கண் திறக்குமா/செங்கமலத்தின் யோசனை!

10. செங்கமலத்தின் யோசனை!

மேடும் பள்ளமும் நிறைந்த பாதையிலே வண்டி போராடிய வண்ணம் சென்று கொண்டிருந்தது. செங்கமலம் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவள் போல், ‘அம்மா, இந்தக் கோலத்துடன் நாம் அங்கேபோக வேண்டாம், அம்மா!’ என்றாள்.

‘ஏண்டி?’ என்று எரிந்து விழுந்தாள் தாயார். ‘என்ன இருந்தாலும் அவர்கள் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் இந்தக் கோலத்துடன் அங்கே போய் அவர்களுடைய கெளரவத்தை ஏன் குலைக்க வேண்டும்?’

‘அடடடா, அவர்கள் மட்டும் நம்முடைய கெளரவத்தைக் குலைக்கலாமா?”

‘அவர்கள்தான் மோசமாக நடந்து கொண்டார்களென்றால் நாமுமா மோசமாக நடந்துகொள்ள வேண்டும்? என்னவோ, நடந்தது நடந்துவிட்டது; அதை ஏதாவது ஒரு நல்ல வழியில் திருத்திக்கொள்ளப் பார்ப்போமே?”

‘அது என்னடி, நல்ல வழி?” ‘எல்லோருமாகச் சேர்ந்து அங்கே போகவேண்டாம், அம்மா! - நானும் நீயும் இந்தக் குழந்தையுடன் எங்கே யாவது இற்ங்கிவிடுவோம். முதலில் இவர் மட்டும் அங்கு போய் நம்முடைய நிலைமையை எடுத்துச் சொல்லட்டும். பிறகு என்ன ஆகிறதென்று பார்த்துக்கொண்டு, மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம்’ என்றாள் அவள்.



‘என்ன தங்கமான குணம்!’ என்று நான் வியந்தேன். அதே சமயத்தில் வண்டிக்காரன் திரும்பிச் செங்கமலத்தன் கழுத்தைச் சந்தேகக் கண்களுடன் பார்த்தான். பிறகு, ‘சரிதான், சரிதான்!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

‘என்ன சரிதான்?’ என்று நான் எரிந்து விழுந்தேன். ‘ஒண்ணும் இல்லிங்க, வண்டி ஊருக்குள்ளே நொழைஞ்சிப்போச்சுன்னு சொன்னேன்!” என்று அவன் பேச்சை மாற்றினான்.

அதற்குள், ‘'அதோ பார் அம்மா, அமிர்தம் அத்தை வீடு; நாம் அங்கே இறங்கி விடுவோமா?’ என்றாள் செங்கமலம்.

‘அது என்னமோ, உன் இஷ்டம்’ என்றாள் அவள் தாயார்.

வண்டி அமிர்தம் வீட்டு வாசலில் நின்றது; இருவரும் இறங்கிவிட்டனர். அங்கிருந்து குற்றாலலிங்கம் பிள்ளையின் வீடு சுமார் ஒரு பர்லாங்கு துரத்தில் இருந்தது. நானும் அவர்களுடன் வண்டியை விட்டிறங்கி, அவருடைய வீட்டை நோக்கி நடந்தேன்.

வாசலில் நின்று கொண்டிருந்த மாமா என்னைக் கண்டதும் சிரித்துக்கொண்டே, ‘என்னப்பா, கடைசியிலே வெறுங்கையோடு திரும்பி வந்திருக்கிறாயே?’ என்றார்.

‘என்ன கொண்டு வரவேண்டும் என்கிறீர்கள்?’’ என்றேன் நான்.

‘'சுயராஜ்யத்தை வாங்கிக் கொண்டுதான் திரும்பி வருவாயாக்கும் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்றார் அவர்.

‘அது என்ன, சிறையில் விலைக்கு விற்கும் என்று நினைத்துக் கொண்டீர்களா?’ என்று கேட்டுக் கொண்டே நான் உள்ளே நுழைந்தேன்.

அப்போது, “அழகான தங்கையைப் பார்த்துவிட்டுப் போக வந்துவிட்டானாக்கும்!” என்று மாமி சமையல் அறையில் இருந்தபடி முனகியது என் காதில் விழுந்தது.

‘என்னுடைய அழகான தங்கையை மட்டுமா, உங்களுடைய அழகான பிள்ளையையும் பார்த்துவிட்டுப் போகலாமென்று தான் வந்திருக்கிறேன்!’ என்று நானும் பதிலுக்கு முனகிக்கொண்டே அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன்.

