கண் திறக்குமா/சிவகுமார லீலை!

9. சிவகுமார லீலை!

அன்றிரவு ரயில் ஒடுவதாகவே எனக்குத் தோன்றவில்லை; சித்ராவைப் பார்ப்பதற்காக நான்தான் விழுந்தடித்துக்கொண்டு ஒடுவது போல் எனக்குத் தோன்றிற்று. அடுத்தநாள் காலை என் உள்ளத்தைச் சூழ்ந்திருந்த இருள் விலகாவிட்டாலும், உலகத்தைச் சூழ்ந்திருந்த இருள் விலகிவிட்டது. பரபரப்புடன் சோளகம்பட்டி ஸ்டேஷனை விட்டு இறங்கி, செய்யாமங்கலத்தை நோக்கி விரைந்தேன். அந்தக் கிராமத்தில்தான் குற்றாலலிங்கம் கொலு வீற்றிருந்தார். மணிமுடி தரிக்காத அந்த மன்னரின் ஆட்சியும் அங்கேதான் நடந்து கொண்டிருந்தது.



ஸ்டேஷனை விட்டு ஒரு பர்லாங் தூரங்கூடப் போயிருக்க மாட்டேன் - “ஐயோ, என்னடி செய்வேன்?” என்ற தீனக்குரல் என் காதில் விழுந்தது; அதைக் கேட்ட பிறகு என்னால் மேலே ஒர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. திரும்பிப் பார்த்தேன்; எனக்குச் சற்றுத் தூரத்தில் ஒர் இளம் பெண் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்து கிடந்தாள். அவளுக்குப் பக்கத்தில் முதியவள் ஒருத்தி நின்று தவித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கையில் உறங்கிக்கொண்டிருந்த பச்சிளங் குழந்தை ஒன்று எந்தவிதமான சலனமும் இல்லாமல் புன்னகை பூத்துக் கொண்டிருந்தது - நான் அவர்களை நெருங்கினேன். என்னைக் கண்டதும் அந்த முதியவள் திடுக்கிட்டாள்; பிறகு கையிலிருந்த குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு மூர்ச்சையுற்றுக் கிடந்த பெண்னைத் துக்கித்தன்தோளின் மேல் சாய்த்துக்கொண்டாள்.

“என்ன உடம்புக்கு?’ என்று விசாரித்தேன்.

‘ஒன்றுமில்லை...’ என்று இழுத்துக்கொண்டே, அவள் என்னை அச்சத்துடன் பார்த்தாள்; காரணம் என்ன என்று தெரியாமல் நான் திகைத்தேன். அவள் என்னைப் பொருட்படுத்தாமல், “செங்கமலம், செங்கமலம்’ என்று நாலைந்து முறை தன் தோளின்மேல் கிடந்த பெண்ணைக் கூப்பிட்டுப் பார்த்தாள்; பதில் இல்லை.

பழையபடி அந்தப் பெண்ணைக் கீழே கிடத்திவிட்டு அவள் ஸ்டேஷனை நோக்கி விரைந்தாள்.

“எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டேன்.

அவள் திருதிருவென்று விழித்துக்கொண்டே ‘ஒரு சோடாவாவது வாங்கிக்கொண்டு வரலாமென்று போகிறேன்!” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

‘நீங்கள் இங்கேயே இருங்கள்; நான் வாங்கிக் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு ஓடினேன். 

திரும்பி வருவதற்குள் குழந்தை வீல், வில்’ என்று கத்த ஆரம்பித்துவிட்டது.

என்னிடமிருந்த சோடாவை வாங்கி அந்தப் பெண்ணின் வாயில் கொஞ்சங் கொஞ்சமாக ஊற்றினாள் முதியவள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மூர்ச்சை தெளிந்து எழுந்த செங்கமலம், ‘அம்மா!’ என்று ஈனஸ்வரத்தில் இழுத்தாள்.

