கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்

கட்டளைக் கலித்துறை,
பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை
பாடல் 54
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 130 முதல் 137
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்
மாப்பிட் டெனுஞ்சிறு தூள்பிட்டுக் காகமண் ணைச்சுமந்தே
ஆப்பிட்டுக் கொண்டடிப் பட்ட சொக்கேச,ருக் காசைப்பட்டுச்
சேப்பிட்டு மையிட்டு பூமாலை கந்தந் திமிர்ந்து மஞ்சட்
காப்பிட்டு வாழ்க்கைப் பட்டாள் கூடல்வாழுங் கயற்கண்ணியே. (1)
காமாகயற் கண்ணி கோபம் பொறாள் என்றன் கண்பனிநீர்
சீமான் கரத்திற் றுடைக்கரிதே செகமேழு மெச்சும்
கோமான் கரத்திற் குனிசிலை ராயன் குகன் சிலம்பில்
மாமாவின் காலல்லவே மன்னவாவுன் மலர்க்கரமே. (2)
கைத்தலந் தன்னிற் பசும்பொன் வளையல் கலகலெனச்
சத்தமொலித்திட நூபுரம் பாதச்சதங்கை கொஞ்சத்
தத்திமி யென்று நடஞ்செய் கம்பீசர் தஞ்சந்நிதிப் பெண்
செத்தகுரங்கைத் தலைமேற் சுமந்து திரிந்தனளே. (3)
பரிக்கொம்பு போலப் பகவான் சரிதை பகர்ந்திடினும்
உரிக்கம்ப தாயினு மீயார் கடனுட னோடிச்சென்று
கரிக்கொம்பு போன்முலை மின்னாருக் கீவரக் கன்னியர்கை
நரிக்கொம்பு தானுமுண்டோ வேங்கடாசல நாயகனே. (4)
கேளந்த நாளையின் மைந்தா நின்னையரைக் கிட்டிமத
வேள்வந்து பூசலிட மதிகாய வெருண்டெனது
தாள்வந்து பற்றி முன்வாய் புதைத்தே நின்று தாழ்மை சொன்ன
நாளந்த நாளல்லவே யிந்தநாளந்த நாயகற்கே. (5)
கற்றன வொக்கும் புதியன கேடபன கண்ட பன்னாள்
உற்றன வொக்குமொரு பகற் காண்பன வொன்னலரைச்
செற்றன வொக்குஞ் சிறுநகை செய்வன தீயர் செய்யப்
பெற்றனப் பெற்றி யெண்ணான் மறபானெம் பெருங் குன்றனே. (6)
பக்குவமாகக் கவிநூறு செய்து பரிசுபெற
முக்கரணம் மெதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கடபோ வெனும் லோபரைப் பாடி யலுத்து வந்த
குக்கனை யாண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே. (7)
பொல்லா மதப்பய லெந்நேரமுஞ் செய்யும் போருமெனைக்
கொல்லாமற் கொல்லு மதியுங் கடலுங் குயிலுமிவை
எல்லாந் தொலைந்ததென் றெண்ணினன் பாவியிப் போதுன்மனம்
கல்லா யிருக்குமென் றவ்வளவேனு முன் கண்டிலனே. (8)
காலையுபாதி மலஞ்சலமா மன்றிக் கட்டுச்சியிற்
சாலவுபாதி பசிதாக மாகுமுற் கஞ்சிதமாம்
மாலையுபாதி துயில் காமமா மிவை மாற்றி விட்டே
ஆலமுகந் தருளம்பலவா வென்னை யாண்டருளே. (9)

10, 11, 12

தொகு
நாலடி வள்ளுவராமே யிப்பாலை நடந்த பெருங்
காலடி மேலடி மானடியே கட்டுரலிற் பட்டும்
பாலடிசில் வெண்ணெ யுண்டோ னரங்கன் பனிவரையில்
வேலடி முள்ளுக் குபாய மிட்டேகும் விழைவு நன்றே. (10)
புலியைக் கொடுத்துப் பசுவாங்கியோர் புலிப்பூங் குழலாள்
புலியைப் பசுதின்ன விட்டுப் புலியைத் தினாதகற்றிப்
புலியை யரைத்துப் பலகாரஞ் செய்து பொருந்துமுகப்
புலியைக் களிப்புடன் சாறுவைத்தா டன்புருடனுக்கே. (11)
வேளாமழகன் றுரை சீதக்காதி யென் வீட்டிலொரு
நாளாகிலும் வரக் காண்கிலனே யெந்த நாளுமவன்
தோளா லணையுஞ் சுக வாலிபத்தைத் துணிக்க வொரு
வாளாப் பிறந்தனையே மைந்தனே யென்ன வாயுனக்கே. (12)