நான் அவ்வாறு முனகியது எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த என் மாமாவின் காதில் விழுந்துவிட்டது. ‘ஏன், அவனுடைய அழகுக்கு என்னடா குறைவு?’’ என்று கேட்டுக் கொண்டே, அவர் எனக்கு எதிர்த்தாற் போலிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

‘ரொம்ப அழகுதான்; ஊர் சிரிக்கிறது!’

‘ஏன் சிரிக்கிறது. என்னத்துக்காகச் சிரிக்கிறது?’

‘ஓர் அபலையின் உயிருக்கு உலை வைத்ததற்காக!”

‘அது யார், அந்த அபலை?”

‘ஒன்றும் தெரியாதவர்போல் கேட்கிறீர்களே, அவளுடைய தாயார் கூட இங்கே வேலை செய்துகொண்டிருக்கவில்லையா?”

“ஆமாம், நாலு கழுதைகளோடு ஐந்தாவது கழுதையாக ஏதோ ஒரு கழுதை இங்கே வேலை செய்து கொண்டுஇருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னால் அந்தக் கழுதையின் வேலை எங்களுக்குப் பிடிக்கவில்லை; விரட்டி விட்டோம் - அதனால் என்ன?”

‘ரொம்ப சரி; அவளுடைய மகள் செங்கமலத்தின் வாழ்க்கையை உங்கள் மகன் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டானே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்!'

‘என்ன, செங்கமலமா! - அவள் யார் என்று கூட எங்களுக்குத் தெரியாதே? உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?”

‘ஏன் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள்? - குடிசையைப் பிய்த்து எறிந்துவிட்டால் குற்றத்தை மறைத்துவிட முடியாது!”

‘யாருடைய குடிசையைப் பிய்த்து எறிந்தேன்? என்னுடைய குடிசையை நானே பிய்த்து எறிந்து விட்டேன்! - அவ்வளவுதானே? - அந்தக் கழுதை என் வீட்டில் வேலை பார்க்கும் வரை அதற்கு என்னுடைய குடிசையில் இடங் கொடுத்து வைத்திருந்தேன்; வேலையை விட்டு நீக்கிய பிறகு நான் அதற்கு இடங் கொடுப்பானேன்?’

‘பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்; பழி, யாரையும் விடாது - அந்தப் பழிக்குப் பகவான் தண்டனை அளிக்கும் வரை மக்கள் காத்துக் கொண்டிருக்கும் காலமும் அல்ல, இது!”

‘'என்னப்பா, என்னவெல்லாமோ பேசுகிறாய்! - எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?”

‘கொஞ்சம் நியாய புத்தியோடு யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு எல்லாம் புரியும் - ஓர் ஏழைப் பெண்ணுக்கு என்னவெல்லாமோ ஆசை காட்டி, அவளைத் தன் இஷடத்துக்குப் பயன்படுத்திக் கொண்டபின் கை விடுவதை யாரும் சகிக்க மாட்டார்கள் - உடனே அந்தப் பெண்ணைச் சிவகுமாரனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யுங்கள்!’

‘நல்ல வேடிக்கைதான், இது! - இன்று உங்களுடைய மகன்தான் என்னைக் கெடுத்தான் என்று இவள் வருகிறாள்; நாளைக்கு இன்னொருத்தி வருகிறாள்; அதற்கு 

மறுநாள் வேறொருத்தி வருகிறாள் - இப்படியே எங்கெங்கேயோ கெட்டு எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் சிவகுமாரனுக்குக் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டியதுதானா? - பேஷ், உன்னுடைய யோசனையே யோசனை, அப்பா! - வழியே போகிற சனியன்களை யெல்லாம் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டுமென்று சொல்கிறாயே?’’

‘வழியே போகிற சனியனை விலைக்கு வாங்கச் சொல்லவில்லை; வீட்டோடு இருந்த சனியனைத்தான் விலைக்கு வாங்கச் சொல்கிறேன் - நீங்கள் நினைப்பது போல் வேடிக்கை வேடிக்கையாகவும் இல்லையே, வினை யாகவே முடிந்துவிட்டதே! - உங்கள் சிவகுமாரனுக்குச் செல்வக் குமாரன் ஒருவன் பிறந்திருக்கிறான். துரதிர்ஷ்ட வசமாக அவன் செத்துப் போகவுமில்லை; உயிரோடு இருக்கிறான்.!”

