கனிச்சாறு 1/011-089
8 முத்தமிழைக் காப்போம் முனைந்து!
கற்றவரே! அன்பு கனிந்தவரே! செல்வச்சீர்
பெற்றவரே! இன்பம் பெறாமல் துடிப்பவரே!
சான்றோரை, நாட்டைச் சலியாது காப்பவரை
ஈன்றதாய் மாரே! இழிவறியா மங்கையரே!
தூய தமிழ்வளர்த்த தொன்மதுரைச் செம்புலிகாள்!
சாயாப் புகழ்காத்த சேரர் குலப்பிறப்பீர்!
சோழக் கொடிவழியீர்! சோர்வின்றிப் பூரிக்கும்
வேழத் தடந்தோள் விறல்மறவீர்! வேற்றுவர்க்கே
மேன்மேல் உழைத்து மிகுந்ததற்குக் கையேந்திக்
கூன்தங்கிப் போனவரே! கொப்புளிக்கும் நல்லுணர்வைச்
சாகடித்து விட்டுச் சாகா உரிமையினை
வேகடித்துத் தூங்குகின்ற வேங்கைத் தமிழ்மக்காள்!
கூற்றுவரே ஆனாலுங் கூப்பியகை யோடணைத்துப்
போற்றுந் தமிழ்மரபீர்! பொன்பொருளைத் தாமடையக்,
கற்றறிந்த செந்தமிழைக் காசுக்கே ஈடுவைத்துப்
பெற்றெடுத்த நாட்டைப் பெரும்பழிக்கே ஆளாக்கும்
கீழெண்ணங் கொண்டவரே! கேட்டுக் குழிக்குள்ளே
வீழென்னும் முன்னம் விழுந்திறக்கப் போவோரே!
வாடிக் குலைவதினும் வல்லுயிருக் காக் கடல்
ஓடிப் பிழைக்கும் உலகத் தமிழ்க்குலத்தீர்!
எல்லார்க்கும் யானொன் றியம்புகின்றேன்; மாந்தரிலே
நல்லார்க் கொருசொல் எனுங்கூற்றை நாடறியும்
ஆதலினால் எற்றுக்கும் ஆகாச் சிறுவனிதைக்
காதலினால் கூறலுற்றேன்! கன்னித் தமிழ்நாட்டீர்!
சேர்ந்தொருங்கே வாரீரோ! செந்தமிழர் கூட்டங்காள்!
நேர்ந்திருக்கும் உள்ள நெகிழ்வை அகற்றிவிட்டு,
நம்மை அரித்துவரும் நாற்சாதிப் பூசலெல்லாம்,
செம்மை ஒழுங்கில்லாச் சூழ்ச்சியெலாம் கட்டவிழ்த்தே
ஈன்றதாய் மேலாணை இட்டு, நமைக் காத்துவரும்
ஆன்ற மனைவிமேல் ஆணையிட்டுப் பெற்றெடுத்த
மூத்த பெரும்பிள்ளை முன்னேயோர் ஆணையிட்டுக்
காத்து வளர்த்ததமிழ்க் கன்னியின்மே லாணையிட்டு
முன்னர் நமக்கிருந்த மொய்ம்புகழ்மே லாணையிட்டுத்
தென்னவருக் கோர்முடிவைத் தேர்ந்திடுவோம் வாரீரோ!
செல்வத்தால் கண்ணிழந்து, சென்றோரைத், தாங்கொண்ட
பல்வளத்தால் இன்பப் பரண்மேல் இருப்போரை,
யாவரையும் பார்த்தே இயம்புகின்றேன்! நாமெல்லாம்
ஆவதிலே கண்ணின்றி ஆளக் கருத்தின்றி
ஒற்றுமையு மின்றி உணர்வின்றி நாணமின்றி
வெற்றுரையைப் பேசி விளைவில் நினைவின்றிச்
சீரழிந்து விட்டோம்! சிறப்பிழந்தோம்! நாமிருக்கும்
நேரழிந்து விட்டோம்! நிலைகுலைந்தோம்! ஆதலினால்
ஊரழியு முன்னம், உருவழியு முன்னேயே
பேரழியு முன்னம், பிழையறிந்து வாரீரென்
றெல்லார்க்கும் கூறுகின்றேன்! ஏற்றதெனக் கண்டீரேல்
நல்லார் ஒருவர் தலைமையிலே நாமொருங்கே
கூடித் தமிழுயர்த்துங் கொள்கை வழிப்பட்டே
ஈடில்லை எங்கட்கென் றேற்ற குரல்கொடுப்போம்
வள்ளுவரைக் கற்றோம்! வளர்பயனைக் கண்டோமா?
தெள்ளுதமிழ் கற்றோர் திரள்பொருளைக் கண்டாரோ?
