கண் திறக்குமா/'காந்தி பவனம்'

7. 'காந்தி பவனம்'

லகம் எதையும் எப்பொழுதும் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருப்பதில்லை; அவ்வப்பொழுது அது மாறுதலை விரும்புகிறது. அந்த மாறுதலைச் சமயமறிந்து பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற விரும்பும் தன்னலக்காரன் எவனுக்கும் வெகு சீக்கிரத்தில் அது தலை வணங்கி விடுகிறது!

ஆனால் பாரிஸ்டர் பரந்தாமனின் மாறுதலுக்குக் காரணம் உலகமா, அல்லது அவரா என்று என்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை.

அடாடா! அவர் வசித்து வந்த அந்த 'விக்டோரியா பவ'னத்தைக் காணாமல் அன்று நான் தவித்த தவிப்பு இருக்கிறதே. ஆண்டவனுக்குக் கூட நிச்சயமாகத் தெரியாது - எனக்குத்தான் தெரியும்.

ஆம், பாரிஸ்டர் பரந்தாமன் மாறித்தான் போயிருந்தார். ஆனால் அவர் மட்டும் மாறியிருக்கவில்லை; அவருடைய வீட்டின் விலாசமும் மாறியிருந்தது.

அவருடைய பங்களாவின் முகப்புச் சுவரில் அன்று காணப்பட்ட 'விக்டோரியா பவனம்' என்ற கல்வெட்டை இன்று காணவில்லை. அதற்குப் பதிலாக, 'காந்தி பவனம்' என்ற கல்வெட்டு அங்கே காட்சியளித்தது.

'ஒருவேளை சாந்தி பவனமாயிருக்குமோ!' என்று நான் கண்ணைக் கசக்கி விட்டுக்கொண்டு பார்த்தேன்; கை விரலால் அந்த 'க' என்ற எழுத்தின் வரிவடிவத்தை ஒருமுறைக்கு இருமுறையாகத் தடவித் தடவிப் பார்த்தேன் - சந்தேகமேயில்லை ; 'காந்தி பவன'மேதான்!

இந்தச் சோதனையில் நான் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த நாய் ஒன்று, சில மனிதர்களைப் போல அடிமை வாழ்விலும் கடமையை மறக்காமல், 'வள், வள்' என்று குரைத்தது.

அடுத்த நிமிஷம் உடையில் பண்டித மோதிலால் நேருவை ஞாபகப்படுத்தும் ஒரு மனிதர் அங்கே தோன்றி, "யார் அது?" என்றார் அதட்டும் குரலில்.

அவர் வேறு யாருமல்ல; பாரிஸ்டர் பரந்தாமனே தான்!

நான் மௌனமாகச் சென்று அவருக்கு முன்னால் நின்றேன்.

கதர்க் குல்லாயைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு அவர் என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, "அட, நீயா! நீயேதானா!" என்றார்.

என்ன காரணத்தாலோ அப்பொழுதும் ஒன்றும் சொல்லத் தோன்றாமல், அவரையும் அவர் வீட்டு முற்றத்தின் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்த மகாத்மா காந்தியின் படத்தையும் நான் மாறி மாறிப் பார்த்த வண்ணம் விழித்துக்கொண்டிருந்தேன்.

"ஏன், இன்னும் சந்தேகம் தீரவில்லையா? - நீ பார்க்கும் பார்வையைப் பார்த்தால் என்னைக்கூடப் பாரிஸ்டர் பரந்தாமன் என்று ஒப்புக்கொள்ள மாட்டாய் போலிருக்கிறதே?" என்றார் அவர்.

அப்பொழுதும் நான் லேசாகச் சிரித்துவிட்டு மௌனம் சாதித்தேன்.

அவர் என் கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். 'இவரைப் போன்ற ஏகாதிபத்திய தாசர்களின் மனமாற்றத்துக்கு நம்மைப் போன்ற அற்பர்களின் தியாகமும் ஓரளவு காரணமாயிருந்திருக்குமல்லவா?' என்ற பெருமிதத்துடன் நான் அவரைத் தொடர்ந்து சென்றேன்.

