கதை சொன்னவர் கதை 2/பேரப்பிள்ளைகளுக்குப் பிரியமாய்க் கதை சொன்னவர்
முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அந்த அரசன் மிக, மிகப் பொல்லாதவன்; ஈவு இரக்கமே இல்லாதவன். குடி மக்களுக்கு அவன் பல வகையிலும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்களுக்குச் சிறிது கூட நிம்மதி இல்லை. எல்லோரும் அந்த அரசனை வெறுத்து வந்தார்கள்.
அந்தப் பொல்லாத அரசனிடம் ஏராளமான செல்வம் இருந்தது. பலம் பொருந்திய படைகளும் இருந்தன. ஆகையால், அவனை மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவன் நாளுக்கு நாள் கொடுங்கோலனாக வளர்ந்து வந்தான். முதல் நாள் இரவு படுக்கப் போகும் போது இருந்ததை விட, மறு நாள் காலை எழுந்திருக்கும் போது, அவன் மேலும் கொடியவனாகி விடுவான்!
அந்த ஊரில், ஒரு தெள்ளுப்பூச்சி இருந்தது. அது மற்ற தெள்ளுப் பூச்சிகளைப் போல், மனிதர்களுக்குத் தொந்தரவு கொடுக்காது. மிகவும் கருணையுள்ள பூச்சி! அதிகமாகப் பசித்தால்தான், அது மனிதர்களைக் கடிக்கும். அப்போது கூட, வலி கொஞ்சமும் தெரியாதபடி, மெதுவாகக் கடிக்கும்.
இந்த நல்ல தெள்ளுப் பூச்சி, அந்தப் பொல்லாத அரசனைப் பற்றிக் கேள்விப்பட்டது. அவனுக்கு எப்படியாவது நல்ல புத்தி புகட்ட வேண்டும் என்று நினைத்தது.
“அவனோ முரட்டு அரசன். அவனை நாம் கடித்தால், நம் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்……ஏற்படட்டுமே! அவனைச் சும்மா விடக் கூடாது” என்று தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டது.
அன்று இரவு அரசன் வழக்கம் போல், படுக்கை அறைக்கு வந்தான். நிம்மதியாகப் படுக்கையில் சாய்ந்தான். சிறிது நேரம் கூட ஆகவில்லை. ‘சுருக்’கென்று ஊசி குத்துவது போல் அவன் மார்பில் ஏதோ கடித்தது. “ஆ! ச்சூ… என்ன இது?” என்று கதறிக் கொண்டே, அரசன் எழுந்தான். கடித்த இடத்தில் மெதுவாகத் தடவிப் பார்த்தான். கையில் ஒன்றும் அகப்படவில்லை.
“என்னவா? நான்தான் தெள்ளுப்பூச்சி. உன்னைத் திருத்தி, நல்ல மனிதனாக்குவதற்கு வந்திருக்கிறேன்” என்று பதில் வந்தது.
“என்ன ! தெள்ளுப்பூச்சியா? இதோ ஒரு விநாடியில், உன் கதி என்ன ஆகிறது, பார்” என்று சீறினான் அரசன். படுக்கை விரிப்பு, மெத்தை, தலையணைகள் எல்லாவற்றையும் பலமாக உதறினான். என்னதான் உதறினாலும், தெள்ளுப் பூச்சி அகப்படவில்லை. அது எங்கே போய் விட்டது? எங்கும் போகவில்லை. அரசனுடைய தாடிக்குள்ளேயே, பத்திரமாகப் பதுங்கி ஒளிந்து கொண்டிருந்தது!
“தொலையட்டும். பயந்து எங்கோ ஓடி விட்டது” என்று கூறிக் கொண்டே அரசன் மீண்டும் படுத்தான். தலையணையில் சாய்ந்தானோ இல்லையோ, மீண்டும் ‘சுருக்’கென்று கடித்தது தெள்ளுப் பூச்சி!
