கடவுள் கைவிடமாட்டார்/சக்தியும் பக்தியும்!

8. சக்தியும் பக்தியும்


காலையிலே எழுந்ததும் காபி குடிப்பதுபோல் தன் வீட்டிற்குவந்து, காபியுடன் காலை ஆகாரமும் சாப்பிட்டு விட்டு வேலையைத் தொடங்கிவிடும் நடேசனை தருமலிங்கம் அன்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆள் வரவில்லை,

‘மனைவிக்கு உடல் நலம் இல்லை என்றாரே, எப்படியும் மாலையில் வந்து நம்மைப் பார்ப்பார்’ என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டு, மற்ற வேலைகளைக் கவனித்தார். ஆனாலும், மனம் எதற்காகவோ, நடேசனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

மாலையிலும் நடேசன் வரவில்லை, தருமலிங்கத்திற்குத் ‘திகீர்’ என்றது. ஒரு வேலைக்காரனை அனுப்பிப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். சரியான பதிலில்லை. பிறகு தானே போய் விசாரித்தார்.

அன்புடன் கேட்டுக் கேட்டுப் பார்த்தபொழுது, சரியான பதில் தரவில்லை அவரது மனைவி பார்வதி. ஆத்திரத்துடன் கேட்டபோதுதான், அவள் தடுமாறிக் கொண்டே பதில் சொன்னாள்.

‘நேற்று மாலையே பேரூருக்குப் போய், உடனே திரும்பி வந்துவிடுகிறேன் என்று போனவர்தான். இன்னும் வீடு வந்து சேரவில்லை. நீங்கள்தான் அவரைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். அவருக்கு ஏதோ ஆபத்துதான் வந்திருக்கிறது’ என்று அழவும் தொடங்கி விட்டாள்.

தங்கள் தாய் அழுவதைக் கண்டு, எல்லாக் குழந்தைகளும் ஏக காலத்தில் சத்தம் போட்டு அழத் தொடங்கின. தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்கியதுபோல கூச்சல்.

அவர்களை சமதானம் செய்து, மீண்டு வருவதற்குள் தருமலிங்கத்திற்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. உடும்பு பிடிக்கப்போய் கையை விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்.

அவர் மனதிலே எப்படியோ சிறு சந்தேகம் அரும்பத் தொடங்கியது.

அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து, தன் மனைவி மீனாட்சியை அழைத்து, நடேசன் தந்த நகைப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வருமாறு கூறினார். வந்ததும் அவசரமாக அவிழ்த்துப் பார்த்தார். சந்தேகப் பட்டது சரியாகவே போயிற்று.

வைரக் கற்களுக்குப் பதிலாக, வெறும் கண்ணாடியால் இழைக்கப் பெற்றது போன்ற வெள்ளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்தன.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார் தருமலிங்கம்.

“எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து நடேசனை இங்கே கொண்டு வாருங்கள். அதற்கு என்ன செலவானாலும் சரி, என் சொத்தே அழிந்தாலும் சரி சீக்கிரம் புறப்படுங்கள்” என்று தன் வேலைக்காரர்களை விரட்டினார் தருமலிங்கம்.

“நன்றி மறந்த துரோகியே! நடேசா! உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைத்த நீ உருப்படுவாயா? அம்பிகைக்குப் போட இருந்த வைரக்கற்களை, இப்படி அபகரித்துக் கொண்டு ஓடிவிட்டாயே! நீ நல்ல வாழ்வு வாழ்வாயா? உனக்கு நிம்மதிதான் கிடைக்குமா? என்று ஏதேதோ பேச அரம்பித்து விட்டார் தருமலிங்கம்.”

அவரது அருகில் வந்த கணக்கப்பிள்ளை, தான் கேள்விப்பட்ட சேதியை, தருமலிங்கத்தின் காதருகில் போய் ரகசியமாகச் சொன்னார். எதையோ யோசித்தபடி தலையசைத்துவிட்டு, தருமலிங்கம் வெளியே புறப்பட்டார். கூடவே கணக்கப் பிள்ளையும் ஓடினார். தருமலிங்கம் அவ்வளவு வேகமாக அல்லவோ போய்க்கொண்டிருந்தார்!