உள்ளே சென்று உட்கார்ந்ததும் என்னையும் அறியாமல் என் கண்கள் யாரையோ தேடித்தேடியலைத்தன. இதைக் கவனித்த பரந்தாமனார் வேறு விதமாக நினைத்துக்கொண்டு, "என்ன செல்வம், உனக்கு எல்லாம் ஒரே ஆச்சரியமாகத் தோன்றுகிறதா?" என்று கேட்டார்.

"இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? ஏதோ என்னைப் போன்றவர்களின் அற்ப தியாகத்தினால் உங்களைப் போன்றவர்களின் மனமும் மாறியிருக்கிறதே. அதைப் பார்க்கப் பெருமையாய்த்தானிருக்கிறது!" என்றேன் நான்.

இவ்வாறு சொல்லி வாய் மூடுமுன் அவர் விழுந்து விழுந்து சிரிக்கலானார். எனக்கு ஒன்றும் புரியவில்லை . "என்ன, ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?" என்று பரபரப்புடன் கேட்டேன்.

"ஒன்றுமில்லை; உன்னை நீயே ஏமாற்றிக்கொள்கிறாயே, அதற்காகச் சிரித்தேன்!" என்றார் அவர்.

"என்ன. என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா?"

"ஆமாம். உன்னைப் போன்றவர்களின் அற்ப தியாகத்தினாலோ, அபார தியாகத்தினாலோ நாங்கள் மனம் மாறிவிடவில்லை என்பதை இங்கே நான் வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன்!" என்றார் அவர், 'பிரசங்கப் பாணி'யில்.

"சரி, அந்தப் பெருமையை என்னைப் போன்றவர்களுக்கு அளிக்க உங்களுக்கு இஷ்டமில்லையென்றால் விட்டுவிடுங்கள்!"

"இஷ்டமில்லாமலென்ன? - ஆனால் உன்னைப் போன்றவர்களுடைய தியாகத்துக்கும் என்னைப்போன்றவர்களுடைய மாறுதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்தால் தானே? - இது எங்களுடைய சொந்த விஷயம் சார், சொந்த விஷயம்!" "எது உங்களுடைய சொந்த விஷயம்?"

"நாங்கள் மனம் மாறியதுதான்!"

"அது எப்படி சொந்த விஷயமாகும்?"

"சொல்கிறேன் - இருந்தாற்போலிருந்து அந்த காந்தி கோர்ட்டு பகிஷ்காரம், அந்நியத் துணி பகிஷ்காரம், பள்ளிக்கூட பகிஷ்காரம் என்று ஆரம்பித்து விட்டான்..."

"அதனாலென்ன?"

"சரியாய்ப் போச்சு! - அந்நியத் துணி பகிஷ்காரம், பள்ளிக்கூடப் பகிஷ்காரம் இவற்றைப்பற்றி வேண்டுமானால் கவலைப்படாமலிருக்கலாம்; கோர்ட்டு பகிஷ் காரத்தைப் பற்றி என்னைப்போன்றவர்கள் கவலைப்படாமல் இருக்க முடியுமா?"

"அந்தக் கவலைதான் உங்களைக் காங்கிரஸ்காரனாக மாற்றிவிட்டதா, என்ன?"

"ஆமாம் தம்பி, ஆமாம் - இல்லையென்றால் இந்த வேஷத்தை நான் ஏன் போட்டிருக்கப் போகிறேன்?"

"இதனால் உங்களுடைய கவலை தீர்ந்துவிடுமா, என்ன?"

"அதெல்லாம் அவரவர்களுடைய திறமையைப் பொறுத்தது. இந்த மாதிரி வேஷத்தால் சிலர் தங்கள் கவலையைத் தீர்த்துக் கொள்வதுமுண்டு; கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்வதுமுண்டு!"

"சரி, உங்களுடைய உத்தேசம் என்ன?"

"கவலையைத் தீர்த்துக்கொள்ளும் உத்தேசந்தான்!"

