கனிச்சாறு முதல் தொகுதி

(தமிழ், இந்தி எதிர்ப்பு)

பாடல் விளக்கக் குறிப்புகள்

–தமிழ்–

1.தமிழால் பிழைக்கும் எத்தர்களுக்குச் சொன்னது.

2.இளமையிலே உளம் புகுந்த தமிழச்சியை அவள் பிறப்பு, பெருமை, புலமை, இளமை, வளமை முதலிய எழில் நலங்கள் கூறி ஏத்துவது இந்தப் பாட்டு.

3. “9.3.1953 - அன்று ஓரகவையுள்ள எம் மகள் பொற்கொடிக்குக் கடுங் காய்ச்சலும்.மார்ச்சளியும் வந்து ஐந்தாறு நாட்களாக மிகக் கொடுமை செய்தன. அதுகால், ஓர் இரவு முழுதும் நொந்து வருந்தி, நோய் தீர்க்கும் பொருட்டுத் தமிழ்த்தாயை வேண்டி எழுதிய பாக்கள் இவை. இவற்றை எழுதிய ஓரிரு நாட்களில் குழந்தை சாவினின்று மீண்டது குறிப்பிடற்குரியது” - என்று இப்பாடலுக்குக் குறிப்பெழுதியுள்ளார் பாவலரேறு.

4. வடமொழியினின்றே தமிழ் தோன்றியது என்னும் கருத்தை மறுத்துக் கூட்டுக்கிளியிடம் கூறியது.

5. பாட்டின் சிறப்பினையும், அப் பாட்டு வெளிப்பாட்டுக்கான ஏந்துடையதாக மொழிச் சிறப்பு பொருந்தியதாக இருத்தல் வேண்டுமென்பதற்கேற்ப அமைந்துள்ள தமிழ் மொழியின் அருஞ்சிறப்பினையும் அழகுற விளக்குகிறார் பாவலரேறு. (பழைய குறிப்புச் சுவடியினின்றும் எடுக்கப்பட்ட இப்பாடல், ஆங்காங்குச் சிறிது சிதைவுபட்டுள்ளமையால் சிலவிடங்களில் சொற் பொருளியைபு புலப்படவில்லை.)

6. முத்தமிழ் இலக்கணங் கூறும் முப்பது குறள் வெண்பாக்கள்.

7. தமிழ்த்தாயை வாழ்த்திப் புகழ்பாடும் இனிய பத்துப் பாடல்கள். சுவைத்துப் போற்றத்தக்கவை.

8. தமிழினம் மானமிழந்து செத்தழிந்து போகுமுன்னே முனைந்து முத்தமிழைக் காக்கவேண்டும், வாருங்கள் என்று விடுக்கும் அழைப்பு இது.

9.தமிழைக் கெடுக்கின்ற கெடுமனங்களை வெட்டிப் புதைப்பதற்கு எடுத்த சூளுரை இது.

10. ‘மொழியெனப்படுவது விழியெனக் கூறித் தெள்ளுதமிழ் மொழியாமே மூங்கையவர் சொற்கலந்து மொழிகுவதும் தமிழாமோ? தமிழ்நாட்டவரே, தூய தமிழில் பேசுங்கள்’ என்று அறிவுறுத்துகிறது இப்பாட்டு.

11. “தாயைக் காத்திடு முன்னம் ஆன்றோர் தமிழைக் காத்திடற்கெழுவாய்” என்று மகனுக்குப் பெற்ற தாய் கட்டளையிடுகின்றாள் இப் பாட்டில்.

12.தமிழ்த்தாய்க்கு வந்த இடர்ப்பாடுகளைக் களையாமல் காதலும் கவர்ச்சி தராது என்னும் அழகிய நான்கு வெண்பாக்கள்.

13. தமிழ்த் தொடர்பற்ற எந்த வினையும் தமிழினத்திற்கும் நாட்டிற்கும் நன்மை செய்வதில்லை என்பதிது.

14. தமிழ்மொழிக்குக் கேடு செய்வோனை உயிர்வாங்கவும் தயங்கேன் என்பது.