மீனாட்சிக்கு எதுவுமே விளங்கவில்லை. கவலையுடன் மௌனமாகக் கண் கலங்கியவாறே நின்றுகொண்டு இருந்தாள்.

வீட்டிற்குள்ளே, தான் மௌனமாக நின்றாலும் மீனாட்சியின் உள்ளம் அம்பிகையை நோக்கித் தொழுத வண்ணமாகத்தான் இருந்தது. ‘தேவி! எங்கள் பரம்பரை சொத்துக்களை உனது பாதார விந்தத்தில் சேர்க்கலாம் என்று. நான்தானே முதலில் நினைத்தேன்.’

அதையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லையே வாழ்வில் எதையுமே அடையக் கொடுத்து வைக்காத இந்தப் பாவியை மன்னித்துவிடு, எங்கிருந்தாலும், அந்த வைரக் கற்களைத் திரும்பப் பெற்று, என் பிரார்த்தனையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடு’ என்று குமுறும் நினைவுகளுடன் கும்பிட்டாள்.

கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது! ‘நிச்சயம் என் பிரார்த்தனை நிறைவேறும்’ என்று நம்பினாள் மீனாட்சி...

அம்பிகைக் கோயில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. கண்களில் கண்ணீரைத் துடைத்து கொண்டு கோயிலை நோக்கி ஓடினாள் மீனாட்சி.

இன்னும் பத்தே நிமிடந்தான் இருக்கிறது. அற்புத சாமிக்கோ ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு வருடமாகத்தோன்றியது. அங்கிருந்த கடிகாரத்தின் முள் அப்படியே நிற்பதுபோல் தோன்றியது. என்ன கடிகாரம்? ஆமை வேகத்தில் போகிறதோ என்று அசட்டுத்தனமாக வேடிக்கை செய்தார்.

அங்குமிங்கும் போய் வேடிக்கை பார்த்து விளையாடிக்கொண்டிருந்த முருகனுக்கு, பசி வந்து விட்டது.

“அப்பா பசிக்குது என்றான் வந்து மடியில் உட்கர்ந்து கொண்டே.”

பசிக்குதாடா கண்ணு! இந்தா! என்று பொட்டலத்தை அவிழ்த்து, ஒரு இட்லியை எடுத்துக் கொடுத்தார்.

‘இன்னும் ஒரு இட்லிப்பா’ என்றான் முருகன்! அதற்கென்னப்பா உனக்கில்லாத இட்லியா? என்று

அற்புதசாமி, அடுத்திருக்கும் இட்லியை எடுத்துக் கொடுத்தார்.

‘அந்த இட்லி எனக்கு வேண்டாம் வேற இட்லிதான் வேண்டும்’ என்றான் அற்புதசாமியின் அருமைக் குமாரன் முருகன். முருகன் திருவிளையாடல் ஆரம்பமாயிற்று.

வேற இட்லியா! அது வேண்டாம்! இதையே சாப்பிடுபோதும் என்று அதட்டினார் அற்புதசாமி!

எனக்கு அந்த இட்லிதான் வேண்டும் என்று அடியில் வைத்திருக்கும் மிளகாய் பொடியுள்ள இட்லியை சுட்டிக் காட்டிக் கேட்டான்.

அற்புதசாமி அவனை அடிப்பதற்காக் கையை ஓங்கியபடி, ‘அறிவு கெட்டவனே! அந்த இட்லி ரொம்ப உரைக்கும்! வயிற்றை வலிக்கும்! பேசாம நான் கொடுப்பதை சாப்பிடு’ என்று அளவுக்கு மீறி, கொஞ்சம் கோபமாகவே கத்தி விட்டார்.

பையன் பிடிவாத குணம் உள்ளவன், அந்த இட்லிதான் தனக்கு வேண்டும் என்று கேட்டபடியே சத்தம் போட்டு அழ ஆரம்பித்தான்.

