கண் திறக்குமா/அவள் சொன்ன கதை

11. அவள் சொன்ன கதை


கூகுக்’ என்று கூவிவிட்டு, ரெயில் பெருமூச்சு விட்டுக் கொண்டே நகர்ந்தது, அத்துடன் சேர்ந்து நானும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன்.

அப்போது ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த என்னை நோக்கி, ‘'சாமி, சாமி!’ என்று கத்திக்கொண்டே, குடியானவன் ஒருவன் ஓடிவந்தான்.

‘யாரைக் கூப்பிடுகிறாய், என்னையா?’ என்று நான் அவனை நோக்கிக் கேட்டேன்.

“ஆமாங்க. மிராசுதார் ஐயா இந்தத் தந்தியை உங்கக்கிட்டே கொடுக்கச் சொன்னாருங்க!” என்று ஒரு கவரை அவன் என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

நடுங்கும் கைகளுடன் நான் அதைப் பிரித்துப் பார்த்தேன் - “கவலை வேண்டாம்; சித்ரா இங்குவந்து சேர்ந்து விட்டாள் - சாந்தினி’ என்று அந்தத் தந்தியில் கண்டிருந்தது.

‘விட்டது கவலை!’ என்று நான் திரும்பினேன்; செங்கமலத்தின் தாயார் பீதி நிறைந்த கண்களுடன் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஏன் இப்படிப் பயந்து சாகிறீர்கள்? பெட்டியில்தான் நம்மைத் தவிர வேறு யாரும் இல்லையே?’ என்றேன் நான்.

‘'வேறு யாருக்கும் பயப்படவில்லை; உங்களுக்குத் தான் பயப்படுகிறேன் - நீங்கள் வித்தியாசமாக நினைத்துக் கொள்ளக்கூடாது; ஊர் வாயை மூடவே இப்படிச் செய்கிறேன்!’ என்று சொல்லிக்கொண்டே, அவள் அத்தனை நேரமும் மடியில் ஒளித்து வைத்திருந்த தாலிக் கயிற்றை எடுத்தாள்; ஏற்கெனவே அதில் முடிந்து வைத்திருந்த மஞ்சளை ஒரு கணம் பார்த்தாள்; மறுகணம் என்ன காரணத்தாலோ கலங்கிய கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டு, தன்னையே சிவகுமாரனாகப் பாவித்துக்கொண்டு, செங்கமலத்தின் கழுத்தில் அவள் தாலியைக் கட்டினாள்!

அப்போது அந்த அபலையின் முகத்தில் பிரதிபலித்த வேதனையை என்னால் சகிக்க முடியவில்லை; கண்ணை மூடிக்கொண்டேன் - அடுத்த நிமிஷம் அவள் வாய்விட்டு அழுதது என் காதில் விழுந்தது - கண்ணைத் திறந்தேன்; செங்கமலத்தின் தாயார் நக்கென்று அவள் கன்னத்தில் ஒர் இடி இடித்து, ‘என் மானத்தை வாங்காதேடி, என்னைச் சந்தியில் இழுத்து வைக்காதேடி!’ என்றாள் ஆத்திரத்துடன்.

என்னால் பொறுக்க முடியவில்லை. ‘அம்மா, இவ்வளவு பெரிய உலகத்தில் நீங்கள் ஒருவர்தான் அந்த ஜீவனிடத்தில் அன்பு காட்டுவதற்கு இருக்கிறீர்கள்; நீங்களும் வெறுத்தால் அவள் என்ன செய்வாள்?’ என்றேன்.

 ‘ஏன், எமலோகத்துக்குப் போகிறது!’ என்றாள் அவள்.

‘போகிறேன் அம்மா, போகிறேன்; கட்டாயம் போகிறேன். இனிமேல் நான் இருந்துதான் என்ன பிரயோசனம்? இந்தக் குழந்தையை மட்டும் தயவு செய்து எடுத்துக்கொள்ளுங்கள்; உங்களால் முடியாவிட்டால் இதை வேறு யாரிடமாவது கொடுத்து வளர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். எத்தனையோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையே என்னை வளர்த்ததற்காக இன்னுங் கொஞ்ச நேரம் மட்டும் எனக்காகப் பொறுத்துக்கொள்ளுங்கள் - இருள் கவியட்டும்; பகவான் மீது பாரத்தைப் போட்டு விட்டு நான் ஒடும் ரயிலிலிருந்து கீழே குதித்துவிடுகிறேன். எதிர்பாராத விதமாக நேர்ந்த மரணம் என்று உலகம் சொல்லட்டும்; உங்களுடைய கவலையும் ஒருவாறு தீரட்டும்?’ என்று சொல்லிக்கொண்டே, செங்கமலம் குழந்தையைத் தாயாரிடம் நீட்டினாள்.