‘நான் சிவகுமாரனுக்குத்தான் பிறந்தேன் என்று அவன் உன்னிடம் வந்து சொன்னானாக்கும்?’

‘இதற்கெல்லாம் நீங்கள் சாட்சியைத் தேடிக் கொண்டிருக்க முடியுமா, என்ன?”

‘அப்படியானால் நீ அவளை அருந்ததி என்று ஒப்புக் கொள்வதுபோல் நானும் ஒப்புக்கொள்ள வேண்டுமா? - அவ்வளவு தூரம் என் புத்தி இன்னும் கெட்டுப் போகவில்லை!’

‘நீங்கள் இப்படி வாதிப்பது அநியாயமானது, அக்கிரமமானது! சிவகுமாரன் அவளைக் காதலிக்கும் போது, மடு சாட்சி, மலைசாட்சி, இந்திரன்சாட்சி, சந்திரன் சாட்சி என்றெல்லாம் சொல்லியிருப்பான் - அவையெல் லாம் சாட்சி சொல்ல வந்துவிடுமா? - மலையும் மடுவும், சந்திரனும் இந்திரனும் ஒருக்காலும் சாட்சி சொல்ல வரமாட்டார்கள் என்ற தைரியத்தைக் கொண்டுதானே

சிவகுமாரனைப் போன்ற ‘காதலர்’ தங்களுடைய திருவிளையாடல்களுக்கு அவற்றைச் சாட்சிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்!”

‘ஆமாம், அந்த நாய்களை உனக்கு எப்படித் தெரிந்தது?”

‘வழியில் நான் அவர்களுக்கு ஒரு சிறு உதவி செய்ய நேர்ந்தது; அதன் மூலம் தெரிந்து கொண்டேன்.’

‘இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” ‘அவர்கள் எங்கே இருந்தால் என்ன? முதலில் அவளை உங்கள் மகனுக்குக் கல்யாணம் செய்து வைப்பதாகச் சொல்லுங்கள். பிறகு நான் அவர்களை இங்கே அழைத்து வருகிறேன்!’

“அவள் சிவகுமாரனுக்கு மாலையிட வேண்டுமானால் முதலில் என் உடம்பில் இருக்கும் உயிர் என்னை விட்டுப் போக வேண்டும்!”

‘உங்களைப் போலவேதான் உங்களுடைய மகனும் சொல்கிறானோ? - அந்தக் கிராதகனை இங்கே கொஞ்சம் வரச் சொல்லுங்களேன், கேட்டுப் பார்ப்போம்?”

‘அவனுக்கென்ன, உனக்குப் பிடித்திருப்பது போல் பைத்தியமா பிடித்திருக்கிறது?’ அந்த நாயின் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை’ என்றுதான் அவன் அன்றே சொல்லிவிட்டானே!’

‘'அட பாவி, உனக்காகவா அவள் அவ்வளவு தூரம் பரிந்து பேசுகிறாள்?’


பரிந்து பேசாவிட்டால் பணக்கார மாப்பிள்ளை எப்படிக் கிடைப்பான்? - உனக்கு உலகம் தெரியாது, அப்பா! - இப்படிப்பட்டவர்களிடம் இரக்கமே காட்டக் கூடாது - போகட்டும்; அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குக் கொஞ்சம் சொல்லேன்? - பாவத்துக்கு அஞ்சிப் போனால் போகிறதென்று குடிசையைப் பிய்த்து எறிந்ததோடு விட்டால் அவர்கள் இப்படித்தான் வாலை ஆட்டிக் கொண்டிருப்பார்கள். உடனே அவர்களைக் கூண்டோடு கொண்டு போய்ப் போலீஸ் லாக் - அப்பில் அடைத்து விட்டால்தான் தொல்லை தீரும் - அவர்கள் மீதுள்ள குற்றங்களுக்கோ குறைவில்லை - விபசாரம் செய்த குற்றம்; சிசு ஹத்தி செய்ய முயன்ற குற்றம்: கெளரவமான ஒரு மனிதனை அவமதித்த குற்றம்...’

‘போதும். நிறுத்துங்கள்! - பணத்தால் சட்டத்தைக் கூட விலைக்கு வாங்கிவிடலாம் என்பதற்காக மனச்சாட்சியைக் கொன்றுவிடாதீர்கள்!”

