கடல்வீரன் கொலம்பஸ்/பழி மிகுந்தது

8

பழி மிகுந்தது


வாணிகம் செய்வதற்குத் தோதாக, ஒரு குடியேற்றப் பகுதியை உண்டாக்க வேண்டிய செயலில் கொலம்பஸ் இறங்கிய போது, அது பெருஞ்சிக்கலாயிருந்தது. டாக்டர் சங்கா என்பவர் காரகோல் வளைகுடா பகுதியிலேயே குடியேற்ற நாட்டை உருவாக்கலாம் என்று கருதினார். அதற்குக் காரணம், அங்குள்ள குடிமக்கள், வெள்ளையரோடு நட்பாக இருந்தார்கள் என்பதுதான். ஆனால், தங்கம் கிடைக்கக் கூடிய சிபாவோ அங்கிருந்து மிகத் தொலைவில் இருந்ததால், அந்தக் கருத்தைக் கொலம்பஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, நல்ல ஓர் இடத்தைத் தேடிக் கிழக்கு நோக்கிக் கப்பல்களைச் செலுத்தினான் கொலம்பஸ். ஆனால், எதிர்க்காற்றையும், கடல் நீரோட்டத்தின் வேகத்தையும் எதிர்த்துக் கிழக்கு நோக்கிச் செல்வது எளிதாக இல்லை. கடலில் முப்பத்திரண்டு மைல் கடந்து செல்ல இருபத்தைந்து நாட்கள் பிடித்தது என்றால், அந்தப் பயணம் எவ்வளவு இடர்ப்பாடும். முயற்சியும் உடையது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். மாலுமிகளும், கப்பலில் இருந்த மக்களும் அலுத்துச் சலித்துக் களைத்துப் போனார்கள். 1494-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் நாள் காற்றுத் தொந்தரவில்லாத ஒரு தீபகற்பத்தின் கரையில் கப்பல்கள் ஒதுங்கின. கொலம்பல மனஞ்சலித்துப் போயிருந்த காரணத்தினாலோ, அல்லது உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற உந்துதலினாலோ, அந்த இடத்தையே குடியேற்றத்திற்குரிய பகுதியாகத் தேர்ந்தெடுத்தான்.

அந்த இடத்திற்கு அரசி இசபெல்லாவின் பெயரையே இட்டான்.

இசபெல்லா என்ற அந்த இடம் குடியேறி வாழ்வதற்குச் சற்றும் ஏற்ற இடமல்ல. முதலாவதாக அங்கு நல்ல குடி தண்ணீர் கிடைக்கவில்லை. அடுத்தபடியாக அங்கு மலேரியாக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக இருந்தன. கப்பல்கள் ஒதுங்குவதற்கு நல்ல துறைமுகம் கூட இல்லை.

எல்லோரும் நகரம் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். பவழப்பாறைகளை உடைத்துப் பெயர்த்தார்கள். பக்கத்தில் ஓடிய ஆற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதற்காகக் கால்வாய் வெட்டினார்கள். சமயத்திற்குப் பயன்படக் கூடியதாக சுமார் இருநூறு குடிசைகளைக் கட்டி முடித்தார்கள். ஆனால், கப்பலில் கொண்டு வந்த உணவுப் பொருள்களில் பாதிக்குமேல் வழியிலேயே தீர்ந்துவிட்டன. மீதியிருந்தவை போதுமானதாக இல்லை. மதுவும் பிற குடிவகைகளும் தீர்ந்து விட்டன. அங்கு கிணற்று நீரைத்தான் குடிக்க வேண்டியிருந்தது. தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் நோய்வாய்ப் பட்டார்கள் சிலர். தின்று பழக்கமில்லாத மீனைத் தின்று வேதனைக்காளானார்கள் சிலர். மலேரியாக் காய்ச்சலுக்கு இரையாகித் துயரப்பட்டார்கள் சிலர். அங்குக் கிடைத்த உணவுப் பொருள்களைச் சமைத்தவுடன் டாக்டர் சங்கா முதலில் ஒரு நாய்க்கும் கொடுத்துப் பரிசோதிப்பார். அதன் பிறகுதான் மனிதர்களைச் சாப்பிட அனுமதிப்பார். அப்படியிருந்தும், உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுக் கோளாற்றுக்கு ஆளானவர்கள் பலர். பெரும் பகுதி ஆட்கள் நோயுற்றுப் படுத்த படுக்கையாகி விட்டபடியால், சொந்தச் செலவில் வந்திருந்த சில செல்வந்தர்களையும் உடலுழைப்புச் செய்யும்படி கட்டாயப் படுத்தினான் கொலம்பஸ். அவர்கள் தங்கம் தேடி வந்திருந்தார்களே தவிர அங்கம் நோக உழைக்க வரவில்லை. குடியேற்றத்துக்குத் தடையாக அந்த நாட்டுக் குடிமக்கள் இருந்து அவர்களை எதிர்த்துப் போராடச்சொல்லியிருந்தால், உற்சாகத்தோடு துப்பாக்கியைத் தோளில் தூக்கியிருப்பார்கள். ஆனால், மரம் வெட்டவும், மண் வெட்டவும், கல்லுடைக்கவும், சாந்து பூசவும் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வராதா என்ன? ஆனால், அவர்கள் கோபம் பலிக்கவில்லை. உழைக்காதவர்களுக்கு உணவுப் பங்கு கிடைக்காதென்று வீதிவகுத்து விட்டான் கொலம்பஸ் தரம் தெரியாதவன் என்று அவனைத் திட்டிக்கொண்டே அவர்கள் வேலை செய்தார்கள்.

