கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
கந்தர் அலங்காரச்
சொற்பொழிவுகள்
பாகம்-1
கி.வா. ஜகந்நாதன்
அல்லயன்ஸ்
(நூற்றாண்டு கண்ட முதல் தமிழ்ப் புத்தக நிறுவனம்)
உரிமை பதிவு
அல்லயன்ஸ்
முதற் பதிப்பு : 2003
மொத்த பக்கங்கள் (8+352) = 360
விலை: ரூ. 115.00
அல்லயன்ஸ் கம்பெனி
244, ராமகிருஷ்ணா மடம் சாலை,
தபால் பெட்டி எண்: 617,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
தொலைபேசி: 2494 1314
Laser Typeset by - Print Point Graphics, Chennai–20.
Printed at - Kay Em Packaging Industries, Chennai – 14.
பதிப்புரை
'வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் அவர்கள் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகிய எழுத்தாளர்களுள் ஒருவர். எங்கள் நிறுவனர் வி.குப்புஸ்வாமி ஐயருக்கு, மூத்த குமாரர் போல் பழகி வந்தவர். அவருடைய நூல்கள் நமது நிறுவனத்தின் மூலம் மூன்று தலைமுறையினரால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இவர் தமிழ் இலக்கியத்தில் கரை கடந்தவர்; ஆன்மிகத்தில் பரம்பொருளைக் கண்ட ஞானி. எனவே இவரை 'ஞானப் புலவர்' என்று கூறினால், அது மிகையாகாது. இப்புவியில் அவ்வப்போது இப்படிப் பல ஞானப்புலவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பதால்தான், நமது மொழிச் செல்வமும், ஞானச் செல்வமும், இறைவனது கட்டளைப்படி காப்பாற்றப்பட்டு வருகின்றது எனலாம். இப்போதும் நம்மிடையே திரு. சுகி சிவம், திரு. பி.என். பரசுராமன் போன்ற பல ஞானப்புலவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் சாதாரண மனித சக்தியை மீறி, இறைவன் திருவருளால், ஏராளமான சொற்பொழிவுகளையும்; நூல்களையும் இயற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிறவிப் பெருங்கடலை நீந்த நமக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். இவர்களுடைய பேச்சுக்களையும், எழுத்துக்களையும் நாம் பின்பற்றி வந்தாலே போதும். அதுதான் அவர்கள் எல்லாம் பாமரராகிய நமக்குக் காட்டும் வழி.
சற்றேறக்குறைய 600 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு ஞானப் புலவர் இருந்தார். அவர்தான் அருணகிரிநாதர். இறைவனை நேரில் தரிசித்து அருளைப் பெற்றவர். இவர் அருளிய நூல்கள் எல்லாம் நமக்கு, பரப்பிரம்மத்தை உணரவைக்கும் வழிகாட்டிகள். இப்படி இவர் அருளிய நூல்களுள் 'கந்தர் அலங்கார'த்திற்கு விரிவான, அழகான, தெளிவான - தொடர் சொற்பொழிவை, ஒரு சமயம் கி.வா.ஜ. அவர்கள் நிகழ்த்தினார்கள். அந்தச் சொற்பொழிவின் தொகுப்புதான் இந்நூல். இதைப் பற்றி அவரே, தனது முன்னுரையில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.
