கனியமுது/சாதகப்பொருத்தம்.


பஞ்சாங்கம் எப்போதும் வலக்க ரத்தில்;
    பார்வையிலே முதுமையில்லை பழுது நேர-
அஞ்சாமல் மேல்நாட்டான் அறிவாற் கண்ட
    அழகுமிகும் கண்ணாடி மூக்கின் மீது;
நெஞ்சாரச் சோதிடர்கள் கதையை நம்பி
    நிகழ்ச்சிகளை நடத்துவதில் பெருவி ருப்பம்;
நஞ்சாக இருந்தாலும் நாள்பார்க் காமல்
    நாவினிலே இடமாட்டார் சோம நாதர்!

வீட்டினின்று புறப்படும்முன் இராகு காலம்;
    வெளிச்செல்ல வந்தாலோ சகுனம் பார்ப்பார்!
'பாட்டிகளின் காலமுதல் பழக்க மான
    பழமைமிகு கொள்கைகளேத் தள்ளேன்,’ என்பார்!
காட்டில்போய் வாழ்ந்துகொண்டா இதைச்சொல்கின் றார்?
    காகிதமும், வாகனமும், மின்ன லோடு
போட்டியிடும் ஒளிவிளக்கும், இவைபோல் மற்ற
    புதுமைகளை அனுபவித்து மகிழ்வோர் தாமே!

சிக்கனமாய்க் காலமெல்லாம் சேர்த்து வைத்த
      சிறுமுதலுக் கொருமகளே உரிய ளாணாள்.
தக்கதொரு சோதிடரைக் கொண்ட வட்குச்
      சாதகத்தை விரிவாக எழுதி விட்டார்.
மிக்கவொரு துடிப்புடனே கல்வி கற்று,
      மேற்படிப்பும் விழைந்திட்டாள். ஆனால் தங்தை,
அக்கணமே தடுத்திட்டார்; சாத கத்தில்
      அவ்வளவே போதுமென விதித் தாலே!


இல்லத்தில் அடைபட்டாள் எனினும், நல்ல
      எழிலுருவம், இளம்பருவச் செழுமை மேனி,
வெல்லத்தின் சுவைகமழும் அன்புப் பேச்சு,
      விழிக்கடையில் அருள்வழியும் கனிந்த நோக்கு:
சொல்லத்தான் முடிவதில்லை நெஞ்சில் பொங்கும்
      சோகத்தைத்! தங்தைசொல் மீற மாட்டாள்!
மெல்லத்தன் உணர்வுகட்குத் தாழ்ப்பா ளிட்டு,
      வேளையெதிர் பார்த்திருந்தாள், விடிவு காண

மணப்பருவம் எய்திவிட்ட செய்தி கேட்டு,
      வரன்தேடி அலகின்ற தரகர் கூட்டம்
பணப்பையைக் கரைப்பதற்கு வந்து சேர்ந்தார்!
      பாரெங்கும் ஊரூராய்த் திரிந்து சென்று,
குணப்பொருத்தம் குடிப்பொருத்தம் காணு முன்னே
      கோள்நிலையும் நாள்நிலையும் குறித்துப் பார்த்துக்,
கணப்பொழுதுங் தவறாமல் கணித்த தென்று,
      கடைசியிலே ஒருவரனை முடிவு செய்தார்!


சாதகங்கள் பொருந்தியதால் மற்ற வற்றைச்
      சரியாகப் பார்க்கவில்லே சோம நாதர்.
‘பாதகமா செய்திடுவார் தரக'ரென்று,
      பையனது வெளியழகைக் கண்டு நம்பிச்,
சூதறியா உளத்தினராய்ச் சம்மதத்தைச்
      சொல்லிவிட்டார் நல்லதெனச் சிறப்பு மிக்க
சாதனையாய்த் திருமணத்தை நடத்தி வைத்துச்,
      சகலவித சீர்வரிசை மகிழ்ந்து தங்தார்!

புத்தகத்தில் நுழைந்தவுடன், புகையும் தீக்குள்
    புகுந்துவிட்ட நிலைபெற்றாள்! தனக்கு முன்பே
சக்களத்தி எனத்தகுமோர் பெண்ணொ ருத்தி,
    சாகசமும், தந்திரமும், நடிப்பும் தேர்ந்தாள்;
துக்கமின்றிக் காதலன்தான் துணிந்து செய்த
    துரோகத்தை இடித்துரைக்கும் வலிமை யோடு,
பக்கபல மாகவொரு குழங்தை கையில்
    பரிமளிக்க, உரிமையுடன் விளங்கக் கண்டாள்!

மான்போல மருட்சியுடன் மயங்கி நிற்கும்
    மனைவியிடம், கணவனெனுங் காத கன்தான்
தேன்போலும் மொழியுரைத்தான்; “திருமணத்தால்
    சேர்ந்திட்ட நீ, எனக்கோ இரண்டாங் தாரம்!
நான்போகும் பாதையிலே குறுக்கி டாதே!
    நயங்தெம்மைப் பணிந்திடுவாய்; இன்றேல், தூண்டில்
மீன்போலத் துடித்திடவே நேரும்! வேறு
    மீள்வதற்கும் வழியில்லை; புரிந்து வாழ்வாய்!”

ஊற்றுப்போல் நீர்சொரியும் கண்க ளோடும்
உடனேதன் தந்தையின்பால் ஓடி வந்தாள்!
ஆற்றொண்ணாத் துயர்க்கடலில் ஆழ்ந்தார் தந்தை!
ஆராய்ந்து பண்பறிந்து வரன்தே டாமல்,
காற்றுள்ள நேரத்தில் தூற்றிச் சென்ற
கயவரது புரட்டுகளை உண்மை யென்று
சாற்றுகின்ற சாத்திரத்தால் மோசம் போனார்;
சாதகத்தைத் தீயிலிட்டுச் சூளுரைத்தார்!


"என்மகளைத் துச்சமென எண்ணிக் கொண்ட
இழிமகனுக் கொருபாடம் புகட்டு கின்றேன்!
நன்மகனைத் தரவியலாச் சாத்தி ரத்தால்
நடைபெற்ற திருமணத்தை விலக்குச் செய்வேன்
இன்முகமும், பொன்மனமும் பெற்ற வேறோர்
ஏழைக்கு மறுமணமாய் மகளைத் தந்து,
தன்மதிப் பைக் காத்திடுவேன்!" என்றார். அந்தத்

தையலுமே மனமிசைந்து, வாழ்வு பெற்றாள்!

16