நகர் உருவாக்கும் வேலை நடக்கும்பொழுதே ஓஜிடா என்பவன் தலைமையில் படைவீரர் கூட்டம் ஒன்று தங்கம் கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கக் கிளம்பியது. ஒஜிடா ஸ்பானிய வீரர்களோடு, இந்திய வழிகாட்டிகள் சிலரையும் கூட்டிச் சென்றான். அக்கூட்டத்தினர் இஸ்பானியோலாப் பெரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதியில் ஊடுருவிச் சென்று மத்திய கோர்டிலசா மலையடிவாரத்தில் உள்ள சிபாலோவை யடைந்தார்கள். அங்கு தங்கம் கிடைக்கும் என்பதற்குரிய ஏராளமான சான்றுகளுடன். மூன்று பெரிய தங்கக் கட்டிகளையும் எடுத்துக் கொண்டு, ஆரவாரத்தோடு அவன் இரண்டே வாரத்தில் இசபெல்லாவுக்குத் திரும்பி வந்துவிட்டான். மக்களை இறக்கி விட்டுவிட்டுத் திரும்பவேண்டிய கப்பல்கள் பனிரெண்டு. அந்தப் பனிரெண்டு கப்பல்களிலும், ஓஜீடா கொண்டு வந்த மூன்று தங்கக் கட்டிகளை மட்டும் அனுப்பிவைத்தால் பேரரசர் தன்னை எப்படி மதிப்பார் என்று எண்ணிப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. 'ப்படியும் கப்பல்களைத் திருப்பியனுப்பியாக வேண்டும் அவற்றைக் காவியாக அனுப்பலாமா? டோரிஸ் என்ற கப்பல் தலைவனின் தலைமையில் அப்பனிரெண்டு கப்பல்களும் திருப்பியனுப்பப் பெற்றன. அவற்றில் கொலம்பஸ் ஏற்றியனுப்பிய பொருள்கள் இவைதாம். கருவாப்பட்டை கடுமிளகு, சந்தனக் கட்டை, அறுபது கிளிகள், இருபத்தாறு அடிமைகள், தங்கக் கட்டிகள்! இவற்றில் கருவாப்பட்டை என்ற பெயரில் அனுப்பிய பொருளைக் கடித்துப் பார்த்தால் இஞ்சியின் சுவையுடையதாயிருந்தது. கடுமிளகு, மிளகைப் போலிருந்தாலும், அதற்குரிய வாசமற்றிருந்தது. சந்தனக்கட்டை என்ற பெயரில் சென்ற மரங்கள் சந்தன மரங்களின் குணங்களைக் கூடப் பெற்றிருக்கவில்லை. தங்கத்தின் மதிப்போ பதினாலாயிரம் சவரன்கள் தான்! இந்தச் சரக்குகளைப் பார்த்த அரசாங்க அதிகாரிகள், கப்பல் தலைவன் டேனிசைப் பார்த்துப் பரிகாசம் செய்தார்கள். "பொன் விளையும் பூமியான இந்தியாவிலிருந்து இந்த அற்பச் சரக்குகள் தானா அனுப்பி வைத்தார் உங்கள் பெருங் கடல் தளபதி" என்று கேட்டு அவர்கள் எள்ளி ககையாடினார்கள்.

பேரரசர்க்கும், பேரரசியார்க்கும் கொலம்பஸ் சாமர்த்தியமாகச் செய்தி சொல்லியனுப்பியிருந்தான். தங்கம் நிறையக் கிடைக்கிறது. ஆனால், அதை ஆற்று நீரிலிருந்து அரித்தெடுக்க வேண்டும். அதற்கு நாளாகும். மேலும் ஆட்கள் பலர் நோயில் வீழ்ந்துவிட்டார்கள். கிடைக்கும் தங்கத்தை உள் நாட்டிலிருந்து துறைமுகத்திற்கு எற்றிவரக்கூடிய சுமை விலங்குகள் கைவசம் இல்லை. எல்லாம் ஒழுங்கு பண்ணிக் கப்பலில் ஏற்றி அனுப்புவதென்றால் பல நாட்கள் செல்லும். ஆகவே அதிகமாக எதுவும் அனுப்பாததற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தியை டோரிஸ் மூலம் கேட்ட அரசரும் அரசியாரும், உயர்ந்த அரசப் பண்போடு, “எல்லாம் சரி' என்று சொல்லி விட்டார்கள். தங்கம் கண்டுபிடித்துக் கிடைக்கச் செய்த ஆண்டவன் அருளைக் குறித்து நன்றி கூறினார்கள்.