1986 வாக்கில் ஒரு நாள், அடியேன், கி.வா.ஜ. அவர்களுடன் 'புரூஃப்' பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் என்னிடம், "நீ என்னுடைய அலங்காரப் புத்தகங்களைப் போடுகிறாயா?" என்று கேட்டார். ஒரு தெய்வப் புலவர் எழுதியதை மற்றொரு தெய்வப் புலவர் விளக்கமாகக் கூறிய நூலை 'வெளியிடுகிறாயா?' என்று கேட்கப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன்; இவ்வளவு பெரிய பாக்கியம் நமக்கு உள்ளதா? என்று எண்ணி வியந்தேன். அன்று அவர் போட்ட பிள்ளையார் சுழி இன்றும் தொடர்ந்துகொண்டே போகிறது. எல்லாம் அவன் அருள்! 2005-ம் வருடம் கி.வா.ஜ. அவர்களின் நூற்றாண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் அவருடைய அனைத்து நூல்களையும், ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட, இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நல்லதையே எண்ணினால், நல்லவைகளே நடைபெறும் என்பது ஞான வாக்கு, அதேபோல, இப்படிப்பட்ட நல்ல நூல்களை வெளியிட எண்ணி, அதன்படி நாங்கள் நடந்து வருவதால், இதைப் படிக்கும் வாசகர்களுக்கும் நல்லவைகளே சித்தி பெறும்.
இந்நூல் இப்போது நமது நிறுவனத்தின் மூலம் ஒரே தொகுப்பாக (6 பாகங்களாக) முதல் பதிப்பாக வெளிவந்தாலும், 1956 வாக்கிலிருந்து சிறுசிறு நூல்களாக, அவ்வப்போது வெளியிடப்பட்டதுதான்.
வாசகர்களே! கி.வா.ஜ. அவர்களின் ஞானப் பெருக்கையும், அவர் கையாண்ட தமிழ் அழகையும் நீங்களே படித்து ரஸியுங்கள்; சுவையுங்கள்; போற்றிப் பாதுகாத்து பயன்பெறுங்கள்.
-'அல்லயன்ஸ்'ஸ்ரீநிவாஸன்
உள்ளுறை
1. அலங்காரம்
அருணகிரியார் செய்த அலங்காரம் (7 - 32)
அநுபவப் புதையல் (8), மகாத்மாக்கள் (9), அன்பின் விரிவு (10), வழிகாட்டி (13), கருணைக்கு அருணகிரி (14), அன்பு வித்து (16), அருள்நிலைக்கு உயர்தல் (17), திருப்புகழ் (20), கந்தன் (21), பற்றுக்கோடு (22), கடவுளின் திருவுருவம் (24), பொறியை வசமாக்குதல் (27), அலங்காரம் (28), சொல் அலங்காரம் (30), கந்தர் அலங்காரம் (31)
கடதட கும்பக் களிறு (33 - 46)
மரபு (33), வருவார் தலையில் (34), அடலருணை (34), திருக்கோபுரம் (38), அந்த வாயில் (39), விநாயகர் (40), தடபடெனப்படு குட்டு (41), ஆத்ம சோதனை (42), சர்க்கரை மொக்கிய கை (43), கருணை மதம் (44), காப்பு (46)
கிருபாகரன் (47 - 69)
மூவகை வினை (48), பிரபஞ்சம் (49), பெரிய குடும்பம் (53), சிவபெருமான் (56), கங்காதரன் (57), அரவாபரணன் (59), கொன்றையணிந்தோன் (60), தும்பை சூடினோன் (62), சந்திரசேகரன் (64), மூன்று பகுதி (67), தலைவாசல் (67)
அயில்வேலன் கவி (70 -102)
உபதேசம் (70), அதிகாரி (70), முருகனும் தமிழும் (71), நாக்குத் திருந்த (72), மறைமுகமாகப் புலப்படுத்தல் (73), உடம்படு புணர்தல் (74), கால நிலை (75), ஞான சக்தி (76), கற்றல் (77), அநுபவ ஞானம் (78), தமிழர் வாழ்வில் பாட்டு (81), எழுத்துக்கள் (82), மழலையும் பேச்சும் (82), பேச்சிலே சிறந்தது (84), வாய் பெற்ற பயன். (88), யாரைப் புகழ்வது? (89), அதன் பயன் (92), அப்போது நினைத்தல் (92), கலந்து பாடுதல் (94), பாதுகாப்பு (96), மரண வேதனை (97), பயமும் பக்தியும் (98), எப்போது வருவான்? (100)
