கண் திறக்குமா/ஒரு துளி விஷம்

12. ஒரு துளி விஷம்

செங்கமலத்தின் தாயார், பாலுவின் சித்தி என்னால் இதை நம்பவே முடியவில்லை. ஆனால் சம்பவம் கதையில் நடக்கவில்லையாதலால், நம்பத்தான் வேண்டியிருந்தது.

சித்தியின் அலங்கோலத்தைக் கண்டோ என்னவோ, பாலு ஒரு கணம் அசைவற்று நின்றுவிட்டான்.

தன்னையே வைத்த கண் வாங்காமல் அவன் பார்ப்பதைக் கண்ட சித்தி புன்னகையுடன், “என்னடா, செளக்கியமா?’ என்று கேட்கிறேன், பேசாமல் நிற்கிறாயே!” என்று மறுபடியும் கேட்டாள்.

அப்போதும் அவன் பதில் சொல்லவில்லை; நின்றது நின்றபடி நின்றான்.

செங்கமலத்தின் தாயார் என்னை நோக்கி, ‘இவன் சின்னஞ் சிறுவனாயிருந்த போது, அவர் இவனை அடிக்கடி எங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவார். சில சமயம் எங்கள் வீட்டிலேயே இவன் ஒரு வாரம், இரண்டு வாரங் கூடத் தங்கி விடுவான். அப்போதெல்லாம் இவனுக்கு நான் சூத்திரச்சி என்றும், இவனுடைய அப்பா பிராமணரென்றும் தெரியாது. ஆகவே, எந்தவிதமான வித்தியாசமும் இல்லாமல் என்னுடன் பழகுவான். செங்கமலம் இவனைப் பார்த்துவிட்டால் போதும்; ‘அண்ணா, அண்ணா!’ என்று வாய் ஓயாமல் அடித்துக் கொள்வாள். இவனும் அப்படித்தான்; எங்கள் வீட்டுக்கு வந்தால் செங்கமலத்தை விட்டு ஒரு நிமிஷங்கூடப் பிரிந்திருக்க மாட்டான் - அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இருக்க முடியுமா?’ என்றாள்.

‘ஏன் முடியாது, சித்தி? நிச்சயம் முடியும்?” என்றான் பாலு.

‘எப்படி முடியும்? ‘புனிதம் மிக்க உங்கள் மனுதர்மம்’ அதற்கு இடங் கொடுக்காதே!” என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

மனு தர்மமாவது, மண்ணாங்கட்டியாவது? என்னைப்பற்றி நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்; மனித தர்மத்தைத் தவிர வேறொரு தர்மத்தையும் நான் ஒப்புக் கொள்வதில்லை!’ என்றான் பாலு ஆவேசத்துடன்.

‘'நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கவில்லை; சட்டம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது- இந்த அழகான உலகத்தில் எந்தக் காலத்திலாவது மனுதர்ம ராஜன் என்று ஒரு புண்ணியவான் இருந்தானோ இல்லையோ, அவன் பேரால் ‘இந்து லா’ என்றொரு சட்டம் மட்டும் இன்றுவரை இருப்பது உண்மை. அந்தச் சனியன் பிடித்த சட்டம் இல்லாமலிருந்தால் உன் சித்திக்கு இந்தக் கதி வந்திருக்குமா?’ என்றேன் நான்.

“என்ன கதி? என் சித்தி ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே? கொஞ்சம் விவரமாய்ச் சொன்னால் தேவலை!”

‘சொல்கிறேன்; சொல்லாமலா போகப் போகிறேன்? - ஆனால் அதற்கு இது சமயமில்லை; நீ எங்கேயாவது அவசரமாகப் போகிறாயா?”

‘கொஞ்சம் அவசரந்தான்; அம்மாவுக்கு உடம்பு சரியில்லையென்று நேற்றுத் தந்தி வந்தது - அதற்காகப் போகிறேன்!”

‘'சரி, திரும்பி வந்ததும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் - போய் வரட்டுமா?’ என்று நான் திரும்பினேன்.

அவன் என் கையைப் பிடித்து நிறுத்தி, ‘ஆமாம் உனக்கு எப்படி இவர்களைத் தெரிந்தது?’ என்று கேட்டான்.

‘அதுதான் கதை, அந்தக் கதையைத்தான் இப்போது சொல்ல நேரமில்லை என்கிறேன்?’’