குடியேற்றத்திற்காக வந்துள்ளவர்களுக்கு, நாட்டுணவு ஒத்துக் கொள்ளாததால் ரொட்டி, ஊறிய மாட்டுக் கறி, மது முதலியனவும் பிற உணவுப் பொருள்களும் அனுப்பும்படி கொலம்பஸ் கேட்டிருந்தான். ஆடு, மாடுகளும், கழுதை, குதிரைகளும், ஆடைகளும், காலணிகளும் அனுப்பும்படி பேரரசியாருக்குச் செய்தி யனுப்பியிருந்தான். நூறு துப்பாக்கிகளும், நூறு வில்லும், இருநூறு மார்புக் கவசங்களும், ஏராளமான துப்பாக்கிக் குண்டுகளும் கேட்டிருந்தான். ஆடைகளும் காலணிகளும் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் அவன் கேட்டிருந்தபடியே அனுப்பும்படி அரசரும் அரசியும் கட்டளை பிறப்பித்தார்கள்.

டோரிஸ் மூலம் தான் அனுப்பிய செய்தியில் அடிமை வாணிபத்தை மேற்கொள்ளலாம் என்று யோசனை கூறியிருந்தான் கொலம்பஸ. ஆனால் அரசி இஸ்பெல்லா இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அது இலாபங்தரும் தொழில் அல்ல என்பதனால் தான் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தொண்டர்களாகப் புறப்பட்டுச் சென்ற இரு நூறு செல்வந்தர்களையும் மற்றவர்களைப் போலவே அரசாங்கச் சம்பளகாரர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று கொலம்பஸ் கேட்டிருந்தான். அப்போதுதான் அவர்கள் அடங்கி நடப்பார்கள் என்று காரணமும் குறிப்பிட்டிருந்தான்.

அவ்வளவும் சரிதான் ஆனால், கொலம்பஸ் சிவப்பு இந்தியர்களைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணம்தான் தவறாயிருந்தது. அவர்கள் யாரும் வணிகர்களல்ல நாகரிக மனப்பான்மையில்லாத அவர்களுடைய தேவைகளும் மிகக் குறைவேயாகும். வெள்ளையர்கள் கொண்டு சென்ற புதுப் பொருள்களை ஒரு முறை வாங்கிப் பயன்படுத்தியபின் அவர்கள் ஆவல் அடங்கிவிட்டது. மேற்கொண்டு வாங்க வேண்டிய தேவையோ ஆவவோ அவர்களுக்கு ஏற்படவில்லை.

டோரிசை ஸ்பெயினுக்கு அனுப்பிய பின், கொலம்பஸ், நூற்றுக்கணக்கான படைவீரர்களுடன், தங்கம் கண்டு பிடிக்க இசபெல்லாவிலிருந்து புறப்பட்டான். அழகு நிறைந்த வீகா ரீல் சமவெளியைக் கடந்து ஓர் ஆற்றங் கரையை அடைந்தனர். வழியில் தென்பட்ட கிராமங்களில் இருந்த இந்தியர்கள், தங்கப் பொடி நிறைந்த சிறு பைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். ஓடங்களிலும், இந்தியர்களின் தோள்களிலும் ஏறிக் கொண்டு ஆற்றைக் கடந்து கோர்டிலெரா மலையின் வடபுறத்தையடைந்தார்கள். அங்கு ஒரு மண் கோட்டை எழுப்புமாறு ஐம்பது ஆட்களை விட்டுச் சென்றான் கொலம்பஸ் அந்தக் கோட்டைக்கு, இஸ்பானியோலாவில் தங்கம் எங்கே கிடைக்கப் போகிறது என்று சொன்ன சாண்டோ தாமஸ் என்பவனின் பெயரையே சூட்டினார்கள். கோட்டையில் தங்கியவர்கள் போக மற்றவர்கள் மலை மீது ஏறித் தங்கம் எங்குக் கிடைக்கும் என்று ஆராய்ந்தார்கள். இசபெல்லாவிலிருந்து புறப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தி முடியும்வரை இருபத்தொன்பது நாட்களாயின. இந்த இருபத்தொன்பது நாட்களும் அவர்கள் பட்ட துன்பங்கள் சிறிதல்ல. பருவநிலை உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை. உணவும் நல்ல தண்ணீரும் சரியாகக் கிடைக்கவில்லை. இருந்தாலும் தங்கம் கிடைக்கப்போகிறதென்ற ஆர்வத்தில் அவர்கள் இந்தத் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டார்கள்.

இசபெல்லாவில் தங்கியிருந்தவர்களின் நிலைமையோ மேலும் மோசமாயிருந்தது. இருப்பில் இருந்த உணவுகளெல்லாம் தீர்ந்து போய்விட்டது. ஆத்திரமும் வெறுப்பும் அதிகரித்துக் குழப்பமும் ஏற்படத் தொடங்கியது. தொல்லை கொடுக்கக் கூடியவர்கள், விலங்கிட்டு வைக்கப்பட்டார்கள். முன் எச்சரிக்கையாகக் கொலம்பஸ் ஆயுதங்களில் பெரும் பகுதியைத் தலைமைக் கப்பலில் வைத்திருந்தான். அவன் சகோதரனுடைய பாதுகாப்பில் அவையிருந்தன.

