கனியமுது/தமிழ்ப் பண்பு காத்தார்.



அடக்கங்தான் அமரருக்குள் உய்க்கு மென்ற
    அருங்குறளை நெறியாகக் கண்டார் போலும்,
தொடக்கமுதல் துணைவிக்குக் கீழ்ப்ப டிந்து
    தொல்லைதரும் பிணக்கின்றி வாழ எண்ணி,
முடக்குவாத நோய்தாக்கக் கொடுமைப் பட்டு
    மூன்றாண்டு காலமாக வதையுந் தாயார்
கிடக்கின்ற படுக்கைக்கு விடைகொ டுக்கக்

    கிஞ்சிற்றும் தமிழய்யா முனைய வில்லை!


கல்லூரி செல்கின்ற நேரம் போகக்
    கடைவீதி சுற்றிடுவார் : கால்கள் நோவப்
பல்வேறு திசைதிரிந்து, குறைந்த காசில்
    பண்டங்கள் வாங்கிடுவார் ! கஞ்சன் என்று
சொல்லாத பேரில்லை மாணாக் கர்கள்
    சுத்தமாக விடையெழுதித் தந்த போதும்
பொல்லாத ஆசிரியர் பத்துக் கைந்து

    புள்ளிகட்கு மேல்வழங்கத் துணிய மாட்டார் !

ஆண்டிறுதித் தேர்வெல்லாம் முடிந்த பின்னர்
    ஐந்நூறு விடைத்தாள்கள் கொண்ட சிப்பம்
வேண்டியாற் காப்புடனே மதிப்பீட் டிற்கு
    விடுத்திட்டார் கல்விநெறி யாளர் தாமே.
துாண்டிவிட்டாள் தேநீரும் தருவ தாகத்
    துணைவியவள் கட்டளையால், தூக்க மின்றி
மூண்டெழுங்த சுறுசுறுப்பால், பத்தே நாளில்
    முடித்திட்டார்; அனுப்புதற்கும் திட்டமிட்டார்


பகட்டாலும், நெல்வயலில் கரும்பு போட்டுப்
    பட்டினியால் வாடிடுவோர் வயிற்றை ஏய்த்தும்
திகட்டாத பெருஞ்செல்வம் திரட்டி வைத்துத்
    திளைக்கின்ற அளகப்பர் அருமைச் செல்வன்
புகட்டாமல் ஏழையர்க்குக் கிட்டுங் கல்வி
    புரியாமல்-வகுப்புக்குப் பல்லாண் டாக
நகர்த்தாமல் உயர்த்திவந்தும், புகுமு கத்தில்
    நலமாகச் சிக்கிவிழித் திருந்த காலை...

குறுக்குவழிக் கையூட்டு முறைக ளாலே
    குறைந்தபுள்ளி நிறைந்துவிடும் என்று கேட்டு-
முறுக்குடனே செல்வந்தர் வண்டி யேறி
    முதன்முதலாய்த் தமிழய்யா வீடு சேர்ந்தார்!
கறுக்கெனவோர் ஆயிரத்தைக் கையில் தங்து
    நயமாகத் தான்வந்த செய்தி சொன்னார்!
மறுக்கின்ற கணவரைத்தன் விழியால் சுட்டு,
    மனை யாட்டி உள்ளழைத்து மிரட்ட லானாள்!


“ஈன்றாளின் நோய்தீர்க்க வகையு மாகும்;
    இன்னும்நம் கடனெல்லாம் ஒழிக்கக் கூடும்;
தோன்றாத துணையாகத் தேடி வந்தார்,
    சுருக்கமாக முடிப்பீர்!” என் றாணை யிட்டாள்.
‘ஈன்றாளே இறங்தாலும், ஈனச் செய்கை
    எந்நாளும் புரியேன்!” என்றெதிர்த்துச் சொல்லிச்
சான்றாண்மை மிக்கதமிழ்ப் பண்பு காத்தார்;
    தன்மனையாள் ஆணவமும் நொறுக்கி விட்டார்