13, 14, 15

தொகு
நடந்தாளொரு கன்னிமா ராசகேசரி நாட்டிற் கொங்கைக்
குடந்தா னசைய வொயிலானது கண்டு கொற்றவருந்
தொடர்ந்தார் சந்யாசிகள் யோகம் விட்டார் சுத்தசைவ ரெல்லாம்
மடந்தா னடைத்துச் சிவபூசையுங் கட்டி வைத்தனரே. (13)
நாலாகலை தெரியேகம்ப வாணர் நன்னாட்டில் வளர்
சேலாகக் கண்கள் படைத்த பெண்ணேநின் றிகழும்வயி
றாலாகவு மல்குற் பாம்பாகவு மவ்வணை யின்மிசை
மாலாக யான்பள்ளி கொள்ள வந்தே னுன்றன் மாளிகைக்கே. (14)
அரவிந்த நண்பன் சதன்றம்பி மைத்துன னண்ணன் கையில்
வரமுந்தி யாயுதம் பூண்டவன் காணுமற் றங்கவனோ
பரமன்றி கிரியை யேந்திய மைந்தன் பகைவன் வெற்பை
உரமென் றெடுத்தவன் மாற்றான்றன் சேவக னொண்டொடியே. (15)

16, 17, 18

தொகு
சங்கரன் றேவி தமையன் மனைவி தனக்கு முன்னாம்
மங்கைய ரேறிய வாகனங் காணுமற் றங்கவளோ
கொங்கைக ளீரைந்துடை யவளாயிக் குவலயத்தில்
எங்குந் திரியும் வயிரவ மூர்த்தி யென்றே நினையே. (16)
மாத்தானைப் பித்தனை மாடேறுவானை மதகரித் தோல்
போர்த்தானை வேதப்பொடி பூசுவானை யிப்பூதலத் தென்
ஆத்தாளுட னெதிர்த் தம்பலத்தே யென்று மாடி நிற்குங்
ஊத்தாடிப் பையலுக்கோ மகளே மயல் கொண்டனையே. (17)
கானவர் தான்றினை கொய்தனரோ கண்ட கண்ணலவோ
தேனமர் வண்டினங்காள் கிள்ளைகாள் செழுங்கானை விட்டுப்
போனவன் றானல்லவோ நெடுங்கானிப் புனமல்லவோ
நானவன் றானல்லவோ சொல்ல வேண்டு நடுக் கண்டதே. (18)

19, 20, 21

தொகு
தாராளனெங் கடிரு நின்றைச் சேடன் சயிலத்தின் பால்
நீரார் முகிற்குழற் பெண் பேதையை விட்டுநீ பிரிந்தால்
சீராமனில்லை யமுதில்லை யஞ்சனைச் செல்வனில்லை
காரார் பொழில் வளர் காழிப் பிரானில்லை காப்பதற்கே. (19)
அம்பல வெவ்வள வவ்வள வேவிழி யார்ந்த கொவ்வைச்
செம்பள வெவ்வள வவ்வள வேயிதழ் சீர்கொள் வஞ்சிக்
கொம்பள வெவ்வள வவ்வள வேயிடை கூறெலுமிச்
சம்பள மெவ்வள வவ்வள வேதனந் தையலுக்கே. (20)
கச்சணி கண்டத்த ராரூர்த் தியாகர் நளின வெற்பில்
கச்சணியும் முலைமாதே யிதுவென்ன காரணமோ
அச்சுத னாமத் திரண்டா மெழுத்தி லரை யெழுத்தில்
வச்சிர பாணி மனையாள் பகைவந்து வாய்த்ததுவே. (21)

