கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1/மயிலின் வேகம்

மயிலின் வேகம்

1

Page வார்ப்புரு:Largeinitial/styles.css has no content.முருகன் பெருமை அவனைச் சுற்றி சூழ இருக்கிற பொருள்களிடத்திலும் பிரதிபலிக்கும். சூரியன் இயல்பான தேசு உடையவன். சந்திர மண்டலம் என்பது பூமியைப் போன்றது தான். சந்திரனுக்கு இயற்கையான ஒளி இல்லை. சூரியனுடைய ஒளியை வாங்கி அது பிரதிபலிக்கச் செய்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். மெய்ஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? எம்பெருமான் இயற்கையான காந்தியை உடையவன். அவனிடம் உள்ள அருள் ஆற்றலைப் பெற்றுத் தாமும் ஒளிரும் பண்பு அவனைச் சுற்றிக் சூழ இருக்கிற பொருள்களுக்கும் உண்டு என்கிறார்கள். இறைவனோடு சார்ந்த அவை அவனிடம் உள்ள அருள் ஆற்றலில் பங்கு கொண்டு அவன் சக்தியை வெளிப்படுத்துகின்றன. முருகப் பெருமானுக்கு வாகனமாக இருக்கிற மயில், கொடியாக இருக்கிற கோழி, ஆயுதமாக இருக்கிற வேல் ஆகிய எல்லாம் அவனுடைய சார்பினால் தெய்வத் தன்மையும் ஆற்றலும் பெற்று விளங்குகின்றன.

வேலும் மயிலும்

ருணகிரிநாதப் பெருமான் கந்தர் அநுபூதி முதற்பாட்டில், "இறைவா, நான் உன்னை வணங்க வேண்டும்" என்று சொல்லவில்லை. "என் வாழ்நாள் முழுவதும் ஓர் உத்தியோகம் வேண்டும்; பாடிக்கொண்டே இருக்கிற உத்தியோகம் வேண்டும்" என்றார்.

"பாடும் பணியே பணியா அருள்வாய்."

எதைப் பாடுகின்ற பணியை அவர் வேண்டுகிறார் தெரியுமா?

"ஆடும் பரிவேல் அணிசே வல்எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்.” 'முருகா, உன் வாகனமாக ஆடிக்கொண்டிருக்கிற மயிலையும், உன் ஆயுதமாகிய வேலையும், உன்னுடைய கொடியாகிய சேவலையும் பாடுவதையே என்னுடைய பணியாக நீ அருள் செய்ய வேண்டும்', என்று கேட்கிறார்.

எவ்வளவு அறிவுடைய தந்தையாகவேனும் இருக்கட்டும்; தம்மிடம் மாத்திரம் அன்பு வைத்துவிட்டு, தம்மைச் சார்ந்த மகனிடத்தில் வெறுப்பைக் காட்டுகிறவனிடம் முழு அன்பையும் செலுத்த முற்படுவாரா? தம்மிடம் காட்டுகிற அன்பையே தம் குழந்தைகள்பாலும் காட்டுகிறவனிடந்தான் நாட்டம் இருக்கும். அதுபோல இறைவனிடத்தில் அன்பு செலுத்தினால் போதாது. அவனோடு சார்ந்திருக்கும் பொருள்களிடத்திலும் அன்பு உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

முருகனைப் போற்றுவது போலவே அவனிடத்தில் உள்ள வேலையும், மயிலையும், கோழிக் கொடியையும் அடியார்கள் போற்றி வந்தார்கள். தமிழ்நாட்டில் பழங்கால முதலே வேலுக்கும் மயிலுக்கும் மிகச் சிறந்த நிலையைக் கொடுத்திருக்கிறார்கள். மந்திரங்கள் என்று சொல்லப்படுவன வடமொழியில்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. தமிழிலும் மந்திரம் உண்டு. பாம்பு மந்திரம், காமாலைப் போக்கும் மந்திரம் முதலியன தமிழில் உள்ளன. 'வேலும் மயிலும்' என்பதும் பழங்காலம் தொட்டு வழங்கி வருகின்ற ஒரு மந்திரம். இதைச் சதா சொல்லிக் கொண்டே இருப்பவன் இடும்பன். சிவபெருமானுக்குக் காவல் காக்கின்ற நந்தியம்பெருமான் எப்படி ஒரு சிறந்த தொண்டரோ அவ்வாறே முருகப் பெருமானுக்குப் பெரிய தொண்டனாக இருப்பவன் இடும்பன். முருகப் பெருமான் கோயிலில் இடும்பனுக்கும் தனியே ஒரு சந்நிதி இருக்கும். இடும்பன் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகக் கட்டித் தோளில் தூக்கிச் சென்றான். சிவகிரிதான் பழனி என்ற திருப் பெயருடன் இன்றும் நின்று நிலவுகிறது. அவன் இரு மலைகளையும் தோளில் கட்டி எடுத்துச் சென்றதனால்தான் முருகனுக்கு காவடி எடுக்கும் சம்பிரதாயம் வந்தது. காவடி எடுக்கின்ற வழியைக் காட்டிக் கொடுத்த ஆசிரியன் இடும்பன். அவன், 'வேலும் மயிலும்’ என்று சதா சொல்லிக்கொண்டே இருக்கிறவனாம். "வேலும் மயிலும் துணை" என்று சிலர் எழுதுவது பழக்கம். துணை என்று போட வேண்டியதுகூட இல்லை. 'வேலும் மயிலும்' என்பதே ஒரு மகாமந்திரமாக இருக்கிறது. இது இன்று நேற்று வந்த வழக்கம் அல்ல. மிகப் பண்டைக் காலம் முதற்கொண்டு வழங்கி வருகிறது. இலக்கியம் அதற்குச் சான்று.

பரிபாடலில்

ங்க நூல்களில் பரிபாடல் என்பது ஒன்று. அதில் திருப்பரங்குன்றத்தைப் பற்றி ஒரு பெரும் புலவர் பாடுகிறார்.

