கண் திறக்குமா/நாளைக்கு விடுதலை
6. நாளைக்கு விடுதலை
தங்களைத் தாங்களே' இல்லை’ என்று சொல்லிக் கொள்ளும் வேதாந்திகள், தங்கள் உடலை மட்டும் சிறைச் சாலையாகக் கருதுவதில்லை, உலகத்தையே சிறைச் சாலையாகக் கருதுகிறார்கள். அவர்களைப்போலவே தேசபக்தர்களிலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சிறைச்சாலையை மட்டும் சிறைச்சாலையாகக் தில்லையாம்; தேசத்தையே சிறைச்சாலையாகக் கருதுவார்களாம். அன்னிய ஆதிக்கத்திலிருந்து என்று தேசம் விடுதலை யடைகிறதோ, அன்றுதான் அவர்களுக்கும் உண்மையான விடுதலையாம்!
அத்தகைய தேசபக்தர்கள் வேண்டுமானால், 'நாளைக்கு விடுதலை!' என்று தெரிந்தாலும் எத்தகைய உணர்ச்சிக்கும் ஆளாகாமல் இருந்திருக்கலாம்; அல்லது ஆளாகாமல் இருந்ததாகச் சொல்லிக்கொள்ளலாம். அடியேன் அவ்வாறு சொல்லிக்கொள்வதற்கில்லை. ஏனெனில், 'நாளைக்கு விடுதலை!' என்று அறிந்ததும் அதற்கு முதல் நாளிலிருந்தே நான் முற்றிலும் மாறிவிட்டேன். அத்தனை நாளும் என்னைப் பீடித்திருந்த சோர்வு அன்று முதல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக என்றுமில்லாத சுறுசுறுப்பு என்னை வந்து பற்றிக் கொண்டது. உண்மையில் அன்று நான் ஆகாய வீதியில் வட்டமிட்டுப் பறக்கவில்லையென்றாலும், தரையில் நடப்பது போன்ற உணர்ச்சியே எனக்கு இருக்கவில்லை.
மூன்று வருடகாலம் சிறைவாசம் செய்தது தாய் நாட்டின் விடுதலைக்காக. ஆனால் தாய்நாட்டுக்கா இப்போது விடுதலை கிடைத்தது? - இல்லை; தாயாருக்குத் தான் விடுதலை கிடைத்துவிட்டது!
தாயைப் பிரிந்த சித்ரா என்ன ஆகியிருப்பாள்? கனவில் கண்டபடி மாமா அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போயிருப்பாரா? அதற்குச் சித்ரா சம்மதித்திருப்பாளா?
நாளை விடுதலையடைந்ததும் எங்கே செல்வது? - தஞ்சைக்கா, சென்னைக்கா?
எது எப்படியிருந்தாலும் முதலில் நாம் சென்னைக்குத் தான் செல்ல வேண்டும். அங்கே சித்ராவைப் பார்க்க முடியாவிட்டாலும், சாந்தினியையாவது பார்க்கலாமல்லவா?
ஒருவேளை அவளும் கல்யாணம் கில்யாணம் செய்து கொண்டு, புக்ககம் கிக்ககம் போய் விட்டிருப்பாளோ, என்னமோ!
சீசீ, அப்படியெல்லாம் ஒன்றும் நடந்திராது. அவ்வாறு நடந்து கொள்பவளாயிருந்தால், 'என்னை மறவாதீர்!' என்று அன்று ஏன் அவ்வளவு உருக்கமுடன் கேட்டுக் கொண்டிருக்கப் போகிறாள்? நம்முடைய தாய்க்குத் தெரியாமல், தங்கைக்குத் தெரியாமல் - ஏன், தன்னுடைய தந்தைக்குக் கூடத் தெரியாமல் அடிக்கொரு தரம் ஆஸ்பத்திரிக்கு வந்து நம்மை ஏன் அவ்வளவு அக்கறையுடன் கவனித்திருக்கப் போகிறாள்?
இம்மாதிரியான எண்ணப் போராட்டங்களிடையே அன்றிரவு முழுவதும் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததும் 'வார்டர்' வந்தான்; பிரிவுபசாரத்துடன் சிறைக் கதவுகளைத் திறந்தான்; விழுந்தடித்துக்கொண்டு வெளியே வந்தேன் - அடாடா! சிறை உலகத்துக்கும் வெளி உலகத்துக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? மண்ணிலும் விண்ணிலும், நீரிலும் காற்றிலுங்கூட அல்லவா நான் வித்தியாசத்தைக் கண்டேன்?
சென்னை வந்து சேர்ந்ததும் நேரே வீட்டைத் தேடி ஓடி வந்தேன் - வீடு பூட்டிக் கிடக்கவில்லை; திறந்துதான் இருந்தது.
