கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்/007-010


ஒரு நண்பகலில்,
அந்தத் தென்னந் தோப்பில்
நீ நித்திரையில் ஆழ்ந்திருக்கிறாய்.

உலகத்தின்
அமர செளந்தரியம் அனைத்தும்
உன்னிடம் கொலுவிருப்பதைத்
தரிசித்து மெய்மறக்கிறேன்.

புரட்சியில் மலர்ந்த சோவியத் பூமியின்
கூட்டுப் பண்ணைகளைப்
பார்த்து மலைக்கும்
ஒர் இந்திய உழவனைப் போல் வியப்படைகிறேன்;
அந்த வியப்பில் ஆழ்ந்தபடியே
உன்னை எழுப்பாமல், நிற்கிறேன்.

அப்படி எழுப்பினால்,
ஒரு கல்லை வீசியதும்
வரிசை வரிசையாய்
அமர்ந்திருக்கும்
பறவைகள் சிதறிப்
பறப்பதைப் போல்
உன் துயில் அழகுகள்
சிதறிப் பறந்து விடுமே
என்று அஞ்சுகிறேன்.



55


ஒரு மாலையில்,
நீ புல்லாங்குழலை
ஊதிக் கொண்டிருக்கிறாய்.

உன் உதடு படும் பேறு
அதற்குக் கிடைத்ததே
என்று பொறாமைப் படுகிறேன்.

சின்னப் பிள்ளையிடம் ஏமாற்றி ஏமாற்றிப்
பண்டங்களை வாங்கித் தின்னும்
கெட்டிக்கார வேலைக்காரி போல்
அது உன் வாயமுதத்தைக்
கொள்ளையடிப்பதைக் கண்டு
கோபப்படுகிறேன்.

“அந்தப் புல்லாங்குழலைக் கொடு” என்கிறேன்,

“சும்மா வாங்கப்பார்க்கிறீர்களே” என்கிறாய்:

“ஏதாவது கொடுத்து வாங்குகிறேன்”
என்று உன்னை நெருங்குகிறேன்.

மண்ணும் விண்ணும் ஒன்றாகின்றன.





56




ஒரு வைகறையில்,
நீ ஈர உடையோடு வருகிறாய்;
உன்னை மேலும் கீழும் பார்க்கிறேன்.

கண்ணாடிக் கிண்ணத்தில் தென்படும்
திராட்சைச் சாறு போல
நீ என் விழிக்கு விருந்து வைக்கிறாய்.

“இந்த அழகை இதுவரை நான் பார்த்ததில்லையே.”

“உம்......”

“இரு கைகளாலும் அப்படியே அள்ளப் போகிறேன்.”

“வீதியில் இப்படி விளையாடலாமா?
விலகுங்கள்... நீரோடு நிற்கிறேன்...”

“நான் மேனியை நீறாக்கும்
நெருப்போடு நின்று கொண்டிருக்கிறேன்...”

“பேசாமல் அந்தக் குளத்தில் போய்க்குதியுங்கள்;
நான் போகிறேன்.”

“உன் பாதம் பட்ட படித்துறையையாவது
காட்டி விட்டுப் போகக் கூடாதா?”

இதுவும் ஒரு கனவுதான்!



57


ஒரு காலையில்,
என்னைக் கண்டு மலர்ந்த
உன் கருநீலப் பூக்களைக் கவனித்ததும்
என் வாய்
தமிழ் பேசத் தொடங்குகிறது.

“சில பூக்கள் கொடியில் மலரும்;
சில பூக்கள் செடியில் மலரும்;
சில பூக்கள் மரத்தில் மலரும்.”
- நான் முடிக்கவில்லை.

“நீங்கள் ஏதோ சொல்லப்போகிறீர்கள்.”
என்று நீ சிணுங்குகிறாய்.

“வேறொன்றுமில்லை.
சில பூக்கள்
என் காதலியின் முகத்தில் மலரும்
என்று சொல்ல வந்தேன்”

உடனே நீ நாணிச் சிவக்கிறாய்.

“அடடா.. சில பூக்கள்
என் காதலியின் கன்னத்திலும் மலரும்”
என்கிறேன்.




58




நான்
“தலைநகரில்
எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள்;
என்னையும் அழைத்திருக்கிறார்கள்”
என்கிறேன்.
 
நீ
“என்ன பரிசு”
என்று கேட்கிறாய்.

"இரண்டாம் பரிசுதான்."

நீ என்ன நினைத்தாயோ
செவ்விதழைக் கடித்தவாறு
“விடுங்கள்- நான் முதற் பரிசு தருகிறேன்...”
என்கிறாய்.