‘என்னைக் கண்டதும் செங்கமலம் ஏன் பஞ்சாய்ப் பறந்துவிட்டாள்? - எனக்குச் சொல்லாமலே கல்யாணம் செய்துகொண்டு, எனக்குத் தெரியாமலே ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டதற்காகவா?’ என்றான் அவன் சிரித்துக் கொண்டே.

‘வெட்கக்கேடுதான்! - எல்லாவற்றையும் உனக்குப் பின்னால் சொல்கிறேன்; போய் வா!’ என்று நான் நடையைக் கட்டினேன்.

செங்கமலத்தின் தாயார் என்னைத் தொடர்ந்தாள். இரண்டடிகள் எடுத்து வைத்த நான் என்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தேன்; பாலு நின்றது நின்றபடி நின்றுகொண்டிருந்தான்.

‘ஊரிலிருந்து திரும்பி வர எத்தனை நாட்களாகும்?’ என்றேன் நான்.

‘இரண்டு நாட்களுக்குள் திரும்பிவிடுவேன்!’ என்றான் அவன்.

‘அதெப்படி முடியும்? அங்கே அம்மாவின் உடம்பு மோசமாயிருந்தால்?”

‘இங்கே அழைத்துக்கொண்டு வந்துவிடுவேன்!’ ‘'சரி, வந்ததும் என்னைப் பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டில் வந்து பார்!’

‘சித்தியும் செங்கமலமும்கூட உன்னுடன் தானே இருப்பார்கள்?”

“ஆமாம்.

‘அப்படியானால் ஊரிலிருந்து திரும்பியதும் நான் அவசியம் வந்து பார்க்கிறேன்!” என்றான் அவன்.

அவனுடைய தலை மறைந்ததும் செங்கமலம் எங்கிருந்தோ ஓடோடியும் வந்து எங்களுடன் கலந்து கொண்டாள்.

நாங்கள் நால்வரும் பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டை அடைந்தபோது அங்கே யாரையும் காணவில்லை. வீட்டு வாசலில் நின்று '‘ஸார், ஸார்!’ என்று இரண்டு மூன்று முறை குரல் கொடுத்துப் பார்த்தேன்; பதில் இல்லை.

சிறிது நேரங்கழித்து மிஸஸ் பரந்தாமன் வந்து கதவிடுக்கில் நின்று, ‘அவர் இல்லையே!’ என்றாள்.

“எங்கே போயிருக்கிறார்?’ என்று கேட்கலாமென்று நிமிர்ந்தேன்; அதற்குள் அவள் உள்ளே போய் விட்டாள்!

மேலே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரத்தில் சாந்தினி வருவது தெரிந்தது. உடனே நான் ஒடோடியும் சென்று, ‘'சித்ரா எங்கே, சாந்தினி?” என்று பரபரப்புடன் கேட்டேன்.

‘'ஸ், கல்யாணமாவதற்கு முன்னால் நாலு பேருக்குத் தெரிந்து நீங்கள் என்னுடன் பேசக் கூடாது; இது இந்து தர்மம், தெரியுமா?’' என்று வாயைப் பொத்திக் காட்டி விட்டு, “நேரே உங்கள் வீட்டுக்குப் போங்கள்; எல்லாம் தெரியும்!'’ என்று சொல்லிவிட்டு, அவள் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

எங்கள் வீட்டிலா?... இவ்வளவு சீக்கிரம் வீடுமாற்ற அங்கே இருந்தவர்களால் எப்படி முடிந்தது? - எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பின்னால் எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் ‘விடுவிடு'வென்று நடந்தேன். என்னைப் பின்பற்றி நடப்பதற்குச் செங்கமலமும் அவளுடைய தாயாரும் அப்போது கொஞ்சம் திணறத்தான் வேண்டியிருந்தது.