15. ஆசிரியர் தம் பள்ளி, கல்லூரிக் காலங்களில் 'கவிதை' எனும் தலைப்பிட்டுத் தொகுத்து எழுதிய பாடல்களில் இஃதும் ஒன்று.

16. வடசொற்களைத் தமிழில் எவ்வாறு எழுதுவது எனப் பேராயக் கட்சியைச் சார்ந்த அன்றைய ஆட்சியாளர்கள் வினா எழுப்ப, அதற்கு விடையாக எழுதியது இப் பாடல்.

17. இப் பாடலில் பழந்தமிழ் இலக்கியத்தைப் பருகிய தும்பிபோல் முழங்கிப் பாடி மகிழ்வு கொள்கிறார் ஆசிரியர்.

18. செந்தமிழ்த் தாயிடம் ஒரு சூளுரைப்பு.

19. இளைஞர்கள் தமிழிலேயே கற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது இது.

20. “இளைஞரீர். உங்கள் இளமைதருங் கனவு ஒருபால் இருக்கட்டும், செழுமையுறும் தமிழ்க் குலத்தைச் செம்மை செய்து, செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்ற வழிசெய்யுங்கள்" என்று ஏவுகிறது இப் பாடல்.

21. மொழிநலத்தையும் இன நலத்தையும் காவாதார் 'தமிழ் நலம் காப்போம்' என்பது நரிச் செயலன்றி வேறென்ன என்பது.

22. மொழிப்போர் புரிய அழைப்பு இது.

23. பாட்டியற்றுவோரும், மேடையில் பேசுவோரும் தமிழ்மொழியைப் பேணுதல் வேண்டும் என்பது.

24. வழக்கிழந்துபோன மொழிகளெல்லாம் புதுப்பிக்கப்பெறும்பொழுது, உயர்தனிச் செம்மொழியாகிய தமிழைச் சீரழிக்கின்றவரை மல்லறையால் திருத்த வேண்டும் என்பது.

25. 1965ஆம் ஆண்டு எழுந்த இந்தியெதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது ஆசிரியர் தென்மொழியில் வீறு சான்ற ஆசிரியவுரைகளையும் பாடல்களையும் எழுதிமாணவர்க்கும் பொதுமக்கட்கும் உணர்வும் ஊக்கமும் ஊட்டினார். அதன் பொருட்டு அவர்மேல் அரசு வழக்குப் போட்டுச் சிறைக்கு அனுப்பியது. வேலூர்ச் சிறையுள் இரண்டு மாதங்கள் சிறையிருந்தார். அக்கால் சிலை(மார்கழி) மாதமாகையால் சிறைக்கு வெளியே, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒலிபெருக்கியில் கேட்கும். அந்த உணர்வு இவரையும் தமிழ்மொழிப் போராட்டத்திற்கென இளம்பெண்களை எழுப்புவது போலும் ஒரு பாவைப் பாடலை யெழுதத் தூண்டியது. அக்கால் எழுதிய பாடல் இது. இதுவன்றிச் சிறையிருந்த அப்பொழுது ஐயை (முதல் பகுதி) பாவியமும் 'சிறையகம் புக்க காதை' (பாடல் எண் : 74), பாடல் போலும் பிற

பாடல்களையும் எழுதியது குறிப்பிடத்தக்கது. செந்தமிழின் பொருட்டு எழுந்த விழிப்புணர்வுப் பாடல்களாகையால், இவை செந்தமிழ்ப் பாவை எனப்பெற்றன. அழகிய, இனிய, உணர்வு மிக்க வளங்கெழுமிய சொற்களால் இப்பாடல்கள் இயங்குவதை இசைத்தும் ஆழ்ந்துணர்ந்தும் மகிழலாம். தமிழர் ஒவ்வொருவரும் தம்தம் பெண்டிர்க்கும் பிள்ளைகளுக்கும் இவற்றைப் பாடிக்காட்டிப் பயனுறுதல் வேண்டும்.