“என்ன தைரியம் உனக்கு! திரும்பவும் வந்து விட்டாயா ? நீயோ ஒரு சின்னஞ்சிறு மணல் அளவுதான் இருக்கிறாய். நானோ இந்த உலகத்திலேயே மிகப் பெரிய அரசன்! என்னிடமா உன் பலத்தைக் காட்டுகிறாய்?” என்று கத்தினான் அரசன்.
தெள்ளுப் பூச்சி பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனாலும், சும்மா இருக்கவில்லை. கடித்துக் கொண்டே இருந்தது. அன்று இரவு முழுதும் அரசன் தூங்கவே இல்லை. ஒரு விநாடி கூடக் கண் மூடவில்லை. காலையில் எழுந்ததும், அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அழுது வடிந்தது.
அன்று அரண்மனை வேலையாட்களை யெல்லாம் அரசன் அழைத்தான். அரண்மனையில் உள்ள அறைகளையெல்லாம் நன்றாகச் சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டான். அத்துடன் விடவில்லை. இருபது நிபுணர்களை வரவழைத்தான். அவர்களிடம் பெரிய, பெரிய பூதக் கண்ணாடிகளைக் கொடுத்து, படுக்கை அறை முழுவதையும் சோதனை செய்யச் சொன்னான். கண்களை அகல விரித்துக் கொண்டு, அவர்கள் படுக்கை அறையின் மூலை முடுக்குகளைக் கூட விடாமல் தேடிப் பார்த்தார்கள். தெள்ளுப் பூச்சி அகப்படவில்லை.
அரசன் அணிந்திருந்த ‘கோட்’டின் காலருக்கு அடியிலேதான் அந்தப் பூச்சி அப்போது மறைந்திருந்தது! அது எப்படி அந்த நிபுணர்களுக்குத் தெரியும்?
“தெள்ளுப் பூச்சியின் தொல்லை ஒழிந்தது” என்று நினைத்துக் கொண்டு, அன்று வெகு சீக்கிரமாகவே—அதாவது, சாயங்காலமே படுப்பதற்குச் சென்றான் அரசன். படுத்ததுதான் தாமதம்; “ஐயோ!” என்று அலறிக் கொண்டே அவன் துள்ளிக் குதித்து எழுந்தான். அந்தக் கடி பலமாகவே இருந்தது.
“யாரது?” என்று கோபமாய்க் கத்தினான்.
“நான்தான்; தெள்ளுப் பூச்சியேதான்.”
“உனக்கு என்னதான் வேண்டும்?”
“நான் சொன்னபடி நீ கேட்க வேண்டும். உன் குடிமக்கள் சுகமாக வாழ்வதற்கு நீ ஒரு நல்ல வழி செய்ய வேண்டும்.”
இதைக் கேட்டதும் அரசன், “எங்கே என் போர் வீரர்கள்? எங்கே என் தளபதிகள்? எங்கே என் மந்திரிகள்? எல்லோரும், உடனே ஓடி வாருங்கள்!” என்று கூச்சலிட்டான்.
கூச்சலைக் கேட்டுப் போர் வீரர்கள், தளபதிகள், மந்திரிகள் எல்லோரும் அங்கே ஓடோடி வந்தார்கள். அவர்கள் படுக்கையைத் தனித் தனியாகப் பிரித்து உதறினார்கள்; கட்டிலின் இடைவெளிகளிலெல்லாம் தேடினார்கள்; தரையில் கிடந்த விரிப்புகளையெல்லாம் சோதனை செய்தார்கள். தெள்ளுப்பூச்சி அவர்கள் கையிலா சிக்கும்? அதுதான் இப்பொழுது அரசனின் தலைமயிருக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறதே!