"அதற்கு நீங்கள் பழைய பாரிஸ்டராகவே இருந்திருக்கலாமே?"

"அது தெரியாதா, எனக்கு? - அந்தப் பாழும் தொழிலில் பணம் பண்ணுவதைத் தவிர வேறு என்னப்பா, இருக்கிறது?"

"உங்களைப் போன்றவர்களுக்குத்தான் அந்தப் பணத்தைத் தவிர வேறு ஒன்றுமே வேண்டியதில்லையே?"

"உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான்! - என்னைப் போன்றவர்களுக்கும் எல்லாவற்றிலும் ஆசையுண்டு ஐயா, ஆசையுண்டு, ஆனால் அதற்காக எந்தவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்கத்தான் நாங்கள் தயாராயிருப்ப தில்லை!"

"சரி, இந்த நாட்டு மக்கள் அனைவரும் உங்களைப் போலவே சகல சௌகரியங்களுடனும் வாழ வேண்டுமென்றாவது நீங்கள் விரும்புகிறீர்களல்லவா?"

"மன்னிக்க வேண்டும்; அவ்வளவு தூரம் என் புத்தி இன்னும் கெட்டுப் போகவில்லை - எல்லோரும் என்னைப் போலவே வாழ்வதென்று ஏற்பட்டுவிட்டால், அப்புறம் இந்த உலகத்தில் எங்களை யார் மதிப்பார்கள்? எங்கள் வீட்டைக் காக்க நாயைத் தவிர வேறு எவன் கிடைப்பான்? காரை வேண்டுமானால் நாங்களே ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்; ஓட்டிக்கொண்டும் செல்லலாம், ஆனால் அதிலிருந்து இறங்கக் கதவைத் திறந்து விடுவது யார்? கை கட்டி நிற்பது யார்? கழுவித் துடைப்பது யார்? ஏவிய வேலையைச் செய்வதற்கும், எச்சில் இலையை எடுத்துப் போடுவதற்கும் யாரைத் தேடுவது?"

"உங்களைப்போன்ற ஒரு சிலர் மதிப்பு, மரியாதையுடன் வாழவேண்டுமென்பதற்காக ஏழைகள் என்றும் ஏழைகளாகவே இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைப்பது என்ன நியாயம்?"

"நியாயமாவது, அநியாயமாவது! மனைவி தன்னை மதிக்க வேண்டுமென்று கணவன் எதிர்பார்க்கிறான்; மகன் தன்னை மதிக்க வேண்டுமென்று தகப்பன் எதிர்பார்க்கிறான்; தம்பி தன்னை மதிக்க வேண்டுமென்று அண்ணன் எதிர்பார்க்கிறான் - இதெல்லாம் நியாயமாயிருக்கும் போது எங்கள் கட்சி மட்டும் எப்படி நியாயமற்றதாயிருக்க முடியும்? - பரம்பரை பரம்பரையாக வளர்ந்து வந்திருக்கும் இந்த ‘நாகரீகத்தை ஒழிக்க உன்னைப்போல் எத்தனை பேர் கிளம்பினாலும் முடியாதப்பா, முடியாது. ஆனால் ‘எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னர்!’ என்ற வெறுங் கூச்சலை மட்டும் அதற்காக நாங்கள் கைவிட்டுவிட முடியாதுதான்!”

“அது ஏன் அப்படி?”

“இது என்ன கேள்வி? - அதுதானே என்னைப் போன்றவர்கள் பேரும் புகழும் பெறுவதற்குத் தாரக மந்திரமாயிருக்கிறது? - உண்மையான மதிப்பு; ஊரோடு மட்டுமின்றி உலகத்தோடும் ஒட்டிய மதிப்பு; ஒரு நாளும் அழியாத மதிப்பு; செத்தாலும் சாகாத மதிப்பு - யாராவது பெற வேண்டுமென்றால் அவர்களுக்கு அந்தக் கூச்சலை விட்டால் வேறு வழி? அதனால்தான் இந்த உடம்பில் உயிருள்ளவரை கட்சிக்காரர்களைக் கட்டிக் கொண்டு அழுது, அவர்களுக்காகத் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தி, கடைசியில் ஒருவருக்கும் தெரியாமல் செத்துப் போகும் அந்தப் பாரிஸ்டர் தொழிலுக்கு நான் முழுக்குப் போட்டுவிட்டேன்!”

