கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/கல்கத்தாவில் காந்தி திட்டம் வ.உ.சி. மறுப்பும் எதிர்ப்பும்!


12. கல்கத்தாவில் காந்தி திட்டம் :
வ.உ.சி.மறுப்பும் - எதிர்ப்பும்!

மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு கொண்டு வந்த அரசியல் சீர்திருத்தம் என்ற திட்டத்தை எதிர்த்திட காந்தியடிகள் கொண்டு வந்த ஒத்துழையாமை என்ற தீர்மானத்தைப் பரிசீலனை செய்வதற்காக 1919-ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒரு காங்கிரஸ் சிறப்புக் கூட்டம் நடந்தது - மாநாடல்ல! மகா சபையுமன்று!

அந்தக் கூட்டத்தில், சாத்வீகத்தையும் சத்தியத்தையும் அடிப்படையாகக் கொண்டு சட்டசபைகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் ஆகியவற்றைப் பகிஷ்காரம் செய்வது என்ற பிரச்சனைகளைப் பற்றி முடிவெடுப்பதற்காக இந்தியத் தலைவர்கள் ஒன்று கூடினார்கள்.

இந்தக் கல்கத்தா விசேஷ காங்கிரசுக்குச் சென்னையிலே இருந்து ஏராளமான பிரதிநிதிகள் சென்றார்கள். தென்னாட்டுத் திலகரான சிதம்பரம் பிள்ளையும், நாமக்கல் நாகராஜ ஐயர், ஜனாப்பீர் பாட்சா சாஹிப், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, வரதராஜ முதலியார், ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், சேலம் விசயராகவாச்சாரியார், ஜார்ஜ் ஜோசப் போன்ற பலர் அந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்பெஷல் ரயிலில் பயணமானார்கள்.

சென்னையிலிருந்து கல்கத்தா சேருகின்ற வரையில் ரயில் வண்டியிலும், கல்கத்தா சென்ற பின்பு பிரதிநிதிகள் தங்கியிருந்த இடங்களிலும், காங்கிரசில் காந்தியடிகளின் ஒத்துழையாமை தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்ட நிமிஷம் வரையிலும் சிதம்பரம் பிள்ளை ஓயாமல் அந்தத் தீர்மானத்துக்கு விரோதமாக வாக்களிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு சென்னை மாகாணப் பிரதிநிதியையும் தனித்தனியே சந்தித்து வேண்டிக் கொண்டார்.

இரயில் வண்டித் தொடரிலுள்ள ஒவ்வொரு பெட்டியாகச் சென்று காந்தியடிகளின் ஒத்துழையாமை தீர்மானத்தை சிதம்பரனார் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார். இவ்வாறு அவர் செய்து வந்தபோது நாமக்கல் கவிஞர் இருந்த இடத்துக்கு வந்தார். ஆனால், அவர்தான் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை என்று சிதம்பரம் பிள்ளைக்குத் தெரியாது. அதனால், அவரருகே இருந்த நண்பர் ஒருவர் இவர்தான் நாமக்கல் கவிஞர் என்று அறிமுகம் செய்து வைத்தார்.

அறிமுகம் செய்து வைத்தவர், திலகர் இறந்த போது நாமக்கல்லார் பாடியிருந்த ஒரு பாடல், பத்திரிக்கையில் வெளியாகி இருந்ததை சிதம்பரம் பிள்ளையிடம் கொடுத்தார். அதைப் பெற்ற பிள்ளை அப்பாடலைப் படித்து விட்டு நாமக்கல் கவிஞரைப் பாராட்டிய பின்பு, காந்தியடிகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு மீண்டும் அங்குள்ள நாமக்கல் ஊர் பிரதிநிதிகளை கேட்டார். யாரும் அப்போது பிள்ளை முன்பு வாய் திறந்து பதில் பேசவில்லை. ஆனால், வரதராஜ முதலியார் என்ற நாமக்கல் பிரதிநிதி, ஏன் காந்தியடிகளை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன துரோகம் செய்தார் மகாத்மா உங்களுக்கு?" என்று கோபமாகவே கேட்டார்.

