கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. விடுதலையானார் ஒரே ஒரு தமிழன் வரவேற்றார்.


11. வ.உ.சி. விடுதலையானார்
ஒரே ஒரு தமிழன் வரவேற்றார்

சிதம்பரனார் வெள்ளையரது வாணிபத்தை எதிர்த்துக் கப்பலோட்டியது ஒரு குற்றம் அனுமதியின்றிப் பொதுக்கூட்டம் நடத்தியது இரண்டாவது குற்றம்: பாமர மக்களை ‘வந்தே மாதரம்’ என்று முழக்கங்களை எழுப்ப வைத்தது மூன்றாவது குற்றம் என்ற மூன்று குற்றங்களைச் செய்தார் என்ற காரணங்களைக் காட்டி வெள்ளையராட்சி அவருக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையை விதித்து, அந்த தண்டனையை அந்தமான் தீவுக்குச் சென்று அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

சுப்பிரமணிய சிவா சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து ராஜத்துரோகக் குற்றம் செய்தார் என்று அவருக்கும் பத்தாண்டு தீவாந்தரம் தண்டனை அளித்தது ஆங்கிலேயர் ஆட்சியின் நீதிமன்றம்.

சிதம்பரனார் நண்பர்கள், வெள்ளையர் தீர்ப்பை எதிர்த்து லண்டனிலுள்ள பிரீவிகௌன்சில் நீதிமன்றம் வரை சென்று, இறுதியாக அந்த தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இந்த சிறைத் தண்டனையை சிதம்பரம் பிள்ளை கோயம்புத்துர், கண்ணனூர் சிறைகளில் கடுமையாக அனுபவித்து விட்டு, 1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையடைந்தார்.

சிறையிலே இருந்து விடுதலையான சிதம்பரம் பிள்ளையை வரவேற்றிட எந்த ஒரு தமிழனும் சிறை வாயிலுக்கு வரவில்லை. தமிழ்நாடு அவரது தியாகத்தை நன்றி கெட்டத்தனமாக அப்போது மறந்துவிட்டது. சிறையிலே இருந்து வெளிவந்த சிதம்பரனாரை சிறை வாயிலே வரவேற்ற ஒரே நண்பர் சுப்பிரமணிய சிவா மட்டும்தான். ஆறு வருடங்கள் சிறையிலே பல கொடுமைகளைக் கடுமையாக அனுபவித்தவர் வ.உ.சி. அதுமட்டுமல்ல, வழக்குரைஞராகப் பணியாற்றி வானளாவும் பெரும் புகழைப் பொது மக்களிடம் பெற்று வளமாக வாழ்ந்த பெருமகன் சிதம்பரனார். தன்னந்தனி மனிதனாக அரும்பாடுபட்டு உழைத்துப் பல கஷ்டங்களை ஏற்று, வெள்ளையர்கள் தமிழர்களைக் கொள்ளையடித்த பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்துக் கப்பலோட்டிய முதல் தமிழ் மகன் சிதம்பரனார். வடநாட்டுப் பத்திரிக்கைகளும், தென்னாட்டுப் பத்திரிக்கைகளும் ஒன்று சேர்ந்து சிதம்பரனார் பெற்ற 40 வருட தீவாந்தரத் தண்டனையை எதிர்த்து எழுதிடும் அளவுக்கு இந்தியா முழுவதும் செல்வாக்குப் பெற்ற ஓர் அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர் சிதம்பரனார். அப்படிப்பட்ட செயற்கரிய செயல்கள் செய்து சிறையில் செக்கிழுத்த செம்மலை சிறைவாயிலிலே வரவேற்றிட காங்கிரஸ் மகா சபை மக்களுள் ஒருவரும் வராததால், அரசியலும் பொதுவாழ்வும் அப்போது மகா பெரிய நன்றி கெட்டத்தனமாக நடந்து கொண்டன என்பது தான் சிதம்பரனார் வரலாறாகக் காட்சியளித்தது. ஆனால், ஒரே ஒரு தமிழ் மகன், அவரும் சிதம்பரனாருடன் பெற்ற கடுந்தண்டனையை முன்கூட்டியே அனுபவித்து விட்டு, விடுதலையாகி வெளியே வந்திருந்த காரணத்தினால், நட்பினருமை தெரிந்த நன்றியுணர்ச்சியின் துடிதுடிப்பால், சிறையிலே அனுபவித்த கொடுமைகளின் காரணமாக குஷ்ட நோய் ஏற்பட்டு, அந்த நோய் உடலெல்லாம் பரவி, கால் கை விரல்கள் எல்லாம் மடிந்து வீங்கி வழியும் புண்களின் சீழ் ரத்தக் கோரமையோடு ஊன்று கோல் ஒன்றை ஊன்றிக் கொண்டு சிறைவாயில் முன்னே சிதம்பரனாரை வரவேற்றிட வந்திருந்தார் பாவம்!

அந்தக் குஷ்ட நோய் பெருமகனைக் கண்ட தியாக மூர்த்தி சிதம்பரம் பிள்ளை, கண்ணீர் விட்டுக் கதறி, குஷ்டநோயாளர் என்றும் பாராமல் அவரைக் கட்டித் தழுவி “அப்பா சுப்பிரமணிய சிவா, நீயாவது வந்தாயே!” என்று ஆரத் தழுவிக் கொண்டே கண்ணீர் சிந்தினார்.