“அப்படியானால் காந்திஜியின் கோர்ட்டுப் பகிஷ்காரத்தை விரும்பியோ, அதில் நாமும் கலந்துகொள்ள வேண்டியது நியாயம் என்று கருதியோ நீங்கள் தொழிலை விடவில்லையா?”

“உன்னிடம் நான் தான் உண்மையைச் சொல்கிறேனே, அந்த மனிதனின் திட்டங்கள் அனைத்தும் பரிபூரண வெற்றி அடைந்துவிடும் என்று நான் இன்றுகூட நினைக்கவில்லை. ஆனால் மக்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ஏதோ ஒரு சக்தி அவனுடைய பேச்சுக்குத் தற்சமயம் இருக்கிறது. அதன் மூலம் ஒருவேளை அவன் வெற்றி அடைந்தாலும் அடையலாம் - அதையெல்லாம் இப்போது நாம் ஏன் அலசிப் பார்க்க வேண்டும்? - என்னவோ, என்னைப்போன்றவர்கள் ‘அகில இந்தியக் கீர்த்தி’ அடைவதற்கு அவன் ஒரு குறுக்கு வழியைக் காட்டுகிறான்; அதை நான் பயன்படுத்திக் கொண்டு விட்டேன் - அவ்வளவுதான் விஷயம்!”

“அகில இந்தியக் கீர்த்தி அடைவதற்கு இதில் என்ன இருக்கிறது?”

“விஷயம் தெரியாத மனிதனாயிருக்கிறாயே? - இந்தா, இந்தப் பத்திரிகையைப் பார்!” என்று சொல்லி அங்கிருந்த ஒரு பத்திரிகையை எடுத்து எனக்கு முன்னால் விட்டெறிந்தார் பாரிஸ்டர். அந்தப் பத்திரிகையில் அவர் தேசநலனைக் கருதி, லட்சக்கணக்கில் வரும்படி வரும் வக்கீல் தொழிலைத் துச்சமெனக் கருதி விட்டது பற்றிய மகத்தான செய்தியும், அதற்காக ஆசிரியர் பெருமான் எழுதியிருந்த மாபெரும் தலையங்கமும் வெளியாகியிருந்தன. மேலெழுந்த வாரியாக அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த என்னை நோக்கி, “பார்த்தீர்களா, சில சமயம் நமக்கு நூற்றுக் கணக்கில்கூட வரும்படி வராவிட்டாலும் பத்திரிகையில் லட்சக்கணக்கில் வரும்படி வரும் அதிசயத்தை!” என்றார் பரந்தாமன்.

“பார்த்தேன், பார்த்தேன்!” என்றேன் நான்.

இந்தத் தலையங்கம் எழுதிய ஆசிரியர் இருக்கிறாரே, அவர் மறுநாள் என்னைப் பார்க்க வந்தார். ‘தங்களைப் பற்றித் தலையங்கம் எழுதியிருந்தேனே, பார்த்தீர்களா?’ என்று கேட்டார். ‘ஆஹா, பார்த்தேன்; பார்த்துப் பரவச மடைந்தேன்!’ என்று சொல்லி நான் அவரை அனுப்பி வைத்தேன்! அதற்குப் பிறகு இரண்டுநாள் கழித்துத் தம்முடைய பெண்ணுக்குக் கல்யாணம் என்று ‘அழைப்பிதழ்’ அனுப்பினார். நானும் சந்தர்ப்பத்தைக் கைவிடாமலும் நன்றியை மறவாமலும் ஆயிரம் ரூபாயில் ஒரு வெள்ளிக்குடம் வாங்கிக் கொண்டு போய் அவருடைய பெண்ணுக்கு ஒதி இட்டுவிட்டு வந்தேன் - எப்படி எங்கள் திட்டம்?”

