால், ஒரு சிறு துறைமுகத்தில் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று அதிசயிக்கத்தக்க முறையில் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கப்பல்களும் வந்து சேர்ந்தனவாம். ஒரு கப்பலின் படகும், மூன்று கப்பல்களின் நங்கூரமும் உடைந்து போயின! இவை மட்டுமே பெரிய சேதங்களாம்!

பத்து நாள் அசுலா என்ற இடத்தில் தங்கியிருந்து பின் புறப்பட்ட கொலம்பஸ் ஜமைக்காவின் தென்கரை வழியாகச் சென்று கரீபியன் கடலைக் கடந்து சென்றான்.

போனாக்கா திவில் அவர்கள் நங்கூரம் பாய்ச்சிக் கப்பலை நிறுத்தியிருந்தபோது ஒரு கப்பலளவு பெரிய இந்திய ஓடத்தைக் காண நேரிட்டது. இவ்வோடத்தில், அறைகள் அமைக்கப் பெற்றிருந்தன. பருத்தித் துணிகளும் செப்புத் தளவாடப் பொருள்களும். உலோகங்களை உருக்கப் பயன்படுத்தும் மூசைகளும், ஹியூபோ என்ற பழச்சாற்றில் செய்யப்பட்ட பீர் அடங்கிய சுரைக் குடுக்கைகளும், சாக்சாலோ பீன்சுகளும் அந்த ஓடத்தில் வாணிகச் சரக்குகளாக ஏற்றப்பட்டிருந்தன. அந்த ஓடம் ஓட்டியைக் கொலம்பஸ் பலவந்தமாகப் பிடித்துத் தன் கப்பலில் ஏற்றிக்கொண்டான். அவன் பிறகு, வழிகாட்டியாகவும், மொழி பெயர்ப்பாளனாகவும் கொலம்பசுக்குத் துணையாகப் பயன்பட்டான்.

ரியோ ரோமானோவிலிருந்து புறப்பட்ட இருபத்தெட்டு நாட்களுக்கு இடையில் கொலம்பஸ் மீண்டும் காற்றின் கொடுமைக்கு ஆட்பட வேண்டியிருந்தது. தொடர்ந்து பெய்த மழையும், இடியும், மின்னலும், இதயங்குலுக்கும் பயங்கரத்தை உண்டாக்கி விட்டன. ஊழிக்கால மழை போல் சிறுங் காற்றோடு கூடித் தொடர்ந்தடித்த இம்மழை. ஊக்கமும் வீரமும் மிக்க பழம் புலிகளையே உள்ளம் குலைய வைத்தது. ஒவ்வொருவரும் தங்களைக் காப்பாற்றிவிட்டால் யாத்திரை போவதாகவும், பாவம் எதுவும் செய்வதில்லை யென்றும் ஆண்டவனைத் தொழுது வேண்டிக்கொண்டார்கள். தங்கள் பாவங்களை யெல்லாம், மற்றவர்கள் காது கேட்கும்படியாகக் கூறி ஒவ்வொருவரும் இறைவனிடம் மன்னிப்புக் கோரித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள்.