26. 1965இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முத்துச் சண்முகம் என்ற பேராசிரியர் மொழியியல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் வண்ணனை மொழியியல் (Descriptive Linguistics) என்னும் மொழியியலை மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். அவர் பேச்சுத்தமிழே (Spoken Tamil)உண்மைத் தமிழ்: பிற இலக்கியத் தமிழ் உண்மைத் தமிழன்று என்னும் கருத்துக்கொண்டு தாறுமாறாகத் தமிழைக் கெடுத்துவந்தார். தமிழ் கற்பதற்காகத் தமிழகம்வந்த ஏறத்தாழ இருபது வெளிநாட்டு அயல்மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பொறுப்பு அவரிடம் விடப்பெற்றிருந்தது. அவர்களுக்கு அவர் பேச்சுத் தமிழாகிய கொச்சைத் தமிழையே உண்மைத் தமிழ் என்று பயிற்றுவித்து மிகுதியும் தமிழ்க்கேடு புரிந்து வந்தார். அவர் ஒருகால் 'கலைக்கதிர்' என்னும் அறிவியல் திங்கள் வெளியீட்டில், 'தென்மொழி' எழுதும் தமிழ் செயற்கைத் தமிழ் என்றும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம் முதலிய இதழ்களில் எழுதப்பெறும் தமிழே உண்மைத் தமிழ்' என்றும் தம் கருத்தை ஒரு கட்டுரையில் வெளியிட்டிருந்தார். அவர் கொள்கையைத் தாக்கியும் அவரைக் கண்டித்தும் எழுதிய பாடல் இது.இப்பாடலை எழுதியதுடன் அமையாமல், ஆசிரியர் ஒருகால் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போந்து மாணவர்களுடன் அப் பேராசிரியர் இல்லத்திற்கும் சென்று, அவரை நேருக்கு நேராகக் கண்டு இது போலும் தவறான கருத்துரைகளை இனி உரைத்தல் கூடாது எனவும் எச்சரித்தார். அவர் 'இனி அவ்வாறு உரையேன்’ என்று உறுதி தந்த பின்னரே, மாணவர்கள் அவரை வாளாவிடுத்தனர் என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.

27. தமிழ்நாட்டின் முதலமைச்சரே தமிழ்க்குப் பகையாயிருப்பதைப் போலும் கீழ்மை வேறெங்கேனும் இருக்குமா? 1965ஆம் ஆண்டில் பத்தவத்சலம் ஆட்சியில் நிலைமை அப்படியிருந்தது.

28. தமிழ் கற்போரே பொருளுக்காகத் தமிழ்மொழியை இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். அந்நிலையை மற்போரால் தடுத்தல் வேண்டும் என்பது.

29. இக்கால் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் படிக்கின்ற இளைஞர்க்கும் மங்கையர்க்கும் செந்தமிழ்மேல் ஆவல் இருப்பதில்லை. அவர்கள் நெஞ்சில் தமிழ் இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது இந்தப் பாட்டு.

