கடவுள் வழிபாட்டு வரலாறு/படைப்புக் கொள்கை ஆய்வு
பெற்றோரும் பிள்ளைகளும்
கடவுளே எல்லாம் படைத்தார் என்னும் படைப்புக் கொள்கையே சரியானது என்று சொல்வதனால், இந்நூலில் முன்பு கூறியுள்ளாங்கு, கடவுள் ஏன் உலகங்களையும் உயிர்களையும் படைக்க வேண்டும்? அதிலும் இத்தனை வகை உயிர்கள் எதற்குத் தேவை? இதன் உண்மையான நோக்கம் என்ன? இந்தப் பூவுலகில்தான் உணவு நெருக்கடியும் இட நெருக்கடியும் மற்ற நெருக்கடிகளும் உள்ளனவே! இந்த நெருக்கடிகளைக் குறைக்கச் சில கோடி உயிர்களையாவது நிலா உலகில் (சந்திர மண்டலத்தில்) படைத்துச் சிக்கலுக்குத் தீர்வு கண்டிருக் கலாமே! நிலா உலகில் காற்றையும் தண்ணீரையும் உண்டாக்காதது ஏன்? அதன் மேல் ஏதேனும் சினமா?— அல்லது வெறுப்பா?
பூவுலசில் இவ்வளவு உயிர்களைப் படைத்தாரே—அவற்றையெல்லாம் நன்முறையில் காப்பாற்ற முடிகிறதா? சூது-வாது, பகை-வெறுப்பு, கொலை—கொள்ளை, வறுமை-பிணி, பசி-பற்றாக் குறைகள் இன்னபிற தொல்லைகள் எத்தனையோ-எத்தனையோ! கடவுள் சிலைகளையே மக்கள் திருடி விற்றுப் பிழைக்கும் ஏளனமான நிலைக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? ஏழைகள் எப்படியாவது பிழைக்கட்டும் என்ற இரக்கமா? அங்ஙனமெனில், எந்தத் தீமையை வேண்டுமானாலும் செய்யலாமா? உலகில் நன்மைகளோ - தீமைகளோ, கடவுள் விருப்பப்படிதான் நடைபெறுகின்றனவா? உயிர்களின் இந்த நிலைமை பொருத்தம்தானா?
தம் குழந்தைகள் துன்பப்படப் பெற்றோர் உடன் படுவரா? கடவுளுக்கு ஏன் இது தெரியவில்லை. குறைபாடுடைய குழந்தைகளை-உயிரிகளைக் கடவுள் படைப்பதேன்? மக்கள் குறைபாடுடைய குழந்தைகளைப் பெற்றுவிட்டாலும் குறைபோக்க முயல்கின்றனர்—கெட்ட பிள்ளைகளைத் திருத்த முயல்கின்றனர். கடவுள் இதுபோல் ஏதாவது செய்கிறாரா? நரகத்தில் அல்லவா தள்ளுகிறார்! பெற்றோரின் அன்பைப் பெறபெற்றோரிடமிருந்து உதவி பெறப் பிள்ளைகள் கெஞ்ச வேண்டியதில்லையே. இயற்கையாகவே பெற்றோர்கள் அருள் மழை பொழிகின்றனரே! ஆனால் கடவுளின் அன்பை-அருளைப் பெற, மக்கள் எவ்வளவோ பணச் செலவு செய்யவேண்டியுள்ளது-எவ்வளவோ உடல் உழைப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது-கீழே விழுந்தும், மண்டியிட்டும், கைகட்டியும் அல்லது கைகூப்பியும், தலை தாழ்த்தியும், வாயால் புலம்பியும் வாழ்த்தியும் கெஞ்சிக் குழைந்து கூத்தாட வேண்டியுள்ளது. இஃது ஏன்? தாயின் அன்பைப் பெறச் சேய் தாய்க்குக் கையூட்டு (இலஞ்சம்) கொடுப்பதில்லையே! கடவுள் அன்பைப் பெறுவதற்கு மட்டும் மக்கள் ஏன் இவ்வளவு செய்ய வேண்டியுள்ளது? அங்ஙனமெனில், கடவுள் கொடியவரா? இரக்கம் இல்லாதவரா? மக்களுக்கு இருக்கும். இரக்கம் கடவுளுக்கு இல்லையே. ஏன்? அறியாமைப் பிதற்றல்