எம்பெருமானுடைய திருவருளினால் நல்ல கணவனைப் பெற்ற காதலி ஒருத்தி இல்லறம் நடத்துகிறாள். அவளுக்கு ஒரு சமயம் தன் நாயகன் மேல் சந்தேகம் வந்தது. திருப்பரங்குன்றம் சென்று பரத்தை ஒருத்தியோடு அளவளாவி வருவதாக அவள் தன் கணவனை ஐயுற்று அதனால் ஊடல் கொள்கிறாள். தலைவன் இதை உணர்ந்து கொள்கிறான். தன்னை அப்படிச் சந்தேகிக்கக் காரணம் இல்லை என்று வற்புறுத்தி ஆணை இடுகிறான். ஆணை இடும்போது தெய்வத்தின் பெயரைக் கூறி ஆணை இடுவார்கள்; தெய்வத்திற்குச் சமானமான பெரியவர்களின் பெயரைச் சொல்லி ஆணை இடுவார்கள்; அல்லது தம் பெயரிலேயே ஆணை இடுவார்கள். தான் பரத்தையர்பால் செல்லவில்லை என்பதற்கு இந்தக் கணவன் தன் நாயகியிடம், "வேல் மேல் ஆணை; மயில் மேல் ஆணை” என்று சொல்கிறான்.

காதலிக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதல் அளித்து வருகின்ற தோழி அதைக் கேட்கிறாள். தன்னுடைய தலைவியின் நாயகன் திருப்பரங்குன்றம் போய்ப் பரத்தையருடன் இருந்து வருகிறான் என்றே அவளும் நினைக்கிறாள். 'அக்குற்றத்தைச் செய்ததோடன்றி, அப்படிச் செய்யவில்லை என்று வேலையும் மயிலையும் நினைத்து ஆணை இடுகிறானே! இது பெரும் பாவம் அல்லவா? இந்தப் பொய்யாணையினால் இவனுக்கு இன்னும் என்ன என்ன தீங்கு ஏற்படுமோ?' என அஞ்சுகிறாள். "நீ எதை வேண்டுமானாலும் நினைந்து சூளுரை சொல். வேலையும் மயிலையும் சொல்லிச் சூளுறாதே" என்கிறாள். முருகனுக்கு அருகில் இருப்பவை அவை. ஆதலின் அவற்றுக்கு அஞ்ச வேண்டும். பழங் காலம் முதற்கொண்டே வேலையும், மயிலையும் புகழ்கின்ற வழக்கம் உண்டு என்பதை இது காட்டுகிறது.

2

பிரணவ உருவம்

ம்பெருமானுக்குரிய வாகனமாகிய மயில் பல வகையில் சிறப்புடையது. ஆடும் மயில், வட்ட வடிவமாகத் தன் தோகையை விரித்துக் கொண்டு, ஒரு காலைச் சற்றுத் தூக்கிய வண்ணம் இருக்கும். அப்போது அதன் முழு உருவத்தையும் கூர்ந்து பார்த்தால் ஓங்காரம்போலத் தோன்றும்.

பிரணவ சொரூபியாக இருப்பவன் முருகப் பெருமான். அதன் பொருளாகவும் இருக்கிறான். அதன் பொருளைத் தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதனாகவும் இருக்கிறான். ஒளியும் ஒலியும் கலந்த அதனூடே ஒளிர்கிறான். ஒலி ஒளி இரண்டும் கலந்தது பிரணவம்.

"ஓங்காரத்து உள்ஒளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டு
துங்கார்”

என அருணகிரியார் பின்பு ஒரு பாட்டில் சொல்கிறார். ஓங்கார சொரூபியாகிய முருகன் ஓங்கார உருவமான மயிலின் மீது எழுந்தருளி இருக்கிறான். இந்தத் தத்துவத்தை ஆடும் பரியாகிய மயில் காட்டுகிறது. முருகன் ஞான சொரூபி. அவன் ஏறி இருக்கிற வாகனமாகிய மயில் பிரணவ சொரூபம்.

"ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட
தாடுமயில் என்ப தறியேனே!"

என்பது திருப்புகழ். எல்லா மந்திரங்களுக்கும் மேலான மந்திரமாக, ஒப்பற்ற மந்திரமாக, தனி மந்திரமாக இருப்பது பிரணவம். அதன் உருவத்தைப் பெற்றது தோகை விரித்து ஆடும் மயில்.

பாசப் பாம்பு

நம் மனத்தில் பாசம் என்ற கட்டு இருக்கிறது. பாசம் பாம்பைப் போன்றது. அந்தப்பாம்பைப்போக்கவேண்டுமென்றால் பாம்புக்குப் பகையான ஒன்று வேண்டும்; நமக்குப் பயம் கொடுக்காமல், பார்ப்பதற்கு எழிலாக, பாம்புக்கு அச்சத்தைத் தரக்கூடிய ஒன்று வேண்டும். அதுதான் மயில். மயில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. தோகை விரித்து ஆடுகையில் மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் அது பாம்புக்குப் பகை. எம் பெருமான் அமர்ந்திருக்கின்ற மயிலின் திருவுருவத்தைப் பாருங்கள். அதன் காலில் ஒரு பாம்பு இருக்கும். வளைந்து கொண்டு இருக்கிற பாம்பை மயில் கொத்திக் கொத்தி அடக்குகிறது. பாசம் என்ற பாம்பை அடியோடு ஒழிக்கக் கூடிய பிரணவ தத்துவமாக மயில் விளங்குகிறது. அது மட்டும் அன்று.