30.அதிகாரத்தில் இருப்பவர்கள் தமிழ்மொழியில் அக்கறையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஆனால் 1967இல் தமிழரசின் சட்டப் பேரவைத் தலைவராக இருந்த ஒருவர் கொச்சைத் தமிழில் தினத்தந்தி, ராணி என்னும் இதழ்களை நடத்தித் தமிழைக் கெடுப்பவராக இருக்கிறாரே என்று அந்நிலையை, இழித்துக் கூறியது.
31. 'அகத்தில் ஒளி பெருகி, மருள் விலகி, புதுமைபெறும் வாழ்வு' என்று பாவலரேறு விளக்குவதெல்லாம் தமிழ் படித்தால் கிடைக்கும் நலன்களே.
32.'தமிழனைத் தமிழனே தலையறுக்கின்றான். மிகக் கொடிய இந்நிலை மாற வேண்டும். தமிழ் எனும் ஒரு கூட்டினுள் தமிழினம் ஒன்றுபடல் வேண்டும்' என்று முழங்குகிறது இது.
33. 'தமிழ் வாழ்க!' என்று உரக்க முழங்குவதிலும், பட்டிமன்றம் வைத்து வழக்கிடுவதிலும், பாட்டரங்கில் இசைப்பதிலும் தமிழ் வாழாது: தமிழ் கற்ற அறிஞர்களைப் போற்றுங்கள்: புரந்து நில்லுங்கள்; தூயதமிழைப் பேசுங்கள். அறிவியல், கலை, அனைத்தையும் தமிழ் ஆக்குங்கள். அப்பொழுதுதான் தமிழ் நிலைத்து வாழும்' என்கிறது இப்பாட்டு, 34. அறிவியலைக் கற்கத் தாய்மொழிக்கே முதற் சலுகை தரவேண்டும் என்று விளக்குகின்ற பாடல் இது.
35. தமிழ்நாட்டில் தமிழில் படிப்பதுதானே முறை?
36. தமிழைக் கெடுக்கும் இதழ்களைக் கண்டித்தது.
37. சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டுப் பிராமணர் இந்தியத் திரவிட மொழியியல் ஆராய்ச்சித் துறைக்குத் தலைமை தாங்கினார். அவர் பல வழிகளிலும் தமிழ்மொழிக்குக் கிடைத்த உண்மை நலன்களையெல்லாம் மட்டந்தட்டி வந்தார். சமற்கிருத மொழியையே தலைமேல் வைத்து மறைமுகமாகப் பாராட்டி வந்தார். அவருக்குக் கையாளாகத் தமிழகத்திலிருந்து செயற்பட்டு வந்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறைப் பேராசிரியராகவிருந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரனார். அதனால் அவர்க்கு அரசுச் சார்பில் பலவகை நலன்களும் கிடைத்து வந்தன. ஒருமுறை சட்டர்சி ஒரு கருத்தரங்கில் ‘சமற்கிருத மொழியின்றித் தமிழ்மொழி இயங்காது' என்னும் உண்மைக்கு மாறான பொய்க் கருத்தைக் கூறியதுமன்றித் தம் கருத்துக்குத் துணைநிற்கும் தெ. பொ. மீயையும் வானளாவப் பாராட்டியுரைத்தார். அக்கால் எழுதியது இப்பாடல்.
38. தூய உணர்வுகளையும் வினைகளையுமே ஆசிரியர் கைக்கருவிகளாகக் கொண்டிருப்பதால் தமிழ்ப் போராட்ட முயற்சிகளில் வெற்றியே கிட்டும் என்பது.

39.ஆங்கில மொழியைப் பிழையின்றியும் சிறப்பாகவும் அக்கறையுடனும் பேச விரும்பும் தமிழர், தமிழ்மொழியை மட்டும் பிழையாகவும் கலப்பாகவும் பேசுவானேன்? தூய்மையான தமிழை வளர்க்காத - எழுதாத இதழ்களைத் தீயிட்டுப் பொசுக்குதல் வேண்டும் என்கிறது இது.