கொலம்பஸ் தன் மனவுறுதியினாலேயே. இந்நிலையைச் சமாளித்தான் என்று சொல்லவேண்டும். அவனுக்கிருந்த மனவுறுதி யிருந்தாலொழிய வேறு யாரும் இந்தத் துயரத்தினின்று மீண்டிருக்க முடியாது. காற்றோ தொடர்ந்து கீழ்த்திசையிலிருந்து அடித்துக் கொண்டிருந்தது. கடல் நீரோட்டமோ மேல் திசையிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பகலிற் போலவே இரவிலும் கப்பல்கள் மேலும் கீழுமாக அல்லாடிக் கொண்டிருந்தன. யாரும் தூங்க முடியாது. மேலும், படையெடுத்து வந்த கொசுக்களோடு வேறு போராட வேண்டியிருந்தது. கப்பல்கள் ஓரேயிடத்தில் நின்றாலும் ஆபத்தாயிருந்தது; நிற்காமல் சென்றாலும் ஆபத்தாயிருந்தது. ஒரு நாள் சென்ற திசையில் மறுநாள் செல்ல முடியாமலிருந்தது. போன திசையிலிருந்து புறப்பட்ட இடத்திற்கே சில சமயம் திரும்பி வர நேர்ந்தது. எப்படி எப்படியோ சமாளித்து செப்டம்பர் 14:ம் நாள் ஒரு முனையை அடைந்து அத்தீவின் தென்கரைப் பக்கமாகக் கப்பல்களை ஒதுக்கிக் காற்றின் கொடுமைக்குத் தப்பிவிட்டார்கள். நிகாரகுலா என்ற இடத்தில் தண்ணீரும் விறகும் ஏற்றுவதற்காகக் கப்பல்களை நிறுத்தினான். அங்கு இரண்டு மாலுமிகள் ஆற்றில் வீழ்ந்து மூழ்கிப் போனார்கள். அங்கிருந்து கோஸ்டாரிக்காவை அடைந்தார்கள்.

கோஸ்டாரிக்காப் பகுதியைச் சேர்ந்த உவாத்தீவில் இந்தியர்களிடம் சிறிது வாணிபம் நடந்தது. அந்தத் தீவை ஸ்பெயினுக்கு உரிமைப்படுத்தும் சடங்கைச் செய்வதற்காக பார்த்தலோமியோ கொலம்பஸ், கரைக்குச் சென்றான். தாள். இறகு பேனா, மைக்கூடு ஆகியவற்றுடன் சென்ற மாலுமிகளை மந்திரவாதிகள், என்றும், அவர்களுடைய எழுது கருவிகளை மாந்திரீகக் கருவிகள் என்றும் எண்ணிப் பயந்தார்கள் அந்த இந்தியர்கள்.

இப்பகுதியின் உள்நாட்டுப் பகுதியை ஆராய்வதற்காக ஆயுதந் தாங்கிய ஒரு குழுவை அனுப்பி வைத்தான் கொலம்பஸ். இங்கு அவர்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்கள். மான்கள், பூமா என்ற காட்டுப் பூனை, வான் கோழியைப் போன்ற பாலோன் என்ற பறவை இவற்றோடு நீண்ட வாலுடைய ஒருவகைக் குரங்கொன்றை உயிருடன் கொண்டு வந்தார்கள்.

போர்ட்டோ லிமனிலிருந்த இந்தியர்கள் கொலம்பசுக்கு இரண்டு காட்டுப் பன்றிகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்றைக் கொலம்பஸ் கப்பலிலேயே வைத்துக் கொண்டான். அது கப்பலிலிருந்த வரை அவனுடைய ஐரிஷ் வேட்டை நாய் வெளிக்கிளம்பவேயில்லை. பயந்து போய் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. ஆனால், நீண்ட வால் குரங்குக்கும், அந்தக் காட்டுப் பன்றிக்கும் ஒரே போட்டியாய் இருந்தது. இரண்டையும் சண்டைக்கு வீட்டுப் பார்ப்பதில் ஸ்பானியர்கள் வேடிக்கையாகப் பொழுது போக்கினார்கள். வால்குரங்கு வேட்டையில் காயமுற்றிருந்த போதும், பின்வாங்காமல் போரிட்டது. காட்டுப் பன்றியின் நீண்ட வாயைத் தன் வாலினால் சுற்றிக் கட்டிவிட்டு, அதன் கழுத்தைப்பிடித்து கொண்டு, அது கதறித் துடிக்கக் கடித்துக்கொண்டிருந்தது. இரக்கவுணர்ச்சி சிறிதுமில்லாமல் மாலுமிகள் இந்தச் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு வளை குடாப் பகுதியில், நாட்டின் உட்பகுதியில் இருந்த இந்தியர்கள் தங்க வளையங்களை அணிந்திருந்தார்கள். மூன்று பருந்து மணிகளுக்கு ஒரு வளையம் வீதம் அவை வாங்கப்பட்டன. இதில் ஒன்றுக்கு நான்கு மடங்கு இலாபம் இருந்தது. இங்கு தான் தேடிவந்த கடல்வழிக் கால்வாயைக் கண்டுவிட்டதாகக் கொலம்பஸ் எண்ணிக் கொண்டான். கைச்சாடை மூலம் ஏதேனும் கடற்கால்வாய் இருக்கிறதா என்று இந்தியர்களைக் கேட்டதற்கு, அவர்கள் ஒரு சிறு கால்வாயிருந்த திசையைக் காட்டினார்கள். மிகக் குறுகிய அதன் வழியாகக் கால்வாய்கள் சென்று கடைசியில் ஒரு கடல் ஏரியை யடைந்தன. இந்திய மாக்கடலை யடைவதற்குப் பதிலாக, சுற்றிலும் மலைகள் சூழ்ந்த இந்த ஏரியையடைந்து ஏமாந்தான் கொலம்பஸ். இங்கும் தங்க வளைய வாணிகம் நன்றாக நடந்தது.