“பிரமாதம், போங்கள்!”

“அப்படிச் சொல்லய்யா, அப்படிச் சொல்லு! - அதற்குப் பிறகு நான் ‘திலகர் குருகுலம்’ ஆரம்பித்தபோது, தம் பத்திரிகையில் அதைப் பற்றிய செய்திகளை அவர் பிரமாதப்படுத்திப் பிரசுரித்தார். என்னுடைய படத்தை வேறு பெரிய அளவில் போட்டு, ‘இந்திரனாக்கும், சந்திரனாக்கும்!’ என்றெல்லாம் எழுதி ஜமாய்த்தார்! - நீங்களுந்தான் போலீஸ் குண்டாந்தடியை ருசி பார்த்து, சிறை வாசனையை மூன்று வருட காலம் அனுபவித்து, தொழிற் பயிற்சியைக் கைவிட்டு, வருங்கால வாழ்விலும் மண்ணைப் போட்டுக்கொண்டு, இறந்த தாயையும் இறக்காத தங்கையையும் பிரிந்து விடுதலையாகி வந்திருக்கிறீர்கள் - என்ன பிரயோசனம்? - இன்று காங்கிரஸ்காரன் என்ற முறையில் எனக்கு இருக்கும் மதிப்பு உன்னைப் போன்றவர்களுக்கு இருக்கிறதா, இருக்க முடியுமா?”

“அது சரி, அதென்ன திலகர் குருகுலம்?”

“இதுகூடவா தெரியவில்லை? காந்திஜியின் பள்ளிக் கூடப் பகிஷ்காரத்தைப் பின்பற்றிச் சிலர் விதேசிக் கல்வி பயில்வதை விட்டுச் சுதேசிக் கல்வி பயில ஆரம்பித்தார்களல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தையும் அடியேன் கை நழுவ விடவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஏதாவது பலன் கிடைத்ததோ என்னவோ, எனக்கு வேண்டிய மட்டும் பலன் கிடைத்துவிட்டது. - அடாடா! அதை ஆரம்பித்து வைத்த எனக்கு ஆனானப்பட்ட மகாத்மாவிடமிருந்தும், இன்னும் மற்ற தலைவர்கள் பிரமுகர்களிடமிருந்தும், வந்து குவிந்த வாழ்த்துத் தந்திகளும் செய்திகளுந்தான் எத்தனை எத்தனை! - இத்தனைக்கும் அதனால் எனக்கு ஏதாவது நஷ்டமுண்டோ? கிடையவே கிடையாது; ஒருவிதத்தில் லாபம் என்றுகூடச் சொல்லலாம். ஒரு காரியத்தில் இறங்கினால் அப்படியல்லவா இறங்க வேண்டும்? - இது தெரியவில்லையே, உனக்கு?”

“எப்படித் தெரியும்? எல்லாரும் உங்களைப் போலவே ‘புத்திசாலிகளா’யிருந்துவிட முடியுமா?”

“சரி, என்னவோ சிறைக்குப் போகும் போதுதான் ஒருவருக்கும் தெரியாமல் போனாய்; வரும்போதாவது நாலுபேருக்குத் தெரிந்து வந்திருக்கக் கூடாதோ? எனக்கு மட்டும் நீ விடுதலையாகும் தேதியைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தால், என்னவெல்லாம் செய்திருப்பேன்? ‘அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்று மூன்று வருடகாலம் சிறை சென்ற வீரர் வருகிறார்: இரத்தம் சிந்தியும் சித்தம் கலங்காத தீரர் வருகிறார்!’ - என்றெல்லாம் சுவரொட்டி விளம்பரங்கள் செய்து, ஜனங்களை ஒரே பைத்தியங்களாக அடித்துவிட்டிருக்க மாட்டேனா? - அப்புறம் ஒரு பெருங் கூட்டத்துடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, தாங்க முடியாதபடி உனக்குப் பூமாலைகளையும் புகழ்மாலைகளையும் சூட்டி, வரவேற்றிருக்க மாட்டேனா?”

