கம்பன் கவித் திரட்டு 4, 5, 6/005-009

காப்புச் செய்யுள்


அஞ்சிலே ஒன்று பெற்றான்,
        அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
        ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
        அணங்கைக்கண்டு அயலார் ஊரில்,
அஞ்சிலே ஒன்று வைத்தான்
        அவன் எம்மை அளித்துக் காப்பான்.

தொடக்கத்திலே ஆஞ்சநேயருக்கு வணக்கம் செலுத்துகிறார் கவி. அஞ்சிலே ஒன்று பெற்றவர் ஆஞ்சநேயர். ஐந்து என்பது அஞ்சு என்று மருவி வழங்கப்பட்டது.

ஐந்து எவை?

பஞ்ச பூதங்கள். பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் என்பன பஞ்ச பூதங்கள் எனப்படும். இவை முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்றும் பெயர் பெறும்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய வாயுவின் புத்திரன் என்று பொருள். காற்றின் மைந்தன் என்றும் இவரை அழைப்பதுண்டு.

எனவே அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் காற்றின் மைந்தனாகிய ஆஞ்சநேயன் என்று பொருள்.

ஆஞ்சநேயர் என்ன செய்தார்? அஞ்சிலே ஒன்றை தாவினார். அஞ்சிலே ஒன்று எது? ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய நீரைத் தாவினார். அதாவது கடலைத் தாவினார். எப்படித் தாவினார்? அஞ்சிலே ஒன்று வழியாகத் தாவினார். அதாவது ஆகாய வழியாகத் தாவினார். தாவி எங்கே சென்றார்? அயலார் ஊருக்குச் சென்றார். அயலார் ஊர் எது? இலங்கை. இலங்கைக்குச் சென்றார். 

எதற்காகச் சென்றார்? ஆருயிர் காக்க. யாருடைய ஆருயிர் காக்க? சீதையின் ஆருயிர் காக்க.

சென்று யாரைக் கண்டார்? அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டார். அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு யார்? சீதை. அதாவது பூமிதேவியின் பெண். சீதையைக் கண்டார். ஐம்பெரும் பூதங்களிலே ஒன்று நிலம் அல்லவா? அந்த நில மடந்தையின் மகளைக் கண்டார். கண்டபின் என்ன கொண்டார்? சீற்றம் கொண்டார். யார் மீது? இராவணன்மீது.

சீற்றம் கொண்டவர் என்ன செய்தார்? இலங்கைக்குத் தீவைத்தார்.

அத்தகைய ஆஞ்சநேயர் நம்மைப் எல்லாம் காப்பார் என்று காப்புச் செய்யுள் பாடித் துதிக்கிறார் கம்பர்.

***

அஞ்சிலே ஒன்று - பஞ்ச பூதங்களிலே ஒன்று; அதாவது வாயு. பெற்றான் - பெற்றவனாகிய அநுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி - பஞ்ச பூதங்களிலே ஒன்றாகிய கடல் நீரைத் தாவி.

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக - ஐம்பெரும் பூதங்களிலே ஒன்று வழியாக - அதாவது வான் வழியாக, ஆருயிர் காக்க - சீதையின் ஆருயிரைக் காத்தல் பொருட்டு; ஏகி - சென்று.

அசோக வனத்திலே சீதாபிராட்டியைக் கண்டபோது சிறையிலிருந்த செல்வி எப்படி இருந்தாள்? தன் உயிர்விடும் நிலையில் இருந்தாள். ‘ராம ராம’ என்று ராம நாமத்தைக் கூறி சீதாபிராட்டியைக் காக்கிறான் அநுமன். நிலமடந்தை யின் மகளாகிய சீதையைக் கண்டு!

அயலார் ஊரில் - அயலாராகிய அரக்காதம் ஊரிலே; அதாவது இன்றைய இலங்கையிலே; அஞ்சிலே ஒன்று வைத்தான் - ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய தீ வைத்தவன் (அதாவது அநுமன்), நம்மை அளித்துக் காப்பான்.

***




கண்டனன் இலங்கை மூதூர்
        கடிபொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும் கொற்ற
        வாயிலும் மணியிற் செய்த
வெண்தளக் களப மாட
        வீதியும் பிறவும் எல்லாம்
அண்டமும் திசைகள் எட்டும்
        அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான்.

இலங்கை என்ற மிகப்பழம் பெருநகரின் மாடமாளிகைகளையும், வெண்மையான சுண்ணாம்பு தீட்டப்பட்ட மாடங்கள் கொண்ட வீதிகளையும் வெற்றிக், கோபுரமும் கண்டான் அநுமன்; மகிழ்ந்தான்; அம் மகிழ்ச்சியிலே அண்ட கோளங்களும் அஷ்ட திக்குகளும் அதிரத் தோள் கொட்டி ஆரவாரம் செய்தான்.

***

இலங்கை மூதூர் - இலங்கை என்ற பழமையான நகரத்தின்; கடிபொழில் - காவல் உள்ள சோலைகளையும்; கனக நாஞ்சில் - பொன்னாலான மதில் பகுதிகளையும்; மண்டல மதிலும் - வட்டமான கோட்டைச் சுவர்களையும்; கொற்ற வாயிலும் - வெற்றிக் கோபுர வாசலையும் ; மணியில் செய்த - மணிகள் பதிக்கப் பெற்ற வெண்தள களப மாட வீதியும் - வெண்மையான சுண்ணாம்பு தீற்றிய மாடங்களை உடைய வீதிகளையும்; பிறவும் எல்லாம் - மற்றும் பிறவற்றையும்; கண்டனன் - அநுமன் கண்டான்; அண்டமும் திசைகள் எட்டும் அதிர - (கண்ட அவன்) அண்டங்களும் எட்டுத் திசைகளும் அதிரும்படியாக, தோள் கொட்டி ஆர்த்தான் - தன் தோள்களைக் கொட்டிக் கொண்டு ஆரவாரம் செய்தான். 


வால் விசைத்து எடுத்து, வன்தாள்
        மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்
தோள் விசைத் துணைகள் பொங்கக்
        கழுத்தினைச் சுருக்கித் தூண்டிக்
கால் விசைத்து இமைப்பில்லோர்க்கும்
        கட்புலன் தெரியா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான் உச்சி
        விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன்.

மகேந்திர மலையிலே நின்று கொண்டு வானுற வோங்கி இலங்கை மாநகரைக் கண்ட அநுமன், கடலைத் தாண்டி அவ் இலங்கை சேரும் பொருட்டு வாலை வேகமாக வீசினான்; தனது வலிய கால்களை ஒடுக்கிக் கொண்டான்; மார்பை ஒடுக்கினான்; கழுத்தை உள்ளுக்கு இழுத்து முன்னே தள்ளி காற்று போல வேகத்தை வருவித்துக் கொண்டான்; வானத்திலே வெகு உயரமாகப் பாய்ந்தான்.

***

வீரன் - அநுமன்; வால்விசைத்து எடுத்து - வாலை வேகமாக வீசி; வன்தாள் மடக்கி - வலிய கால்களை மடக்கி; மார்பு ஒடுக்கி - மார்பை ஒடுக்கிக் கொண்டு; மான - பெரிய; விசை - வெற்றியுடைய; தோள் துணைகள் - இரு தோள்களும், பொங்க - பூரிக்க; கழுத்தினை சுருக்கி தூண்டி - கழுத்தினை உள்ளுக்கு இழுத்து முன்னே தள்ளி; கால்விசைத்து - காற்றுப் போல வேகத்தை உண்டாக்கி; இமைப்பு இல்லோர்க்கும் - கண் இமையாத தேவர்கட்கும்; கட்புலம் தெரியாவண்ணம் - கண்பார்வைக்குத் தெரியாத படி; மேல்விசைத்து - மேல் நோக்கி வேகம் எடுத்து; உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச - பிரம்மலோகம் போய் உராயும் வண்ணம்; எழுந்தான் - வானத்தே எழுந்தான்.


ஆயவன் எழுத லோடும்
        அரும்பனை மரங்கள் தாமும்
வேய் உயர் குன்றும் வென்றி
        வேழமும் பிறவும் எல்லாம்
நாயகன் பணி ஈது என்ன
        நளிர்கடல் இலங்கை நாமும்
பாய்வன என்ன வானம்
        படர்ந்தன பழுவ மான.

***

அவ்வாறு அநுமன் வானத்தில் எழுந்தபோது என்ன நிகழ்ந்தது? பெருங்கிளைகளைக் கொண்ட மரங்கள், மூங்கில்கள் வளரப் பெற்ற குன்றுகள், யானைகள் இன்னோரன்ன பலவும் நிலை பெயர்ந்து, அநுமன் பின்னே தொடர்ந்து பறந்தன. எதனாலே? அநுமன் சென்ற வேகத்தினாலே. அது எது போலிருந்தது?

“இராம காரியமாக அநுமன் செல்கிறான். நமக்கும் அப் பணியிலே பங்குண்டு. ஆதலின் அநுமனைத் தொடர்ந்து நாமும் செல்வோம்” என்று அவை கருதுவன போல விளங்கினவாம்.

***

ஆயவன் - (அவ்வாறு) அநுமன்; எழுதலோடும் - வானத்தில் எழுந்த போது; அரும்பனை மரங்கள் தாமும் - அரிய பெரிய கிளைகளை உடைய மரங்களும்; வேய் உயர் குன்றும் - மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள குன்றுகளும்; வென்றி வேழமும் - வெற்றிமிகு யானைகளும்; பிறவும் எல்லாம் - இன்னும் பலவும்; நாயகன் பணி ஈது என்ன - நாயகனாகிய இராமனுக்கு நாம் செய்யும் தொண்டு இதுவே என்று; தாமும் - அம்மரங்கள் முதலியனவும்; நளிர்கடல் 

குளிர்ந்த கடலால் சூழப்பெற்ற; இலங்கை பாய்வன என்ன - இலங்கையை நோக்கிப் பாய்ந்து செல்வன என்று சொல்லும் படி; வானம் பழுவம் மான - வானமே ஒரு சோலை போல் விளங்க; படர்ந்தன - சென்றன.

முன்பு மலைகள் யாவும் சிறகு பெற்றிருந்தன. எங்கும் பறந்து சென்று அழித்து வந்தன. இது கண்டு கோபம் கொண்டான் இந்திரன். தனது வச்சிராயுதத்தினால் அவற்றின் சிறகுகளை வெட்டி எறிந்தான். பின்னர் அவை பறத்தல் ஒழிந்தன.

மைந்நாகம் எனும் மலையானது இந்திரனுக்கு அஞ்சிக் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டது.

அநுமன் வரவு கண்டு மேலே வந்தது. அது எப்படி இருந்ததாம்? பாற்கடலிலிருந்து ஐராவதம் என்ற யானை தோன்றியது போல் இருந்ததாம்.

மேலே வந்த மைந்நாகம் அநுமனை வரவேற்றது. சிறிது தங்கி இளைப்பாறிச் செல்லுமாறு வேண்டியது.

அநுமன் இசைந்தான் அல்லன். "இராம காரியமாக செல்கிறேன். இப்போது இளைப்புப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை. திரும்பி வரும்போது உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்" என்றான்.

“சரி” என்று சொல்லி வழி விட்டது மைந்தாகம்.

இது, முதல் இடையூறு. இனி இரண்டாவது இடையூறு வருமாறு :

சுரசை என்பவள் தக்ஷனின் மகள்; காசியபரின் மனைவி. அவள் ஓர் அரக்கி உருக்கொண்டு அநுமனை விழுங்க வந்தாள்.

அநுமன் தனது உருவினைச் சிறிதாக்கிக் கொண்டு கண்ணிமைப் போதிலே அவள் வாய் வழிப் புகுந்து மீண்டான். 

மூன்றாவது இடையூறு அங்கார தாரகை என்ற ஓர் அரக்கி அவளையும் கொன்று பவழமலைக்குத் தாவினான் அநுமன்,

அங்கிருந்து இலங்கையைப் பார்க்கிறான் அநுமன்.

***


மண் அடி உற்று மீது
        வானுறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றின்
        நிலைத்து நின்று, உற்று நோக்கி,
விண்ணிடை உலகம் எனும்
        மெல்லியல் மேனி நோக்க,
கண்ணடி வைத்தது அன்ன
        இலங்கையைத் தெரியக் கண்டான்.

தேவருலகத்தை ஓர் அழகிய பெண் என்று சொன்னால் அந்தப் பெண் தன் மேனியழகு காண வைத்திருக்கும் கண்ணாடி என்று சொல்லலாம் இலங்கையை,

அதாவது தேவலோகத்தின் பிரதிபிம்பமாக விளங்கிற்றாம் அந்த இலங்காபுரி. அதனைக் கண்டான் அநுமன். எங்கு நின்று? பவழமலையில் நின்று.

***

அடி மண் உற்று - அடிப்புறம் நிலத்தில் படிந்து; மீது - உச்சி; வான்உறும் - வானத்தைப் பொருந்தி நிற்கும்; வரம்பின்தன்மை - அளவின் எல்லையை; எண் அடி அற்ற - கணக்கிட முடியாத; குன்றின் -அந்தப் பவழ மலையின் மீது; நிலைத்து நின்று - உறுதியாக நின்று கொண்டு; உற்று நோக்கி - கூர்ந்து கவனித்து; விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் - வானுலகம் என்னும் பெண்; மேனி நோக்க - தன் உடல் அழகைக் காண; கண்ணடி வைத்தது அன்ன . கண்ணாடி வைத்தது போன்ற, இலங்கையை - இலங்காபுரியை; தெரியக் கண்டான் - நேரே தெரியப் பார்த்தான்.


பொன் கொண்டு இழைத்த
        மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டமைத்த
        வெயிலைக் கொடு சமைத்த
என் கொண்டு இயற்றிய
        எனத் தெரிவிலாத
வன் கொண்டல் விட்டு
        மதி முட்டுவன மாடம்.

இந்த இலங்காபுரி “எதனால் கட்டப்பட்டது? பொன்னால் இழைக்கப்பட்டதோ? இரத்தினங்கள் பொதிக்கப்பட்டதோ? மின்னலால் அமைக்கப்பட்டதோ? என்ன என்று விளங்கவில்லையே! இந்த மாடங்கள் எல்லாம் மதிமுட்டுகின்றனவே!” என்று அதிசயித்தான் அநுமன்.

***

மாடம் - (இந்த இலங்கை மாநகரின் விதிகளில் காணும்) மாடங்கள்; பொன் கொண்டு இழைத்த - பொன் கொண்டு செய்யப்பட்டன; மணியைக் கொடு பொதிந்த - இரத்தினங்களைக் கொண்டு பொதிந்த மின் கொண்டு அமைத்த - மின்னலைக் கொண்டு அமைக்கப் பெற்றன; வெயிலைக் கொடு சமைத்த - சூரிய ஒளியைக் கொண்டு ஆக்கப் பெற்றன; (என்று இவ்வாறு மயங்குவது அல்லாது) என் கொண்டு இயற்றின என - எதனைக் கொண்டு செய்யப்பட்டன என்று தெரிவு இலாத - அறிய முடியாதன வாயிருக்கின்றன; (அவை) வன்கொண்டல் விட்டு - வலிய மேக மண்டலத்தைக் கடந்து; மதிமுட்டுவன - சந்திர மண்டலத்தை முட்டிக் கொண்டிருக்கின்றன.

***


நாகாலயங் களொடு
        நாகர் உலகும் தம்
பாகர் மருங்கு துயில்
        என்ன உயர் பண்ப
ஆகாயம் அஞ்ச
        அகல் மேருவை அனுக்கும்
மாகால் வழங்கு சிறு
        தென்றலென நின்ற

அந்த இலங்கை மாநகர், மாட மாளிகைகளின் நடுவே தேவர் வாழும் மாளிகைகளும் இருப்பன போல உயர்ந்த தோற்றத்தை அளித்தது. வலிய காற்றும் அம் மாட மாளிகைகளால் தடுத்து வலியிழக்கப் பெற்றது; தென்றல் போல் மெல்லென வீசியது.

***

(அம் மாடங்கள்) நாகாலயங்களோடு - தேவர் வாழும் மாளிகைகளோடு கூடிய; நாகர் உலகம் - தேவலோகமும்; தம் - இலங்கையிலுள்ள மாடங்களின்; பாகு ஆர் மருங்கு - தம் பகுதியாய் விளங்கும் இடை நிலத்தில்; துயில் என்ன - தங்குவன என்று சொல்லும்படியாக; உயர்பண்ப - உயர்ந்து நிற்கும் தன்மை உடையனவாக; ஆகாயம் அஞ்ச - வானம் அஞ்சும்படி; அகல்மேருவை அனுக்கும் - அகன்று நிற்கும் மேருமலையை வருத்தி, நிலை தளரச் செய்யும்; மா கால் - பெருங்காற்று; வழங்கு சிறு தென்றலென நின்ற - மென்மையாக வீசும் சிறிய தென்றல் காற்று எனும்படி வலியிழக்கச் செய்து அவை நின்றன.

***


மாகாரின் மின்கொடி
        மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும்
        நறும் துகள் விளக்கி


ஆகாய கங்கையினை
        அங்கையினில் அள்ளிப்
பாகாய செஞ்சொலவர்
        வீசுபடு அகாரம்.

சர்க்கரைப்பாகு போன்று தித்திக்கும் சொல்லினர் ஆகிய பணிப் பெண்டிர் அந்த மாட மாளிகைகளை எல்லாம் சுத்தம் செய்கிறார்கள். எப்படிச் சுத்தம் செய்கிறார்? மேகத்திலே தோன்றும் மின்னல் கொடிகளையெல்லாம் பிடித்து அடுக்கித் துடைப்பமாக வைத்துக்கொண்டு கீழே சிந்திக் கிடக்கிற மணம் வீசும் குங்குமக் குப்பைகளை எல்லாம் அப்புறப்படுத்துகிறார்கள். பிறகு, ஆகாய கங்கை நீரைத் தம் கையால் அள்ளித் தெளிக்கிறார்கள்.

***

அகாரம்-அம் மாளிகைகள்; பாகு ஆய செஞ் சொலவர் - சர்க்கரைப் பாகு போன்ற இனிய சொற்கள் பயிலும் பணிப்பெண்கள்; மாகாரின் மின்கொடி - பெரிய மேகங்களில் தோன்றும் மின்னல் கொடிகளை; மடக்கினர் அடுக்கி - மடக்கித் துடைப்பமாக அடுக்கிக் கையில் வைத்துக்கொண்டு; மீகாரங் எங்கணும் - மேல் மாளிகைகளில் எல்லா இடங்களிலும் உள்ள; நறும்துகள் விளக்கி - (அங்கு சிந்திக்கிடக்கும்) நறுமணமுள்ள கலவைப் பொடிகளான குப்பைகளை அகற்றி; அங்கையினில் - தம் உள்ளங்கைகளால்; ஆகாய கங்கையினை அள்ளி - ஆகாய கங்கை நீரை அள்ளி; வீசுபடு - வீசித் தெளிக்கப்படுவன.

***


நான நாண் மலர் கற்பக
        நறு விரை நான்ற
பானம் வாயுற வெறுத்த
        தாள் ஆறுடைப் பறவை


தேனவாம் விரைச் செங்கழு
        நீர்த் துயில் செய்ய
வானயாறு தம் அரமியத்
        தலம் தொரும் மடுப்ப.

கற்பக தருக்களிலே தேனையுண்ட வண்டுகள் திகட்டிப்போய் அத் தேனை வெறுத்து அம்மாட மாளிகைதோறும் வந்து பாயும் வான கங்கையிலே மலர்ந்துள்ள செங்கழு நீர்ப் பூவிலே தேனை மாந்தித் துயில்கின்றனவாம்.

***

நான கற்பக நாள் மலர் நறு விரை நான்ற பானம் - வானிலுள்ள கஸ்தூரி மணம் மிகுந்த கற்பக மரங்களின் அன்று அலர்ந்த மலர்கள் நன் மணத்தொடு சொரிந்த தேன்; வாய் உற - தம் வாயில் வந்து புக; வெறுத்த - (ஏராளமாகக் குடித்துப் பின் வேண்டாம் என்று) வெறுத்த; ஆறுதாள் உடை பறவை - ஆறு கால் கொண்ட வண்டு; வானயாறு - ஆகாய கங்கையிலே; விரை செங்கழுநீர் - மணம் வீசும் செங்கழுநீர் மலரிலே உள்ள; தேன் அவாம் - தேனை விரும்பி; துயில் செய்ய - குடித்து அம் மயக்கத்தினால் துயில; தம் அராமிய தலம் தொறும் மடுப்ப - அவ்வான ஆறு மாடங்களின் நிலா முற்றங்கள் தோறும் வந்து நிறைய (அம்மாடங்கள் உயர்ந்து விளங்கின என்றபடி.)

***


குழலும் வீணையும் யாழும் என்று
        இனையன குழைய
மழலை மென்மொழி கிளிக்கு
        இருந்து அளிக்கின்ற
சுழலும் நல்நெடும் தடமணிச்
        சுவர்தொறும் துவன்றும்
நிழலும் தன்மையும் மெய்ம்மை
        நின்று அறிவரு நிலைய

குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளும் தோல்வி அடையக்கூடிய இனிய குரலில் கிளியுடன் அமர்ந்து பேச்சுப் பழக்குகிறார்கள் பெண்கள். அந்த மாடத்தின் சுவர்களிலே, அவர்கள் போலவே பல பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன. எது உண்மையுருவம் எது பிரதிபிம்பம் என்று காணமுடியவில்லை. அப்படிப்பட்ட பளபளப்பு வீசும் சுவர்களை - கண்ணாடிபோலும் சுவர்களைக் கொண்டன அம்மாடங்கள்.

***

குழலும் வீணையும் யாழும் என்று இனையன - குழல், யாழ், வீணை என்று கூறப்படும் இத்தகைய இசைக் கருவிகள்; குழைய - தளர்ந்துபோக; மென் மழலை மொழி - மெல்லிய மழலைச் சொற்களை; இருந்து கிளிக்கு அளிக்கின்ற மகளிர் - தாம் இருந்துகொண்டு கிளிக்குப் பழக்குகின்ற மாதர்கள்; சுழலும் நல் நெடும் தடமணி சுவர்தொறும் - ஒளி சுற்றி வருவனவும் நல்ல இலக்கணங்கள் அமைந்தனவுமாகிய நீண்டு உயர்ந்த மணிகள் பதித்த சுவர்கள் தொறும்; துவன்றும் நிழலும் - ஒன்று பலவாகத் தோன்றும் தம் நிழல்களையும்; தம்மையும் - தம்மையும்; மெய்ம்மை நின்று அறிவு அருநிலைய - உண்மையாக அறிய முடியாத நிலையில் இருந்தன அம்மாடங்கள்.

***


இனைய மாடங்கள்
        இந்திரற்கு அமைவர எடுத்து
வனையும் மாட்சிய என்னில்
        அச் சொல்லும் மாசி உண்ணும்
அனையவாம் எனின்
        அரக்கர் தம் திருவுக்கும் அளவை
நினையலாம் அன்றி உவமையும்
        அன்னதா நிற்கும்.

இந்த மாளிகைகள் எல்லாம் தேவேந்திரன் வாழ்வதற்குரிய மாண்புடையன எனின் அப்படிச் சொல்வதே குறையாகும். அப்படியானால் அரக்கரின் செல்வத்திற்கு எல்லையுண்டோ? உவமை கூற முடியுமா? முடியாது.

***

இணைய மாடங்கள் - இத்தகைய மாடங்கள்; இந்திரற்கு அமைவர எடுத்து வனையும் மாட்சிய என்னில் - தேவேந்திரன் வாழ்தற்குப் பொருந்தக் கட்டப்பெற்று அழகு செய்யப்பட்ட பெருமை உடையது என்று சொன்னால்; அச்சொல்லும் - அவ்வாறு கூறுதலும்; மாசு உண்ணும் - குறையாகும்; அனையதாம் எனின் - அவ்வாறு இந்திர மாளிகைக்கு ஒப்பாகக் கூறுதலே குற்றமாகும் எனும்போது; அரக்கர் தம் திருவுக்கும் - அரக்கர் தம் செல்வச் செழிப்புக்கும்; அளவை நினையலாம் - உள்ளதோர் எல்லையற்றதோர் அளவை மனத்தால் நினைக்கலாம்; அன்றி - அவ்வளவுதானேயன்றி; உவமையும் - உவமை கூறுவதும்; அன்னதா நிற்கும் - அவ்வாறே மாசுடையதாகும்.

***


மரம் அடங்கலும் கற்பகம்
        மலையெலாம் கனகம்
அர மடந்தையர் சில தியர்
        அரக்கியர்க்கு; அமரர்
உரமடங்கி வந்து
        உழையராய் உழல்குவர்: ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது!
        தவம் செயத் தகுமால்!

இலங்காபுரியிலே உள்ள மரங்கள் எல்லாம் கற்பகத்தருக்களே. வீடுகள் எல்லாம் பொன்மயம் ஆனவையே. அரக்கியரின் பணிப்பெண்டிர் யாவரும் தேவ மாதரே. இது எதனாலே? தேவர் தகுதி இழந்தனரா? இல்லை, இராவணன் செய்த தவத்தினாலே. ஆகவே தவமே செய்யத்தக்கது ஆகும்.

***

மரம் அடங்கலும் கற்பகம் - மரங்கள் எல்லாம் கற்பக மரங்களே; மனை எலாம் கனகம் - வீடுகள் யாவும் பொன்னால் ஆனவையே; அரக்கியர்க்கு அரமடந்தையர் சிலதியர் - அரக்கியர்க்குப் பணிப்பெண்டிர் தேவமாதர்; அமரர் உரம் அடங்கி வந்து உழையராய் உழல்குவர்- தேவர் தம் வலி குன்றி (இந்நகர்க்கு) வந்து (அரக்கர்க்கு) அருகில் நின்று குற்றேவல் செய்பவராய்ச் சூழ்ந்து வருவர்; இது - இவ்வாறு அமைந்த இத்தன்மை; ஒருவர் தரம் அடங்குவது அன்று - ஒருவர் தகுதியின் பால் அடங்கக் காண்பது அன்று; (ஆதலால்) தவம் செயத் தகும் - தவமே செய்யத்தக்கது ஆகும்.

***


தேவர் என்பவர் யாரும் இத்
        திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்; செய்கிலாதவர்
        எவர்? என்னில்
மூவர் தம்முளும் இருவர்
        என்றால் இனி முயலில்
தாவில் மாதவ மல்லது
        பிறிது ஒன்று தகுமோ.

தேவர்கள் எல்லாரும் இலங்கையரசனாகிய இராவணனின் ஏவல் செய்வோரே. அப்படிச் செய்யாதவர் எவர்? பிரும்மா, விஷ்ணு, சிவன் எனப்படும் மூவருள் இருவரே. அவர் யாவர் எனின் சிவனும் விஷ்ணுவுமே.

***

தேவர் என்பவர் யாவரும் - தேவர் என்று சொல்லப்படுகிறவர் எல்லாரும்; இ திரு நகர்க்கு இறைவர்க்கு - இந்த அழகிய இலங்காதிபனாகிய இராவணனுக்கு; ஏவல் செய்பவரே - பணி செய்வோரே; செய்கிலாதவர் எவர் எனின் - அப்படி ஏவல்செய்யாதவர் எவர் என்று கேட்டால்; மூவர் தம்முளும் இருவர் - மும்மூர்த்திகளில் இருவர்; பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று சொல்லக்கூடிய மூவரில் இருவர் (சிவன், விஷ்ணு ஆகிய இருவரே) என்றால் - எனும் போது; இனி முயலில் - இனி முயற்சி செய்தால்; தா இல் மாதவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ - குற்றமற்ற தவமேயன்றி வேறு ஒன்று முயற்சி செய்யத்தகுமோ? (தகாது என்றபடி).

***


போர் இயன்றன தோற்ற என்று
        இகழ்தலில் புறம் போம்
நேர் இயன்றவன் திசைதொறும்
        நின்ற மா நிற்க
ஆரியன் தனித் தெய்வமாக்
        களிறும் ஓராழிச்
சூரியன் தனித் தேருமே
        இந்நகர்த் தொகாத

இராவணனுடன் போர் செய்து தோற்றுவிட்டன திக்கு யானைகள். அதனால் பயந்து ஓடிச் சென்று திசைக்கு ஒன்றாக நின்றுவிட்டன. ஐயனாருடைய யானை வாகனமும் சூரியனுடைய ஒற்றைச் சக்கரத் தேரும் தவிர மற்றைய யாவும் இலங்கையில் உள்ளனவே.