சிதம்பரனார் வாழ்க்கையிலே அவர் அடைந்த துன்பங்களைக் கண்டு மனமுருகி வருந்தி வேதனைப்பட்டவர்கள் தமிழ் நாட்டிலே இரண்டே இரண்டு தியாக உள்ளங்கள்தான். ஒருவர் சுப்பிரமணிய சிவா. மற்றவர். கவியரசர் பாரதிப் பெருமகன் ஆவார். சிறை மீண்ட சிதம்பரனார் சென்னை மாநகரிலேயே சில ஆண்டுகளைக் கழித்தார்.

ராஜத்துரோகம் என்ற பெயரில் சிதம்பரனார் தண்டனை பெற்றவர் என்பதால், அவரது வழக்குரைஞர் சின்னமான ‘வக்கீல் சன்னத்து’ உரிமையை வெள்ளையராட்சி பறிமுதல் செய்துவிட்டது. அதனால் என்ன செய்வது என்று அறியாது திகைத்தார். தொழிலும் அவரால் நடத்த முடியவில்லை. வருமானத்துக்கும் வேறு வழியில்லை. மக்கள் வறுமையிலே வாடக் கூடாது என்பதற்காகப் போர்க்கொடி தூக்கி வெள்ளையராட்சியோடு போராடிய அஞ்சா நெஞ்சர் சிதம்பரனார் தனது வறுமையைக் கண்டு நொந்தே போனார்:

துத்துக்குடி கோரல் மில்லின் இரண்டாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பட்டினியும் பசியுமாக அவர்கள் குடும்பங்கள் வாடியபோது, அந்தக் குடும்பங்களுக்காக நிதி திரட்டிக் கொடுத்து உணவளித்தவர்; வேலைகளைத் தேடித் தந்து அவர்களுக்கு வாழ்வளித்த சிதம்பரம் பிள்ளையின் அன்றைய கதி வறுமை; வாட்டம்; சோர்வு தளர்ச்சி; திகைப்பு.

சிதம்பரம் பிள்ளை இயற்கையாகவே இரக்க உள்ளம் கொண்டவர். பிறர் படும் வாழ்க்கைத் துன்பங்கள் அவர் நெஞ்சிலே நெருஞ்சி முள்ளாகத் தைக்கும் போதெல்லாம் இல்லையென்று சொல்லாமல் இருப்பதைக் கொடுத்து உதவும் ஈரமுள்ளவர். எடுத்துக்காட்டாக...

ஒரு சமயம் ஒருவர் தனது பெண்ணுக்குரிய திருமண நாளைக் குறித்துவிட்டு சிதம்பரனாரிடம் வந்து, ‘எனது பெண் திருமணத்துக்கு நாள் வைத்து விட்டேன். கையிலே பணமில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கல்யாணத்தைச் செய்து விடுவேன்’ என்று மனமிளகிக் கேட்டபோது அவர் கேட்ட ரூபாய் ஆயிரத்தையும் உடனே வழங்கிய நெஞ்சர் அவர். அத்தகைய ஒரு பெருமகன் இன்று நாட்டுக்காக, சுதந்திரத்துக்காக, வெள்ளையரை எதிர்த்ததால் கைப் பொருளை இழந்தார். வருவாய் வரும் வக்கீல் சன்னத்தையும் இழந்து வருவாய்க்கு வழியற்ற வறுமையாளரானார். சிதம்பரம் பிள்ளை மறுபடியும் எப்படியாவது பறிமுதல் செய்யப்பட்ட தனது வக்கீல் சன்னத்தைத் திரும்பப் பெற முயன்றார். அப்போது அவருக்கு இ.எச்.வாலஸ் என்ற வெள்ளைக்கார நீதிபதி உதவி செய்தார். வெள்ளை மனிதர்களிலும் சில கண்ணியவான்கள் இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அந்த நீதிபதியின் பேருதவியால் சிதம்பரம் பிள்ளைக்கு மீண்டும் வக்கீல் சன்னத்து கிடைத்தது.

நன்றியின் திலகமாக நடமாடிய சிதம்பரம், தனது மகன் ஒருவருக்கு அந்த நீதிபதியின் பெயரான வாலஸ் என்பதின் அடையாளமாக, வாலீஸ்வரன் என்ற பெயரை வைத்துப் போற்றினார். அதுபோலவே, அடிக்கடி பொருள் உதவி செய்த தூத்துக்குடி, ஆறுமுகம் பிள்ளையின் பெயரை மற்றொருமகனுக்கு ஆறுமுகம் என்று பெயரிட்டு நன்றி மறவா நாயகரானார்.

சிதம்பரம் பிள்ளை சென்னையில் இருக்கும்போது வறுமை நெருப்போடு வாழும் நிலையிலே நாட்களை நகர்த்தினார். அப்போதும், இவ்வளவு கஷ்ட நிலையிலும், அவர் பொது வாழ்க்கைப் பணி மீது வெறுப்புக் கொள்ளவில்லை.

சென்னை பெரம்பூர் ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் தீவிரமாகப் பணி புரிந்தார். இந்தப் பதவியிலும் தனது தீவிரத்தைக் காட்டி பல ஆண்டுகள் உழைத்தார்.

வாலஸ் பெருமகன் செய்த உதவியால், சிதம்பரம் பிள்ளை வக்கீல் சன்னத்து சற்றுத் தாமதமாகவே கிடைத்தது. அதைப் பெற்ற சிதம்பரனார் நேரே தனது ஊரருகே உள்ள நகரமான கோயில்பட்டிக்குச் சென்றார். அங்கே மீண்டும் வக்கீலானார்! மறுபடியும் துத்துக்குடி நகருக்கே சென்றார்.