கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/Q

Q

.qa : கியூஏ : ஓர் இணைய தள முகவரி குவாட்டார் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்

'.qc.ca : கியூசி.சிஏ: ஓர் இணைய தள முகவரி கனடா நாட்டின் கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.qt : .கியூடி : குவிக்டைம் வடிவாக்கம் கொண்ட பல்லூடகக் கோப்புகளை அடையாளம் காண உதவும் கோப்பின் வகைப்பெயர் (extension)

quadrature encoding : கால்வட்டக் குறியாக்கம் : சுட்டி நகரும் திசையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான வழிமுறை. சுட்டிப் பொறிகளில் அதிலுள்ள கோளத்தின் அசைவு செங்குத்து அல்லது கிடைமட்ட திசைகளின் அளவாய் மாற்றப்படுகிறது. இதை நிர்ணயிக்க இரண்டு சிறிய வட்டுகள் உள்ளன. இந்த வட்டுகள் உள்ளே பொருத்தப்பட்டுள்ள இரு உணரி களுடன் (sensors) உரசி, விலகு வதைக் கொண்டு செங்குத்து, கிடைமட்டத் திசைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இரண்டு உணரிகளில் எது முதலில் உரசப்படுகிறது என்பதைக் கொண்டு சுட்டியின் நகர்வு இடப் பக்கமா, வலப்பக்கமா என்பது தீர்மானிக்கப்படுகிறது.

quality assurance : தர உத்திரவாதம்; தர உறுதிச்சான்று : ஓர் உற்பத்திப் பொருள் அல்லது ஓர் அமைப்பு வழக்காற்றில் நிலைநிறுத்தப்பட்ட தர வரையறைகளைக் கொண்டுள்ளது என்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் செயல்முறைகள்.

queries : வினவல்கள்.

question mark : வினாக்குறி;கேள்விக் குறி : சில இயக்க முறைமைகளிலும் பயன்பாடுகளிலும் எந்தவொரு ஒற்றை எழுத்துக்காகவும் பயன்படுத்தப்படும் பதிலீட்டுக் குறியீடு. எம்எஸ் டாஸ், விண்டோஸ் என்டீ, ஓஎஸ்/2 ஆகிய இயக்க முறைமைகளில் பயன் படுத்தப்படும் இரண்டு பதிலீட்டுக் குறியீடுகளில் (wildcard characters) கேள்விக் குறியும் ஒன்று.

quicksort : வேகவரிசையாக்கம் : 1962-ல் சி.ஏ.ஆர். ஹோர்ஸ் என்பவர் அறிமுகப்படுத்திய திறன்மிக்க வரிசையாக்கத் தருக்கமுறை. பிரித்தாளுதல் (devide and conquer) என்கிற போர்த்தந்திர முறையை அடிப்படையாகக் கொண்டது. இம்முறைப்படி முதலில் வரிசையாக்கப்பட வேண்டிய பட்டியலில் மைய மதிப்பு தேடிக் கண்டறியப்படும். அச்சாணி (pivot) மதிப்பென இது அழைக்கப்படுகிறது. இவ்வுறுப்பை சிறிது சிறிதாக நகர்த்தி அதன் இயல்பான இடத்தில் இருத்த வேண்டும். அதன் பிறகு அச்சாணி மதிப்பைவிடக் குறைவான மதிப்புள்ள உறுப்புகள் ஒருபுறமாகவும், அதிக மதிப்புள்ள உறுப்புகள் மறுபுறத்திற்கும் தள்ளப்படுகின்றன. இப்போது இருபட்டியல்கள் பெறப்படுகின்றன. அடுத்த கட்டமாக, இரு பட்டியல்களிலும் தனித் தனியாக மேற்கண்ட முறை செயல் படுத்தப்படும். முழுப்பட்டியலும் வரிசையாக்கப்படும் வரை தொடர்ந்து பட்டியல் பிரிப்பு நடைபெறும்.

quit1: வெளியேறு1 : 1. எஃப்டீபி தகவல் தொடர்பில் பயன்படும் ஒரு கட்டளை. கிளையன் கணினி தன்னைத் துண்டித்து விடும்படி வழங்கன் கணினிக்கு அனுப்பும் கோரிக்கை. 2. பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில், தொகுப்பைவிட்டு வெளியேற உதவும் கட்டளை.

quit2: வெளியேறு2 : 1. முறைப்படியான வெளியேற்றம். 2. ஒரு மென்பொருள் பயன்பாட்டை இயல்பான முறையில் மூடிவிட்டு இயக்க முறைமையின் கட்டுப்பாட்டுக்குத் திரும்புதல்.