22, 23, 24

தொகு
போமே பொழுது வருமே மதியம் புரண்டெ னங்கம்
வேமே மதனன் சரந்தைக்கு மேதைத்த புண் வழியிற்
பூமேவு தென்றல் புகுமேயென் பெண்புத்தி போய்விடுமே
கோமே தகப்புயலே மழவா பள்ளி கொண்டவனே. (22)
பாலினு மின்சொற் குயிலினு மென்மொழிப் பாவை நல்லாண்
மேலினுங் காமன் சரந்தைக்கு மேவட வேங்கடம் விட்
டாலினும் வேலை நடுவினும் பாம்பினு மாத்துரந்துங்
கோலினுங் கண் வளர்வாய் மழவா பள்ளி கொண்டவனே. (23)
மெய்யினு நல்லவ ரீனம்பொறார் மயிர்வீழ் தொடக்கம்
செய்யினு மானக் கவரி யுய்யா சிற்றினக் கயவர்
வையினும் வாழ்வர் தகரையக் காதுமயிரு மொக்கக்
கொய்யினும் பின்செலுமே மழவா பள்ளி கொண்டவனே(24)

25, 26, 27

தொகு
மாலாக்கி யென்னைப் பெருவயதாக்கி யென்மார்பின் முலைப்
பாலாக்கி யங்கம் பசு நரம்பாக்கி யப்பாவையரை
மேலாக்கிச் சிக்கு விளக் கெண்ணெ யாக்கி யென்மேனி யெங்கும்
தோலாக்கவோ மகனே பிள்ளையாய் வந்து தோன்றினையே. (25)
சதிரா யிருந்த ரதிமாமி மன்மதன் சற்பனைசெய்
தெதிராளி யாயைங் கணை தூவ வானத் திருந்து கனல்
மதிவாரி வீச வினாவை மறந்து மதி மயங்கிப்
பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைங்கொடியே. (26)
அன்பட்ட திக்கெங்கும் போற்றுந் தென்கோட்டுக் கதிபதியாய்
பொன்பட்டஞ் சூடும் ரகுநாத பூபவிப் பூதலத்தே
நின்பட்டமே பட்டநீயே துரை மற்றிந் நீணிலத்தோர்
தன்பட்ட மென்பட்டந் தோலா லடிப்படுந் தம்பட்டமே. (27)

28, 29, 30

தொகு
சேமன் புதல்வன் செழுங்குன்ற வேலன் செழுங்கிரியில்
காமன் பகைவன் கரிமுத்து மாகினங் கைவலவா
பூமன் கணையு மதியு மிவ்வாடையும் பூசலிட
மாமன் றமையன் தகப்ப னென்றே வஞ்சி வாடுவளே. (28)
சூலேறிச் சங்க மடவார் குடையுந் துறைக் கொதுங்கி
வேலேறுங் கண்ணியர் கைக்குடநீர் புக்கு மீண்டு முழுச்
சாலேறி முத்தந்தனை யீனுந் தண்வயலூ ரனம்பால்
மாலேறு வான்பரி மாலேறி னானடி மாமயிலே. (29)
பாட்டுக்குப் பாத்திர னல்லோரைப் பாடிப்பதம் பெறலாம்
மோட்டுக் குலாமரைப் பாடிலென்னா முழத் துண்ட முண்டோ
வீட்டுக்குச் சோற்றுக் குண்டோ வெள்ளை வாய்க்கொரு வெற்றிலையோ
ஏட்டுக்குச் சேதங் கண்டாய் வெள்ளை நாவ லிருப்பவனே. (30)

31, 32, 33

தொகு
கெலிக்குஞ் சிங்கத்துக்கும் யானைக்கும் வெற்றிக் கெருடனுக்கும்
வலிக்குறு சிங்கி யரவுக்கு நண்டுக்கும் வன்கவிக்கும்
புலிக்குஞ் செம்மானுக்கு ஞாளிக்கு மூடர்க்கும் பூனைக்கும் வீட்
டெலிக்குஞ் சங்காத்த முண்டோ வெள்ளை நாவ லிருப்பவனே. (31)
கலங்காத வீரிய ரானாலும் போகின்ற காலம் வந்தால்
நலங்காமலே வெல்ல மாட்டுவரோ விந்த நானிலத்தில்
\லங்காணுங் கோட்டை மதிலேழ் தலைபத்துத் தானிருந்தும்
இலங்காபுரி நின்றதோ வெள்ளை நாவ லிருப்பவனே. (32)
எறிக்கு மதிச்சடை யண்ணா மலைய ரெழிற்கிரியில்
பறிக்கின்ற பூவை மிதிக்கப் பொறா ளந்தப் பாதத்தினால்
பொறிக்கண் பிசாசுக ணெற்களைத் தூவிப் பொரி பொரித்துக்
கொறிக்கின்ற பாலையி லெப்படிப் போயினள் கோமளமே. (33)