***

போர் இயன்றன - போர் செய்தனவாய்; தோற்ற - தோற்று ஓடின; என்று இகழ்தலில் என்று இகழப்பட்டமையால்; புறம்போய் - அப்பால் சென்று; நேர் இயன்றவன் திசை தொறும் - நேராக உள்ள வலிய திசைகள் தோறும்; நின்றமா - நின்ற திக்கு யானைகள்; நிற்க - ஒருபுறம் நிற்க; ஆரியன் - ஐயனாராகிய சாஸ்தாவின்; தனி தெய்வ மா களிறும் - ஒப்பற்ற தெய்வத் தன்மை வாய்ந்த வாகனமான யானையும்; சூரியன் - சூரியனுடைய; ஓர் ஆழி தனிதேருமே. ஒரே சக்கரங்கொண்ட ஒப்பற்ற தேருமே; இந்நகர் - இந்த இலங்காபுரியில்; தொகாத - சேராதன; (பிற யானைகளும் தேர்களும் இங்கே உள்ளன என்றபடி)

***


வாழும் மன்னுயிர் யாவையும்
        ஒரு வழி வாழும்
ஊழிநாயகன் திருவயிறு
        ஒத்துளது இவ்வூர்!
ஆழி அண்டத்தின் அருக்கன் தன்
        அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன ஈண்டுள
        குதிரைகள் எல்லாம்!

ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற தேரிலே பவனி வருகிறான் சூரியன். அந்த ஏழு குதிரைகள் நீங்க மற்று எல்லாக் குதிரைகளும் இந்த இலங்கை மாநகரில் உள்ளன.

சுருங்கச் சொன்னால், ஊழிக் காலத்திலே இந்த உலகத்துயிர்கள் எல்லாம் சரணடைந்திருக்கும் திருமாலின் திருவயிறுபோல் இருந்தது இலங்கை மா நகரம்.

***

இவ்வூர் - இந்த இலங்கை மா நகரமானது; வாழும் மன்னுயிர் யாவையும் - உலகில் வாழும் நிலை பெற்ற உயிர்கள் எல்லாம்; ஒருவழி வாழும் - ஓரிடத்தில் கூடி வாழும்; ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது - ஊழி இறுதிக் காலத்திலே உறையுமிடமாகிய திருமாலின் திரு வயிறு ஒத்து இருந்தது; ஆழி அண்டத்தின் வட்டமாயுள்ள அண்டத்தில் உள்ள (குதிரைகளுள்) அருக்கன்தன் - சூரியனுடைய; அலங்குதேர் - அசைகின்ற தேரில் கட்டியுள்ள; புரவி ஏழும் அல்லன - குதிரைகள் ஏழு நீங்கலாக மற்றக் குதிரைகள் எல்லாம்; ஈண்டு உள - இங்கே உள்ளன.

***


தழங்கு பேரியின் அரவமும்
        தகை நெடுங் களிறு
முழங்கும் ஓதையும் மூரி நீர்
        முழக்கொடு முழங்கும்;
கொழுங் குரல் புதுக்கும்தலையர்
        நூபுரக் குரலும்
வழங்கு பேர் அரும் சதிகளும்
        வயின் தொறும் அறையும்

அந்த இலங்கை மாநகரிலே பேரிகைகள் முழக்கத்தோடு யானைகளின் முழக்கமும் கேட்கும்; கடல் ஓசையும் கலந்து வரும். பெண்கள் காவிலே அணிந்த சிலம்பொலியுடனே அவர்கள் ஆடும் ஜதிசப்தமும் இடந்தொறும் கலந்து வரும்.

***

தழங்கு பேரியின் அரவமும் - ஒலிக்கின்ற முரசின் சப்தமும்; தகை நெடும் களிறு முழங்கும் ஓதையும் - சிறப்பமைந்த பெரிய யானைகளின் முழக்கமும்; மூரிநீர் முழக்கொடு முழங்கும் - கடல் ஓசையுடன் சேர்ந்து முழங்கும்; கொழும் குரல் புது குதலையர் - வளப்பம் பெற்ற குரலோடு (பேசும்போது எல்லாம்) புதியனவாகத் தோன்றும் குதலைச் சொற்களை வழங்கும் மகளிருடைய; நூபுரக் குரலும் - சிலம்பின் ஒலியும்; வழங்குபேர் அரும் ஜதிகளும் அவர்கள் செய்யும் பெரிய அரியதான ஒத்துக்களும்; வயின்தொறும் - இடந்தொறும்; அறையும் - ஒலிக்கும்.

***


பாடுவார் பலர் என்னின்
       மற்று அவரினும் பலரால்
ஆடுவார் எனின் அவரினும்
       பலருளர் அமைதி
கூடுவார் இடை இன்னியாங்
       கொட்டுவார் வீடில்
வீடு காண்குறுந் தேவரால்
       விழு நடங் காண்பார்.

அந்த நகரத்திலே நாட்டிய விருந்து நடைபெறும்; தேவமாதர் பலர் பின்பாட்டுப் பாடுவார். மேலும் பலரான தேவமாதர் ஆடுவர். சுருதி கூட்டுவாரும், மத்தளம் வாசிப்பாரும் இன்னும் பலராயிருப்பர். எல்லாரும் தேவமாதரே. அரக்கர் அந்த நாட்டியக் கச்சேரி கண்டு களிப்பர்.

***

(நடனத்தில்) பாடுவார் பலர் என்னின் - வாய்ப்பாட்டு பாடுவார் பலர் என்றால்; மற்று அவரினும் பலர் ஆடுவார் - அவரைவிட மற்றும் பலர் ஆடுவார்; எனின் - இவர்கள் இப்படி என்றால்; அமைதி கூடுவார் - சுருதி கூட்டுவாரும்; இடை இன்னியம் கொட்டுவார் - நடுவே மத்தளம் முதலிய இனிய கருவிகளை வாசிப்பாரும்; அவரினும் பலர் உளர் - ஆடுவரைவிடப் பலராயுள்ளனர். (இவ்வாறு அந்நகரில் வாழ்வோர்) வீடில் வீடு - தடையற்ற விடுதலை; காண்குறும் தேவரால் - காண விரும்பும் தேவரால் (செய்யப்படும்); விழு நடம் காண்பார் - விழுமிய நடனங்களைக் காண்பார்கள்.

***

வான மாதரோடு இகலுவர்
        விஞ்சையர் மகளிர்;
ஆன மாதரோடு ஆடுவர்
        இயக்கியர்; அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர்
        தொடர்குவர்; தொடர்ந்தால்
ஏனை நாகியர் அரு நடக்கிரியை
        ஆய்ந் திருப்பார்.

***

இவ்வாறு தேவமகளிர் ஆடுதல் கண்டு அவருடன் போட்டியிட்டு நடனம் ஆடுவர் வித்யாதர மகளிர்; அப்படிப் போட்டியிட்டு ஆடும் மகளிருடனே யக்ஷ மகளிர் ஆடுவர்; அவரைத் தொடர்ந்து அரக்கியர் ஆடுவர்; எஞ்சிய நாகலோக நங்கையர் நாட்டியக் கிரியைகளைக் கவனிப்பர்.

***

(அப்படி நடனமாடும்போது) விஞ்சையர் மகளிர் — வித்தியாதரப் பெண்கள்; வானமாதரோடு — தேவமகளிருடன்; இகலுவர் — போட்டியிட்டு நடனம் ஆடுவர்; ஆன மாதரோடு — அப்படிப் போட்டியிட்ட வித்தியாதர மகளிரோடு; இயக்கியர் ஆடுவர் — யக்ஷப் பெண்கள் ஆடுவார்கள்; அவரை — அந்த யக்ஷ மகளிரை; சோனைவார் குழல் அரக்கியர் — கருமேகம் போன்ற நீண்ட கூந்தலை உடைய அரக்கியர்; தொடர்குவர் — தொடர்ந்து போட்டியிட்டு ஆடுவார்கள்; தொடர்ந்தால் — அவ்வாறு தொடர்ந்து ஆடுமிடத்து; ஏனை — எஞ்சிய; நாகியர் — நாகலோகப் பெண்கள்; அரு நடகிரியை ஆய்ந்திருப்பார் — நாட்டியத்துக்கு வேண்டிய அரிய கிரியைகளை ஆராய்ந்திருப்பர்.

**

மடங்கல் அரி ஏறும்
        மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி
        நனி மூதூர்
அடங்கரிய தானை அயில்
        அந்தகனது ஆணைக்
கடுந்திறலின் வாய் அனைய
        வாயில் எதிர் கண்டான்.

இத்தகைய இலங்கையின் புறநகரிலே தனியே நடக்கிறான் அநுமன். எப்படி நடக்கிறான்? துணை ஏதுமின்றி நடக்கிறான். பயந்து நடக்கிறானா? இல்லை; இல்லை. ஆண் சிங்கமும், மதம் பிடித்த மாபெரும் யானையும் வெட்கமடையும்படி நடக்கிறான். அப்படி நடந்து அந்நகரின் கோபுர வாயிலை அடைகிறான்.

***

மடங்கல் – பிடரி மயிர் மடங்கிய அரி ஏறும் – ஆண் சிங்கமும்; மதமால் களிறும் – மதங்கொண்ட பெரிய யானையும்; நாண – வெட்கம் அடையும்படி; தனியே நடந்து – துணை எவருமில்லாமல் தனியே நடந்து; புகுதும் – கம்பீரமாக அந்த மதில் அருகே செல்லும்; நம்பி – ஆடவரில் சிறந்த அநுமன்; அடங்கு அரிய – எண்ணிக்கையில் அடங்காத; தானை – அரக்கர் சேனை உடையதும்; அயில் அந்தகனது – சூலாயுதம் ஏந்திய இமயனுடைய ஆணை கடுந்திறலின் – கட்டளை தவறாத கொடிய வலிமை கொண்ட; வாய் அனைய – வாய்போன்ற; நனி மூது ஊர் – பெரிய பழமையான அந்நகரின்; வாயில் – கோபுர வாயிலை; எதிர்கண்டான் – எதிரில் பார்த்தான்.

***

“மேருவை நிறுத்தி வெளி
        செய்தது கொல்? விண்ணோர்
ஊர்புக அமைத்த படுகால் கொல்?
        உலகு ஏழும்
சோர்வில நிலைக்க நடுவிட்ட
        தொரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ?”
        என நினைத்தான்.

அந்தக் கோபுர வாயிலைப் பார்த்த உடனே என்ன நினைத்தான்? “இது என்ன மேருவைத் தூக்கி நிறுத்திவைத்து அதிலே கோபுரவாயில் எனும் இடைவெளி செய்யப் பட்டதோ? விண்ணோர் இலங்கை புக வைத்த ஏணியோ? ஏழுலகங்களும் தளராமல் நிலைத்திருக்கும் பொருட்டு நடுவிலே முட்டுவைத்த தூணோ? கடலிலே நீர் சென்று புக அமைத்ததொரு வழியோ?” எனப் பலவாறு சிந்தித்தான்.

***

மேருவை நிறுத்தி வெளி செய்தது கொல்? - மேரு மலையைக் கோபுரமாக நிற்கச் செய்து (அதன் வாயிலாக) இடைவெளி உண்டாக்கியதோ? (அன்றி) விண்ணோர் ஊர் புக அமைத்த படுகால் கொல் -தேவர்கள் இலங்கை புக அமைத்த ஏணியோ? உலகு ஏழும் சோர்வில நிலைக்க நடுவிட்டதொரு தூணோ?- ஏழு உலகங்களும் தளர்வற்றனவாய் நிலைத்து நிற்கும் பொருட்டு நடுவே கட்டிவிட்ட ஒரு தூணோ? கடற்கு நீர்புகு வழியோ? கடலிலே நீரைப் புக விடுதற்கு அமைத்த ஒரு வழியோ?—என நினைத்தான் என்று அநுமன் எண்ணினான்.

***



வெள்ளமொரு நூறொரு
        இருநூரு மிடை வீரர்
கள்ளவினை வெம் வலி
        அரக்கர் இரு கையும்
முள் எயிறும் வாளும் கூற
        முன்ன முறை நின்றார்
எள்ளரிய காவலினை
        அண்ணலும் எதிர்ந்தான்.

முன்னூறு வெள்ளம் என்று எண்ணிக்கை கொண்ட படைவீரர்கள்-வஞ்சத் தொழிலில் வல்ல கொடியர்கள்-ஆகிய அரக்கர்கள் -ஆயுதங்கள் தாங்கிப் போருக்குச் சித்தமாய் அந்த வாயிலின் இருபுறமும் நிற்கிறார்கள். இத்தகைய காவலினைக் கண்டான் அநுமன்.

***

ஒரு நூறொடு இருநூறு வெள்ளம் மிடை வீரர் - முன்னூறு வெள்ளம் என்ற எண்ணிக்கை கொண்ட நெருங்கிய படை வீரர்களாகிய; கள்ளவினை - வஞ்சத் தொழிலிலும்; வெம்வலி - கொடிய வலிமையும் (கொண்ட) அரக்கர் - அரக்கர்கள்; இருகையும் - வாயிலின் இரண்டு பக்கங்களிலும்; முள் எயிறும் - முள் போன்ற கூரிய பற்களும்; வாளும் - வாட்களும்; உற - கொண்டு; முன்னமுறை நின்றார் - போருக்கு முற்பட்டவர்களாய் முறையில் நின்றார்கள்; எள் அரிய காவலினை - (அத்தகைய) தள்ளுதற்கு அரிய காவலை; அண்ணலும் - பெரியோனான அநுமனும்; எதிர்ந்தான் - முன்னே கண்டான்.

***



“வாயில் வழி சேரல் அரிது!
        அன்றியும் வலத்தோர்
ஆயில், அவர் வைத்த வழி ஏதல்
        அழகு அன்றால்
காய் கதிர் இயக்கு இல்
        மதிலைக் கடிது தாவிப்
போய் இ நகர் புக்கிடுவென்”
        என்று ஓர் அயல் போனான்.

இந்தக் கோபுர வாயில் வழியே போகலாமா? கூடாதா? என்று ஒரு கணம் யோசித்தான். கட்டும் காவலும் நிறைந்த அவ்வழியைக் கடந்து செல்வது சிரமம். மாற்றார் வழி ஆதலின் அவ்வழியே செல்வது தகாது என்று முடிவு செய்தான். மதிலைத் தாண்டிச் செல்வது என்று எண்ணினான். அப்பால் சென்றான்.

***

வாயில் வழி - இந்த வாயில் வழியே; சேரல் அரிது - செல்லுதல் எளிது அன்று; அன்றியும் - அல்லாமலும்; ஆயில்- ஆராயுமிடத்து; வலத்தோர் - வலிமை மிக்கவர்; அவர் வைத்த வழி ஏகல் - அவர் வைத்துள்ள இவ்வழியே செல்லுதல்; அழகு அன்று - நமக்கு அழகு ஆகாது; ஆல் - ஆதலால்; காய்கதிர் - எரிக்கின்ற சூரிய கிரணங்களும்; இல் - கடந்து செல்லாத மதிலைக் கடிது தாவிப் போய் - இம் மதிலை விரைவிலே தாண்டிச் சென்று; இந்நகர் புக்கிடுவேன்- இந்நகரின் உள்ளே புகுவேன்; என்று - என்று எண்ணி; ஓர் அயல் போனான் - அம் மதிலின் ஒரு புறத்தே போனான்; யார்? அநுமன்.

***

அநுமன் அவ்வாறு சென்றபோது, ‘நில்; நில்’ என்று கேட்டது ஒரு குரல். அவ்வாறு கூவிக் கொண்டே அநுமன்

எதிரே வந்து வழிமறித்து நின்றது அவ்வுருவம், அஃது ஒரு பெண் உருவம்.

“அவள் யார்?”

அவ் இலங்கை மாநகர் காக்கும் தெய்வம். இலங்காதேவி என்னும் பெயர் உடையவள்.

ஐந்து நிறங்கள் கொண்ட ஆடை உடுத்திருந்தாள் அவள்? பாம்புகள் எல்லாம் கண்டு அஞ்சத்தக்க கருடனுடைய வேகம் கொண்டவள்; இரக்கம் என்பதே சிறிதும் இல்லாதவள்; அழகிய பொன்னாலான மேலாடை தரித்து இருந்தாள்; சங்கினின்று தோன்றிய அழகிய முத்துக்களை மாலையாக அணிந்திருந்தாள்.

கண்டோர் அஞ்சத்தக்க கால்களை உடையவள்; மழைக் காலத்து மாரிபோல் ஒலிக்கும் சிலம்பு அணிந்திருந்தாள்.

எட்டுத் தோள்கள் உடையாள் அவள்; நான்கு முகத்தாள்; உலகம் ஏழும் தொட்டுத் திரும்பும் ஒளிபடைத்த மார்பினள்; தீப்பொறி பறக்க நாற்புறமும் சுழலும் கண்கள் கொண்டவள்; மூவுலகங்களையும் முட்டித்தாக்கும் வலியுடையாள்; பொறுமையே இல்லாதவள்.

சந்தனக் கலவை பூசியிருந்தாள். தாரம் எனும் எடுத்தல் ஓசைக்கு ஒத்த குரலுடன் பேசுபவள் ; தேவதருக்களில் ஒன்றாகிய மந்தார மலர்களால் ஆன மாலை தரித்த மகுடத்தாள்.

"அறிவில்லாதவனே! இவ்வூரில் எவரும் செய்யத் துணியாத செயல் புரிந்தனை? அஞ்சினாயில்லை போலும்! கோட்டை மதில் தாவாதே! என் கோபத்துக்கு இரையாகாதே! போ! போ!' என்று அதட்டினாள் இலங்காதேவி.

“இவ்வூர் காணும் ஆசையினால் வந்தேன்; எளியேன்; இங்கு வருவதால் உனக்கு என்ன நஷ்டம்?” என்று மரியாதையாகக் கூறினான் அநுமன்.

“அடே! நீ யார்? போ என்று சொன்னதும் போகாமல் பதில் பேசுகிறாய்! முப்புரம் எரித்த சிவனும் இவ்வூருக்கு வர அஞ்சுவர். அங்ஙனமிருக்க எளிய குரங்காகிய நீ வரத்தக்க ஊர் இதுவோ?” என்று கூறி நகைத்தாள் இலங்காதேவி.

அவளைக் கண்டு அநுமனும் தன் மனத்துளே நகைத்தான்.

“உன்னைக் கொன்றாலன்றி நீ போகாய்” என்று கூறி அநுமன் மீது தனது போர்க் கருவிகளை வீசினாள் இலங்காதேவி.

***

வழங்கும் தெய்வப் பல்படை
        காணாள்; மழை வான் மேல்
முழங்கும் மேகம் என்ன
        முரற்றி முனிகின்றாள்;
கழங்கும் பந்தும் குன்று
        கொடு ஆடும் கரம் ஓச்சித்
தழங்கும் செந்தீச் சிந்த
        அடித்தாள் தகவு இல்லாள்.

அநுமன் மீது வீசிய ஆயுதங்கள் எல்லாம் பயன் இன்றிப் போயின. குன்றுகளை எடுத்துக் கழற்சிக்காய் விளையாடுவது போல் அநுமன் மீது வீசினாள். ஓங்கித் தன் கைகளால் அடித்தாள்.

***

தகவு இல்லாள் - நற்குணமற்றவளான இலங்காதேவி; வீசும் தெய்வப் படைகாணாள் - (தான்) வீசும் தெய்வப் படைகள் எல்லாம் போன இடம் காணாதவளாய்; மேல் வான் முழங்கும் மழை என்ன - மேலேயுள்ள வானத்திலே முழங்குகின்ற மழை கொண்ட மேகம் போல; முரற்றிஆரவாரம் செய்து; முனிகின்றாள் - கோபிக்கின்றவளாகி; தழங்கும் செந்தீ சிந்த- ஒலிக்கின்ற சிவந்த நெருப்புச் சிந்தி; குன்று கொடு - குன்றுகளைக் கையிலே எடுத்து; கழங்கும் பந்தும் ஆடும் - கழற்சிக் காய்கள் போலவும், பந்து போலவும் விளையாடி; கரம் ஓச்சி - தன் கைகளை ஓங்கி; அடித்தாள் - அநுமனை அடித்தாள்.

***

அடியா முன்னம் அங்கை
        அனைத்தும் ஒரு கையால்
பிடியா, “என்னே!பெண் இவள்!
        கொல்லிற் பிழை” என்னா
ஒடியான் நெஞ்சத்து ஓர் அடி
        கொண்டான்; உயிரோடும்
இடியேறுண்ட மால்வரை போல்
        மண்ணிடை வீழ்ந்தாள்.

***

அவள் கொடுத்த அடி தன் மீது விழு முன்னே அவனது கைகள் எட்டினையும் தன் ஒருகையால் பிடித்துக் கொண்டான் அனுமன்,அவளைக் கொல்ல விரும்ப வில்லை. ‘இவள் பெண்; ஆதலின் இவளைக் கொல்வது தவறு’ என்று நினைத்தான். அவளுடைய மார்பிலே ஒரு குத்துவிட்டான். மலைமீது பேரிடி விழுந்து அது உருண்டு விழுவது போலே உயிருடன் பூமியில் விழுந்தாள் அவள்.

***

அடியா முன்னம் - அவள் அடிக்கும் முன்னே; அங்கை அனைத்தும் - அவளுடைய எட்டு கைகளை எல்லாம்; ஒரு கையால் பிடியா - தன் ஒரு கையினாலே பிடித்துக்கொண்டு; என்னே - என்ன இது? இவள் பெண் - இவள் ஒரு பெண்; (ஆதலின்) கொல்லிற் பிழையாம் - இவளைக் கொல்வது பிழை; என்னா - என்று; ஒடியான் - சோர்வுற்றவனாகி; நெஞ்சத்து - அவளுடைய மார்பிலே; ஓர் அடி கொண்டான் - ஓர் அடி கொடுத்தான்; இடி ஏறு உண்ட - பேரிடியால் தாக்கப்பட்ட மால் வரை போல் - பெரிய மலை போல; உயிரோடும் - உயிருடன்; மண்ணிடை வீழ்ந்தாள் - பூமியிலே விழுந்தாள்.

***

ஆத்துறு சாலை தோறும்
        ஆனையின் கூடந் தோறும்
மாத்துறு மாடம் தோறும்
        வாசியின் பந்தி தோறும்
காத் துறுஞ் சோலை தோறும்
        கருங்கடல் கடந்த காலால்
பூந்தொறும் வாவிச் செல்லும்
        பொறி வரி வண்டில் போனான்.

அப்படி விழுந்த இலங்காதேவி ரத்த வெள்ளத்தில் அழுந்தி வருந்தினாள். முன்பு பிரமதேவன் அவளுக்கிட்ட கட்டளையை நினைவு கூர்ந்தாள்; எழுந்தாள். இராம தூதனாகிய அநுமன் முன் நின்றாள்.

“ஐய! கேட்பாயாக! பிரமதேவனுடைய கட்டளையைச் சிரமேல் தாங்கி இவ் இலங்காபுரியைக் காவல் புரியும் இலங்காதேவி நான். ‘எத்தனை காலம் காவல் புரிய வேண்டும் நான் என்று பிரமனைக் கேட்டேன். வலிமை வாய்ந்த குரங்கு ஒன்று உன்னைத் தொட்டுத் தன் கைகளால் தாக்கும் வரை காவல் புரிவாய், பிறகு அந்நகர் அழிவுறும்’ என்றான் பிரமன்.

பிரமன் வாக்கு இன்று பலித்துவிட்டது. இனி இவ் இலங்கை மாநகர் அழிவது உறுதி. மறம் தோற்று அறம் வெல்வது உறுதி. நீ கருதியன யாவும் கைகூடும். உன் விருப்பம்போல் இந்நகருள் செல்வாய்” என்றாள்.

அநுமனும் சென்றான்.

***

கோ மடங்கள் எங்கும் சுற்றிப் பார்த்தான் அநுமன்; ஆனை கட்டும் மடங்கள் எங்கும் தேடினான்; குதிரை லாயங்களில் எல்லாம் தேடினான். பூஞ்சோலைகள் எங்கும் தேடினான். வண்டானது ஒவ்வொரு மலராகத் தாவிச் செல்வது போல் எங்கும் சென்றான்.

***

கருங்கடல் கடந்த காலால் - கரிய கடலைத் தாவிச் சென்ற (தன்) கால்களால் (அநுமன்) ஆ துறு சாலை தோறும் - பசுக்கள் நிரம்பிய கொட்டில்கள் தோறும்; ஆணையின் கூடம் தோறும் - யானை கட்டப்பட்ட கொட்டராம் தோறும்; மாதுறு மாடம் தோறும் - பலவகை விலங்குகள் கட்டப்பட்டுள்ள இடங்கள் தோறும்; வாசியின் பந்தி தோறும்- குதிரை லாயங்கள் தோறும்; காதுறும் சோலைகள் தோறும்-காவல் உள்ள பூஞ்சோலைகள் தோறும்; பூதொறும் வாவி செல்லும் - ஒவ்வொரு பூவிலும் தங்கிப்பின் ஒவ்வொனறாகத் தாவிச் செல்கிற; பொறிவரி வண்டின் - புள்ளிகளும் கோடுகளும் கொண்ட வண்டு போல்; போனான் -அவ்வீதிகளில் சென்றான் அநுமன்.

***

பெரிய நாள் ஒளிகொள்
        நானாவித மணிப்பித்திப் பத்தி
சொரியுமா நிழல் அங்கங்கே
        சுற்றலால் காலின் தோன்றல்
கரியனாய் வெளியனாகிச்
        செய்யனாய்க் காட்டும்; காண்டற்கு
அரியனாய் எளியனாம் தன்
        அகத்துறை அழகனே போல்



சுவர்களிலே நானாவித இரத்தினங்கன் இழைக்கப்பட்டுள்ளன. அவை நட்சத்திரங்கள் போல் ஜ்வலிக்கின்றன. அவ்வழியே அநுமன் செல்லும்போது ஓரிடத்தில் கருப்பாகவும், இன்னோரிடத்தில் சிவப்பாகவும், பிறதோரிடத்தில் வெண்மையாகவும் தோன்றினான்.

கறுப்பாகத் தோன்றும்போது திருமாலாகவும், வெண்மையாகத் தோன்றும்போது பிரமனாகவும், சிவப்பாக தோன்றும்போது ருத்திரனாகவும் காட்சி தந்தான்.

அநுமனின் உள்ளத்தில் இருந்து நீங்காத இராமன் எப்படி காண்பாற்கு அரியனாயும், அண்டினார்க்கு எளியனாயும் தோன்றுகிறானோ அப்படி.

***


பெரிய நாள் ஒளிகொள் - பெரிய நட்சத்திரங்களின் ஒளிபடைத்த; நானாவித மணி பித்தி பத்தி - பல்வகை இரத்தினங்கள் இழைக்கப்பெற்ற சுவர் வரிசைகள்; சொரியும் - வீசுகின்ற; மாநிழல் - சிறந்த ஒளி; அங்கங்கே சுற்றலால் - ஒவ்வோரிடத்திலும் சூழ்ந்திருப்பதனாலே; காலின் தோன்றல் - காற்றின் மைந்தனாகிய அநுமன்; காண்டற்கு - பார்ப்பதற்கு; அரியனாய் - அருமையானவனாயும்; எளியனாம் - அன்புடன் நாடுவார்க்கு எளியனாயும் இருந்து; தன் அகத்து உறையும் அழகனே போல் - அநுமனுடைய நெஞ்சு நீங்காது உறையும் இராமனே போல்; (தானும்) கரியனாய் - ஓரிடத்தில் கருநிறங் கொண்ட திருமாலாகவும்; வெளியனாய் - மற்றையோரிடத்தில் வெண் நிறமுடைய பிரமனாகவும்; பிறிதோரிடத்தில் செய்யனாய் - செம்மை நிறங்கொண்ட சிவபெருமானாகவும் தோன்றுகிறான்,


***


கானக மயில்கள் என்னக்
        களிமட அன்னம் என்ன
ஆனன கமலப் போது
        பொலிதர அரக்கர் மாதர்


தேன் உகு சரளச் சோலைத்
        தெய்வ நீர் ஆற்றல் தெள்நீர்
வானவர் மகளிர் ஆட்ட
        மஞ்சனம் ஆடு வாரை

தேவதாரு மரங்கள் அடர்ந்த ஒரு சோலையிலே ஆகாச கங்கை நீரிலே தேவமாதர் நீராட்டிக் கொண்டிருந்தார்கள். யாரை? அரக்கியரை. அங்கே சென்று சீதையைத் தேடினான் அநுமன்.

***


தேன் உகு சரள சோலை - தேன் சிந்தும் தேவதாரு மரங்கள் அடர்ந்த சோலைகளில்; தெய்வ நீர் ஆற்று தெள்நீரில் - ஆகாச கங்கையின் தெளிந்த நீரில் கானக மயில்கள் என்ன - காட்டிலுள்ள மயில்கள் போலவும்; களிமட அன்னம் என்ன - களித்திடும் அன்னங்கள் போலவும்; ஆனை கமலம்போது பொலிதர - தம் முகங்களாகிய தாமரை மலர்கள் விளங்க; வானவ மகளிர் - தேவமாதர்கள்; மஞ்சனம் ஆட்ட - நீராட்ட ஆடுவாரை நீராடும் அரக்கியரை (அநுமன் கண்டான்).

