கண் திறக்குமா/அரும்பு மலர்ந்தது!
3. அரும்பு மலர்ந்தது!
பாரிஸ்டர் பரந்தாமனாரின் செல்வப்பெண் சாந்தினி. வாழ்க்கையில் வேண்டுமானால் பெண்இனத்தில் நாம் எத்தனையோ விதமான அழகிகளைப் பார்க்கலாம். சிலரைப் பார்த்தால் கண்ணை மூடிக் கொள்ளலாம்போல் தோன்றும்; வேறு சிலரைப் பார்த்தால் கண்ணை மூடிக்கொள்ள வேண்டாம்போல் தோன்றும். ஆனால் கதைகளில் வரும் கதாநாயகிகள் மட்டும் பெரும்பாலும் அழகிகளா? இல்லை; மிக மிகப் பொல்லாத அழகிகள்!
பார்த்த மாத்திரத்தில் கதாநாயகனின் உடல், பொருள், ஆவி மூன்றையும் அவர்கள் அபகரித்துக் கொண்டு, அவனை அசரீரியாக்கி விடுவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதற்குப் பிறகும் அந்த அப்பாவிக் கதாநாயகன் உயிரோடு இருந்து, கதாநாயகியையும் காதலித்து, கடைசியில் அவளைக் கல்யாணமும் செய்து கொண்டு, கதையையும் சுபமாக முடித்து வைப்பான்!
நல்ல வேளையாகச் சாந்தினி அவ்வளவு பொல்லாத அழகியாயில்லை; சாதாரண அழகியாய்த் தானிருந்தாள். ஆனால் ஒருமுறை பார்த்தால் இன்னொரு முறையும் பார்க்கவேண்டும்போல் இருக்கும் அவள் தோற்றம். குரலின் இனிமையோ கேட்கக் கேட்க அலுக்காது; குணத்திலும் அப்படியொன்றும் குற்றம் சொல்வதற்கில்லை.
எனினும்; பரந்தாமனார் தம் பெண்ணிடம் உயிரையே வைத்துக்கொண்டிருந்தார் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் வீட்டிலும் வெளியிலுமாக உயிரோடு நடமாடிக் கொண்டிருந்தார்!
அவருடைய வீட்டில் சாந்தினிக்கு நேர் இளையவள் என்று சொல்லக்கூடிய இன்னொரு ஜீவனும் நடமாடிக்
கொண்டிருந்தது. அந்த ஜீவனின் முகத்தில் எப்பொழுதும் ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஏக்க பாவம் குடிகொண்டிருக்கும். அதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்று நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஆராய முற்படுவதுண்டு. ஆனால் நீண்ட நாட்கள் வரை அது எனக்கு விளங்காத புதிராகவே இருந்து வந்தது.
மேலும், அத்தகைய ஆராய்ச்சிகளில் இறங்குவதற்காகவா நான் அங்கு போயிருந்தேன்? தொழிலில் அனுபவம் பெறுவதற்காகவல்லவா?
பரந்தாமனார் பாரிஸ்டராயிருந்தாலும் மற்றவர்களைப் போல அவர் சட்டத்துக்கு அடிமையாகிவிடவில்லை; சட்டந்தான் அவருக்கு அடிமையாகவும், வசதி மிக்க வாழ்க்கைக்கு வழி கோலும் தொண்டனாகவும் இருந்து வந்தது. ஆகவே அவர் வெறும் சட்ட இயந்திரமாகி விடவில்லை; உயிரும் உணர்ச்சியுமுள்ள மனிதராகவே இருந்து வந்தார். சமூகப் புணருத்தாரணத்தில் அவருக்கிருந்த ஆர்வம் பிரசித்தமானது. பாரத சமுதாயத்திலுள்ள அநீதிகளையும் அக்கிரமங்களையும் பற்றி ஆவேசமாகப் பேசும்போது அவருடைய கண்களில் தீப்பொறி பறக்கும், கேட்பவர்களுக்கோ அந்தக் கணமே கையில் தீப்பந்தத்துடன் ஒடோடியும் சென்று அத்தகைய சமுதாயத்தை அடியோடு கொளுத்திச் சாம்பலாக்கி விட்டு வந்து விடுவோமா என்று தோன்றும். அதிலும் கைம்பெண்களின் துக்ககரமான வாழ்க்கையைப் பற்றி அவர் விவரிக்கும்போது, ஒரே கண்ணிர் மாரிதான்! ‘முதல் தாரத்தை இழந்த ஒவ்வொரு மடையனும் ஏன் இரண்டாந்தரமாக ஒவ்வொரு கைம்பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு சமூகத்தின் ஊழலை ஒழிக்கக் கூடாது?’ என்று உச்சஸ்தாயியில் இரைந்து கேட்கும்போது? அவர் தொண்டையிலுள்ள ஈரம் அவ்வளவும் வற்றிப்போகும். உடனே அருகிலிருப்பவர்கள் அத்தனை பேரும் கொரு சோடாக் குப்பியைத் திறந்து எடுத்துக் கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்து வருவார்கள் - வற்றிப்போன தொண்டையில் ஈரம் பாய்ச்சத்தான்!