சைகை மொழியைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், இந்தியர்களுடன் பேசிய கொலம்பஸ், கங்கையாறு அங்கிருந்து பத்து நாள் பயணத்தில் தான் இருக்கிறதென்று கற்பனை செய்துகொண்டான்.

பல இடங்களைச் சுற்றிக்கொண்டு நவம்பர் 2-ம் நாள் போர்ட்டோ பெல்லோ துறைமுகத்தை யடைந்தான். இத் துறைமுகம் மிக அழகானது. இங்கு தங்கம் கிடைக்காததால் கொலம்பஸ் தங்கவில்லை. கொலம்பஸ் இங்கு சில நாள் தங்கியிருந்திருந்தால் பனாமாக் கடல் கால்வாயைக் கண்டுபிடித்திருப்பான். ஆனால், பொன்னில்லா ஊரில் பொறுத்திருக்க வேண்டாம் என்று ஒரு வாரத்தோடு புறப்பட்டு விட்டான்.

எஸ்கிரிபானோ என்ற சிறு துறைமுகத்தில் இறங்கிய மாலுமிகள், ஊருக்குள் சென்று துப்பாக்கியின் உதவியால் சில இந்தியர்களை மிரட்டிப் பொருள்களைப் பறித்துக் கொண்டு வந்தனர். இது பேராபத்தாக முடிந்தது. இந்தியர்கள் பெரும்படையாகத் திரண்டு கடற்கரைக்கு வந்து விட்டார்கள். அவர்களைக் கலைப்பதற்காக துப்பாக்கியால் சுட்டுச் சிலரைக் கொல்லும்படி நேர்ந்தது.

தங்க வியாபாரத்திற்காக மீண்டும் கப்பல்கள் போர்ட்டோ பெல்லோவுக்குத் திரும்பி வந்தன. அங்கு காற்றும் மழையும் பலமாகப் பிடித்துக் கொண்டன. இங்கு கொலம்பஸ் பைபிளிலுள்ள புனித உபதேசங்களில் சிலவரிகளைப் படித்தவுடன் மழை நின்றுவிட்டதாம்.

பனாமாக் கால்வாய்ப் பகுதியில் உள்ள கிரிஸ்டோபல் துறைமுகத்தில் கிறிஸ்துமசும், 1503-ம் ஆண்டுப் பிறப்பும் கழிந்தன. ஆனால், அவை புத்துணர்ச்சியுடன் கொண்டாடப்படவில்லை. கொலம்பசுக்குப் பொறுமையிருந்திருந்தால் அப்போது பனாமாக் கால்வாயைக் கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால், அவன் அப்போது அலுத்துக் களைத்துப் போயிருந்ததால், அந்தப் பகுதியைச் சுற்றி ஆராய முற்படவில்லை. ஆகவே, அவன் நான்காவது பயணம் புறப்பட்டுச் சென்ற நோக்கம் சிறிதும் நிறைவேறாமலே போயிற்று.