***



இயக்கியர் அரக்கி மார்கள்
        நாகியர் எஞ்சில் விஞ்சை
முயல் கறையிலாத திங்கள்
        முகத்தியர் முதலினோரை
மயக்கற நாடி எங்கும் மாருதி
        மலையின் வைகும்
கயக்கமில் துயிற்சிக் கும்ப
        கன்னனைக் கண்ணில் கண்டான்.



இயக்கப் பெண்கள், அரக்கியர்கள், நாக கன்னிகைகள், வித்தியாதர மங்கையர், ஆகிய பெண்களைச் சந்தேகமில்லாதபடி நன்கு பார்த்துக்கொண்டே செல்கிறான் மாருதி.

இப்படி ஒவ்வோர் இடமாகப் பார்த்துக்கொண்டு வந்த அநுமன் மலை போன்ற உருவமும், கலக்கமற்ற தூக்கமும் கொண்டு படுத்துக் கிடந்த கும்பகர்ணனைக் கண்டான்.

***


இயக்கியர் - யக்ஷப் பெண்டிர்; அரக்கிமாகள் - அரக்கப் பெண்டிர்; நாகியர் - நாக கன்னிகைகள்; எஞ்சில் விஞ்சை - குறைவில்லாத வித்தியாதரர்; முயல் கறை இலாத திங்கள் முகத்தினர் - மருவில்லாத பூரண சந்திரன் போன்ற முகமுடைய பெண்கள்; முதலினோரை - முதலானவரை: எங்கும் மயக்கு அறநாடி - எல்லா இடங்களிலும் தெளிவுபட ஆராய்ந்து; மாருதி - அநுமன்; மலையின் வைகும் - மலை போன்ற பெரும் உருவத்துடனே படுத்துக் கிடந்த கயக்கம் இல் துயிற்சி - கலக்கமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்த; கும்பகர்னனை - கும்பகர்னனை கண்ணில் கண்டான் - தன் கண்களின் நேரே கண்டான்.

***

வானவ மகளிர் கால்
        வருட, மாமதி
ஆனனங் கண்ட மண்டபத்துள்
        ஆய் கதிர்க்
கானகு காந்தம் மீக்
        கான்ற, காமர் நீர்த்
தூநிற நறுந்துளி
        முகத்தில் தோற்றவே.



அவனுடைய கால்களைத் தேவ மாதர் வருடிக் கொண்டிருக்கின்றனர். அந்த மண்டபத்திலே உள்ள தூய சந்திரகாந்தக் கற்கள் வீசிய நீர்த்துளிகள் கும்பகர்ணன் முகத்தில் விழ அவன் உறங்கினான்.

***


வானவ மகளிர் - தேவ மாதர்; கால் வருட - அவன் கால்களைப் பிடிக்க; ஆனனம் மாமதி கண்ட - அத்தேவ மாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகங்களைக் கண்ட; மண்டபத்துள் - அந்த மண்டபத்துள்; ஆய் கதிர் - சிறந்த ஒளிக் கதிர்களை; கால் நகு காந்தம் - வீசி விளங்கும் சந்திர காந்தக் கற்கள்; மீகான்ற - மேலே கக்கிய; காமர் தூநிற - இனிய தூய நிறத்தை உடைய; நறும் நீர் துளி - மணமுள்ள நீர்த்துளிகள்; முகத்தில் தோற்றவே - கும்பகன்னன் முகத்தில் விழுந்து தோற்றம் அளிக்க (அவன் உறங்கினான்).


***

குறுகி நோக்கி மற்றவன்
        தலை ஒரு பதும் குன்றத்
திறுகு திண்புயம் இருபதும்
        இவற்கிலை எனா
மறுகி ஏறிய முனிவு எனும்
        வடவை வெங்கனலை
அறிவு எனும் பெரும் பரவை
        அம் புனலினால் அவித்தான்.

தேவ மாதர் கால் வருடத் தூங்கும் கும்பகன்னனைக் கண்ட உடனே “இவன்தான் இராவணன் போலும்” என்று எண்ணினான் அநுமன். சினம் பொங்கியது. அருகில் சென்றான்; உற்றுக் கவனித்தான்.“பத்துத் தலை காணோம். இருபது புயங்கள் இல்லை. இவன் இராவணன் 

அல்லன்” என்ற முடிவுக்கு வந்தான். பொங்கிவந்த சினம் எனும் வடவா முகாக்கினியை, அறிவு எனும் கடல் நீர் கொண்டு அவித்தான்.


***

மற்று - பிறகு; குறுகி நோக்கி - அவனை நெருங்கிப் பார்த்து; அவன் - அந்த இராவணனுடைய; தலை ஒருபதும் - பத்துத் தலைகளும்; குன்றத்து இறுகு திண்புயம் இருபதும் - குன்றுபோல் பருத்து இறுகிய வலிய தோள்கள் இருபதும்; இவற்கு இலை - இங்குப் படுத்திருக்கும் இவனுக்கு இல்லை: எனா - என்று கண்டு ( அநுமன்) மறுகி - கலங்கி; எறிய - கொதித்து எழுந்த முனிவு எனும் - கோபமாகிய, வடவை வெம் கனலை - வடவா முகாக்கினியை, அறிவு எனும் - அறிவாகிய பெரும்; அம்பரவை நீரினால் - பெரிய அழகிய கடல் நீரினாலே; அவித்தான்.

***

அவித்து நின்று ‘எவன்
        ஆகிலும் ஆக’ என்று அங்கை
கவித்து நீங்கிடச் சில
        பகல் என்பது கருதாச்
செவிக்குத் தேன் என இராகவன்
        புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன் அனையவன்
        உறையுளைக் கடந்தான்.

“இவன் எவன் ஆயினும் ஆகுக. இன்னும் சில காலம் இப்படியே கிடக்கட்டும்” என்று கூறித் தன் உள்ளங்கை கவித்து ஆசி கூறி, அப்பால் சென்றான் வானரத் தலைவனான அநுமன்.

***

வீராகவன் புகழினை - இராமபிரானின் புகழை; செவிக்குத் தேன் என - கேட்போர் காதிலே தேன்போலும் இனிமையாக, திருத்தும் - திருத்தமாகத் தெரியப்படுத்தும்; கவிக்கு நாயகன் - வானரத் தலைவனான அநுமன்; அவித்து நின்று - தன் கோபத்தைத் தனித்துக்கொண்டு நின்று; ‘எவனாகிலும் ஆக' - இங்குக் கிடப்பவன் எவன் ஆகிலும் ஆகட்டும்; என்று - என்று கூறி, சில பகல் நீங்கிட என்பது கருதி - சில காலம் இப்படியே கிடக்கட்டும் என்று எண்ணி; அங்கை கவித்து - தன் உள்ளங்கை கவித்துக் கூறி, அனையவன் - அக்கும்பகன்னனின்; உறையுளை - மாளிகையை; கடந்தான் - தாண்டிச் சென்றான்.


***

மாட கூடங்கள் மாளிகை
        ஓளிகள் மகளிர்
ஆடு அரங்குகள் அம்பலம்
        தேவர் ஆலயங்கள்
பாடல் வேதிகை பட்டி மண்டபம்
        முதல் பலவும்
நாடி ஏகினன், இராகவன் புகழ்
         எனும் நலத்தான்.

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எங்கும் சுற்றினான்; தெருக்களில் திரிந்தான்; மகளிர் ஆடும் அரங்குகள் கண்டு நோக்கினான்; அம்பலங்களில் பாரித்தான்; தேவாலயங்களில் தேடினான்; இசை மேடைகளில் இருப்பாளோ சீதை என்று நோக்கினான்.

***


மாட கூடங்கள் - மண்டபங்களின் சிகரங்களும்; மாளிகை ஓளிகள் - மாளிகைகளின் வரிசைகளும்; மகளிர் ஆடு அரங்குகள் - மாதர் ஆடும் நாட்டிய சாலைகளும்;

அம்பலம் - பலர் வந்து கூடும் இடங்களும்; தேவர் ஆலயங்கள் - தேவாலயங்களும்; பாடல் வேதிகை - சங்கீத மேடைகளிலும்; பட்டி மண்டபம் - பட்டி மண்டபங்களிலும், முதல் - முதலிய பலவும் - பல இடங்களிலும்; நாடி - சீதையைத் தேடி; ஏகினான் - சென்றான்; இராகவன் புகழ் எனும் நலத்தான் - இராமனது புகழ் ஓர் உருக் கொண்டு வந்ததோ என்று சொல்லத் தக்க சிறப்புடைய அநுமன்.


***

மணிகொள் வாயிலில் சாளரத்
        தலங்களில் மலரில்
கணிகொள் நாளத்தில் கால் எனப்
        புகை எனக் கலக்கும்,
நுணுகும்; வீங்கும்; மற்று அவன்நிலை
        யாவரே நுவல் வார்?
அணுவில் மேருவின் ஆழியான்
        எனச் செலும் அறிவோன்.

மாளிகை வாயில்களிலும் சாளரங்களிலும் தாவித் தேடினான். மலரிலும், மலரின் தண்டுகளிலும் ஊடுருவிச் சென்று பார்த்தான். காற்றுப் போலவும், புகை போலவும் எங்கும் நுழைந்தான். சில இடங்களில் பேருருவம் கொள்வான். மற்றும் சில இடங்களில் சிறிய உருவம் எடுப்பான். அவன் செய்த சித்து விளையாட்டெல்லாம் எவரே சொல்ல வல்லார்?


***

அநுமன்,

மணி கொள் வாயிலில் - அழகு கொண்ட அந்நகர் மாளிகைகளின் வாயில்கள் உள்ளும்; சாளரத்தலங்களில் - சாளரங்களிலும்; மலரில் - மலர்களிலும்; கணிகொள் நாளத்தில் - ஊன்றி உணரத்தக்க மலர்த்தண்டுகளின் உள் துளைகளிலும்; கால் என காற்றுப் போலவும்; புகை என - புகை போலவும்; கலக்கும் - உட்புகுந்து தேடுவான்; நுணுகும் வீங்கும் - அந்த அந்த இடத்திற்கு ஏற்றபடி மிகச் சிறிய உருவும் பெரிய உருவும் கொள்வான்; அவன் நிலை - வேண்டிய வடிவு கொள்ளும் அந்த அநுமனின் சிறப்பை; யாவரே நுவல்வார்? எவர் தான் சொல்ல வல்லார்; அணுவின் - அணுவிலும்; மேருவின் - மிகப் பெரிய மேருவிலும் விளங்கும்; ஆழியான் என - ஆழி ஏந்திய திருமால் போல (உட்புகுந்து) செலும் - செல்வான்.

நுணுகும், வீங்கும் என்பன அஷ்டமா சித்திகளின் பாற்பட்டனவாகும். இவ்வகை சித்திகள் யோகிகளே கைவரப் பெறுவர். அநுமன் மாபெரும் யோகி, ஆதலின் இந்த சித்தி பெற்றான் என்பர். மிகவும் நுண்ணிய வடிவம் கொள்ளுதல் அணிமா என்ற சித்தியாகும். மிகப் பெரிய வடிவம் கொள்ளுதல் மணிமா என்ற சித்தியாகும்.

***

பளிக்கு வேதிகைப்
        பவழத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்குங் கற்பகப் பந்தரில்
        கரு நிறத்தோர் பால்
வெளுத்து வைகுதல் அரிது என
        அவர் உருமேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம்
        அன்னான் தனை யுற்றான்.

பளிங்கினாலாகிய மேடையிலே, பவழ மயமான மண்டபத்துள்ளே, பசுந்தேன் துளிக்கும் மலர்களை உடைய விதானத்தின் கீழே, விபீஷணனைக் கண்டான். வெண்மை நிறம் பொருந்திய தரும தேவதையானது அந்த அரக்கர் நடுவே தன் இயற்கை நிறத்துடன் வாழ்வது இயலாது என்று கருதி, கருநிறங் கொண்டு வந்தது போல இருந்தானாம் அந்த விபீடணன்.

***

பளிக்கு வேதிகை - பளிங்குக் கற்களால் ஆன மேடை மீது; பவழத்தின் கூடத்து - பவழ மயமான மண்டபத்துள்; பசும் தேன் துளிக்கும் - புதிய தேன் துளிர்த்துக் கொண்டிருக்கும்; (மலர்களை உடைய) கற்பகப் பந்தரில் - கற்பக விதானத்தின் கீழ்; கரு நிறத்தோர் பால் - கருநிறங் கொண்ட அரக்கரிடையே; வெளுத்து வைகுதல் அரிது என - வெண்மை நிறத்துடன் வாழ்தல் அரிது என்று எண்ணி; அவர் உரு மேவி - அவ்வரக்கரின் கரிய உருக் கொண்டு; ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை - தன்னை மறைத்துக் கொண்டு வாழ்கின்ற தரும தேவதையை ஒத்த விபீஷணனை: உற்றான் - அடைந்தான்.

***

உற்று நின்று அவன் உணர்வைத்
        தன் உணர்வினால் உணர்ந்தான்
குற்ற மில்லதோர் குணத்தினன்
        இவன் எனக் கொண்டான்
செற்ற நீங்கிய மனத்தினன்
        ஒருதிசை சென்றான்
பொற்ற மாடங்கள் கோடியோர்
        நொடியிடைப் புக்கான்.

விபீடணன் அருகே சென்றான்; நின்றான்; அவன் உணர்வதைத் தன் கூர்மதியினால் உய்த்து உணர்ந்தான் குற்றமில்லாத குணத்தவன் இவன் என்று கண்டான். பகையில்லாத நெஞ்சினனாய் பிறிதொருபால் சென்று மலையொதத மாளிகைகளிடையே புகுந்தான். 

உற்று நின்று - விபீடணனை நெருங்கி நின்று; அவன் உணர்வை - அவனது மனப்பான்மையை தன் உணர்வினால் - தன் கூர்மதியினால்; உணர்ந்தான் - அறிந்து கொண்டான் ; இவன் - இந்த விபீடணன்; குற்றம் இல்லது ஓர் குணத்தினன் - குற்றமற்றதான நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன்; எனக் கொண்டான் - என்று எண்ணிக் கொண்டான்; (அதனால்) செற்றம் நீங்கிய மனத்தினன் -பகையில்லாத மனத்தினனாய்; ஒரு திசை சென்றான் - வேறு ஒரு வழியிலே சென்றான்; ஓர் நொடியிடை - ஒரு நொடியில்; பொற்ற மாடங்கள் கோடி புக்கான் - மலைகளைப் போன்ற மாளிகை பலவற்றுள் புகுந்து தேடினான்.

***

முந்து அரம்பையர் முதலினர்
        முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர்
        பலரையும் தெரிந்து
மந்திரம் பல கடந்து தன்
        மனத்தின் முன் செல்வான்
இந்திரன் சிறையிருந்த
        வாயிலின் கடை எதிர்ந்தான்.

பூரண சந்திரன் போல் விளங்குகின்ற அழகிய முகம் தொண்ட அரம்பையர்கள், தங்கள் உதடுகளுக்குச் சிவப்பு நிறந்தடவி மேலும் அழகுடன் சோபிக்கிறார்கள். இவர்களிடையே சீதாபிராட்டி இருக்கிறாளோ என்று தேடுகிறான் அநுமன். கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் பல மாளிகைகளைக் கடந்து செல்கிறான். வேகமாகச் செல்கிறான்.

மனோ வேகத்தை விட அதிவேகமாகச் செல்கிறான். இந்திரனைச் சிறை வைத்திருக்கும் வாயில் முன் வந்து நிற்கிறான்.

***

முந்து - முதன்மையான! முழுமதி முகத்து - பூரண சந்திரனையொத்த முகங்களிலே; சிந்துரம் பயில் வாய்ச்சியர் - சிவப்பு நிறம் தீட்டப்பட்ட வாய்களையுடைய; அரம்பையர் பலரையும் தெரிந்து - அரம்பை முதலிய மகளிர் முதலியவரையும் பார்த்து விட்டு; பல மந்திரம் கடந்து - பின்னும் பல வீடுகள் தாண்டி; தன் மனத்தின் முன் செல்வான் - தன் மனோவேகத்தை விட அதிவேகமாகச் செல்லும் அநுமன்; இந்திரன் இருந்த சிறைவாயிலின் கடை முன் - இந்திரசித்தனால் பிடித்து வைக்கப்பட்ட இந்திரன் சிறையிருந்த; சிறைக்கோட்ட வாயில் எதிரே நின்றான்.

***


ஏதியேந்திய தடக்கையர்
        பிறை எயிறு இலங்க
மூதுரைப் பெருங்கதைகளும்
        பிதிர்களும் மொழிவார்
ஓதில் ஆயிரம் ஆயிரம்
        முறுவலி அரக்கர்
காது வெஞ்சினக் களியினர்
        காவலைக் கடந்தான்.

இந்திரசித்தின் மாளிகைக்குக் கட்டுக் காவல் அதிகம். ஏன்? அங்கே தான் இந்திரன் சிறையிருக்கிறானே. ஆயிரக் கணக்கான அரக்கர்கள் ஆயுதம் ஏந்தியவராய் அம்மாளிகையைக் காத்து நிற்கின்றார். கள் குடித்து விட்டுப் பழங்கதை பல பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய காவலைத் தாண்டி உள்ளே செல்கிறான் அநுமன்.

***

ஓதில் - ஆராய்ந்து சொல்லப் போனால்; ஏதி ஏந்திய தடக்கையர் - ஆயுதங்கள் ஏந்திய அகன்ற கைகள் கொண்டவரும்; காது வெஞ்சிளக் களியினர் - பகைவரைக் கொல்லவல்ல சினமாகிய கள்ளினைக் குடித்தவரும்; பிறை எயிறு இலங்க - பிறையொத்த தங்கள் பற்கள் தெரியும்படி; மூதுரை பெருகதைகளும் - பழைய பாட்டி கதைகளையும்; பிதிர்களையும் - விடுகதைகளையும்; மொழிவார் - தமக்குள் பேசிக் கொண்டு இருப்பவருமான; ஆயிரம் ஆயிரம் உறுவலி அரக்கர் - ஆயிரக்கணக்கினரும், வலிமை மிக்கவருமான அரக்கர் கொண்ட காவலை - காவல் கூடங்களை ; கடந்தான் - (அநுமன்) தாண்டி உள்ளே சென்றான்.

***


முக்கண் நோக்கினன் முறை
        மகன் அறுவகை முகமும்
திக்கு நோக்கிய புயங்களும்
        சில கரந்து அனையான்
ஒக்க நோக்கியர் குழாத்திடை
        உறங்கு கின்றானைப்
புக்கு நோக்கினன் புகை
        புகா வாயினும் புகுவான்.

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் மகளிர் கூட்டத்திடையே உறங்கும் இந்திரசித்தனைக் கண்டான் அநுமன். குமரக்கடவுள் தனது ஆறுமுகமும் பன்னிரு கைகளும் விளங்காவண்ணம் ஒளித்துக்கொண்டு, ஒரு சிரமும் இரு கரமும் கொண்டு விளங்குவான் போல் தோற்றமளித்தான் இந்திரசித்.

***

புகை புகா வாயினும் புகுவான் - புகை நுழைய முடியாத இடங்களிலும் புகுந்து செல்லக் கூடிய அநுமன்; புக்கு - இந்திரசித்தின் பள்ளி அறையினுள்ளே புகுந்து; முக்கண் நோக்கினன் - மூன்று கண்களால் பார்க்கின்ற சிவபெருமானின்; முறை மகன் - மகன் முறை பெற்ற ஆறுமுகக் கடவுள்; அறுவகை முகமும் - ஆறுமுகங்களையும்; திக்கு நோக்கிய புயங்களும் - திசைதொறும் விளங்கும் பன்னிரு தோள்களையும்; சில கரந்து அனையான் - சிலவற்றை ஒளித்து (ஒரு முகமும் இரு கைகளுமே கொண்டவனாய்) விளங்கியவன்போல்; ஒக்க நோக்கியர் - ஒருவர் போலவே அனைவரும் தன்னையே நோக்கும் மகளிர்; குழாத்திடையே - கூட்டத்தினிடையே; உறங்குவானை - உறங்குகின்றவனை; நோக்கினன் - பார்த்தான்.

***


‘வளையும் வாள் எயிற்று
        அரக்கனோ? கணிச்சியான் மகனோ?
அளையில் வாளரி அனையவன்
        யாவனோ? அறியேன்!
இளைய வீரனும் ஏந்தலும்
        இருவரும் பலநாள்
உளையும் வெஞ்சமம் இவனுடன்
        உளது!’ என உணர்ந்தான்.

குகையிலே கிடக்கும் சிங்கம் போன்ற இவன் அரக்கனோ? அன்றி, சிவபெருமானின் மகனாகிய குமரனோ? எவனோ அறியேன். எவன் ஆயினும் ஆகுக. இராமர் லட்சுமணர் ஆகிய இருவரும் இவனுடனே நீண்ட நாள் செய்யவேண்டிய கொடிய போர் முன்னே யுளது என்று அநுமன் அறிந்து கொண்டான்.

***

அளையில் - மலைக்குகையிலே கிடக்கும்; வாள் அரி அனையவன் - கொடிய சிங்கம் போன்றவனான இவன்; வளையும் வாள் எயிற்று அரக்கனோ - வளைந்த ஒளியுள்ள பற்கள் கொண்ட அரக்கனோ? கணிச்சியான் மகனோ? - மழுவேந்திய சிவபெருமானின் மகனாகிய குமரனோ? யாவனோ? - வேறு எவனோ? அறியேன் - அறிகின்றேன் அல்லன்; (எவனே ஆயினும்) இளைய வீரனும் - இளைய வீரப் பெருமானாகிய லட்சுமணனும்; ஏந்தலும் - இராமபிரானும் ; இருவரும் - ஆகிய இருவரும்; பல நாள் உளையும் வெம் சமம் உளது - நீண்ட நாட்கள் இவனுடன் செய்ய வேண்டிய கொடிய போர் உளது; என உணர்ந்தான் - என்று அநுமன் உணர்ந்து கொண்டான்.

***


கரிய நாழிகை பாதியில்
        காலனும்
வெருவி யோடும் அரக்கர் தம்
        வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரெண்டு
        யோசனைத்
தெருவு மும்மை நூறாயிரம்
        தேடினான்.

நடுநிசி. காலனும் அஞ்சும் அரக்கர் பதியில் அந்த நேரத்திலேயே அநுமன் ஒருவனாகவே மூன்று லட்சம் தெருக்களுள்ள, பன்னிரண்டு யோசனை விஸ்தீரணமுள்ள இலங்கையின் அக நகரிலே—அரசர் வாழும் பகுதியிலே—சீதா பிராட்டியைத் தேடினான்.

***

காலனும் வெருவியோடும் - யமனும் அஞ்சி ஓடத்தக்க; அரக்கர் வெம்பதி - அரக்கர்களுடைய அந்தக் கொடிய நகரிலே; கரிய நாழிகை பாதியில் - இரவின் நடுநிசியில்; ஒரு பன்னிரண்டு யோசனை - பன்னிரண்டு யோசனை விஸ்தீரணமுள்ள மும்மை நூறு ஆயிரம் தெருவும் - மூன்று லட்சம் தெருக்களிலும்; ஒருவனே - தான் ஒருவனாகவே (அநுமன்) தேடினான் - சீதாபிராட்டி இருக்கும் இடத்தைத் தேடினான்.

***


வேரியும் அடங்கின;
        நெடுங்களி விளைக்கும்
பாரியும் அடங்கின;
        அடங்கியது பாடல்;
காரியம் அடங்கினர்கள்
        கம்மியர்கள்; மும்மைத்
தூரியம் அடங்கின;
        தொடங்கியது உறக்கம்!

அந்த நள்ளிரவிலே கள் குடிப்போர்தம் கும்மாளங்கள் அடங்கின; களியாடல்களுக்குரிய வாத்தியங்கள் எல்லாம் ஓய்ந்தன; பாடல்கள் அடங்கின; காரியம் செய்பவர்கள் காரியம் செய்தல் ஒழிந்தனர். மூன்று வகையான முரசும் ஓய்ந்தன. எங்கும் உறக்கம்.

***

வேரியும் அடங்கின - அந்த நடுநிசியிலே கள் குடிப்போர் தம் கும்மாளங்களும் அடங்கின; நெடுங்களி விளைக்கும் பாரியும் அடங்கின - நீண்ட களியாடல் விளைக்கின்ற வாத்தியங்களும் முழங்குவது ஒழிந்தன; பாடல் அடங்கியது - பாடல்களும் ஓய்ந்தன. கம்மியர்கள் காரியம் அடங்கினர் - தொழிலாளர் தம் தொழில் அடங்கினர்; மும்மைத் தூரியம் அடங்கின - மூன்று வகைத்தான முரசுகளும் முழங்குவது ஓய்ந்தன; உறக்கம் தொடங்கியது - எல்லாருக்கும் உறக்கம் வந்துவிட்டது.


இறங்கின நிறங்கொள்
        பரி, ஏமமுற எங்கும்
கறங்கின மறங் கொள்
        எயில் காவலர் துடிக்கண்
பிறங்கின நறுங் குழலர்
        அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர்
        ஊடினர்கள் அல்லார்.

பல நிறங்கொண்ட குதிரைகள் உறங்கின; மதில் காவல் வீரர் தம் முரசங்கள் ஒலிப்பது நின்றது. கணவனுடன் ஊடல் கொண்டவரே உறங்காதிருந்தனர். காதலர் அன்பில் பிணைப்புண்டவர் உறங்கினர். அர்த்த ஜாம பறைகள் மட்டும் முழங்கின.

***

நிறங்கொள் பரி - பலவித நிறங்கொண்ட குதிரைகள்; இறங்கின - தலை சாய்த்து உறங்கின; மறங்கொள் எயில் காவலர் - வீரமுடைய மதில் காவலர்; துடிக்கண்- (அடிக்கும்) இரவு காவல் பறையின் முழக்கம்; ஏமம் உற - சாமத்துக்கு ஒரு முறை முழங்கின; எதிர் பிணங்கி ஊடினர்கள் - கணவரோடு ஊடல் கொண்டவர்கள்; அல்லார் - அல்லாதவர்களான; அன்பர் பிரியாதோரும் - தங்கள் காதலரைப் பிரியாதோரும்; பிறங்கின நறுங்குழலார் - விளக்கமும் மணமும் கொண்ட கூந்தல் உடைய மகளிரும்; உறங்கினர் - உறக்கம் கொண்டனம்.

***

இவ்விதம் சீதா பிராட்டியைத் தேடித் தெருதெருவாகச் சுற்றினான் அநுமன். அழகியதோர் மாளிகை தனித்திருக்கக் கண்டான். அதன் அழகை வியந்தான். 

“இந்த அழகிய மாளிகை தனித்திருக்கக் காரணம் என்ன? சீதையை இங்கே சிறை வைத்திருக்கிறானோ?” என்று ஐயுற்றான். உள்ளே சென்றான்.

மயன் மகளும் இராவணனுடைய முதல் மனைவியுமாகிய மண்டோதரி உறங்குகிறாள். அவளுடைய கால்களைத் தேவ மாதர் வருடிக் கொண்டிருக்கின்றனர். மற்றும் சில தேவ மகளிர் யாழ் மீட்டி மெல்லிசை எழுப்புகின்றனர். கற்பக மலர் வீசும் நறுமணம் எங்கும் பரிமளிக்கின்றது. மணி விளக்குகளின் ஒளி மயங்கும் வண்ணம் பேரொளி வீசும் உடல் வனப்புடன் உறங்குகின்றாள் மண்டோதரி.

கண்டான் அநுமன் “இவள்தான் சீதை போலும்” என்று கருதினான். பொங்கியது சினம். பெருந்துயர் உற்றான்; வருந்தினான்.

“அன்பாகிய பிணைப்பையும், உயர்குடிப் பிறப்பையும் கைவிட்டுக் கற்பு நெறியினின்றும் வழுவினாளோ சீதை” என்று ஐயுற்றான்.

***


‘மானுயர்த் திரு வடிவினள் அவள்; இவள்
        மாறு கொண்டனள்; கூறில்
தான் இயக்கியோ? தானவர் தையலோ?
        ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய
        காதல் காரிகையர்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ?
        நினைந்தது மிகை’ என்றான்.