‘அம்மாவுமாச்சு, ஆட்டுக்குட்டியுமாச்சு! - இந்தா, இதை நீயே குடி!’ என்று ‘பாட்டி'லை அவளிடம் கொடுத்து விட்டுக் கீழே கிடந்த குழந்தையைத் தூக்கினாள் தாயார்.

‘இனிமேல் என்னால் ஒர் அடிகூட எடுத்து வைக்க, முடியாது, அம்மா!’ என்றாள் செங்கமலம்.

‘முடியாவிட்டால் இங்கேயே இரு!’ ‘ஏன் அம்மா, நீகூட என்னிடம் இரக்கங் காட்ட மாட்டாயா?’ என்று கேட்டுக்கொண்டே தலை நிமிர்ந்த செங்கமலம், என்னைக் கண்டதும் திடுக்கிட்டுத் தன் மேலாக்கை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

தாயார், குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, “எமனே உன்னிடமும் உன் அழகான குழந்தையினிட மும் இரக்கங் காட்டியிருக்கும் போது நான் காட்டாமல் இருக்க முடியுமா?’ என்றாள்.

அவள் கண்களில் நீர் துளித்தது. நான் ஒன்றும் புரியாமல், ‘விஷயத்தைச் சொல்லுங்கள்?’ என்றேன்.

செங்கமலத்தின் தாயார் சிரித்தாள்; அவளோடு அவள் கண்ணிரும் சிரித்தது.

நான் திடுக்கிட்டு, ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்றேன். ‘உங்களை ஒருவர் முந்திக்கொண்டு விட்டார்; அதற்காகத்தான் சிரித்தேன்!” என்றாள் அவள்.

‘அப்படியென்றால்...?” ‘நீங்கள் இப்போது இரக்கங்காட்டுகிறீர்களல்லவா? - அதே இரக்கத்தை இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்த அப்பாவிப் பெண்ணிடம் ஒருவர் காட்டி விட்டார். அதன் பலன்தான் இந்தக் குழந்தை.”

‘நீங்கள் என்னைப் பற்றித் தவறாக நினைக்கிறீர்கள்...’

“ஆமாம்; முதலில் அவரும் அப்படித்தான் சொன்னாராம்!’

எனக்கு வேதனையாயிருந்தது - இதற்குள் ‘அம்மா!’ என்று இடைமறித்தாள் செங்கமலம்.

“என்ன, சொல்லித் தொலையேன்?’ என்று அலுத்துக் கொண்டாள் தாயார்.

‘முதலில் என்னைக் கொன்றுவிடு, அம்மா! - பிறகு யாரிடம் வேண்டுமானாலும் என் கதையைச் சொல்லு?’’ என்றாள் அவள்.

‘இனிமேல் உன்னைக் கொன்றால் என்ன, கொல்லா விட்டால்தான் என்ன? - கெட்ட பால் நல்ல பாலாகப் போவதில்லையல்லவா?’ என்றாள் தாயார்.

நான் பொறுமையிழந்து, ‘நீங்கள் இருவரும் இப்படி மனம் உடைந்து பேசிக்கொள்வதற்குக் காரணமாயிருந்த அந்தக் கிராதகன் யார்?’ என்று கேட்டேன்.

அவ்வளவுதான்: ‘உங்களுடைய அருமை மைத்துனன் தான் அந்தக் கிராதகன்!’ என்றாள் செங்கமலத்தின் தாயார் ஆத்திரத்துடன்.

‘'என்ன, நீங்கள் சிவகுமாரனையா சொல்கிறீர்கள்?’’ 

‘ஆமாம். அந்தச் செல்வக்குமாரனைத்தான் சொல்கிறேன்!”

அவ்வளவுவுதான்; சித்ராவை நான் நினைத்துக்கொண்டு விட்டேன் - “ஐயோ, அவளுடைய கதி?’ என்று நினைக்கும் போதே என் உடல் முழுவதும் ஒரு கணம் நடுங்கி ஒய்ந்தது. அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘அப்படியானால் என்னை இதற்கு முந்தியே உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன்.