மேல்திசை வழியாகத் திரும்பத் தொடங்கிய கொலம்பஸ், தங்கம் நிறையக் கிடைக்கக் கூடிய ஓரிடத்தைக் கண்டுபிடித்து வாணிய நிலையமாக்கவேண்டும் என்று எண்ணினான். வெராகுலா ஆற்றங்கரைப் பகுதியில் ஆற்றின் முகவாயில் அருகில் இருந்த ஒரு குன்றிருந்த இடத்தை அவன் நகரமாக்கத் திட்டமிட்டான். அந்த இடம் மிக அழகாக இருந்தது. அதன் அழகில் மயங்கியே கொலம்பஸ் வாணிப நிலையமாக்க எண்ணினான். பெலன் என்ற இடத்தில் ஸ்பானியர்கள் கோட்டை கட்டித் தங்கலானார்கள்.

அந்தப் பகுதியின் சிவப்பு இந்தியத் தலைவன் குயிபியன் என்பவன் முதலில் நட்பாகத்தான் இருந்தான், தன் ஆட்களோடு வந்து கொலம்பசின் கப்பலில் விருந்துண்டு சென்றான். ஆனால், ஸ்பானியர்கள் அங்கேயே நிலையாகத் தங்க முடிவுகட்டி விட்டார்கள் என்றவுடனே அவன் பலவழிகளில் தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டான். அதன் பின் அந்தப் பகுதியில் வெள்ளையர்கள் உயிரோடு இருப்பதே அரிதாகத் தோன்றியது. கடைசியில் பல தொல்லைகளுக்குப் பின், பல ஸ்பானியர்களைப் பலிகொடுத்தபின் கொலம்பஸ் அந்த இடத்னத விட்டு விட்டுப் புறப்பட முடிவு கட்டினான்.

1503-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத் துவக்கத்தில் பெலன் பகுதியை வீட்டுப் புறப்பட்ட கொலம்பஸ் சாண்டா டோமிங்கா சென்று கப்பல்களைப் பழுது பார்த்துக் கொண்டு போக எண்ணினான். கொலம்பஸ் தன் அனுபவத்தின் துணையால், சாண்டா டோமிங்கோவிற்கு விரைவாகப் போய்ச் சேரக்கூடிய வழியில் கப்பலைச் செலுத்தினான். கீழைக் காற்றுகளைச் சமாளித்துப் போவது எளிதல்ல. ஆசுவே, கரையோரமாகவே சென்று இஸ்பானியோலாவின் தென்பகுதியை அடைய வேண்டும் என்று திட்டமிட்டான்.

ஆனால், மற்ற கப்பல் தலைவர்கள், முன்பின் தெரியாத முறையில் கப்பலைச் செலுத்திக்கொண்டு போக விரும்பவில்லை. வழியில் கொலம்பசைச் சூழ்ந்துகொண்டு வட திசையில் கப்பலைத் திருப்பும்படி கட்டாயப்படுத்திக் தொந்தரவு கொடுத்தார்கள்.

கப்பல்கள் மிகவும் ஓட்டையாகி விட்டன. ஓட்டைகளின் வழியாகத் தண்ணீர் கப்பல்களுக்குள் புகுந்து கொண்டேயிருந்தது. மாலுமிகள் அல்லும் பகலும் குழாய்களின் மூலம் தண்ணீரை வெளியேற்றிக்கொண்டே யிருந்தார்கள்.

எப்படியெப்படிப் பட்ட தொல்லைகளை யெல்லாமோ அனுபவித்துக்கொண்டு ஜூன் 25-ம் நாள் ஜமைக்காவில் உள்ள செயின்ட் ஆன் விரிகுடாவில் உள்ள சாண்டா குளோரியாவை அந்தக் கப்பல்கள் அடைந்தன. ஓட்டையாக இருந்த அந்தக் கப்பல்களை நீரில் விட்டு வைப்பது பயனில்லை என்று கண்ட கொலம்பஸ் அவற்றைக் கடற்கரை மணற்பகுதியில் கரை தட்டச் செய்தான். அவற்றை ஒன்றன் அருகில் ஒன்றாக முட்டுக் கொடுத்து நேராக நிற்க வைத்து, அக்கப்பல்களின் மேலேயே ஓலை வேய்ந்து, ஆட்கள் தங்குவதற்கு அறைகள் அமைத்தான்.