வேலின் பெருமை (103 - 120)
கவிஞன் கலை (104), திரிபுர சங்காரம் (104), வேஷம் மாறுதல் (107), இறைவன் கருணை (108), உட்கருத்து (109), வேலின் செயல் (111), கிரெளஞ்ச சங்காரம் (111), அசுரசங்காரம் (113), சூரசங்காரம் (113), தேவர் பெற்ற வாழ்வு (114), அசுரசம்பத்தும் தேவசம்பத்தும் (114), இருவகைக் கருணை (115), மூன்று இயல் (117), கந்த புராணம் (118), பழைய வரலாறுகள் (119)
2. குறிஞ்சிக் கிழவன்
உடம்பாகிய வீடு (130), யாருக்குச் சொந்தம் (130), குடியிருக்கும் வீடு (132), ஐவர் செயல் (132), ஐந்து களிறு (1.36), விதை நெல் (136), பொறியை அடக்குதல் (138), மாடும் முளையும் (140), மனத் திண்மை (143), ஒருமைப்பாடு (147), வேற்றுமையில் ஒற்றுமை (147), ஒர்தலும் உன்னுதலும் (149), மூன்று நிலை (150), சூர சங்காரம் (152), கருணை வீரம் (156)
குறிஞ்சிக் கிழவன் (160 - 187)
சொல்லும் முறை (160), கிழவன் (160), ஐந்திணை (161), குறிஞ்சி (162), குறிஞ்சிக் கடவுள் (162), சமத்காரம் (163), என்றும் இளையவன் (164), குழந்தையின் செயல்கள் (164), முருகக் குழந்தையின் செயல்கள் (166), புவனங்கள் ஈன்ற பாவை (168), உயிர்கள் திருந்தல் (170), அவதாரக் கதை (172), ஐம்பூத முத்திரை (174), இறைவியின் அருள் (176), தாமரைத் தொட்டில் (178), கார்த்திகை மாதர் (180), அழுகையின் எதிரொலி (182), புதிய கதை (185)
தனிப் பரமானந்தம் (188 - 212)
புராணச் செய்திகள் (188), தமிழ்நாடும் கடவுளன்பும் (188), பழங்காலம் (189), தொகுத்து அறிதல் (189), வள்ளி திருமணம் (191), இரண்டு மணம் (192), கந்த புராணமும் சொந்தப் புராணமும் (194), தினைப் புனம் (195), தினையும் நெல்லும் (196), தினைகாத்தல் (199), ஓடிவந்தான் (200), அழைத்தால் வருவான் (201), கருணை மலிவு (203), மெல்ல மெல்ல உள்ளுதல் (204), ஆனந்தம் அரும்புதல் (205), கரும்பும் தேனும் (208), முன்னும் பின்னும் (210)
பேய் விளையாட்டு (213 - 234)
மயக்கம் (213), வஞ்சனை (216), அசட்டுச் செயல் (218), பேய்க் கூத்து (221), திருமுருகாற்றுப்படையில் (222), பரணி நூல்கள் (226), மரபு வழியே (228), திருவகுப்பு (229), பேய் விளையாட்டு (232), மார்பிற் புண் (232)
3. ஆனந்தத் தேன்
ஆனந்தத் தேன் (245 - 270)
அநுபவமும் வியப்பும் (245), தேசிகன் (246), மலையின் தோற்றம் (247), பார்வை விரிதல் (248), குணம் என்னும் குன்று (250), மலைத்தேன் (251), ஆனந்தத் தேன் (252), குறிப்பாகச் சொல்லுதல் (254), சித்தர் பாட்டு (255), உள் உருக்கும் தேன் (257), இருளும் ஒளியும் (258), அருள் ஒளி (259), ஞான மலை (261), அறிவும் அன்பும் (262), தோழியும் மணப்பெண்ணும் (263), அறிவு நழுவுதல் (265), வெறும் பாழ் (266), வெறுந்தனி (268)