தொல்லை கொடுப்பவர்களை அகற்றுவதற்குக் கொலம்பஸ் ஒரு வழிவகுத்தான். தங்கம் கிடைக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஒஜிடா தலைமையில் மற்றொரு படையை அனுப்பி வைத்தான். ஆபத்தான சூழ்நிலையில் இருந்த சாண்டோ தோமாஸ் கோட்டையைப் பாதுகாக்கும்படி அந்தப் படைக்கு உத்தரவிட்டான். அதன்பின் தங்க ஆராய்ச்சி நடத்தச் சொன்னான். இந்தியர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாதென்று அவன் எவ்வளவோ எச்சரித்தனுப்பினான். ஆனால் ஓஜிடா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டான். பழைய உடுப்புக்கள் சிலவற்றைத் திருடிக் கொண்டு ஓடினான் என்று சொல்லி ஓஜிடா முதலில் ஓர் இந்தியனுடைய காதையறுத்துவிட்டான். அடுத்தபடியாக அவர்களின் இனத் தலைவன் ஒருவனைக் குற்றம் சாட்டி விலங்கிட்டு இசபெல்லாவுக்கு நடத்திச் செல்லுமாறு செய்தான். கோட்டையை ஆபத்திலிருந்து காப்பாற்றிய பின், உடனிருந்த முந்நூறு வீரர்களுடன் வீகாரில் சமவெளியைச் சுற்றி வந்து, ஆங்காங்கேயுள்ள இந்தியர்களிட மிருந்த தங்கத்தையெல்லாம் கைப்பற்றினான். அவர்களுடைய உணவுப் பொருள்களை அபகரித்துக் கொண்டான். இந்திய இளைஞர்களையும் பெண்களையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டான்.

இந்த நிகழ்ச்சிகள், குடிமக்களை ஸ்பானியர்களிடம் வெறுப்புக் கொள்ளும்படி செய்தன.

இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப்படுவதற்கு முன்னால், கொலம்பஸ் தங்கம் கண்டுபிடிப்பதற்காகக் கியூபாவுக்கு போய்விட்டான். இசபெல்லாவிலிருந்து ஏப்ரல் மாதம் 24-ம் நாள் மூன்று கப்பல்களுடன் புறப்பட்டு 29-ம் நாள் கியூபாவில் இறங்கினான். வழக்கம் போல் ஒரு கொடியையும் ஒரு சிலுவையையும் நிறுத்தி கியூபாவை ஸ்பெயினுக்கு ஆதீனப்படுத்தினான். ஏப்ரல் 30-ல் போர்ட்டோகிராண்டி. துறைமுகத்தையடைந்தனர். கப்பல்களிலிலிருந்து இறங்கிய சிலர் கரைப் பகுதியைச் சுற்றிப் பார்த்து வரக் கிளம்பினார்கள். அப்போது அங்கே சில கியூபாக்கார இந்தியர்கள் கரையில் மீன் கறி சமைத்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் ஊர்த் தலைவன் மற்றொரு தலைவனுக்கு விருந்தளிப்பதற்காக அவர்கள் மீன் பிடித்துச் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கரையில் இறங்கிய வெள்ளையர்களைக் கண்டவுடன் ஓட்டம்பிடித்தார்கள். வெள்ளையர்கள் அவர்களை விரட்டிப் பிடித்துச் சமையல் நடந்த இடத்திற்குக் கூட்டி வந்தார்கள். அவர்களுக்கு பருந்து மணிகளும், பிறபொருள்களும் பரிசாகக் கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் சமைத்த மீன்கறியைத் தின்பதற்கு வெள்ளையர்களுக்குப் பயமாக இருந்தது. அவர்கள் அதைத் தொடவேயில்லை என்பதைக் கண்டு அந்தச் சமையல் கூட்டத்தினர் மகிழ்ச்சியடைந்தார்கள். ஓரிருவர் ஸ்பானியர்களைச் சாப்பிடும்படி கேட்டுக் கொண்டார்கள். "சில நாட்கள் போகட்டும்; இந்த ஊர்ப் பழக்கமெல்லாம் உடம்புக்கு ஒத்து வந்தவுடன், முதலையையே வேண்டுமானாலும் பிடித்துச் சாப்பிடுகிறோம்" என்று ஸ்பானியர்கள் வேடிக்கையாகக் கூறினார்கள். ஆனால், அந்த நகைச்சுவையை கியூபாக்காரர்கள் முழுமையாக இரசிக்க முடியவில்லை என்றாலும் கூடச்சேர்ந்து. சிரித்தார்கள்.