“இல்லை; இல்லை. அவள் மானிட வடிவங் கொண்டவள். இவளோ மாறாக இருக்கின்றாள், ஆகவே இவள் சீதை அல்லள். இவள் யக்ஷ மாதோ அல்லது அசுரப் பெண்ணோ என்று ஐயுறும் வண்ணம் இருக்கின்றாள். இராமன் மீது காதல் கொண்ட ஒருத்தி பால் காமன் திரும்புவானோ? திரும்பான். இவளைச் சீதை என்று நினைத்தது தவறு” என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

***

அவள் மானுயர் திருவடிவினள் - சீதையாகிய அவள் மானிடப் பெண்ணின் அழகிய உருவம் கொண்டவள்; இவள் - இவளோ; மாறு கொண்டனள் - அதற்கு மாறாக இருக்கின்றாள்; கூறல் - கூறப்போனால்; தான் இயக்கியோ - இவள் யக்ஷ மாதோ (அல்லது) தானவர் தையலோ-அசுரப் பெண்ணோ (என்று) ஐயுறும் தகை ஆனாள் - சந்தேகம் கொள்ளும்படியான வகையில் இருக்கின்றாள்; காரிகையர்க்கு - பெண்களுக்கு; கான் உயர்த்த - மணம் மிக்க; தார் இராமன் மேல் - மாலை யணிந்த இராமபிரானதுமேல்; நோக்கிய காதல் - சென்ற காதல்; மீன் உயர்த்தவன் - மீன் கொடி ஏந்திய மன்மதன்; மருங்குதான் - பக்கம்தான்; திரும்புமோ? - திரும்பாது; நினைந்தது மிகை - இவளைச் சீதை என்று நினைத்தது தவறு என்றான்.

***


கண்டனன்; காண்டலோடும்
        கருத்தின் முன் காலச் செந்தீ
விண்டன கண்கள் சிந்தி வெடித்தன;
        கீழு மேலும்
கொண்டதோர் உருவமாயோன்
        குறளினுங் குறுகி நின்றான்
திண்டலை பத்தும் தோள்கள்
        இருபதும் தெரிய நோக்கி



முன்பு மகாவிஷ்ணு கொண்ட வாமனாவதாரத்தினும் குறுகிய வடிவத்துடன் நின்ற அநுமன், பத்துத் தலைகளும், இருபது கைகளும் கொண்டு விளங்கிய இராவணனைக் கண்டான். இவன்தான் இராவணன் என்று அறிந்தான். சினம் பொங்கியது. விழிகள் துடித்தன. தீப்பொறி கக்கின.

***

மாயோன் - திருமால்; கொண்டது - முன்னே மேற்கொண்ட; ஓர் உருவ - ஓர் உருவமாகிய வாமன வடிவத்தினும்; குறுகி - குள்ளமாகி; நின்றான் - அங்கு நின்றவனாகிய அநுமன்; திண்தலை பத்தும் - வலிய தலைகள் பத்தும்; தோள்கள் இருபதும்; தெரிய - தன் கண்களுக்குப் புலப்பட; நோக்கி - பார்த்து; கண்டனன் - இவன்தான் இராவணன் என்று அறிந்துகொண்டான்; காண்டலோடும் - அவ்வாறு அறியவே; கருத்தின் முன் - அவனுடைய எண்ணத்திலே; (சீற்றம் பொங்க) கண்கள் கீழும் மேலும் வெடித்தன - கண்களின் மேலும் கீழும் உள்ள இமைகள் துடித்தன. கால செந்தீ விண்டன - ஊழிக் காலத்துச் செந்தீயைக் கக்கின.

***


தோளாற்றல் என் ஆகும்?
        மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாளாற்றற் கண்ணாளை
        வஞ்சித்தான் மணிமுடி என்
தாளாற்றலால் இடித்துத்
        தலைபத்தும் தகர்த்து உருட்டி
ஆளாற்றல் காட்டேனேல்
        அடியேனாய் முடியேனே.

“வாள் போலும் கண்ணுடைய சீதா பிராட்டியை வஞ்சனையால் கவர்ந்து வந்தவன் இவ்இராவணன்; வலிமை மிகுந்த எனது கால்களினாலே இவனை எட்டி உதைத்து இவன் மணிமுடிகள் சிதறச் செய்து, தலைகள் பத்தும் தரையிலே உருளச் செய்யாவிடில் எனது தோள் வலி என் ஆவது? நான் இராமனின் அடிமை என்பதற்கு என்ன பொருள் இருக்கிறது?” இவ்வாறு அநுமன் தனக்குள் பேசிக் கொண்டான்.

***

(சினம் மிக்க அநுமன் தனக்குள் பின் வருமாறு கூறிக் கொண்டான்).

வாள் ஆற்றல் கண்ணாளை - வாள்போலும் ஆற்றல் அமைந்த கண்களையுடைய சீதா பிராட்டியை; வஞ்சித்தான் - வஞ்சனையால் கவர்ந்து வந்த இந்த இராவணனின்; மணிமுடிகள் - மணிகள் பதித்த கிரீடங்கள் பத்தையும்; என் தாள் ஆற்றலால் இடித்து - என் கால் வலிமையினால் சிதறச் செய்து; தலை பத்தும் - தலைகள் பத்தும்; சிதறி விழச் செய்து உருட்டி - தரையில் உருட்டி; ஆள் ஆற்றல் காட்டேனேல் - என் ஆண்மைத் திறத்தை இப்பொழுது காட்டேனாகில்; அடியேனாய் முடியேனே - நான் இராமபிரானுக்கு அடியவன் என்ற பெருமை இல்லாமல் போவேனே; (அன்றியும்) தோள் ஆற்றல் - என் தோள் வலிமைதான்; என் ஆகும் - எதற்குப் பயன்படும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்? - எதிர்காலத்தில் நிற்கும் புகழ் சொல் யாது ஆகும்?

***


நடித்து வாழ் தகை மையதோ
        அடிமை? நன்னுதலைப்
பிடித்த வாள் அரக்கனார்
        யான் கண்டும் பிழைப்பரோ?


ஒடித்து வான் தோள் அனைத்தும்
         தலை பத்தும் உதைத்து உருட்டி
முடித்து இவ்வூர் முடித்தால் மேல்
         முடிந்தவா முடிந்து ஒழிக.

"சீதா பிராட்டியைக் கொண்டு வந்த இந்த அரக்கன் எனது கண்களுக்கு அகப்பட்ட பிறகும் உயிரோடு பிழைப்பானோ? இவனைப் பிடித்து, இவனது வலிய தோள்களை ஒடித்து, எட்டி உதைத்து, இவனது தலைகள் பத்தும் தரையிலே உருளச் செய்து, உருட்டி இவ்வூரையும் அழித்து விடுவேனாகில் மேலே நடப்பது நடக்கட்டும்.”

***

அடிமை தான் நடித்து வாழ் தகைமையதோ? - அடிமைத்தன்மை என்பது (செயலில் காட்டாமல்) வெளி வேடத்தால் நடித்து வாழும் தகைமையதோ? நன்னுதலை - அழகிய நெற்றியுடைய சீதா பிராட்டியை; பிடித்த - கவர்ந்து கொண்டு வந்த, வாள் அரக்கனார் - கொடிய அரக்கன்; யான் கண்டும் - நான் பார்த்த பிறகும்; பிழைப்பரோ? - உயிரோடு பிழைத்து இருப்பாரோ? வான் தோள் அனைத்தும் - பெரிய தோள்கள் எல்லாவற்றையும்; ஒடித்து - உதைத்து; தலை பத்தும் உருட்டி - அவனுடைய தலைகள் பத்தும் தரையிலே உருளச் செய்து; இவ்வூர் முடித்து - இந்த இலங்கா பட்டணத்தையும் நிர்மூலமாக்கி; முடித்தால் - முடிப்பேன் ஆனால்; மேல் முடிந்தவா முடிந்து ஒழிக - மேலே நடக்கிறபடி நடக்கட்டும்.

***


என்று ஊக்கி எயிறு கடித்து
         இருகரமும் பிசைந்து எழுந்து
நின்று ஊக்கி உணர்ந்து
         உரைப்பான் நேமியான் அருள் அன்றால்



ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல்
        உணர்வுடை யோர்க்கு உரித்தன்றால்
பின் தூக்கில் இவை சாலப்
        பிழைக்கும் எனப் பெயர்ந்தான்.

மனத்திலே உறுதி கொண்டான்; பற்களை நறநற என்று கடித்தான்; கரங்கள் இரண்டையும் பிசைந்தான். எழுந்து நின்றான். அதற்குள் மற்றோர் எண்ணம் தோன்றியது. “சரி நாம் கருதியவாறு செய்துமுடித்தோம் ஆயின் ஒன்று செய்ய முயன்று மற்றொன்று விளைந்தால் என் செய்வது? சீ; சீ; அறிவுள்ளவன் செய்கிற செயலா இது? இராமபிரான திருவுளத்துக்கு ஏற்ற செயலா? தவறு; தவறு” என்று எண்ணி அப்பால் போனான்.

***


என்று எண்ணி - இவ்வாறு கூறி; ஊக்கி - உள்ளத்திலே ஊக்கம் கொண்டு; எயிறு கடித்து - தன் பற்களை ‘நறநற’ என்று கடித்து; இரு கரமும் பிசைந்து - தனது கைகள் இரண்டையும் பிசைந்து கொண்டு; எழுந்து நின்று - உயர்ந்து நின்று; (பின்) ஊக்கி - மனதில் ஆராய்ந்து; உணர்ந்து - தெரிந்து; உரைப்பான் - (தன் மனத்துளே பின் வருமாறு சொல்லிக் கொண்டான்) ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் - ஒன்று செய்ய முயன்று மற்றொன்று செய்தல்; உணர்வுடையோர்க்கு - அறிவுடையவர்களுக்கு; உரித்து அன்று - உரிய செயல் ஆகாது; (அன்றியும்) நேமியான் - இராமபிரான்; அருள் அன்று - திருவுளம் ஒப்பும் செயலன்று; பின் - பிறகு; தூக்கில் - சீர் தூக்கின்; இவை - நான் கருதிய இச் செயல்கள்; சால - பெரிதும்; பிழை - தவறானவை; என - என்று எண்ணி; பெயர்ந்தான் - அப்பல் போனான்.


***


“இற்றைப் போர் பெரும் சீற்றம்
        என்னோடு முடிந்திடுக
கற்றைப் பூங்குழலாளைச்
        சிறை வைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது ஒரு
        குரங்கு என்றால் முனைவீரன்
கொற்றப் போர்ச் சிலைத் தொழிற்குக்
      குறையுண்டாம்” எனக் குறைந்தான்

போரிலே என்னைத் தூண்டிவிடும் இந்தக் கோபம் எனக்குள்ளேயே அடங்கிக் கிடக்கட்டும். சீதையைச் சிறை வைத்த கண்டகனை ஒரு குரங்கு வந்து போரிட்டுக் கொன்றது என்றால் அந்த இராமனின் போர்த் திறமைக்கு மாசு படரும் என்று எண்ணி சினம் அடங்கினான்.

***

இற்றைப் போர்ப் பெரும் சிற்றம் - போர் செய்வதாக இப்போது நான் கொண்ட கடுங்கோபம்; என்னோடு முடிந்திடுக - எனக்குள்ளே அழுந்திக் கிடக்கட்டும் பூங்கற்றைக் குழலாளை - அழகிய அடர்ந்த கூந்தலுடைய சீதா பிராட்டியை; சிறை வைத்த கண்டகனை - சிறையில் வைத்த கொடியவனை; ஒரு குரங்கு - ஒரு குரங்கானது; முற்ற - அவன் முடியும்படி; போர் முடித்தது என்றால் - போர் செய்த அழித்தது என்று சொன்னால்; முனை வீரன் - போர் வீரனாகிய இராமனின்; கொற்றப் போர் சிலைக்கு - வெற்றி தரும் போர்த் தொழிலுக்கு; குறை உண்டாம் - குறைவு ஏற்படும்; என - என்று எண்ணி; குறைந்தான் - சினம் அடங்கினான்.

“இனி, இங்கே நிற்பதால் யாதொரு பயனுமில்லை” என்று கூறி அந்த இராவணனின் அரண்மனை நீங்கி அப்பால் சென்றான் அநுமன். 

“எல்லா இடமும் தேடிவிட்டேன். பிராட்டியைக் காணோமே” என்று விம்மி வருந்துகிறான்.

***

கொன்றானோ? கற்பு அழியாக்
        குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே
        செறித்தானோ? சிறை சிறியேன்
ஒன்றானும் உணாகிலேன்; மீண்டு
        இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு இக்
        கொடும் துயரம் போகாதால்.

“எங்கு தேடியும் காணவில்லையே! பிராட்டியை. மனம் உடைந்தான் அநுமன்.

“எங்கும் காணவில்லையே! கொன்று விட்டானோ? எங்கேனும் சிறை வைத்திருக்கிறானோ? ஒன்றும் தெரியவில்லையே! என்ன செய்வேன்? எப்படித் திரும்புவேன்? போய் இராகவனுக்கு என்ன பதில் சொல்வேன்? இத்துன்பத்துக்கு என்ன செய்வேன்? என் உயிரைவிட்டால் அன்றி இத் துன்பம் நீங்காது போலிருக்கிறதே?”

***

கற்பு அழியாக் குலமகளை - கற்பு அழியாத உயர் குலத்துப் பிறந்த சீதையை; கொன்றானோ - இராவணன் கொன்று விட்டானோ; கொடுந்தொழிலால் - நரமாமிசம் தின்னும் கொடிய செயலால்; தின்றானோ - தின்று விட்டானோ; எப்புறத்தே சிறை செறித்தானோ - எந்த இடத்திலே சிறை வைத்தானோ; சிறியேன் - சிறியேனாகிய நான்; ஒன்றானும் உணர்கிலேன் - ஒன்றும் அறிய முடியாதவனாயிருக்கிறேன்; இனி மீண்டு போய் - இனித் திரும்பிப் போய்; என் உரைக்கேன் - (இராமனிடம்) என்ன சொல்வேன்; பொன்றாத பொழுது - நான் உயிர் விட்டாலன்றி; எனக்கு இக் கொடும் துயரம் போகாது - எனக்கு இக்கொடிய துயரம் போகாது.

***

கண்டு வரும் என்று இருக்கும்
        காகுத்தன்; கவிகுலக்கோன்
கொண்டு வரும் என்று இருக்கும்
        யான் இழைத்தகோள் இதுவால்
புண்டரிக நயனத்தன் பால்
        இனியான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது
        யான் வாளா விளிவேனோ?

சீதையைக் கண்டு வருவேன் என்று ஆவலோடு இருப்பானே காகுத்தன்? நல்ல சேதி கொண்டு வருவேன் என்று காத்திருப்பானே சுக்கிரீவன்? செந்தாமரைக் கண்ணனாகிய அந்த இராமன்பால் நான் திரும்பிச் செல்வேனோ? வானர வீரர் உயிர் துறக்க முயன்றபோது நானும் அவருடன் உயிர் விடாமல் போனேனே. இனி வீணில் மாள்வேனோ? என்று கலங்குகிறான் அநுமன்.

***

காகுத்தன் - இராமன்; கண்டு வரும் என்று இருக்கும் - நான் சீதையைக் கண்டு வருவேன் என்று கருதி இருப்பான்; கவிகுலக்கோன் - குரங்கினத்தின் அரசனாகிய சுக்கிரீவன்; கொண்டு வரும் என்று இருக்கும் - சீதை பற்றிய நல்ல சேதி கொண்டு வருவேன் என்று இருப்பான்; யான் இழைத்த கோள் இதுவால் - நான் செய்த செயலோ இவ்வாறு இருக்கிறது; புண்டரீக நயனத்தன் பால் - செந்தாமரை மலர் போலும் கண் உடைய இராமன் பால்; இனி யான் போவேனோ - இனி நான் செல்வேனோ; விண்டவர் உடன் வீயாது - வானர வீரர் உயிர் துறக்க முயன்றபோது நானும் அவருடன் உயிர் விடாமல்; யான் வாளா விளிவேனோ - இங்ஙனம் வந்து நான் வீணில் மாள்வேனோ?

***

வல் அரக்கன் தனைப் பற்றி
        வாய் ஆறு குருதி உகக்
கல் அரக்கும் கரதலத்தால்
        “காட்டு” என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதிவேல்
        இராவணனும் இவ் ஊரும்
மெல் அரக்கின் உருகி விழ
        வெம் தழலால் வேய்கேனோ?

வலிய அந்த அரக்கனைப் பிடித்து, மலையையும் பொடியாக்கும் எனது கைகளால் ஒரு குத்துவிட்டு வாயிலிருந்து ரத்தம் கக்கச் செய்து “சீதை எங்கே காட்டு” என்று கேட்டு அங்கே சென்று காணலாமா? இந்த இராவணனும் இவனது இலங்கை நகரும் அரக்குப் போல உருகி ஓடும்படி தீயிட்டுப் பொசுக்கலாமா?”

இவ்விதம் பலவாறு எண்ணிய வண்ணம் சுற்றித் திரிகிறான் அநுமன். சீதை இருந்த அசோக வனம் நண்ணினான்.

***

வல் அரக்கன் தனைப் பற்றி - கொடிய அரக்கனாகிய இராவணனைப் பிடித்து; வாய் குருதி உக - அவனது வாயிலிருந்து இரத்தம் கக்கும்படியாக; கல் அரக்கும் கரதலத்தால் - கல்லையும் அழிக்கவல்ல என் கைகளால்; (குத்தி) காட்டு என்று - சீதை எங்கே காட்டு என்று; காண்கேனோ - (அவன் காட்டக்) காணக் கடவேனோ (அன்றி); எல் அரக்கும் - சூரிய ஒளியையும் அழிக்கின்ற; அயில் நுதி வேல் – கூரிய நுனியுள்ள வேலாயுதத்தை உடைய இராவணனும்; இவ் ஊரும் - இந்த ஊரும்; மெல் அரக்கின் - மெல்லிய அரக்கினால் செய்யப் பட்டவைப் போல; உருகி விழ - உருகித் தரையில் விழ; வெம் தழலால் வேய்கேனோ - வெப்ப மிக்க தீயால் பொசுக்க மாட்டேனோ?

***

வன் மருங்கில் வாள் அரக்கியர்
        நெருக்க அங்கிருந்தாள்
கன் மருங்கு எழுந்து என்றும்
        ஓர் துளி வரக் காணா
நன் மருந்து போல் நலன் அற
        உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல்
        வேறுள அங்கமும் மெலிந்தாள்.

அந்த அசோக வனத்திலே அரக்கியர் நடுவே சீதையைக் கண்டான் அநுமன். கற்பாறையிலே தோன்றி ! என்றுமே நீர்த்துளி காணாத சஞ்சீவினி மருந்துபோல விளங்கினாள் சீதை. பொலிவு இழந்து வாடி, மெலிந்து காணப்பட்டாள் அவள்.

***

கன் மருங்கு எழுந்து - (வலிய) கல்லிடத்து முளைத்து வளர்ந்து; என்னும் ஓர் துளி வர காணா - எப்பொழுதும் ஒரு துளி நீர் கூடத் தன்மேல் விழுந்து அறியாத; நல் மருந்து போல் - சிறந்த சஞ்சீவி மருந்து போல; நலன் உற உணங்கிய அழகு இன்றி வாடிய; நங்கை - சீதை; மெல் மருங்குப் போல் - அவளுடைய மெல்லிய இடை போல்; வேறு உள அங்கமும் - வேறாக உள்ள அவயவங்களும்; மெலிந்தாள் - மிகவும் இளைத்துப் போனவளாய்; மருங்கில் - பக்கங்களில்; வல் - வலிய; வாள் - வாள் ஏந்திய அரக்கியர் நெருக்க காவலராகிய அரக்கப் பெண் பயமுறுத்த; அங்கு இருந்தாள் - அந்த அசோக வனத்தில் சிறையிருந்தாள்.

***

துயில் எனக் கண் இமைத்தலும்,
        முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயிலிடைத் தந்த விளக் கென
        ஒளியிலா மெய்யாள்
மயில் இயல் குயில் மழலையாள்
        மானினம் பேடை
அயில் எயிற்று ஏவல் புலிக்
        குழாத்து அகப்பட்டது அன்னாள்.

மயிலின் சாயலும் குயிலின் இனிய குரலும் கொண்ட அந்தச் சீதை உறக்கம் ஒழித்தாள்; கண் மூடினாள் அல்லள்; கடும் புலிகளின் கூட்டத்திலே சிக்கியதொரு பெண் மான் குட்டி போல் விளங்கினாள்.

***

துயில் என - தூக்கம் என்று சொல்லும்; கண் இமைத்தலும் முகிழ்த்தலும் - கண்களை இமைப்பதும் மூடுவதும்; துறந்தாள் - துறந்தவளாய்; வெயில் இடைத் தந்த விளக்கு என - வெயிலின் இடையே ஏற்றிய விளக்கு போல; ஒளி இலா மெய்யாள் - ஒளியிழந்த மேனிகளாய்; மயில் இயல் - மயில் போலும் சாயலும்; குயில் மழலையாள் குயில் போலும் இனிய சொல்லினாள்; இளம் மான் பேடை - இளம் பெண் மான்; அயில் எயிற்று வெம்புலி குழாத்து - கூரிய பற்களை உடைய கொடிய புலிக்கூட்டத்தின் இடையே; அகப்பட்டது அன்னாள் - சிக்கியது போல வருந்தினாள்.

***

அரிய மஞ்சினோடு அஞ்சனம்
        இவை முதல் அதிகம்
கரிய காண்டலும் கண்ணில் நீர்
        கடல் புகக் கலுழ்வாள்;
உரிய காதல் ஒருவரோடு
        ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயிர் உருவு
        கொண்டாலன்ன பிணியாள்.

அந்தச் சீதை காண்பதற்கு அரிய கருமேகங்களைக்கண்ட போதும், நல்ல கருமையான மை முதலியவற்றைக் கண்ட போதும் இராமனை நினைத்துக் கண்ணீர் சொரிவாள். காரணம் பிரிவு ஆற்றாமை.

***

அரிய மஞ்சினோடு - அருமையான மேகத்தோடு; அஞ்சனம் முதல் - மை முதலான; இவை அதிகம் கரிய காண்டலோடும் - இவை போன்ற மிகக் கரு நிறமுடைய பொருள்களைப் பார்க்குமிடத்தும்; கண்ணில்நீர் கடல் புகக் கலுழ்வாள் - (இராமபிரான் திருமேனியை நினைத்து) கண்ணீர் ஆறாகப் பெருகிக் கடலில் போய்ச் சேர வருந்தி அழுவாள்; உலகின் - இவ்வுலகத்தில்; உரிய காதலர் ஒருவரோடு ஒருவர் - உரிமையாகக் கொண்ட காதலர் ஒருவர்பால் மற்றொருவர்; பிரிவு எனும் துயர் - பிரிதல் எனும் துன்பமே; உருவு கொண்டால் அன்ன - ஒரு வடிவம் கொண்டுள்ளது போன்ற; பிணியாள் - நோயுடையவளாய் இருந்தாள்.

***

துப்பினால் செய்த கையொடு
        கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினான் தனை நினை தொறும்
        நெடும் கண்கள் உகுத்த



அப்பினால் நனைந்து அரும்துயர்
        உயிர்ப்புடை யாக்கை
வெப்பினால் புலர்ந்து ஒரு
        நிலையுறாத மென்துகிலாள்.

நீருண்ட மேகம் போன்ற அக்கார் நிற வண்ணன் இராமனை நினைக்கிறாள் சீதை. அப்படி நினைக்கும் போதெல்லாம் கண்கள் நீர் சொரிகின்றன. அதனால் அவனது ஆடை நனைந்து விடுகிறது. துயரத்தால் பெருமூச்சு விடுகிறாள். அந்த உடல் சூட்டினால் ஈரமான புடவை காய்ந்துவிடுகிறது.

***

துப்பினால் செய்த - பவழத்தால் செய்யப்பெற்ற; கையொடு கால் பெற்ற - கைகளோடு கால்களையும் பெற்ற; துளி மஞ்சு - நீர் தெளிக்கும் கருமேகம்; ஒப்பினான் தனை - ஒத்த இராமனை; நினைதொறும் - எண்ணும் பொழுதெல்லாம்; நெடும் கண்கள் - நீண்ட கண்கள்; உகுத்த - சொரிந்த; அப்பினால் - நீரால்; நனைந்து - ஈரமாகி; அரும் துயர் - பெரும் துன்பத்தால் உண்டாகும்; உயிர்ப்பு உடை யாக்கை - பெருமூச்சு விடும் உடலினது; வெப்பினால் - வெப்பத்தினால்; புலர்ந்து - உலர்ந்து; ஒரு நிலை உறாத - எப்பொழுதும் ஒரு நிலை அடையாத; மென் துகிலாள் - மெல்லிய ஆடையுடையவளாக இருந்தாள்.

***

அரிது போகவோ விதிவலி
        கடத்தல் என்று அஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும்
        பழியையும் பாராச்

சுருதி நாயகன் வரும் வரும்
        என்பதோர் துணிவால்
கருதி மாதிரம் அனைத்தையும்
        அளிக்கின்ற கண்ணாள்.

சூரிய வமிசத்திலே தோன்றியவன் இராமன். இப்பொழுது அவனுக்கு ஒரு பழி ஏற்பட்டுள்ளது. என்ன பழி? தன் மனைவியை மற்றொருவன் கவர்ந்து சென்றான் என்ற பழி. அப்பழி போக்கிக் கொள்ள வேண்டுவதே சுத்த வீரனாகிய இராமனுக்கு அழகு. ஆகவே அதற்காகவேனும் இராமன் வருவான்; தன்னை மீட்டுச் செல்வான் என்ற நம்பிக்கை சீதைக்கு. அந்த நம்பிக்கையினாலே, “அவன் வருகிறானோ” என்று எல்லாச் திசைகளையும் துருவிப் பார்க்கின்றன. அவளது கண்கள்.

***

விதி வலி கடத்தல் - விதியின் வலிமையைக் கடந்து செல்வது; போகவோ அரிது என்று - போக முடியாத அரிய காரியம் என்று; அஞ்சி - பயந்து; சுருதி நாயகன் - வேதங்களுக்குத் தலைவனான இராமன்; பரிதி வானவன் - (தான் அவதரித்த) சூரியனுடைய குலத்தையும்; வமிசப் புகழையும்; பழியையும் - இப்பொழுது தன்னால் ஏற்பட்டுள்ளதொரு பழியையும்; பாரா - பார்த்து; வரும் வரும் என்பதோர் துணிவால் - அப் பழியை நீக்கிக்கொள்ளவாகிலும் விரைவிலே வருவான் என்பதோர் தைரியத்தினாலே; கருதி - அவனது வருகையை எண்ணி; மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் - திசைகள் எல்லாவற்றையும் துழாவிப் பார்க்கும் கண்களை உடையவள் ஆனாள்.

கமையினாள் திருமுகத்து அயல்
        கதுப்புறக் கதுவிச்
சுமையுடைக் கற்றை
        நிலத்திடைக் கிடந்த தூமதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற
        அயில் எயிற்று அரவில்
குமையுறத் திரண்டு ஒரு
        சடையாகிய குழலாள்.

கூந்தலுக்கு எண்ணெய் தடவிச் சீவி முடிந்தாள் அல்லள். ஆகையினாலே அவளுடைய கரிய கூந்தல் சடையாகிக் கன்னம் வழியாகத் தரையில் புரண்டு கொண்டிருக்கிறது. அது எப்படியிருக்கிறது? அவளுடைய முகமாகிய சந்திரனை கூந்தலாகிய இராகு எனும் பாம்பு விழுங்கி உமிழ்வது போல் இருக்கிறது!

சீதையின் முகம் சந்திரனுக்கு உவமை; கூந்தலின் தலைப்பகுதி, இராகுவாகிய பாம்பின் தலைக்கு உவமை; சடைப் பகுதி, பாம்பின் உடலுக்கு உவமை.

***

கமையினாள் - பொறுமையுடைய சீதையின்; திருமுகத்து - அழகிய முகத்திற்கு; அயல் - பக்கங்களில் உள்ள; கதுப்பு உற - கன்னங்களில் பொருந்த; கதுவி - பற்றிக்கொண்டு; சுமை உடை - பாரம் உடைய; கற்றை - கூந்தல்; நிலத்து இடை - பூமியினிடையே; கிடந்த தூமதியை - களங்கமற்ற தூய சந்திரனை; அமைய - பொருந்த; வாயில் பெய்து உமிழ்கின்ற - வாயில் இட்டு மீண்டும் வெளியே உமிழ்கின்ற; அயில் எயிற்று அரவில் - கூரிய பற்கள் கொண்ட ராகு என்னும் கிரகமாகிய பாம்பு போல; குமை உற திரண்டு குவிந்து சேர்ந்து; ஒரு சடை ஆகிய - ஒரு சடையாகத் திரிந்துள்ள; குழலாள் - கூந்தலையுடையவள்;

***

ஆவி அம் துகில் புனைவது ஒன்று
        அன்றிவேறு அறியாள்
தூவி அன்ன மென் புனலிடைத்
        தோய்கிலா மெய்யாள்
தேவு தெளி கடல் அமிழ்து
        கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே
        ஒக்கின்ற உருவாள்.

