7  தமிழ்த்தாய்ப் பத்து!


என்றுன் னகரத் திருவரி கூறி
எழுதினரோ?
என்றுன் சிலம்பக் கழலடி ஆணை
இயற்றியதோ?
மன்றுண் ணமர்ந்து புலவர் துடிநா
விளையமிழ்தத்
தன்றன் றிளமை அணையுந் தமிழே!
அணிமொழியே!

மொழியா திருந்தார் முடவாய்ப் புகுந்தொலி
முன் முழக்கி.
வழியா யிருந்து வடுவறு வாழ்க்கை
யமைத்தவளே!
அழியா திளமை அருகாத் திருவளம்
ஆர்ந்துயர்ந்தோர்
விழியா திரவும் பகலும் புரக்கும்
விழிமணியே!

மணிமுடி யேறிக் கழகப் புலவர்
மடிபுரண்டே
அணிமுடி சூட்டி அரசேய்ந் திருக்க
அடிதழீஇத்
திணிதெலுங் கங்கன் னடமலை யாளந்
துளுவமெனப்
பணிமொழி பத்தொரு மூன்றும் பரவப்
பரந்தவளே!

பரந்துயர் நற்சீர் பழுனிய நின்னைப்
பரவியெழிற்
கரந்தவர் பல்லோர் கழலடி தாங்கிக்
கழியிளமை
இரந்தவர் பல்லோர்! இடர்ந்தவர் பல்லோர்
எனினுமுனைப்
புரந்தவர் உள்ளப் பொழில்மணை யேறிய
பூவையளே!

பூவை நினதெழிற் பேசற் கெளிதோ
புலமையர்க்கே!
கூவைத் திலங்குங் குறைவறு பல்லா
யிரமொழிக்குள்
நீவைத் தொளிரும் நெடுநூற் பரப்பிலை
யேகுறள்தீம்
பாவைத் திருக்கும் பசுமைத் திருவே
பழம்பிறப்பே!

பிறவாப் பெருஞ்சீர் இலக்கியத் தோடின்
னிலக்கணமும்
அறவோர் புகழும் அறநெறி நூற்கள்
அளவிறந்தும்
நறவாப் பிழிந்தே நறுநூற் புலவோர்க்
களிப்பவளே!
இறவாப் பெருமூ தொருத்தி மொழிநா
வினிப்பவளே!

இனித்த நறுவாய் நடம்விளைத் துள்ளத்
துயிரிலெலாம்
நனித்தண் ஒலியாய் நடந்தே இயலிசை
நாடகமாய்
நுனித்த புலனே புனற்கோள் எரிகோள்
நுழைந்திருந்துந்
தனித்த மொழியே விழியே ஒளியே
தமிழரசே!

அரசீ உலகிடை அன்றன் றுயரும்
அயல்மொழியின்
வரிசை உணர்வோம்! வளங்கெழு நின்சீர்
வழுவலெலாம்
எரிசேர் இழிஞர் குடர்க்கிட நின்னை
இழிப்பதுவே!
முரசே அவர்தம் முழுமடம் ஞாயிறு
முன்பனியே!

பனிக்குன் றதிர்த்த பழம்பே ரரசர்
பணிந்துயர்த்த
இனிக்குந் தமிழ்ப்பா வெழுதும் இணையறு
வின்புலவோர்
கனிக்குந் நிகராப் பலநூல் எழுதிக்
களித்ததெலாம்
தனிக்குன் றணையாய் இனிக்காண் குவமோ
தவழ்கொழுந்தே!

கொழுங்கட் பிழிவே! நறவே! நறுஞ்சுவைப்
பால்கலந்த
பழங்கெழு ஊணே! உடலே! உயிரே!
பணிவொடுசீர்
வழங்கெஞ் சிறுநா வளரின் னிசையே!
இயல்நடமென்
றெழுங்கலை யேமகிழ் வேவுல கேயிணை
யில்லையன்றே!

-1958

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/010-089&oldid=1514325" இலிருந்து மீள்விக்கப்பட்டது