வள்ளி கோன் உபதேசம் (271 - 288)
ஹிந்து மதம் (271), அருளியல் ஒற்றுமை (272), வைதிக மதம் (273), சுட்டாத வேதம் (274), நேதி (275), எதிர்மறைத் துதி (275), அன்மைச் சொல் (276), வள்ளி நாயகி (277), மொழி இனிமை (278), தேன் மொழி (279), பாகு மொழி (281), அன்று (282), மூவகைச் சுட்டு (282), உபதேசம் (283), வான் அன்று (284), கால் அன்று (284), தீ அன்று (285), நீர் அன்று (285), மண் அன்று (285), மூவிடம் (286)
சும்மா இருக்கும் எல்லை (289 - 303)
மயிலின் வேகம் (304 - 322)
வேலும் மயிலும் (304), பரிபாடலில் (306), பிரணவ உருவம் (307), பாசப் பாம்பு (307), வாசி யோகம் (308), மூன்று வாகனங்கள் (309), மூன்று மயில்கள் (310), மயிலான சூரன் (311), மயிலின் வீரம் (311), வெற்றி வேலோன் வாகனம் (318), மேரு அசைதல் (315), உயர்வு நவிற்சி (316), மலையும் கடலும் (317), மேடும் பள்ளமும் (317), சமநிலை (318), சமநிலை பெற்றோர் (319), சாத்தியமா? (319), மயில்வாகனன் சமநிலை அருளுதல் (321)
சேவற் பதாகை (323 - 341)
இயல்புக்கு ஏற்ற கற்பனை (323), அருணகிரி நாதக் குழந்தை (324), புகழ் விரிக்கும் மரபு (325), விறகு சுமந்த சொக்கன் (325), சேவலின் பெருமை (327), வாகனமும் கொடியும் (328), நாத தத்துவம் (328), சேவலான சூரபன்மன் (329), கொக்கறு கோ (329), அன்பும் நினைப்பும் (330), ஹரதத்தர் மனப்பண்பு (331), ஆஞ்சநேயர் பண்பு (332), உலகத்துக் கோழி (332), அகவிருள் (333), சாதன அருள் (333), வேலவன் (334), தடையற்ற சேவல் (335), சிறகடிக்கும் சேவல் (336), பிறவிக் கடல் (337), பிரபஞ்ச வாசனை (337), தேவலோக இன்பம் (338), அகங்கார மமகாரங்கள் (339), ஞான உதயம் (340)
கிங்கிணி ஓசை (342 - 352)
குழந்தைப் பருவம் (342), சோமாஸ்கந்தர் (343), தாயின் சார்பு (344), கிங்கிணி ஓசை (346), அசுரர் நிலை (346), திக்குச் செவிடு படல் (347), மலைகள் அதிர்தல் (348), வைராக்கிய வகை (349), அசுர இயல்பு (350), தேவர் மகிழ்ச்சி (350), முருகன் பராக்கிரமம் (351)
முகவுரை
முருகனுடைய திருவருளில் ஈடுபட்டவர்கள் பலர். ஆனால் மற்றவர்களையும் அப்படி ஈடுபடச் செய்யும் வழிகாட்டிகளிலே சிறந்தவர் அருணகிரிநாதர். அவர் பாடிய திருப்புகழ் இன்று தமிழர் வாழும் இடமெல்லாம் பரவி முருக பக்தியை மேன்மேலும் வளர்த்து வருகிறது. அந்த நூலையன்றி அருணகிரிநாதப் பெருமான் அருளிய கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்னும் நூல்களும் அற்புதமானவை; பாராயண நூல்களாக மேற்கொள்வதற்கு உரியவை.
கந்தர் அலங்காரம் நூறு கட்டளைக் கலித்துறையால் ஆகியது.
“கந்தன் நன்னூல்"
அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற் றறிந்தவரே"
என்று அந்நூலின் பயனாக உள்ள பாட்டினால், அது நூறு பாடல்களை உடையது என்று தெரிய வருகிறது. ஆயினும் நூற்றுக்கு அப்பாலும் சில கவிகள் வழக்கில் இருந்து வருகின்றன.