ஆனால் வீட்டுக்குள் எனக்குத் தெரிந்த முகங்கள் எதுவும் இருக்கவில்லை ; எல்லாம் புத்தம் புது முகங்களாயிருந்தன.
ஒருகணம் அந்த வீட்டு வாயிலை உற்றுப் பார்த்தேனோ இல்லையோ, யாரோ ஓர் அம்மாள் உள்ளேயிருந்து ஓடோடியும் வந்து, 'இந்த வீட்டுக் கதவைச் சாத்தி வையுங்கோ, சாத்தி வையுங்கோன்னு ஆயிரந் தரம் முட்டிண்டாச்சு; யாராவது கேட்டாத்தானே? இப்போ வழியோட போற தடியன்களெல்லாம் இங்கே வந்து சித்த நின்னு, என்னத்தையோ முறைச்சு முறைச்சுப் பார்த்துத் தொலையறான்கள்!' என்று இரைந்துகொண்டே கதவைத் 'தடா'லென்று சாத்திவிட்டுச் சென்றாள்.
அவ்வளவுதான்; இனி இங்கு நிற்பதில் பிரயோசனமில்லை என்று நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
ஆனால், 'வேறு எங்கே செல்வது?' என்றுதான் எனக்குப் புரியவில்லை!
அந்த நகரிலேயே பிறந்து வளர்ந்தவனென்றாலும் எனக்கு அங்கே யாருடனும் அவ்வளவாகப் பழக்கம் கிடையாது. மேலும் சிறு வயதில் மிகவும் செல்வமாக வளர்க்கப்பட்டவனாதலால், எனக்கு யாருடனும் பழக வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. இதனால் நான்கு பேருடன் சேர்ந்து நன்மையோ, தீமையோ அடையும் பாக்கியமோ, அல்லது துர்ப்பாக்கியமோ எனக்கு அன்றுவரை கிட்டாமலே போய்விட்டது. இந்த அழகில் வளர்ந்ததற்கு நானே முழுவதும் பொறுப்பாளி என்றும் சொல்லிவிடுவதற்கில்லை; எனக்கு உலகம் இன்னதென்று தெரியும்வரை என்னை ஒரு பொம்மையாகவே பாவித்து வந்த என் பெற்றோரும் ஓரளவு பொறுப்பாளிகள்தாம்!
பாலுவோடுகூட நான் பள்ளிக்கூடத்தில் பழகியதோடு சரி - அவன் எங்கே இருக்கிறான், யாருடன் இருக்கிறான் என்பன போன்ற விவரங்கள் ஒன்றும் இன்று வரை தெரியாது - அப்படியே தெரிந்தாலும் இப்போது என்ன பயன்? - அவன் வெளியே இருக்கிறானோ, உள்ளே இருக்கிறானோ?
பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டுக்குப் போகலாம்; அப்படியே சாந்தினியையும் பார்க்கலாம். ஆனால், நம்முடைய பரிதாப நிலையைக் கண்டு அவர் மேலும் ஏதாவது பரிகாசம் செய்ய ஆரம்பித்துவிட்டால்?
என்ன இருந்தாலும் பெரிய மனிதர்; சந்தர்ப்பம் தெரியாமலா நடந்து கொள்வார்? - என்னவோ, யார் கண்டார்கள்? - ஆனானப்பட்ட மகாத்மா காந்தியையே வெளுத்துக் கட்டும் அவருக்கு நாம் எம்மாத்திரம்?
இப்படியெல்லாம் மனம் போனபடி எண்ணமிட்டுக் கொண்டிருந்த நான், "சாமி! எப்போ வந்தீங்க சாமி?" என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்; என் அருகே விசாலம் நின்றுகொண்டிருந்தாள்.
விதவையான அவள் எங்கள் வீட்டில் வேலைக்காரியாயிருந்தவள். ஆனால் அந்தச் சமயத்தில் அவள் எனக்கு வேலைக்காரியாகத் தோற்றமளிக்கவில்லை; என்னை வாழ்விக்க வந்த தேவ கன்னிகையாகத் தோற்றமளித்தாள்!
அளவற்ற ஆவலுடன் நான் அவளை வெறித்துப் பார்த்தேன்.
"என்ன சாமி, முளிக்கிறீங்க? என்னைத் தெரியலைங்களா?" என்று கேட்டாள் அவள்.
"தெரியாமலென்ன, விசாலம்தானே?"
"ஆமாம், சாமி! - ஐயோ, இப்படிக்கூட யாராச்சும் செய்வாங்களா? பெரிய எசமானியம்மா சாகிறவரையிலே உங்க பேரைச் சொல்லிச் சொல்லி அழுதுகிட்டிருந் தாங்களே!" என்று சொல்லிக்கொண்டே, அவள் முந்தானையால் தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டாள்.
