கண் திறக்குமா/தண்டனை
4. தண்டனை
இது உலகத்தில் ‘நியாயம்’ என்று ஒன்று இருக்கிறதே, அதற்கும் பிரிட்டிஷாருக்கும் நெடு நாட்களாகவே நெருங்கிய சம்பந்தம் உண்டு. அந்த நியாயத்துக்கு உலகத்தில் எந்த மூலையிலாவது கொஞ்சம் பங்கம் நேர்ந்தாலும் சரி, பிரிட்டிஷாரை அங்கே காணலாம். அந்த விஷயத்தில் தங்களுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அங்கிருக்கும் நியாயத்தைக் கோருபவர்களின் தலையில் ஓயாமல் ஒழியாமல் குண்டுகளைப் போட்டுத் தீர்த்துக் கட்டும் வரை அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்!
இப்படியாக, பிரிட்டிஷாரை நம்பி நியாயமும், நியாயத்தை நம்பி பிரிட்டிஷாரும் உயிர் வாழவேண்டிய நிலைமை உலகத்தில் எப்படியோ ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் அக்கிரமம் செய்தாலும், அதை நியாயத்தின் பேராலேயே நாளது வரை செய்ய வேண்டியிருக்கிறது.
இந்தத் தர்மத்திலிருந்து எங்களைப் போன்றவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க முடியுமா, என்ன? அதிலும் நாங்கள் செய்த குற்றம் சாதாரணமானதா? ‘சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை’ என்று சொல்லிக்கொண்டு, அதற்காகக் கிளர்ச்சி செய்த மகத்தான குற்றத்தையல்லவா நாங்கள் செய்திருக்கிறோம்? ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு போய், மறுநாள் கோர்ட்டில் நிறுத்தி வைத்தார்கள். சத்தியத்தையன்றி வேறொன்றும் அறியாத போலீஸாரை எதிர்த்து எங்களில் யாரும் எதிர்வழக்காட விரும்பவில்லை; காங்கிரஸ் தலைவர்களும் எங்களை அதற்கு அனுமதிக்க வில்லை.
அடியேன்மீது அப்போது எத்தனை குற்றங்கள் சுமத்தப்பட்டன என்று இப்போது எனக்கு ஞாபகமில்லை. ஆனால் மூன்று வருடங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றது மட்டும் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.
மூன்று வருடங்கள், மொத்தம் ஆயிரத்துத் தொண்ணூற்றைந்து நாட்கள்!
அதுவரை அம்மாவைப் பார்க்க முடியாது; அருமைத் தங்கையையும் காண முடியாது. உற்ற நண்பர்கள், ஊரோடு பழகியவர்கள், இனி நம்மைச் சந்திக்க மாட்டார்கள்; அளவளாவ மாட்டார்கள். நம்மை நம்பியிருந்த தாயார், நமக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த தாயார்; நம்முடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி என்னவெல்லாமோ கனவு கண்டுகொண்டிருந்த தாயார், நம்முடைய பேச்சிலும் சிரிப்பிலும், அன்புக்குகந்த அப்பாவின் பிரிவை மறந்திருந்த தாயார் - இனி என்ன செய்வார்கள்? - நாம் திரும்பி வரும் வரை உயிரோடு இருப்பார்களா? - சித்ரா பாவம்; பெண்ணாய்ப் பிறந்தவள்; தந்தையற்றவள்; தன்னந்தனியாக வாழ்வதற்குத் தைரியமிருந்தாலும் நாக்கில் நரம்பின்றித் துற்றும் சமூகத்துக்கு முன்னால் அவ்வாறு வாழ வகையில்லாதவள்; கூனோ குருடோ, செவிடோ ஊமையோ, தனக்குப் பிடித்தவனோ பிடிக்காதவனோ - யாரோ ஓர் அனாமதேயத்தின் சுயநலத்துக்காகத் தன்னை அர்ப்பணம் செய்வதற்கென இந்தப் பாழும் உலகத்தில் பிறந்தவள். அதிலும் குறிப்பிட்ட வயதிற்குள் அந்தக் கதிக்கு ஆளாகி விட வேண்டுமென்று சமூகத்தினரால் நிர்ப்பந்திக்கப்படுகிறவள்; தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேடிக் கொள்வதற்குச் சுதந்திரமில்லாதவள்; தன்னுடைய நல்வாழ்வுக்குத் தன் அண்ணன் ஒருவனையே நம்பி இருந்தவள் - இனி என்ன செய்வாள்?