கோபப்படாதீர் முதலியாரே ஒரு தீர்மானத்தின் மீது ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வாக்கு சேகரிக்கும் உரிமை உமக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர் என்று கூறிவிட்டு அவரும், உடன் வந்த நண்பர்களும் அடுத்த ரயில்வே நிலையத்தில் இறங்கி வேறொரு பெட்டிக்குப் போய் விட்டார்கள்.

அடுத்த பெட்டியில் ராஜாஜி, டாக்டர் ராஜன், ஜியார்ஜ் ஜோசப் முதலியவர்களுடன் சிதம்பரம் பிள்ளையும் பேசிக் கொண்டிருந்தார். தான் ஒரு தலைவன். பிரபல கிரிமினல் வக்கீல். வெள்ளையனை எதிர்த்துக் கப்பல் ஓட்டியவன், கடும் சிறைத் தண்டனைகளை அனுபவித்துவிட்டு சிறை மீண்ட முதல் பெருந்தியாகி, தேசத்திற்காகப் பல கஷ்ட நஷ்ட தியாகங்களைச் செய்த முதல் தியாகமூர்த்தி. அங்கே பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் பிரதிநிதிகளை விட பல சிறப்புகளைப் பெற்றவன் என்ற மனக்கர்வமோ, அரசியல் தியாகப் பகட்டோ, பந்தாவோ, அகந்தையோ, ஆணவமோ எள்ளளவும் இல்லாத சாதாரண எளிய ஒரு குழந்தையைப் போல அனைவரிடமும் குழைந்து பேசிக் கொண்டிருந்ததை அந்த பெட்டியிலே வந்து ஏறிய நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்!

‘வாரும் பிள்ளைவாள்’ என்று சிதம்பரம் பிள்ளை நெடுநாள் பழகினவர் போல நாமக்கல்லாரை அழைத்துப் பேசியதை கண்ட ராஜாஜி, “ராமலிங்கம் பிள்ளையை உமக்குத் தெரியுமா?” என்று சிதம்பரம் பிள்ளையைக் கேட்டார். “ஓ! நன்றாகத் தெரியும், இதோ பாருங்கள் அவர் எழுதிய கவிதையை” என்று தன்னிடமிருந்த பத்திரிகையைப் பிரித்துக் காட்டினார். அதைக் கண்ட ராஜாஜி! “ஒ இதுவா? உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று தானே” என்றார்:

“நானும்தான் திலகர் இறந்தபோது இரங்கற் பாடல்களைப் பாடினேன், அவை பிள்ளை பாடலைப் போல அமையவில்லை. உண்மையான கவித்திறம் எல்லோருக்குமா வரும்?” என்று ராஜாஜியைப் பார்த்து சிதம்பரனார் கூறியதைக் கேட்ட ராமலிங்கம் பிள்ளை மெய்மறந்து போனார் உடல் புல்லரித்தாராம்!

ஒரு சிறந்த தேசபக்தர், தியாக மூர்த்தி, திலகர் பிரானுடைய தலையாய சிஷ்யர்களிலே சிறப்புற்ற தென்னாட்டுத் திலகர், பாரத தேவியின் விடுதலைக்காகப் பல கொடுமைகள் நிறைந்த சிறைவாசத்தைச் செய்து அருந்தவமாற்றிய அண்ணல், ஆழ்ந்த தமிழ் ஆராய்ச்சி பெற்ற அறிஞர். நம்மை எவ்வளவு பெருமையாக உயர்வாக ராஜாஜியிடம் பாராட்டியுள்ளாரே என்ற உணர்ச்சி என்னைப் புல்லரிப்பு படச் செய்துவிட்டது என்று நாமக்கல் கவிஞர் தனது நூலில் ஒன்றான ‘தேச பக்தர் மூவர்’ என்ற நூலிலே எழுதியுள்ளார். ராஜாஜி இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த போது இந்த சம்பவத்தைச் சென்னை செயிண்ட் மேரிஸ் மண்டபத்திலே நடந்த வ.உ.சி.விழாவிலே பேசினார். அத்தகைய ஒரு பேரறிவாளன் காந்தி பெருமானை எதிர்த்து வாக்கு கேட்கவில்லை. அவரது ஒத்துழையாமை என்ற திட்டம், சரியான முறையல்ல என்பதை உணர்த்தி, காந்தியடிகளது தீர்மானத்தைத் தோற்கடிக்கவே பகிரங்கமாக ரயில் வண்டி பெட்டி ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கி வாக்கு சேகரித்தார்.

