கடல்வீரன் கொலம்பஸ்/உண்மை புரிந்தது


9

உண்மை புரிந்தது


அரசியாரும், அரசரும் அகுவாடோ என்பவன் மூலம் அனுப்பிய உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து, இஸ்பானியோலாவிலிருந்து புறப்பட்ட கொலம்பஸ், காடிஜ் துறைமுகம் வந்து சேர்ந்தான். காடிஜுக்கு வந்து சேர்ந்த போது, அவன் மிக, மிக மனம் நொந்து போயிருந்தான். நம்பிக்கை மிக்க தன்னை, ஆண்டவன் ஏன் இப்படிச் சோதிக்க வேண்டும் என்று எண்ணி, எண்ணி அவன் மனம் ஒடிந்து போயிருந்தான். இயல்பாகவே, அரச பக்தியுள்ளவனாயிருக்கும் தன் மீது சில தீயர்கள் கூறிய பழியுரைகளைக் கேட்டு, அரசரும், அரசியும் அவநம்பிக்கை ஏன் கொண்டார்கள் என்று எண்ணிய போது, அவன் மனம் வெடித்து விடும் போலிருந்தது. ஆகவே, அவன் அரண்மனைகளுக்கும், கோட்டைகளுக்கும் விருந்துக்குப் போவதை வெறுத்து, புனித மடாலயங்களிலே தங்கிக் காலத்தைக் கழித்து வந்தான். பிறவித் துயர் போக்கும் பேரிறைவனையே எண்ணி, எண்ணித் தொழுது கொண்டிருப்பதே உய்யும் வழியென்று முடிவு கட்டி, எளிய வாழ்க்கையை மேற்கொண்டு, அந்த மடாலயங்களிலே தங்கினான்.

கடைசியாக அரசரிடமிருந்தும் அரசியிடமிருந்தும் ஓர் அழைப்பு வந்தது. அந்த அழைப்பைத்தான் கொலம்பஸ் எதிர்பார்த்துக் காத்திருந்தான். இயல்பாகவே எளிய வாழ்க்கையில் ஈடுபாடு கொண்ட கொலம்பஸ், ஸ்பானியர்களிடம் செல்வாக்குப் பெற ஆடம்பரம் தேவையென்று நன்றாக உணர்ந்திருந்தான். ஆகவே, அரசாங்க அழைப்பு வந்தவுடன், கவர்ச்சி மிகுந்த ஆடம்பரத்தோடு ஊர்வலமாகச் செல்ல ஏற்பாடுகள் செய்தான்.

கொலம்பசின் இரு புறத்திலும், டாயினோ இனத் தலைவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிவப்பு இந்தியர்கள் மட்டக் குதிரைகளில் ஏறிச் சென்றார்கள். வேலைக்காரர்கள் பல அழகிய வர்ணங்களைக் கொண்ட கிளிகள் அடங்கிய கூடுகளுடன் முன்னே சென்றனர். அந்தக் கிளிகள் கீச் கீச் சென்று கத்தி எழுப்பிய பேரொலியே அந்த ஊர்வலத்திற்குரிய பெரிய மங்கல வாத்தியம் போல் இருந்தது. அந்தச் சத்தம் கேட்டுத் தெருவுக்கு ஓடி வந்த மக்கள், இந்த வினோத ஊர்வலத்தைக் கண்டு அதிசயித்து நின்றார்கள்.

காட்டுப் பாதைகளில் ஊர்வலக் குழு செல்லும் போது, பேசாமல் போவார்கள். வழியில் உள்ள ஊருக்குள் நுழையு முன்னால், இந்தியர்கள் இருவருக்கும், இறக்கைகளாலாகிய பெரிய ராஜ முடியைத் தலையில் அணிவிப்பார்கள். அவர்கள் தங்கள் பரம்பரை வழக்கப்படி அணியும் தங்க ஆபரணங்களைக் கட்டி விடுவார்கள். பார்ப்பவர்கள், "ஆகா! தங்க வளம் நிறைந்த புதியதொரு நாட்டைக் கண்டு பிடித்த கொலம்பஸ் வருகிறார்!" என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஏற்பாடு!