நான் அவளுடைய பேச்சை மாற்ற எண்ணி, "இப்போது நீ எங்கே வேலை செய்கிறாய்?" என்று கேட்டேன்."நீங்க போயி என்னமோ படிச்சுக்கிட்டு இருந்தீங்களே, அந்த வக்கீல் ஐயா வீட்டிலே தான் வேலை செய்றேனுங்க!" என்றாள் அவள்.
வேறு யாராவது என் கோலத்தைப் பார்ப்பதற்கு முன்னால் சீக்கிரமாகப் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் "சரி, சௌக்கியமாயிருக்கிறாயோ, இல்லையோ?" என்றேன் நான்.
"உங்க புண்ணியத்திலே சௌக்கியமாத்தான் இருக்கேனுங்க! - ஆனா, அந்த வக்கீல் ஐயா இருக்காரே..." என்று மேலே ஏதோ சொல்வதற்கு வெட்கப்படுபவள் போல அவள் தன் உடம்பை இப்படியும் அப்படியுமாக நெளித்துக் கொண்டாள்.
எனக்குத் 'திக்'கென்றது. ஒரு வேளை....
"சீசீ, அப்படியொன்றும் இருக்காது' என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, "ம், அப்புறம்?" என்று அவளுடைய பேச்சை மீண்டும் ஆரம்பித்துக் கொடுத்தேன்.
"என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ, என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!ன்னு சொல்றாரு, சாமி" என்றாள் அவள்.
"இதென்ன வேடிக்கை! அவர் உன்னையா கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார்?"
"நீங்க ஒண்ணு! வேறே யாரையாச்சும் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றாரு, சாமின்னா!"
"ஏனாம்?"
"இன்னும் கொஞ்ச நாளிலே தாலியறுத்தவங்களெல்லாம் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களாம்; அவங்களைப்போல நானும் கல்யாணம் பண்ணிக்கணுமாம் - அது எப்படி சாமி, நியாயமாகும்? ஒருத்தனுக்குப் போட்ட முந்தானையை இன்னொருத்தனுக்கு எப்படி சாமி, போட முடியும்?"
எனக்குச் சிரிப்பு வந்தது, தன்னால் அந்த 'விதவா விவாக தர்ம'த்தை அனுஷ்டிக்க முடியாவிட்டாலும், பிறரையாவது அனுஷ்டிக்கும்படி 'வக்கீல் ஐயா' வற்புறுத்துகிறாரே என்று நினைத்துக்கொண்டேன்.
நான் சிரித்ததைக் கண்டு, "என்ன சாமி! நீங்க கூடச் சிரிக்கிறீங்களே?" என்றாள் அவள்.
"ஒன்றுமில்லை; உன் புருஷன் மீது நீ வைத்திருக்கும் பக்தியை நினைத்துக் கொண்டேன்!" என்றேன் நான்.
"இல்லாம எங்கே போகும், சாமி? செத்தாலும் அந்த மனுஷன் என் கண்ணை விட்டுத்தான் மறைஞ்சானே தவிர, மனசைவிட்டு இன்னும் மறையலையே? - அப்படியிருக்கிறப்போ, என் மனசிலே இன்னொருத்தனுக்கு நான் எப்படி இடங்கொடுக்க முடியும்?"
அவள் பேச்சில் நியாயம் இருந்தது. இருந்தாலும் அந்தச் சமயத்தில் அது எனக்குத் தலைவலியாயிருந்தது. "இவள் அந்த வக்கீல் ஐயாவின் தலையை உருட்டுவதற்குப் பதிலாக நம் தலையை உருட்டித் தொலைக்கிறாளே" என்று உள்ளுற எண்ணிக்கொண்டு, "அதனாலென்ன 'அப்படியே பண்ணிக்கொள்கிறேன்' என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்து விட்டால் போச்சு!" என்றேன் நான்.
"எல்லாம் சொல்லிப் பார்த்தேன் - அவர் கேட்டாத் தானே? - ஒரு நாளைப்போல எவனையாச்சும் கூட்டிக் கிட்டு வந்து, 'இவனைக் கட்டிக்கிறியா, இவனைக் கட்டிக்கிறியா?'ன்னு உசிரை வாங்குறாரு, சாமின்னா!" என்றாள் அவள் விடாமல்.
"கவலைப்படாதே; உனக்குத் தெரியாமல் உன் கழுத்தில் எவனாலும் தாலி கட்டிவிட முடியாது!" என்றேன் நான்."என்னமோ போங்க, சாமி! - அதாலே அவங்க வீட்டு வேலையை விட்டுட்டாக்கூடத் தேவலைன்னு எனக்குத் தோணுது!" என்றாள் அவள்.