கவிஞர் பிள்ளையை இவ்வளவு உயர்வாகப் பாராட்டி விட்டு, என்ன புலவரே உமது ஓட்டு எனக்குக் கிடைக்கும் அல்லவா? என்று நெருக்கினார் சிதம்பரம் - ராமலிங்கம்

ஆனால், ராமலிங்கம் பிள்ளை ஏதும் பேசாமல் ஊமை போல இருந்ததைக் கண்ட சிதம்பரம் பிள்ளை, என்னுடைய கருத்தில் உமக்கு உடன்பாடு இல்லையா? என்று மீண்டும் கேட்டார்.

ரயில் வண்டி ஓடும் ஓசைதான் கேட்டதே தவிர, நாமக்கல் பிள்ளை ஓசை ஏதும் எழுப்பாமலே மௌனமாக இருந்தார்.

நான் சொல்வதில் உங்களுக்கு விருப்பம் இல்லையானால், கூசாமல் கூறுங்கள். உங்களைக் கசக்க வேண்டும் என்று நான் எண்ணமாட்டேன் என்று சிதம்பனார் மீண்டும் நாமக்கல்லாரைக் கேட்டபோது, ‘நான் காந்தியடிகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறி ஏற்கனவே வாக்களித்து விட்டேன்’ என்றார்.

‘சபாஷ் புலவரே! உங்கள் உண்மைத் தன்மையை நான் மிகவும் போற்றுகின்றேன். மனமார வாழ்த்துகிறேன். நீங்கள் யாருக்கு வாக்களித்து விட்டீர்களோ, அவர்களுக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பது மிகவும் உயர்வான நோக்கம். அது தான் சரி. நான் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்’ என்று சிதம்பரம் பிள்ளை அடுத்த பெட்டிக்குச் சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சி கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளையின் நேர்மையான குணச்சிறப்பை படிப்பவர் நெஞ்சில் பதியவைக்கும் பண்பாக உள்ளது அல்லவா?

இத்தகைய மனித நேயம் கொண்டவரின் போர் முறைப் பண்புக்கு ஒரு நிகழ்ச்சி வாய்த்ததாக, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தனது தேசபக்தர் மூவர் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார். அதன் சுருக்க விவரம் வருமாறு :

“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்த போது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று பயணிகள் கேட்டார்கள்.

கல்கத்தா மெயில் வண்டி பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த மெயில் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து எங்கள் ஸ்பெஷலுக்கு முன்பு புறப்படும் என்றும், அது புறப்பட்டு போன பின்பு அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் ஸ்பெஷல் வண்டி புறப்படும் என்றும் ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார். இதைக் கேட்டதும் ஸ்பெஷல் வண்டியிலே உள்ள தேசபக்தர்களுக்கு கோபம் வந்து விட்டது.

‘என்ன அந்த மெயில் வண்டிக்கு ஆறு மணி நேரத்துக்கு முன்னால் புறப்பட்ட எங்களை அனாவசியமாக இங்கே மூன்று மணிக்கு மேல் காக்கப்போட்டு, எங்கள் வண்டிக்கு முன்னால் மெயிலைப் போக விடுவது என்றால், இதை விட எங்களுக்கு அவமதிப்பு இன்னும் என்ன இருக்கிறது?’ என்று. அந்த ஸ்டேஷன் மாஸ்டரோடு ஒரே போராட்டம் ஏற்பட்டு விட்டது.