வல்லா டோனிட் என்ற ஊரில் அரசரையும் அரசியையும் சந்தித்தான் கொலம்பஸ். அரசிக்குப் பணிபுரியும் பையன்களாய் இருந்த தன் புதல்வர்கள் இருவரையும் கண்டு அளவளாவினான். அரசாங்க முறைப்படி அவன் வரவேற்கப்பட்டான். அவன் அரசருக்கும் அரசியாருக்கும் புறா முட்டை அளவுள்ள தங்கக் கட்டிகள் சிலவற்றை அன்பளிப்பாக வழங்கினான். அரசரும் அரசியும் மகிழ்ச்சியோடு அவனைச் சிறப்பாக வரவேற்ற அந்தச் சமயத்தை நழுவ விடாமல், அவன் மூன்றாவது முறையாகத் தான் ஒரு பயணம் மேற்கொள்ள அனுமதி கேட்டான். இஸ்பானியோலாவுக்கு உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்ல ஐந்து கப்பல்களும், புதியதோர் கண்டத்தைக் கண்டு பிடிக்கத் தனக்கு இரு கப்பல்களும் வேண்டும் என்று கேட்டான். ஆண்டிலிஸ் தீவுகளுக்குத் தெற்கே ஒரு கண்டம் இருக்கக் கூடுமென்று போர்ச்சுகல் அரசர் நம்பிக்கை கொண்டிருந்தார். சிவப்பு இந்தியர்களோடு பேசிப் பார்த்ததில், அந்த எண்ணம் கொலம்பசுக்கு வலுப்பட்டது. அந்தக் கண்டத்தைக் கண்டு பிடிக்கவே தனக்கென்று இரு கப்பல்கள் கேட்டான், கொலம்பஸ். போர்ச்சுகல் அரசர் ஜான் இறந்துவிட்ட போதிலும், அவருடைய வாரிசாக வந்துள்ள மானுவேல் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறான் என்ற செய்திகள் அடிக்கடி கிடைத்துவந்தன. ஜான் அரசர் திட்டமிட்ட அந்தக் கண்டத்தைத் தாங்கள் முதலில் கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஸ்பெயின் அரசருக்கும் அரசிக்கும் ஏற்பட்டிருந்தது. வாஸ்கோடகாமா, போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து புறப்படத் தயாராகி விட்டான் என்று செய்தி கிடைத்ததும் அரசருக்கும் அரசிக்கும் விறுவிறுப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவர்கள் கொலம்பசை ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள்.

வாஸ்கோடகாமா ஒரு பெரிய நீண்ட கடற்பயணம் மேற்கொள்ள இருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது. ஆனால், அவன் என்ன நோக்கத்தோடு எந்தத் திசையில் எதற்காகப் போகிறான் என்பது பற்றி திட்டவட்டமான செய்திகள் கிடைக்கவில்லை.

1497-ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில், அரசர் பெர்டினாண்டும், அரசி இசபெல்லாவும், கொலம்பசின் உரிமைகளையும் பட்டங்களையும் மீண்டும் உறுதிபடுத்தினார்கள். இஸ்பானியோலாவில் குடியேறுவதற்கு சுமார் முந்நூறு பேர்களை ஆயத்தப்படுத்தும்படி உத்தரவிட்டார்கள். எல்லோருக்கும் ஆகும் செலவை அரசாங்கத்திலேயே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார்கள். குடியேற்ற நாட்டில் போயிருக்க முப்பது பெண்களையும் ஆயத்தப் படுத்தினான் கொலம்பஸ்.

சிறு குற்றங்கள் செய்து சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் யாவரும், குடியேற்ற நாட்டிற்குச் செல்வதற்காக மன்னிப்புப் பெற்று விடுதலை யடைந்தார்கள். இஸ்பானியோலாவிற்குச் செல்ல மறுத்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அங்கு சென்று ஒன்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவர ஒப்புக்கொண்டவர்களே விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஏற்பாடுகள் எல்லாம் செய்து கப்பல்கள் புறப்பட ஓராண்டாயிற்று. காரணம், அரசாங்கத்தின் இருப்பில் பணம் இல்லாமையேயாகும். கைதிகளைத் தவிர மற்ற குடியேற்றவாதிகள் யாரும் முன்பணமாகத் தங்கள் சம்பளத்தைப் பெறாமல் பயணப்படத் தயாராக இல்லை.