அப்படிப்பட்டவர் காந்திஜியையும் காங்கிரஸ் மகாசபையையும் மட்டும் வெறுத்துப் பேசி வந்ததற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சமுதாயத்திலுள்ள ஊழலை ஒழிப்பதற்கு முதலில் வழி தேடாமல் நாட்டுக்கு விடுதலை கோருவது, அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது போலாகும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தகைய விடுதலை நீண்ட நாட்கள் நீடித்து நிற்க முடியாது என்பதும் அவருடைய அபிப்பிராயமாகும்.
இவ்வளவு தூரம் தீவிரவாதியாயிருந்த பரந்தாமனார், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதராயிருக்க முடியுமா? ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழக்கூடிய வகையில் தம் பெண்ணை வளர்த்து வந்தார். அதன் பயனாக சாந்தினி வைத்தியப் பரீட்சைக்குப் படித்து வந்தாள். கலாசாலைக்குப் போகும் நேரம் தவிர, பாக்கி நேரங்களில் கூட அவளைப் பார்ப்பது அரிது. ஆனால் அவளுக்கு நேர் இளையவளாகத் தோன்றும் அந்தப் பெண் மட்டும் ஏன் எப்பொழுது பார்த்தாலும் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள்? அவளுடைய முகத்தில் மட்டும் ஏன் அத்தகைய ஏக்க பாவம் எப்பொழுதும் குடிகொண்டிருக்கிறது?
இந்தக் கேள்விகள் எப்பொழுதும் என் உள்ளத்தில் எழுந்தவண்ணமாக இருந்தன. பாரிஸ்டரின் கருத்துப்படி, அந்தப்பெண் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகப் பழகக் கூடியவளாயிருந்தாலும் அதற்குக் காரணம் என்னவென்று அவளையே கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். அவளோ என்னைக் கண்ட மாத்திரத்தில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் தலையை உள்ளே இழுத்துக் கொள்பவளாயிருந்தாள்.
அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும் பரந்தாமனாரிடம் மிக்க அனுதாபம் உண்டாகும். ‘பாவம், அவர் எவ்வளவோ முற்போக்குடையவராயிருக்கிறார்; இந்தப்பெண் அவருக்கு நேர் விரோதமாகயிருக்கிறாளே!’ என்று எண்ணி வருந்துவேன்.
சில சமயம், கையில் அதிகாரம் இல்லாமலே சமூகத்தைச் சீர்திருத்திவிட முடியும் என்று சொல்லும் அவரால் தம் வீட்டிலுள்ளவர்களையே அவ்வாறு சீர்திருத்தமுடிய வில்லையே! என்று நினைக்கும் போது எனக்குச் சிரிப்பும் வருவதுண்டு.
இதைப்பற்றி அவரையே கேட்டுத் தெரிந்துகொண்டு விடலாமென்றாலும் அதற்கு வேண்டிய தைரியம் அப்போது என்னிடம் இல்லை. ‘அதெல்லாம் என் சொந்த விஷயம்’ என்று அவர் முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்லிவிட்டால் என்ன செய்வது?
இப்படியெல்லாம் நான் மனத்தைப் போட்டு உழற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
வழக்கம்போல் ஒருநாள் பாரிஸ்டர் வீட்டுக்குச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. வாசலில் அந்தப் பெண் மட்டும் நின்று கொண்டிருந்தாள். அவள் என்னைக் கண்டதும் உள்ளே சென்றுவிட்டாள்!
சாந்தினியும் அப்போது கலாசாலைக்குப் போயிருந்தாள் போலிருக்கிறது. நான் மெள்ள உள்ளே சென்று ஒரு முறை அங்குமிங்குமாகச் சுற்றிப் பார்த்த பிறகு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.
மறுநாள் சென்றபோது, ‘நேற்று எங்கே உன்னைக் காணோம்?” என்று கேட்டார் பரந்தாமன்.