34, 35, 36

தொகு
திரைகட லோடித் திரவியந் தேடென்று செப்பு மௌவை
உரைபழு தன்றெனச் சோர்ந்தாள் கழுக்குன்றத் தோர் மடமான்
அரைபனி நீர்ச் சந்தனங் கொண்டு பொங்கிய ராற்றியபின்
இரைகடல் போய்வர வெத்தனை நாளென் றெழுந்தனளே. (34)
மேகம் பிறைசிலை வேல்குமிழ் வள்ளை வெண்முத்தந் தொண்டை
பூகம் பசுங்கணை தேனுமிழ் காந்தள் பொற்பாலிலை நூல்
நாகங் கதலி யலவன் வரானன் நளின முண்டு
மாகம் பொழிற்திரு தில்லையிலே யொரு வல்லியிலே. (35)
இளந் தத்தையே நல்லமு தத்தையே புசித்தென் கரத்தில்
வளர்ந் தத்தை யாது முணர்ந் திலையே மயலாகி மனந்
தளர்ந் தத்தையே யென்றிருவரங் கேசர்க்குச் சாற்றச் சொன்னால்
அளந் தத்தையே யளந்தாய் பின்னை யாது மளந்திலையே. (36)

37, 38, 39

தொகு
ஆயத் துறையிற் பிறந்து வந்தந்தணர் பால்குடித்து
மாயக் கண்வேசை யிடத்தே வளர்ந்து வண்ணா னொருநாள்
ஏயப் புலவரிடத் தெட்டுநாள் செட்டியே னென்றுபின்
போயக்க சாலை புகுந்தனள் காணந்த பொய்மகளே. (37)
பூச்சிலைக் கன்னற்கைச் சேஷா சலேந்த்ரன் பொருப்பிடத்தே
காய்ச்சிய பாலைக் குடிபோ வென்றே னந்தக் காரிகையும்
பேச்சி லெத்துக் கள்ளி பின்கை கைராமற்கு முன் சொன்னதாய்
வாய்ச்சு தென்றே நடந்தாள் பாலையான வனந்தனிலே. (38)
தோப்பிடு வாரில்லை தென்றல் வராமற் சுடுமதிக்குக்
காப்பிடு வாரில்லை காமன் வராமற் கருங் குயில்வாய்க்
காப்பிடு வாரில்லை தென்ன ரங்கேசர்க் கபயமென்று
கூங்பிடு வாரில்லையே வண்டுகா ளென்குறை சொல்லியே. (39)

40, 41, 42

தொகு
அணியார் கடுக்கை நறுந்தும்பை கங்கை யறுகுடனே
பணியார் கடாடவிக் கச்சாலை நாதர் பனிவரையில்
தணியாத மாமதப் பேய் பிடித்தாடு மித்தையலுக்கு
மணியாட்டினால் விடுமோ சொல்லு வீரிந்த மாநிலத்தே. (40)
பாதாதி கேசமுதலா யிவளைப் படைத்த மலர்
வேதா மருங்குல் வெளி வைப்பனோ விரி பூதலத்துள்
ஆதார மின்றி யிரண்டிளநீ ரந்தர நிற்குமோ
ஏதாகிலுஞ் சற்றங் கில்லா திராதிடை யேந்திழைக்கே. (41)
குணமிருதாலுங் குலமிருந்தாலுங் கொழுந் தமிழின்
மணமிருந்தாலு மதியிருந்தாலும் வழுத்திடுவங்
கணமிருந்தாலு மொர்காசும் பெறாது சிங்கா ரவரைப்
பணமிருந்தா லவர்க் கெல்லாரு மஞ்சலி பண்ணுவரே. (42)