நாம் திரும்பி வரும் வரை அவள் தன்னந் தனியாக வாழ்வதற்குச் சமூகம் அனுமதிக்குமா? - இல்லை, ஓய்வு கிடைத்தபோதெல்லாம் அவளைப் பற்றி ஏதாவது விதவிதமான கதை கட்டி விடுவதையே தன் பொழுதுபோக்காகக் கொண்டிருக்குமா?
சாந்தினி - ஆம், சாந்தினி! - அந்தப் பெயரில் தான் எவ்வளவு அமைதி நிலவுகிறது! அந்த அமைதி, இனி அவளை நினைக்கும்போது நம் உள்ளத்தில் நிலவுமா? இல்லை, நம்மை நினைக்கும்போது அவள் உள்ளத்தில்தான் அத்தகைய அமைதியை எதிர்பார்க்க முடியுமா?
இப்படியெல்லாம் என் மனம் என்னவெல்லாமோ எண்ணியெண்ணி அலைபாய்ந்தது. இத்தனைக்கும் பொது வாழ்வில் ஈடுபட்டுப் பல பயங்கரமான கொடுமைகளுக்கு ஆளான எத்தனையோ தேச பக்தர்களைப் பற்றி நானும் உங்களைப்போலப் படித்துத்தான் இருந்தேன். அம்மாதிரி கொடுமைகளுக்கு ஆளாகும் போது கூட அவர்களுடைய முகம் மலர்ந்தே இருக்குமாம்!
இந்த இடத்தில் தயவு செய்து நீங்கள் என்னை மன்னித்துவிட வேண்டும். ஏனெனில், அடியேன் முகம் அவ்வாறு மலரவில்லை. காரணம், இயற்கை மனிதனான நான், செயற்கைத் தேவனாக முடியாமல் இருந்ததே!
அடிமை நாட்டு விடுதலையில் எனக்கு ஆர்வம் இருந்தாலும், அதில் வாழும் நாற்பது கோடி மக்களும் நல்வாழ்வு பெறவேண்டுமென்பதில் எனக்கு அக்கறை இருந்தாலும், அதற்காக என்னை ஈன்ற தாயையும், உடன் பிறந்த தங்கையையும், நடுவில் வந்து என் இதயத்தில் இடம் பெற்றுவிட்ட அந்த இன்முகத்தையும் என்னால் அறவே மறந்துவிட முடியவில்லை.
ஆனால் அவர்களுக்காக முன்னால் வைத்த காலைப் பின்னால் வைக்கவில்லை நான்; சென்றே விட்டேன் சிறைக்கு!
அங்கே எத்தனையோ விதவிதமான கைதிகளை என்னால் பார்க்க முடிந்தது. பேரும் புகழும் பெறுவதற்காக வேறு வழியின்றிச் சிறைக்கு வந்தவர்கள்; சிறைக்குள் இருந்தாலும் சொந்த பண பலத்தைக் கொண்டு சுக வாழ்வு வாழமுடியும் என்ற நம்பிக்கையுடன் வந்தவர்கள்; தங்கள் சொந்த நலனை உத்தேசித்துப் பிறரால் கழுத்தைப் பிடித்து உள்ளே தள்ளப்பட்டவர்கள்; தேர்தலின் போது வோட்டர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக வந்தவர்கள்; தாங்கள் அதுவரை செய்து வந்த அயோக்கியத்தனங்கள் அத்தனையும் மறைந்து போவதற்காக வந்தவர்கள்; சிறை சென்ற தேசத் தொண்டர் என்ற நற்சாட்சி பெறுவதற்காக வந்தவர்கள்; மத்தியில், சர்க்காருக்கும், காங்கிரசுக்குமிடையே ஏதாவது சமரசம் ஏற்பட்டு, அதன் பயனாகச் சீக்கிரமே விடுதலையடைந்து விடலாம் என்ற சபலத்துடன் வந்தவர்கள் - இவர்களுக்கு மத்தியிலே உண்மையாகத் தேச விடுதலையில் ஆர்வங்கொண்டு வந்திருந்த சில அப்பாவிகளும் அங்கங்கே இருக்கத்தான் செய்தார்கள்!
அவர்களில் யாரையும் எனக்கு முதலில் தெரிய வில்லை; என்னையும் அவர்களில் யாருக்கும் தெரிய வில்லை.
ஆஸ்பத்திரியில் சந்தித்த பாலுவையாவது அங்கே பார்க்க முடியுமென்று நான் எண்ணியிருந்தேன்; அவனையும் காணவில்லை.