“வந்திருந்தேனே, உங்களைத்தான் காணவில்லை!” என்றேன் நான்.
“எப்போது வந்திருந்தாய்?”
“காலையில்தான் வந்திருந்தேன்; வாசலில் நின்று கொண்டிருந்த உங்கள் பெண்ணைக் கூடப் பார்த்தேன்...”
“நிஜமாகவா! நான் அவளைக் கல்லூரிக்கு அனுப்பி விட்டுத்தானே வெளியே போனேன்?”
“மூத்த பெண்ணைப் பார்க்கவில்லை; இளைய பெண்ணைப் பார்த்தேன்!”
இதைக் கேட்டதும் பரந்தாமனாரின் முகத்தில் ஏனோ அசடு வழிந்தது. அவர் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவியாய்த் தவித்தார்.
எனக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. “என்ன, உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா?” என்று சம்பந்தமில்லாமல் கேட்டு வைத்தேன்.
பாவம், அவர் தம் எண் சாண் உடம்பையும் ஒருசாணாகக் குறுக்கிக்கொண்டு, “அவள்... அவள்...” என்று இழுத்தார்.
நான் ஏதோ ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டவனைப் போல அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“... அவள் என்... அவள் என் இளைய பெண் இல்லை... இ...ளை... யாள்...!” என்று ஒருவாறு அவர் கூறி முடித்தார்.
“அப்பாடி!” என்று நான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன்.
அந்த ஒரு நிமிடத்தில் ஒரு வருடம் சிறை வாசம் செய்து விடுதலையடைந்த உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.
என்னுடைய நிலைமை கொஞ்சம் சீரடைந்ததும் அவருடைய நிலைமையைச் சீர்படுத்த எண்ணி, “அதனாலென்ன, ஈவிரக்கமற்ற சமுதாயத்திற்குப் புத்தி கற்பிப்பதற்காக நீங்களே ஒரு பால்ய விதவையை இரண்டாந்தாரமாகக் கொண்டு வழி காட்டினீர்கள் போலிருக்கிறதே!” என்றேன்.
அவ்வளவுதான்; ‘கலீர்’ என்ற சிரிப்பொலி என் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தேன்; சாந்தினி எங்கள் பார்வையிலிருந்து நழுவிக் கொண்டிருந்தாள்.
அது மட்டுமா? நான் எதிர்ப்பார்த்ததற்கு விரோதமாகப் பரந்தாமனாரின் நிலைவேறு இன்னும் மோசமாயிற்று; “இல்லை, அப்படியெல்லாம் நான் ஒன்றும் செய்ய வில்லை!” என்று தடுமாறினார்.
நிலைமையை எப்படியாவது சமாளித்தே தீருவது என்ற உறுதியுடன் “ஓஹோ, அப்படியே இருந்தாலும் அதில் ஒன்றும் குற்றம் இல்லையே! உங்களுக்கோ வெள்ளத்தோடு போகும் சமுதாயத்தை எப்படியாவது கரைசேர்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. ஆனால் அதற்கேற்றாற்போல் எல்லாம் அமைய வேண்டாமா? சாந்தினி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் முதல் தாரம் தவறிய நீங்கள், உங்களுடைய கொள்கைப்படி இரண்டாந்தரமாக ஒரு பால்ய விதவையைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கலாம்; ஜாதிப் பிரஷ்டத்தையும், சமூக பகிஷ்காரத்தையும், துச்சமாகக் கருதியிருக்கலாம்; தனிப்பட்ட முறையில் அவற்றை எதிர்த்து நின்று போராடி வெற்றியோ, தோல்வியோ அடைந்திருக்கலாம். அதன் பலாபலனும் உங்களோடு போய்விடும்; வேறு யாரையும் பாதிக்காது. ஆனால் உங்கள் நிலைமைதான் வேறாக இருக்கிறதே! சாந்தினியின் பிற்கால வாழ்க்கையைப் பற்றி நீங்கள் சிந்தித்தாக வேண்டுமே! குடும்பத்தில் எவ்விதச் சொத்தையும், சொள்ளையும் இல்லாமல் இருந்தால்தானே அவளைப் ‘பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள்’ கல்யாணம் செய்துகொள்ள முன் வருவார்கள்? என்னதான் இருந்தாலும் பெற்ற பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்க எந்தத் தகப்பனின் மனமாவது துணியுமா? மேலும் சொந்த விஷயம், பாருங்கள்!.... அதனால்தான் உங்கள் கொள்கைக்கு விரோதமாக நீங்கள் ஓர் இளம் பெண்ணையே இரண்டாந் தாரமாகக் கொண்டீர்கள் போலிருக்கிறது! - இதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியாதா, என்ன? - விட்டுத் தள்ளுங்கள்!” என்று ஒரு போடு போட்டு வைத்தேன்.
