கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. தண்டனைக்குப் பழி வாஞ்சிநாதன் ஆஷ்துரையைச் சுட்டார்.

10. வ.உ.சி. தண்டனைக்குப் பழி
வாஞ்சி ஆஷ்துரையைச் சுட்டார்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த விஞ்ச் என்ற வெள்ளைக்காரருக்கு உதவிக் கலெக்டராக இருந்தவர் ஆஷ்துரை உதவிக் கலெக்டராக இவர் இருந்த போது காங்கிரஸ் தேச பக்தர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளைச் செய்தவர் மாவட்டம் முழுவதும் உள்ள பணக்காரர்கள் பண்ணையார்கள், கல்விமான்கள் கல்லார்கள் புகழ்மிக்க பெரும் செல்வாக்கு பெற்றவர்கள் அனைவரிடமும் கெட்ட பெயரும் பழி பாவங்களும் ஏற்றிட்ட ஓர் அதிகாரியாக விளங்கியவர் ஆஷ்துரை:

சுதேசிக் கப்பல் கிளர்ச்சி அறவழியில் நடந்ததை மறவழியில் மாற்றியதே வெள்ளைக்காரர்களான விஞ்ச் துரையும் ஆஷ் துரையும் தான் அந்த அளவுக்கு அந்த இரு துரைமார்களின் ஆணவம் ஆதிக்கம் இனவெறி ஆட்சி ஆதிக்கம் ஆகியவை இருந்தன.

அதே நேரத்தில் இந்த இரு துரைகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு போலீசார் செய்த கொடுமைகளை பிண வீழ்ச்சிகளை படுகாயப் படலங்களைப், பொதுமக்களும் மறக்காமலே இருந்தார்கள் என்பதும் வேறோர் காரணமாகும். அறவழி வெற்றியைத் தராது; மறவழிதான் அதாவது ஆயுதம் ஏந்தும் போராட்டம்தான் வெற்றி தரும், வெள்ளையர் கொடுமைகளைப் பொறுக்க முடியாது என்று நம்பிய பொதுமக்கள் ஒரு சிலரின் தவறான எண்ணமும் இன்னொரு காரணமாகும்.

ஆனால், சிதம்பரனார் இத்தகையோர் போக்கை என்றுமே ஆதரித்ததில்லை சுதந்திரம் பெறுவதில் தீவிரவாதம் காட்டுவாரே தவிர அதற்காக வன்முறைகளை என்றுமே அவர் பிரயோகித்ததே இல்லை.

ஏனென்றால் வடநாட்டிலே இந்த ஆயுதப் புரட்சியை திருநெல்வேலிக்கு முன்னமேயே புரட்சிவாதிகள் ஒத்திகை பார்த்துவிட்டனர். அதாவது கிங்ஸ்ஃபோர்டு என்ற நீதிபதியைக் கொலை புரியும் முயற்சியில் குறிதவறி கென்னடி என்ற ஒரு வெள்ளைக்காரப் பெண்ணையும் அவருடைய மகளையும் குண்டுவீசிக் கொன்றுவிட்டனர். இந்த துயர நிகழ்ச்சி 1908-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாளன்று பீகார் மாநிலத்திலே உள்ள முஜபர்பூரில் நடந்தது. இக்கொலைக்குக் காரணம், குதிராம்போஸ் என்ற ஓர் இளைஞன் அவன் தூக்கிலிடப்பட்டான்!

திருநெல்வேலி மாவட்டத்தில் ‘தேசாபிமானிகள் சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்ததைப் போல பாண்டிய நாட்டில் வீர இளைஞர்கள் ஒன்று கூடி, அபிநவ பாரத சங்கம் என்ற ஓர் ரகசியமான சங்கம் அமைக்கப்பட்டது.

இவர்கள் இந்திய விடுதலைக்காக தமது உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணிக்க சபதம் ஏற்றுக் கொண்டனர் ஒவ்வொருவரும் சங்க உறுப்பினராகும்போது, ரத்தக் கையெழுத்திட்டுள்ளனர் அவர்களிடம் பரங்கி ஒழிப்பு என்ற அச்சகம் இருந்ததால், அடிக்கடி துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுத் தங்களது நடவடிக்கையை மக்களுக்குத் தெரிவிப்பது வழக்கம் ஆங்கிலேய அரசு அந்த தேசபக்த இளைஞர்களைத் தண்டிக்கத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான வாலிபர்கள் கடும் தண்டனை பெற்றார்கள்.

புரட்சிக்காரர்கள் பலர் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சியிலே உள்ள புதுச்சேரி நகருக்குள் தஞ்சமடைந்தார்கள். புதுவையிலிருந்த புரட்சிக்காரர்கள், லண்டன், பாரிஸ் போன்ற இடங்களிலே இருந்த புரட்சித் தீவிரவாதிகளோடு சம்பந்தமும், நட்பும் கொண்டிருந்தனர்.