கியூபாவில் தங்கம் கிடைப்பதற்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை. எனவே. முதல் பயணத்தில் சாண்டியாகோவில் இருந்த இந்தியர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்த ஜமைக்கா நோக்கிப் புறப்பட்டான். மே மாதம் 5-ம் நாள் ஜமைக்காவில் உள்ள செயின்ட் ஆன் வளைகுடாவில் நங்கூரம் பாய்ச்சினான், கப்பல்களைக் கண்டவுடன் அறுபதெழுபது இந்தியர்கள் இடத்தில் ஏறிக் கொண்டு, கப்பல்களைத் தாக்க விரைந்து வந்தார்கள். ஆனால், ஒரு பீரங்கிக் குண்டை வெடித்தவுடனேயே பேசாமல் கரைக்குத் திரும்பி விட்டார்கள். விறகும் தண்ணீரும் வேண்டியிருந்ததால், அடுத்த துறைமுகமான ரியோபோனோவில் கப்பல்களை நிறுத்தினான். அங்கும் இந்தியர்கள் எதிர்த்துத் தாக்கும் எண்ணத்துடன் வந்தார்கள். கப்பலிலிருந்து படகுகளில் புறப்பட்ட விற்படையினர், அந்த இந்தியர்களின் மீது அம்பெய்து சிலரைக் கொன்றுவிட்டார்கள். கரையை அடைந்தவுடன், இந்தியர்களின் மீது ஒரு பெரிய நாயை ஏவி விட்டான் அந்த நாய் இந்தியர்களை விரட்டி விரட்டிக் கடித்தது. இந்தியர் தொல்லையைத் தவிர்ப்பதற்கு இந்த நாய்களைப் பயன்படுத்தும் முறை இஸ்பானியோலாவிலும், அதற்கு முன் கானரித் தீவிலும் ஸ்பானியர்களால் பழக்கப்படுத்தப் பட்டிருந்தது. ரியோபோனோவில் இருந்த இந்தியர்களும் டாயினோ இனத்தார்களேயாவர். அவர்கள் ஸ்பானியர்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கொடுத்தார்கள். ஆனால் தங்கம் மட்டும் அவர்களால் கொடுக்க முடிய வில்லை. இருந்தாலல்லவா கொடுப்பதற்கு! எனவே, கொலம்பஸ், ஜமைக்காவில் மற்றொரு துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தி தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு, மீண்டும் கியூபாவுக்குத் திரும்பி அதன் தென்கரைப் பகுதியை ஆராயலானான்.

சீன நாகரிகத்திற்குரிய சான்றுகள் ஏதாவது தென்படுமா என்ற விழிப்புணர்ச்சியுடன் அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது சிறு தீவுகள் நிறைந்த கடல் அவர்கள் பார்வையில் பட்டது. இந்தத் தீவுக் கூட்டத்திற்கு இராணியின் தோட்டம் என்று கொலம்பஸ் பெயரிட்டான். இங்கு பெரிய கொக்குக்களைப் போன்ற ஆனால் சிவப்பு நிறமுடைய பறவைகளைக் கண்டனர். இங்குள்ள குடிமக்கள் பழக்கிய மீனைக் கொண்டு ஆமை பிடிக்கும் காட்சியையும் கொலம்பஸ் கண்டான். கொலம்பஸ் இதைக் கூறியபோது பலர் நம்பவில்லை. ஆனால் இன்றும் கையாளப்பட்டு வருகிறது.

அவர்கள் செல்லும் வழியில் டிரினிடாடு மலைத்தொடர் இருந்தது. அந்தக் கடற்கரையில் கப்பல்கள் ஒதுங்கிய போது அங்கிருந்த மக்கள் வானிலிருந்து வந்த மனிதர்களைப் பார்க்கத் திரண்டு வந்தனர். ஆனால் அவர்களில் யாரும் சீனாக்காரர்களைப்போல் இல்லை. சீனப் படகுகளோ ஓடங்களோ சீனக் கோயில்களோ, பாலங்களோ ஒன்று கூடத் தட்டுப் படவில்லை. கான் பேரரசருடைய இந்தப் பகுதிகளில் சீன நாகரிகம் பரவவில்லையோ என்னவோ!

டிரினிடாடில் இருந்த மொழி புரியாத மக்களை விசாரித்தறிந்ததில் மேற்கில் மாசோன் என்ற நாடு இருப்பதாகக் கூறினர். அதுதான் சீன நாட்டைச் சேர்ந்த, மாங்கியாக . இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டான் கொலம்பஸ். கியூபாக் கரை தென்புறமாக வளையும் இடத்தை சையாம் வளைகுடா என்று நினைத்துக் கொண்ட கொலம்பஸ் தான் மாலாக்காவை அணுகி விட்டதாகவே கருதினான். அப்படியானால் ஏன் உலகத்தைச் சுற்றிக் கொண்டு எதிர்த் திசையில் சென்று ஸ்பெயினை அடையக்கூடாது என்றும் எண்ணினான். நல்ல வேளையாக இந்த எண்ணத்தை அவன் செயலில் நிறைவேற்றவில்லை. அதற்குக் காரணம் கப்பல்களில் போதிய உணவுப் பொருள்கள் இல்லாமையும், அவை பழுதுபார்க்கப் பட வேண்டியிருந்தமையுமேயாகும்.

