கனியமுது/இதுதான் வாழ்வோ?

‘இப்படித்தான் வாழ வேண்டும்’ என்று நல்லோர்,
      இயல்பான வரையறைக்குக் கட்டுப் பட்டுச்
செப்பனிட்ட பாதையிலே தடம்மா றாமல்
      சீராகச் செலுத்திடுவர் வாழ்க்கைத் தேரை!
எப்படியும் வாழ்ந்தாக வேண்டும்' என்னும்
      இழிகுணத்துக் கயவர்கள், இதய மின்றித்
தப்புமுறை கையாள்வர், மதிப்பு - மானம் -
      தரமெல்லாம் கருதமாட்டார்; தேவை, இன்பம்!

ஒருகுலையில் தோன்றுடமிரு காய்கள் போல
      உடன்பிறந்த இருவர் தாம் சுந்தர் - சேகர்.
பெருநிலையில் வாழ்ந்திட்ட தந்தை யாரோ
      பிறர்க்களித்தே வறியநிலை எய்திச் செத்தார்.
உருக்குலைந்த எளிமைதான் எனினும், மூத்தான்
      உளநிறைவாய் வெளியேறி நெறியில் நின்றான்.
திருக்குலைந்த ஏழ்மைநிலை வந்துங் கூடச்

      செருக்கோடும் மிடுக்கோடும் இளையோன் வாழ்ந்தான்.

சீமான் போல் பகட்டான தோற்றங் காட்டிச்
       செல்வந்தர் பெண்களிடம் நயமாய்ப் பேசிக்
காமாந்த காரத்தில் மூழ்கச் செய்து
       கண்மறைக்கும் மோகவெறி ஊட்டிப் பின்னர் -
ஏமாந்த காலத்தில் தங்கம், வைரம்
       இரவலெனப் பெற்றுப் பின் ஏப்ப மிட்டுச்
சாமான்ய பதிலுரைப்பான்; கேட்க அஞ்சிச்
       சத்தமின்றிக் கோட்டைவிட்டோர் தொகை ஏராளம்!

மாளிகையோ மிகப்பெரிதாய், வெளியார் பார்வை
       மறைகின்ற தனியிடத்தில்! இரவு தோறும்
கேளிக்கை குறைவில்லை! கீழோர் கூட்டம்
       கேடுகெட்ட செயலுக்குக் குவியும் ஆங்கே !
ஆளுக்குத் தக்கவாறு குடியும், சூதும்
       ஆரணங்குச் சேர்க்கையுடன் நிறைய உண்டாம்!
நாளுக்கு நாள் இவைகள் வலுத்த தாலே

       நடவடிக்கைக் காளானான் ஒருநாள் சேகர்

காவலர்கள் நாற்புறமும் சூழ்ந்து கொண்டு
       கண்ணிமைக்கும் நேரத்தில் உள் நுழைந்தார்!
ஆவலுடன் விளக்கேற்றிப் பார்க்கும் போதில்
       அந்நகரின் பெருங்குடும்ப ஆண்கள் பெண்கள்
சேவலுடன் ஏதோவோர் பெட்டை போலச்
       சீர்குலைந்தும் உணர்விழந்தும் சேர்ந்தி ருந்தார்!
நாவலிமை உள்ளவர்கள் பறந்து போனார்—
       நாணயங்கள் மிகுந்தோர்க்கு வழியா இல்லை?

போலியாகப் பெருமனிதன் வேட மிட்டுப்
       பொல்லாத புன்செயலுக் கிடங்கொ டுத்து
வேலியாக மறைத்ததற்குக் கைவி லங்கும்
       வெளியேறாச் சிறைவாழ்வும் சேகர் பெற்றான்!
தாலிகட்டி மனைவியெனக் கொணர்ந்த தையல்
       தருணமென ஒருவனுடன் ஓடிப் போனாள் !
காலியான மாளிகையை ஏல மிட்டுக்

       கடன்காரர் பறித்திட்டார்! இதுதான் வாழ்வோ?