அந்தச் சீதை தான் உடுத்திய ஆடை தவிர மாற்று ஆடை உடுத்தினாள் அல்லள்; ஸ்நானம் செய்தாள் அல்லள்.

பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தை எடுத்து ஒரு பதுமையாகச் செய்கிறான் மன்மதன். அந்தப் பதுமை தூசி படிந்து மங்கி ஒளியிழந்து தோன்றினால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தாள்.

***

ஆவி அம் துகில் - உடலுக்கு உயிர் போல் சிறந்த ஆடை; புனைவது ஒன்று அன்றி - உடுத்தியது ஒன்றேயல்லாமல்; வேறு அறியாள் - வேறு ஒரு மாற்று ஆடை உடுத்து அறியாதவள்; தூவி அன்ன - காக்கை இறகு போன்ற; மென் புனலிடை - மெல்லிய நீரில்; தோய்கிலா மெய்யாள் - குளிக்காத உடல் உடையவள்; தேவு தெள் கடல் - தெய்வத் தன்மை பொருந்திய திருப்பாற் கடலில் தோன்றிய; அமிழ்து கொண்டு - தேவ அமிர்தத்தைக் கொண்டு; அனங்கவேள் செய்த - மன்மதன் செய்து அமைத்த; ஓவியம் - சித்திரம்; புகை உண்டதே ஒக்கின்ற - புகை படிந்து மங்கிப்போனது போன்ற; உருவாள் - உருவத்தை உடையவளாக இருந்தாள்.

***

வீடினது அன்று அறன்;
        யானும் வீக லேன்;
தேடி னென்; கண்டனன்
        தேவியே எனா
ஆடினன்; பாடினன்;
        ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன்; உலாவினன்;
        உவகைத் தேன் உண்டான்.

சீதா தேவியைக் கண்ட அநுமன் ‘இவள் தேவியே’ என்று தெளிந்தான்; மகிழ்ந்தான். அம் மகிழ்ச்சியில் மதுவருந்தியவன் போல் ஆனான். ஆடினான்; பாடினான்;. அங்குமிங்கும் ஓடினான்; தாவினான். தருமம் அழியவில்லை நானும் சாகமாட்டேன் என்று கூவினான்.

***

அறம் வீடினது அன்று - தருமம் அழியவில்லை; யானும் வீகலேன் - நானும் இனி இறக்கமாட்டேன்; தேடினேன்; கண்டனன் - இது வரை தேடி வந்த நான் இப்பொழுது கண்டு கொண்டேன்; தேவியே எனா - “இவள் சீதா தேவியே ஆவள்” என்று; உவகைத் தேன் உண்டான் - மகிழ்ச்சி மது வருந்திய அநுமன்; ஆடினன் - அந்த மகிழ்ச்சியின் பொங்குதலால் கூத்தாடினன்; பாடினன் - பலவாறு புகழ்ந்து பாடினான்; ஆண்டும் ஈண்டும் - அங்கும் இங்கும்; பாய்ந்து ஓடினன் - தாவி ஓடினான்.

***

அழுக்குப் படிந்த இரத்தினம் போன்றவளும், சூரிய வெளிச்சத்தில் ஒளி மங்கிய சந்திரன் போன்றவளும், அழுக்கு மூடிய கூந்தலையுடையவளுமாகிய சீதா பிராட்டியை நோக்கினான் அநுமன். அவளது கற்பு நிலை கண்டான். வியந்தான். இவ்வாறு வியந்து பாராட்டி ஆங்கு ஓர் மரப்பொந்திலே ஒளிந்து நின்றான் அநுமன். அதுபோது அரக்கனாகிய இராவணன் வருகிறான்.

***

சிகர வண்குடுமி நெடுவரை எவையும்
        ஒரு விழித்திரண்டன சிவண
மகரிகை வயிரக் குண்டலம் அலம்பு
        திண்டிறல் தோள் புடை வயங்கச்
சகர நீர் வேலை தழுவிய கதிரின்
        தலை தொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பன் மகுடம் இளவெயில் எறிப்பக்
        கங்குலும் பகல் பட வந்தான்.

இருபது தோள்கள் கொண்டவன் இராவணன். அந்த இருபது தோள்களும் எத்தகைய காட்சி வழங்குகின்றன? நீண்ட மலைச் சிகரங்கள் எல்லாம் ஓரிடத்திலே சேர்ந்து வந்தன போன்ற காட்சி. அந்த இருபது தோள்களிலும் மகர மீன் வடிவாயுள்ள தோள் வளையல்கள்! வயிரம் பதித்த மகர குண்டலங்கள்! தலை ஒவ்வொன்றிலும் மகுடங்கள்! இள வெயில் போல ஒளி வீசுகின்றன. இப்படி அந்த அசோக வனத்துக்கு வந்தான் இராவணன்.

***

சிகர வண்குடுமி - சிகரங்களாகிய வளமுள்ள முடிகளை உடைய; நெடுவரை எவையும் - நீண்ட மலைகள் எல்லாம்; ஒரு வழி திரண்டன சிவண - ஓரிடத்திலே சேர்ந்து வந்தன போல; மகரிகை - மசர வடிவாய் உள்ள தோள் வளையல்களும்; வயிர குண்டலம் - வயிரம் பதித்த மகர குண்டலங்களும்; அலம்பு - அசைந்தாடப் பெற்ற; திண் திரள் தோள் புடை வயங்க - மிக்க வலிமையுடைய தோள் இருபதும் இரு பக்கங்களில் விளங்க; சகர நீர் வேலை - சகரர்களால் தோண்டப்பட்ட் நீர் மிகுதியுள்ள கடலை; தழுவிய கதிரின் - தழுவி எழும் சூரியனைப் போல; தலைதொறும் தலைதொறும் தயங்கும் - ஒவ்வொரு தலையிலும் விளங்கும்; வகைய - தன்மையுடைய; பல் மகுடம் - பத்தான பல மகுடங்கள்; இளவெயில் எறிப்ப - இள வெயிலைப் போல் ஒளி வீசவும்; கங்குலும் பகல் பட - அந்த இரவு நேரமானது பகலே போலும் விளங்கவும்; வந்தான் - சீதா பிராட்டியிருந்த அந்த அசோகவனத்துக்கு வந்தான் இராவணன்.

***

உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர
        மேனகை வெள்ளடையுதவச்
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல
        அரம்பையர் குழாம் புடை சற்றக்
கருப்புறச் சாந்துங் கலவையும் மலரும்
        கலந்து உமிழ் பரிமள கந்தம்
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக்களிற்றின்
        வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப

தேவ மங்கையாகிய ஊர்வசி அந்த இராவணனுடைய உடைவாளை ஏந்தித் தொடர்ந்து வந்தாள். மேனகை எனும் மற்றொரு தெய்வ மாது அவன் அருகே நின்று வெற்றிலை மடித்துக் கொடுத்து வந்தாள். திலோத்தமை என்பவள் அவனுடைய செருப்பைத் தூக்கிக் கொண்டு பின்னே சென்றாள். வேறுள் அரம்பையர் யாவரும் அவனைச் சூழந்து சென்றனர். பச்சைக் கற்பூரம் முதலிய வாசனா திரவியங்கள் கலந்த சந்தனமும், பரிமள கந்தம் வீசும் மலர்களும், வாசனை வீசித் திசைக் களிறுகளின் மூக்கைத் துளிைத்தன.

உருப்பசி - ஊர்வசி என்கிற தெய்வப் பெண்; உடைவாள் ஏந்தினள் - உடை வாளைக் கையிலே ஏந்தியவராய்; தொடர - தன்னைப் பின் தொடர்ந்து வரவும்; மேனகை - மேனகை என்ற தெய்வ மாது; வெள்ளடை உதவ - அருகில் நின்று வெற்றிலை மடித்துக் கொடுக்கவும்; செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செ ல் ல - திலோத்தமை என்ற தேவ மகள் இராவணனுடைய செருப்புக்களை ஏந்தியவளாய் உடன் செல்லவும்; அரம்பையர் குழாம் புடை சுற்ற - அரம்பையர் கூட்டம் நாலா பக்கமும் சுற்றி வர; கருப்புர சாந்தும் கலவையும் - தான் அணிந்துள்ள பச்சைக் கற்பூரம் சேர்ந்த சந்தனக் குழம்பும், கலவையும்; மலரும் - மலர்களும்; கலந்து - ஒன்று சே ர் ந் து; உமிழ் - வெளியே வீசும்; பரிமளகந்தம் - நறுமணமானது; மருப்பு உடை பொருப்பு ஏர் - தந்தங்களையுடைய மலைகள் போன்ற மாதிரக் களிற்றின் - பெரிய யானையின்; வரி கை வாய் மூக்கிடை மடுப்ப - கோடுகள் அமைந்த துதிக்கை வாய் மூக்கிலே தங்க.

***

நீனிறக்குன் றின் நெடிது உடன் தாழ்ந்த
        நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பானிறப் பட்டு மாலை உத்தரியம் பசப்புறப்
        பசும் பொன் ஆரத்தின்
மாணிற மணிகளிடைப் படர்ந்து வருகதிர்
        இளவெயில் பொருவச்
சூனிறக் கொண்மூச் சுழித்து இடைகிழிக்கும்
        மின் என மார்பில் நூல் துளங்க.


உத்தரீயம் எனும் அங்கவஸ்திரம் அணிந்து வந்தான் அவன். அது எப்படியிருந்தது? நீல நிற மலையிலிருந்து விழும் நீர் அருவி போல் இருந்தது. மார்பிலே விளங்கிய பூணூல் எப்படி இருந்தது? கருக் கொண்ட நீல மேகத்தைக் கிழித்துக்கொண்டு ஒளி வீசும் மின்னலைப் போல் இருந்தது.

***

நீல நிறக் குன்றின் - நீல நிறத்தை உடைய குன்றில்; நெடிது உடன் தாழ்ந்த - நீண்டு நெருங்கித் தாழ்ந்து விழும்; நீத்த வெள் அருவியின் - நீராகிய வெண்மை நிறம் பொருந்திய அருவி போல; நிமிர்ந்து - நீண்டு விளங்கிய; பால் நிறப் பட்டு மாலை உத்தரியம் - பால் போலும் வெண்மையான பட்டு மாலை போல் விளங்கும் மேலாடை; பசப்பு உற - நிற வேறுபாடு கொண்டு விளங்க; பசும்பொன் ஆரத்தின் - பசுமையான பொன்னால் செய்யப்பட்ட ஆரத்தில் விளங்கும்; மால் நிற மணிகள் - சிறந்த ஒளியோடு கூடிய இரத்தினங்கள்; இடையுற படர்ந்து - இடையிடையே படர்ந்து விளங்கி; வருகதிர் இளவெயில் பொருவ - உதய சூரியனின் இளம் வெயில் போல; சூல் நிற கொண் மூச் சுழித்து - கருக் கொண்ட நீல மேகத்தைக் கிழித்துக் கொண்டு; இடை கிழிக்கும் - அதனிடையே கிழித்து விளங்கும்; மின் என - மின்னலைப் போல; மார்பின் நூல் துளங்க - மார்பில் அணிந்துள்ள பூணூல் அசைய.

***

தோள் தொறும் தொடர்ந்த மகரவாய் வயிரக்
        கிம்புரி வலயமாச் சுடர்கள் நாள் தொறும்
சுடரும் கலி கெழு விசும்பின்
        நாளொடு கோளினை நக்கத்தாள்தொறும்

தொடர்ந்து தழங்கு பொற் கழலின்
        தகையொளி நெடுநிலம் தடவகேடொறும்
தொடர்ந்த முறுவல் வெண்ணிலவின்
        முகமலர் இரவினும் கிளர

தோள் ஒவ்வொன்றிலும் வயிர மணிகள் பதிக்கப்பெற்ற கிம்புரி எனும் தோள் வளையல் அணிந்திருந்தான். அந்த வளையல் வீசும் ஒளி எப்படியிருந்தது? வானிலுள்ள மீன்களையும், கோள்களையும் நாவினால் நக்குவது போல் இருந்தது. காலிலே பூட்டியிருந்த வீரக் கழலின் ஒலியானது நிலத்தைத் தடவி வந்தது. தன்னைத் தொடர்ந்து வந்த சுற்றத்தினரையெல்லாம் பார்த்துப் புன்னகை பூத்தான். அந்த நிலவொளியிலே அவனது முகங்களாகிய தாமரை மலர்கள் அந்த இரவிலும் ஒளி வீசின.

***

தோள் தொறும் - ஒவ்வொரு தோளிலும்; தொடர்ந்த - பூணப்பெற்றுள்ள; மகர வாய் - மகர மீனின் வாய் வடிவாய் அமைந்துள்ள வயிர கிம்புரிவலய மாசுடர்கள் - வயிர மணிகள் பதிக்கப் பெற்ற கிம்புரி எனும் தோள் வளையல்களின் பெரும் சுடர்கள்; நாள்தோறும் - ஒவ்வொரு நாளும்; சுடரும் - ஒளி வீசுகின்ற; கலிகெழு விசும்பின் - மிகத் தழைந்த ஆகாயத்தில் உள்ள; நாளொரு கோளினை நக்க - நட்சத்திரங்களோடு கிரகங்களையும் தம் நாவினால் நக்குவன போல விளங்க; தாள் தொறும் தொடர்ந்து - இரண்டு கால்களிலும் பூட்டப்பெற்று; தழங்கு பொற் கழலின் - ஒலிக்கின்றதும் பொன்னால் செய்யப்பட்டதுமான வீரக்கழலின்; தகைஒளி - சிறந்த ஒளியானது; நெடு நிலம் தடவ - நீண்ட நிலத்தைத் தடவி வர; கேள் தொறும் தொடர்ந்த - தன்னுடன் வரும் சுற்றத்தார் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து செல்கின்ற; முறுவல் வெள் நிலவின் - புன்சிரிப்பாகிய வெள்ளிய நிலவினால்; முக மலர் - அவனது முகங்களாகிய தாமரை மலர்கள்; இரவினும் கிளர - அந்த இரவுப் போதிலும் ஒளி வீச.

***

அன்னபூம் சவுக்கம் சாமரை உக்கம்
        ஆதியாய் வரிசையின் அமைந்த
உன்னரும் பொன்னின் மணியினில் புனைந்த
        உழைக்குலம் மழைக்குலம் அனைய
மின்னிடைச் செவ்வாய்க் குவிமுலைப்
        பணைத்தோள் வீங்குதேர் அல்குலார் தாங்கி
நன்னிறக் காரின் வரவுகண்டு உவக்கும்
        நாடக மயில் என நடப்ப

மலர்களால் ஆன சதுர விதானம், வெண் சாமரம், ஆல வட்டம் ஆகிய அரசர்க்குரிய வரிசைகளை எல்லா அரக்கியர் ஏந்தி வந்தனர். கார்மேகம் கண்டு மகிழும் மயில் போல அந்த இராவணனைக் கண்டு மகிழ்ந்து அவன் அருகே ஆடி நடந்து அசைந்து வந்தனராம். அப்படி வந்த பெண்கள் எப்படியிருந்தார்கள்? சிவந்த வாயும், குவிந்த முலையும், நுண் இடையும் கருமேக நிறமும் கொண்டு விளங்கினார்களாம்.

***

அன்ன - அத் தன்மையதாக; மழைக் குலம் அனைய - மேகத்தின் கூட்டம் போன்று கரு நிறம் கொண்ட; மின் இடை - மின்னல் போலும் நுண் இடையுடைய; செவ்வாய் - சிவந்த வாயும்; குவிமுலை - குவிந்த பருத்த முலைகளும் கொண்ட; பணைத் தோள்-மூங்கில் போலும் வழவழப்பான தோள்களை உடைய; வீங்கு தேர் அல்குலார் - பெரிய தேர் போன்ற அல்குல் உடைய அரக்கப் பெண்கள்; பூம் சவுக்கம் – பூக்களால் ஆன நாற்கோணச் சதுரமாகிய விதானம்; சாமரை - வெண் சாமரங்கள்; உக்கம் - ஆலவட்டங்கள், ஆதியாய் வரிசையின் அமைந்த - இவை முதலாக அரசர்க்கு உரிய வரிசைகளில் அமைந்திருந்தவைகளையும்; உன்னரும் பொன்னின் - நினைத்தற்கு அரிய சிறப்புடைய பொன்னாலும்; மணியினால் - இரத்தினங்களாலும்; புனைந்த - அழகுற அமைக்கப்பட்ட; உழைகுலம் - மான்களையும்; தாங்கி - ஏந்தியவர்களாய்; நல்நிற காரின் வரவு கண்டு உவக்கும் - நல்ல கருமேகத்தின் வருகை கண்டு மகிழும்; நாடக மயில் என - நடனமிடும் மயிலே போல்; நடப்ப - இராவணனோடு நடந்து செல்ல.

***


அந்தியன் அனங்கன் அழல் படத் துரந்த
        வயின்முகப் பகழி வாயறுத்த
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்தென்ன
        வெண்மதிப் பசுங்கதிர் விரவ
மந்த மாருதம் போய் மலர்தொறும் வாரி
        வயங்கு நீர் மாரியின் வருதேன்
சிந்து நுண்துளியின் சீகரத்திவலை
        உருக்கிய செம்பு எனத்தெறிப்ப

காமன் தனது கணைகளை ஏவுகிறான். யார் மீது? இராவணன் மீது. அது அவனைச் சுடுகிறது. அவ்வாறு சுட்டதினால் வெந்த புண்ணிலே வேல் கொண்டு பாய்ச்சினால் எப்படியிருக்கும்? அப்படித் துடித்தனாம் இராவணன். வேல் பாய்ச்சியவர் யார்? வானத்திலே தோன்றிய முழு நிலவு. இது போதாது என்று மந்தமாருதம் வீசுகிறதாம். சும்மா வீசுகிறதா? இல்லை. மலர்தொறும் மலர்தொறும் தவழ்ந்து தவழ்ந்து மணம் சுமந்து நீர்த்துளி சுமந்து இராவணன் மேல் தெறிக்கிறதாம். அஃது எப்படியிருக்கிறது? செம்பை காய்ச்சி உருக்கி தெளிப்பது போல் இருக்கிறதாம்.

***



அந்தியில் - மாலைப் போதில்; அனங்கன் - மன்மதன்; அழல் பட துரந்த - நெருப்பு எனச் சுட ஏவிய; அயில் முகப்பகழி வாய் அறுத்த - கூரிய நுனியுடைய அம்பு கொண்டு அறுத்த; வெந்துறு புண்ணில் - வெந்திருக்கிற புண்களில்; வேல் நுழைந்தென்ன - வேல் நுழைந்தாற் போல; வெண்மதி பசும் கதிர் விரவ - வெண்மையான சந்திரனுடைய குளிர்ந்த நிலவு கலந்து கொள்ள; மத்தமாருதம் - இளம் தென்றல் காற்று; மலர் தொறும் போய் - ஒவ்வொரு மலரினும் சென்று; வாரிவரு - வாரிக் கொண்டு வருகிற; வயங்கு நீர் வாரியின் - விளங்கும் நீரையுடைய மழை போன்ற: தேன் - தேனின்றும்; சிந்து நுண் துளியின் - சிந்துகிற நுண்ணிய துளிகளின்; சீகரத்திவிலை - சில் என்ற திவிலைகளால்; உருக்கிய செம்பு எனத் தெறிப்ப - பழுக்கக் காய்ச்சி உருக்கிய செம்பு வீழ்வது போல் தன் மேல் தெறிக்க.

***


மாலையும் சாந்தும் கலவையும் பூணும்
        வயங்க நுண்தூசொடு காசும் சோலையின்
தொழுதிக் கற்பகத்தருவும்
        நிதிகளும் கொண்டுபின் தொடர பாலின்
வெண் பரவைத்திரை கருங்கிரிமேல்
        பரந்தெனச் சாமரை பதைப்ப
வேலை நின்றுயரும் முயலில்வான் மதியின்
        வெண்குடை மீதுற விளங்க

இரு புறமும் வெண் சாமரம் வீசுகிறார்கள். அது எப்படியிருந்தது? பாற்கடலிலே எழும் வெண்மை பொருந்திய அலைகள் கரிய மலைமேல் படிவதுபோல் இருந்தது. களங்கமற்ற பூரண சந்திரனைப் போலே அவனது தலைக்குமேல் வெண்கொற்றக் குடை பிடித்து வந்தார்கள். அவனுக்குப் பின்னே சங்கம் பதுமம் ஆகிய நவநிதிகளையும், மலர்களையும், சந்தனமும், அணிகளையும் , இரத்தினங்களையும் மெல் ஆடைகளையும் கொண்டு வந்தார்கள்.

***

சோலையின் தொழுதி கற்பகத் தருவும் - சோலை போல் அடர்ந்த கற்பக விருஷமும்; நிதிகளும் - சங்கம் பதுமம் ஆகிய நவநிதிகளும்; மாலையும் - பலவித மலர்மாலைகளும்; சாந்தும் - சந்தனமும்; கலவையும் - பலவித வாசனைக் கலவைகளும்; பூணும் - அணிகளும்; வயங்கு நுண் துரசொடு காசும் - விளங்கும் மென்மையான ஆடைகளுடன் இரத்தினங்களையும்;கொண்டு பின் தொடர -எடுத்துக் கொண்டு பின்னே தொடர்ந்துவர, பாலின் பரவை வெண்திரை - பாற்கடலின் வெண்மையான அலைகள்; கரும் கிரிமேல் பரந்தென - கரிய மலைமேல் படிந்தாற் போல; சாமரை பதைப்ப - சாமரங்கள் இருபுறமும் அசைந்து வீச; வேலை நின்று உயரும் - கடலிலிருந்து மேலே உயர்ந்து தோன்றும்; முயல் இல்வால் மதியின் - முயல் எனும் கறை இல்லாத வெண்மதி போல; வெண்குடை மீது உற விளங்க - வெண்கொற்றக்குடை மேலே விளங்க.

***


விரிதளிர் முகை பூ கொம்பு அடைமுதல் வேர்
        இவை யெலாம் மணிபொனால் வேய்ந்த
தருவுயர் சோலை திசைதொறும் கரியத்
        தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழத்
திருமகள் இருந்ததிசை அறிந்திருந்தும்
        திகைப்புறு சிந்தையால் கெடுத்தது
ஒரு மணி தேடும் பஃறலை அரவின்
        உழை தொறும் உழைதொறும் உலாவி



இராவணன் பார்க்கின்ற திசைகளிலே எல்லாம் இருக்கின்ற தளிர், அரும்பு, மலர், கொம்பு, அடிமரம் முதலிய எல்லாம் கருகிப் போகும்படியாக தீ கக்கும் பெருமூச்சு விட்டுக்கொண்டு வந்தான்! சீதாதேவி எங்கே இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும். தெரிந்தாலும் விரக வேதனையால் புத்தித் தடுமாறி நாகரத்தினத்தை இழந்துவிட்டுத் தேடும் பத்து தலைப் பாம்பு போல் ஒவ்வோரிடமாகத் திரிந்து திரிந்து வந்தான்.

***


விரி தளிர் - விரிந்து விளங்கும் தளிர்களும்; முகை - அரும்புகளும்; பூ - மலர்களும்; கொம்பு - கிளைகளும்; முதல் - அடி மரமும்; வேர் - வேர்களும்; இவைஎலாம் - ஆகிய இவை எல்லாம்; மணி பொன்னால் வேய்ந்த - மணிகளாலும் பொன்னாலும் வேய்தன போன்ற; தரு உயர்சோலை - மரங்கள் உயர்ந்து விளங்கிய அச் சோலை; திசைதொறும் - இராவணன் பார்க்கின்ற திசைகளில் எல்லாம்; கரிய - கருகிப் போகும்படி; தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ - தீ கக்கும் பெருமூச்சு தன் முன்னே தவழ்ந்து செல்ல; திருமகள் இருந்த திசை - திருமகளாகிய சீதாபிராட்டி இருந்த இடத்தை; அறிந்திருந்தும் - தான் அறிந்திருந்தும்; திகைப்பு உறு சிந்தையால் - விரக வேதனையால் புத்தித் தடுமாறி; கெடுத்தது ஒரு மணி தேடும் - கெட்டுப் போக்கிய ஒப்பற்ற நாகரத்தினத்தைத் தேடிசெல்லும்; பஃறலை அரவின் - பல தலைகள் கொண்ட பாம்பு போல; உழைதொறும் உழைதொறும் - ஒவ்வோரிடமும் விடாமல்; உலாவி - உலாவிக்கொண்டு.

***


இவ்வாறு கோலாகலமாக வந்தான் இராவணன். வந்து என்ன செய்தான்? தனது தலைகள் பத்தும் மணிக்கிரீடமும் தரையிலே பதியச் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். தன்னை அடிமையாக ஏற்கவேண்டும் என்று கெஞ்சினான்.

அப்போது சீதா பிராட்டி அவ் இராவணனுடன் நேரில் பேசினாள் அல்லள். ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாள். போட்டு அதனை முன்னிலைப் படுத்திப் பின்வருமாறு சொல்கிறாள்.

***


மேருவையுருவ வேண்டின்
        விண்பிளந்து ஏக வேண்டின்,
ஈரோடு புவனம் யாவும்
        முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது
        அறிந்திருந்து அறிவிலாதாய்
சீரிய அல்ல சொல்லித்
        தலை பத்தும் சிந்து வாயோ?

மேரு மலையைத் துளைக்க வேண்டுமா? வானத்தைப் பிளந்து செல்ல வேண்டுமா? ஈரேழு பதினான்கு உலகங்களையும் அழிக்க வேண்டுமா? இராமபாணம் ஒன்றே இவற்றை செய்யவல்லது. இதை நீ அறிவாய். அறிந்தும் அறியாதார்போல என்னிடம் தகாத வார்த்தை பேசி உன் தலைகள் பத்தும் சிந்துவாயோ?

***


அறிவு இலாதாய் - அறிவு இல்லாதவனே; ஆரியன் பகழி - இராமனின் அம்பு; மேருவை உருவ வேண்டின் - மேரு மலையைத் துளைத்துச் செல்ல விரும்பினாலும்; விண் பிளந்து ஏக வேண்டின் - வானம் பிளந்து அப்பால் செல்ல விரும்பினாலும்; ஈர் ஏழு புவனம் யாவும் - பதினான்கு உலகங்களையும்; முற்று வித்திடுதல் வேண்டின் – அழிக்க விரும்பினாலும்; வல்லது - வல்லமை உடையது; அறிந்திருந்து - இதனை நீ அறிந்தும்; சீரிய அல்ல சொல்லி - சிறப்பில்லாத தீய சொற்களைக் கூறி; தலை பத்தும் சிந்துவாயோ - உன் தலைகள் பத்தும் அறுந்து கீழே விழும்படி செய்து கொள்வாயோ?

***


மலை எடுத்து எண் திசை
        காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும்
        மாற்றம் நேரும் நீ
சிலை எடுத்து இளையவன்
        நிற்கச் சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும்
        மகளிர் தாழ்தியோ?

“கயிலாய மலையைப் பெயர்த்தேன்; திசைக் களிறுகளை நிலை கலங்கி ஓடச் செய்தேன் என்று பெருமை பேசிக் கொள்கிறாய். அத்தகைய வீராதி வீரன் ஆகிய நீ எங்கள் இளைய பெருமாள் வில்லேந்தி நின்று எனக்குக் காவலிருந்தபோது வந்திலை; அத்தகைய ஆண்மையற்ற நீ இன்னமும் உனது பத்துத் தலைகளுடன் பெண்போல் தலை குனிந்து நிற்கலாமோ? வெட்கமாயில்லை!”

***


மலை எடுத்து - கயிலை மயிலையை நீ எடுத்து; எண்திசை காக்கும் மாக்களை - அட்டதிக்குகளிலும் நின்று பாதுகாத்து வரும் யானைகளை; நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ - அவை நிலைகெட்டு ஓடும்படி செய்தேன் என்று பெருமை பேசும் நீ; இளையவன் - இளைய பெருமாளாகிய லட்சுமணன்; சிலை எடுத்து நிற்க சேர்ந்திலை - வில் ஏந்தி என்னைக் காத்து நின்றபோது வந்தாய் அல்லை; தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ - அத்தகைய ஆண்மையற்ற நீ உன் பத்துத் தலைகளையும் தூக்கிக் கொண்டு மகளிரைப்போல் தலை குனிவாயோ?