‘விழுகிறவள் குழந்தையோடுதான் விழுந்து தொலையேன்!” என்றாள் அவள்.

‘சும்மா இருங்கள், அம்மா! மனித இதயம் கண்ணாடியைப் போன்றது; உடைந்தால் ஒட்டவைக்க முடியாது!’ என்று நான் அவள் வாயை அடக்க முயன்றேன்.

‘நீங்கள் ஒண்ணு, நான் சும்மா இருந்தாலும் பார்ப்பவர்கள் சும்மா இருப்பார்களா?’

‘அதற்குத்தான் தாலியைக் கட்டித் தொலைத்து விட்டீர்களே?’’

‘என்னத்தைச் செய்வது, போங்கள்! - தாலி கட்டி விட்டால் மட்டும் போதுமா? அதைப் பார்த்த பிறகாவது அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சும்மாவா இருந்து விடப் போகிறார்கள்? - அவர்களுக்கு இந்தமாதிரி விஷயங்களில் என்னதான் அக்கறை இருக்குமோ, தெரியவில்லை ‘இவளுடைய புருஷன் எங்கே இருக்கிறான்? என்ன வேலை செய்கிறான்? என்ன சம்பாதிக்கிறான்? எப்போது வருவான்? நீங்கள் எப்படிச் சாப்பிடுகிறீர்கள்?’ என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்து தொலைப்பார்கள். நமக்கு வரும் ஆத்திரத்தில், ‘அவன் எங்கேயோ போய்த் தொலைந்தான்!” என்றால், ‘இவள் ஏதோ முறை தவறி நடந்திருக்கிறாள்; அதனால்தான் இவளை அவன் தள்ளி வைத்துவிட்டிருக்கிறான்?’ என்று தங்களுக்குள் எல்லாம் தெரிந்தவர்களைப்போலக் குசுகுசு'வெனப் பேசிக் கொள்வார்கள் - இதெல்லாம் காதில் விழும்போது நம் மனம் என்ன பாடு படும்? அதற்குத்தான் நான் நினைத்தேன்...’

‘'என்ன நினைத்தீர்கள்?’

‘நம்மை மோசம் செய்த உலகத்தை நாமும் மோசஞ் செய்தால் என்ன என்று நினைத்தேன்!”

அதற்குள் செங்கமலம் குறுக்கிட்டு, ‘தயவு செய்து என்னை மட்டும் அதில் சேர்த்துக் கொள்ளாதே, அம்மா!’ என்றாள்.

‘போடி, போ! இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லை? இப்போது கற்பைக் கட்டிக் காக்கப் பார்க்கும் நீ, அப்போது கட்டிக் காத்திருந்தால் என்ன?’ என்று அவளை அதட்டினாள் தாயார்.

‘என்ன விஷயம்? ஏன் இப்படி ஒருவர் மேல் ஒருவர் எரிந்து விழுகிறீர்கள்?’ என்றேன் நான்.

‘'சரி அவளை விட்டுவிடுவோம். என்னை மோசஞ் செய்த உலகத்தை நானும் மோசம் செய்யப் பார்த்தேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன் - நடுவில் நீங்கள் தான் குறுக்கிட்டு...’

‘என்ன. நானா குறுக்கிட்டேன்?'

 “ஆமாம், இவர்களுடைய அன்பில் விளைந்த அமுதம் - இல்லை; சனியன் இருக்கிறதே, அதைக் கொண்டு போய் அந்த நாசகாரன் வீட்டில் போட்டுவிட்டு வந்து விடுவதென்று நான் இருந்தேன். அதனால் என் உயிரே போவதாயிருந்தாலும் அதற்கு நான் துணிந்திருந்தேன். இதை அவன் தலையில் கட்டிவிட்டால் இவளைப் பிடித்த பீடை விட்ட மாதிரி. அப்புறம் உலகத்தார் முன்னிலையில் இவளும் அசல் கன்னிப் பெண்ணாகக் காட்சியளிக்கலாம்; கல்யாணமும் செய்து கொள்ளலாமல்லவா?”