வாசி யோகம்

மது உடம்பில் ஆறு ஆதாரங்கள் உண்டு. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய அந்த ஆறில் முதலாவது மூலாதாரம். முதுகுத்தண்டினூடே ஓடுகிற நடு நரம்புக்கு சுழுமுனை என்று பெயர். அது இந்த ஆறு ஆதாரங்களையும் உருவிச் செல்கின்றது. மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பி மேலே ஏற்றி ஆறு ஆதாரமும் கடந்து ஸஹஸ்ராரம் வரைக்கும் செல்லும்படி செலுத்துவதை வாசி யோகம் என்பார்கள். மூலாக்கினியை எழுப்பி ஏற்றும்போது இடையிலே குண்டலினி என்ற தடை ஒன்று உண்டு. அது சுருண்ட பாம்பு போல இருப்பது. அந்தத் தடையைப் போக்கி அதை எழுப்பி ஓட்ட வேண்டும். அப்பால் மூலக்கணலை மேலே எழுப்பி மேலுள்ள சந்திர மண்டலத்தளவும் செலுத்தினால் அங்கே உள்ள அமுதம் பொழியும். இவ்வாறு யோக நூல்கள் கூறும்.

இந்தக் குண்டலினி யோகத்தில் வெற்றி பெற மயில் உதவி செய்யும்; மயில் வாகனப் பெருமானை நினைத்தால் யோகத்தில் சித்தி உண்டாகும். பாம்பை விரட்ட உதவும் மயில் குண்டலினி என்னும் பாம்பையும் எழுப்பி ஓடச் செய்யும்.

"வாசியாலே மூலக்கணல் வீசியே சுழன்றுவரப்
பூசை பண்ணிப் பணிந்திட மாசறக்குண் டலியைவிட்
டாட்டுமே - மேல் - ஒட்டுமே”

என்று கோபாலகிருஷ்ண பாரதியார் பாடுகிறார். குண்டலினி ஆகிய பாம்பை ஆட்டுவது மயில். யோகம் செய்து சித்தி பெற்ற சித்தர்களுக்கு தெய்வமாக இருப்பவன் முருகன். அவன் மயில் மேல் ஏறி வந்தால் குண்டலினியென்னும் பாம்பு எழுந்து ஒட, வாசியோகம் நிறைவேறும்.

"வாசியில் ஏறி வருவாண்டி - ஒரு
வாசி நடத்தித் தருவாண்டி"

என்று இராமலிங்க சுவாமிகள் பாடினார். வாசி என்பது வாகனம், வாசியோகம் இரண்டுக்கும் பெயர். மயிலாகிய வாசியில் ஏறி வரும் முருகன் வாசியோகத்தை நடத்தித் தருவான். மயில் வாகனப் பெருமானைத்தியானித்தால் யோகம் கைகூடும் என்பதைஅதிலிருந்து உணர்கிறோம்.

மூன்று வாகனங்கள்

முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் சிறப்பாக உண்டு. ஆட்டுக் கிடா ஒரு வாகனம். நாரதர் யாகம் செய்தபோது உலகத்தை அழிக்கின்ற கிடாய் அதிலிருந்து புறப்பட்டது. அந்தக் கிடாய் உலகத்தை எல்லாம் அழித்துவிடுமே என்று எண்ணி அதை அடக்க அதன் மேல் முருகன் ஏறி அமர்ந்து நடத்தினான்; மேஷ வாகனம் உடையவன் முருகன்.

பன்னிரண்டு மாதங்களுக்குள் சித்திரை மாதத்திற்கு ராசி மேஷம். சூரியன் சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் இருப்பான். மலையாளிகள் சித்திரை மாதத்தையே மேஷ மாசம் என்பர். அந்த மேஷராசிக்குச் சொந்தக்காரன் செவ்வாய். செவ்வாய்க் கிரகத்திற்கு முருகனுடைய அம்சம் உண்டு என்று சோதிட நூல் கூறும். செவ்வாய் சிவந்த உருவம் உடையது. முருகப்பெருமானும் சிவப்பு வண்ணத்தான். செவ்வாய்க்கு வாகனம் ஆடு. முருகனுக்கும் அது வாகனம். செவ்வாய்க் கிரகத்தின் கிருபையை அடைய விரும்புபவர்கள் மேஷ ராசியையும், அதற்குத் தலைமை பெற்ற முருகனது அம்சத்தையும் நினைப்பர். அவனுக்கு மேஷம் வாகனம் என்ற நினைப்பில் இருந்து தோன்றியது இது.

முருகனுக்கு மற்றொரு வாகனம் யானை, பிணிமுகம் என்று அதற்குப் பெயர். அடியார்களுக்கு அருள் செய்யும்போது, யானை வாகனத்தில் எழுந்தருளுவான் முருகன். பழம்பெரும் புலவராகிய நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் இதைச் சொல்கிறார். திருத்தணி குழந்தை என்பன எல்லாம் இளமையுடையவற்றைக் குறிக்கின்றவையானாலும் மனிதக் குழந்தை, காக்கைக் குஞ்சு, யானைக்குட்டி என்று சொல்கிறோம்; இது மரபு. இத்தகைய மரபுகளைத் தொல்காப்பியத்தில் மரபியல் என்ற பகுதி விரிவாகச் சொல்கிறது. பறவைகளில் ஆணைச் சேவல் என்றும் பெண்ணைப் பேடை என்றும் சொல்வது மரபு. ஆண் கோழியைச் சேவல் என்கிறோம். பெண் கோழியைப் பெட்டைக் கோழி என்கிறோம். சேவல் என்று சொன்னால் வீரம் பொருந்தியது, ஆண்மை பொருந்தியது என்று பொருள்படும். மயில் அல்லாத மற்றப் பறவைகளில் ஆணைச் சேவல் என்று அழைக்கலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆண் மயில் அழகாக இருக்கும்; உடல் மென்மையாக இருக்கும். மென்மையான ஒன்றுக்குச் சேவல் என்ற பெயர் கூடாது என்று எண்ணியிருக்கலாம்.

"சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும்
மாயிருந் தூவி மயிலலங் கடையே."[1]

இதற்கு உரை எழுதப் புகுந்த பேராசிரியர் மயிலை விலக்குவதற்குக் காரணத்தைக் கூறினார்; 'அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயலவாகலான் ஆண்பால் தன்மை இல என்பது கொள்க' என்றார். முருகப் பெருமான் ஏறுகின்ற மயில் அழகானது; மென்மையானது. ஆனாலும் அதற்கு ஆண்மையும், வீரமும் இல்லை எனச் சொல்லக் கூடாது. பக்தர்களுக்கு மென்மையாக இருக்கும் அம்மயில் பகைவர்களுக்கு பயத்தை அளிக்கும் வீரம் உடையது. ஆகவே அந்த மயிலைச் சேவல் என்று அழைக்கலாம் என்று அவ்வுரைகாரர் எழுதுகிறார். 'செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும்’ என்பது அவர் உரை.

"எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவல்மேல் ஏறி” என்று கந்த புராணத்தில் முருகன் ஏறும் மயிலுக்குச் சேவல் என்ற பெயரையிட்டு வழங்குகிறார் கச்சியப்ப சிவாசாரியார்.

மயில் வாகனம், போர்புரியும்போது முருகப்பெருமானுக்குப் பயன்பட்டது. அடியார்களுக்கு அருள் செய்யப்போகும்போது பயன்படுகிறது. எந்த இடத்தில் எந்தச் சமயத்தில் நினைத்தாலும் மயிலின் மீது ஏறி வருகின்றான் அருள்புரிய. அத்தகைய வீரமுடைய மயிலைப் பற்றி இந்தப் பாட்டில் அருணகிரியார் பாடுகிறார்.

3

வெற்றி வேலோன் வாகனம்

குசைநெகி ழாவெற்றி வேலோன்,
அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட
வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது
மேரு; அடியிடஎண்
திசைவரை தூள்பட்ட; அத்தூளின்
வாரி திடர்பட்டதே.

குறிப்பு அறிந்து போகும் குதிரையானால் குதிரைக்காரன் கடிவாளத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியதில்லை; சவுக்கால் அடிக்க வேண்டியதில்லை. குதிரை முரட்டுத்தனமாக ஓடினால் கடிவாளத்தை இறுக்கிப் பிடிக்கிறான்; சவுக்கால் அடிக்கிறான்.

எம்பெருமான் முருகன் ஏறுகின்ற மயில் குறிப்பு அறியும் தன்மை உடையது. ஆதலால் கடிவாளத்தை இறுக்கிப்பிடிக்காமல் நெகிழ்த்து விடுகிறான்.

குசைநெகிழா, வெற்றி வேலோன்.
(நெகிழா-நெகிழ்த்து)

மயிலையும் வேலையும் ஒருங்கே நினைக்கிறார் அருணகிரியார். பாட்டு மயிலைப் பற்றியது; வெற்றி வேலோன் என்று முருகனைக் குறிப்பிடும்போது வேலைப் பற்றிய எண்ணமும் வந்துவிடுகிறதல்லவா? வெற்றியைத் தருகின்ற வேலைத் தன் திருக்கரத்தில் உடையவன் முருகன். அவன் குசையை நெகிழ்க்க, மயில்வாகனம் வேகமாகச் செல்கிறது.

அவுனர் குடர் குழம்ப.

அதன் வேகத்தைக் கண்டு அசுரர்களின் குடல்கள் குழம்பின. வயிற்றில் கலக்கம் ஏற்பட்டது. நடக்கப் போகின்ற போரில் நாம் எல்லோரும்

க.சொ.1-21 அழியும் காலம் வந்துவிட்டதே என்று அசுரர்கள் மயில் வாகனப் பெருமானைப் பார்த்துக் குடல் கலங்கிப் போனார்கள்.

கசையிடு வாசி விசைகொண்ட
வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு.

அந்த வாகனம் எப்படிச் செல்கிறது. தானே குறிப்பு அறிந்து நடக்கிறது. இயல்பாக வேகமாய்ப் போகும் குதிரையைச் சவுக்கால் அடித்தால் எப்படிப் பறக்குமோ அப்படிப் போகிறது மயில். அந்த வேகத்தைச் சொல்ல வருகிறார். மணிக்கு இத்தனை மைல் வேகமென்று சொல்வது யந்திரக் கணக்கு. இங்கே கவிஞர் அல்லவா அந்த வேகத்தைக் கற்பனைக் கண்கொண்டு பார்த்துச்சொல்கிறார்? மயில் வேகமாகப் போகும்போது என்ன ஆகிறது? மயிலின் தோகையில் உள்ள பீலி அசைகிறது. அசையும்போது விசிறி விசிறினாற்போலக் காற்று அடிக்கின்றது. முழுத்தொகையின் காற்றைப் பற்றிச் சொல்லவில்லை. பீலியின் கொத்து அசைகிறது; அசைந்தவுடன் காற்று அடிக்கிறது.

அசுரர்களைச் சங்காரம் செய்வதற்காக வீர மூர்த்தியாய் முருகப் பெருமான் எழுந்தருளுகிறான். அவுணர்களிடம் மறக்கருணை காட்டி ஆட்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான். உலகத்திற்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி இன்பத்தைச் செய்ய வேண்டுமென்று வருகிறான். உயிர்களுக்குத் துன்பம் இழைக்கும் அசுரர்களிடம், நல்வழிக்கு வாருங்கள் என்று சொன்னால் அதை உணர்ந்து அடங்க மாட்டார்கள். அவர்களை அடித்து அடக்கி ஆட்கொள்ள வேண்டுமென்ற எண்ணம்; வீராவேசத்துடன் வருகிறான். அப்படி வரும் போதுஅவனைச் சார்ந்துள்ள பொருள்களிலும் வீரம் எதிரொலிக்கிறது.

ஒர் ஆடவன் மிக்க கோபம் அடைகிறான். அந்தக் கோபத்தை மீசை துடித்துக் காட்டுகிறது; கண் சிவந்து காட்டுகிறது; உடம்பு பதறிக் காட்டுகிறது. அதைப்போல முருகன் போருக்கு வேகத்தோடு வருகிறான். அந்த வீர வேகத்தில் வேல் பளபள என மின்னுகிறது. மயில் மிக வேகமாக ஒடுகிறது. அதன் பீலியின் கொத்து அசைகிறது. காற்று அடிக்கிறது. அப்போது என்ன நடக்கிறது?