இந்தக் கூச்சல், குழப்பம் கப்பலோட்டிய தமிழன் காதில் விழுந்தது. வண்டியை விட்டு அவர் இறங்கி வந்தார். வெகு வேகமாக ஓடி ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று விசாரித்தார். விவரம் விளங்கியவுடன் போராட்டப் பிரிவுக்கு அவரே தளபதியானார்.

இரயிலில் இருந்தவர்களை எல்லாம் கையமர்த்தி விட்டு சிதம்பரம் பிள்ளையே அந்த வழக்கை வாதித்து, “எங்கள் வண்டிக்கு முன்னால் மெயில் வண்டியைப் போக விட மாட்டோம். எங்கள் வண்டிக்கு அரைமணி நேரத்துக்குப் பின்னால்தான் மெயிலை விட வேண்டும். எங்கே, அந்த மெயில் வண்டி எங்களுக்கு முன்னால் எப்படிப் போய்விடும் என்பதைப் பார்த்து விடுகிறோம்” என்று சிதம்பரனார் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சவால் விட்டார்.

‘எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் என்ன செய்வேன். எனக்குக் கிடைத்துள்ள உத்தரவுப்படி தான் நான் என். கடமைகளைச் செய்ய வேண்டும். மெயில் வண்டி முன்னால் போக வேண்டும் என்று உத்தரவு செய்தது நானல்ல’ என்று ஸ்டேஷன் மாஸ்டர் கூறினார்.

“மெயில் வண்டி முன்னாலே போகட்டும், பின்னாலே போகட்டும். அதைப் பற்றி அக்கரையில்லை. எங்களை எதற்காக இங்கே அனாவசியமாக மூன்று மணிநேரம் காக்கப் போட்டீர்கள்? இந்த மூன்று மணி நேரமும் வண்டி ஓடியிருந்தால் இன்னேரம் நாங்கள் கல்கத்தா சென்று சேர்ந்திருப்போம் அல்லவா? என்று சிதம்பரனார் ஸ்டேஷன் மாஸ்டரைத் திரும்பக் கேட்டார்.

'உண்மைதான்; இது சரியான கேள்விதான். ஆனால், உங்கள் வண்டியை இங்கே மூன்று மணி நேரம் காக்கப்போட வேண்டுமென்பது ஏற்பாடல்ல. அது எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்டது. இந்த ஸ்டேஷனில்தான் மெயில்வண்டி உங்கள் வண்டியைத் தாண்டி முன்னால்போக வேண்டும் என்பது ‘டிராபிக் மானேஜருடைய உத்தரவு. மெயில் வண்டி இன்றைக்கு சுமார் மூன்று மணி நேரம் லேட்’. அதனால், இந்த சங்கடம் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்யலாம்? என்றார்.

‘என்ன செய்யலாம்? என்றா கேட்கிறீர்கள். எங்கள் வண்டியை உடனே விடலாம் என்கிறேன்! மூன்று மணி நேரம் லேட் ஆன மெயில்வண்டி இன்னும் கொஞ்சம் லேட் ஆகிவிட்டால் என்ன முழுகிப்போகும்? எங்கள் வண்டியை விடச்சொல்லுங்கள் என்று கர்ஜித்தார் சிதம்பரம் பிள்ளை.

அப்படிச்செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்றார் ரயில் நிலைய அதிகாரி,

அப்படிச் செய்ய உங்களுக்கு அதிகாரம் இல்லையென்றால், எப்படிச் செய்வது சரியென்று எங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டே சிதம்பரனார் வண்டியை நோக்கி வந்தார்.

இதற்குள் வண்டியில் இருந்த எல்லா இளைஞர்களும் இறங்கி வந்து சிதம்பரம் பிள்ளையைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து சிதம்பரம் பிள்ளை ஒரு சொற்பொழிவு செய்து அந்த மெயில் வண்டி நம்முடைய வண்டிக்கு முன்னால்போகக் கூடாதென்று நாமெல்லாரும் மெயிலுக்கு முன்னால் தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு சத்யாக்கிரகம் செய்வோம். மெயில் எப்படி முன்னால் போய்விடும் பார்ப்போம் என்றார். உடனே சிதம்பரம் பிள்ளையினுடைய கட்சிக்கு ஏராளமான ஆட்கள் சேர்ந்து விட்டார்கள்.