***


குன்று நீ எடுத்த நாள் தன்
        சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்று வன்புரங்கள் வேவத்
        தனிச் சரம் துரந்த மேரு
என் துணைக் கணவன் ஆற்றற்கு
        உரனிலாது இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த
        ஓசை கேட்டிலை போலும்

கயிலாய கிரியை நீ பெயர்த்தாயே! அப்போது சிவபெருமான் தமது கால்விரல் நுனியை அழுத்தி உன்னை வென்றாரன்றோ? அச் சிவபெருமான் திரிபுர தகனம் செய்தபோது எந்த வில்லைக்கொண்டு அம்பு தொடுத்தாரோ அதே வில்தான் எனது கணவராகிய இராமனின் வலிமைக்கு ஆற்றாது ஒடிந்தது. அப்போது எழுந்த ஒலியை நீ கேட்டிலையோ? கேட்டிருந்தால் என்னை அபகரித்து வந்திருக்கமாட்டாய்.

***


குன்று எடுத்த நாள் - கயிலை மலையை நீ எடுத்த அன்று; தன் சேவடிக் கொழுந்தால் - தன்னுடைய சிவந்த பாதத்தின் நுனி விரலால்; உன்னை வென்றவன் - உன்னை அம் மலையின் அடியில் வைத்து அழுத்தி வென்ற சிவபெருமான்; புரங்கள் வேவ - முப்புரங்கள் நெருப்பால் எரிந்து வெந்து அழிய; தனிசரம் துரந்த - ஒப்பற்ற பாணம் விடுவதற்கு இடமாய் அமைந்த; மேரு - மேரு போன்ற திரியம்பகம் என்ற சிவதனுசு; என் துணை கணவன் - எனது வாழ்க்கைத் துணையாகிய இராமனின்; ஆற்றற்கு - வலிமைக்கு; உரன் இலாது - வலிமை இல்லாமல்; இற்று வீழ்ந்த அன்று - ஒடிந்து வீழ்ந்தபோது; எழுந்து உயர்ந்த ஓசை - எழுந்து ஓங்கிய பேரொலியை; கேட்டிலைப் போலும் - நீ கேட்கவில்லை போலும்.

***


அஞ்சினை ஆதலாலே
        ஆண்டகை அற்ற நோக்கி
வஞ்சனை மானொன் றேவி
        மாயையால் மறைத்து வந்தாய்
உஞ்சனை போதியாகில் விடுதி
        உன் குலத்துக் கெல்லாம்
நஞ்சினை எதிர்ந்த போது
        நோக்குமே நினது நாட்டம்

வீரனாகிய இராமன் எதிரே அஞ்சினாய். ஆதலினாலே உனது வஞ்சனையினாலே மான் ஒன்றை ஏவினாய். இராமன் அம் மான் பின்னே சென்றபோது வந்தாய். எப்படி வந்தாய்? உனது உண்மை உருவுடன் வந்தாயா? இல்லை. மாயத்தாலே சந்நியாசி வேடம் பூண்டு வந்தாய். உயிர் பிழைக்க வேண்டுமானால் என்னை நீ அவரிடம் சேர்ப்பாய்.

***


அஞ்சினை - இராமன் எதிரே வர நீ பயந்தாய்; ஆதலாலே ஆகையினாலே - வஞ்சனை; மான் ஒன்று ஏவி - வஞ்சகமாக மாயமான் ஒன்றை ஏவிவிட்டு; ஆண்டகை - இராமன்; அற்றம் நோக்கி - இல்லாத சமயம் பார்த்து; மாயையால் மறைத்து வந்தாய் -நீ கற்ற மாயை வித்தையால் உன் உருவத்தை மறைத்து வந்தாய்; உஞ்சனை போதி ஆகில் - நீ உன் உயிர் பிழைத்துப் போக விரும்பினால்; விடுதி - என்னை இராமனிடம் கொண்டு போய் விட்டுவிடுவாய்; உன் குலத்துக்கெல்லாம் நஞ்சினை - உனது குலமாகிய அரக்கர்களுக்கு எல்லாம் விடமாகிய இராமனை; எதிர்ந்தபோது - எதிர்த்து நின்று போர் செய்யும்போது; நோக்குமே நினது நாட்டம் - உனது கண்கள் நேர் நின்று அவனைப் பார்க்கும் திறமை உடையன ஆகுமோ? (ஆகா).

***


பெற்றுடை வரனும் நாளும்
        பிறந்துடை உரனும் பின்னும்
மற்றுடை எவையும் தந்த
        மலரவன் முதலோர் வார்த்தை
விற்றொடை இராமன் கோத்து
        விடுதலும் விலக்குண்டு எல்லாம்
இற்றுடைந்து இறுதல் மெய்யே
        விளக்கின் முன் இருள் உண்டாமோ.

ஏராளமான வரங்களைப் பெற்றுள்ளோம் என்று இறுமாப்புக் கொள்ளாதே. அரக்கர் குலத்தில் பிறந்துளதால் மிகுந்த வலிமையுடையோம் என்று நினையாதே! பிரம தேவனிடம் நீண்ட வாழ்நாள் பெற்றுவிட்டோம் என்று கர்வம்கொள்ளாதே. இவை எல்லாம் இராமனின் அம்பு கண்ட அளவில் விலகும் என்பது திண்ணம். விளக்கு வந்தால் இருள் இருக்குமோ?


***

பெற்றுடை வரனும் நாளும் - நீ பெற்றுள்ள வரங்களும் வாழ்நாளும்; பிறந்து உடை உரனும் - (அரக்கர் குலத்திலே) பிறந்து அப்பிறப்பால் அடைந்த வலிமையும்; பின்னும் மற்று உடை எவையும் - பிறகு நீ அடைந்த எல்லாவற்றையும்; தந்த - உனக்கு அளித்த; மலரவன் முதலோர் வார்த்தை - பிரமதேவன் முதலியவர்களுடைய உறுதிமொழிகளும்; இராமன் வில் தொடை கோத்து விடுதலும் - இராமன் தனது வில்லிலே அம்பு தொடுத்து விடும் அளவிலே; எல்லாம் விலக்குண்டு - அந்தப் பாதுகாவல் யாவும் விலக்கப்பட்டு; இற்று உடைந்து இறுதல் மெய்யே - கட்டழிந்து உடைப்பட்டுப் போதல் திண்ணம்; விளக்கின் முன் இருள் உண்டாமோ? - விளக்கு வந்தால் இருள் இருக்குமா?


***

அப்பொழுது இராவணன் சொல்கிறான் : “வஞ்சனையால் உன்னைக் கவர்ந்து வந்தேன் என்று சொல்கிறாய். அவ்விதமின்றி உன் கணவனாகிய இராமனுடன் போர் செய்து அப் போரிலே அவனைக் கொன்றுவிடில் நின் உயிர் யாதாகும்? நீ உயிர் விடுவாய் அன்றோ? யான் கருதியது கைகூடாது அன்றோ? அப்படி உன்னை இழந்து விட்டால் எனது உயிரும் போய்விடும் அன்றோ? இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்த பின்னரே நான் வஞ்சனை செய்தேன். மானின் பின்னே சென்ற அந்த மானிடர் திரும்பி எங்கே வரப் போகிறார்? அதிலும் உன்னைக் கவர்ந்து சென்றவன் நான் என்று அறிந்தால் வரவே மாட்டார். அற்ப வலிமை பொருந்திய அந்த மானிடரை ஒரு கையால் பற்றி இங்கே கொண்டுவந்து உன் எதிரே நிறுத்தி எனக்கு ஏவல் செய்ய வைப்பேன். அந்த அயோத்திக்குச் சென்று பரதன் முதலியவர் தம் உயிர் குடிப்பேன். மிதிலைக்குச் சென்று உன் தந்தை முதலியோரை அழித்து இங்கு வந்து உன்னையும் கொல்வேன். நான் யார் என்பதை நீ இன்னும் அறிந்தாய் அல்லை:

இவ்வாறு சினந்து கடும் மொழிகள் கூறினான் இலங்கை வேந்தன்: “நயத்தாலோ பயத்தாலோ எப்படியோ அந்தச் சீதை என் விருப்பத்திற்கு இசையுமாறு செய்யுங்கள்” என்று அரக்கியருக்கு ஆணை பிறப்பித்தான்; அகன்றான். 

அரக்கியரும் சீதையை அச்சுறுத்தத் தொடங்கினர். அப்போது விபீடணனின் மகளாகிய திரிசடை என்பாள் அரக்கியரைத் தடுத்து விலக்கினாள்.

சிறிது நேரத்தில் அரக்கியர் எல்லாரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

***


என்னை? நாயகன் இளவலை
       எண்ணிலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு
       அறிவிலள் எனத் துறந்தானே?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ?
       என்று என்று முறையால்
பன்னி வாய் புலர்ந்து உணர்வு
       தேய்ந்து ஆருயிர் பதைப்பாள்.

அசோக வனத்திலே சிறை இருந்த சீதை புலம்புகிறாள் இராமன் என்னை மறந்தானோ? லட்சுமணனை நான் நிந்தித்துக் கூறினேனே! அது கேட்டு என் மீது கோபம் கொண்டு என்னைத் துறந்தானோ? நான் செய்த ஊழ்வினை தான் இவ்வாறு வந்து முடிந்ததோ?

இவ்வாறு எண்ணி எண்ணி, ஏங்கி ஏங்கிப் புலம்பிப் புலம்பி, நா வறண்டு வாய் உலர்ந்து, உணர்ச்சி சோர்ந்து பதைக்கிறாள்.

***

எண்ணிலா வினையேன் - எண்ணி அளவிடுதற்கு அரிய தீவினை உடைய நான்; இளவலை - லட்சுமணனை; சொன்ன வார்த்தை கேட்டு - சொன்ன கடுஞ் சொற்களைக் கேட்டு; நாயகன் - இராமன்; அறிவிலள் எனத் துறந்தானோ இவள் அறிவில்லாதவள் என்று கருதி வெறுத்து விட்டானோ; (அல்லது) முன்னை ஊழ்வினை முடித்ததோ - முற்பிறப்பில் செய்த கரும வசத்தால் இவ்வாறு நிகழ்ந்ததோ; என்னை - என்னவோ தெரியவில்லையே; என்று என்று முறையால் - ஒன்று ஒன்றன்பின் ஒன்றாக திரும்பத் திரும்பப் பலமுறை; பன்னி - சொல்லிச் சொல்லி; வாய் புலர்ந்து - நா வறண்டு; உணர்வு தேய்ந்து - அறிவு சோர்ந்து - ஆருயிர் பதைப்பாள்.

***


வன் கண் வஞ்சனை அரக்கர்
       இத்துணைப் பகல் வையார்
தின்பர்; என் இனி செய்யத் தக்கது
       என்று தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன் பொறை
       எனத் தணிந்தானோ?
என் கொல் எண்ணுவது? என்னும்
       அங்கு இராப்பகல் இல்லாள்.

கொடியவர்களான இந்த அரக்கர்கள் உயிரோடு இத்தனை நாள் என்னை வைத்திருக்க மாட்டார்கள் என்று கருதினாரோ? கொன்று தின்று விடுவார்கள் என்று எண்ணினாரோ? இனி என்ன செய்யமுடியும் என்று சும்மா இருந்து விட்டாரோ? என்று புலம்புகிறாள்.

இரவு என்றும் பகல் என்றும் அறியாமல் கவலையால்— உறக்கமின்றி ஏங்குகிறாள்.

***

வன்கண் - கொடிய தன்மையுடைய; வஞ்சனை - வஞ்சகம் மிக்க; அரக்கர் இத்துணைப் பகல் வையார் - இவ்வளவு நாள் உயிருடன் வைத்திருக்க மாட்டார்; தின்பர் - கொன்று தின்றிருப்பர்; என் இனிச் செய்யத்தக்கது - இனி செய்வது யாது? என்று தீர்ந்தானோ - என்று முடிவு செய்து தேடுதல் ஒழித்தானோ; (அன்றி) தன் குலப்பொறைதான் - தான்பிறந்த சூரிய குலத்தின் பொறுமை; தன்பொறை - தானும் வகிக்கத் தக்கதொரு குணம் ஆகும்; (என்று) தணிந்தானோ - கோபம் தணிந்தானோ? என் கொல் எண்ணுவேன்? - என்ன என்று நினைப்பேன்? என்னும் - என்று கவலைப்படுவாள்; அங்கு இராப்பகல் இல்லாள் - அந்த இலங்கையிலே இரவும் பகலும் இன்னது என்று அறியாத சீதை. அதாவது கவலையால் இரவு தூங்குதல் ஒழித்தாள்; அதனால் இரவும் பகலும் ஒன்றே ஆயின.

***


பொறை இருந்து ஆற்றி
        என் உயிரும் போற்றினேன்
அறை இரும் கழலவன்
        காணும் ஆசையால்
நிறை இரும் பல் பகல்
        நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனை அப்
        புனிதன் தீண்டுமோ?

பொறுத்திருந்தேன்; உயிர் பாதுகாத்தேன்; இராமனைக் காணும் ஆசையால், இந்த அரக்கர் நகரில் சிறை இருந்த என்னை அந்தப் புனிதன் இனித் தீண்டுவானோ?

***

அறை இருங்கழலவன் - ஒலிக்கின்ற பெரிய வீரக்கழலை அணிந்த இராமனை; காணும் ஆசையால் - மீண்டும் காணப் பெறுவேன் என்ற ஆசையினால்; இருந்து - இங்கே இருந்து; பொறை ஆற்றி - எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு; என் உயிரையும் போற்றினேன் - என் உயிரையும் போக ஒட்டாது தடுத்து பாதுகாத்தேன். (ஆயினும்) நிறை இரும் பல பகல் - நிறைந்த மிகப் பல நாளாக; நிருதர் நீள் நகர் - அரக்கரது பெரிய நகரில்; சிறை இருந்தேனையும் - சிறை இருந்த என்னை; அப் புனிதன் தீண்டுமோ - பரிசுத்தனாகிய அந்த இராமன் மீண்டும் ஏற்பாரோ?

***


என்று என்று உயிர் விம்மி
        இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல்
        விளங்கு இழையாள்
ஒன்று என் உயிர் உண்டு
        என்ன உண்டு இடர்; யான்
பொன்றும் பொழுதே
        புகழ் பூணும் எனா

இவ்வாறு கருதிக் கருதிக் கண்ணிர் வடிப்பாள்; விம்முவாள்; ஏங்குவாள்.

“என் உயிர் இருக்கும் வரை இத் துன்பம் நீங்காது. என் உயிர் நீங்கினால் தான் எனக்குப் புகழ் உண்டாகும்” என்று நினைக்கிறாள்.

***

மின் துன்னும் மருங்குல் - மின்னல் போல் இடையும்; விளங்கு இழையாள் - ஒளி விளங்கும் அணியும் உடைய சீதை; என்று என்று-என்று பலவாறாகக் கூறி; உயிர் விம்மி - பெருமூச்சு விட்டு; இருந்து - இடம் விட்டுப் பெயராமல்; அழிவாள் - வருந்துபவளாய்; என் உயிர் ஒன்று உண்டு எனின் - எனது உயிர் ஒன்று மட்டும் இந்த உடலில் இருக்குமானால்; (உயிர் இருக்கும் வரை) இடர் உண்டு - துன்பம் உண்டு. யான் பொன்றும் பொழுதே - நான் உயிர் விட்டபோதே; புகழ் பூணும் - எனக்குப் புகழ் உண்டாகும்; எனா - என்று.

***


“ஆதலால் இறத்தலே
        அறத்தின் ஆறு” எனாச்
சாதல் காப்பவரும் என்
        தவத்தில் சாம்பினார்
ஈது அலாது இடமும்
        வேறு இல்லை என்று ஒரு
போது உலாம் மாதவிப்
        பொதும்பர் எய்தினாள்.

ஆகவே உயிர் விடுவதே நல்லது. அதுவே அறமும் ஆகும். இங்கே எனக்குக் காவல் செய்யும் அரக்கியரும் தூங்குகின்றனர். நல்ல காலம். தடுப்பார் எவரும் இலர். இதுவே சமயம்.

இவ்வாறு எண்ணி அங்கே உள்ள குருக்கத்தி மரப்புதரை அடைந்தாள்.

***


ஆதலால் - ஆதலால்; இறத்தலே - சாதலே; அறத்தின் ஆறு - தருமத்தின் முறையாகும்; எனா - என்று எண்ணி; சாதல் காப்பவரும் - சாதலினின்று என்னைக் காப்பவரும் (அரக்கியரும்) என் தவத்தில் - நான் செய்த நல்வினைப் பயனாய்; சாம்பினார் - இப்போது உறங்கி கிடக்கின்றார்; ஈது அவரது - இந்த சமயம் அல்லாது; (உயிர் துறக்கத் தக்க சமயம்) வேறு இடமும் இல்லை - வேறு சமயமும் இல்லை; என்று - என்று நினைத்து; போது உலாம் - மலர்கள் அசையப் பெற்ற; ஒரு மாதவிப் பொதும்பர் - ஒரு குருக்கத்தி மரச் செறிவை; எய்தினாள் - அடைந்தாள்.


எய்தினாள் பின்னும்
        எண்ணாத எண்ணி ‘ஈங்கு
உய்திறம் இல்லை’ என்று ஒருப்பட்டு
        ஆங்கு ஒரு
கொய் தளிர்க் கொம்பிடைக்
        கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல் வையில்
        தவத்தின் பெற்றியால்.

மீண்டும் ஒரு முறை சிந்தித்தாள். “நான் செய்த முடிவே சரி” என்று தீர்மானிதாள்; கிளையில் கொடி ஒன்றை எடுத்தாள். சுருக்குப் போட்டாள், தலையை நாட்டும் சமயம்.

***


எய்தினள் - அவ்வாறு அடைந்த சீதை; பின்னும் எண்ணாத எண்ணி - மீண்டும் என்ன என்னவோ நினைத்து; இங்கு உய்திறம் இல்லை - இங்கு உய்யும் வழி இல்லை; என்று ஒருப்பட்டு - ஒரு முடிவுக்கு வந்து; ஆங்கு - அங்கே இருந்த; ஒரு கொய் தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே - தளிர் கொய்யப்பட்ட கிளையில் உள்ள கொடியை இட்டு; தலை பெய்திடும் ஏல்வையில் - தலையை மாட்டும் தருணத்தில்; தவத்தின் பெற்றியால் - முன் செய்த நல்வினைப் பயனால்.

***


கண்டனன் அநுமனும்;
        கருத்தும் எண்ணினான்;
கொண்டனன் துணுக்கம்;
        மெய் தீண்டக் கூசுவான்;


அண்டர் நாயகன் அருள் தூதன்
        யான் எனாத்
தொண்டை வாய் மயிலினைத்
        தொழுது தோன்றினான்.

அநுமன் கண்டு விட்டான். சீதை கொண்ட கருத்தையும் உணர்ந்து விட்டான். நடுக்கம் கொண்டான். ‘இராமன் அனுப்பிய தூதன் நான்’ என்று கூறிய வண்ணம் கை கூப்பிச் சீதை எதிரில் தோன்றினான்.

***

அநுமனும் கண்டனன் - சீதையின் செயலைக் கண்டான்; கருத்தும் எண்ணினான் - அவள் கொண்ட் கருத்தையும் அறிந்தான்; துணுக்கம் கொண்டனன் - அச்சம் கொண்டனன்; மெய் தீண்டக் கூசுவான் - உடலைத் தொட்டு அச் செயலினின்றும் தடுக்கக் கூசினவனாய்; அண்டர் நாயகன் அருள் தூதன் யான் எனாத் - தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இராமன் அனுப்பிய தூதன் நான் என்று கூறி; தொண்டை வாய் மயிலைத் தொழுது - கோவைப்பழம் போலும் வாய் கொண்ட மயில் போலும் சாயல் உடைய சீதையைத் தொழுது கொண்டே; தோன்றினான்.

***

“இராமன் கட்டளைப்படி அடியேன்! இங்கு வந்துளேன்; உன்னைத் தேடிக் காண்பதன் பொருட்டு உலகெங்கும் சென்றவர் கணக்கற்றோர். நான் முன் செய்த தவப்பயனால் நின் சேவடி நோக்கினேன். உன் பிரிவால் வாடும் இராமன் நீ இங்கிருப்பது அறிந்திலன் என்னைப் பற்றிய ஐயம் உனக்கு எள்ளளவும் வேண்டாம். இராமபிரான் கொடுத்தனுப்பிய அடையாளப் பொருளும், கூறிய அடையாளச் சொற்களும் என்னிடம் உள, அவற்றை நேரில் காண்பாய்.” என்று கூறினான் அநுமன். 

“இவன் குரங்கோ? அரக்கனோ? யாரோ தெரியவில்லை” என்று ஒரு கணம் ஐயம் கொண்டாள் சீதை.

“அரக்கனே ஆயினும் சரி. வேறு எவனாயினும் சரி. இங்கு வந்து இராமனுடைய பெயர் சொன்னான். என் உயிர் காத்தான். இதை விடப் பெரிய உதவி வேறு ஏதேனும் உண்டோ” என்று மனதைத் திடம் செய்து கொண்டு அநுமனிடம் பேசுகிறாள்.

“வீரனே! நீ யார்?” என்று கேட்டாள் சீதை.

உடனே அநுமன் தன்னுடைய வரலாறு கூறுகிறான். பிறகு தான் வந்த காரணமும் கூறுகிறான்.

***


எய்தினன் உரைத்தலோடும்
        எழுந்து பேருவகை ஏற
வெய்துறல் ஒடுங்கும் மேனி
        வான் உற விம்மி ஓங்க
உய்தல் வந்து உற்றதோ?
        என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்
அய்ய! சொல்! அனையன் மேனி
        எப்படித்து? அறிவி என்றாள்.

***

அந்தச் சொற்கள் கேட்டாள். “நமக்கு நல்ல காலம் வந்துவிட்டது போலும்” என்று மகிழ்ந்தாள். துயருற்றதால் வாடியிருந்த அவளது மேனி பருத்தது; கண்கள் நீர் சொரிந்தன. அதே சமயத்தில் ஓர் ஐயமும் தோன்றியது.

“இவன் உண்மையில் இராம தூதனோ அல்லது அரக்கர் தான் மாய உருக்கொண்டு நம்மை வஞ்சிக்க வந்தனரோ” என்பதுதான் அந்த ஐயம்,

“அரக்கரே ஆயினும் சரி; வேறு எவராயினும் சரி” என்று துணிந்தாள்.

“ஐயனே! அந்த இராமன் எப்படியிருப்பான் சொல்” என்று கேட்டாள்.

***


எய்தினன் - அநுமன் (வந்த நோக்கத்தை) உரைத்தலோடும் - சொன்ன அளவில்; (சீதை) பேருவகை எழுந்து ஏற - (மனத்திலே) பெருங்களிப்புத் தோன்றிப் பெருக - வெய்து உறல் ஒடுங்கும் மேனி - துன்பத் தீயால் வாடிய தன் உடம்பு; வான்உற விம்மி ஓங்க - பெருத்துப் பூரித்து உயர்ந்து; உய்தல் வந்து உற்றதோ - துன்பம் நீங்கி இயிர் பிழைக்கும் காலமும் எனக்கு வந்ததோ; என்று - என்று நினைத்து; அருவி நீர் ஒழுகு கண்ணாள் - அருவி நீர்ப் பெருக்கு போல கண்களில் இருந்து நீர் பெருக; ஐய - பெரியவனே! அனையன் மேனி - இராமனது திருமேனி; எப்படித்து? - எவ்வாறு இருக்கும்? அறிவி - சொல்வாய்; என்றாள்.


***

உச்சி முதல் உள்ளங்கால் வரை இராமனது திருமேனியை வர்ணிக்கிறான் அநுமன்.

பிறகு மாயமான் பின்னே சகோதரர் சென்ற நாள் முதல் அதுவரை நிகழ்ந்த எல்லாவற்றையும் விவரிக்கிறான்.

இராமன் கூறிய அடையாள வார்த்தைகளை எல்லாம் சொல்கிறான்.

சொல்லிய பின் இராமனின் கணையாழியைப் பிராட்டியிடம் அளிக்கிறான் அநுமன்.

***


இழந்தமணி புற்றரவு
       எதிர்ந்தது எனல் ஆனாள்
பழந்தனம் இழந்தன
       படைத்தவரை ஒத்தாள்
குழந்தையை உயிர்த்த மலடிக்கு
       உவமை கொண்டாள்
ஒழிந்த விழி பெற்ற தொரு
       உயிர்ப் பொறையும் ஒத்தாள்.

நல்ல பாம்பு ஒன்று தன்னுடைய நாக ரத்தினத்தை இழந்துவிட்டது. இழந்த அந்த ரத்தினத்தை மீண்டும் கண்டுகொண்டது. அதன் மகிழ்ச்சி எத்தகையதாயிருக்கும். அம்மாதிரி மகிழ்ந்தாள் சீதை. நீண்ட காலமாக மகப்பேறு இல்லாமல் இருந்தாள் ஒருத்தி. மலடி என்று எல்லாரும் சொன்னார்கள். திடீரென்று அவளுக்கு மகப்பேறு உண்டாயிற்று. அவள் எப்படி மகிழ்வாள்? அப்படி மகிழ்ந்தாள் சீதை. பெரும் செல்வத்தை இழந்துவிட்டான் ஒருவன். அச் செல்வம் மீண்டும் அவனுக்குக் கிடைத்துவிட்டது. கண்பார்வை இழந்துவிட்டான் ஒருவன். மீண்டும் அவனுக்கு பார்வை வந்துவிட்டது. இவர்களைப்போலவே மகிழ்ந்தாள் சீதை.

புற்று அரவு - புற்றில் வாழும் பாம்பு; இழந்த மணி - இழந்த தன் மணியாகிய நாகரத்தினத்தை; எதிர்ந்தது - நேரே கண்டு கொண்டது; எனல் ஆனாள் - என்று சொல்வதற்கு ஒப்பானாள்; இழந்தன - இழந்தனவாகிய; பழம் தனம் - தமது பழைய செல்வங்களை படைத்தவரை ஒத்தாள் - மீண்டும் பெற்றவர் அடைந்த நிலைக்கு ஒப்பானாள். மலடி - மலடியாக இருந்த ஒருத்தி; குழந்தையை உயிர்த்தற்கு - ஒரு குழந்தையைப் பெற்றதற்கு உவமை கொண்டாள் - உவமையானாள்; ஒழிந்த விழி - பார்வை அற்றுப் போன கண்கள்; பெற்றதோர் உயிர்பொறையும் ஒத்தாள் - திரும்பவும் பார்வை பெற்றது போன்ற ஓர் உடலை ஒத்தாள்.

***


வாங்கினள்; முலைக்கு வையில்
        வைத்தனள்; சிரத்தால்
தாங்கினள்; மலர்க் கண் மிசை
        ஒத்தினள்; தடந்தோள்
வீங்கினள்; மெலிந்தனள்
        குளிர்ந்தனள்; வெதுப்போடு
ஏங்கினள்; உயிர்த்தனள்
        இனி இன்னது எனலாமே.

அநுமன் கொடுத்த அந்தக் கணையாழியைத் தன் கைகளால் வாங்கினாள் சீதை. மார்பிலே வைத்து அணைத்தாள்; உச்சி மேல் வைத்துக் கொண்டாள்; கண்களிலே ஒத்திக் கொண்டாள்; இராமபிரானை நேரிலே கண்டவள் போலே மகிழ்ந்தாள். அந்த மகிழ்ச்சியிலே அவளது தோள்கள் பூரித்தன; உள்ளம் குளிர்ந்தாள். மறுகணம் பெருமூச்சு விட்டு ஏங்கினாள். உடல் மெலிந்தாள். ஏன்? இராமனை நேரில் காண முடியவில்லை அல்லவா! அவள் அடைந்த மனோநிலை இன்னது என்று விவரித்தல் முடியாது.

***

வாங்கினள் - அந்த மோதிரத்தைத் தன் கைகளிலே வாங்கிக் கொண்டாள்; முலைக் குவையில் வைத்தனள் - தனது தனங்களின் முகட்டிலே வைத்து அணைத்துக் கொண்டாள்; சிரத்தால் தாங்கினள் - தலைமேல் வைத்துக் கொண்டாள்; மலர் கண் மிசை ஒத்தினள் - தாமரை மலர் போன்ற தனது கண்களிலே ஒத்திக்கொண்டாள்; தடம் தோள் வீங்கினள் - அந்த மகிழ்ச்சியால் இராமனை நேரில் கண்டவள் போலத் தனது பெரிய தோள்கள் பூரிக்கப் பெற்றாள். குளிர்ந்தனள் - மகிழ்ச்சியால் உள்ளம் குளிரப் பெற்றாள்; மெலிந்தனள் - இராமனை அடையாததால் ஏங்கி மெலிந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் - வாட்டமுற்று ஏங்கினாள்; உயிர்த்தனள் - பெருமூச்சு விட்டாள்; இது இன்னது எனல் ஆமே - பிராட்டி அடைந்த நிலை இன்னது என்று சொல்லாகுமோ?