மேரு அசைதல்

அசைந்தது மேரு

மேருமலை அசைந்தது. பொன்னிற மலை மேரு என்பார்கள். பிரபஞ்சத்துக்கு நடுவில் தூண் போல நிற்பது அது. சூரியனும் சந்திரனும் அதைச் சுற்றி வருகிறார்கள். அந்த மலையின் மீதுதான் தேவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். அதனால் அதற்குச் சுராலயம் என்று பெயர் உண்டு. பூமியின் நடு அச்சுப் போல் இருக்கிறது அது. அதை யாராவது கண்டது உண்டோ என்ற கேள்வி எழலாம். பூகோளத்தில் பூமத்திய ரேகை என்று ஒன்றைச் சொல்கிறார்கள். உலகத்தின் நடுவிலுள்ள கோடு இது. இந்தக் கோட்டின் பக்கத்தில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும்; பாலைவனம் அதிகம் என்று படிக்கிறோம். இந்தக் கோட்டை யாராவது கண்ட துண்டா? இல்லை. இது மானசீகக் கோடு. ஆனால் இது உண்மை என்று கொண்டே பல கணக்குகளைப் போடுகிறார்கள். அவை யாவும் உண்மையல்லவா? உண்மைதான். அந்தக் கோடு கற்பனையில் அமைந்தாலும் எப்படி இருப்பதாகவே கொள்கிறார்களோ அப்படியே மேருவும் இருப்பதாகவே புராணக்காரர்கள் கொள்கிறார்கள். வண்டிச் சக்கரம் கீழே விழாமல் சுற்றி வருகிறது. அவ்வாறு செய்வதற்குக் காரணமாகச் சக்கரத்திற்கு நடுவில் அச்சு இருக்கிறது. அது இரும்பால் அமைந்திருப்பதைப் பார்க்கிறோம். உலகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள். இது சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமானால் நடு அச்சு ஒன்று வேண்டாமா? அந்த அச்சைத்தான் மேருகிரி என்றனர் நம் பெரியோர். விஞ்ஞானத்தில் ஒரு பொருளை மிக நுட்பமாகச் சொல்வார்கள். புராணத்தில் பருப் பொருளாகச் சொல்வார்கள்.

மேரு கிரி பொன்மயமானது என்று சொல்கிறார்கள். அதற்கும் ஒரு பொருள் உண்டு. இரும்பு, வெள்ளி, செம்பு, தங்கம் முதலிய எல்லா உலோகங்களுமே பூமிக்குள் இருந்துதான் கிடைக்கின்றன. எல்லா உலோகங்களிலும் சிறந்தது தங்கம். உலகிற்கே நடு அச்சுப் போல் மிக உயர்ந்து இருக்கிற மலையும் பூமியில் இருந்து கிடைக்கும் உலோகங்கள் எல்லாவற்றையும் விட மிக உயர்ந்த தங்கத்தால் ஆனது எனக் கதையாகச் சொன்னார்கள். முருகப் பெருமானது வாகனம் ஆகிய மயில் வேகமாகப் போன போது அதன் பீலியின் கொத்து அசைந்ததனால் காற்று அடித்தது. அதனால் உலகத்தின் அச்சாக இருக்கிற மேரு கிரியே அசைந்தது.

உயர்வு நவிற்சி

விஞன் எதையேனும் சிறப்பித்துச் சொல்லப் புகுந்தால் சில சமயங்களில் அதை அழகுபட மிகைப்படுத்திச் சொல்வது வழக்கம். நம் நண்பர் ஒருவரை ஒரு வாரமாகப் பார்க்கவில்லை. அவர் திடீரென்று வருகிறார். நாம், "அடேயப்பா, உன்னைப் பார்த்து ஒரு யுகம் ஆயிற்றே!" என்கிறோம். பல பல லட்சம் ஆண்டுகளைக் கொண்ட ஒரு யுகமா ஆயிற்று? ஆறேழு நாட்களாகத்தான் அவரைப் பார்க்கவில்லை. இருந்தாலும் யுகமென்று சொல்கிறோம். ஒரு வாரம் பார்க்காததனால் பல காலமாகப் பார்க்காதது போன்ற உணர்ச்சி தோன்றியது. அதை அப்படியே சொல்லாமல் யுகம் ஆயிற்றே என்கிறோம். கதை எழுத்தாளர்களும் இம்முறையை ஆளுகிறார்கள். மிக உயர்ந்த வீடு என்று சொல்வதற்கு, வானத்தை முட்டும் வீடு என்று சொல்கிறார்கள்.

நாம் ஒவ்வொன்றையும் அளப்பதற்கு ஒவ்வோர் அளவு கருவி வைத்திருக்கிறோம். அடி, முழம் என்று துணியை அளக்கிறோம். மைல் என்று தூரத்தை அளக்கிறோம். படி என்று தானியத்தை அளக்கிறோம். இப்படியே உயர்வை அளப்பதற்குக் கவிஞர்கள் வைத்துக் கொண்ட அளவுகளில் ஒன்று மிகை. இதை உயர்வு நவிற்சி என்று இலக்கணத்தில் சொல்வார்கள்.

பெரும்புலவராகிய அருணகிரியார் வீர மூர்த்தியாக முருகப் பெருமான் எழுந்தருளியதைச் சொல்ல வந்து, அவனுடைய வேகத்திற்கு ஏற்ப மயில் வாகனமும் வேகமாகப் போயிற்று என்கிறார். வேகத்தை எப்படிச் சொல்வது? ஒரு கார் வேகமாகப் போவதை வருணிக்கும்போது, 'பக்கத்தில் உள்ள சருகுகள் பறந்து ஓடின. புழுதி மண்டலம் கிளம்பிற்று' என்று சொல்வது போல, "மயில் வேகமாகப் போயிற்று. அதன் பீலியின் கொத்து அசைந்த தனால் வீசிய காற்றில் மேரு கிரி அசைந்தது" என்று மிக அழகாக மிகைப்படுத்திச் சொல்கிறார். பிறகு, மயில் அடி எடுத்து வைத்து நடந்ததாம்.