ஆகவே அவன் இசபெல்லாவுக்கே திரும்பினான். ஜூன் 18-ஆம் நாள் திரும்பிய கப்பல்கள் செப்டம்பர் 28-ஆம் நாள் இசபெல்லாவை யடைந்தன. இசபெல்லாவை அடைந்தபோது கொலம்பஸ் நோயுற்றுப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். மாலுமிகள் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும்படியாக அவன் நிலை மிக மோசமாக இருந்தது. அப்பொழுது ஆரம்பித்த மூட்டுவாத நோய், பிறகு சிறுகச் சிறுக வளர்ந்து அவனுடைய வாழ் .நாளின் கடைசிப் பத்து ஆண்டுகளையும் துயர மிக்கதாகச் செய்துவிட்டது.

இசபெல்லாவில் அவன் வந்து சேர்ந்தவுடன் கேள்விப்பட்ட செய்தி, அவனுக்குப் பெருமகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆறு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த அவனுடைய சகோதரன் பார்த்தலோமியோ கொலம்பஸ் இசபெல்லாவுக்கு வந்திருந்தான் என்பதே அந்த நற்செய்தியாகும்.

கொலம்பஸ் தன் இரண்டாவது பயணத்தை மேற்கொள்ளும் போதே, பார்த்தலோமியோவும் கூட வர வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவன் அனுட்பிய செய்தி போய்க் கிடைத்து அவன் புறப்பட்டு வந்து சேர் வதற்குள், ஸ்பெயினிலிருந்து கப்பல்கள் புறப்பட்டு விட்டன. பின்னால் வந்து சேர்ந்தவனைத் தான் அரசர் மூன்று. கப்பல்களுடன் இஸ்பானியோலாவுக்கு அனுப்பி வைத்தார். பார்த்தலோமியோ கொலம்பஸ் நல்ல நிர்வாகத் திறமையுடையவன். அவன் தம்பி டீகோவுக்குப் பதிலாக முதலிலேயே அவன் வந்திருந்தால், இசபெல்லாவில் எழுந்த குழப்பங்களை மிகச் சுலபமாக சமாளித்திருப்பான்.

என்ன இருந்த போதிலும் கொலம்பஸ் சகோதரர்கள் ஸ்பானியர்கள் அல்ல; ஜினோவாக்காரர்கள்! அவர்கள் கண்டுபிடிக்கும் நாடெல்லாம் ஸ்பானியர்களுக்குச் சொந்தம். ஸ்பானியர்கள், இன உணர்ச்சி மிக்கவர்கள். அவர்கள் எப்படி ஜினோவாக்காரர்களுக்கு அடங்கி நடக்க இசைவார்கள். இதுதான் கொலம்பஸ் சகோதரர்களுக்கும் அவர்களுடைய வளர்ச்சிக்கும் தடையாக இருந்தது. கொலம்பஸ் இஸ்பானியோலாவில் இரண்டு தவறுகள் செய்தான். முதலாவது சிறிதும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாதி. தன் தம்பி டீகோவைத் தன் பிரதிநிதியாக நியமித்தது. இரண்டாவது ஓஜிடான்வையும், மார்கரிட் என்பவனையும், இஸ்பானியோலாவில் உள் நாட்டுக்குள் அனுப்பி வைத்தது. மனிதாபிமானமோ நியாய உணர்ச்சிகளோ இல்லாத அவர்கள் குடிமக்களின் பகைமையை மிக விரைவில் வளர்த்து விட்டார்கள்.

கொலம்பஸ் இல்லாதபோது மார்கரிட் என்பவன் செய்த கொடுமைகளைப் பற்றி யறிந்த டீகோ, அவனைத் தன் போக்கை மாற்றிக்கொள்ளும்படி ஓர் உத்தரவு அனுப்பியிருந்தான். தனக்கு உத்தரவிட அவன் யார் என்று கேட்டு, உத்தரவைத் திரும்பப் பெறும்படி எச்சரித்துக் கேட்டுக் கொண்டு இசபெல்லாவுக்கு வந்தான். உத்தரவு திரும்பப் பெறப்படவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவன், வேறு சிலரோடு பார்த்த லோமியோ கொண்டு வந்திருந்த கப்பல்களைக் கைப்பற்றி ஓட்டிக்கொண்டு ஸ்பெயினுக்குப் போய் விட்டான். இவ்வாறு கப்பல்களைக் கைப்பற்றிக்கொண்டு, அவற்றில் அப்பாவிக் குடிமக்களிடமிருந்து அரட்டிப் பறித்த தங்கத்தையும் பிற பொருள்களையும் ஏற்றிச் சென்று ஸ்பெயினில் திருட்டுத்தனமாக இறக்கிக் கொண்டதோடு நில்லாமல் கொலம்பஸ் மீது பழி தூற்றிக்கொண்டு வேறு திரிந்தார்கள் அந்தக் குழப்பக்காரர்கள்.