“இந்த அறையில் படுத்தால், அந்தப் பூச்சி விடாது,” என்று கூறிக் கொண்டே அரசன் அடுத்த அறைக்கு ஓடினான். அங்கேயாவது, அவனால் நிம்மதியாகத் தூங்க முடிந்ததா? எப்படி முடியும் ? தலையில்
மறுநாள் பொழுது விடிந்ததும் அரசன் ஓர் உத்தரவு போட்டான். “இந்த நாட்டில் ஒரு தெள்ளுப் பூச்சி கூட உயிருடன் இருக்கக் கூடாது. மிகவும் விரைவாக அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும். இந்த வேலையில் குடிமக்கள் ஒவ்வொருவரும் துரிதமாகக் கட்டாயமாக ஈடுபடவேண்டும்” என்பதுதான் அந்த உத்தரவு. ஆனாலும், என்ன பயன்?
அந்தச் சிறு பூச்சி இதற்கெல்லாம் பயந்து விடவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டேயிருந்தது. அரசனுக்கு எப்படி அந்தப் பூச்சியிடமிருந்து தப்புவது என்றே தெரியவில்லை. கடி தாங்காமல் சொறிந்து, சொறிந்து உடம்பெல்லாம் கறுத்தும் போய் விட்டது. தூக்கமில்லாததால், உடம்பு நாளுக்கு நாள் மெலிந்து துரும்பாகி விட்டது!
இனி என்ன செய்வது? தெள்ளுப் பூச்சி சொன்னபடி செய்யா விட்டால், சீக்கிரம் எமலோகம் போய்ச் சேர வேண்டியதுதான்! நிலைமை அவ்வளவுக்கு முற்றி விட்டது.
அரசன் இதைப் பற்றித் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது, ‘சுருக்’கென்று பலமாக ஒரு கடி கடித்தது தெள்ளுப் பூச்சி.
“ஆ! தெள்ளுப் பூச்சியே, என்னை இனியும் தொந்தரவு செய்யாதே! நீ சொல்லுகிறபடியே செய்யத் தயார். இப்பொழுது என்னை என்ன செய்யச் சொல்லுகிறாய்?” என்று அழாக் குறையாகக் கேட்டான் அரசன்.
“நீ உன் குடிமக்களைச் சுகமாக வாழச் செய்ய வேண்டும்.”
“அதற்கு நீதான் வழி சொல்ல வேண்டும்.”
“ஒரே ஒரு வழிதான் உண்டு. நீ இந்த நாட்டை விட்டு ஓடிப் போய் விட வேண்டும்” என்றது.
“என்ன! நான் நாட்டை விட்டு ஓட வேண்டுமா?… அப்படியானால், என்னுடைய செல்வமெல்லாம்…?”
“ஒரு செப்புக் காசைக் கூட நீ உன்னுடன் எடுத்துச் செல்லக் கூடா து.”
தெள்ளுப் பூச்சி முதலில் இப்படிக் கண்டிப்பாகச் சொன்னாலும், பிறகு, “சரி,வெறும் கையோடு நீ போக வேண்டாம். உன் பை நிறையப் பவுன்களை எடுத்துக் கொண்டு போ” என்று கூறியது.
அரசன் அன்றே அந்த நாட்டைவிட்டு ஓடி விட்டான். பிறகு, அந்த நாட்டு மக்கள் தங்களுக்குள்ளே ஒரு குடியரசை ஏற்படுத்திக் கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள்.
இந்தக் கதையைச் சொன்னவர் பிரெஞ்சு நாட்டில் பிறந்தவர்; நாவல் ஆசிரியராக, கவிஞராக, நாடக ஆசிரியராக உலகப் புகழ் பெற்றவர். விக்டர் ஹ்யூகோ (Victor Hugo) என்பதே இவர் பெயர்.
விக்டர் ஹ்யூகோவுக்குக் குழந்தைகள் என்றால், கொள்ளை ஆசை. அவருக்கு ஜென்னி என்று ஒரு பேத்தியும், ஜார்ஜஸ் என்று ஒரு பேரனும் இருந்தார்கள். ஓய்வு நேரத்தில், ஹ்யூகோ அவர்களுடன் சிறு குழந்தையைப் போல ஓடி, ஆடி விளையாடுவார். அவர்கள் ஆட்டி வைத்தபடியெல்லாம் ஆடுவார்.