எனவே தன்னந்தனியாகச் சிறைக்குள் நுழைந்த நான் கடைசிவரை தன்னந்தனியாகவே இருக்க நேரிடுமோ என்ற அச்சம் என்னைப் பிடுங்கித் தின்றது. ஆனால், அடுத்த நிமிஷமே அந்த அச்சத்திற்கு அர்த்தமில்லாமற் போய்விட்டது. காரணம், அதற்குள் எத்தனையோ பேர் வலுவில் வந்து என்னை அறிமுகம் செய்து கொண்டது தான்!
அதுமட்டுமல்ல; என்னதான் தலைகீழாக நின்றாலும் சிறைக்கு வெளியே அறிந்துகொள்ள முடியாத ஒருவருடைய மனோபாவத்தைச் சிறைக்குள்ளே வெகு எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது. அவரவர்களுடைய அந்தரங்க நோக்கங்கள், ஆசாபாசங்கள் எல்லாம் சிறை வாசத்தின் போது உள்ளது உள்ளபடியே வெளிப்பட்டன. அவற்றையெல்லாம் கேட்டபோது எனக்கு ஒரு பக்கம் அதிசயமாகவும், இன்னொருபக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது, ஏனெனில், சிறைக்கு வெளியே இருந்தபோது தேச பக்தர்கள் அனைவரையும் தெய்வப் பிறவிகள் என்று நானும் உங்களைப்போல் எண்ணிக்கொண்டிருந்தேன்!
ஒருநாள் ஒரு தேசபக்தருக்கு விபரீதமான சந்தேகம் ஒன்று ஏற்பட்டுவிட்டது. “ஏன் ஸார், இப்படி அடிக்கடி ஏதாவது ரகளை செய்து நாம் சிறைக்கு வருவதால் சுயராஜ்யம் வந்துவிடுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா!”
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “ஏன், நீங்கள் அப்படி நினைத்துத் தானே சிறைக்கு வந்திருக்கிறீர்கள்?” என்றேன்.
“அதெல்லாம் வேறு விஷயம் - இந்த விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் எப்படி?”
எனக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஏனெனில் அன்று வரை எனக்கென்று ஒரு அபிப்பிராயமும் இருக்கவில்லை!
இந்த நிலைமை எனக்கு மட்டும் அல்ல; இன்னும் எத்தனையோ பேருக்கு உண்டு என்பது பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. ஆகவே, அந்தச் சமயம் மென்று விழுங்கிக்கொண்டு, “எனக்கென்று ஒரு அபிப்பிராயமும் இல்லை, ஸார்! இப்படிக் கிளர்ச்சி செய்வதால் இந்த நாட்டுக்கு விடுதலை கிடைக்கக்கூடும் என்று தலைவர்கள் நம்புகிறார்கள். அவர்களை நம்பியும், என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் எழுந்த ஏதோ ஒரு விதமான உணர்ச்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமலுந் தான் சிறைக்கு வந்திருக்கிறேன்!” என்றேன்.
“இதனால் உங்களுக்கு ஏதாவது நன்மையுண்டா?”
“எனக்கு நன்மையுண்டோ இல்லையோ? தேசத்துக்கு நன்மையுண்டு என்று நான் நினைக்கிறேன்.”
“தேசத்துக்கு நன்மையுண்டானால் உங்களுக்கு நன்மை உண்டாகிவிடுமா?”
“எனக்கு மட்டுமென்ன, எல்லோருக்குந்தான் நன்மை யுண்டாகும்.”
அவர் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே, “உலகம் தெரியாத மனிதராயிருக்கிறீர்களே? தேசத்துக்கு நன்மையுண்டானால் தேசத் தலைவர்களுக்குத்தான் நன்மையுண்டாகும்; நீங்களும் நானும் எப்பொழுதும் இருப்பதுபோல் இருக்க வேண்டியதுதான்!” என்றார்.
“அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் சிறைக்கு வந்திருக்கிறீர்கள்!”
“எல்லாம் காரியத்தோடுதான்! துரதிர்ஷ்டவசமாக என் அப்பா தலைவராயிருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் நானும் பிறக்கும்போதே தலைவராகப் பிறந்திருப்பேன். இந்த நிலையில் எனக்கோ தலைவராக வேண்டுமென்று ஆசை. அதை நிறைவேற்றிக் கொள்வது எப்படி - இப்படி ஏதாவது செய்தால்தானே?”