கொலம்பஸ் நோயுடன் இசபெல்லாவுக்கு வந்த இரண்டாவது மாதத்தில் டோரிஸ் என்பவன் குடியேற்றவாதிகளுக்குத் தேவையான பொருள்களை நான்கு கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வந்தான். அரசரும் அரசியும் அவன் மூலம் அனுப்பியிருந்த கடிதத்தில், போர்ச்சுக்கலுடன் ஏற்பட்டிருந்த ஓர் அரசியல் விவகாரத்தில் உதவுவதற்காக வருமாறு கொலம்பசை அழைத்திருந்தார்கள். ஆனால், உடல் நிலை காரணமாக கொலம்பஸ் அப்போது போக முடியவில்லை. டோரிஸ் திரும்பும் போது, அவனுடைய கப்பல்களில் தங்கம் ஏற்றி அனுப்ப வேண்டியிருந்தது. அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டிய அளவு தங்கம் சேரவில்லை. அதற்காக, அவன் கொடுமைக்காரனான மார்கரிட் வழியைப் பின்பற்றி இந்தியர்களிடம் கட்டாய வசூல் செய்யலானான். மறுத்துரைத்தவர்களை அடிமைகளாகப் பிடித்தான்; பெருமுரடர்களாயிருந்தவர்களுக்குக் கொலைத்தண்டனை விதித்தான்.

இவ்வாறு பிடிபட்ட அடிமைகள் ஆயிரத்தைந்நூறு பேர் சேர்ந்திருந்தார்கள். டோரிஸ் தன் நான்கு கப்பல்களிலும் ஐநூறு பேரை ஏற்றிக் கொண்டான். மீதியிருந்தவர்களை, இசபெல்லாவில் இருந்த ஸ்பானியர் ஒவ்வொரு வரும் தங்களுக்கு எத்தனை அடிமைகள் தேவையோ அத்தனை பேரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்றான். 

அதற்கும் அப்பால் மீதப்பட்டவர்களை விரட்டி விட்டான். ஸ்பானியர்களிடமிருந்து அவர்கள் தப்பியோடிய காட்சி மிகப் பரிதாபமாக இருந்ததென்று கண்டவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களாவது தப்பிப் பிழைத்தார்கள். கப்பலில் சென்றவர்களில் இருநூறு பேர் வழியிலேயே இறந்து போய்க் கடலில் தூக்கி எறியப்பட்டார்கள். மீதி முந்நூறு பேரும், பலவிதமான நோய்களுக்கும் துன்பத்துக்கும் ஆளானார்கள். ஸ்பெயின் போய்ச் சேர்ந்த பின் அந்நாட்டு வெப்பதட்ப நிலை ஒத்துக்கொள்ளாமல் பலர் இறந்து போனார்கள். மிச்சம் மீதி இருந்தவர்கள் வியாபாரப் பொருள்களைப் போல் விற்கப்பட்டார்கள்.

அடிமையாகப் பிடிபட்டு வந்தவர்களில் இசபெல்லாவிலிருந்து தப்பியோடியவன் தலைவன் குவாட்டி குவானா. இஸ்பானியோலா முழுவதிலும் சுமார் இரண்டரை லட்சம் டாயினோக்கள் இருந்தார்கள். அந்த இரண்டரை லட்சம் பேரையும் ஒன்று சேர்த்து ஸ்பானியருக்கெதிராகப் போராட முயன்றான் தலைவன் குவாட்டி குவானா. ஆனால் டாயினோக்கள் இடையே ஒற்றுமையுணர்ச்சியில்லாததால் அவன் முயற்சி பலிக்கவில்லை. ஸ்பானியர்களிடம் வெடி மருந்துகள் இருந்தன. அதற்கும் மேலாக, டாயினோக்களிடையே ஒரு தலைவனை ஆதரித்து மற்றொரு தலைவனுடன் போர் மூட்டிவிட்டு, அவர்களைத் தங்களுக் குள்ளேயே போராடச் செய்து அழிவெய்தச் செய்யும் திறமை இருந்தது.

கவோனாபோ என்ற தலைவன் பெரும் வல்லமையுடையவன். முன் நாவிடாடுக் கோட்டையை அழித்தொழித்தவன் இவன் தான். அவனை ஸ்பானியர்கள் பிடித்துக் கொன்ற முறை மிக அக்கிரமமானது. ஓஜிடா, அத்தலைவனுக்கு விருந்து நடத்துவதாகச் சொல்லி இசபெல்லாவுக்கு அழைத்தான். விருந்துக்கு வந்த அவனைக் கைகளை நீட்டச் சொன்னான். ஸ்பெயின் தேசத்துச் சிங்கார ஆபரணங்கள் இவைதாம் என்று சொல்லி, அவன் கையில் இரும்புக் காப்புகளைப் பூட்டினான்; விலங்குகளை மாட்டினான். அப்படியே அவனை இழுத்துக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்தான். அங்கே டாயினோத் தலைவன் கவோனாபோ பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரத்தோடு உறுமியதைப் பார்த்த போது, அடைப்பட்ட சிங்கம் கர்ச்சிப்பது போலவே இருந்தது.