ஏறக்குறைய அங்கு அவர்கள் ஓராண்டு காலம் தங்கி யிருந்தார்கள். அருகில் இருந்த சிற்றூரில் இருந்த இந்தியர்கள் நட்பு முறையில் பழகினார்கள். தன் ஆட்களைக் கரையில் விட்டால், விரைவில் அந்த நட்பைப் போக்கிப் பகைமை வளர்த்துவிடுவார்கள் என்று கண்ட கொலம்பஸ் தன் அனுமதியில்லாமல் யாரும் கப்பல்களை விட்டுப் போகக் கூடாதென்று கட்டளையிட்டுவிட்டான்.

ஓராண்டாக அங்கு தங்கிய ஸ்பானியர்கள் தங்கள் தேவையைத் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளச் சிறிதும் முயலவே இல்லை. நிலவளமிகுந்த அந்தப் பகுதியில் உணவுத் தானியங்களைப் பயிரிட்டிருக்கலாம். மீன் பிடித்திருக்கலாம். அதெல்லாம் செய்யவில்லை.

டீகோ மெண்டஸ் என்ற கப்பல் தலைவன் உணவு பெறுவதற்காக இந்தியர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இரண்டு பாசி மணிகளுக்கு ஒரு கசாவா ரொட்டித் துண்டும், சரிகைத் துண்டு ஒன்றுக்கு ஒரு பெரிய குழி முயலும் கொடுக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டான். இந்தியர்கள் மட்டும் உணவு கொடுக்காமல் இருந்திருந்தால், ஸ்பானியர்கள் பட்டினி கிடந்தே செத்துப் போயிருக்க நேரிட்டிருக்கும்.

அங்கிருந்து எப்படித் தாய்நாட்டுக்குத் திரும்புவது என்பது பெரிய பிரச்சினையாகி விட்டது. கப்பல்கள் அந்தப் பக்கம் வருமென்று எதிர்பார்ப்பதற்கும் வழியில்லை.

யாராவது ஒருவர் துணிந்து இஸ்பானியோலா நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்து ஓர் உதவிக் கப்பலைக் கொண்டுவந்தால் நல்லது என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால், யார் போவது?

டீகோ மெண்டஸ் உதவியைத்தான் எல்லோரும் நாடினார்கள்.

டீகோ மெண்டஸ் இந்தியர்களிடமிருந்து ஒரு பெரிய ஓடத்தை விலைக்கு வாங்கினான். அதற்குப் பாய்மரமும் பாய்களும் அமைத்தான். ஒரு சிறு கப்பல் போல் அதை மாற்றியமைத்தான். இஸ்பானியோலா நோக்கிப் புறப்பட்டான். ஆனால், வழியில் வடமுனையில் ஓரிடத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் எப்படியோ தப்பிப் பிழைத்து சாண்டா குளோரியாவுக்கே திரும்பி வந்து சேர்ந்தான்.