1498-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து கப்பல்கள் இஸ்பானியோலாவிற்கு நேராகப் புறப்பட்டுச் சென்றன.

கொலம்பஸ் தனக்கென்று ஒதுக்கப்பட்ட மூன்று கப்பல்களுடனும். காரலாஜல் என்ற தலைவனின் கீழ்ப் புறப்பட்ட மூன்று கப்பல்களுடனும் 1498-ம் ஆண்டு மே மாதம் கடைசி வாரத்தில் தான் புறப்பட்டுச் சென்றான் அதே வாரத்தில் ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு. இந்தியாவில் உள்ள கள்ளிக்கோட்டையைப் போய்ச் சேர்ந்துவிட்டான், போர்ச்சுகீசியனான வாஸ்கோடகாமா.

இந்த முறை கொலம்பஸ் தென் திசையில் அதிகமாகக் கீழிறங்கிச் செல்லலானான். ஜான் அரசரின் கண்டத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தங்கம் அதிகமாகக் கிடைக்கும் இடத்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை கொலம்பசுக்கு.

மடெய்ரா, கோமாராத் தீவுகளில் சற்றுச் சற்றுத் தங்கி போலிஸ்டா என்ற துறைமுகத்தில் ஆட்டுக்கறி வாங்கி உப்புக்கண்டம் போட்டுக்கொண்டான். அந்தத் துறைமுகத்தில் மாட்டுக்கறி கிடைக்கவில்லை. சாட்டியாகோ என்ற துறைமுகத்தில் மாடுகள் கிடைக்குமா என்ற எண்ணத்தில் ஒரு வாரம் தங்கினான் மாடுகள் கிடைக்கவில்லை. மாலுமிகள் சிலருக்கு நோய் வந்தது தான் மிச்சம்.

எத்தனையோ கஷ்டங்களுக்குப் பிறகு கப்பல்கள் ஆகஸ்டு மாதம் முதல் தேதி, டிரினிடாடு தென்கரையை வந்தடைந்தன. கொலம்பஸ் எதிர்பார்த்தபடியே ஒருவிரி குடாவில் நல்ல நீரோடும் ஆறு ஒன்று வந்து கடலில் கலந்தது. குளிர்ச்சியும் சுவையும் மிகுந்த நீர் நீறைந்த அந்தச் சிற்றாற்றில் இறங்கிக் குடைந்து குடைந்து நீராடி மகிழ்ந்தார்கள் மாலுமிகள். எத்தனையோ நாட்களாகக் குளிக்காமல் வியர்த்து உப்பூறி நாறிப்போயிருந்த தங்கள் உடல்களை நன்றாகத் தேய்த்துக் குளித்து ஆனந்தமனுபவித்தார்கள். குளித்தபின், ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் அருகில் இருந்த காட்டுக்குள் சுற்றித் திரிந்துவிட்டு வந்தார்கள்.

அங்கிருந்து புறப்பட்டு டிரினிடாடிலுள்ள இகாகோஸ் முனையருகில் நங்கூரம் பாய்ச்சி மாலுமிகளைக் கரையில் இறக்கிவிட்டான், அவர்கள், மீன் பிடிப்பதிலும், சிப்பிகள் பொறுக்குவதிலும் காலம் கழித்தார்கள்.

எரின் விரிகுடாவில் கப்பல்கள் செல்லும்போதே தென் அமெரிக்கக் கண்டம் கொலம்பஸ் பார்வையில் தட்டுப்பட்டது. ஆனால். அது ஒரு வெறு நிலம் என்று அவன் அறிந்துகொள்ளவில்லை. மற்றத் தீவுகளைப்போல் அதுவும் ஒன்று என்று எண்ணிக் கொண்டான்.

