கனியமுது/இல்லாளும் நிலமெனும் நல்லாளும்.



'கோடிவீட்டுக் குமரப்பன் இங்கி ருந்தால் -

குளக்கரையில் எருமைகளை மேய்த்து நிற்பான்;

ஒடிவிட்டான் சென்னேக்கே திரைப்ப டத்தில்

ஒய்வின்றி நடிப்பதாக ஊரே பேசும் !

மாடிவீடாம்! வாகனமாம் ! யார்கண் டார்கள் ?

வாரிவிட்ட சுருண்டமுடி கழுத்தில் தொங்கக்

கூடிவிடும் பாமரர்க்குக் கதைசொல் கின்ருன் :

குவிந்துள்ள செல்வமெலாம் அங்கே தானும்!

பட்டணத்து வாழ்க்கையினைக் குறிக்கோ ளாக்கிப், -

பயின்றிருந்த கணக்கெழுதும் தொழிலே கம்பிப்,

பட்டிக்கா டாகியதன் சிற்றுார் விட்டுப், -

பரம்பரையாய் வசித்துவந்த குடிலே நீங்கிக்,

கட்டணத்துக் காகவொரு நகையை விற்றுக்

கடிதுசெலும் தொடர்வண்டி எறிச் சென்றான்.

பெட்டி,சட்டித், துணிமூட்டை பழைய சாமான்,

பெண்டாட்டி, குழந்தையுடன் கன்னி யப்பன் !

கையிருப்புக் கரையுமட்டும் ஊரைச் சுற்றிக்

கரைகாணாக் கலம்போலச் சுற்றி வந்தான் !

மையிருட்டுப் படர்ந்தபின்னே சாலை யோரம்

மரத்தடியில் படுத்திருந்து, விடிந்து பார்த்தான் ..

வையகமே சுழல்வதுபோல் மயக்க முற்றான் :

வைத்திருந்த பொருளொன்றுங் காண வில்லை !

ஐயிரண்டு நாள்வரையில் அலேந்து விட்டான் ;

ஆதரிப்பார் யாருமில்லை ! ஆங்கி ருந்த


சிற்றுணவும் தேநீரும் விற்று வாழும்

சிறுகடையின் வாயிலின்முன் நின்று கொண்டு,

“பற்றுவர(வு) எழுதுகிறேன்: ஐயா, என்னைப்

பணியாளாய்க் கொள்வீரா?" என் று கேட்டான்.

சற்றேனும் எதிர்பார்க்க வில்லை; அங்கே

சமையலறை அலுவலிலே குமரப் பன்தான் !

உற்றுற்றுப் பார்த்தவனும் உள்ளே ஒட,

ஒழியாதவியப்போடு திரும்பி வந்தான் !

தடுமாற்றம், ஏமாற்றம், தயக்கம் தோல்வி,

தாங்கவொனக் கொடியபசி, களைப்புச் சோர்வு

கெடுமார்க்கம் போகவில்லை எனக்கேன் துன்பம் ?

கேடுகெட்ட ஆசையில்ை இழந்தேன் எல்லாம்!

சுடுகாடு செல்வதொன்றே மிச்சம் என்றன்

சொக்கம்மாள் முகத்தினிலே விழியேன் !’ என்று

கடும்வாக்காற் சூளுரைத்தான்; மனமா கேட்கும்?

கன்னியப்பன் புலம்பியதை மனேயாள்

கேட்டாள் :


'ஏனத்தான் ! நானிருக்க எதையி ழந்தீர்?

எதற்காக மனக்கவலை? மிகுந்தி ருக்கும்

மானத்தை முதலாக வைப்போம், வாரீர் !

மன்னவன்என் மாமருைம் விட்டுச் சென்ற

தானத்தை-ஒருகாணி நிலத்தை-வைத்துத்

தளராமல் உழைத்திட்டால் வளமே பொங்கும்!

வீணத்தான் நகரத்தின் வெளிக்க வர்ச்சி :

விரைவாக ஊர்செல்வோம்' என்றாள் சென்றார்.

கொல்லையிலே நாற்புறமும் வேலி கட்டிக்
    கொத்திவிட்டுக் கேணிநீரை இறைத்துப் பாய்ச்சி
நல்லபசுங் தழைஎருவும் சாணத் தோடு
    நால்வரப்புப் பாத்திகளில் கலந்து வைத்துக்
தொல்லைதரா நிலமடந்தை சிரிக்கு மாறு
    துணையிருவர் தோள்வலியாற் பாடு பட்டார்!
எல்லேயிலா இன்பத்தை உழைப்பில் பெற்றார்,

    எவரிடத்தும் கையிசைதல் இல்லை யன்றோ?


கத்தரி, மா, சுரை, முருங்கை, அவரை, பாகல்,
    கதலிவாழை, தக்காளி, கருணை, சேம்பு,
கொத்துமல்லி, முளைக்கீரை, பசலை, வள்ளி,
    குடமிளகாய், கொத்தவரை, பசுமை கொஞ்சும்
இத்தரையின் புத்துயிராம் விளைவு கண்டார்!
    இல்லாளின் மாட்சிமையால் வறுமை கொன்று,
சத்துணவு விற்பனையில் ஊரார் மெச்சச்

    சலியாத முயற்சியுடன் வாழ்வை வென்றார்!