மறுபடியும் அவன் புறப்பட்ட போது ஜினோவாக்காரனான பீக்கி என்ற மற்றொரு கப்பல் தலைவன் இன்னொரு ஓடத்தில் அவனுக்குத் துணையாகப் புறப்பட்டான். ஓடத் துக்கு ஒரு தலைவனும், ஆறு வெள்ளையர்களும் பத்து இந்தியர்களுமாகப் பதினேமும் பதினேழும் முப்பத்து நான்கு பேர் புறப்பட்டுச் சென்றார்கள். இந்தியர்கள் பாதி வழியிலேயே இருந்த தண்ணீரையெல்லாம் குடித்துத் தீர்த்து விட்டார்கள். தண்ணீர் தவிப்பெடுத்தே ஓர் இந்தியன் இறந்து போனான். மற்றவர்கள் துடுப்பு வலிக்கக்கூட வலுவில்லாமல் சோர்ந்து கிடந்தார்கள். நமாசா என்ற இடத்தில் எல்லோரும் கரைக்குச் சென்று, வயிறு கொண்ட மட்டும் நல்ல தண்ணீரைப் பருகி. மீன் கறி சமைச்துச் சாப்பிட்டார்கள். மறுநாள் மாலை இஸ்பானியோலாவின் டிபுரான் முனையை அடைந்துவிட்டார்கள். அங்கு புதிதாகச் சில இந்தியப் படகோட்டிகளைத் துடுப்பு வலிக்க அமர்த்திக்கொண்டு அசூலாவிற்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்து கால்நடையாகச் சென்று கவர்னர் ஓவாண்டோ இருந்த இடத்தையடைந்தான்.

கவர்னர் ஓவாண்டோவிடம் அப்போது இரண்டு கப்பல்கள் துறைமுகத்தில் இருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட அவன் கொலம்பசையும் ஆட்களையும் மீட்டு வர அனுப்ப இசையவில்லை.

கொலம்பஸ் வந்தால் மீண்டும் அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துத் தான் பதவியை விட்டுவிட நேரிடும் என்று அஞ்சினான் கொலம்பஸ் ஜமைக்காவிலே இருந்து தொலைந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணினான். ஏற்பாடு செய்வோம், செய்வோம் என்று சொல்லிச் சொல்லி ஏழு மாதம் வரை மெண்டசைக் காக்கவைத் தான். கடைசியில் கால்நடையாகச் சென்று சாண்டா டோமிங்கோவில் வேறு கப்பல்கள் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள அனுமதித்தான். தன் வசமிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றைக் கூடக் கொடுக்க முடியாதென்று கண்டிப்பாக மறுத்துவிட்டான்.

கப்பல் கொண்டுவரப் போனவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆறுமாதமாகியும் ஆறுதலான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. கொலம்பசுடன் கூட இருந்த மாலுமிகளில் சிலர் முணுமுணுத்தார்கள். கொலம்பசுக்கும் அவர்களுக்குமிடையே சச்சரவு மூண்டது. எதிர்ப்பாளர்கள், போராஸ் சகோதரர்களின் தலைமையில் ஒன்று திரண்டார்கள்

”கொலம்பஸ். இந்தத் தீவிலேயே நாடு கடத்தப்பட்டவனாக கிடக்கட்டும். வாருங்கள்! நாம் இஸ்பானியோலா நோக்கிப் புறப்படுவோம்" என்று போராஸ் சகோதரர்கள் கூட்டம் சேர்த்தார்கள். 48 பேர் கையில் கிடைத்த துப்பாக்கிகளுடன் புறப்பட்டார்கள்.

1504-ம் ஆம் ஆண்டுப் பிறப்புக்கு மறுநாள் ”ஸ்பெயின் செல்லுவோம்”; என்ற முழக்கத்துடன் பத்து ஓடங்களில் அவர்கள் கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டார்கள். கரையோரமாகவே சென்ற அவர்கள் ஆங்காங்கே இருந்த சிற்றூர்களில் இறங்கி, சிவப்பு இந்தியர்களின் குடிசைகளில் புகுந்து கொள்ளையடித்தார்கள். கொள்ளை யடித்துக் கிடைத்த உணவுப் பொருள்களுடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள். பதினைந்து மைல் தூரம் தான் போயிருந்தார்கள். எதிர்க்காற்று அவர்களை மேலே போக விடாமல் தடுத்தது. ஓடங்கள் மூழ்கிவிடும் போலிருந்த நிலையில் கொள்ளையிட்ட பொருள்களைக் கடலுக்குள் எறிய வேண்டி நேரிட்டது. பளுவைக் குறைப்பதற்காகச் சில இந்தியத் துடுப்புக்காரர்களையும் கடலுக்குள் பிடித்துத் தள்ளினார்கள். மேற்கொண்டு போகவே முடியாதென்ற நிலையில் அருகில் இருந்த கரையில் ஒதுங்கினார்கள். மறுபடியும் இரண்டு முறை முயன்றும் காற்றை எதிர்த்துப் போக முடியவில்லை. ஓடங்களை விட்டுவிட்டுக் கரையோரமாக கால்நடையாக சாண்டா குளோரியாவுக்கே திரும்பிச் சென்று சேர்ந்தார்கள்.