டிரினிடாடுப் பகுதியில், தான் சீனர்களைப் பார்க்கக் கூடும் என்று எதிர்பார்த்தான். கொலம்பஸ். அப்படியில்லாவிட்டால் நீக்ரோ மன்னர்களையாவது சந்திக்கக் கூடும் என்று எண்ணினான். ஆனால், கப்பல்களுக்குச் சிறிது தூரத்தில் ஒரு படகு தோன்றியது. அதில் இருந்தவர்கள் எல்லோரும் கரீபியர்களைப் போன்ற சிவப்பு இந்தியர்களாகவேயிருந்தனர். ஆனால், அவர்களைக் காட்டிலும் சிறிது நல்ல பழக்க வழக்கமுடையவர்களாகத் தோன்றினார்கள். அவர்கள் கருத்தைக் கவர்வதற்காக, கப்பல் மேல் தட்டில் பித்தளைக் குடங்களைக் கொண்டுவந்து வைக்கச் சொன்னான் கொலம்பஸ். ஆனால் அவர்கள் அதை விசேஷப் பொருள்களாக எண்ணிக் கப்பலை நோக்கி வரவில்லை. அதன் பின், மாலுமிகள் சிலரைக் கப்பல் மேல் தட்டில் ஏறி நடனம் ஆடி நிற்கும்படி சொன்னான். அவர்கள் ஆட்டத்திற்கேற்றபடி குழல் ஊதப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்ட இந்தியர்கள், இது ஏதோ போரழைப்பு என்று எண்ணிக் கொண்டு. கப்பலை நோக்கி மழைபோல் அம்புகளைப் பொழிந்தார்கள். நல்ல வேளையாக ஒரு அம்புகூடக் கப்பலை எட்டவில்லை. அதன் பின் அவர்கள் தங்கள் வழியில் சென்று மறைந்து விட்டார்கள்.

அந்த வளைகுடாப் பகுதி முழுவதையும் ஆராய்வது என்ற திட்டத்துடன் ஆகஸ்டு மாதம் 4-ம் நாள் கப்பல்கள் புறப்பட்டன. எங்கோ எரிமலை வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பில் அலைகள் மலைகளென உயர்ந்தன. கப்பல்களை ஒரே தூக்காகத் தூக்கி மேலே கொண்டு சென்று அதே வேகத்தில் கடலின் அடி தெரியும்படியான கீழ்ப்பகுதிக்குத் தள்ளி இப்படியாகச் சிறிது நேரம் அலைக்கழித்தன. அதிர்ஷ்ட வசத்தாலும், மாலுமிகளின் திறத்தாலும் எவ்வித ஆபத்தும் உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. என்றாலும் அப்போது மாலுமிகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பயம் அவர்கள் ஆயுட்காலங்களில் வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. அந்த இடம் தங்கியிருப்பதற்கு ஏற்ற இடம் அல்ல என்று கருதிய கொலம்பஸ், அதற்கு நாகப் பாம்பின் வாய் என்ற பொருளுடைய லாபோக்காடிலா சர்ப்பே என்ற பெயரை வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டான்.

வடக்கே தொலை தூரத்தில் அடிவானத்தில் சில மலைகள் தெரிந்தன. அந்த மலைகள் இருந்த பரியாத் தீபகற்பத்தை நோக்கி கப்பல்களைச் செலுத்திய கொலம்பஸ் அன்று இரவு பாகியாத் துறைமுகத்தின் அருகே நங்கூரம் பாய்ச்சினான். மறுநாள் அந்தப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்துவரக் கிளம்பினான், அந்தப் பகுதியில் பல அழகான வசதியான துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான எசினாடா யாக்குலா என்ற துறைமுகத்தில் கப்பல்களை நிறுத்தினான். அந்த மிக அழகிய கடற்கரையையுடைய துறைமுகத்தில் சிறிது தூரத்தில் மிகப் பெரிய வீடு ஒன்று தெரிந்தது. அதன் எதிரே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஆனால், கொலம்பசும் ஸ்பானியர்களும் இறங்கிச் சென்றபோது, அங்கே மக்கள் யாரும் காணப்படவில்லை. எல்லோரும் ஸ்பானியர்களைக் கண்டு பயந்தோடி விட்டார்கள். அவர்களை வரவேற்க அந்தக் குடிசையில் குரங்குகள்தான் இருந்தன.

அந்தக் குரங்குக் கூட்டம் ஸ்பானியர்களைக் கண்டு தங்கள் - பற்களைக் காட்டி, வரவேற்றது. அமெரிக்கக் கண்டத்தின் நிலப்பகுதியில் கொலம்பஸ் முதன் முதலாகக் காலடி எடுத்துவைத்தது அந்தத் துறைமுகத்தில் தான். ஆனால், கொலம்பசுக்கு தான் அப்போது ஒரு பெரிய கண் டத்தில் இறங்கியிருப்பதாகத் தெரியாது. பரியாத் தீப கற்பத்தையே அவன் ஒரு பெரிய தீவு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அமெரிக்கக் கண்டத்தில் காலடி வைத்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. 1498-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் நாள் தான் அது.