என்னுடைய யுக்தி பலித்தது; அவருடைய முகமும் மலர்ந்தது. “என்ன இருந்தாலும் நீ புத்திசாலி! எப்படியோ என் உள்ளத்தில் இருந்தவற்றை யெல்லாம் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டாயே!” என்று என் முதுகில் தட்டிக் கொடுக்க வந்தார்.
அதிலிருந்து தப்பிப் பிழைத்து நான் வீடு வந்து சேர்ந்தேன்.
✽✽✽
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சாந்தினி என்னைப் பார்க்க நேரும்போதெல்லாம் ஒரு தினுசாகப் பார்ப்பதும் உள்ளுறச் சிரித்துக்கொள்ளுவதுமாக இருந்தாள். அவளிடம் காணப்பட்ட இந்த மாறுதல் என்னை என்னவோ செய்தது. இத்தனைக்கும் அன்று நான் ஏதோ அசட்டுத்தனமாகச் சொல்லி வைத்ததும், அதற்கு அவள் ‘கலீர்’ என்று சிரித்ததும் தவிர, எங்களுக்கிடையே அதற்கு முன் எந்த விதமான பேச்சு வார்த்தையும் கிடையாது.
பின் ஏன் இப்படி?
இந்தச் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காகவோ என்னவோ, அன்று ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.
சாந்தினி மட்டும் வீட்டில் இருந்த சமயம் அது. “அவர் இருக்கிறாரா?” என்று நான் கேட்டேன்.
“எவர்?” என்று திருப்பிக் கேட்டாள் அவள். நான் சளைக்கவில்லை; “அவர்தான்!” என்றேன்.
“எவர்தான்?” என்றாள் அவளும் சளைக்காமல்.
“உங்கள் அப்பா!”
அவள் குறும்புத் தனத்துடன் தன்னைச் சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு, “உங்கள் என்ன உங்கள்? இங்கே நான் ஒருத்தி மட்டுந்தானே இருக்கிறேன்?” என்றாள்.
“நீங்கள் மட்டுந்தான் இருக்கிறீர்களா? - சரி. நான் போய் வருகிறேன்!” என்று திரும்பினேன்.
“என் அப்பா வரும் வரை இங்கே நீங்கள் இருந்தால் என்னவாம்?”
“ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது...”
“ஆண் மகன் வந்தால் அப்படியே தழுவிக் கொண்டு விடுவாளாக்கும்!”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. “இல்லை...” என்று தயங்கினேன்.
“இல்லை என்ன இல்லை? இந்தப் பெண்களைப் பற்றி ஆண்கள் ஏன்தான் இம்படிக் கற்பனை செய்து கொண்டு விடுகிறார்களோ, எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு பலவீனர்களா; நாங்கள்? எங்களுக்கென்று மானம் மரியாதை, உயர்ந்த எண்ணங்கள், ஒழுக்கம் ஒன்றுமே கிடையாதா? இப்படியெல்லாம் நடந்துகொள்வதன் மூலம் அவற்றையெல்லாம் நீங்கள்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? அதிலும் உங்களைப் போன்ற புதுயுகத்தை ஸ்தாபிக்கப் போகிறவர்கள், சமூகத்தைச் சீர்திருத்திப் புரட்டப் போகிறவர்கள், பெண்களுக்குப் பரிபூரண விடுதலையளிக்கப் போகிறவர்களே இப்படி நடந்துகொண்டால், நாங்களெல்லாம் என்றைக்குத்தான் ஆண்களோடு சரிநிகர் சமானமாகப்பழகுவது?”
“அப்படியெல்லாம் நான் ஒன்றும் சொல்ல வில்லையே; உங்கள் அப்பாதானே சொல்கிறார்!”
“அவர் கைக்கு அதிகாரம் வருவதற்கு முன்பே புரட்டப் போகிறார்; நீங்கள் கைக்கு அதிகாரம் வந்தபிறகு புரட்டப் போகிறீர்கள்! - இவ்வளவுதானே உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்? - தமது உள்ளத்தில் இருந்தவற்றையெல்லாம் நீங்கள் எப்படியோ கண்டுபிடித்துச் சொல்லிவிட்டதாக அவர் பீற்றிக்கொண்டாரே, அன்றைக்கே உங்களுடைய லட்சணமும், அவருடைய லட்சணமும் இவ்வளவுதான் என்று தெரிந்துவிட்டதே!”