எனக்குத் தெரிந்த யாரார் அதில் சேர்ந்தார்கள், யாரார் சேரவில்லை என்பது இப்போது நினைவில் இல்லை. ஆனால், ராஜாஜியும் வேறு சிலரும் சேர்ந்து மெயிலை அப்படிச் செய்வது சரியல்ல என்றார்கள். ஆனால், சிதம்பரம் பிள்ளையுடன் காந்தியடிகளுக்காக வாதாடி ஆதரவு தந்து கொண்டிருந்த வரதராஜ முதலியாரும் அவரது நண்பர்களும் சிதம்பரனாருடன் தண்டவாளத்தில் படுத்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள். காந்தியடிகளுக்கு ஆதரவாக ‘ஓட்டு’ போடுவதற்கென்றே வந்த வேறு சிலரும் சிதம்பரம் தலைமையில் சேர்ந்து கொண்டார்கள்.

எங்கள் ரயில் வண்டி மெயில் வண்டிக்கு முன்னால் போக வேண்டும் என்பதற்காக, அப்போது சிதம்பரனார் அணி எழுப்பிய கோஷங்களையும், கோபதாபப் பேச்சுக்களையும் இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. அவ்வளவு வீராவேசமாகச் செயல்பட்டார் அன்று சிதம்பரம்பிள்ளை.

வெள்ளைக்காரனுடைய அதிகாரக் கோட்டையைத் தகர்த்தெறியும் படைக்குரிய தளபதி போல அன்று கப்பலோட்டிய தமிழன் வெகு களிப்புடன் போராடினார்.

சிதம்பரம் படை தயார்! மெயில் வண்டிக்கான கைகாட்டி இறங்கிவிட்டது. வேகத்தில் மெயில் வந்து கொண்டிருக்கிறது. சிதம்பரம் பிள்ளையும் அவருடன் சேர்ந்த வீரர்களும் இஞ்சினுக்கு முன் தண்டவாளத்தில் குதித்து விட துடித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் வண்டியைச் சேர்ந்த சிலர், சிதம்பரம் பிள்ளையிடம் சென்று இந்த முரட்டு முயற்சியை விட்டு விடுமாறு கெஞ்சிக் கேட்டார்கள். பலிக்கவில்லை. சேலம் விசயராகவாச்சாரி திலகரைப் பின்பற்றும் ஒரு தீவிரவாத தேசபக்தர். சிதம்பரமும் திலகர் பக்தர், அதனால் விஜயராகவாச்சாரி சொன்னால் அவர் கேட்பார், போராட்டத்தைக் கைவிடுவார் என்று ராஜாஜி நாகராஜ ஐயரிடம் கூறியதைக் கேட்ட சிலர், வ.உ.சி.யை விஜயராகவாச்சாரியார் அழைப்பதாகக் கூறி அவரை அழைத்து வந்தோம். உடனே ராஜாஜி வலிய விசயராகவாச்சாரியாரிடம் மிகவும் விநயமாகப் பேசியதன் விளைவாக, சிதம்பரம் பிள்ளையிடம் விஜயராகவாச்சாரியார் சாதுர்யமாகப் பேசினார். பிள்ளையும் மதித்தார். அதனால், மெயில் முன்னால் போயிற்று. நாங்கள் பின்னால் போனோம்.

இந்த சம்பவத்தில் சிதம்பரம் பிள்ளையினுடைய ஆண்மையையும், வெகுவிரைவில் கட்சி சேர்த்துவிடக் கூடிய ஆற்றலையும், எதிர்ப்புகளுக்கு அஞ்சாத அவரது துணிச்சலையும், தலைவனுக்கு உடனே தலை வணங்கும் தளபதியின் தன்மையையும் நான் கண்ணாரக் கண்டேன்.