‘தெரியாமலென்ன, நன்றாய்த் தெரியும்!”

‘உங்களை எனக்குத் தெரியவில்லையே?’’

‘எப்படித் தெரியும்? - நான் வேலைக்காரிதானே, எதற்காக நீங்கள் என்னை ‘யார்?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கப்போகிறீர்கள்!’

‘நீங்கள் எங்கே வேலையாயிருந்தீர்கள்?’’

‘'வேறு எங்கேயாவது வேலையாயிருந்தால்தான் இந்தக் கதிக்கு நாங்கள் ஆளாகியிருக்க மாட்டோமே? உங்கள் மாமா வீட்டில் வேலையாயிருந்ததால் வந்த ஆபத்துத்தான் இது!”

எனக்கு விஷயம் ஒருவாறு புரிந்துவிட்டது. ‘எந்த வீட்டில் வேலையாயிருந்தாலும் முதலிலேயே கொஞ்சம் எச்சரிக்கையாயிருந்திருக்க வேண்டுமல்லவா?’ என்றேன்.

‘'நான் மட்டும் எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமா? இவளுமல்லவா எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்? - இவள்தான் அதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டாளே? - ஏனென்றால், இவர்களுக்குள் காதல் எங்கிருந்தோ வந்து முளைத்துவிட்டதாம்; அந்தக் காதலுக்கு ஜாதி பேதம் கிடையாதாம்; ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாதாம்; அது எல்லாவற்றையும் கடந்ததாம்;

எப்பொழுதும் அழியாததாம் - இப்படியெல்லாம் அவன் சொன்னானாம். அப்பேர்ப்பட்ட காதல் இந்த அருமை மகன் தோன்றினானோ இல்லையோ, உடனே அழிந்து விட்டது?’ என்றாள் அவள்.

இந்தச் சமயத்தில், ‘என்ன இருந்தாலும் அவர் என்னவோ நல்லவர்தான், அம்மா!’ என்றாள் செங்கமலம்,

‘யார் இல்லை என்கிறார்கள்? - நல்லவர்களாயிருந்ததால் தான் நாம் இருந்த குடிசையைக்கூடப் பிய்த்து எறிந்து விட்டார்கள்!’

‘அவரா வந்து பிய்த்து எறிந்தார்?’

‘அவன் வந்து பிய்த்து எறியவில்லை. அவன் வீட்டு ஆட்கள் வந்து பிய்த்து எறிந்துவிட்டார்கள்!’

‘அப்பா இருக்கும் வரை அவருடைய வீடு என்று எப்படி அம்மா சொல்ல முடியும்?”

‘அதற்கு முதலிலேயே அவன் அப்பாவைக் கேட்டுக்கொண்டு வந்து உன்னைக் காதலித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அப்பாவைக் கேட்காமல் காதலிப்பதற்கு இருந்த தைரியம் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் இருந்திருக்க வேண்டும். அவனுக்கென்ன, இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்; இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கைவிடலாம். உன்னால் முடியுமா?”

‘ஏன் முடியாது? - எல்லாம் முடியும்!’ என்றேன் நான்.

‘எப்படி முடியும்? - உலகம் சிரிக்காதா?’ என்றாள் அவள்.

‘உலகம் எல்லோரையும் பார்த்தா சிரிக்கிறது? செங்கமலத்தைப் போன்றவர்களை மட்டும் பார்த்துத் தானே சிரிக்கிறது? சிவகுமாரனைப் போன்றவர்களைப் பார்த்துச் சிரிக்கவில்லையே? - அப்படிப்பட்ட வஞ்சக உலகத்துக்கு நீங்கள் ஏன் அஞ்ச வேண்டும்?”