அலங்காரம் என்ற பெயரோடு உள்ள நூல்கள் முன்பும் தமிழில் இருந்தன. ஆனால் அவை தமிழ் இலக்கணம் ஐந்தில் ஒன்றாகிய அணி இலக்கணத்தைச் சொல்லும் நூல்கள். தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் என்பவை அத்தகையனவே. கண்டன் அலங்காரம் என்ற நூல் ஒன்று முன்பு இருந்த தென்று தெரிய வருகிறது. அதிலுள்ள சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது கிடைக்கின்றன. அவற்றிலிருந்து அது கண்டன் என்னும் சிறப்புப் பெயரை உடைய இரண்டாம் இராசராச சோழனுடைய புகழைச் சொல்லும் நூல் என்றும், அகத்துறைப் பாடல்கள் அமைந்தது என்றும் புலனாகிறது. சமீப காலத்தில் வாழ்ந்த திருப்புகழ்ச் சுவாமிகள் என்ற தண்டபாணி சுவாமிகள் தமிழ் அலங்காரம் என்று ஒரு நூல் பாடியுள்ளார். அது தமிழின் பெருமையை விளக்கும் நூல். கந்தர் அலங்காரத்தை எண்ணி அமைத்த பெயர் அது என்றே தோன்றுகிறது. இவற்றையன்றிச் சொக்கர் அலங்காரம் என்ற பெயரோடு ரெயில் உண்டான புதிதில் ரெயில் பிரயாணத்தைப் பற்றியும் மதுரைத் தலத்தைப் பற்றியும் யாரோ பாடிய இசைப்பாட்டு ஒன்று உண்டு.
கந்தருக்கு அலங்காரமாக அமைந்த நூலாதலால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. அருணகிரி நாதருடைய நூல்கள் யாவற்றுக்கும் பொதுவாக அமைந்த இயல்புகளை இதிலும் காணலாம். இந்த நூலுக்குச் சில அன்பர்கள் பொருள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.
*
தேனாம்பேட்டை, பால சுப்பிரமணிய தேவஸ்தானத்து அறப்பாதுகாப்பாளராகிய ஸ்ரீ சந்திரசேகரன் அவர்களும் பிறரும் என்னிடம் அன்பு கூர்ந்து பல முறை தம் விருப்பம் ஒன்றைத் தெரிவித்துக் கொண்டார்கள். ஏதேனும் ஒரு நூலைப் பற்றி வாரந்தோறும் ஒரு நாள் அவ்வாலயத்தில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்று சொன்னார்கள். வரையறையாக இடையீடின்றிச் செய்ய வேண்டிய கடமையாதலின், நான் மெல்லப் போக்குக் கூறிக் காலம் கழித்து வந்தேன். அவர்களும் விடாப்பிடியாக என்னைத் தம் அன்பு வலைக்குள் போட்டு இறுக்கி வந்தனர். கடைசியில் ஒப்புக் கொண்டேன். முருகன் திருவருளைத் துணைக் கொண்டு ஏதோ ஒரு வகையில் வாரந்தோறும் கந்தர் அலங்கார விரிவுரை ஆற்றலாம் என்ற நம்பிக்கை எழுந்தது. திருமுருகாற்றுப் படை, கந்தர் அநுபூதி, ஞானசம்பந்தர் தேவாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து சொல்லியதுண்டு. அந்த வழக்கத்தால், இதையும் நிறைவேற்றலாம் என்று எண்ணினேன். நான் இந்தக் கடமையை ஏற்றுக் கொண்டதற்கு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. எப்படியும் வாரம் ஒரு முறையாவது முருகனைப் பற்றி ஆழ்ந்து நினைந்து விரிவாகச் பேச வேண்டிய கட்டுப்பாடாக இருப்பதால் என் மனத்தில் உணர்ச்சி உண்டாகும் அல்லவா? எதை எதையோ பேசுவதற்கு இடையிலே,"அயில் வேலன் கவியை"ப் பேச வகை அவனருளால் வந்தது என்று எண்ணினேன். அதுவே இப்பணியில் புகுவதற்குரிய தலைமையான காரணம். இந்தச் சொற்பொழிவுத் தொடர் 25.1.1956 அன்று தொடங்கியது. என்னுடைய அன்பரும் நல்ல பக்தருமாகிய ஸ்ரீ அனந்தன் அவர்கள் ஒவ்வொரு வாரமும் நான் பேசுவதைச் சுருக்கெழுத்தில் எடுத்து மீட்டும் தட்டெழுத்தில் பெயர்த்துத் தரும் அரிய உபகாரத்தைச் செய்ய முன்வந்தார். அவராகவே அன்பு வைத்து இதனைச் செய்யத் தொடங்கினார். அவர் அப்படிச் செய்வதை அறிந்த அமுத நிலையத் தலைவரும் என் கெழுதகை நண்பருமாகிய ஸ்ரீ ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் அவர் எழுதுபவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அவர் விருப்பப்படியே இந்த வெளியீடுகள் இப்போது உருவாகின்றன.
