கண்ணாயிரத்தின் உலகம்/பதிப்புரை

பதிப்புரை

மிழக இலக்கிய வானிலே புதியதொரு தாரகை தோன்றி மின்னியது.

வாழ்வுக்கு உதவாத வரலாறுகளை - மனித வளர்ச்சிக்குப் பயன்பட முடியாத இதிகாச புராண நாடகங்களைப் பார்த்துப் பார்த்து, படித்துப் படித்துப் பழைய உணர்வையும் நல்ல பண்பையும் பிறரால் இழந்து தவித்துக் கொண்டிருந்த தமிழர்களை - இருண்ட பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த இயற்றமிழ் வல்லுநர்களை விழிப்புக்கும் வெளிச்சத்துக்கும் முதன் முதலாக அழைத்து வந்த பெருமை அந்தத் தாரகைக்கே உண்டு. சுடர்விட்டு மின்னிய அந்தத் தாரகை டாக்டர் அண்ணா அவர்களே ஆவார்கள்.

'பாண்டவர் வனவாசம்', 'இராமர் பட்டாபிஷேகம்' 'சந்திரமதி புலம்பல்', 'அர்ச்சுனன் தபசு', 'பவளக்கொடி', 'ஸ்ரீவள்ளித் திருமணம்' போன்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் கதைகளுக்கும் நாடகங்களுக்கும் முடிவுகட்ட முத்தான கதைகளையும் சத்தான நாடகங்களையும் சமுதாயச் சந்தைக்கு வழங்கி, மக்களின் மனத்தில் வேரோடிப் போயிருந்த அறியாமையைக் களைந்தெறிந்த பேராளர் அண்ணா அவர்களாவார்.

'கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப்போக' - இது போன்ற கருத்துக்களை இராமலிங்க அடிகளார் போன்ற சான்றோரால் சொல்லத்தான் முடிந்தது; அதனைச் செயல்படுத்த அவர்களால் ஏனோ முடியாமல் போய்விட்டது.

ஆனால் அந்தப் புனிதக் கருத்துக்களை நெஞ்சில் நிறுத்தி, இதிகாச புராணங்கள் போதிக்கும் போதனைகளில், சடங்கு, சம்பிரதாயங்களில் - சாதி, சமயங்களில் உடும்புப்பிடியாக இருந்துவந்த தமிழ்ச் சமுதாயத்தை, அறிவால்-ஆற்றலால்-அடக்கத்தால்-சகிப்புத் தன்மையால் நாளாவட்டத்தில் மாற்றியமைத்த நாயகர் டாக்டர் அண்ணா அவர்களாவார்.

இருட்டறையில் உறங்கிக் கிடந்த 'திருக்குறள்' போன்ற நவமணிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, மனித உள்ளங்களைப் பக்குவப்படுத்தும் மேனாட்டு மேதைகளின் கருத்துக்களை வரிக்கு வரி விளக்கிக் காட்டி, குடத்தினிலிட்ட விளக்காக இருந்த தமிழர்களைக் குன்றின்மேல் ஏற்றிய முதற்பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களையே சாரும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் பேராளர் அண்ணா அவர்கள் 'இடிதாங்கி' போல் விளங்கி நம்மை ரட்சித்தவர்.

மனிதனை தெய்வமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்களைப் பார்த்து, 'முதலில் அவனை மனிதனாக்க முயற்சி செய்யுங்கள்' என்று எழுதிய -பேசிய-செயல்பட்ட பேரறிஞர் அண்ணாவால் தமிழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் சுக வெளிச்சம்-சிந்தித்துப் பார்க்கச் செய்யும் மனப்பக்குவம் இன்று ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சுகவெளிச்ச சுகத்தை நாம் அனுபவிப்பதற்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த காலத்தில் பெற்ற தாக்குதலும் தண்டனையும் மேனாட்டறிஞர் டாக்டர் பினெல் பெற்ற சோதனை-வேதனைகளையும் மிஞ்சக் கூடியவை.

ஆம்!

ஒறுத்தாரைப் பொறுத்து, ஒப்பிலா உண்மையை நம்ப மறுத்த மக்களால் தொடக்க காலத்தில் வழங்கப்பட்ட இழிமொழிகளைத் தாங்கி, அவர்கள் பெறவேண்டிய - பெற்றுத் தீரவேண்டிய தெளிவுக்காக - சுய வெளிச்சத்துக்காக இரவையும் பகலாக்கிக் கொண்ட இதய தெய்வம் அண்ணாவின் ஆரம்ப கால புரட்சிமிக்க நாடகங்களை மட்டுமல்ல, அவர்கள் இந்தச் சமுதாயத்துக்கென்று இறக்கும் வரையிலும் வழங்கியுள்ள கதைகள், கட்டுரைகள், குறுநாவல்கள், தலையங்கங்கள் அனைத்தையும் நாங்கள் எங்கள் 'பூம்புகார் பிரசுரத்'தின் வாயிலாக வெளியிடுவதைப் பெரும் பேறாகக் கருதுகிறோம் என்பதை உங்களுக்குப் பூரிப்புடன் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதன் பிரதிபலிப்புதான் இந்நூல்!

எங்கள் ஆர்வத்தைப் பெருக்கிடும் வகையில் 'அண்ணா'வின் படைப்பு அனைத்துக்கும் மனப்பூர்வமாக உரிமை வழங்கியிருக்கும் திருமிகு. இராணி அண்ணாதுரை அவர்களுக்கு எங்கள் நன்றி உரியதாகுக.

பூம்புகார் பிரசுரத்தார்