இதற்கிடையில் கொலம்பசும், அவனிடம் பற்றுக் கொண்டு உடன் தங்கியவர்களும் பசியால் வாடும் நிலை ஏற்பட்டது. இந்தியர்களிடம் ரொட்டித் துண்டு வாங்கப் பயன்பட்ட பருந்து மணிகளும், சரிகைத் துண்டுகளும் தீர்ந்துவிட்டன. மேற்கொண்டு எப்படி உணவு பெறுவதென்று தெரியாமல் விழித்தார்கள்.

கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். அவனிடம் இருந்த நாட்பஞ்சாங்கத்தில், பிப்ரவரி மாதம் 29-ம் நாள் பூரண சந்திரக் கிரகணம் என்று குறிப்பிட்டிருந்தது இதைக் கண்டு கொண்ட கொலம்பஸ் பக்கத்து ஊர்களிலிருந்த சிவப்பு இந்திய இனத்தவர்களையெல்லாம் கிரகணத் தன்று வரவழைத்தான். கப்பல் தட்டுக்கு வந்த அவர்களிடம், தொடர்ந்து அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு உணவு கொடுத்துவர வேண்டுமென்பதே ஆண்டவனின் விருப்பம் என்று சொன்னான். அவ்வாறு கொடுக்காவிட்டால் ஆண்டவன் கோபம் கொள்ளுவார் : சந்தேகமிருந்தால் அன்றிரவு சந்திரனைக் கவனிக்கலாம் என்றுரைத்தான்.

சந்திரன் தோன்றியது. சிறிது நேரத்தில் கிரகணம் பீடிக்க ஆரம்பித்தது. சந்திரனை இருள் கவ்விப் பரவப் பரவ இந்தியர்களின் பீதி அதிகரித்தது. ஆண்டவன் சந்திரனையே அழித்து விடுவாரோ என்று பயந்தார்கள். இரவில் வெளிச்சம் இல்லாமலே போய்விடுமோ என்று நடுங்கினார்கள். கப்பல்கள் நின்ற இடத்திற்கு ஓடி வந்தார்கள்.

”நிறுத்துங்கள், நிறுத்துங்கள்! நீங்கள் சொல்கிற படியெல்லாம் கேட்கிறோம்" என்று கொலம்பசை வேண்டினார்கள். கொலம்பஸ் மலுக்கிக் கொண்டான். பேசாமல் கப்பல் அறையில் போய்ப் படுத்துக்கொண்டான். நேரத்திற்கு நேரம் வெளியில் இந்தியர்களின் பீதிக் கூச்சல் அதிகமாகிக் கொண்டிருந்தது. கிரகணம் விலக ஆரம்பிக் கும் நேரத்தில் கொலம்பஸ் வெளியில் வந்தான். "உங்கள் குறையை ஆண்டவனிடம் சொன்னேன் ; நீங்கள் எங்க ளுக்கு நாள்தோறும் உணவுப் பொருள்கள் கொடுப்பதாயிருந்தால் மன்னித்துச் சந்திரனை விட்டுவிடுவதாக இறைவன் கூறுகிறார்" என்றான்.

"எப்படியாவது சந்திரனை விட்டால் போதும்" என்று இந்தியர்கள் அவனை வேண்டினார்கள். அதன்பின் சந்திர கிரகணம் விலகியது. கொலம்பசின் உணவுப் பஞ்சமும் ஒழிந்தது.