‘உன்னுடைய உபதேசம் ஒன்றும் எனக்கு வேண்டாம்; இனிமேல் நான்'உன்னிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியதும் ஒன்றுமில்லை - வந்த வேலையைப்பார்!’ என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவர் எழுந்தார். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. ‘இனி ஒரு நிமிஷங்கூட இங்கே நான் இருக்க விரும்பவில்லை. சித்ராவைக் கூப்பிடுங்கள்; அவளை அழைத்துக் கொண்டு உடனே நான் சென்னைக்குப் புறப்பட வேண்டும்’ என்றேன்.

‘அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்? அவள் செத்துப்போயிருந்தால்கூடக் கவலை விட்டது என்று பேசாமல் இருந்திருக்கலாம் - பாவி, வேறுவிதமாக அல்லவா நடந்துகொண்டு விட்டாள்!’ என்று பாகாய் உருகினார் அவர்.

‘எவ்விதமாக நடந்துகொண்டு விட்டாள்? உங்களுடைய யோக்கியதைக்கு அவளுடைய யோக்கியதை என்ன குறைந்துவிட்டது?”

“எங்களுடைய யோக்கியதை கிடக்கட்டும், அப்பா! உன் தங்கையினுடைய யோக்கியதையைக் கேள்:

அவளைப் பற்றி ஏற்கெனவே எனக்குச் சந்தேகம் - அடிக்கடி எங்கிருந்தோ அவளுக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன என்ன கடிதம்?’ என்று கேட்டால், “சொந்த விஷயம்’ என்பாள். அந்தச் சொந்த விஷயத்தின் பலன் தான் போலிருக்கிறது, நேற்றிரவிலிருந்து அவளைக் காணோம்.’

‘'காணவில்லையா!’

“ஆமாம். சிவகுமாரன் பசி, தூக்கத்தைக்கூட மறந்து அவளைத் தேடு, தேடு என்று தேடியலைகிறான் - அவனை எதிர்பார்த்துக்கொண்டுதான் நான் தெருவில் நின்று கொண்டிருந்தேன்; அப்போதுதான் நீ அந்த நாய்களின் சமாசாரத்தை எடுத்துக்கொண்டு வந்தாய்! - அந்த வயிற்றெரிச்சலில் நான் இதுவரை சித்ராவைப்பற்றி உன்னிடம் ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டேன்!’ என்றார் அவர்,

எனக்கு விஷயம் விளங்க வெகு நேரம் ஆகவில்லை. சாந்தினி எழுதிய கடிதங்களை யாரோ காதலன் எழுதியதாக இந்த மனிதர் நினைத்துக்கொண்டு விட்டார். அதற்கேற்றாற்போல் இவர்மீதிருந்த வெறுப்பின் காரணமாக அந்தக் கடிதங்களைச் சித்ரா இவரிடம் காட்டாமல் இருந்திருக்க வேண்டும் - தன்னந்தனியாகவே இந்த வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவதற்கு வேண்டிய தைரியத்தைக்கூட அல்லவா இவர்களுடைய உபத்திரவம் அவளுக்கு அளித்திருக்கிறது! - இவ்வாறு எண்ணி நான் துடித்துக் கொண்டிருந்தபோது. ‘என்னப்பா, யோசிக்கிறாய்?’’ என்று கேட்டார் அவர்.

‘ஒடிப்போன பிறகும் உங்கள் திருக்குமாரனால் அவளை மறக்க முடியவில்லையே, அதைப் பற்றித்தான் யோசிக்கிறேன்!” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டு, நான் அங்கிருந்து விர்ரென்று கிளம்பினேன்.



ஒருவேளை சித்ரா தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ? - சீ சீ, அப்படியெல்லாம் ஒன்றும் நடந்திருக்காது; அவள் சாந்தினியை நம்பிச் சென்னைக்குத்தான் போயிருப்பாள்!

இந்த நம்பிக்கையுடன் செங்கமலம் தங்கியிருந்த வீட்டையடைந்து, நான் அவர்களிடம் நடந்த விஷயத்தைச் சொன்னேன் - ‘போலீஸ், லாக் - அப்’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும் அவர்கள் நடுங்கி, “எங்களைப் பட்டணத்திலாவது கொண்டுபோய் விட்டு விடுங்கள்; உங்களுக்குப் புண்ணியமுண்டு’ என்றனர், வேறுவழியின்றி நான் அவர்களை அழைத்துக்கொண்டு சோளகம்பட்டி ஸ்டேஷனை நோக்கி விரைந்தேன்.