கனியமுது/குருடர்கள்.

படர்கின்ற முல்லைக்குக் கொழுகொம் பாகப்
பாரிவள்ளல் தேர்ஈந்து புகழ்பெற் றாற்போல்-
தொடர்வண்டிச் சந்திப்பில் ஆட்சி செய்யும்
துரைசாமிக் குருடனுக்கோர் செங்கோல் தந்து,
இடறிவிழா வண்ணமவன் நடந்து, பிச்சை
எடுப்பதற்கு வகைசெய்த வள்ளல் யாரோ?
அடர்துன்பச் சிந்தனைகள் அணுவு மின்றி,
அன்றாடத் தேவைபெற்று, நிறைவாய் வாழ்ந்தான்.

பண்பாடித் திரட்டிவந்த நாண யத்தைப்
பழங்கந்தை முனையினிலே முடிச்சுப் போட
எண்ணியவன், இருந்தவற்றை எண்ணும் போதில்,
"எனக்கு மொரு பங்குதரு வாயா?" என்று,
தண்ணென்ற கரத்தாலே தோளைத் தொட்டாள்,
தங்கம்எனும் காலற்ற பிச்சைக்காரி!
கண்மூடி இருந்ததனால், காதல் ஊறும்

கருத்தையுமா மூடிவிட்டான்! இயலா தன்றோ?

5

மேளமில்லை; தாலியில்லை; சாட்சி யில்லை;
    விருந்துமட்டும் அருந்திவிட்டு மணம்மு டித்தார்,
தாளமில்லாச் சங்கீதம் சுவைக்கா தன்றோ?
    தவழ்கின்ற மழலையின்றிக் குடும்பம் ஏது?
நாளைமட்டும் எண்ணிவந்தால் போதும்; மாதம்
    நாலைந்து முடிவதற்குள், இரண்டு தங்கப்
பாளமெனப் பெண்ணுென்றும், ஆணாய் ஒன்றும்
    படைத்திட்டார்! ஆணுக்கோ கண்கள் இல்லை!


இரங்துண்ணுங் குலத்தொழிலைக் காப்ப தற்கே
    இருபிள்ளை பெற்றுவிட்ட பிச்சைக் காரி
இறந்திட்டாள் அவளைப்பின் பற்றித் தந்தை
    இறக்குமுன்பு, பெரியவளாம் மகளிடத்தில்,
மறந்திடாதே, தம்பியை, உன் உயிர்போல் எண்ணி
    வளர்த்திடுவாய்! எதுவரினும் அவனே விட்டுப்
பிரிந்திடாதே' என்றுரைத்தே மாண்டு போனான் !
    பேதையவள் தலையசைத்தே உறுதி தந்தாள்!

செழுமையுடன் வளர்கின்ற குப்பை மேட்டுச்
    செடியைப்போல், ஏழ்மையிலும் சிறுமை யின்றி
முழுமையுடன் எழில்பெற்றாள்! பார்ப்போர் நெஞ்சில்
    மூண்டெழுந்த உணர்வெதையும் மதித்தி டாது
விழும்பிச்சைக் காசுக்குக் கையை ஏந்தி,
    விடாமற்பின்தொடர்கின்ற தம்பியோடு,
தொழும் வாழ்வில், புகைவண்டி நிலையத் தையே
    சுற்றிவந்தாள் தந்தைசொல் காத்து நின்றாள்!


“குருட்டுத்தம் பிக்காக உனது வாழ்வைக்
    குப்பையிலே குன்றிமணி போலாக் காதே!
வெருட்டிவிட்டு வந்துவிடு மறுத்தால், உன்னை
    விடமாட்டோம்; வெஞ்சிறையிலிடுவோ” மென்று
மருட்டியவர் ஏராளம்! எதையுங் கேட்டு
    மனமயக்கம் கொள்வதில்லை; தம்பி யின்றி
இருட்டில் அவள் செல்வதில்லை, இளமைக் கால
     ஏக்கத்தைச் சிறிதேனும் பெறுவ தில்லை!”

எத்தனைதான் பாதுகாப்பா யிருந்தும், ஒர்நாள்
    இணைபிரியாத் தம்பியவன் காய்ச்சல் கொள்ளப்,
பத்திரமாய் மேடையிலே படுக்க வைத்துப்
    பசிப்பிணிக்கு மருந்து பெற, வண்டி ஒரம்
சித்திரம்போல் நடக்கையிலே-முதல்வ குப்புச்
    சீமானின் விழிவலையில் சிக்கி விட்டாள்!
பத்துருபாய் பணத்தாளைக் காட்டி, மிக்கப்
    பக்குவமாய்ப் பேச, ஒரு கணம்அ யர்ந்தாள்!



வண்டி, உடன் புறப்படவும், பெட்டிக் குள்ளே
    வகையாகச் சிக்கியவள் நிலையு ணர்ந்தாள்.
கண்டிராத பணத்தாலே கற்பை வாங்கக்
    கண்ணிருந்துங் குருடனை சீமான் எண்ணிப்...
பெண்டாள முனைகையிலே விரலேப் பற்றிப்
    பெருங்காயம் உண்டாகக் கடித்து விட்டாள்!
அண்டையூரில் வண்டி நிற்கக், குதித்தி றங்கி,
    அருந்தம்பி மகிழ்ந்திடவே ஓடிச் சேர்ந்தாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=கனியமுது/குருடர்கள்.&oldid=1382810" இலிருந்து மீள்விக்கப்பட்டது