கொலம்பஸ் டாயினோக்களை அன்பாக நடத்த வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தான். அரசரும் அரசியும் அவ்வாறுதான் கூறியனுப்பியிருந்தார்கள். ஆனால், பின்னால் ஏற்பட்ட தங்கத் தேவை, அவனையும், ஓஜிடா. மார்கரிட் போன்றவர்களின் பாதையிலேயே செல்லும்படி செய்து விட்டது. இஸ்பானியோலா முழுவதும் ஆங்காங்கே கோட்டைகள் கட்டப்பெற்றன. பதினான்கு வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் அனைவரும் கட்டாய வேலைக்கு ஆட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வரும் நான்கு பருந்து மணியளவு தங்கப் பொடி அரித்துக் கொடுக்க வேண்டுமென்று சட்டம் செய்யப் பெற்றது. இச் சட்டத்தை மீறியவர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப் பட்டார்கள். இந்தக் கொடுமைக்கு அஞ்சி மலையடிவாரங்களுக்கு ஓடிய இந்தியர்கள் வேட்டையாடிக் கொல்லப் பட்டார்கள். அதற்கும் தப்பியவர்கள் பசி பட்டினியாலும்; தங்கள் துயர வாழ்க்கையை நொந்து கசாவா நஞ்சையுண்டும் இறந்து போனார்கள். 1492-ஆம் ஆண்டு இரண்டரை லட்சம் மக்கள் இருந்தார்கள். கொலம்பஸ் துவக்கி வைத்த இந்தக் கொடுமை காரணமாக 1508-இல் இஸ்பானியோலா முழுவதிலும் இருந்த டாயினோக்களின் எண்ணிக்கை அறுபதினாயிரம்தான். இதே அக்கிரம வழியைப் பின்னால் வந்தவர்களும் பின் பற்றியதால் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஐநூற்றுக்கும் குறைவான இந்தியர்களே இருந்தார்கள். கொலம்பஸ் ஈவிரக்கமற்றுச் செய்த இந்த முறையினால் மனித சமுதாயத்தில் ஓர் இனமே அழிந்தொழிந்து போயிற்று.

மார்க்கரிட்டும் மற்றவர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களைக் கேட்ட அரசரும் அரசியாரும், ஜுலான் அகுவாடோ என்பவனை இது பற்றி விசாரிக்க இசபெல்லாவுக்கு அனுப்பினார்கள். அவன் வந்தபின், தன் அரசியல் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள ஸ்பெயினுக்குத் திரும்புவதே நலமென்று கொலம்பஸ் முடிவுக்கு வந்தான். ஆகவே தலைமைப் பொறுப்பை அவன் பார்த்தலோமியோவிடம் ஒப்படைத்தான். இசபெல்லாவை விட்டு வேறொரு புது நகரத்தை உருவாக்க உத்தரவிட்டுவிட்டு அவன் 1496-ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் நைனா கப்பலில் புறப்பட்டான். கூடவே மற்றொரு கப்பலும் சென்றது.

இரு கப்பல்களிலும் 225 ஸ்பானியர்களும் 30 இந்திய அடிமைகளும் சென்றார்கள். எதிர்பார்த்தபடி கப்பல்கள் விரைவாகச் செல்லவில்லை. நாளாக ஆக உணவுப் பொருள்கள் குறைந்தன. கடைசியில் அரைப் பட்டினியும் முக்கால் பட்டினியும் கிடக்கும்படியான நிலைமை வந்தது. அப்போது சில ஸ்பானியர்கள், பசியைத் தீர்க்க இந்திய அடிமைகளைக் கொன்று தின்னலாம் என்று யோசனை சொன்னார்கள். முதலில், மனித இறைச்சி தின்னும் பழக்கமுடைய கரீபிய இனத்தவரைத் தின்னலாம் என்றும், பிறகும் தேவைப்பட்டால் டாயினோக்களைத் தின்னலாம் என்றும் சொன்னார்கள். மனித இறைச்சி தின்னும் கரீபியர்களைக் கொன்று தின்பதால், அவர்களுடைய பாவத்திற்குப் பரிகாரம் ஏற்படும் என்றும், பழிக்குப் பழி வாங்கியதாக ஆகும் என்றும் கூறினார்கள். என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தாம் ! அவர்களைக் கொன்று தின்பது நமக்கு அழகல்ல! என்று கூறித் தன் மனிதத் தன்மையை நிலைநாட்டிக் கொண்டான் கொலம்பஸ்.

கடைசியாக ஜூன் மாதத்தில் ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தன இரு கப்பல்களும். கப்பல்களிலிருந்து இறங்கியவர்கள், பஞ்சைகளைப் போல் குழி விழுந்த கண்களும் வற்றி ஒட்டிய வயிறுமாகப் பார்க்கப் பரிதாபமான கோலத்துடன் இறங்கினார்கள்.

அவர்கள் நாட்டில் பரப்பிய வசவுகளும் பழிகளும் கொலம்பஸ் சகோதரர்களை, இந்தியத் தீவுகளைப் பற்றியே நினைக்காதபடி செய்திருக்கும் வலிவைப் பெற்றிருந்தன; கொலம்பசின் செல்வாக்கை அடியோடு குறைத்து அவமானப் படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தன. ஆனால் போர்ச்சுக்கீசிய அரசர் இந்தியாவுக்கு வழிகாணச் செய்த முயற்சியும், இங்கிலாந்து மன்னர் ஹென்றி கத்தேயுவுக்குக் கடல் வழி காணச் செய்த முயற்சியும், ஒரு போட்டியுணர்ச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஸ்பெயின் அரசியும் அரசரும் இஸ்பானியோலாவை விட்டு விடக் கூடாதென்று எண்ணினர்.