‘வேறு வழி? - இங்கே ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமாக வைத்துக்கொண்டிருக்கும் வரை எங்களைப் போன்றவர்கள் மானத்தைக் காத்துக் கொள்ளச் சாவைத்தானே தழுவவேண்டியிருக்கிறது!”

‘ஆண்கள் மானத்தைக் காத்துக் கொள்ளச் சாவைத் தழுவாமலிருக்கும் போது பெண்கள் மட்டும் ஏன் தழுவ வேண்டும்? அதைப் பற்றி அவர்களுக்கு இல்லாத கவலை உங்களுக்கு மட்டும் என்னத்துக்கு?’

‘ஊராரின் வாயை மூடத்தான்!”

‘ஊரார், ஊரார், ஊரார்! - அவர்கள் வேறு, நாம் வேறா? நீங்களும் நானும், இன்னும் உங்களைப் போன்றவர்களும், என்னைப் போன்றவர்களும் சேர்ந்தவர்கள் தானே ஊரார்? - அப்படியிருக்கும்போது நமக்கு நாமே பயந்து சாவதில் என்ன அர்த்தமிருக்கிறது? காலமெல்லாம் ஊராருக்கும் உலகத்தாருக்கும் அஞ்சி நாம் செத்துக் கொண்டிருந்தால் வாழ்வது தான் எப்போது?’’

‘உங்களைப்போல் ஊரில் ஒரு சிலர் இருக்கலாம்; மற்றவர்கள்...”

‘மற்றவர்களை நீங்கம் மனம் வைத்தால் மாற்றி விடலாம். அதற்கு உங்களைப் போன்றவர்கள் துணிந்து காரியத்தில் இறங்க வேண்டும். ஆனால் அந்தக் காரியத்தை நீங்கள் ரகசியமாக செய்யக் கூடாது; பகிரங்கமாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் ஊரும் உலகமும் உங்களைப் பார்த்து வெட்கித் தலை குனியும்; விபசாரி என்ற வீண் பழியும் நாளடைவில் மறைந்தொழியும்; சிவகுமாரனைப் போன்ற சண்டாளர்களும் சீர்திருந்தி விடுவார்கள்!'

‘இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே, நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா?’

‘கேளுங்கள்!’

‘இந்தச் செங்கமலத்தை உங்கள் தங்கையாகப் பாவித்துக் கொள்ளுங்கள் - சிவகுமாரனால் வஞ்சிக்கப் பட்ட இவளை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் உறவினர்கள் என்ன செய்வார்கள்? - தங்களிடமிருந்து தள்ளி வைத்துவிடுவார்கள். அதேமாதிரி நீங்கள் சிவகுமாரனைத் தள்ளி வைத்துவிடுவீர்களா?”

‘கட்டாயம் தள்ளி வைத்துவிடுவேன்!” ‘அப்படியானால் என்னுடன் வாருங்கள் - இந்தக் குழந்தையை மட்டுமாவது நான் அவனிடம் ஒப்புவித்து விட்டுத் தான் வரப் போகிறேன் - இதனால் என்ன ஆனாலும் சரி!’ என்று அவள் கிளம்பினாள்.

அப்போது தற்செயலாக அந்த வழியே கூண்டு வண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது. நான் வண்டிக்காரனைக் கை தட்டி அழைத்து, ‘செய்யாமங்கலத்துக்கு வருகிறாயா?” என்றேன்.

‘வரேனுங்க!’ என்றான் அவன். எல்லோரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். சிறிது தூரம் சென்றதும் வண்டிக்காரன் என்னை நோக்கி, ‘இது உங்களுக்குத் தலைச்சன் பிள்ளைங்களா?’ என்றான்.

நான் தயங்கவில்லை; “ஆமாம்’ என்று சொல்லி வைத்தேன்.

‘திருச்சி ஆஸ்பத்திரியிலேயிருந்து வராப்போல இருக்குது!’ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்ட வண்ணம், ஹை, ஹை!’ என்று அவன் மாட்டை விரட்டினான்.