"ஏன் விடவேண்டும்? - அவர் பிடிக்காவிட்டாலும் அவருடைய மகளை உனக்கு ரொம்பப் பிடித்திருக்குமே!" என்றேன் நான்.
அவ்வளவுதான் - அவள் ஆரம்பித்துவிட்டாள்:
"அந்த அம்மா தங்கம்னா தங்கமாச்சுதுங்களே! நீங்க அம்மாவையும் தங்கச்சியையும் தவியாய்த் தவிக்க விட்டுப்பிட்டு ஜெயிலுக்குப் போனீங்கன்னு கேட்டதும், அது நம்ம வீட்டுக்கு விழுந்தடிச்சுக்கிட்டு ஓடியாந்துச்சி. பெரிய எசமானிக்கும் சின்ன எசமானிக்கும் தன்னாலே ஆனமட்டும் தைரியம் சொல்லித் தேத்துச்சி. பெரியம்மா உசிரை விடுற சமயத்திலேகூட அது கிட்டவே இருந்திச்சி. அப்புறங்கூட அது தினந்தினம் சின்னம்மாகிட்ட வந்து என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கும் - அதை எல்லாம் நான் காது கொடுத்துக் கேட்டுக்கிறதில்லே - உங்க மாமா இங்கே வந்து இருந்திச்சே, அது உங்களுக்குத் தெரியுமில்லே? - அவருதான் நம்ம வீட்டை யாரோ ஒரு அய்யருக்கு விட்டுப்பிட்டுச் சின்னம்மாவைத் தன்னோடே கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு!"
"சரி, சின்னம்மா சௌக்கியத்தைப் பற்றி நீ வக்கீல் ஐயா மகளை விசாரிப்பதுண்டா?"
"விசாரிக்காமக்கூட இருப்பேனுங்களா? அந்த அம்மாவைப் பார்க்கிறப்போல்லாம், 'இன்னிக்குச் சின்னம்மா கிட்டேயிருந்து ஏதாச்சும் காயிதம் வந்ததுங்களா?"ன்னு கேட்பேன். அந்த அம்மாவும் சந்தோசத்தோடு, 'வந்தது, சௌக்கியம் தானாம்!'னு சொல்லுவாங்க. ஆனா, இப்போ என்னமோ தெரியலை - ரெண்டு வாரமா நான் அப்படிக் கேட்கிறப்போல்லாம் அந்த அம்மா மூஞ்சியிலே சந்தோசத்தைக் காணோம். வருத்தத்தோட, 'வந்தது'ன்னு மட்டும் சொல்லிக்கிட்டே அப்பாலே போயிடறாங்க!"
அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தை என்னை என்னவோ செய்தது. ஒருவேளை சித்ராவை அங்கே யாராவது கஷ்டப்படுத்துகிறார்களோ, என்னவோ என்று எண்ணி என் மனம் கலங்கியது. ஆனாலும் உடனே அவளைப் போய்ப் பார்க்கக் கூடிய நிலையில் நான் அப்போது இல்லை. இந்த நிலையில், 'மேலே அவளை என்ன கேட்பது, என்ன செய்வது?' என்று தெரியாமல் நான் விழித்துக் கொண்டிருந்தபோது, சாலையோரங்களிலிருந்த மின்சார விளக்குகளெல்லாம் 'திக்'கென்று எரிய ஆரம்பித்துவிட்டன. அதைக் கண்ட விசாலம், "இம்மா நேரமாயிடுச்சுங்களே, இனிமே நீங்க சின்னம்மாவைப் பார்க்கப் போக முடியுங்களா?" என்று கேட்டாள்.
"நாளைக்குத்தான் போகவேண்டும்!"
"அப்போ ராத்திரிக்கு எங்கே தங்குவீங்க? - எங்க வீட்டுக்கு வேணும்னா வர்றீங்களா?"
'பண்'பைக் கொல்லும் 'பண'மற்ற அவள் என்னைக் குறிப்பறிந்து அழைத்தது, இழந்த நம்பிக்கையை எனக்கு மீண்டும் ஊட்டுவதாயிருந்தது - "அது என்ன இழந்த நம்பிக்கை" என்கிறீர்களா! - "பண்பில் மிக்க தமிழ்நாடு இன்னும் பணத்தால் செத்துப் போகவில்லை!" என்னும் நம்பிக்கைதான் அது!
இருந்தாலும் அவள் 'வறுமை'யில் பங்கு கொள்ள வேண்டிய நான், ‘வாழ்'வில் பங்கு கொள்ள விரும்பவில்லை . "என்னால் உனக்கு ஏன் சிரமம்? - 'வக்கீல் ஐயா'வைப் பார்த்துவிட்டு வேண்டுமானால் வருகிறேன்!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.