‘அதற்கு நான்தான் தடையாயிருந்தேனாக்கும்?’ ‘ஒரேயடியாய் அப்படிச் சொல்லி விடுவதற்கும் இல்லை. முதலில் இந்தப் பத்தினித் தங்கம் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையே? - காதல் மலரைப் போன்றதாம்; அது ஒரே ஒரு முறைதான் மலருமாம் - இப்படியெல்லாம் என்னவெல்லாமோ சொல்லிக் கதைக்கிறாளே!”

‘'பலே, உங்கள் வாழ்க்கை இலக்கிய ரசனை மிக்கதா யிருக்கிறதே! செங்கமலம் என்ன படித்திருக்கிறாள்?’’ என்றேன் நான் என்னை மறந்து.

‘பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்புவரைதான் படித்தாள்; வீட்டில் கண்டதைப் படித்துப் பண்டிதையாகி விட்டாள்!’

‘மேற்கொண்டு இன்னுங் கொஞ்சம் படித்திருந்தால் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை அவள் பெற்றிருப்பாள் - ம், என்ன செய்வது?’’

‘அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன்; அதற்குள் அவள் காலை வாரி விட்டுவிட்டுப் போய் விட்டார்!’

‘அவர் போகும்போது உங்களுக்கென்று ஒன்றும் வைத்துவிட்டுப் போகவில்லையா!’

‘எல்லாம் வைத்திருந்தார்; எனக்குத்தான் ஒன்றும் கிடைக்கவில்லை!”

‘ஏன்?’’

“அது பெரிய கதை’

“அதைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்?”

‘பாழும் சட்டம் இருக்கிறதே, அது சிவகுமாரனைப் போல எங்களை மோசம் செய்துவிட்டது - ம், சட்டம் என்ன செய்யும்? - ஜாதி வெவ்வேறாக இருந்து விட்டதே அதற்குக் காரணம்!’

‘ஏன் நீங்கள் கலப்பு மணம் செய்து கொண்டீர்களா என்ன?’’

‘அந்தக் கூத்தை ஏன் கேட்கிறீர்கள்? - இவள் இப்போது கதைக்கிறாளே, என்னமோ காதல் கீதல் என்று - அந்த எழவெடுத்த காதலுக்கு நானும் எனது இளம் பிராயத்தில் பலியானேன். இவளுடைய அப்பா அப்போது என் அக்காளின் குழந்தைகளுக்கு' ட்யூஷன்” சொல்லிக் கொடுப்பதற்காக எங்கள் வீட்டிற்கு வருவார். அப்படி வரும்போதெல்லாம் அவர் என்னை ஒரு தினுசாகப் பார்ப்பார்; நானும் அவரை ஒரு தினுசாகப் பார்ப்பேன். இதிலிருந்து அந்தப் பாழாய்ப்போன காதல் உதயமாயிற்று - இதில் வேடிக்கை என்ன தெரியுமா? - அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருந்தது. ஆனால் அது காதல் கல்யாணமில்லையாம் - அவரேதான் சொன்னார், இந்த விஷயத்தை எனக்கு! - அப்புறம் எப்படியோ அவருக்கே தெரியாமல் அவருடைய உள்ளத்தை நான் திருடிக்கொண்டு விட்டேனாம்; அதைக் காணாமல் அவர் ‘தேடு, தேடு’ என்று தேடும்போது, அது என் உள்ளத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாம். ஆகவே, நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்டால்தான் ஆச்சு; இல்லையென்றால் பிராணனை விட்டுவிடுவேன்!” என்று அவர் என்னைப் பயமுறுத்தினார் - ஏனோ தெரியவில்லை, எனக்கும் அந்த மனிதரைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஆசையாயிருந்தது. ஆனால் இதில் ஒரு சங்கடம் - அவர் ஒரு ஜாதி, நான் ஒரு ஜாதி!’