***


மோக்கும்; முலை வைத்து உற
        முயங்கும்; இழி நன்னீர்
நீக்கி நிறை கண் இணை
        ததும்ப நெடு நீள
நோக்கும்; நுவலக் கருதும்;
        ஒன்றும் நுவல் கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்;
        விழுங்கல் உறுகின்றாள்.

அதை முகர்வாள்; மார்பில் அணைப்பாள்: ஆனந்தக் கண்ணீர் சொரிவாள்; அதைத் துடைப்பாள். மேலும் அக் கண்ணீர் பெருகும். அதோடு அந்த மோதிரத்தையே நீண்ட நேரம் உற்று நோக்குவாள்; அதோடு பேச விரும்புவாள். பேசாது மெளனமாயிருப்பாள். ஓயாமல் விம்முவாள். அந்த விம்மலை அடக்கி விழுங்க முயல்வாள்.

***

மோக்கும் - அம் மோதிரத்தை கூர்ந்து பார்ப்பாள்; முலை வைத்து உற முயங்கும் - தனங்களின் மேலே வைத்து நன்றாகத் தழுவிக் கொள்வாள்; இழி நின்ற நல் நீர் நீக்கி - கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து பின் அதைத் துடைப்பாள்; கண் இணை ததும்ப - இரண்டு கண்களும் மீண்டும் நீர் சொரிய; நெடு நீள நோக்கும் - நீண்ட நேரம் அந்த மோதிரத்தையே உற்று நோக்குவாள், நுவலக் கருதும் - அதனோடு பேச நினைப்பாள்; ஒன்றும் நுவல் கில்லாள் - ஒன்றும் பேச முடியாமல் மெளனமாயிருப்பாள்; மேக்கு நிமிர் விம்மலள் - மேலும் மேலும் விம்முவாள்; விழுங்கல் உறுகின்றாள் - விம்மலை விழுங்க முயல்கிறாள், முடியவில்லை.

***


“பாழிய பணைத்தோள் வீர!
        துணை கிலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு
        இலா மனத்தேன் என்னின்
ஊழி ஓர் பகலாய் ஓதும்
        யாண்டு எலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும்
       இன்று என இருத்தி” என்றாள்.

“வீங்கிய தோள்களை உடைய வீரனே! என் துன்பம் தீர்த்த வள்ளலே! நீ வாழ்க!

இந்த ஈரேழு பதினான்கு உலகங்களும் அழிந்தாலும் இன்றுபோல் என்றும் சிரஞ்சீவியாய் இருப்பாயாக!”

***

பாழிய பணைத் தோள் வீர - வலிமை பொருந்திய பருத்த தோள்களை உடைய வீரனே; துணை இலேன் பரிவு தீர்த்த வள்ளலே - ஒரு துணையும் இல்லாதவளாய்; துன்புற்றிருக்கும் - எனது துன்பம் தீர்த்த வள்ளலே; வாழிய - நீ வாழ்வாயாக; யான் மறு இலா மனத்தேன் என்னின் - கற்பு நிலையில் களங்கமில்லாத மனத்தை உடையேன் ஆனால்; ஊழி ஓர் பகல் ஆய் ஓதும் யாண்டு எலாம் - பல யுகங்கள் சேர்ந்து ஒருநாள் என்று சொல்லப்படுகிற பிரமனது ஆயுளாகிய ஆண்டுகள் எல்லாவற்றிலும்; உலகம் ஏழும் ஏழும் - ஈரேழு பதினான்கு உலகங்களும்; வீவுற்ற ஞான்றும் - அழிவுற்ற போதும்; இன்று என இருத்தி - இன்று போலவே என்றும் சிரஞ்சீவியாய் இருப்பாயாக; என்றாள் - என்று சீதை அநுமனை வாழ்த்தினாள்.

***


மீண்டுரை விளம்பலுற்றாள்
        விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான் இளவலோடும்
        எவ்வழி எய்திற்று உன்னை?
ஆண்டகை அடியேன் தன்னை
        ஆர் சொல அறிந்தான் என்றாள்
தூண் திரண்டனைய தோளான்
        உற்றது சொல்லலுற்றான்.

ஒருவாறு தனது பொங்கிய உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு தேவி கேட்கிறாள் :

“உயர்ந்த குணமுடைய அநும! இரகுவீரன் இளைய பெருமாளுடன் எங்கிருக்கிறார்? அவர் உன்னைப் பெற்றது எப்படி? நான் இங்கு இருக்கும் நிலையை அவருக்கு யார் சொன்னார்.”

இவ்வாறு சீதா பிராட்டி கேட்கவே, மானின் பின்னே சென்றது முதல் அதுவரை நிகழ்ந்தவற்றையெல்லாம் சாங்கோபாங்கமாகக் கூறினான் அநுமன்.

***

மீண்டு உரை விளம்பல் உற்றாள் - மறுபடியும் சீதா தேவி அநுமனை நோக்கிச் சொல்கிறாள்; விழுமிய குணத்தோய் - சிறந்த நற்குணங்கள் பொருந்திய அநுமனே! வீரன் - இரகுவீரனாகிய இராமன்; இளவலோடும் யாண்டை யான்? - இளைய பெருமாளோடு எங்கே இருக்கிறான்? எவ்வழி எய்திற்று உன்னை - உன்னை அடைந்தது எப்படி? ஆண்டகை அடியேன் தன்னை யார் சொல அறிந்தான்? - ஆடவரில் சிறந்த இராமபிரான் என் நிலையை யார் சொல்ல அறிந்தான்? என்றாள் - என்று கேட்டாள். தூண் திரண்டனையை தோளான் - தூண் திரண்டு உள்ளன போன்ற தோள்களை உடைய அநுமனும்; உற்றது சொல்லலுற்றான் - மான் பின்னே சென்றது முதல் அதுவரை நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்லத் தொடங்கினான்.

***


இன்னும் ஈண்டு ஒரு
        திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது
        நீதியோய்
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன்
        அந்த
மன்னன் ஆணை இதனை
        மனக்கொள் நீ.

“நீதி நெறி நிற்பவனே! நான் இன்னும் ஒரு மாத காலம் வரையில் தான் இங்கே உயிரோடு இருப்பேன். இந்த ஒரு மாத காலத்துக்குள் இராமன் வந்து மீட்காவிடில் நான் உயிர் விடுவது திண்ணம். மன்னனாகிய இராமபிரான் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இதை நீ உறுதியாக உன் மனத்தில் கொள்வாயாக.”

***

நீதியோய் - நீதி நெறி நிற்பவனே! யான் இன்னும் ஒரு திங்கள் ஈண்டு இருப்பல் - இன்னும் ஒரு மாத காலமே நான் இங்கே இருப்பேன். பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் - பிறகு உயிரோடிருக்கமாட்டேன்; அந்த மன்னன் ஆணை - அந்த இராமபிரான் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்; நின்னை நோக்கிப் பகர்ந்தது இதனை - உன்னைப் பார்த்துச் சொன்ன இந்த உறுதியை; நீ மனக்கொள் - உன் மனதிலே திடமாக வைத்துக் கொள்வாயாக.

***


ஆரந்தாழ் திரு மார்பற்கு
        அமைந்த தோர்
தாரந்தான் அலள் ஏனும்
        தயா என்னும்
ஈரம் தான் அகத்தில்லை
        என்றாலும் தன்
வீரம் காத்தலை வேண்டு
        என்று விளம்புவாய் நீ.

இராமபிரானுடைய மனைவி நான். என்னை மீட்டுச் செல்ல வேண்டும் என்கிற கடமைக்காக இல்லாவிட்டாலும் என் மீது கருணை என்ற ஈரப்பசை தன் நெஞ்சிலே இல்லா விட்டாலும் தன்னுடைய வீரத்தை நிலை நாட்டுதற் பொருட்டாவது இங்கு வந்து போரிட்டு என்னை மீட்கச் சொல்லு.

***

ஆரம் தாழ் திரு மார்பற்கு - மாலையணிந்த அழகிய மார்புடைய இராமபிரானுக்கு; அமைந்தது - ஏற்ற; ஓர் தாரம் தான் அலள் ஏனும் - மனைவி என்ற முறையில் அல்லாவிடினும்; தயா எனும் ஈரம் தான் அகத்தில்லை என்றாலும் தயை என்கிற ஈரப்பசை மனத்தில் இல்லாவிடினும்; தன் வீரம் காத்தலை - தனக்கே உரிய வீரத்தன்மையைக் காத்தல்; வேண்டும் என்று - நீர் விரும்பத் தக்கது என்று; நீ விளம்புவாய் - நீ சொல்வாயாக.

***


ஏத்தும் வென்றி
        இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை சொல்லுதி
        மன் அருளால் எனைக்
காத்திருந்த தனக்கே
       கடனிடை
கோத்த வெஞ்சிறை
       வீடென்று கூறுவாய்.

இராமபிரான் இட்ட கட்டளைப்படி என்னைக் காத்து நின்றார் இளைய பெருமாள். நடுவிலே வந்து புகுந்தது இச் சிறை. இதனின்று என்னை மீட்க வேண்டிய கடமையும் உண்டு என்று அந்த இளையவரிடம் சொல்லு.

***

ஏத்தும் வென்றி இளையவற்கு - யாவரும் கொண்டாடும் வெற்றி மேம்பாடுடைய இளைய பெருமாளுக்கு; மன் அருளால் - இராமபிரானுடைய கட்டளைப்படி; எனைக் காத்திருந்த - எனக்குக் காவல் இருந்த; தனக்கே - அவர் தமக்கே; இடை கோத்த - நடுவில் வந்து புகுந்த; வெம் சிறை - வெம்மை பொருந்திய இச் சிறையிலிருந்து; வீடு - விடுதலை அளிக்க வேண்டியது; கடன் - கடமையாகும் என்று; ஈது ஒரு வார்த்தை சொல்லுதி - இந்த ஒரு செய்தியைச் சொல்லுவாயாக.

***


திங்கள் ஒன்றில் என்
        செய்தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின்
        யாணர் நீர்க்
கங்கையாற்றங்
       கரை அடியேற்குத் தன்
செங்கையால் கடன்
       செய்கென்று செப்புவாய்.

ஒரு மாத காலத்துக்குள் இராமன் இங்கு வரவில்லையானால், கங்கையாற்றின் கரையிலே எனக்கு அந்திமகிரியைச் செய்யும்படி சொல்வாய்.

***

திங்கள் ஒன்றில் - நான் முன் கூறியபடி ஒரு மாத காலத்தில்; என் செய் தவம் தீர்ந்ததால் - நான் உயிர் வைத்திருப்பதாகச் சொன்ன தவ நியமம் முடிந்துவிடும் ஆதலால்; இங்கு வந்திலேன் எனின் - அந்தக் கால அளவுக்குள் இராமபிரான் இங்கு வரவில்லையானால்; யாணர் நீர்க் கங்கை ஆற்றங்கரை - அழகிய நீர்ப் பெருக்கினை உடைய கங்கை ஆற்றின் கரையிலே; அடியேற்கும் - அடியளாகிய எனக்கும்; தம் செம் கையால் - தமது சிவந்த கைகளால்; கடன் செய்க என்று - இறந்தவர்க்குச் செய்யும் அந்திம கிரியையாகிய கடனைச் செய்யுமாறு; செப்புவாய் - சொல்வாய்.

***


சிறக்கு மாமியர் மூவர்க்கும்
        சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள்
        எனும் இன்ன சொல்

அறத்தினாயகன் பால்
        அருள் இன்மையால்
மறக்குமாயினும் நீ
        மறவேல் ஐயா!

“எனது மாமியாராகிய கௌசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவரிடமும் உமது மருமகளாகிய சீதை இலங்கையிலே இறக்கும் நிலையில் இருக்கின்றாள். உங்களுக்குத் தனது வணக்கம் தெரிவித்தாள் என்று சொல்வாய் ஐயா! தருமப்பிரபுவாகிய இராமன் என் மீது கருணை இன்மையால் சொல்ல மறப்பினும் மறவாமல் நீ சொல், ஐயா!”

***

ஐயா! - அப்பனே! சிறக்கும் - சிறப்பு மிக்க; மாமியர் மூவர்க்கும் - என் மாமியார்களான கெளசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவருக்கும்; ஆண்டு இறக்கின்றாள் சீதை - அந்த இலங்கையிலே இறக்கும் நிலையில் உள்ள சீதை; தொழுதாள் எனும் - உங்களை வணங்கினாள் என்ற; இன்ன சொல் - இந்த வார்த்தையை; அறத்தின் நாயகன் பால் - தருமத்தின் தலைவனாகிய இராமபிரானிடத்திலே; அருள் இன்மையால் - கருணை இல்லாததால்; மறக்குமாயினும் - என்னைப் பற்றி என் மாமியாரிடம் சொல்ல அவன் மறந்து போனாலும்; நீ மறவேல் - நீ மறவாதே.

***

வந்து எனைக் கரம்
        பற்றிய வைகல் வாய்
இந்த இப் பிறவிக்கு
       இரு மாதரைச்



சிந்தையாலுந் தொடேன்
        என்ற செவ்வரம்
தந்த வார்த்தை
        திருச் செவி சாற்றுவாய்.

அந்த நாளிலே மிதிலா நகரிலே வந்து என் கரம் தொட்டு மணம் முடித்தபோது, இப் பிறவியிலே மற்றொரு மாதைச் சிந்தையாலும் நினையேன் என்று அளித்த வரத்தை அவர் காதிலே மெல்லச் சொல்லுவாய்.

***

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய் - இராமபிரான் மிதிலா நகரிலே வந்து எனை மணந்து கொண்ட அந்த நாளில்; இந்த இப் பிறவிக்கு - இந்த மானிடப் பிறவியில்; இரு மாதரை - இரண்டாவது பெண்ணை; சிந்தையாலும் தொடேன் - மனத்தாலும் நினைக்க மாட்டேன்; என்ற - என்று உறுதிமொழி; செவ்வரம் தந்த வார்த்தை - சிறந்த வரம் போன்ற செய்தியை; திருச்செவி - அவர் காதிலே; சாற்றுவாய் - (மெல்ல) சொல்லுவாய்.

***

ஈண்டு நான் இருந்து
        இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து
        தன் மேனியைத்
தீண்டலானதோர்
        தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது
        என்று விளம்புவாய்
.

இந்த இலங்கையிலே இருக்கும் என்னை நீங்கள் மீட்காமல் நானும் இறந்து படுவேனாயின், மீண்டும் வந்து இந்த உலகிலே பிறந்து இராமபிரானின் திருமேனியைத் தழுவும் பாக்கியமுள்ளதொரு வரம் தருமாறு அவரை வேண்டினேன் என்று சொல்.

***

ஈண்டு - இந்த இலங்கையிலே; யான் இருந்து - நான் சிறை மீட்கப்படாமல் இருந்து: இன் உயிர் மாயினும் - இனிய உயிர் நீங்கி மாண்டு போயினும்; மீண்டு வந்து பிறந்து - மறுபடியும் உலகில் நான் பிறந்து; தான் மேனியை தீண்டலாவது - அப் பெருமானுடைய திருமேனி தழுவி மகிழும்படியான; ஓர் தீவினை தீர் வரம் - ஒரு நல்ல பாக்கியமுள்ள வரம்; தொழுது வேண்டினாள் - வணங்கிக் கேட்டுக் கொண்டாள்; என்று விளம்புவாய் - என்று நீ விண்ணப்பம் செய்வாயாக.

***

எந்தையர் முதலினர்
         கிளைஞர் யார்க்கும் என்
வந்தனை விளம்புதி
         கவியின் மன்னனைச்
சுந்தரத் தோளைனை
        தொடர்ந்து காத்துப் போய்
அந்தமில் திரு நகர்க்கு
        அரசனாக்கு என்பாய்.

எனது தந்தைக்கும் இதர சுற்றத்தினருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவிப்பாயாக, இராமபிரானைத் தொடர்ந்து பாதுகாத்து அயோத்திக்குப் போய் அங்கே அவருக்கு முடிசூட்டுமாறு சுக்கிரீவனை நான் கேட்டுக் கொண்டதாகச் சொல்.

***



எந்தையர் முதலினர் - எனது தந்தையாகிய கனகமகாராஜன் முதலாய; கிளைஞர் யார்க்கும் - என் சுற்றத்தார் எல்லாருக்கும்; என் வந்தனை விளம்புதி- எனது வணக்கத்தைத் தெரிவிப்பாயாக; கவியின் மன்னனை - வானரங்களுக்கு அரசனாகிய சுக்கிரீவனை நோக்கி; சுந்தரத் தோளனை - அழகிய தோள்களை உடையவனாகிய இராமபிரானை; தொடர்ந்து - பின் தொடர்ந்து; காத்து - பாதுகாத்து; போய் - அயோதிக்குச் சென்று; அந்தம் இல் திரு நகர்க்கு - அழிவற்றதான அழகிய அந்த அயோத்திக்கு; அரசன் ஆக்கு - முடி சூட்டி அரசனாக்குவாயாக என்று; (நான் கேட்டுக் கொண்டதாக) என்பாய் - சொல்வாயாக.

ஈண்டு ஒரு திங்கள் நீ
        இடரின் வைகவும்
வேண்டுவது அன்று; யான்
        விரைவில் வீரனைக்
காண்டலே குறைவு; பின்
        காலம் வேண்டுமோ?
ஆண்டகை இனி ஒரு
        பொழுதும் ஆற்றுமோ?

“இன்னும் ஒரு மாத காலம் இத்துன்பத்தை சகித்துக் கொண்டு உயிரோடிருப்பேன் என்று சொன்னாயே, தாயே! அந்த ஒரு மாத காலம் கூட வேண்டுவது இல்லை. நான் வேகமாகச் சென்று இராமபிரானிட்ம் சொல்ல வேண்டியது ஒன்றுதான் குறை. அடுத்த நிமிடமே புறப்பட்டு வருவார். கணமும் தாமதிக்க மாட்டார்.

***

ஈண்டு - இங்கு; ஒரு திங்கள் - இன்னும் ஒரு மாத காலம்; நீ இடரின் வைகவும் - நீ துன்பத்துடனே உயிர் வைத்துக் கொண்டிருக்கப் போவதாகச் சொன்னாயே; வேண்டுவது அன்று - அது வேண்டுவது இல்லை; யான் விரைவில் வீரனைக்காண்டவே குறைவு - நான் விரைந்து சென்று வீரனான இராமபிரானை காண்பது ஒன்று தான் குறைவு; பின் காலம் வேண்டுமோ - அதற்குப் பிறகு கால தாமதம் வேண்டுமோ? (வேண்டாம்) ஆண்டகை - இராம பிரான்; இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ - ஆடவரிலே சிறந்த இராமபிரான் இனி ஒரு கணமும் பொறுத்திருப் பாரோ? (இருக்கவே மாட்டார்)

***

ஆவி உண்டு என்னும்
        ஈதுண்டு உன் ஆருயிர்ச்
சேவகன் திருவுருத்
        தீண்டத் தீந்திலாப்
பூவிலை; தளிரிலை;
        பொரிந்து வெந்திலாக்
காவிலை; கொடியிலை
        நெடிய கானெலாம்.

இராமபிரான் உயிருடன் இருக்கிறான் என்று மட்டும் கூறலாமேயன்றி வேறு எதுவும் கூறிவிட முடியாது. உணர்ச்சியற்றவனாயிருக்கிறான். அவனது விரகத் தீயால் அவன் தீண்டிய சோலை, கொடி, தளிர், பூ எல்லாம் எரிந்து போயின; பொரிந்து போயின; வெந்து போயின.

***

ஆவி உண்டு - இராமபிரானுக்கு உயிர் உள்ளது; என்னும் ஈது உண்டு - என்று சொல்வதற்கு அடையாளம் உண்டு (அவ்வளவு தான்); நெடிய கான் எலாம் - நீண்ட காடு எங்கும்; உன் ஆருயீர் சேவகன் - உன் அரிய உயிர் போன்ற மகாவீரன் இராமனுடைய திருஉரு - அழகிய திருமேனி; தீண்ட-படுவதால்; தீந்து இலா - எரித்து போகாத; பூ இலை தளிர் இலை - பூவும் இல்லை; தளிரும் இல்லை; பொரிந்து வெந்திலா - பொரிபோலாகி வெந்து; போகாத; காஇலை சோலை இல்லை; கொடி இலை - கொடிகளும் இல்லை.

***

மத்துறு தயிரென
       வந்து சென்றிடை
தத்துறும் உயிரொடு
       புலன்கள் தள்ளுறும்
பித்த நின் பிரிவினில்
       பிறந்த வேதனை
எத்தனை உள அவை
       எண்ணும் ஈட்டவோ?

உன்னுடைய பிரிவினால் இராமன் அடைந்துள்ள துன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. புலன்கள் எல்லாம் தன் செயலற்று உணர்ச்சியற்றுப் பித்துப்பிடித்தவன் போலிருக்கிறான். மத்தினால் கடையப் பெறும் தயிர் எப்படி குழம்புமோ அப்படிக் குழம்பியிருக்கிறான்.

***

மத்து உறு தயிர் என - மத்தினால் கடையப்படும் தயிர் குழம்புவது போல; வந்து சென்று குடை தந்துறும் - முன்னும் பின்னும் சென்று இடையே தடுமாறி உழலும்; உயிர் ஒடும் - உயிரினோடும்; புலன்கள் தள்ளுறும் பித்தம் - ஐம்புலன்களும் தள்ளப்பட்டு உணர்ச்சியற்று நிற்கும் பைத்திய நிலை; எத்தனை உள - எத்தனை விதம் உள்ளனவோ; அவை - அவை எல்லாம்; நின் பிரிவினில் பிறந்த வேதனை - உன் பிரிவினால் இராமபிரானுக்கு உண்டான வேதனைகளே; எண்ணும் சட்டவோ? - அவை மனத்தினால் சிந்தித்துப் பார்க்கவும் கூடியனவோ?

***

“இந் நிலை உடையவன்
        தரிக்கும் என்று எணும்
பொய்ந்நிலை காண்டி; யான்
        புகன்ற யாவும் உன்
கைந்நிலை நெல்லியம்
        கனியிற் காட்டுகேன்
மெய்ந்நிலை உணர்ந்து நீ
        விடை தந்து ஈ” என்றான்.

“இத்தகைய மனோநிலை கொண்டுள்ள இராமன் உன்னை மீட்டுச் செல்ல ஓடி வராமல் உயிர் கொண்டு தாமதிப்பான் என்று நினைக்கிறாயே அது பொய் நிலை; உண்மை நிலை அதுவன்று. நான் சொன்னவை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டுவேன்.”

***

இந்நிலை உடையவன் - இத்தகைய மனச் சோர்வுடைய இராமபிரான்; தரிக்கும் என்று எணும் - உன்னைப் பிரிந்து உயிர் தரிப்பான் என்று நினைக்கிறாயே, (தாமதிப்பான் என்று கருதுகிறாயே. அது); பொய் நிலை - உண்மையல்லாத நிலையாகும்; காண்டி - அதை நீ நேரிலே காண்பாய்; மெய் நிலை - இத்தகைய உண்மை நிலையை நீ உணர்ந்து - நீ அறிந்து; விடை தந்து ஈ - விடை தந்து அருள்; யான் புகன்ற யாவும் - நான் கூறியன எல்லாம்; உன் கை நிலை நெல்லி அம்கனியில் - உனது உள்ளங்கை நெல்லிக் கனி போல்; காட்டுவேன் - காட்ட வல்லேன்.

***

தீர்த்தனும் கவிக்குலத்து
        இறையும் தேவி நின்
வார்த்தை கேட்டு உவப்பதன்
        முன்ன மாக்கடல்



தூர்த்தன இலங்கையைச்
        சூழ்ந்து மாக்குரங்கு
ஆர்த்தன கேட்டு உவந்து
        இருத்தி அன்னை நீ

தேவியாகிய நீ என் மூலம் சொல்லியனுப்பிய சொற்கள் கேட்டு இராமபிரானும் சுக்கிரீவனும் மகிழ்கிற அந்தக் கணநேரத்திற்கு முன்பே பெரிய பெரிய வானரங்கள் எல்லாம் இந்த இலங்கையைச் சூழ்ந்து கொண்டு பெரு முழக்கம் செய்வன கேட்பாய்;

***

அன்னை - தாயே! தீர்த்தனும் - தூயவனாகிய இராம பிராமனும்; கவிக்குலத்து இறையும் - குரங்கினங்களின் அரசனாகிய சுக்கிரீவனும்; தேவி, நின் வார்த்தை கேட்டு - தேவியான நீ சொல்லியனுப்பிய சொற்களைக் கேட்டு; உவப்பதன் முன் - மகிழ்வதன் முன்னதாக; மா கடல் தூர்த்தன - இடையேயுள்ள பெரிய கடலைத் துர்த்தவைகளாய்; இலங்கையைச் சூழ்ந்து - இந்த இலங்கைச் சுற்றி வளைத்துக் கொண்டு; மா குரங்கு - பெரிய குரங்குகள்; ஆர்த்தன கேட்டு - பெரு முழக்கம் செய்வன கேட்டு; நீ உவந்து இருத்தி - நீ மகிழ்ந்திருப்பாயாக.

***

எண்ணரும் பெரும் படை
        ஈண்டி இந் நகர்
நண்ணிய பொழுதது
        நடுவண் நங்கை நீ
வில்லுறு கலுழன் மேல்
       விளங்கும் விண்டுவின்
கண்ணனை என் நெடு
       புயத்தில் காண்டியால்.

வெகு சீக்கிரத்திலே வானரப் படைகள் இந்த இலங்கை நகரை அடையும். அப் படை நடுவே, கருடாழ்வார்மீது விளங்கும் திருமால் போலே எனது தோள்கள் மீது இராமபிரான் எழுந்தருளியிருக்கக் காண்பாய்.

***

நங்கை - பிராட்டியே! எண் அரும்பெரும் படை - கணக்கிட முடியாத பெரிய வானர சேனை; ஈண்டி - திரண்டு; இ நகர் நண்ணிய பொழுது - இந்த இலங்கை நகரை அடைந்த போது; அது நடுவண் - அந்த வானரப் படை நடுவே; விண் உறுகலுழன் மேல் விளங்கும் - வானத்திலே சஞ்சரிக்கின்ற கருடன் மீது எழுந்தருளி விளங்கும்; விண்டுவின் - மகாவிஷ்ணுவைப் போல; என் நெடு புயத்தில்- என்னுடைய நெடிய தோள்களின் மீது; கண்ணனை - கமலக் கண்ணனாகிய இராமபிரானை; காண்டி - நீ காண்பாய்.

***

அங்கதன் தோள் மிசை
        இளவல் அம் மலைப்
பொங்கு இளம் கதிர் எனப்
        பொலியப் போர்ப் படை
இங்கு வந்து இறுக்கும் நீ
        இடரின் எய்துறும்
சங்கையும் நீங்குதி
        தனிமை நீங்குவாய்.

உதயகிரியிலே எழும் இளஞாயிறு போல லட்சுமணன் அங்கதன் தோள்மீது வீற்றிருப்பான். வானரப் படைகள் இந்த இலங்கையிலே வந்து இறங்கும். உனது துன்பம் நீங்கும். இராமன் வருவானோ மாட்டானோ என்ற ஐயமும் நீங்கும். இராமனைப் பிரிந்து இருக்கின்ற உனது தனிமையும் நீங்குவாய். 

அங்கதன் தோள் மிசை - அங்கதனுடைய தோள்களின் மீது; இளவல் - இளைய பெருமானாகிய லட்சுமணன்; அம்மலை பொங்கு இளம் கதிர் எனப்பொரிய - அழகிய உதயகிரிமேல் கிளம்பித் தோன்றும் எழு ஞாயிறு ஒப்ப விளங்க; போர் படை - போரில் வல்ல வானரப் படைகள்; இங்கு வந்து இறுக்கும் - இந்த இலங்கையில் வந்து இறங்கித் தங்கும்; நீ இடரின் ஏய்துறும் சங்கையும் - நீ இனித் துன்பமடைவாய் என்ற சந்தேகத்தையும்; நீங்குதி - நீங்கி இருப்பாய்; தனிமை நீங்குவாய் - இராமபிரானை விட்டுத் தனித்திருக்கும் இந்நிலைமையும் நீங்குவாய்.

***

சூடையின் மணி கண்மணி
        ஒப்பது தொல் நாள்
ஆடையின் கண் இருந்தது
        பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர்
        நல்கினை நல்லோய்
கோடி என்று கொடுத்தனள்
        மெய் புகழ் கொண்டாள்.