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு சித்ராவைப் பார்க்கப் போகிறோம் - அவளுடைய உள்ளமும் உடலும் எப்படி எப்படியெல்லாம் மாறுதல் அடைந்திருக்குமோ? இந்த அருமை அண்ணனைக் கண்டதும் அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வருமோ, அல்லது ஆனந்தம் பொங்கிக் கொண்டு வருமோ? பெற்ற தாயார், உடன் பிறந்த சகோதரிகள் இவர்களைத் தவிர வேறு எந்தப் பெண்களைக் கண்டாலும் ‘மனைவி முறை' கொண்டாட விரும்பும் ஈனர்கள் நிறைந்த இந்த உலகிலே, தன்னந் தனியாக வாழ நேர்ந்த அவளுக்கு என்னென்ன சோதனைகளெல்லாம் ஏற்பட்டிருக்குமோ? பெற்ற தாயைப் பிரிந்து, பிறந்த வீட்டை மறந்து, பணச் செருக்கால் மனிதத் தன்மையையே இழந்துவிட்ட அந்தப் பாவிகளிடம் அடைக்கலம் புகுந்த அவள் எப்படிப்பட்ட கொடுமைகளுக்கெல்லாம் உள்ளாக நேர்ந்ததோ? - இப்படியெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.

சித்ரா என்னைப் பார்த்தாள்; பார்த்தது, பார்த்தபடி ஒரு கணம் அப்படியே நின்றாள்.

அவளுக்கு ஆனந்தம் பொங்கிக் கொண்டு வரவில்லை; ஆத்திரந்தான் பற்றிக்கொண்டு வந்தது. ஆனால் அந்த ஆத்திரத்தில் கோபத்தைக் காண முடியவில்லை; துக்கத்தைத்தான் காண முடிந்தது.

‘சித்ரா’ என்றேன் நான் தழுதழுத்த குரலில். ‘இன்னொரு முறை என்னை விட்டுப் பிரிய நேரும் போது எனக்கு நீங்கள் ஒரு சிறு உதவி செய்ய வேண்டும். அண்ணா!’ என்றாள் அவள் விம்மிக் கொண்டே.

‘'என்ன உதவி, சித்ரா - சொல்; உனக்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயார்!’

‘உங்களைவிடச் சாந்தினிக்கு அந்த உதவியைச் செய்வது சுலபம். அம்மாவுக்குப் பிறகு அம்மாவாக இருந்து எனக்காக இதுவரை எவ்வளவோ செய்திருக்கும் அவள், அதை மட்டும் ஏனோ செய்யமாட்டேன் என்கிறாள் - நீங்களாவது அவளிடம் சொல்லவேண்டும். ஏனெனில், உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் அவள் இப்போது செய்வாள் போலிருக்கிறது. அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. உங்களிடம் அவளுக்கு! - ஆனால் எனக்கு மட்டும் உங்களிடம் நம்பிக்கையில்லை அண்ணா, நம்பிக்கை இல்லவேயில்லை. அதனால்தான் அந்த உதவியை எனக்கு அவசியம் செய்யவேண்டுமென்று கேட்கிறேன்!”

‘ம், புண்பட்ட உள்ளம் புலம்பத்தான் செய்யும் - அதனாலென்ன, என்னிடம் உனக்கு ஏன் நம்பிக்கையில்லை? வாழ்க்கை எப்போதுமே சுகம் நிறைந்ததாயிருக்குமா? கஷ்டமும் கலந்ததாய்த்தானே இருக்கும்? - அதற்காக இப்படிச் சோர்வடைந்துவிடலாமா? - உனக்கு என்ன உதவி வேண்டுமோ, அதைச் சொல் - உடனே செய்கிறேன்!’

‘ரொம்ப சந்தோஷம், அண்ணா! இன்னொரு தடவை நீங்கள் சிறைக்குப் போக நேர்ந்தால் எங்கிருந்தாவது எனக்கு ஒரு துளி நல்ல விஷமாகப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் - என்ன, செய்வீர்களா?'’

நான் திடுக்கிட்டு, ‘'சித்ரா, என்ன இது! இவ்வளவு கோழையாக நீ இருப்பாய் என்று நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லையே?’ என்றேன்.

இந்தச் சமயத்தில், வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்தேன்; பாரிஸ்டர்  பரந்தாமன் காரிலிருந்து இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் செங்கமலத்தைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது. திரும்பிப் பார்த்தேன்; அவர்கள் ஒன்றும் தோன்றாமல் விழித்தது விழித்தபடி எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார்கள்.

“மன்னிக்க வேண்டும்; சித்ராவைப் பார்க்க வேண்டுமென்ற அவசரத்தில் உங்களை நான் மறந்தே விட்டேன் - வாருங்கள்!’' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் மாடியில் விட்டுவிட்டு, பரந்தாமனை வரவேற்க நான் தயாரானேன்.