எல்லாரும் கல்கத்தா போய்ச் சேர்ந்த பின்பு, நாங்கள் தங்கியிருந்த இடத்தில் சிதம்பரம் பிள்ளை ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் காந்தியடிகளது தீர்மானத்திற்கு விரோதமாக ஓட்டு சேகரித்தார். அவர் காந்தியடிகள் முன்பு விசேஷ சபையில் தீர்மானத்தை எதிர்த்துப் பேசும் போது, “காந்தியடிகளின் ஒத்துழையாமைத் தீர்மானத்தை நான் மட்டும் எதிர்க்கவில்லை. விசேஷ மகா சபையிலே கூடியுள்ள திலகரைப் பின்பற்றும் அவரது வாரிசுகள் என்போர் எல்லாருமே தீவிரமாக எதிர்க்கின்றார்கள். அந்த எதிர்ப்புக்கு காரணம் பட்டம் பதவிகளை விட்டு விட வேண்டுமே என்பதோ, சட்டத்தை எதிர்த்துக் கஷ்டப்பட வேண்டுமே என்பதோ அல்ல. அரசியல் சதுரங்கத்தில் சண்டையில் சத்தியத்தையும், அகிம்சையையும் கட்டாயமாக்கக் கூடாது” என்பதே.

சத்தியத்தையும் சாத்வீகத்தையும் அப்படிக் கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்தால், தேசத்தில் ஆண்மையும் தைரியமும் அடியோடு அழிந்தே போகும் என்றே அப்போது தலைவர்கள் நினைத்தார்கள். அதல்லாமல் போராட்டங்களில், அது அரசியல் போராட்டமானாலும் சரி அல்லது அன்னியப் போராட்டமானாலும் சரி - ‘சாம, பேத, தான, தண்டம்’ என்று சொல்லப்படுகிற நான்கு வித உபாயங்களையும் சமயத்துக் கேற்றபடி பயன்படுத்த வேண்டுமே அல்லாமல், வெறும் சத்தியம் சாந்தம் என்ற வைதீக மனப்பான்மை உதவாது என்பது திலகரைப் பின்பற்றுவோர்களுடைய எண்ணமாகும்.

சாம பேத, தான, தண்டம் என்ற சதுர்வித உபாயங்களைப் பற்றிக் கேட்டுக் கேட்டுச் சொல்லிச் சொல்லிப் பரம்பரையாகப் பழகிவிட்ட பலருக்கும் இந்த வாதம் மிகவும் சரியானதாகத் தோன்றியதால் அந்த எதிர்ப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

‘எங்கள் மன்னன் திலகர் இறந்து விட்டார் என்பதால், அவரது கொள்கைக்கு எதிராக இந்த ஒத்துழையாமை தீர்மானத் திட்டத்தைக் காந்தியடிகள் கொண்டு வந்துள்ளார். எங்கள் அரசியல் குரு திலகர் இருந்திருந்தால் இந்தப் பேடித்தனமான தீர்மானத்தைக் கொண்டு வர நமது காந்தி துணிவாரா?

திலகர் பெருமான் தேசத் தொண்டாற்றியதில் உண்மையிலே நம்பிக்கை வைத்திருப்பவர்கள், தீவிரவாதத் தேசத் தொண்டுதான் நமது பாரத பூமிக்குரிய சுதந்திரத்தை வெற்றிக்கரமாகத் தேடித் தரும் என்ற சத்திய உணர்வுடையோர், ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்ற ஓட்டளிக்கக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் என்று கர்ஜனையிட்ட சிதம்பரம் பிள்ளை அமர்ந்துவிட்டார்.