விநாயக தாமோதர சவர்க்கார் புரட்சிக்காரர்களின் தலைவராக இருந்தார். லண்டனில் இந்தியா மாளிகை புரட்சிக்காரர்களின் பாசறையாக இருந்தது. இந்த புரட்சிவாதிகளுடன் தான் தமிழ்நாட்டு புரட்சிவாதிகளும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

புரட்சியாளர்கள் புதுவையிலிருந்து பாரிஸ் வழியாக இந்தியா மாளிகைக்குச் சென்றார்கள். 1910-ஆம் ஆண்டிற்குள் புரட்சிக்கு திட்டம் உருவானது. வ.வெ.சு.ஐயர், சியாம்ஜி, கிருஷ்ண வர்மா ஆகியோர் பாரிஸ் வழியாகப் புதுச்சேரிக்கு வந்தார்கள்.

இதுபோன்று புரட்சிக்குத் திட்டங்கள் வகுத்துக் கொண்டிருந்த வேளையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி கலெக்டராக இருந்த ஆஷ்துரை பதவி உயர்வால் கலெக்டரானார். ஆஷ் துணை ஆட்சியராகப் பதவியிலிருந்த காலத்தில் தேசியவாதிகளையும் தொண்டர்களையும் கொடுமைப்படுத்தியதற்கெல்லாம் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று மக்களிலே சிலர் அதற்கான சந்தர்ப்பம் எப்போது வாய்க்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

1911-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 17 ஆம் தேதியன்று கலெக்டர் ஆஷ்துரை கொடைக்கானல் என்ற குளுகுளு நகருக்குச் சென்றார். அப்போது, வாஞ்சிநாதன் என்ற வாலிபர் மணியாச்சி ரயில்வே நிலையத்தில் ஆஷ்துரையைத் தனது துப்பாக்கியால் கட்டுக் கொன்றார்

தன்னை யாராவது அடையாளம் கண்டு கொண்டால் அது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பெரும் ஆபத்தாகி விடுமே என்றஞ்சி, அந்த வாலிபர் தனது வாய்க்குள்ளே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் தலை சுக்கல் சுக்கலாகச் சிதறி மாண்டார்.

ஆஷ் துரையைக் கொன்றவர் யார் என்ற புலன் விசாரணையின் போது, செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு வழிப்போக்கர். ஆஷ் கொலையாளி செங்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், அவர் தந்தையின் பெயர் ரகுபதி ஐயர். அவர் வனத்துறை அதிகாரிகளில் ஒருவர் என்றும் கூறிவிட்டார்.

அதே நேரத்தில் கலவரமாகிவிட்ட நெல்லை போலீஸ் துறையினர் இறந்து விட்ட வாஞ்சிநாதன் சட்டைப் பையிலே இருந்த கடிதங்களைச் சோதனையிட்டுப் பார்த்தார்கள். அக்கடிதங்களுள் ஒன்றில், “கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரம் பிள்ளை கடுந்தண்டனை பெறக் காரணமாக இருந்தவர்களுள் ஆஷ்துரை தான் முக்கியமானவர். ஆகையால், அவரைச் சுட்டுவிட்டேன்” என்று எழுதியிருந்தார். ஆஷ் கொலைக்கு பிறகும் நடைபெற வேண்டிய புரட்சிகளைப் பற்றிய கடிதங்களும் அவரிடம் இருந்தன.

ஆஷ்துரை கொல்லப்பட்டதைக் கேட்டு சிதம்பரனார் திடுக்கிட்டார். அதிர்ச்சியடைந்தார். எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதியுள்ளவர்கள் இளைஞர்கள். அவர்கள், தங்கள் வாழ்வை இவ்வாறு பலியிட்டுக் கொள்வதை சிதம்பரம் பிள்ளை விரும்பவில்லை. பழிக்குப் பழி, வன்முறை, ஆயுதப் போராட்டம் போன்ற செயல்களால் மட்டுமே வெள்ளையர்களை நமது நாட்டை விட்டு விரட்டி விட முடியாது. வீணாக நமது இளைஞர்கள் இன்னுயிரை இழக்கின்றார்களே என்று சிதம்பரனார் மிகவும் வருத்தப்பட்டார்.

ஆஷ் சுடப்பட்ட படுகொலைக்குப் பிறகு, போலீசார் ஒவ்வொரு மாகாணத்திலும் புலன் விசாரணை செய்தார்கள். கல்கத்தா நகரில் இந்தக் கொலை சம்பந்தமாக 14 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி ஒருவர். மற்றொருவர் தென்காசியைச் சேர்ந்த டி.என். சிதம்பரம் பிள்ளை என்பவராவார்.

இவர்கள் ‘அபிநவ பாரத சங்கம்’ போன்ற இரகசிய சங்கங்களைத் தோற்றுவித்து, புரட்சியை உருவாக்கச் சதி செய்கிறார்கள் என்று போலீசார் அவர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இந்த வழக்கு சென்றது. விசாரணையில் ஒன்பது பேர் தண்டனை பெற்றார்கள். ஐவர் விடுதலை ஆனார்கள். இவ்வாறாகப் புரட்சி மனப்பான்மை வாலிபர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் வெள்ளையராட்சியை எதிர்த்து இரகசியமாக சுதந்திரப் பணியைச் செய்து வரும் சூழ்நிலை உருவானது.