மற்ற தீவுகளில் செய்தது போல் அந்த இடத்தையும் ஸ்பெயினுக்கு உரிமையாக்கும் சடங்கைச் செய்யவேண்டும். ஆனால் சுற்றிலும் கூடியிருக்கும் குரங்குகளின் முன்னிலையில் அவன் அந்தப் புனிதச் சடங்குகளைச் செய்ய விரும்பவில்லை. அந்த நாட்டுக்கு உரிய மக்கள் சிலரையாவது முன்னால் வைத்துக்கொண்டு செய்வதுதான் பொருத்தமாகும் என்று நினைத்தான். நட்புரிமை பூண்ட சில சிவப்பு இந்தியர்கள் கப்பல்களை அணுகினார்கள். கொலம்பசுக்கு அப்போது உடல் நலம் சரியில்லை. ஆகவே கப்பல் தலைவன் பெட்ரோடி டெரிரோஸ் என்பவனை அந்த நிலப்பகுதியை உரிமையாக்கும் சடங்கைச் செய்யுமாறு அனுப்பினான். அவனும் அந்தச் சிவப்பு இந்தியர்கள் முன்னிலையில் பரியா நிலப்பகுதியை ஸ்பெயினுக்கு உரிமையாக்கும் சடங்கைச் செய்து முடித்தான்.

பாசி மாலைகளும், பருந்து மணிகளும், சர்க்கரையும் கொடுத்தவுடன், சிவப்பு இந்தியர்கள் கப்பலடிக்குத் திரண்டு வந்தார்கள். இந்தப் பொருள்களைப் பெறுவதற்காக அவர்கள் தங்கள் கைவசமுள்ள எந்தப் பொருளையும் தந்துவிட ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் தங்கள் கழுத்துகளிலும் கைகளிலும் அணிந்திருந்த ஆபரணங்கள். தங்கமும் செம்பும் கலந்த உலோகத்தால் ஆனவை. இவர்களுக் குத் தங்கத்தை விடச் செம்பே உயர்வாகப் தோன்றியது. காரணம், செம்பு உள்நாட்டில் மத்திய பகுதியில் தான் கிடைத்தது. தங்கமோ அவர்கள் இருக்கும் பகுதியிலேயே கிடைத்தது. ஆகவே அவர்கள் இரண்டையும் உருக்கிக் கலந்து உருவாகிய உலோகத்தால் ஆபரணங்கள் செய்து கொண்டார்கள். கொலம்பஸ் ஒரு புதிய பெரு நிலத்தை. மட்டும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு தனி நாகரிகம் படைத்த இனத்தினர் வாழும் பகுதியிலும் நுழைந்திருந்தான்.

கொலம்பஸ் அந்த நிலப்பகுதி முழுதும் சுற்றிப் பல துறைமுகங்களை ஆராய்ந்தான். ஒரு துறைமுகத்தில், ஒரு. கிராமத்துப் பெண்கள் பலர் கப்பலுக்கு வந்தார்கள். அவர்கள் கழுத்துக்களில் ஒளி வீசும் முத்துக்கள் பதித்த. அட்டிகைகளை அணிந்திருந்தார்கள். பருந்து மணிக்கும், பாசி மாலைக்கும் அவர்கள் அந்த அட்டிகைகளைக் கழற்றிக் கொடுத்து விட்டார்கள். அவர்கள் கையில் வேறு முத்து அட்டிகைகள், இல்லாததால் கொலம்பஸ் தன் ஆசையை அடக்கிக் கொண்டான். அவர்களை விசாரித்தபோது, தீபகற்பத்தின் மறு பகுதியில் ஏராளமாக முத்துக் கிடைப்பதாகக் கூறினார்கள். திரும்பும் போது அங்கு செல்லலாம் என்றிருந்தான்; ஆனால் அந்தப் பாதையில் அவன் திரும்பவில்லை. பொதுவாக அந்தப் பகுதி மக்கள் அன்பும் பண்பும் உடையவர்களாக இருந்தார்கள். ஓரூரில் இருந்த பெரிய கூரை வீட்டில், ஒரு கப்பலைச் சேர்ந்த மாலுமிகள் அனை வருக்கும் நல்ல விருந்து வைத்தார்கள். வயிறு புடைக்க உண்டுவிட்டு, ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மாலுமிகள் கப்பலுக்குத் திரும்பி வந்தார்கள்.