“பைத்தியந்தான்! மக்களுக்குச் சேவை செய்யாமல் யாராவது தலைவராகிவிட முடியுமா?”
“எனக்கா பைத்தியம்? நன்றாய்ச் சொன்னீர்கள்; உங்களுக்குத்தான் பைத்தியம் பிடித்திருக்கிறது! கையில் பணமில்லாமல் என்ன சேவை வேண்டுமானாலும் செய்து பாருங்கள்; மக்கள் உங்களைக் கவனிக்கவே மாட்டார்கள். முதலில் அவர்களுக்கென்று ஏதோ சொந்த அபிப்பிராயம் உண்டென்று நீங்கள் நம்புவதே அறியாமையாகும். நான் சொல்கிறேன், அவர்களுக்குச் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. நாம் தான் நம்முடைய செளகரியத்திற்கேற்றபடி அவர்களை உபயோகித்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் பணந்தான் பிரதானம். அதில்லா விட்டால் இந்தமாதிரிக் காரியங்களில் நான் பிரவேசித்திருக்கவே மாட்டேன்!”
“ஆமாம், பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம்!”
“அதனால் ஆகாத காரியங்கூட ஒன்று உண்டோ! பணம் இருந்தால் ஏற்கெனவே தலைவர்களாயிருக்கும் இரண்டு பேரை ‘டீ, டின்னர்’ என்று சொல்லிச் சுலபமாகச் சிநேகம் செய்து கொண்டுவிடலாம்; அவர்களுடைய வாலைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கலாம்; சமயம் நேரும்போதெல்லாம் அவர்களை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கலாம்; அந்தப் புகழுக்கு அடிமையாகி அவர்களும் நம்மை நாளடைவில் புகழ ஆரம்பித்து விடுவார்கள் - எல்லாம் பரஸ்பர உதவிதானே? - இந்த விஷயத்தில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. ‘அவருக்குப் புகழில் விருப்பம் கிடையாது; அதை அவர் அறவே வெறுப்பவர்’ என்று அவர்கள் நம்மைப் பற்றிச் சொன்னாலும் பாதகமில்லை - அதிலும் புகழ் அந்தரங்கமாகப் பரவித்தானே கிடக்கிறது? - அப்புறம் நாலு பத்திரிகைக்காரர்களின் தயவை நாடவேண்டியது. சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவர்கள் நமக்கு ‘இந்திரன்’ ‘சந்திரன்’ என்ற புகழ் மாலைகளைச் சூட்டிக் கொண்டே இருக்க வேண்டியது - அப்படி அவர்கள் செய்யாமற் போனாலும் பாதகமில்லை; நாமே நாலு பத்திரிகைகளை ஆரம்பித்து நடத்தலாம்...”
“பொதுமக்கள் அவற்றை ஆதரிக்க வேண்டாமா?”
“ஆதரிக்காமல் என்ன ஐயா! நான்தான் சொல்லி விட்டேனே. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள் என்று. ஆனால் ஒன்று. உண்மையை மட்டும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் நம்மை அவர்கள் கொஞ்சங்கூட நம்பமாட்டார்கள். அவர்கள் போகிற போக்கிலேயே நாமும் போய்க் கொண்டிருந்தால் நமக்கு ஒரு கஷ்டமும் இல்லை; அதிலிருந்து அவர்களைத் திருப்ப முயன்றால்தான் ஆபத்து, ஏதோ இருக்கிறவரை விரும்பிய விதமே வாழ்ந்து, செத்துப் போனாலும் அமரனாயிருக்க வேண்டுமென்றால் அதற்கு நான் சொல்வதுதான் சிறந்த வழி!”
“உங்களைப் போன்றவர்கள் இருந்தால் தேசம் உருப்பட்ட மாதிரிதான்!”
இவ்வாறு சொன்னதும் அவர் என்னை அனுதாபத்துடன் பார்த்தார்; நான் அவரை ஆத்திரத்துடன் பார்த்தேன்.
அதற்குள் மாலை மணி ஆறு அடித்து விடவே, என்னை வழக்கம்போல் தனி கொட்டடியில் தள்ளிப் பூட்டிவிட்டார்கள். அவ்வளவுதான்; சகோதர தேசபக்தர்களுடன் அன்றைய தினம் நடத்திய காரசாரமான பேச்சு வார்த்தைகளெல்லாம் என் மனத்தை விட்டு அகன்றன. அதற்குப் பதிலாக அம்மாவும் தங்கையும், அவர்களுடன் சாந்தினியும் சேர்ந்து வந்து என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.