மதிக்கத் தகுந்த காங்கிரஸ் தலைவர்களுள் மிகப்பெரும் பகுதியினரும் தீர்மானத்தை எதிர்த்தார்கள் என்றாலும், ஏராளமான ஓட்டுகளால் காந்தியடிகளுடைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனித சுபாவத்துக்கு மாறானது என்றும், நடைமுறைக்கு ஒத்துவராதது என்றும், இன்று நாம் அனுபவத்தில் காண்கின்ற அந்த அஹிம்சை தீர்மானம், சிதம்பரம் பிள்ளை போன்ற அறவாணர்களால் எதிர்க்கப்பட்ட பிறகும் கூட, காந்தியடிகளது ஒத்துழையாமை தீர்மானம் அதிகப்படியான வாக்குகளால் அந்த சிறப்புக் கூட்ட ஆலோசனை அரங்கில் நிறைவேறிய ரகசியம் என்ன என்பதை ‘தேசபக்தர்கள் மூவர்’ என்ற கட்டுரையில் இதோ நாமக்கல் கவிஞர் விளக்குகிறார். படியுங்கள்.

“மனித சுபாவத்தில் மறைந்து கிடக்கிற ஆன்ம உணர்ச்சி எப்போதும் அகிம்சையைத்தான் நாடுகின்றது. ஆனால், மனிதனுடைய நித்ய அனுஷ்டானத்தில் ஒவ்வொரு நிமிஷமும் முன்னணியில் நிற்கிற சரீர உணர்ச்சிகள் அவ்வளவும் ஹிம்சையையே பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும், மக்களுக்குள் அவை மறைந்தும் இருந்து கொண்டிருக்கிறது. ஆன்ம உணர்ச்சி ஒரு சிறிதும் தலைதூக்க முடியாதபடிதான் மனித சமூகத்தின் சமுதாய வாழ்க்கை நடந்தும், நடத்தப்பட்டும் வருகிறது.

எனினும், இந்த ஆன்ம உணர்ச்சி என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைவாகவேனும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பது உண்மையிலும் உண்மை.

அற்புதப் பிறவியான மகாத்மா காந்தியவர்களின் அருந்தவங்களால் அவருக்குண்டான அதிசயிக்கத்தக்க ஆன்ம சக்தியின் வேகத்தால் எல்லா மனிதரிடத்திலும் இருந்து கொண்டே இருக்கிற ஆன்ம உணர்ச்சியானது அந்த கல்கத்தா காங்கிரசில் மேலோங்கி நிமிர்ந்து நின்றது.

அதனால், தங்களுடைய தினசரி வாழ்க்கையில் அஹிம்சைக் கொள்கைகளைக் கடைப்பிடித்தறியாத, கடைப்பிடிக்கவே முடியாத, முழுதும் முரட்டுப் பேர்வழிகளும் கூட, காந்தியடிகளின் அகிம்சை தீர்மானத்தை ஆவேசத்தோடு ஆதரித்தார்கள். அடிக்கடி அப்படி மேலோங்கி வருகின்ற ஆன்ம உணர்ச்சியின் உச்சாடன வேகம் குறைந்து போனதால்தான், இன்றைக்கு அந்த அகிம்சை மார்க்கத்துக்கு அடிப்படையாக இருந்த காங்கிரஸ்காரர்களிடத்திலும் கலவரங்களைக் காண்கிறோம்.

கலகங்களும், கலவரங்களும் எவ்வளவு ஏற்பட்டாலும், அந்த ஆன்ம உணர்ச்சி அஹிம்சையைத்தான் பிரதிபலிக்கும். அந்த ஆன்ம உணர்ச்சி சமுதாய வாழ்க்கையில் அற்றுப் போகாமல் இருக்கச் செய்வதுதான் மகாத்மாக்களின் வேலை. அந்த வேலையினால்தான் மனித சமூகம் மிருக வாழ்க்கைக்கு மாறுபட்டதாக இன்னும் இருந்து வருகிறது.

கல்கத்தாவில் காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்திற்கு வ.உ.சி. மறுப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், திலகர் மேலுள்ள தீவிரவாதப் பற்றால் அதை எதிர்க்கவும் செய்தார். ஆனாலும், திட்டம் நிறைவேறியதைக் கண்ட சிதம்பரம் பிள்ளையின் அரசியல் வாழ்க்கை அடங்கிவிட்டது. காந்தியடிகளை இனிமேல் எதிர்க்க முடியாது என்றெண்ணி அவர் அரசியலை விட்டே ஒதுங்கிவிட்டார்.