43, 44, 45

தொகு
உரகத்திலே கிடப்பான் சக்ரபாணி யுயர்ந்த கும்ப
கரகத்திலே கிடப்பான் குறுமாமுனி கன்னியர்கள்
விரகத்திலே கிடப்பான் காமராஜன் மிகுந்தவெழு
நரகத்திலே கிடப்பான் கொழுமூர் முத்து நாகப்பனே. (43)
சேய்க்கறி யுண்ட சிவன்மே லன்பற்றவன் சீசியவன்
வாய்க்கறி யாதவிடக் கானது மில்லை மாக்கறியுங்
காய்க்கறி யெனபதும் வேண்டான் சம்பாரங் கனக்க விட்ட
நாய்க்கறியும் புசிப்பான் கொழுமூர் முத்து நாகப்பனே. (44)
தருநிகரான கரன் செலவ நாளுந் தழைக்கும் புல்லூர்ப்
பெருவயனாடு தனிலெனைப் போலொர் பிடாரன் வந்தே
ஒருகுடங் கொண்டொரு பாம்பாட்டின னிவ்வுலகி லுள்ளே
இருகுடங் கொண்டரைப் பாம்பாட்டுவ தென்ன வேந்திழையே. (45)

46, 47, 48

தொகு
தேனாட்டு முல்லைத் தொடை ரகுநாதன் செழித்த புகழ்
பூநாட்டு மன்னர் தொழாம லிரார் மணிப் பூண்ணிந்த
வானாட் டரம்பையர் மண்ணாட் டரசர் மணத்தினுக்குக்
கானாட்டு வரிவன்கை நாட்டும் வேலினைக் கண்டு கொண்டே. (46)
ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திட நண்ணியசெவ்
வாயனல் தூவப் புதனம் புகாய நல் வியாழம் வர
மேயிரு வெள்ளிக் கலைசோர நானுன்னை மேவுதற்குத்
தாய்சனி யாகினளே ரகுநாத தளசிங்கமே. (47)
ஆடியநாகஞ் சரோரு கம்பானு நல்லம் புலியும்
சூரியநாதர் நயனமு மாலம்புஞ் சொற் பனுவல்
பாடிய பாலனுமாய் வந்ததால் வெண்பணில வயல்
கோடிய கோன் சிவந்தான் றிருமார்பிற் குளிர் தொங்கலே. (48)

49, 50, 51

தொகு
முருகார் முளரியு முள்ளியு முண்டக மூரியரம்
பொரிகா ரிரும்புங் கனகமும் பொன் பொறித் தாரகையும்
குருகாருங் கெண்டையு மீனெனல் போலென் குரிசிலுக்கு
வருகாதலே தந்த மங்கையு நானு மடந்தையரே. (49)
நரைகோட் டிளங்கன்று நன்வள நாடுநயந் தளிப்பன்
விரையூட்டு தார்ப்புயன் வெற்பீழ மன்ன னென்றே விரும்பிக்
கரையோட்ட மீதின் மரக்கலம் போட்டுன்னைக் காண வந்தால்
திரைபோட்டு நீயிருந்தாய் சிங்கபூப சிரோமணியே. (50)
வண்டோவிழி நுதல்வான் பிறையோ வல்குன் மான்குளம்போ
செண்டோமுலை நித்திலமோ நகையிடை சேர்துடிகற்
கண்டோமொழி குழல்காரோ முகங்கமலம் பவளத்
துண்டோயிதழ் கன்னித் தண்டோதுடை யிந்தத் தோகையர்க்கே. (51)

52, 53, 54

தொகு
வண்டுமது வுண்டிசை பாடுஞ் செந்திலின் மாரன்வரக்
கண்டு மிருந்தும் வடிவே லிரண்டுங் கருப்பு வில்லும்
குண்டு மருந்தும் பொற்றேருந் தராமட் குழலைத் தந்தால்
தண்டு கொண்டெப்படி வென்றிடலா மடி தார்கழலே. (52)
ஆலங்குடியர் சங்கஞ் செறியத் தரஞ் சக்கரப் பொன்
மேலம் பரத்தினர் நாக மெடுத்தவர் மேவிடையர்
சூலக்கண் மெய்யினர் பார்ப்பதி கோன் மதிதோய் கவினர்
பாலன்கைக் கோற்படைக் கூர்மைக் கண்ணா மிந்தப் பைந்தொடிக்கே. (53)
ஆமாவிகழ்ந் திடலாமா வினியுனை யன்றிவினை
போமாவுனை விட்டுப்போமா வெனக்கிந்தப் புனமைவர
லாமாபரா முகமாமா புயத்தி னணிகடப்பந்
தாமாகுக னெனுநாமா வயிற்கரச் சண்முகனே. (54)

பூமன்றிருக் கண்டியந்தகன் கோவல்புர மதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் கொறுக்கை நமன் கடவூரிந்தக் காசினிக்குள்
தேமன்னு கொன்றைச் சடையான் பொருதிட்ட சேவகமே.