“நீங்கள் என்ன, ஜனங்களை ஆட்டு மந்தைகளாகவா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“இல்லாமல் என்னவாம்? அதற்காகத்தானே என்னுடைய மேலான ஆதரவைக் கொண்டு இந்த நகரிலே பல கிளைச்சங்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன? அவையெல்லாம் நான் சொன்னபடி கேட்காமல் வேறு என்ன செய்யும்? அப்படியே செய்தாலும் என்னுடைய பணம் இல்லாமல் அவை எப்படி உயிர் வாழும்? இவற்றைப் புரிந்துகொள்ளாமல் யாரோ ஒருவனைப் போல இப்படிச் சந்தடி செய்யாமல் வந்து எனக்கு முன்னால் நிற்கிறாயே, உன்னை என்ன செய்தால் தேவலை!”என்று சொல்லி நிறுத்தினார் அவர்.

எனக்குத் தலையை வலித்தது; ஒன்றும் புரியாமல் மூளை குழம்பி விட்டதுபோன்ற உணர்ச்சிக்கு நான் அப்போது ஆளானேன். நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் கையில் ‘ஸ்டெதஸ்கோப்’புடன் சாந்தினி உள்ளே நுழைந்தாள். என்னைக் கண்டதும் அவளுடைய கால்கள் மேலே செல்லவில்லை; கண்ணின் இமைகளும் அப்படி இப்படி அசையவில்லை - நின்றது நின்றபடி நின்றாள். அதற்குள் பரந்தாமனார் குறுக்கிட்டு, என்ன அம்மா, இந்தப் பேர் வழியை யார் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டார்.

அவருடைய கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் அவள் என்னை ஒரு கணம் உற்று நோக்கினாள்; மறுகணம் வியப்புடனும், விஷமத்தனத்துடனும் விரிந்த இதழ்களை அவள் ஏனோ குவித்துக்கொள்ள முயன்றாள்.

பரந்தாமனார் விடவில்லை: “என்ன, தெரியவே இல்லையா?” என்றார் மறுபடியும்.

“தெரியவில்லையே, அப்பா!” என்றாள் அவள் குறுநகையுடன்.

“இவன்தான் செல்வம்; மூன்று வருடங்களுக்கு முன்னால் என்னிடம்...”

“ஓஹோ, இப்பொழுது தெரிகிறது; சிறைக்குக்கூட...”

“ஆமாம் ஆமாம், அவனேதான்! - இன்று விடுதலையாகி வந்திருக்கிறான்!”

“அடபாவமே, இவருடைய தங்கைகூட இப்பொழுது இங்கே இல்லை போலிருக்கிறதே? - இரவு இவர் எங்கே தங்குவார்?” என்று கேட்டுவிட்டு, அப்பாவுக்குத் தெரியாமல் தன் பார்வையை அவள் என்மேல் செலுத்தினாள்.

அதற்குள், “அதனாலென்ன, இன்றிரவு இங்கே தங்கிவிட்டு நாளைக்கு வேண்டுமானால் அங்கே போனால் போச்சு!” என்றார் பரந்தாமன்.

“பாவம், எப்பொழுது சாப்பிட்டதோ என்னவோ? மணி எட்டு அடிக்கப் போகிறதே, முதலில் சாப்பாட்டைப் போட்டுவிட்டு அப்புறம் வேண்டுமானால் பேசக் கூடாதோ?” என்றாள் அவள்.

“இதைத்தான் பெண் உள்ளம் என்பது! - இத்தனை நேரம் நானும் உன்னுடன் பேசிக்கொண்டிருந்தேனே, இதுவரை நீ சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியவேயில்லை, பார்த்தாயா?” என்றார் பரந்தாமன். பதிலுக்குப் புன்னகை புரிந்துவிட்டு நான் பேசாமல் இருந்தேன்.

“சரி வாருங்கள் - சாப்பிடுவோம்!” என்றார் பரந்தாமன்.

“முதலில் ஸ்நானம்; பிறகுதான் சாப்பாடு!” என்றேன் நான்.