40.தமிழ்மொழியைப் பேணாதான் தமிழினத்தைப் பேணாதான். அத்தகையவன் எழுத்தை, வினைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது.
41. 'எப்படியேனும் இத் தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும். என் மூச்சு அதற்கு உதவிடல் வேண்டும்' என்னும் ஆவலைத் தெரிவிக்கிறது இந்தப் பாட்டு.
42.“தமிழை வளர்க்க; தமிழ்மொழியால் ஒன்றுபடுக; தமிழைத் தாழ்த்துகின்ற அனைத்து நிலைகளையும் தவிடு பொடியாக்கிடுக” என்று தமிழ் முழக்கம் கேட்கிறது இப் பாட்டில்.
43.எழுத்தாளர்கள், பொய் இலக்கியங்களும் போலிக் கதைகளும் இனி எழுதாமல். மெய் இலக்கியங்களையே துணிந்து உருவாக்க வேண்டும் என்பது.
44. 1975 அரசியல் நெருக்கடிநிலைக் காலத்தில் பாவலரேறு நடத்தி வந்த தென்மொழி இதழை அரசு தடைசெய்திருப்பதாகச் செய்தி வந்தது. அக்கால் ஐயாவின் இன்னோர் இதழும் சிறுவர்க்குரியதுமான தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தென்மொழிக் கருத்துகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார். அக்கால் எழுதிய பாடல் இது. இதில், தமிழ் மொழிக்கென்று பாவலரேறு உழைக்க முற்படுகையில் அழிவையும், துயரையும், துன்பத்தையும். இன்பத்தையும். புன்மொழிகளையும் பொருட்படுத்த மாட்டேன் என்று உரைத்த சூளுரையைக் கேட்கலாம்.
45. 1975இல் சென்னையில் தென்மொழிச் சார்பில் தமிழக விடுதலை மாநாடு நடத்தத் திட்டமிடப் பெற்றுச் செய்தியும் அறிவிக்கப் பெற்றது. மாநாடு நடைபெறவிருந்த நாளுக்கு முந்திய நாளே அரசு மாநாட்டை நடத்தவிருந்த ஐயாவையும் செயற் குழுவினரையும் மாநாட்டில் பங்குகொள்ள வந்திருந்த சிலரையுமாக இருபத்திரண்டு பேரைத் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ்ச் சிறைப்படுத்திச் சென்னைச் சிறையில் இரண்டு மாதங்கள் வைத்திருந்தது. அக்கால் உடன் சிறையிருந்த அன்பர்கள் இரவு வேளையில் தூங்கப் போகுமுன் தம் கொள்கை விளக்கப் பாடல்களை உரக்கப் பாடி உணர்வை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். தங்களுக்குத் தெரிந்துள்ள பாடல்களையே நாளும் பாடி அவர்களுக்குச் சலித்துவிட்டது. அதன்பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாவலரேறு அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்பாடலை எழுதிக் கொடுத்தார்கள். அப் பாடல்களில் இதுவும் ஒன்று. தமிழ், வடமொழியாகிய சமற்கிருதத்தினும் உயர்ந்தது என்னும் பொருளைத் தருவது இது.
46. தமிழறிவில்லாதாரைத் தமிழறிஞர் என்று போற்றும் போலிமையைக் கண்டித்தது.
47. தூயதமிழைப் போற்றாதவர் நூல் எழுதுவதும், உரையாற்றுவதும், தமிழகத்தின் ஆட்சியில் தலைமை தாங்குவதும் கேடு செய்யுமன்றோ? அந்தக் கீழ்மையைக் கடிவது இது.

48.தமிழே உயிர், உடலம், உணர்வு, உலகம். கருத்து, பார்வை, ஓசை, பிறவி, தாய், தந்தை, குரு, கல்வி, காட்சி, துணைவி. குடும்பம். இன்பம், குழவி. உறவு. சுற்றம்.