ஒரு நாள், ஏதோ ஒரு முக்கிய அரசியல் விஷயமாக, ஒரு நண்பர் ஹ்யூகோவைத் தேடி வந்தார். அவர் வந்த சமயம், ஹ்யூகோவின் முதுகில் பேரக் குழந்தைகள் இருவரும் ஏறி, சவாரி செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள் தாத்தாவை விடவில்லை. வெகு நேரம் சவாரி செய்த பிறகே கீழே இறங்கினர். அவர்கள் கீழே இறங்கிய பிறகுதான், ஹ்யூகோவும் தமது நண்பருடன் பேசத் தொடங்கினார்.
இதே போல், ஒரு நாளா, இரண்டு நாளா? தினமும், அந்தப் பேரக் குழந்தைகள் தாத்தாவுடன் விளையாடுவார்கள். ஒரு நாள் ஜென்னியும், ஜார்ஜஸும் அதிக நேரம் விளையாடியதால், மிகவும் களைத்துப் போய் விட்டனர். களைப்புத் தீர, அவர்கள் உட்கார்ந்தனர். தாத்தாவும் அருகிலே வந்து அமர்ந்தார்.
அப்போது ஜென்னி, “தாத்தா! தாத்தா! இப்போது எனக்கு ஒரு கதை சொல்லு தாத்தா” என்று கொஞ்சும் மொழியில் ஹ்யூகோவைக் கேட்டாள்.
“ஆமாம் தாத்தா. எனக்கும் கதை கேட்க ஆசையாயிருக்கிறது. ஒரு கதை சொல்லு தாத்தா” என்று ஒத்துப் பாடினான் ஜார்ஜஸ்.
“கதையா? அடேயப்பா! அது எனக்குத் தெரியாதே!” என்றார் விக்டர் ஹ்யூகோ.
“ஏன் தாத்தா, எங்களையே நீ ஏமாற்றப் பார்க்கிறாயே! நீ இது வரை எத்தனை கதைகள் எழுதியிருக்கிறாய்! எத்தனை புத்தகங்களை வெளியிட்டிருக்கிறாய்! இப்போது நீ ஒரு கதை சொல்ல வேண்டும். அந்தக் கதை நீ எழுதியிருக்கும் எந்தப் புத்தகத்திலும் இல்லாத புதுக் கதையாக இருக்க வேண்டும்” என்றாள் ஜென்னி. “புத்தம் புதுக் கதையா! ஐயோ ! எனக்குத் தெரியாதே!” என்றார் ஹ்யூகோ.
“அதெல்லாம் இல்லை. சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லாத போனால், விட மாட்டோம்” என்றான் ஜார்ஜஸ். உடனே ஹ்யூகோ, “பயமாயிருக்கிறதே! சரி, சொல்கிறேன்” என்று கூறி விட்டுத் தொண்டையைக் கனைத்துக் கொண்டார். பேரக் குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சியோடு தாத்தாவின் அருகிலே வந்து உட்கார்ந்து கொண்டார்கள். தாத்தா அவர்களை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு, ஒரு புதுக் கதையைச் சொன்னார். அந்தக் கதைதான் ஆரம்பத்தில் நாம் படித்த ‘நல்ல தெள்ளுப் பூச்சியும் பொல்லாத அரசனும்.’
இந்தக் கதையை ஹ்யூகோ கூறும் போது, சும்மா கூறவில்லை? ‘ஆ!…ஊ…உஸ்! அப்பப்பா!’ என்றெல்லாம் அடிக்கடி கதறுவார். கையைக் காலை உதறுவார்; துடிதுடிப்பார்; துள்ளிக் குதிப்பார். கதையில் வரும் பொல்லாத அரசன் எப்படி எப்படியெல்லாம் அவஸ்தைப் பட்டான்? அதைத்தான் அவர் நடித்துக் காட்டினார். அவரது கதையும், நடிப்பும் குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஊட்டின. வயிறு குலுங்கக் குலுங்க அவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.