‘சரிதான்; அவர் ஆண்ஜாதி, நீங்கள் பெண் ஜாதியாக்கும்?’

‘அதெல்லாம் ஒன்றுமில்லை - நான் சூத்திரச்சி, அவர் பிராமணர். இந்த வேறுபாட்டால் பெற்றோருக்குத் தெரியாமல் கோவிலுக்குச் சென்று, நாங்கள் முறைப்படிக் கல்யாணம் செய்துகொண்டோம். ஆரம்பத்தில் வாழ்க்கை என்னமோ ஆனந்தமாகத்தான் இருந்தது. அதிலும் சிவகுமாரனைப் போல இவள் பிறந்ததும் அவர் என்னைக் கைவிடவில்லை; கண்ணுங் கருத்துமாய்த்தான் எங்களைக் காத்து வந்தார். கடைசியில் பாழும் எமன் இன்னுங் கொஞ்ச நாட்கள் அவரை எங்களிடம் விட்டு வைக்காமல் கொண்டு போய்விட்டான்!” என்று சொல்லி, அவள் கண்களைக் கசக்கிக் கொண்டாள்.

‘சரி, அப்புறம் என்ன நடந்தது?”

‘இரண்டு பெண்டாட்டிக்காரர் அல்லவா? - இறந்த பிறகு அவருடைய சொத்தைப் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.”

“ம்?’”

‘இருவரும் கோர்ட்டுக்குப் போனோம்; வழக்கு வளர்ந்தது - தீர்ப்பு என்ன தெரியுமா? - பிராமணப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்ட சூத்திரன் இறந்து விட்டால் அவனுடைய சொத்தில் அந்தப் பெண்ணுக்குப்பங்கு பெற உரிமையுண்டாம்; சூத்திரப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்ட பிராமணன் இறந்துவிட்டால் அவனுடைய சொத்தில் பங்கு பெற அந்தப் பெண்ணுக்கு உரிமை இல்லையாம்!"

‘'ஒஹோ!

 “என்ன ஒஹோ! - உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் சட்டம் படித்தவர் என்று நான் கேள்விப்பட்டேனே!’ என்றாள் அவள்.

‘வகுப்பு வாதி’ என்ற வஞ்சகர்களின் பட்டத்துக்கு அஞ்சி நான் அந்தச் சமயம் ஒன்றும் சொல்லவில்லை; பேசாமல் இருந்தேன்.

‘அதனால் தான் இந்தக் கதிக்கு நாங்கள் ஆளானோம். இல்லையென்றால் உங்கள் அருமை மாமாவை நாங்கள் ஏன் தஞ்சமடைந்திருக்கப் போகிறோம்? அவர் வீட்டு வேலைக்காரிகளாயிருந்து இந்தக் கதிக்கு ஏன் ஆளாகியிருக்கப் போகிறோம்?’ என்று தன் கதையை முடித்தாள் அவள்.

அதற்குள், எங்களை ஏற்றிக்கொண்டு வந்த ரயில் சென்னை எழும்பூர் ஸ்டேஷனை அடைந்தது.

முதலில்: நான் இறங்கினேன் - என்ன அதிசயம், இது! எங்கிருந்தோ பாலு ஒடோடியும் வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கி, ‘ஹெல்லோ செல்வம், செளக்கியமா?” என்று விசாரித்தான்.

"ஹெல்லோ என்னப்பா ஹெல்லோ? நீங்கள்தான் இங்கிலீஷ்காரனை இந்தியாவிலிருந்து விரட்டப் போகிறீர்களோ?’ என்றேன் நான்.

அதற்குள் ‘சித்தி!’ என்று ஒரே கத்தாய் கத்தினான் அவன். திரும்பிப் பார்த்தேன்; ‘'என்னடா பாலு, செளக்கியமா?’ என்றாள் செங்கமலத்தின் தாயார்.

அதிசயத்திற்கு மேல் அதிசயம்! - எங்கே செங்கமலம்? - சுற்றுமுற்றும் பார்த்தேன்; குழந்தையுடன் ஒடோடியும் சென்று அவள் கூட்டத்தோடு கூட்டமாக மறைந்து விட்டாள் - அண்ணனுக்கு அஞ்சித்தான்!