மலையும் கடலும்

அடியிட எண்
திசைவரை தூள்பட்ட அத்துளிகள் வாரி திடர்பட்டதே.

நேரான திசைகள் நான்கோடு கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டுத் திக்குகள் உள்ளன. எட்டுத்திக்கின் முடிவிலும் எட்டு மலைகள் இருப்பததாகச் சொல்வது மரபு. மயில் கால் எடுத்து வைக்க, எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகள் தூள் தூளாகப் போய்விட்டன. அந்தத் தூள் எங்கே போயிற்று? பெரிய மலைகள் துாளானால் பூமி மேடாகி விடாதா? அதற்கு இடமில்லாமல் அந்தத் தூள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுப் பூமிக்குப் பக்கத்தில் இருக்கிற இடம் கடலில் விழுந்தது.

அத்தூளின் வாரி திடர்பட்டதே.

தூள் நிரம்பவே கடல்கள் மேடிட்டுப் போய்விட்டனவாம். "மயிற் பீலியின் காற்றுப் படவாவது! மேரு கிரி அசையவாவது! கால் எடுத்து வைக்க மலைகள் தூள் தூளாகப் போகவாவது!" என்றால் இப்படி எல்லாம் சொல்வது கவிஞர்களுடைய மரபு. ஆறு, ஆறரை அடி உயரமுள்ள மனிதனை நாம் என்ன சொல்கிறோம்? பனை மரம் மாதிரி இருக்கிறான் என்று சொல்கிறோம். என்ன பொருள்? உயரமாக இருக்கிறான் என்று பொருளே தவிரப் பனை மாதிரியே இருபதடி உயரம் உள்ளவன் என்று ஆகாது.

முருகப் பெருமானது வேகத்தை, அவனுடைய வாகனத்தின் வேகத்தைச் சொல்வது போலச் சொல்கிறார். வாகனத்தின் முழு, வேகத்தைக்கூடச் சொல்லவில்லை. அது போகிற வேகத்தில் பீலியின் கொத்துப்பட்டு அடிக்கின்ற காற்றைக் கொண்டே சொல்கிறார். 'அது கால் எடுத்து வைக்கையில் மலைகள் பொடிப் பொடியாகிவிட்டன; மேடு பள்ளம் ஆகிவிட்டது; பள்ளமான கடல்களில் இந்தத் தூள் விழுந்து அவை மேடாகிவிட்டன' என்கிறார். இதன் உள்ளுறை பொருளைக் காண வேண்டும்.

மேடும் பள்ளமும்

சூரபன்மன், தவத்தாலும் குணத்தாலும் உயர்ந்த பெரியவர்களைச் சிறியவர்களர்க்கினான். மிகச் சிறியவர்களாக இருந்தவர்களைப் பெரியவ்ன்ர்க்கின்ர்ன். அவக்குணம் நிரம்பிய அசுரர்கள் பெரியவர்களாகப் போய்விட்டார்கள். தவக்குணம் மிக்க தேவர்கள் சிறியவர்களாகப் போய்விட்டார்கள். இந்திர குமாரனைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கிச் சிறையில் தள்ளினான். சூரனுடைய பிள்ளை இந்திரன் உட்கார்ந்திருந்த இடத்திலே அமர்ந்துவிட்டான். மேடு பள்ளமாகப் போயிற்று. பள்ளம் மேடாகி உயர்ந்தது. வீரத்தை வீரத்தால் மாற்ற வேண்டும். முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? முருகப் பெருமான் தன்னுடைய வீரத்தால் மறுபடியும் மேட்டைப் பள்ளமாகவும், பள்ளத்தை மேடாகவும் ஆக்க நினைத்தான். அசுரர்களை அடக்கித் தேவலோகத்தை இந்திரனுக்கு மீட்டுக்கொடுக்க எண்ணினான். அவனுடைய வாகனமாகிய மயில் கால் எடுத்து வைத்தனால் மேடு பள்ளமாயிற்று; பள்ளம் மேடாயிற்று. அந்த மயிலுக்கு நாயகனாகிய முருகப் பெருமானும் அதைத்தான் செய்தான். இப்படி நயமாக ஒரு கருத்துத் தோன்றுகிறது.

சமநிலை

ற்றொரு கருத்தையும் இந்தக் காட்சி உள்ளடக்கியிருக்கிறது. மனிதர்களுடைய உள்ளத்தில் காமம் மோகம் போன்றவைகளினால் பெரும் பள்ளம் வீழ்ந்திருக்கிறது. உயர்ந்த குணங்களினால் மேடும் உண்டாயிருக்கிறது. தீய குணமாகிய கடலும், உயர் குணமாகிய மலையும் இருக்கின்றன. இவற்றால் மனம் என்ற ஒன்று இன்ப துன்பத்திற்கு ஆளாகிறது. இன்ப துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை. நமது வாழ்க்கை வெறும் இன்பம் மாத்திரம் அமைந்தது அல்ல; வெறும் துன்பம் அமைந்ததும் அல்ல. முழுவதும் துன்பம் அநுபவிப்பவர் யாரும் இல்லை. முற்றும் இன்பம் அநுபவிப்பரும் இல்லை. இன்ப மேடும், துன்பப் பள்ளமும் உள்ள மனம் தூயதன்று. அதில் அமைதி இராது. சம நிலை பெற்றால்தான் சாந்தி பிறக்கும். சுகத்தால் இன்பமடையாமலும், துக்கத்தால் துன்பமடையாமலும் இருக்கும் மனமே சமநிலையுடைய மண்ம். அந்த நிலையை நிர்வேதம் என்பர்.

முருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வந்துவிட்டால், அந்த மயில் போடுகின்ற நடையே மலையைப் பொடியாக்கி, கடலைத் திட்டாக்கிவிடும்; மனத்தைச் சமன்படுத்தி விடும். இன்பம் வேறு, துன்பம் வேறு என்று அறியாமல் ஆனந்தமயமாகி இருக்கும் நிலை அல்லது சமநிலை வந்துவிடும்; இன்பத்தினாலும், துன்பத்தினாலும் மன வேறுபாடு அடையாத நிலை அது.

சமநிலை பெற்றோர்

ந்தையாகிய இரணியனுடைய மடிமீது உட்கார்ந்த போதும் பிரகலாதன் இன்பம் அடையவில்லை; மலையின் மீதிருந்து உருட்டிவிட்ட போதும் துன்பம் அடையவில்லை. இன்ப துன்பமாகிய மேடு பள்ளம் இல்லாமல் அவன் உள்ளம் சம நிலையில் இருந்ததே அதற்குக் காரணம்.

அப்பர் சுவாமிகள் சமண மதத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் மீண்டும் சைவ சமயத்திற்கு வந்துவிட்டார். "சமணமதத்தின் தலைவராக இருந்த ஒருவர் சைவ மதத்தில் சேர்ந்ததால் நமக்கு அவமானம் வந்துவிட்டதே" என மற்றவர்கள் அரசனிடம் போய்ச் சொல்ல, அரசன் நாவுக்கரசரைப் பலவகையாலும் துன்புறுத்த நினைத்தான். யானையை விட்டு இடறச் செய்தான். சுண்ணாம்புக் காளவாய்க்குள் தூக்கிப் போடச் சொன்னான். ஆண்டவன் திருநாமத்தைச் சொல்வதன் மூலம் இன்ப துன்பத்தை வென்று மனம் சமநிலைப்பட்ட பெருமான் அவர்; ஆதலாலே அவர் அந்தத் தண்டனைகளால் சிறிது இடர்ப்படவில்லை. உள்ளத்திலும், உடம்பிலும் துன்பம் உண்டாகவில்லை. உள்ளத்தில் இருந்த மலைகள் பொடியாகி, கடல்கள் தூர்ந்து போய்ச் சமநிலை அடையப் பெற்றவர் அவர்.

ரமண மகரிஷி நம்மைப் போன்ற உடம்பு படைத்தவர்தாம். ஒரு சமயம் பெரிய கதண்டுக் கூட்டத்தில் காலை வைத்தபோது அவை கடித்துவிட்டன. அதனால் ஏற்பட்ட வலியை உடம்பு அநுபவித்தது. "படு, படு" என்று சொன்னாரேயன்றி அந்தத் துன்பத்தினால் மன மாறுபாடு எதுவும் அவருக்கு உண்டாகவில்லை. அவர் மனம் சமநிலை பெற்றுவிட்டது.

சாத்தியமா?

து நமக்குச் சாத்தியம் ஆகுமா என்றால், சாத்தியம் ஆகும் என்றே சொல்ல வேண்டும். இப்போதும் நாம் சிலவிதமான துன்பங்களைச் சகித்துக் கொள்கிறோம். ஒர் உதாரணம் பார்க் கலாம். நாம் சுவாரசியமாகச் சீட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். அப்போது முதுகில் ஒரு கொசுக் கடிக்கிறது. அது நமக்குத் தெரிகிறது. ஆனால் கையை எடுத்துக் கொசுவை அடிப்பது இல்லை. அது கடிப்பதனால் உண்டான உடல் உணர்ச்சி இருந்தும், சீட்டாட்டத்தில் உள்ள சுவாரசியத்தினால், அதைத் தாங்கிக் கொள்கிறோம். தாங்குகிற ஆற்றல் இருப்பதால் சாட்சியாக இருக்கிறோம். அநுபவம் இருக்கும்; ஆனால் மனவேறுபாடு இராது. அதுதான் சாட்சி மாத்திரமாய் நிற்கும் நிலை. கொசுக் கடித்தாலும் கை அதை அடிக்கிறது இல்லை. கொசுக்கடி தெரியாதவர் போல இருக்கிறோம்; மனத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்கிறோம். சீட்டாட்டத்தில் வேகம் இருப்பதனால் கொசுக் கடியைச் சாட்சியாயிருந்து பார்க்கிறோம்.

திருப்பதிக்கு பிரார்த்தனை என்று சொல்லிச் சில பேர் சாலையில் புரண்டு கொண்டு வருகிறார்கள். அப்படிப் புரளுகிறவன் உடம்பும் நமது உடம்பைப் போன்றதுதான்; அவன் தாய் அவனைப் பத்து மாதம் சுமந்தே பெற்றிருக்கிறாள். அவன் தன் உடம்புக்குக் கவசம் ஒன்றும் போட்டுக் கொள்ளவில்லை. நூற்றுமூன்று டிகிரி வெப்பமுள்ள வெயில் அடிக்கும்போது அவன் கோவிந்தா, கோவிந்தா என்று வீதியில் புரண்டு வருகிறான். அவன் உடம்புக்குச் சூடு தெரியவில்லையா? தெரிகிறது. இருந்தாலும் அந்தச் சூட்டை அவன் தாங்கிக் கொள்கிறான். அந்த அளவில் அவன் மனம் சாட்சி மாத்திரமாக இருக்கிறது. அவனுக்குக் காசு மேலே குறி; பற்று; அதுதான் காரணம். பணத்தின் மேலே அவன் எண்ணம் இருப்பதால் சூட்டை அநுபவிக்கிறான்; மனத்திலே மாறுபாடு இல்லாமல் சாட்சி மாதிரி இருந்து அநுபவிக்கிறான்.