இப்படி, அந்தக் குழந்தைகளைக் குதூகலப் படுத்துவதற்காக அவர் கூறிய கதைகளெல்லாம் சேர்ந்து பின்னர், ஒரு புத்தமாக வெளி வந்தன. குழந்தைகளிடம் அவர் கொண்ட பேரன்பின் நினைவுச் சின்னமாக இன்றும் அப்புத்தகம் விளங்குகின்றது.
விக்டர் ஹ்யூகோ 1802-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய பாட்டனார் ஒரு தச்சர். பாட்டி ஒரு விவசாயியின் மகள். ஆனால், தகப்பனாரோ ஒரு போர் வீரர்! ஆம், ஐரோப்பாக் கண்டத்தையே ஆட்டி வைத்த நெப்போலியனிடம் அவர் போர் வீரராகச் சேர்ந்தார். விரைவில் படைத் தலைவரானார்.
தந்தை போர் வீரராயிருந்ததால், அடிக்கடி அவர் வெவ்வேறு ஊருக்குச் செல்வார். வெளி நாடுகளுக்கும் செல்வதுண்டு. அதனால், பிள்ளைப் பருவத்திலே ஹ்யூகோ பல இடங்களுக்கும் செல்ல நேர்ந்தது. ஐந்து வயதுச் சிறுவராயிருக்கும் போதே, அவர் இத்தாலி தேசத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறாராம்!
தந்தை நெப்போலியனுடன் சேர்ந்து போர் புரிந்தாலும், தாயாருக்கு நெப்போலியன் என்றாலே பிடிக்காது. “யுத்த வெறி பிடித்தவன். நாடு நகரத்தையெல்லாம் அழித்து, ஒன்றும் அறியாத பிள்ளை குட்டிகளையெல்லாம் கொன்று குவிக்கிறான். இவனைப் போய் வீரன்,தீரன் என்கிறார்களே!” என்று அலட்சியமாகக் கூறுவாள்.
தந்தை எக்காலமும் போரிலே ஈடுபட்டிருந்ததால், தாயார்தான் ஹ்யூகோவைக் கண்ணும் சுருத்துமாக வளர்த்து வந்தார். இளம் வயதில், ஹ்யூகோவுக்கு அடிக்கடி நோய் வரும். மிகவும் அவதிப்படுவார். ஆனாலும், படிப்பிலே கெட்டிக்காரராயிருந்தார். கணக்கிலே புலி! எந்தப் புத்தகம் கண்ணிலே தென்பட்டாலும், விட மாட்டார்; படிக்கத் தொடங்கி விடுவார்.
அதிகமாகப் படிக்கப் படிக்க, அவருக்கும் எழுத வேண்டும் என்ற ஆசை பிறந்தது. பதினான்காவது வயதிலே அவர் கவிதை, கட்டுரை, கதைகளெல்லாம் எழுதத் தொடங்கி விட்டார். பாரிஸ் நகரில் படிக்கும் போது, அவர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது பதினேழுதான். அப்போட்டியில் அவருக்கே முதற் பரிசு கிடைத்தது. அன்று அவர் பெற்ற வெற்றிதான், பிற்காலத்தில் இலக்கிய உலகில் அவர் பெற்ற வெற்றிகளுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தது.
ஹ்யூகோவின் அண்ணா ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். அதில் ஹ்யூகோ கவிதைகள், விடுகதைகள், துணுக்குகளெல்லாம் எழுதுவது வழக்கம். அதில் ஒரு தொடர்கதை கூட அவர் எழுதி வந்தார். அவர் எதை எழுதினாலும், அது நன்றாகவே இருந்தது. எல்லோரும் அவர் எழுதியவைகளைப் படித்துப் பாராட்டினார்கள். ஹ்யூகோவின் முதல் புத்தகம் வெளி வந்தது அவருடைய இருபதாவது வயதில். அது ஒரு கவிதைப் புத்தகம். அந்தப் புத்தகத்தின் மூலமாக அவருக்குப் புகழ் கிடைத்தது. கொஞ்சம் பணமும் கிடைத்தது. அந்தப் பணம் கிடைத்த பிறகுதான், அவர் திருமணம் செய்து கொண்டார். தமக்கு மனைவியாக வந்த அம்மையாரை, அவருக்குச் சிறு வயதிலிருந்தே நன்றாகத் தெரியுமாம். பிள்ளைப் பருவத்திலே இருவரும் ஒன்று சேர்ந்து ஓடி, ஆடி விளையாடியவர்களாம்!