வாழ்க்கை, தொண்டு, எழுத்து. பேச்சு, அறிவு. மூச்சு, நட்பு, விருந்து, வினை. நனவு. மறை, கனவு. மெய்ம்மம், இறைவன் என்னும் உயிர்க் கொள்கை இப்பாட்டில் ஒளிப்பிழம்பாய்த் திகழ்கிறது.
49.கயமையினை எழுத்தாக்கி எத்தனைப் பேர் காசு பணம் சேர்க்கின்றனர். அதனைக் கடுமையாகக் கடிவது இது.
50.பொதுத் தொண்டில் தனிமானம் கருதுதல் கூடாது; ஆரவாரம் கூடாது என்னும் கருத்தை யுணர்த்துவது இது.
51. தமிழர் எங்குத் துயரால் அடிமையுற்றிருக்கின்றனரோ, அங்கு என்னைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்த் தாயை வேண்டுவது.
52.தமிழக அரசியல் தலைவர்களிடம் அக்கால் இல்லாதிருந்த தமிழ்நல உணர்வு குறித்து எழுதப்பெற்றது இப்பாடல்.
53. தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு நினைவையொட்டி அன்றைய ம.கோ. இரா. அரசு அறிவித்திருந்த எழுத்துச் சீர்திருத்த அறிவிப்பு எந்த அளவில் மொழிநலனில் அக்கறை கொள்ளாதது என்பதான அறிவிப்புப் பாடல்.
54. முந்தைய பாடலின் கருத்தடிப்படையிலேயேயான விளக்கப் பாடல். “சாதியாலும், மதத்தாலும், ஏழைமையாலும் - பிற ஓயாத தொல்லைகளாலும் நலிவுறும் கூட்டத்தைச் சீர்செய்ய வேண்டிய நிலையிருக்க எழுத்துத் திருத்தம்தான் தேவையா?” என்கிறார் பாவலரேறு.
55.நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் மறைவையொட்டி அவரின் புலமையொடு இக்காலப் புலவர்களின் கல்வியறிவுத் தேர்ச்சியின்மையை ஒப்பிட்டு எண்ணி வருந்திப் பாடியது. 56.தமிழ்நாட்டு விடுதலையை. தமிழின முன்னேற்றத்தை எண்ணத் தயங்குபவர்களைத் தூயதமிழிலாவது பேசுங்கள். அவ்வகையிலேனும் தமிழர் எனும் பெயர் தாங்குங்கள் என்பதிப் பாடல்.
57.பேச்சுத் தமிழையும், கலப்புத் தமிழையுமே தமிழ் எனப் பிதற்றியவர்களுக்குக் கண்டன அடியாய் அமைந்தது இப் பாடல்.
58. மதவெறித்தனமும், சங்கரப் பார்ப்பனக் கூட்டத்தின் கூச்சல்களும் மிகுந்த நிலையில் பாவலரேறு அவர்களின் வலியுறுத்தத்தால் திராவிடர் கழகம் வழிபாட்டுரிமை மாநாடு நடத்தியது. அக்கால் அக்கருத்திற்கு அழுத்தமாய் எழுந்தது இப் பாடல்.

59.'மநு' நூல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுப் பாவலரேறு ஐயா அவர்கள் கோவை நடுவண் சிறையில் இருந்தபோது எழுதப் பெற்ற பாடல் இது. சிறையில் அன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க. ஐயா அவர்கள், இசைகூட்டிப் பாடுமாறு எழுதிய பாடல். தமிழ்மொழியின் சிறப்புக் குறித்து விரிவாய்ப் பாடப்பெற்றது.

60. சங்கரப் பார்ப்பனக் கூச்சல்களுக்கு அக்கால் அமைச்சர் வீரப்பன் தாளம் தட்டிக்கொண்டிருக்கையில், இத்தகைய போக்குகளைச் சரிசெய்ய வன்முறை இயக்கமே தேவை என்பதாக எண்ணிப் பாடியது.

61.. இவ்வின முன்னேற்றத்திற்கென உள்ள ஏராளமான பணிகளை விடுத்துப் புலவர்கள் வெற்றுச் செயல்களில் ஈடுபட்டிருக்கிற சூழலை விளக்கிக் கடிந்து எழுதப்பெற்றது இப்பாடல்.

62. அக்கால் அரசால் தமிழ் வளர்ச்சிக்கென நிறுவப்பட்ட பல்வேறு இயக்கங்களும், துறைகளும் 'அறுக்கமாட்டாதான் இடுப்பில் செருகப்பட்ட அரிவாள்கள் போன்றவையெனக் கடிந்து எழுதியது இது.

-இந்தி எதிர்ப்பு-

63. இந்தித் திணிப்பைத் தமிழர் இனியும் பொறுத்திடமாட்டார் என்பது. 1959-இல் நேருவுக்கு விடுத்த தூது,

64. மொழியே விழி; அதைக் காவாவிடில் வரும் பழி; தமிழைச் சீர்குலைக்க வரும் இந்தியை ஒழி என்பது.

65. உரம் குன்றிப்போன தமிழர் முனைந்து மறுமலர்ச்சியுற்று எழல் வேண்டும் என்பது.

