கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/004-009

கம்பன் கவித் திரட்டு

(ஐந்தாம் பாகம்)

சுந்தர காண்டம்

தொகுப்பாசிரியர்கள் :

அமரர் சக்திதாசன் சுப்பிரமணியன்

ஜலஜா சக்திதாசன்


முதற்பதிப்பு:1990
உரிமம்: ஆசிரியருக்கே

வெளியிட்டோர் :

நித்தியானந்த ஜோதி நிலையம்

த. பெ. 1284

3D 43 V. K. சாலை சென்னை-28.

மாருதி பிரஸ்,

173, பீட்டர்ஸ் ரோடு,

சென்னை-14

கடவுள் வாழ்த்து

உரைக்க வல்லேன் அல்லேன்
        உன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக் கண் என்று செல்வன் நான்
        காதல் மையல் ஏறினேன்
புரைப்பிலாத பெரும்பரனே!
        பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைந்து நல்ல மேன்மக்கள்
        ஏத்த, யானும் ஏத்தினேன்.

—திருவாய்மொழி

சுந்தரகாண்டப் படலங்கள்

1. கடறாவுப் படலம்
2. ஊர் தேடு படலம்
3. காட்சிப் படலம்
4. நிந்தனைப் படலம்
5. உருக்காட்டுப் படலம்
6. சூளாமணிப் படலம்
7. பொழிலிறுத்தப் படலம்
8. கிங்கரர் வதைப் படலம்
9. சம்புமாலி வதைப் படலம்
10. பஞ்ச சேனாதிபதிகள் வதைப்படலம்
11. அக்க குமாரன் வதைப் படலம்
12. பாசப் படலம்
13. பிணி வீட்டுப் படலம்
14. இலங்கை எரியூட்டு படலம்
15. திருவடி தொழுத படலம்

சுந்தர காண்டம்

ம்பராமாயணம் ஆறு காண்டங்கள் கொண்ட காவியம். இந்த ஆறு காண்டங்களும் முறையே பால காண்டம் அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்பன ஆகும். இந்த ஆறு காண்டங்களில் ஐந்தாவதாகத் திகழ்வது சுந்தர காண்டம்.

சீதா தேவியைத் தேடிக்கொண்டு, தென்திசை நோக்கிச் சென்ற வானர வீரர்களுள் ஒருவன் அநுமன். அவன் மகேந்திரமலையின் மீது ஏறி நின்று இலங்கையைக் காண்கின்றான். தோள்கொட்டி ஆரவாரம் செய்கிறான். கடலைத் தாவுகிறான். இலங்கை சேருகிறான்.

இலங்கை என்பது தென்கடலிடையே திரிகூட மலையின் மீது அமைக்கப்பட்டிருந்த நகரம். இராவணன் என்னும் அரக்கர் வேந்தின் அரசிருக்கை. இந்த நகரம் குபேரனுடையது தெய்வ தச்சனாகிய விசுவகருமனால் கட்டப்பட்டது. பின்னே இராவணனால் கைக்கொள்ளப்பட்டது. இதை ஒரு பெரும் போக பூமியாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.

மாலைக் காலம் முதல் நள்ளிரவு வரையில் அந்த இலங்கை மாநகரிலே சீதாபிராட்டியைத் தேடி அலைகிறான் அநுமன்.

பன்னிரண்டு யோசனை விஸ்தீரணமும் மும்மை நூறாயிரம் தெருக்களும் கொண்ட அந்நகரின் ஒவ்வொரு பகுதியையும் காண்கிறான் அநுமன்.

இராவணனைக் காண்கிறான்; மண்டோதரியைக் காண்கிறான்; இந்திரஜித்தனைக் காண்கிறான்; கும்பகருணனைக் காண்கிறான்; விபீஷணனைக் காண்கிறான். எங்கும் சீதாபிராட்டியைக் காணாமல் ஏங்கினான்; மனம் சோர்வடைகிறான். அந்நிலையில் அசோக வனத்துள் நுழைகிறான்; சீதையைக் காண்கிறான்; மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிறான்.