“என்ன தெரிந்துவிட்டது?”
“உண்மையிலேயே அவர் தம் கொள்கைப்படி ஒரு பால்ய விதவையை இரண்டாந்தாரமாகக் கொள்வதற்கு நானா தடையாய் இருந்தேன்? அவர் அவ்வாறு செய்து கொண்டிருந்தால் நீங்கள் நினைக்கிறபடி என்னுடைய வாழ்க்கை அஸ்தமித்தா போய்விடும்? எனக்கென்று முற்போக்குடைய வாலிபன் ஒருவன் இந்தப் பரந்த உலகத்தில் கிடைக்காமலா போயிருப்பான்? உங்களுடைய சுயநலத்திற்காக நீங்கள் செய்வதையெல்லாம் செய்துவிட்டுப் பழியைப் பிறர்மீது சுமத்தி விடுகிறீர்களே?”
“இதென்ன கூத்து! நானா உங்கள்மீது பழி சுமத்தினேன்?”
“சந்தேகமில்லாமல்! இல்லையென்றால், வயது வந்த பெண் ஒருத்தி உங்களுக்கு இருக்கும்போது நீங்கள் இரண்டாந்தாரம் கொள்ளாமலே இருந்திருக்கலாம் என்று நீங்கள் ஏன் அன்று அடித்துச் சொல்லியிருக்கக்கூடாது?”
“நான் என்ன செய்வேன்? அன்றைய நிலைமை அப்படியிருந்தது...”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை; உங்கள் உபதேசம் ஊருக்கு மட்டும் என்று சொல்லுங்கள்!” என்றாள் அவள்.
இந்தச் சமயத்தில் மோட்டார் ‘ஹாரன்’ சத்தம் கேட்டது. வருவது பரந்தாமன்தான் என்று அறிந்ததும் என் உள்ளத்தில் ஏதோ ஒருவிதமான அச்சம் உதித்தது ‘வீட்டில் யாரும் இல்லாத வேளையில் இவனுக்கு இங்கே என்ன வேலை?’ என்று அவர் நினைத்துக்கொண்டு விட்டால்? - நான் மடமடவென்று மாடிப் படிகளில் ஏறினேன்; சாந்தினி கலகலவென்று சிரித்தாள்.
மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்கு மேலிருக்கும். அதற்குப்பிறகு நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதைத் தவிர ஒருவார்த்தைகூடப் பேசி அறியோம். இந்த நிலையில்தான் அவள் என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். அன்றும் என்னுடன் பேசுவதற்கு ஆஸ்பத்திரியின் சட்ட திட்டங்கள் அவளை அனுமதிக்கவில்லை. பார்வையாளரின் நேரம் முடிந்ததும் ‘டக், டக்’ என்ற டாக்டர்களின் பூட்ஸ் ஒலியும், ‘களுக், களுக்’ என்ற நர்சுகளின் சிரிப்பொலியும் கலந்து ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. ஆகவே, “சாந்தினி, நீயா!” என்று நான் கேட்டதற்குப் பதிலாக, என்மேல் இரண்டு சொட்டுக் கண்ணீரைத்தான் அவளால் அன்று உதிர்க்க முடிந்தது!
அதற்குப் பின் மட்டும் என்ன? - அவள் வரும் போதெல்லாம் என் தாயாரும், தங்கையும் வந்து விடுவார்கள்; குறிப்பிட்ட நேரம் வரை அவர்களே என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் போன பிறகு அவள் வருவாள்; ஆவல் நிறைந்த கண்களுடன் என்னைப்பார்ப்பாள் - அதற்குள் மணி அடித்து விடும் - ஏமாற்றம், அதே ஏமாற்றம்! - திரும்பிச் சென்று விடுவாள்.
இப்படியாகப் பத்துப் பதினைந்து நாட்கள் ஓடி மறைந்தன. நானும் கோர்ட்டுக் கூண்டில் நின்று கணம் நீதிபதி அவர்கள் நான் செய்யாத குற்றத்துக்கு அளிக்கப் போகும் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குக் குணமானேன்!
அதற்கு முதல் நாள் அவள் வழக்கம்போல் வந்தாள். அவளிடம் விடை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், “போய் வருகிறேன்!” என்றேன் நான். “என்னை மறவாதீர்!” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அவள்.