66. இந்தி மொழியைப் புகுத்தினால் என்ன நேரும் என்று ஆளும் தலைவர்க்கு எச்சரிப்பது இது.

67. இந்தி வருமுன் அணையிட வேண்டுமென்பது.

68. செந்தமிழ்க்குக் காப்பளியா அரசியலைச் சிதைத்தொழிப்பீர் என்பது இது.

69. 'தமிழ்ப்பயிரில் வைத்த தீ போன்றது இந்தி’ என்பது இது.

70. இருந்தபடியே இருந்தால் இந்தியை நீக்க முடியாது என்பது.

71. இந்தியை அறவே தடுத்து நிறுத்தவில்லையாயின் தமிழனுக்கு நாடு என்பது ஒன்றில்லாமல் போய்விடும் என்று முன்கூட்டி யுரைக்கின்றது இப்பாட்டு.

72. மறமிழந்த தமிழன் மாளல் நன்றென்பது.

73. 1965-இல் கடலூர்க் கிளைச் சிறையில் எழுதியது இது.

74. 1965-இல் இந்திக்கிளர்ச்சியில் ஈடுபட்டு வேலூர்ச் சிறையில் இருந்த பொழுது, எழுதியது, சிறையாளர்கள் பாவலரேறுவைச் சிறைக்கு வந்தது எதற்கு என்று கேட்டதும், அதற்கு அவர் விடை கூறியதும் ஆகிய நீண்ட பாடல் இது. 25-ஆம் பாடல் குறிப்புப் பார்க்க,

75. மும்மொழித் திட்டம் கொணர்ந்தபொழுது அதை எதிர்த்தது. தமிழர் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்றல் வேண்டும் என்றது.

76.இந்திப் போரை எத்தனை காலம் நிகழ்த்துவது, இரண்டில் ஒன்றை ஒரே எழுச்சியில் பெற வேண்டும் என்பது.

77.இந்தியை எதிர்த்துப் போரிட ஒருநாள் குறிக்க வேண்டும் என்பது.

78. 1971-இல் இருந்த சென்னை ஆளுநரை இந்திப் போராட்டம் அகற்றியது பற்றியது இது.

79. இந்தியை உடனடியாக மாற்றவில்லையாயின் கருவிப் போராட்டம் நிகழும் என்பது.

80. தமிழக அமைச்சர்கள் இந்தி மொழிக்குக் கங்காணிகளாக இராமல் போனால் இந்தித் திணிப்பே இராது என்று உறுதி கூறுகிறது இது.

81. இந்தித் திணிப்பை எவராலும் தடுத்திட இயலாது என அன்றைய இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி கூறியதைத் தமிழனுக்கு உணர்த்தி இனியேனும் எழுச்சி கொள்ள வேண்டும் என்கிறார் பாவலரேறு.

82.இந்திமொழி அரசு அலுவல்களில், தொலைக்காட்சியில் திணிக்கப்பட்ட பொழுது அதைக் கண்டித்தெழுதியது இப் பாடல்.

83. வெட்டத் தழைக்கும் முள்மரமாய் வளரும் இந்தியை முட்டித் தள்ளி எதிர்த்திடாமல், கட்சிகள் பலவும் தந்நலப் பித்துடன் இருப்பதும், மாநாடு போடுவதும், தீர்மானம் இயற்றுவதுமான வழங்கங்களை உதறித்தள்ளிவிட்டு ஓநாய்க் கூட்டத்தை ஒடுக்க எழடா தம்பி என்று எழுப்புகிறார் பாவலரேறு.

84. இந்தி மொழியை ஆயிரந்தடவை அழிப்பதாலேயோ எதிர்ப்பதாலேயோ எந்த மாற்றமும் வந்திடவில்லை. எங்கள் நிலத்தில் எங்கள் ஆளுமையே வேண்டும் என முழக்கும் குரலே வன்பு வடவரை நடுங்கிட வைக்கும் என்கிறது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/001-089&oldid=1514065" இலிருந்து மீள்விக்கப்பட்டது