காமன் தன் கணைகளுக்கு இலக்கான இராவணன் சீதை இருந்த அசோக வனத்துக்கு வருகிறான். அவனுடைய வருகையைக் கம்பர் மிக அழகாக வர்ணிக்கிறார். பிராட்டி தன் மீது இரங்க வேண்டும் என்று வேண்டுகிறான் இராவணன். அப்பொழுது பிராட்டி அவனுக்கு அறவுரை கூறுகிறாள்; இராமனின் ஆற்றலை எடுத்துரைக்கிறாள். சீதையின் அறவுரை கேட்டுச் சினம் கொள்கிறான் இராவணன். பிராட்டியைப் பலவாறு அச்சுறுத்துகிறான். பிராட்டியின் மனத்தை மாற்றுமாறு அரக்கியர்க்கு ஆணையிட்டுச் செல்கிறான். இவ்வளவையும் ஒருபால் ஒதுங்கி இருந்து காண்கிறான் அநுமன்.

சீதா பிராட்டி ஏங்கி மனமுடைந்து உயிர்விட முயலும் தருவாயில் அவள்முன் தோன்றுகிறான் அநுமன்.

இராமன் கொடுத்த கணையாழியை அளிக்கிறான். ஆறுதல் மொழிகள் பல கூறுகிறான். பின்னே தான் சீதையைக் கண்டதற்கு அடையாளமாக அப்பிராட்டி அளித்த சூடாமணியைப் பெறுகிறான்.

அசோக வனத்தை அழித்து இலங்கையை எரியூட்டி மீண்டும் கடலைக் கடந்து வானர சேனைகளுடன் வந்து இராமனை வணங்குகிறான். சீதாதேவியைக் கண்ட செய்தி கூறுகிறான். அடையாளமாகத் தேவி கொடுத்த சூடாமணியை இராமனிடம் அளிக்கிறான் அநுமன்.

இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சுமார் 1350 பாடல்களால் விவரிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இப்பாடல்களைப் படிக்கும்போது நாம் என்ன காண்கிறோம்? நிகழ்ச்சிகள் கண் எதிரே நடப்பனபோல் காண்கிறோம். நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் படம் பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.

இவற்றிலிருந்து சில பாடல்களைத் திரட்டி இச்சிறு புத்தகத்தில் அளித்திருக்கிறோம்.

கம்பனின் கவியிலே இன்பம் காண விரும்புவார்க்கு இஃது ஓரளவு துணை புரியும் என நினைக்கிறோம்.

இன்றைய வாழ்க்கை, வேகம் நிரம்பிய ஒன்று. வேகம்! வேகம்! எங்கும் வேகம்! எதிலும் வேகம்! வேகம் நிறைந்த வாழ்விலே ஓய்வு ஏது? ஓய்வு கிடைப்பது அருமை. எனவே, சிறிது ஓய்வு கிடைக்கும் போது கம்பன் கவியின்பம் காண விரும்புவார், என்ன செய்வார்? கம்பராமாயணப் பாடல் எல்லாவற்றையும் படித்தல் இயலுமோ? இயலாது; இயலாது.

ஆகவே, கிடைத்தற்கரிய ஓய்வு நேரத்தில் சில கவிகளையேனும் படிக்க ஆவல் கொண்டார்க்கு இச்சிறு திரட்டு பெரிதும் பயன்படும். இந்த நோக்கில் தான் இத்திரட்டு வெளியிடப்படுகிறது. இவர்களையே கருத்தில் கொண்டு பாடல்கள் சந்தி பிரித்துத் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன. பாடல்களின் கருத்தும், விளக்கமும், பதவுரையும் தரப்பட்டுள்ளன.

ஓரளவு தமிழ்ப் பயிற்சியுடையாரும் எளிதில் படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் இத்திரட்டு வெளியிடப்படுகிறது.

கம்பராமாயணத்தின்பால் பற்றுடையோர் பலரும், எங்களுக்கு ஆக்கம் தந்து இம்முயற்சியில் எங்களை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

தொகுப்பாசிரியர்கள்