கந்தர் அலங்காரப் பாடல்களுக்கு மாத்திரம் விளக்கம் எழுதினால் அது இவ்வளவு விரியாது. சொற்பொழிவுகளாக ஆற்றியதால் சொல் விளக்கமும், பொருள் விளக்கமும் இருப்பதோடு, உவமை, உதாரணம், மேற்கோள், தத்துவம், பழங்கதை, ஒப்புமை, அநுபவச் செய்தி ஆகியவற்றையும் இவற்றில் காணலாம். பேசும்போது கேட்டதையே படித்தால், கேட்கும்போது இருந்த சுவை ஓரளவு குறையும். சில இடங்களில் பன்னிப் பன்னிச் சொன்னதுபோலத் தோற்றும். ஓரிடத்தில் சொன்ன செய்தியே வேறு ஓரிடத்தில் வருவதும் கூடும். ஆயினும் சொற்பொழிவு நடையாகவே இருக்கட்டும் என்ற நினைவினால் அவற்றை நான் சுருக்கவில்லை. ஒரு முறை இவற்றைப் பார்த்துக் சிறிதளவே செப்பஞ் செய்து, வெளியிடக் கொடுத்து விட்டேன்.
இது புதுவகையான முயற்சி. அன்பர்கள் நன்றாக இருக்கிறதென்றால் முயற்சி வெற்றி பெற்றது என்று மகிழ்வேன். அன்பர்களின் கருத்தைத் தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றபடி செய்யலாம் என்று தோன்றுகிறது. இந்த முயற்சி உருவாக அருளிய முருகன் திருவருளை வழுத்துகிறேன்.
என் சொற்பொழிவுகளை ஒரு மணி, ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து சுருக்கெழுத்தில் எடுத்து மீட்டும் தட்டெழுத்துருவில் வடித்துத் தரும் அன்பர் ஸ்ரீ அனந்தனுடைய பேரன்புக்கு என்ன கைம்மாறு செய்வது? அவருடைய உதவியே இந்த வரிசைக்கு உரமூட்டுகிறது. அவருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணி என்னைத் தூண்டி ஊக்கமூட்டி வரும் அன்பர் ஸ்ரீ ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் இந்த வரிசை மலர்வதற்கு நீர் வார்க்கிறவர். அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சொற்பொழிவு வரிசையைப் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நிகழ்த்தும்படி பணித்து என்னை இப்பணியில் புகச் செய்த ஆலயக் காப்பாளர் ஸ்ரீ சந்திரசேகரன், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ திருவேங்கட நாயகர் முதலியவர்களுக்கும் வாரந்தோறும் இச்சொற்பொழிவுகளைக் கேட்டு ஊக்கமூட்டிவரும் அன்பர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.
முருகன் திருவருளால் கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் இனிது நிறைவேறுமென்று நம்புகிறேன்.
கி.வா. ஜகந்நாதன்
01.01.1956