கர்ணன் பரசுராமனிடம் தான் பிராமணன் எனச் சொல்லி வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தான். ஒரு நாள் ஆசிரியர் படுத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார். தலையணை இல்லை. தம் மாணாக்கன் மடிமீது தலையை வைத்துக் கொண்டு படுத்தார். தம்மை மறந்து சுகமாகத் துங்கினார். அப்போது ஒரு வண்டு கர்ணன் துடையைத் தொளைக்க ஆரம்பித்தது. அசைந்தால் குருநாதர் எழுந்துவிடுவாரே என்று கர்ண்ன் பேசாமல் இருந்தான். ரத்தம் குபுகுபு எனப் பீறிட்டுவந்தது. இருந்தும் அவன் அசையவில்லை. காரணம் மனத்திலுள்ள் வீரம். வண்டு துளைக்கும் வலி யாகிய அநுபவம் இருந்தது. ஆயினும் மனமாறுபாடு இல்லை; குழப்பமும் இல்லை. மனம் சாட்சி மாத்திரமாக இருந்தது.

வ.வே.சு. ஐயர் சிறந்த தேசபக்தர். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது விநாயக தாமோதர சாவர்க்கர் முதலியவர்களும் அவரும் சேர்ந்து இந்தியா லீகு என்ற சங்கத்தை நடத்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெறப் பாடுபடுவதே அந்தச் சங்கத்தின் நோக்கம். அவர்கள் எந்தத் துன்பம் வந்தாலும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் அல்லவா? தமக்கு அத்தகைய தைரியம் இருக்கிறதா என்பதைச் சோதிக்க ஒரு காரியம் செய்தார்கள். கட்டை விரலை ஒரு மேஜையின் மேல் வைத்து ஒர் ஊசியினால் அதன் மேல் குத்தி ஊடுருவி ஊசியின் முனை மேஜை வரையில் போய் மேஜையைக் குத்துகிற வரைக்கும் பொறுத்துக் கொள்ளவேண்டும். வ.வே.சு. ஐயர் அப்படிக் குத்துவதைப் பொறுத்துக் கொண்டார். ஊசி குத்தினால் வலி இருக்காதா? இருக்கும். அதைப்பொறுக்கும் வீரம் வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார்கள். வலியிருந்தும் சாட்சி மாத்திரமாயிருந்து பொறுத்துக் கொண்டார்கள்.

சாமான்யச் சீட்டு ஆட்டத்திற்காகக் கொசுக் கடியைச் சாட்சி மாத்திரமாய் இருந்து அநுபவிக்கலாம் என்றால், பிச்சைக் காசுக்காக மண்டை பிளந்து போகும் வெயிலைச்சாட்சி மாத்திரமாய் இருந்து சகிக்கலாம் என்றால், இந்திய விடுதலைக்காக ஊசியினால் விரலில் குத்திக் கொள்ளும்போது வலியைச்சாட்சி மாத்திரமாய்ப் பொறுத்துக் கொள்ளலாம் என்றால், இறைவனை எண்ணி, அவன் திருவருளைப் பெற்றவர்கள் உலகத்தில் ஏற்படும் இன்ப துன்பங்களை எல்லாம் சாட்சி மாத்திரமாய் இருந்து நுகர முடியாதா? மனத்திலே சமநிலை ஏற்பட்டால் அது சாத்தியமாகும். சீட்டு ஆடுகிறவர்களும் பிறரும் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் மனத்தில் ஒரளவு சமநிலையைப் பெறுகிறார்கள்.அருள் பெற்றவர்களோ எப்போதுமே சமநிலையுடன் இருக்கிறார்கள்.

மயில் வாகனன் சமநிலை அருளுதல்

த்தகைய சமநிலையை முருகன் திருவருளால் பெறலாம். முருகப் பெருமான் மயில் வாகனனாக வர வேண்டும். வந்தால் மேடு பள்ளம் தூர்ந்து போய் எல்லாம் சமமாகிவிடும். முருகப் பெருமானைத் தியாயம் செய்தால், மயில் மேல் ஏறி வரும் கோலத் தில் உள்ளத்தே நடமாடவிட்டால், நித்தியம் போர்க்களமாக இருக்கிற நம் உள்ளம், அசுர சம்பத்தால் பள்ளம் விழுந்தும், தேவ சம்பத்தால் மேடிட்டும் இருக்கிற உள்ளம், சமனாகிவிடும். இன்ப துன்பங்களைச் சாட்சி மாத்திரமாய் இருந்து அநுபவிக்கலாம். இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை நுகரலாம். இந்தக் குறிப்பும் இப்பாட்டில் உள்ளது.

*

குசைநெகி ழாவெற்றி வேலோன்
அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட
வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது
மேரு; அடியிடஎண்
திசைவரை தூள்பட்ட; அத்தூளின்
வாரி திடர்பட்டதே.

(வெற்றியைத் தரும் வேலையுடைய முருகன் அசுரர்களின் குடல் குழம்பும்படியாக, கடிவாளக் கயிற்றை நெகிழவிட, சவுக்கினால் அடித்த குதிரையின் வேகத்தைக் கொண்ட மயில் வாகனத்தின் பீலியினது கொத்து அசைவதனால் உண்டான காற்றுபட்டு மேருமலை அசைந்தது; அம்மயில் தன் காலை வைக்க, எட்டுத் திக்கிலும் உள்ள மலைகள் தூளாயின; அந்தத் தூளினால் கடல் மேடாகிவிட்டது.

குசை-கடிவாளக் கயிறு. நெகிழா-நெகிழ்த்து; நெகிழ்க்க என்ற பொருளையுடையது; எச்சரி திரிபு. நெகிழ்க்க விசை கொண்ட வாகனம் என்று முடியும். அவுணர் - அசுரர். கசை - குதிரையை அடிக்கும் சவுக்கு. வாசி - குதிரை. விசை - வேகம். பீலியின் கொத்து மயிற் பிஞ்சம். கால் - காற்று. அடி இட - காலை வைக்க. வரை - மலை. தூளின் - புழுதியினால். வாரி - கடல். திடர்பட்டது - மேடாயிற்று.)

  1. சேவல் என்னும் பெயரைக் கொடுப்பது, சிறகுடைய பறவைகளோடு பொருந்தும், பெரிய கரிய தோகையையுடைய மயில் அல்லாத இடத்து.