ஏழைகளின் வறுமையைப் போக்கவும் பிணியாளரின் பிணிகளை நீக்கவும் பல்வேறு துன்பங்களில் உழல்வோரின் துன்பங்களைப் போக்கவும் மக்களுக்கு மக்கள் தாமே உதவி செய்து கொள்கின்றனர்? இங்கே கடவுள் என்ன செய்கிறார்? “கடவுள், மக்கள் சிலரைக் கொண்டு மற்ற மக்களுக்கு உதவி புரிகிறார்-மேலும் தம் பேராளர்களை (பிரதிநிதிகளை) மேல் உலகத்திலிருந்து பூவுல கிற்கு அனுப்பி உதவி செய்ய வைக்கிறார்-என்றெல்லாம் பிதற்றப்படுகிறது. அங்ஙனமெனில், பிணியும் வறுமையும் இன்னபிற துன்பங்களும் வருவதனால்தானே கடவுள் பிறர் வாயிலாக அவற்றைப் போக்க வேண்டியுள்ளது? இந்தத் துன்பங்கள் எல்லாம்-ஏன்?-எந்தத் துன்பமுமே உயிர்கட்கு வராதவாறு கடவுள் உலகத்தைப் படைத்தால் அவருக்கு என்ன இழப்பு (நஷ்டம்) வந்து விடும்? அவர் தாம் எல்லாம் வல்லவராயிற்றே.
துன்பம் ஒரு சிறிதும் இல்லாத=இன்பமே நிறைந்த உலகத்தை ஏன் அவர் படைக்கலாகாது? துன்ப உலகைப் படைத்து விட்டுப் பின்னர்ப் பேராளர்களை அனுப்பித் துன்பங்களைப் போக்க முயல்வது, குழந்தையைக் கிள்ளிவிட்டுப் பின்னர்த் தொட்டிலை ஆட்டுவது போலல்லவா இருக்கிறது? அப்படியே பிறர் வாயிலாக அல்லது தம் பேராளர் (பிரதிநிதிகள்) வாயிலாக உலகத் துன்பங்களை இன்று வரையிலும் நூற்றுக்குக் கால்பங்கா வது கடவுளால் போக்க முடிந்ததா? சில நோய்கள் பரவாமல் தடுக்கவும் சில நோய்களை அறவே அகற்றவும் அறிவியல் மக்கள் (Scientist) முயல்கின்றனரே-அம் முயற்சியில் வெற்றியும் காண்கின்றனரே! இந்தியப் பெரு நாட்டில் பெரியம்மை நோய் அறவே அகற்றப்பட்டு விட்டதே! அதுபோல், கடவுள் உலகில் துன்பங்களே இல்லாதவாறு முற்றிலும் அகற்றாதது ஏன்? அறிவியலார் (விஞ்ஞானிகள்) வாயிலாகக் கடவுளே எல்லாம் கண்டுபிடிக்க வைக்கிறார்-அறிவியலார் வாயிலாகவே வறுமை, பிணி, இன்ன பிற துன்பங்களைக் கடவுள் அகற்றுகிறார் எனில், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு கட்கு முன்பே அறிவியலார் வாயிலாகக் கடவுள் இந்தக் கண்டு பிடிப்புகளையெல்லாம் செய்ய வைத்திருக்கலாமே! இவ்வளவு காலம் தாழ்த்திக் காத்திருந்ததேன்? இப்போதுதான் அக்கறை பிறந்ததா?
உயிர்களின் இன்னல்களைப் போக்கக் கடவுளே பூவுலகில் வந்து (அவதாரம்) பிறவி எடுக்கிறாராம்; உலகில் கொடுமைகள் மலிந்துவிட்டபோது அவற்றைப் போக்கக் கடவுளே மக்களிடை வந்து அவதரிக்கிறாராம்.
