கனியமுது/பைத்தியம் தெளிந்தது!

நாடோடி போல் திரிந்த என்னி டத்தே
        நயமாக உரையாடி, அன்பு காட்டி,
ஓடோடி உதவிசெய்து, பாச மில்லா
        உள்ளத்தில் நல்லிரக்க உணர்வு பெய்து
காடோ, நல் கடற்புறமோ எங்குந் தங்கிக்
        காலத்தைக் கொன்றவனுக் கின்று சொந்த
வீடோ,என் றெண்ணுமாறு தனதில் லத்தை
        விளங்கவைத்த இராசாத்தி அன்புத் தங்கை.

நாரெல்லாம் பூவோடு சேர்வ தாலே
        நறுமணந்தான் பெறுவதுபோல் நானும் ஆனேன்.
ஊரெல்லாம் புகழ்பரப்பி, நாட கத்தில்
        ஒப்பற்ற நடி கரெனத் திறனும் பெற்றுப்
பாரெல்லாங் கொண்டாடும் பத்தி நாதன் -
        பாசமிக்க என்தங்கை இதயத் துள்ளே
போரெல்லாம் விளைத்திட்டார்! இறுதி வெற்றி

        புகழாளன் அவருக்கே! தங்கை தோற்றாள் !!

மணம்புரிந்தார், மனங்கலந்தார், வாழ்க்கை யின்ப
      வானத்தில் தேன் சிட்டாய்ப் பறந்து வந்தார்!
குணம்புரிந்து, சினப் பிரிந்து, தினம்மறைந்து
      குடும்பத்தைப் பெருக்கு தற்குத் திட்டமிட்டார்!
பணம் நிறைந்து, தொழில் சிறந்து, மேன்மை எய்தப்
      பத்திநாதன் ஊர் சுற்றல் நிறுத்த வில்லை!
கணம் மறந்தும் கணவனது பிரிவு தாங்காக்
      கவலையினால் என் தங்கை கண்ணீர் சிந்தும்!

அவர் நடித்த நாடகத்தை ஓர் நாள் கண்ட
       அன்பரசி அழுதுகொண்டே வீடு மீண்டாள்!
தவறில்லை என்றாலும், தொழிலுக் காகத்
      தையலரின் தோல் தொட்டு நடித்தல் தீதாம்!
சுவரிடிந்த பாழ் வீடாய்த் தனது வாழ்வுச்
     சுவைமடிந்து போன தாகக் கற்பனையால் —
எவரிடத்தும் சொல்லாமல், கடலில் மூழ்கி

     இறந்துபடத் துணிந்தனளே, என்ன விந்தை!

ஓவியமாய், உண்ணாத கனியாய்த் தோன்றி
      ஓயாமல் நகைபுரியும் மழலை, கண்ணீர்க்
காவியமாய் மாறுதற்கோ வழிவ குத்தாள்?
      கணவரிதைக் கேட்டவுடன் பிணம்போ லானார்!
“ஆவியெலாம் நீயென்றே கருதியுள்ளேன்;
      அற்பமான ஐயத்தால் சொற்ப நாளில்,
பாவியெனும் பழிச்சொல்லை ஏற்றி டாதே!
      பார், என்றன் தொழிலையும் நான் விடுப்பேள்!” என்றார்

“பைத்தியந்தான்! நீங்களில்லை; நானே அத்தான் !
      பக்குவமில் லாமனத்தின் குறைதான் ! என் மேல்
வைத்திருக்கும் ஆழமான அன்பின் எல்லை—
      வாழ்வுவேறு, தொழில் வேறாம் என்ற உண்மை
மைத்துனராம் என் அண்ணன் தங்கள் சார்பில்
      வகையாக எடுத்துரைத்தார்; தெளிவு பெற்றேன் !
வைத்தியமே தேவையில்லை!” என்றாள் தங்கை!

      மாப்பிள்ளை மனங்குளிர்ந்தார்; விருந்து தந்தார்!