அப்பா மகன் பிடிவாதத்தையும், எதிர்வாதத்தையும் பொழுது போகாத மற்ற பயணிகள், மிகவும் ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அவர்களிலே ஒருவர் அற்புதசாமியைப் பார்த்து, ‘பாவம் ! பையன் அழுகிறான்! உரைக்கட்டுமே! உரைத்தால் துப்பிவிடுகிறான்’ என்று சிபாரிசு வேறு செய்ய ஆரம்பித்தார்.

‘அவன் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாது. அதிக காரம்’ என்று கூறிப் பார்த்தார்.

‘அது காரமா இருக்காது. அதுலதான் கல்கண்டு வச்சு சுட்டியேப்பா! அந்த இட்லி எப்படிப்பா உரைக்கும்!’ முருகன் சத்தம் போட்டுக் கூறினான்.

இட்லியில் கல்கண்டா?

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இட்லியில் கல்கண்டா! பையனைப் பார்த்து ஒருவர் கேட்டார்!

இருக்காதா அந்த இட்லிக்குள்ளே பாருங்க நிறைய கல்கண்டு இருக்குது எங்க அப்பா அதை எவ்வளவு ஆசையா வச்சுட்டாரு! தெரியுமா? பையன் மிகவும் அழகாக அப்பா செய்ததையெல்லாம் விளக்கமாக வருணித்துக்கொண்டே போனான்.

‘நேரமாகி விட்டது. எல்லோரும் புறப்படுங்கள்’ என்று சொல்ல வந்த சுங்க இலாகா சோதனை அதிகாரியின் காதில் 'இட்லியில் கல்கண்டா’ என்று அந்த ஆட்களில் ஒருவரும் பையனும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

அந்த அதிகாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது.

அற்புதசாமியை மட்டும் தனியாகக் கூப்பிட்டுத் தன் அறைக்கு அழைத்துக்கொண்டு போனர்.

தேகம் நடுங்கியவாறு, அற்புதசாமி அவரைப்பின் தொடர்ந்தார்.

இட்லிகள் எல்லாவற்றையும் எடுத்து எடுத்து அந்த அதிகாரி விண்டு பார்த்தார். மிளகாய்ப்பொடி நிறைய தூவப்பெற்ற இட்லிக்குள்ளே வைரக்கற்கள் இருப்பது தெரிந்தன.

அற்புதசாமிக்கோ, மேற்கொண்டு அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. மயங்கியவர்போல, நாற்காலியில் சாய்ந்து விட்டார்.

முகதத்தில் தண்ணீர் அடித்தபோது, மயக்கம் தெளிந்து, எழுந்து உட்கார்ந்தார். கைக்கெட்டியது. வாய்க்கு எட்டவில்லையே என்று மனம் புழுங்கினார். வாயாடி மகனால் தன் எதிர்கால வாழ்வு பாழாகிப்போய்விட்டது என்று புலம்பினார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அற்புதசாமியின் பயணமும் தடுக்கப்பட்டது.

தன் தங்கை சிவகாமியிடம் மட்டும் சொல்லியிருந்தால், இந்த கதி தனக்கு நேர்ந்திருக்காது என்று நினைத்தார். இனிமேல் நினைத்து என்ன பயன்? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எப்படி முடியும்?

இங்கே அநாதைபோல, போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தார் அற்புதசாமி. தன் தங்கையின் முகவரியைத் தந்தார். எப்படியும் என் தங்கையைப் பார்த்தாக வேண்டும் என்று துடித்தார்.

அவரது மனவேதனையை அறிந்த போலீஸ் ஒருவர் ஏற்பாடு செய்து தருவதாக ஆறுதல் கூறினார்.

‘அப்பா இட்லிப்பா’ என்று முருகன் கேட்டுக் கொண்டேயிருந்தான்.

‘எட்டிப் போடா’ என்று அவனை நெட்டித் தள்ளிக் கொண்டேயிருந்தார். பாசம் எல்லாம் வேஷம், மோசம், என்று அவர் உள் மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.

‘இனிமேல் இந்த ஆசையே வேண்டாம்’ என்று தீர்மானம் செய்து கொண்டார். நல்ல முடிவுதானே!