சரி, தம் பேராளர்களை (பிரதிநிதிகளை) உலகிற்கு அனுப்பியும் பயன் இல்லாது போகவே, கடவுள் தாமே நேரில் வந்து அவதரிக்கிறார் போலும்! சரி, எத்தனையோ மதத்தார்கள் சொல்கிறபடி எத்தனையோ அவதாரங்களைக் கடவுள் எடுத்தாரே-அதனால் பயன் என்ன? உலகில் எந்தத் தீமை-எந்தத் துன்பம் குறைந்துள்ளது? இந்த அவதாரங்கள் எல்லாம் முழுத் தோல்வி அடைந்தனவே தவிர, ஏதேனும் வெற்றி கண்டனவா? அவதாரங்கட்கு முன் இருந்த தீமைகளுள்-கொடுமை களுள்-துன்பங்களுள் இப்போது எது எவ்வளவு குறைந்துள்ளது?
‘பார்க்க வந்த சீமாட்டி பல் உடைந்து போனாளாம் எடுக்க வந்த சீமாட்டி இடுப்பு ஒடிந்து போனாளாம்’-என்னும் பழமொழிகளின் உட்பொருள் போல, மக்களின் துன்பங்களைப் போக்க மேலுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த அவதாரங்கள் எல்லாம், மக்களைப் போலவே உலகில் பெருந் துன்பம் உற்றுச் செத்துத் தொலைந்தனவே! எனவே, மேலே சுட்டியுள்ளாங்கு, கடவுள் பெயரால் கூறும் கருத்துகள் எல்லாம், அறியாமையால் உளறும் பிதற்றல்களே என்பது தெளிவு.
இவ்வளவு தானா? இன்னும் எவ்வளவோ அறியாமைப் பிதற்றல்கள் உள: “கடவுள் மேல் பழி போடுவது ஏன்? அவரவர் செய்த வினையை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும்-கடவுள் என்ன செய்வார்!"-என்பதாக ஒரு கருத்து உளறப்படுகின்றது. அவரவர் செய்த வினையை அவரவரே அனுபவித்துத் தீர வேண்டும் என்பது உண்மை; இது அறிவியல் கருத்தும் ஆகும். அங்ஙனமெனில் இடையில் கடவுள் எதற்கு பிறருக்கு நன்மை செய்பவன் திரும்ப நன்மையைப் பெறுகிறான்: பிறர்க்குத் தீமை செய்பவன் திரும்பத் தீமை அடை கிறான்; தீமை செய்தவன் முதலில் மறைந்து தப்பித்துக் கொள்ளினும் பிறகு கண்டு பிடிக்கப்பட்டு ஒறுக்கப்படுகிறான். இதற்குக் கடவுள் தேவையில்லை. இதற்குச் சமூக நீதி உள்ளது-நீதிமன்றங்கள் உள்ளன-அரசு உள்ளது. இந்த அமைப்பினால், அவரவர் செய்த வினையை அவரவர் நுகர்ந்தே தீர்வர். தீமை செய்தவன் கடவுளை வேண்டித் தப்பித்துக் கொள்வானே யாயின் கடவுள் நீதி தவறியவராவார். ஒருவன் நன்மை பெற வேண்டுமாயின் அஃது அவனது செயலைப் பொறுத்தே உள்ளது; வாளா இருந்து கொண்டு கடவுள் அருளால் நன்மை பெற்றுவிட முடியாது. ஒருவன் பிறக்கும் போதே பணக்காரனாய்ப் பிறக்கின்றான்-அதாவது பணக்காரர்க்குப் பிறக்கின்றான்; மற்றொருவன் பிறக்கும்போதே ஏழையாய்ப் பிறக்கிறான்-அதாவது ஏழைக்குப் பிறக்கிறான்; இது, அவனவன் முற்பிறவியில் செய்த வினையின் பயன்-எனச் சொல்லப்படுகிறது. அங்ஙனமெனில், இங்கும் கடவுளுக்கு வேலையில்லை; உண்மையில் இது சமுதாய அமைப்பின் கோளாறாகும்.