திருமணம் ஆன பிறகு, ஹ்யூகோ பல நாவல்கள் எழுதினார். கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார். அவர் எழுதிய பல நாடகங்கள் மேடையில் நடிக்கப் பெற்றன. நாளுக்கு நாள் அவருடைய புகழ் ஓங்கியது.
ஹ்யூகோவுக்கு அப்போது நாற்பத்தோராவது வயது நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள், தலையில் இடி விழுந்தது போல், அதிர்ச்சி தரக் கூடிய துக்கச் செய்தி ஒன்று வந்தது. அவருடைய மகளும், மாப்பிள்ளையும் படகில் சென்ற போது, படகு கவிழ்ந்து, இருவரும் இறந்து விட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி! அன்று அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. துக்கத்தால் மனம் உடைந்து போயிருந்த அவர், சில காலம் எழுதுவதையே நிறுத்தி விட்டார். எழுதுவதை நிறுத்துவதால், இறந்தவர்கள் வரப் போகிறார்களா? மீண்டும் எழுதத் தொடங்கினார். புகழ் மேன்மேலும் பரவியது.
அரசியலில் ஈடுபட்டால், நாட்டுக்குப் பலவிதத்திலும் நன்மை செய்யலாம் என்று அவர் நினைத்தார். 1848-ல் அவர் சட்டமன்றத் தேர்தலில் நின்றார். வெற்றியும் பெற்றார். சட்டமன்ற உறுப்பினராகி மூன்றாண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள், பிரெஞ்சு தேசத்தில், குடியாட்சி மாறி, சர்வாதிகார ஆட்சி வந்து விட்டது. முன்பு இருந்தானே, மாவீரன் நெப்போலியன், அவனுடைய அண்ணன் மகன் ஒருவன் அப்போது இருந்தான். அவன் மூன்றாவது நெப்போலியன் என்று பெயர் வைத்துக் கொண்டு பிரெஞ்சு நாட்டின் சர்வாதிகாரியாகி விட்டான்!
ஹ்யூகோ அவனை எதிர்த்துப் பேசியும், எழுதியும் வந்தார். கடைசியில், பிரெஞ்சு நாட்டை விட்டு, வேறு நாடு போக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு விட்டது. பெல்ஜியத்திற்குச் சென்றார். அங்கு ஒன்றல்ல; இரண்டல்ல; பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பிரெஞ்சு நாட்டில் மீண்டும் குடியாட்சி ஏற்பட்ட பிறகே திரும்பி வந்தார். ஹ்யூகோ எழுதிய இரு நாவல்கள் இன்று உலகப் புகழ் பெற்று விளங்குகின்றன. அவற்றில் ஒன்று ‘ஏழை படும் பாடு’ என்பதாகும். இது தமிழில் புத்தகமாக வந்திருக்கிறது; திரைப்படமாகவும் வந்தது. ஆனால், உலகப் புகழ் பெற்ற இந்நாவல்களை அவர் எழுதியது வெளிநாட்டில் இருந்த போதுதான்!
ஹ்யூகோவின் எண்பதாவது பிறந்த நாள், பிரெஞ்சு தேசம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த நன்னாளில் ஆறு லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடி, மகிழ்ச் சியுடன் இந்த விழாவைக் கொண்டாடினார்கள்; கைதட்டி ஆரவாரம் செய்து தங்களுடைய வணக்கத்தை ஹ்யூகோவுக்குத் தெரிவித்தார்கள்.
1885-ல் அவர் இறந்த போது, பிரெஞ்சு தேசமே துக்கத்தில் ஆழ்ந்தது. அரசாங்க மரியாதையுடன், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.