நான் என் கண்களை
உன் கண்களில் செருகியவாறு,
“என் இரண்டாம் பரிசே! உனக்கு நன்றி”
என்கிறேன்.


59




நீ தொடங்குகிறாய்;

“ஊருக்குப் போகிறேன்;
உங்களுக்குச் சங்கடமாக இருக்கிறதா?”

“ஆமாம் இரண்டு நாட்களுக்குச்
சங்கடமாகத்தான் இருக்கும்”

“அப்படியானால்
அதற்குப்பின் சங்கடமாயிருக்காதோ?
சரியாய்ப் போய்விடுமோ,”
- நீ ஊடிப் பிணங்குகிறாய்.

“அதற்குப் பின்தான்
நீயே வந்து விடுவாயே.
இரண்டு நாட்களுக்கு மேல்
என்னைப் பிரிந்து உன்னால்
இருக்க முடியாதே”
- நான் உன் ஊடலை அணைக்கிறேன்.

உன் முகம்
பெளர்ணமிப் புன்னகை சிந்துகிறது.


60



நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.
நீ சிரிக்கிறாய்.

புதிதாய்த்
தானம் கொடுக்கப் புறப்பட்டவன்
ஆள் தெரியாமல்
கர்ணன் வீட்டுக்
கதவைத் தட்டுவதைப் போல் -

புதிதாய்ச்
சாற்றுக்கவி பாடப் பழகியவன்
அடையாளம் தெரியாமல்
கம்பன் தெருவில்
கால்வைப்பதைப் போல்

நான் உனக்குப் பூச்சூட்டுகிறேன்.

பூங்கொடியே,
நீ சிரிக்காமல்
என்ன செய்வாய்?



61

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)



உன் செவியில் மெதுவாகச் சொல்கிறேன்;

நான் இல்லாதபோது சிரிக்காதே
சிரித்தால்,
உன் புன்னகைகளைக் கவர்ந்து சென்று
தூர தேசத்தில்
மணிகள் என்று விற்றுவிடச்
சிலர் காத்திருக்கிறார்கள்.

நான் இல்லாதபோது கண்ணிர் சிந்தாதே.
சிந்தினால்,
உன் கண்ணிர்த் துளிகளைச் சேகரித்து
அந்நிய நாட்டுச் சந்தைகளில்
முத்துக்கள் என்று விற்பதற்குச்
சிலர் தயாராயிருக்கிறார்கள்.

இனிமேல்
சிரிப்பதென்றாலும், அழுவதென்றாலும்
நான் இருக்கும்போது சிரி; அழு!

ஓ... நான் இருக்கும்போது
நீ அழவேண்டிய அவசியமில்லை.




62



உன் நெற்றியைப் பார்த்துவிட்டு
“எந்தக் கோயிலுக்குப்
போய்விட்டு வருகிறாய்”
என்கிறேன்.

“முருகன் போயிலுக்கு.”
பதில் பஞ்சாமிர்தமாய வருகிறது.

“அவன்
ஒரு மயில் மேல் மட்டுமல்ல
இரு மயில்களோடும் இருக்கிறான்
என்பதை மறந்து விட்டாயா?”
என்கிறேன்.

“அந்தத் துணிச்சலில்
அரைவாசியாவது
உங்களுக்கு இருந்தால்
இந்நேரம்...
என்று தான் நிலை துக் கொண்டு வருகிறேன்”
உன் பதில் வேலாய் வந்து விழுகிறது.

நீ பொல்லாதவள்!


63



“உலகத்திலேயே
நான்தான் பெரிய கொள்ளைக்காரன்” என்கிறேன்.

“நீங்களா?” என்று கேட்டு வியக்கிறாய்.

“ஆமாம்.
உன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள
அழகுச் செல்வத்தையெல்லாம்
நான்தானே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறேன்.

பாவம்,
நீ இவ்வளவு அழகைப் பெற்றிருந்தும் அனுபவிக்க முடியவில்லையே!
செல்வத்தைச் சேர்ப்பவர் ஒருவர்;
துய்ப்பவர் ஒருவர்.
உண்மையில் நான் கொடுத்து வைத்தவன்” என்கிறேன்.

“நீ சிரித்துக்கொண்டே
பாவம், நீங்கள் ஏமாந்து போய்விட்டீர்கள்; நான் வெறும் அழகைக் கொடுத்துவிட்டு உங்கள் அழியா அன்பு முழுவதையும் கொள்ளையடித்து விட்டேனே.”
என்கிறாய்.

நீ மிகமிகப் பொல்லாதவள்.

64