பல துறைமுகங்களைப் பார்த்துக்கொண்டே கப்பலை மேற்றிசையில் செலுத்திய கொலம்பஸ் ஆகஸ்டு 15-ம் நாள் ஒரு தீவைக் கண்டான். அந்தத் தீவில் இறங்காமலே அதற்கு மார்கரிட்டா என்று பெயர் வைத்தான். அந்தத் தீவில் முத்து நிறையக் கிடைத்தது, ஆனால், இஸ்பானியோலாவில் அமைந்துள்ள சாண்டா டோமிங்கோ என்ற புதிய நகரத்திற்கு விரைந்து செல்லவேண்டும் என்று எண்ணியதால் கொலம்பஸ் அங்கு இறங்கவில்லை. மார்கரிட்டாவில் அவன் இறங்கி முத்துக்கள் சேர்த்துக் கொண்டு போயிருந்தால், ஸ்பெயினில் அவனுக்கு நல்ல வரவேற்பிருந்திருக்கும். ஆனால், அவனுடைய அதிர்ஷ்ட குறைவு அவனை அங்கு இறங்க விடவில்லை.

எங்கும் சுற்றிப் பார்த்த பிறகுதான் கொலம்பஸ் தான் ஒரு பெரிய புதிய கண்டத்தில் இறங்கியிருப்பதை உணர்ந்தான். பரியாவைப் பற்றிய தன் எண்ணத்தைக் கப்பல் குறிப்புப் புத்தகத்தில் அவன் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறான்.

இதுவரை யாரும் கண்டறியாத ஒரு பெரிய கண்டம் இதுவென்றே நான் நம்புகிறேன். முன் என்னிடம் சிறைப் பட்ட பல கரீபிய இனத்தைச் சேர்ந்த இந்தியர்கள், தெற்கே ஒரு பெருநிலம் இருப்பதாகப் பல முறை கூறி இருக்கிறார்கள். அங்கே நிறையத் தங்கம் கிடைக்கும் என்று அவர்கள் கூறினார்கள். இது மட்டும் ஒரு பெரிய கண்டமாயிருந்தால் இது ஒரு பேர் ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு பெரிய ஆறு ஒன்று - 48 காத தூரத்திற்கு நல்ல தண்ணீர் பாயும் கடல் போல இருப்பதால் இது நிச்சயமாக ஒரு பெரிய கண்டமாகத்தான் இருக்க வேண்டும்.

"இந்த நிலப்பகுதிகள் வேறு ஓர் உலகமேயாம்" என்றும் கொலம்பஸ் குறிப்பிட்டிருக்கிறான். அவன் அதே குறிப்புப் புத்தகத்தில் மேலும் இரண்டு நாள் கழித்து, அந்த நிலப்பகுதி ஒரு சொர்க்கம் என்றே வருணித்துப் பலவாறாக எழுதியிருக்கிறான்.

கொலம்பஸ் இஸ்பானியோலா நோக்கிச் சென்றான். புதிய தலைநகரமான சாண்டா டோமிங்கோவை நெருங்கி வந்த போது பீட்டாத் தீவில் கப்பல்களை நிறுத்தி நங்கூர மிட்டான். அப்போது சாண்டா டோமிங்கோப் பக்கத்திலிருந்து ஒரு சிறு கப்பல்காரன் கொலம்பஸ் கப்பலை நோக்கிச் சுட்டான். ஆனால், இரு கப்பல்களும் நெருங்கிய பின் கவனித்தால் அந்தக் கப்பலைச் செலுத்தி வந்தவன் அவன் சகோதரன் பார்த்தலோமியாதான் என்று தெரிந்தது பிறகு நான்கு கப்பல்களும் எட்டு நாட்கள் பயணம் செய்து சாண்டா டோமிங்கோவை அடைந்தன.