அதற்குப் பின் பரந்தாமனாருக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்கவில்லை சாந்தினி; எல்லாச் சிரமங்களையும் தானே ஏற்றுக் கொண்டாள். அதன் பயனாக அவர் தொணதொணப்பிலிருந்து ஒருவாறு தப்பி, ஸ்நானம், சாப்பாடு ஆகியவற்றையெல்லாம் முடித்துக் கொண்டேன். “சரி, காலையில் பார்ப்போம் - போய்ப் படுத்துக்கொள்!” என்று எனக்கெனத் தனி அறையொன்றைக் காட்டி விட்டு, “எங்கே அவளைக் காணோம்?” என்று தம் இளையாளைத் தேடிக் கொண்டு சென்றார் முதியவர்.

ன்றிரவும் எனக்குத் துக்கம் பிடிக்கவில்லை என்று சொல்லவாவேண்டும்? - மனமே ஒரு நிலையில் நிற்கவில்லை; அங்கேயும் இங்கேயுமாக அது அலைந்து கொண்டே இருந்தது. அத்துடன், என்றுமில்லாத அதிசயமாக அன்று உலகமே எனக்குப் புத்தம் புதிதாகத் தோன்றியது.

ஆம், சிறைக்குள்ளிருந்த போது நான் சிலரிடமிருந்து கேட்டறிந்த விஷயங்களும், அன்று மாலை பரந்தாமனார் வெளியிட்ட சில விவரங்களுந்தான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்.

அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து எண்ணிப் பார்க்கும்போது, “நாம் இதுவரை உலகமே இன்னதென்று தெரியாமல் இருந்து விட்டோமோ?” என்ற சந்தேகங்கூட எனக்கு எழுந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

இதற்கிடையே சித்ராவின் நினைவு வேறு - நாளைக்காவது தஞ்சைக்குப் போய் அவளைப் பார்க்க வேண்டாமா? - பார்க்கத்தான் வேண்டும் - ஆனால் அதற்குக் குறைந்த பட்சம் பத்து ரூபாய்களாவது வேண்டுமே, என்ன செய்வது?

பாரிஸ்டர் பரந்தாமனைக் கேட்கலாமென்றால் அதற்கு மனம் இடங் கொடுக்கவில்லை - சாந்தினி - அவளைக் கேட்டால் என்ன? - பின்னால் திருப்பிக் கொடுத்து விட்டால் போகிறது!

சீ, அவளையும்தான் எப்படி மனம் விட்டுக் கேட்பது? அவளாகவே நம் நிலைமையை உணர்ந்து ஏதாவது கொடுத்தால் நன்றாயிருக்கும் - அப்படியும் நடக்குமா?

என்ன இருந்தாலும் படித்த பெண் - ஏன் நடக்காது? அதுசரி, நாம் ஏன் இந்த நிலைக்கு வந்தோம்? - ரொம்ப அழகுதான்! - அதைப்பற்றி இப்போது யோசித்து என்ன பயன்?

இப்படியாக என்னவெல்லாமோ எண்ணியெண்ணி நான் ஏங்கிக்கொண்டிருந்தபோது, ‘கிலிங், கிலிங்’ என்ற வளையலொலி என் காதில் விழுந்தது; திரும்பிப் பார்த்தேன் - சாளரத்தின் வழியாக ஒரு கடிதம் வந்து என் அறைக்குள் விழுந்தது; வியப்புடன் அதை எடுத்துப் பிரித்துப்படித்தேன்:

அன்புடையீர்,

நாளை மாலை நாலு மணிக்கு என்னை ஜெனரல் ஆஸ்பத்திரி வாயிலண்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவும். அதற்கு முன்னரே அவசியமானால் ‘தஞ்சைக்குச் சென்று வருகிறேன்’ என்று என் தகப்பனாரிடம் விடை பெற்றுக் கொள்ளவும் - மற்றவை நேரில்.

என்றுமுங்கள்,
சாந்தினி.

இந்தக் கடிதத்தைப் படித்ததும் எனக்கு அப்போது ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியை நான் எப்படி எழுத்தில் விவரிப்பேன்?