உற்ற நெறிநூல்கள் ஓரா யிரங்கோடி
பெற்றிருந்தும் நந்நெறியைப் பேணி வளர்த்தோமா?
பாரோர்க்குக் கூறிப் பலநூல்கள் தாமெழுதி
ஊரோர்க்குக் கூறி, ஒருநெறியுங் தாங்கொள்ளாப்
பெற்றியரை யன்றோ பெருமளவிற் காண்கின்றோம்!
குற்றியுமி குற்றிக் குவித்தோய்ந்து போனோமே!
“பாட்டன் பரணிருந்தான்; பாராண்ட வேந்தனவன்;
பாட்டனுக்குப் பாட்டன் பவள அரியணையில்
நீட்டிப் படுத்திருந்தான்! நேர்ந்துவிட்ட காலத்தால்
ஓட்டையொரு கட்டிலிலே ஒன்றி யிருக்கிறேன்!”
என்றுபல சொல்வாரை யார்மதிப்பார்! பேரறிவீர்!
நன்றுசெய வேண்டாமா? நாமுழைக்க வேண்டாமா?
தண்டமிழ்த்தாய் ஆளுந் தனிநாடு வேண்டாமா?
பண்டிருந்த நந்நிலையைப் பார்த்துவக்க வேண்டாமா?
நாட்டில் வளங்குறைவா? நானியம்ப வல்லேனோ?
பாட்டுச் சுவைபெருக்கும் பாழடைந்து போகின்ற
ஆற்றுப் பெருக்கிற்கே ஆனதடை என்னேயோ?
காற்றைத் தடுக்கும் கணக்கில்லா வான்மலைகள்!
வித்தூன்றி வைத்தால் விளைவாகும் நன்னிலங்கள்!
முத்தெறியும் வீங்குகடல்! மூண்ட மணிப்புதையல்!
பொன்னும் இரும்பும் புகைக்கரியும் வேரோடி
மன்னும் பெருஞ்சுருங்கை! மாயாப் பெருவிளைவு!
கன்னல் குறைவா? கனிமரங்கள் தாங்குறைவா?
பின்னிக் கிடக்கும் பெருங்காடு ஒன்றிரண்டா?
ஆனை உதைத்தும் முடியிலையும் ஆடாத
வானை அணைத்த வளர்மரங்கள் கொஞ்சமா?
காளை உழுதாலோ கால்விளைவா காதென்றே
கூளி மதயானை கொண்டே உழத்தக்க
நல்வயல்கள் எண்கோடி! நாற்றங்கால் பல்கோடி!
சொல்விளைவும் தோற்றுப்போம் நெல்விளைவு கண்டோமே!
இத்துணையாய்ப் பல்வளங்கள் இங்கிருந்தும் செந்தமிழர்
செத்தழிந்து போவதென்ன? சீர்குன்றிப் போவதென்ன?
கிள்ளைஅடை முட்டை கடும்பாம் பயின்றதுபோல்
கொள்ளை யடிக்கின்றார் கொடுவடவர்! கண்டோமா?
ஆழநினைத் தின்றே அவர் விளைவை வெட்டொன்றில்
வீழக் கிடத்தி விறல்சூட வேண்டாமோ?
நாட்டைப் புதுக்கி, நகர்புதுக்கி நாம் வாழும்
வீட்டைப் புதுக்கி வினைபுதுக்க வேண்டாமோ?
கற்றுப் பெரும்பயனைக் கண்டவரார்? கல்லாரும்
உற்றபயன் என்னை? உழவரெல்லாம் என்னகண்டார்?
ஊர்ப்பெயரை மாற்றும் உரிமைக்கும் வானொலியின்
பேர்புதுக்கும் நல்லுரிமைப் பேச்சுக்கும் இல்லையெனின்
எற்றுக் கமைச்சரெலாம் இங்கிருக்க வேண்டுமவர்
ஒற்றுக்குத் தாளம் உரக்கவே போடுதற்கா?
இஃதெல்லாம் எண்ணில் இமைமூட மாட்டுதில்லை!
எஃகுடலும் கூனியே ஈரடியாய் நாணின்றால்!
ஆன்ற தமிழ்மறவீர் ஆதலினால் கூவுகிறேன்.
ஊன்றீர் தமிழ்க்கொடியை! ஊரைத் திரட்டுவமே!
உண்ணில் தமிழ்த்தாய் உயர்கொடிக்கீழ் இந்நாட்டு
மண்ணில் விளைந்த விளைவுண்போம்! மானம்போய்ச்
செத்தழிந்து போமுன்னே சீர்விளங்கப் பேர்விளங்க
முத்தமிழைக் காப்போம் முனைந்து!
-1959