மார்ச் மாதக் கடைசியில் மெண்டஸ் புறப்பட்டுச் சென்ற எட்டாவது மாதம் ஒரு கப்பல் சாண்டா குளோரியா அருகில் வந்தது. அதை இஸ்பானியோலா கவர்னர் ஓவாண்டோ தான் அனுப்பியிருந்தான். கொலம்பசும், அவன் ஆட்களும் இன்னுமா உயிருடன் இருக்கிறார்கள் என்று பார்த்து வரும்படி அந்தப் படுபாதகன் அக்கப்பலை அனுப்பியிருந்தான். ஓர் ஆளைக் கூட ஏற்றிக்கொண்டு வரக் கூடாதென்று அந்தக் கப்பல் தலைவனுக்கு அவன் கடுமையான உத்தரவிட்டிருந்தானாம். ஆனால், இரண்டு பீப்பாய் திராட்சை மதுவும் சிறிது உப்பிட்ட பன்றிக்கறியும் அவன் வெகுமதியாக அனுப்பியிருந்தான். அத்தோடு அந்தக் கப்பல் தலைவன் ஒரு நல்ல செய்தி கொண்டுவந்திருந்தான். உதவிக் கப்பல் கொண்டுவர மெண்டஸ் முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதே அந்நற்செய்தி.

கப்பல் சென்றபின் போராஸ் சகோதரர் கூட்டத்துக்கும் கொலம்பஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு சிறு சண்டை ஏற்பட்டது. இருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காகவே அவர்கள் சண்டையிட்டார்கள்: கடைசியில் கொலம்பஸ் பக்கத்தாருக்கே வெற்றி கிட்டியது. போராஸ் சகோதரர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் மன்னிப்புப் பெற்றார்கள். அவர்கள் இருவரும் பாதுகாவலில் வைக்கப்பட்டார்கள்.

ஜமைக்காவில் குடியேறி ஓராண்டு கழிந்தபின் மெண்டஸ் அனுப்பிய ஒரு சிறு ஓட்டைக் கப்பல், உயிர் பிழைத்திருந்த சுமார் நூறு பேரையும் ஏற்றிக்கொண்டு இஸ்பானியோலாவுக்குப் போய்ச் சேர்ந்தது. அங்கிருந்து மற்றொரு கப்பலை அமர்த்திக்கொண்டு கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பினான். ஜமைக்காவிலிருந்து வந்தவர்களில் பலர் அவனுடன் ஸ்பெயினுக்குத் திரும்பவில்லை. சாண்டா டோமிங்கோவிலேயே தங்கிவிட்டார்கள். ஜமைக்காவிலிருந்து வரும் வழியில் கப்பலில் ஓட்டை வழியாக நிரம்பிய தண்ணீரை இரைத்து வெளியேற்றும் வேலையிலேயே பத்துப்பேர் செத்துப் போனார்கள். மீண்டும் ஒரு கடற்பயணத் துன்பத்தைத் தாங்கக்கூடிய வலுவை அவர்கள் இழந்திருந்தார்கள்.

உண்மையில் கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பிய பயணமும் நீண்டதாகவும் கொந்தளிப்பு நிறைந்ததாகவும் இருந்தது.

இரண்டரையாண்டுகள் கழித்து அவன் ஸ்பெயினுக்குத் திரும்பிய நான்காவது பயணம் பயனுள்ளதாக இல்லை. அவன் நினைத்தபடி கடற்கால்வாய் வழி கண்டுபிடிக்க முடியவில்லை. வாணிப நிலையம் ஏற்படுத்திய வெராகுவா, தங்கம் கிடைக்கும் இடமாயிருந்தாலும் தங்கியிருக்கக் கூடிய இடமாக இல்லாமற் போய்விட்டது. எவ்வித பலனுமின்றியே அவன் தன் நான்காவது பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பெயின் போய்ச் சேர்ந்தான்.