"என்னைத் தேடி வந்து எனக்கு உயிரளித்த நல்லவனே! எனது கண்மணி போன்ற சூடாமணியை எனது ஆடையிலே முடிந்து வைத்திருந்தேன். அதைத் தருகிறேன், பெற்றுக் கொள். என்னைக் கண்டதற்கு அடையாளமாக இதை அவனிடம் கொடு" என்று கூறி சூடாமணியை அநுமனிடம் அளித்தாள்.

அநுமனும் வணங்கி அதை வாங்கிக்கொண்டான்.

சூடாமணி என்பது பெண்கள் தலையிலே சூட்டிக் கொள்ளும் ஓர் இரத்தின ஆபரணம், சூரியவமிசத்து அரசர் ஒருவருக்கு வருண பகவான் வெகுமதியாக அளித்தது. தசரத மகாராசனால் பேணிக் காப்பாற்றப்பட்டது. சீதாராம கல்யாணத்தின்போது மாமனார் வெகுமதியாகத் தசரதன் சீதைக்கு அளித்தது சீதையால் தன் கண்மணி போல் பாதுகாத்துத் தனது ஆடையில் முடிந்து வைக்கப்பட்டது.

***

நாடி வந்து - என்னைத் தேடி வந்து; எனது இன் உயிர் நல்கினை - எனது இனிய உயிர் கொடுத்தாய், நல்லோய் - நல்லவனே! கண்மணி ஒப்பது - கண்ணின் கருவிழி ஒத்ததும் (அரியது) தொல்நாள் - நீண்ட நாளாக எனது ஆடையில் முடித்து வைக்கப்பட்டு இருந்ததும்:(ஆகிய) சூடையின் மணி- இந்தச் சூடாமணியை பேர் அடையாளம் - பெரிய அடையாளமாகக் கோடி - கொள்வாயாக; என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள்.

***

தொழுது வாங்கினன்;
        சுற்றிய தூசினின் முற்றப்
பழுதுறாவகை பந்தனை
        செய்தனன்; பல் கால்
அழுது மும்மை வலம் கொடு
       இறைஞ்சினன்; அன்போடு
எழுது பாவையும் ஏத்தினாள்;
       ஏகினன் இப்பால்.

சீதையை வணங்கி அவள் தந்த சூடாமணியைப் பெற்றுக் கொண்டான் அநுமன். தன்னுடைய ஆடையிலே அதைப் பத்திரமாக முடிந்து கொண்டான். அந்த சீதா தேவியைப் பிரியவேண்டுமே என்று அழுதான். மும்முறை பிராட்டியை வலம் வந்தான். வணங்கினான். பிராட்டியும் அநுமனை அன்புடன் ஆசீர்வதித்தாள். சென்றான் அநுமன்.

தொழுது - சீதையை வணங்கி; வாங்கினான் - அநுமன் அந்தச் சூடாமணியை வாங்கிக் கொண்டு; முற்ற பழுது உறா வகை - அதற்கு எவ்வித பழுதும் வராதபடி; சுற்றிய தூசினின் - தான் உடுத்திருந்த ஆடையில்; பந்தனை செய்தனன் - முடிந்து பத்திரபடுத்தி வைத்துக் கொண்டான்; பல்கால் அழுது - சீதா பிராட்டியைப் பிரிந்து போக வேண்டுமே என்று பல முறையும் அழுது; மும்மை வலம் கொண்டு - மும்முறை பிரதக்ஷிதணம் செய்து; இறைஞ்சினன் - வணங்கினான்; எழுது பாவையும் சித்திரத்தில் எழுதிய பாவை போன்ற சீதா பிராட்டியும்; அன்போடு ஏத்தினள் அன்புடன் அநுமனைப் புகழ்ந்து ஆசீர்வதித்தனள்; ஏகினன்- அநுமனும் அவ்விடம் விட்டுச் சென்றான்; இப்பால் - இதன் பிறகு யாது நடந்தது என்று கூறுவாம்.

***

சூடாமணியைப் பெற்றுக்கொண்டு அப்பால் சென்ற அநுமன் சிறிது நின்றான்; யோசித்தான்.

வந்தாயிற்று. சீதா பிராட்டியைக் கண்டாயிற்று. “சென்றேன்; கண்டேன், வந்தேன்” என்று சொன்னால் அதிலே என்ன பெருமை இருக்கிறது? ஆகவே பெருமை தரும் செயல் ஏதாவது செய்யவேண்டும் என்று கருதினான்.

அசோக வனத்தை அழிக்கத் தொடங்கினான். “அசோகவனத்தை அழித்தால் அரக்கர் சண்டைக்கு வருவர். அவன் அவர்களை அழித்தால் இராவணனே போருக்கு வருவான். அப்போது அவனது தலைகள் பத்தையும் நன்றாக இடித்து நொறுக்கிவிட்டு ஊருக்குப் போனால் அதுவே ஆண்மைக்குரிய செயல் ஆகும்” என்று கருதினான் அநுமன்.

பேர் உருக் கொண்டான் அநுமன். முன் காலத்திலே பூமியைத் தன் பற்களிடையே கொண்ட வராகமூர்த்தியை ஒத்தான். காவல் மிகுந்த அசோக வனம் எனும் அந்த சோலையில் உள்ள மரங்களைத் தன் கால்களால் தாக்கித்துகைத்து அழித்தான்.

மரங்கள் சில முறிந்தன; வேறு சில பிளந்தன. மற்றும் சில கீழ் மேலாகக் கவிழ்ந்தன; துண்டு துண்டாயின. வேறோடு பிடுங்கப்பட்டு பெயர்ந்து ஓடின; வெந்தன சில; விண்ணில் பறந்தன சில; கடலில் வீழ்ந்தன சில; அரக்கர் மாளிகைகள் மேல் விழுந்து அவற்றைத் தகர்த்தன சில;

ஆனைக் கட்டும் இடங்களும், ஆடல் அரங்குகளும், அரக்கர் மதுபானம் செய்யும் இடங்களும், குதிரை லாயங்களும் நாசமாயின. எதனால்? அநுமன் பிடுங்கி வீசிய மரங்களால்.

பருவங்கள் ஆறு. கார், கூதிர், முன்பனி, பின்பனி. இளவேனில், முதுவேனில் என்பன. இந்த ஆறு பருவங்களுக்கும் உரிய தேவர் அறுவர். இந்த அறுவரும் இராவணனுடைய கட்டளைப்படி அந்த அசோகவனத்தைக் காவல் புரிந்து வந்தனர். அந்த வனத்தை மாருதி அழித்தது கண்டு அஞ்சினர் அவர். இராவணனிடம் சென்று கூறினர்.

இராவணன் சீறினான். எண்பதாயிரம் கிங்கரர்களை ஏவினான்.

“அந்த குரங்கு தப்பி ஓட முடியாதபடி வழியடைத்து அதைக் கொல்லாமல் உயிருடன் பிடித்து வருக” என்று கட்டளையிட்டான்.

வெகு வேகமாக வந்த அக் கிங்கரர்களை வெகுசீக்கிரத்தில் யமனுலகுக்கு அனுப்பினான் அநுமன். பிறகு சம்புமாலி வந்தான். அவனையும் யமனு லகுக்கு அனுப்பினான் அநுமன். சம்புமாலியைத் தொடர்ந்து பஞ்ச சேனாபதிகள் பெரும் படையுடன் வந்து அழிந்தார்கள்.

இந்திரசித்தின் தம்பியும் மண்டோதரியின் இளையகுமாரனுமாகிய அக்ஷய குமாரன் வந்து அநுமனுடன் போரிட்டான். அவனும் யமனுலகு சென்றான். கடைசியாக இந்திரசித்து வந்தான். போரிட்டான். பிரமாஸ்திரத்தால் அநுமனைக் கட்டிப் போட்டான். ஒரு முகூர்த்தக் காலம் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று ஆதியில் பிரமன் விதித்தபடியால் அநுமனும் அதற்குக் கட்டுப்பட்டான்.

கட்டுண்ட அநுமனை அரக்கர் எல்லாரும் தெருத்தெருவாக இழுத்துச் சென்று இராவணன் முன் நிறுத்தினர்.

***

நேமியோ குலிசியோ?
        நெடும் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ?
        தறுகண் பல்தலைப்
பூமி தாங்கும் ஒருவனோ?
        பொருது முற்றுவான்
நாமமும் உருவமும்
        கரந்து நண்ணினாய்.

“யார் நீ? சக்கராயுதம் ஏந்திய திருமாலோ? வச்சிராயுதம் தாங்கிய இந்திரனோ? தாமரையில் வசிக்கும் பிரமனோ? பூமியைத் தாங்கும் ஆதிசேஷனா? பெயரும் உருவமும் மறைத்து இங்கு வந்தது எதற்கு? போரிட்டு அழிந்து போவதற்கா?”

***

நேமியோ - சக்கரம் ஏந்திய திருமாலோ? குலிசியோ - வச்சிரப்படை ஏந்திய இந்திரனோ? நெடும் கணிச்சியோ - நீண்ட சூலாயுதம் ஏந்திய சிவனோ; தாமரைக் கிழவனோ - தாமரை மலரில் தோன்றிய பிரம தேவனோ; தறுகண் - அஞ்சாமையும்; பல் தலை - பல தலைகளும் கொண்டு; பூமி தாங்கும் ஒருவனோ - பூமியைத் தாங்கி நிற்கும் ஆதிசேட்னோ; பொருது - போர் செய்து; அழிவான் - அழிந்து போவதற்காக; நாமமும் - பெயரும்; உருவமும் தோற்றமும்; கரந்து - மறைத்து; நண்ணினாய் - இங்கு வந்தாய்.

***

யாரை நீ? என்னை இங்கு
         எய்து காரியம்?
ஆர் உனை விடுத்தவர்?
        அறிய ஆணையால்
சோர்விலை சொல்லுதி
        என்னச் சொல்லினான்
வேரொடும் அமரர் தம்
        புகழ் விழுங்கினான்.

“யார் நீ? இங்கு எதற்காக வந்தாய்? உன்னை ஏவியவர் யார்? அறியும்படி சொல். இது என் கட்டளை” என்றான் தேவர் புகழை வேரோடும் விழுங்கிய இராவணன்.

***

யாரை நீ - சொன்ன இவர்களில் யார் நீ; இங்கு எய்து காரணம் என்னை - இங்கு வந்ததன் காரணம் யாது? ஆரி உனை மிடுத்தவர் - உன்னை அனுப்பியவர் யார்? அறிய - நான் அறிய விரும்பி; ஆணையால் - நான் இடும் கட்டளை; சோர்வு இலை - தவறுதல் இல்லாமல்; சொல்லுதி - சொல்வாயாக; என்னைச் சொல்லினான் - என்று அநுமனை நோக்கிக் கூறினான்; வேரொடும் அமரர் தம் புகழ் விழுங்கினான் - தேவர்களது புகழை அடியோடு விழுங்கியவனான இராவணன்.

***

சொல்லிய அனைவரும்
        அல்லேன்; சொன்ன அப்
புல்லிய வலியினோர்
        ஏவல் பூண்டிலேன்



அல்லி அம் கமலமே அனைய
செங்கண் ஒர்
வில்லிதன் தூதன் யான்
இலங்கை மேயினேன்.

நீ சொன்ன எவரும் அல்லேன்; நீ சொன்ன அந்த அற்ப வலிமை படைத்தவர் எவர்க்கும் நான் ஏவல் மேற்கொள்ள வில்லை. அன்றலர்ந்த குளிர்ந்த செந்தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய ஒப்பற்ற வில் வீரன் தூதன் யான். இலங்கை வந்துளேன்.

***

சொல்லிய அனைவரும் அல்லேன் - நீ சொல்லியவர் எவரும் அல்லேன்; சொன்ன - நீ சொன்ன; அப்புல்லிய வலியினோர் - அந்த அற்ப வலிமை படைத்தவரின்; ஏவல் பூண்டிலேன் - கட்டளையை மேற்கொண்டு வந்தேன் அல்லன்; அல்லி அம் கமலமே அனைய - அக இதழ்கள் நிறைந்த அழகிய செந்தாமரை மலர் போன்ற; செங்கண் - சிவந்த கண்கள் உடைய; ஒர் வில்லி தன் - ஒப்பற்ற வில் வீரனது; தூதன் - தூதனாக; யான் - நான்; இலங்கை மேவினன் - இலங்கை வந்தேன்.

***

ஈட்டிய வலியும் மேனாள்
         இயற்றிய தவமும் யாணர்
கூட்டிய படையும் தேவர் கொடுத்த
         நல்வரமும் கொட்பும்.
தீட்டிய பிறவும் எய்தித்
         திருத்திய வாழ்வும் எல்லாம்
நீட்டிய பகழி ஒன்றால்
         முதலொடு நீக்க நின்றான்.

நீங்கள் பெற்றுள்ள வலிமையையும், முற்பிறப்பில் செய்த தவமும், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் படைகளையும், தேவர் கொடுத்த நல்ல வரங்களையும் நீங்கள் கொண்டுள்ள சிறப்புக்களையும், ஆங்காங்கே வெற்றித்தூண் நாட்டி நீங்கள் தீட்டியுள்ள மெய்க்கீர்த்தியையும் நீங்கள் பெற்ற பின் திருத்தி வைத்திருக்கிற ஆட்சியும், சுகபோக வாழ்வும் எல்லாம் நீட்டிய தனது கணை ஒன்றால் அடியோடு ஒழிக்கக் கங்கணம் கட்டி நிற்பவன்.

***

ஈட்டிய வலியும் - நீங்கள் பெற்றிருக்கின்ற உடல்வலிமையையும்; மேனாள் இயற்றிய தவமும்-முற்காலத்திலே நீங்கள் செய்திருக்கிற தவத்தையும்; யாணர் கூட்டிய படையும்- நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற ஆயுதங்களையும்; தேவர் கொடுத்த நல்வரமும் - தேவர்கள் உங்களுக்கு அளித்துள்ள நல்ல வரங்களையும்; கொட்பும் - மற்றும் நீங்கள் கொண்டுள்ள சிறப்புக்களையும்; தீட்டிய பிறவும் - நீங்கள் ஆங்காங்கு ஜெயஸ்தம்பங்கள் நாட்டி அவற்றிலே தீட்டி வைத்திருக்கிற வீரப்பிரதாபங்களையும் பிறவற்றையும்; எய்தித் திருத்திய வாழ்வும் - நீங்கள் பெற்றுப் பின் திருத்திக்கொண்ட அரசாட்சி, சுகபோக வாழ்வு முதலியவும்; எல்லாம் - இன்னும் உங்களுக்குரிய எல்லாவற்றையும்; நீட்டிய பகழி ஒன்றால் - நீண்ட தனது அம்பு ஒன்றினால்; முதலொடு நீக்க - பூண்டோடு அழிக்க; நின்றான் - உறுதி கொண்டுள்ளான் அவன்.

***

தேவரும் பிறரும் அல்லன்
        திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன்
        கயிலையங்கிரியும் அல்லன்;

மூவரும் அல்லன்; மற்றை
        முனிவரும் அல்லன்; எல்லைப்
பூவலயத்தை ஆண்ட
        புரவலன் புதல்வன் போலாம்.

அந்த வில்வீரன் தேவரும் அல்லன்; பிறரும் அல்லன்; திக்கஜங்கள் அல்லன்; அஷ்டதிக் பாலர் அல்லன்; கயிலை ஈசனும் அல்லன்; திருமூர்த்திகளும் அல்லன்; ஏனைய முனிவரும் அல்லன்; பூமியின் எல்லை வரை ஆண்ட தசரத சக்கரவர்த்தியின் புதல்வன் ஆவான்.

***

(அந்த வில்வீரன்) தேவரும் - தேவர்களும்; பிறரும் - மற்றையோரும் அல்லன்; திசைக்களிறு அல்லன் - அஷ்டதிக்கஜங்களும் அல்லன்; திக்கின் காவலர் அல்லன் - திசைக் காவலரும் அல்லன்; ஈசன் கயிலையங்கிரியும் அல்லன் - கயிலையங்கிரி ஈசனும் அல்லன்; மூவரும் அல்லன் - மும் மூர்த்திகளும் அல்லன்; மற்றை முனிவர்களும் அல்லன்; வேறு முனிவர்களும் அல்லன்; எல்லைப் பூவலயத்தை ஆண்ட - நிலவுலகின் எல்லை எது உண்டோ அதுவரை ஆண்ட; புரவலன் - தசரத சக்கரவர்த்தியின்; புதல்வன் - மைந்தன்.

***

அறம் தலை நிறுத்தி வேதம்
        அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து உலகம் பூணச்
        செந்நெறி செலுத்தித் தீயோர்
இறந்து உக நூறித் தக்கோர்
        இடர் துடைத்து ஏக ஈண்டுப்
பிறந்தனன் தன் பொற் பாதம்
        ஏத்துவார் பிறப்பு அறுப்பான்.

தருமத்தை நிலைநாட்டி, மக்கள்பால் அருள்சுரந்து வேதம் சொல்லிய நீதி முறைகளை அறிந்து உலகத்தினர் மேற்கொண்டு ஒழுகும்படி அவர்களை சன்மார்க்க நெறியிலே செலுத்தி தீயவரை அழித்து, நல்லவரைக் காத்து மீண்டும் தன் இருப்பிடம் சேர்வதன் பொருட்டு பொன்னார்ந்த தன் திருவடி துதிப்பார் தம் பிறவி அறுப்பவனாகிய திருமால் இவ்வுலகில் பிறந்துளான்.

***

தன் பொற்பாதம் ஏத்துவார் - தன் பொன்னான திருவடிகளைத் துதிப்போர்; பிறப்பு அறுப்பான் - பிறவியைப் போக்கி அருள்பவனாகியத் திருமால், அறம் தலை நிறுத்தி - தருமத்தை நிலை நாட்டி, வேதம் அருள் சுரந்து அறைந்த - வேதங்கள் கருணை கொண்டு மக்களுக்காக சொல்லிய; நீதித்திறம் தெரிந்து- நீதி முறைகளை அறிந்து. உலகம் பூண - உலகத்தினர் மேற்கொண்டு ஒழுகும்படி; செந்நெறி செலுத்தி - அவர்களைச் சீரிய வழியிலே செலுத்தி; தீயோர் - தீங்கு செய்வோரை; இறந்து உக நெறி - இறந்து ஒழிய அழித்து; தக்கோர் இடர் துடைத்து - நல்லவர் துன்பம் போக்கி; ஏக - தன் இருப்பிடம் சேர; ஈண்டுப் பிறந்தனன் - இவ்வுலகிலே பிறந்தவன்.

***

அன்னவர்க்கு அடிமை செய்வேன்
         நாமதும் அநுமன் என்பேன்
நன்னுதல் தன்னைத் தேடி
         நால் பெரும் திசையில் போந்த
மன்னரில் தென் பால் வந்த
         தானைக்கு மன்னன்; வாலி
தன் மகன்; அவன் தன் தூதன்;
         வந்தனன் தனியே என்றான்.

"அத்தகைய சக்கரவர்த்தித் திருமகனுக்கு ஏவல் செய்பவன் நான். அநுமன் என்பது என் பெயர். சீதையைத்தேடி நான்கு திக்கிலும் சென்ற வானர சேனைகளில் தெற்கு நோக்கி வந்த சேனைத் தலைவன் வாலியின் மகன்.

அவனுடைய தூதன் நான். தனியே வந்துளேன்" என்றான்.

***

அன்னவர்க்கு அடிமை செய்வேன் - அத்தன்மையனான சக்கரவர்த்தி திருமகனுக்கு அடிமைத் தொழில் செய்பவன் யான்; நாமமும் , அநுமன் என்பேன் - அநுமன் எனும் பெயர் உடையேன்; நல்நுதல் தன்னைத் தேடி - அழகிய நெற்றியுடைய சீதையைத் தேடி நால் பெரும் திசையும் போந்த - பெரிய திசை நான்கும் சென்ற; மன்னரில் - தலைவரில்; தென்பால் வந்த தானைக்கு - தென் திசை நோக்கி வந்த சேனைக்கு; மன்னன் - தலைவன்; வாலிதன் மகன் - வாலியின் மகன் அங்கதன் ஆவான்; அவன் தன் தூதன் - அவனது தூதனாய்; தனியேன் வந்தனன் - தனி ஒருவனாக வந்தேன் தான்; என்றான் - என்று சொன்னான்.


***

என்றலும் இலங்கை வேந்தன்
        எயிற்றினம் எழிலி நாப்பண்
மின் திரிந்தது என்ன நக்கு
        வாலி சேய் விடுத்த தூத!
வன் திறல் ஆய வாலி வலியன்
        கொல்? அரசின் வாழ்க்கை
நன்று கொல்? என்ன யோடும்
        நாயகன் தூதன் நக்கான்.

என்று இவ்வாறு அநுமன் சொல்லக் கேட்டான் இராவணன். கருமேகத்தின் ஊடே மின்னல் பளிச்சென்றது போல பல்லைக் காட்டிச் சிரித்தான். 

"வாலியின் மகனாகிய அங்கதன் அனுப்பிய தூதனே! வலிமை மிக்க வாலி நலமா? அவனது அரச வாழ்க்கை நன்கு நடைபெறுகிறதா?" என்று விசாரித்தான்.

அவ்விதம் விசாரிக்கவே இராமதூதன் இயம்பலுற்றான்.

***

என்றலும் - என்று அநுமன் சொன்ன உடனே; இலங்கை வேந்தன் - இலங்கை அரசனாகிய இராவணன்; எழிலி நாப்பண் - மேகத்தின் நடுவே; மின் திரிந்தது என்ன - மின்னல் பளிச்சிட்டது போல; எயிற்றினம் - பல் வரிசை தோன்ற; நக்கு - சிரித்து; வாலி சேய் விடுத்த தூத - வாலியின் மைந்தனாகிய அங்கதன் விடுத்த தூத வன்திறல் ஆய வாலி - மிக்க வலிமையுடைய வாலி; வலியன் கொல் - உடல் வலிமையுடன் நலமாயிருக்கிறானா? அரசின் வாழ்க்கை நன்று கொல் - அவனது அரசு நன்கு நடைபெறுகிறதா? என்னலோடும் - என்று கேட்ட அளவில்; நாயகன் தூதன்- இராமதூதன்; நக்கான் - இயம்பலுற்றான்.

***

திக் விஜயம் செய்து யாவரையும் போரில் வென்றான் இராவணன்; வாலியுடன் போர் செய்யக் கருதினான். வாலி இருந்த கிட்கிந்தை சென்றான்; அப்பொழுது வாலி அங்கே இல்லை; நான்கு கடலிலும் நீராடி நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்யச் சென்றிருந்தான் வாலி இருந்த இடம் தேடிச் சென்றான் இராவணன். தெற்குக் கடற்கரையிலே வாலியைக் கண்டான். அப்போது வாலி தியானத்தில் இருந்தான். வாலி அறியாமல் அவன் பின்னே சென்று கட்ட எண்ணி மெதுவாக ஓசை செய்யாமல் போனான்; அவன் தன் வால் அருகே வந்ததும் அந்த வாலினாலேயே அவனைச் சுற்றி அவனையும் தூக்கிக் கொண்டு வான வீதி வழியே மற்றைய கடல்களுக்கும் சென்று தன் கர்மானுஷ்டானங்களை முடித்துப் பின் தன் நகரடைந்து இராவணனை கீழே அவிழ்த்துவிட்டான் வாலி. அதற்குள் மிகத்துன்புற்றான் இராவணன்; அன்று முதல் வாலியின் நண்பன் ஆனான்.

***

அஞ்சலை! அரக்க! பார் விட்டு
         அந்தரம் அடைந்தான் அன்றே
வெஞ்சின வாலி மீளானி;
         வாலும் போய் விளிந்தது அன்றே
அஞ்சன மேனியான் தன்
        அடுகணை ஒன்றால் மாள்கித்
துஞ்சினன்? எங்கள் வேந்தன்
        சூரியன் தோன்றல் என்றான்.

“அஞ்சாதே! அரக்கனே! இம் மண் விட்டு விண் சென்றான் வாலி. இனித் திரும்பவும் வாரான். உன் கொட்டம் அடக்கிய அவன் வாலும் போயிற்று.”

“மை வண்ணத்தனாகிய இராமனின் கணை ஒன்றினால் விண்புக்கான் வாலி. இப்பொழுது எங்கள் அரசன் சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவன் ஆவான்” என்றான்.

***

அரக்க - அரக்கனே! அஞ்சலை - அஞ்சாதே; வெம்சின வாலி - கொடிய கோபம் உடைய வாலியானவன்; அன்றே - சில மாதங்கள் முன்பே; பார் விட்டு - இந்நிலவுலகு விட்டு; அந்தரம் அடைந்தான் - வான் உலகு புகுந்தான்; மீளான் - இனித் திரும்பி வரமாட்டான்; அன்றே - அவன் இறந்த அப்பொழுதே; வாலும் போய் விளிந்தது - அவனுடைய வாலும் அவனோடு போயிற்று; அஞ்சன மேனியான் தன் - மை போலும் கரிய நிறமுடைய இராமனின்; அடுகணை ஒன்றால் - பகையழிக்கும் அம்பு ஒன்றால்; மாள்கி- வருந்தி; துஞ்சினன் - இறந்தான்; எங்கள் வேந்தன் – இப்போது எங்கள் அரசன்; சூரியன் தோன்றல் – சூரிய குமாரனாகிய சுக்கிரீவன்; என்றான்.

***

என்னுடைய ஈட்டினால் அவ்
        வாலியை எறுழ்வாய் அம்பால்
இன்னுயிர் உண்டது? இப்போது
        யாண்டையான் இராமன் என்பான்
அன்னவன் தேவி தன்னை
        அங்கதன் நாடல் உற்ற
தன்மையை உரை செய்க என்னச்
        சமீரணன் தனயன் சொல்வான்.

அந்த வாலியை இராமன் கொன்றது ஏன்? இராமன் மனைவி சீதையை அங்கதன் தேடி வந்த காரணம் என்ன? விளக்கமாகச் சொல் என்று கேட்டான் இராவணன். அநுமன் சொல்லத் தொடங்கினான்.

***

இராமன் என்பான் – இராமன் என்று சொல்லப்படுகிறவன்; எறுழ்வாய் அம்பால் – வலிமை பொருந்திய அம்பினாலே; அவ்வாலியை இன் உயிர் உண்டது – அந்த வாலியைக் கொன்றது; என் உடை ஈட்டினால் – என்ன கருதி? இப்போது யாண்டையான் – அந்த இராமன் இப்போது எங்கே இருக்கிறான்? அன்னவன் தேவி தன்னை – அவனுடைய தேவியாகிய சீதையை; அங்கதன் நாடல் உற்ற தன்மையை – அங்கதன் தேடி வந்த நிலையை; உரை செய்க என்ன – சொல்வாயாக என; சமீரணன் தனயன் – வாயுபுத்திரனாகிய அநுமன்; சொல்வான் – பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்.

***



தேவியை நாடி வந்த செங்கணாற்கு
        எங்கள் கோமான்
ஆவி ஒன்றாக நட்டான்;
        அருந்துயர் துடைத்தி என்ன
ஓவியற்கு எழுத ஒண்ணா
        உருவத்தன் உருமையோடும்
கோவியல் செல்வம் முன்னே
        கொடுத்து வாலியையும் கொன்றான்

இராமபிரான் தனது தேவியைத் தேடி வந்தான் சுக்ரீவன் அவனுடன் ஆருயிர் நட்புக் கொண்டான். வாலியினால் தனக்கு ஏற்பட்ட துன்பம் போக்குமாறு கேட்டுக்கொண்டான் சுக்ரீவன். அவனது மனைவியாகிய உருமையையும் அரச பதவியையும் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தான் இராமன். வாலியைக் கொன்றான்.

***

தேவியை நாடி வந்த – தன் தேவியாகிய சீதையைத் தேடிக்கொண்டு வந்த; செங்கணாற்கு – சிவந்த கண்களை உடைய இராமபிரானுக்கு; எங்கள் கோமான் – எங்கள் தலைவனாகிய சுக்ரீவன்; ஆவி ஒன்று ஆக – இருவரும் ஓர் உயிர் போல; நட்டான் – நட்புக் கொண்டான்; அரும் துயர் துடைத்தி என்ன – வாலியால் தனக்கு ஏற்பட்ட பெரும் துன்பத்தை நீக்கி அருள வேண்ட; ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன் – சித்திரம் எழுதுவோர் எழுத முடியாது திகைக்கும் உருவம் கொண்ட இராமன்; உருமையோடும் – சுக்ரீவன் மனைவியாகிய உருமையோடு; கோ இயல் செல்வம் – வானர அரசுக்கு இயல்பாக அமைந்த அரசு செல்வத்தையும் முன்னே உறுதியளித்து; வாலியையும் கொன்றான் – வாலியையும் கொன்றான்.

***



தம் முனைக் கொல்வித்து அன்னான்
        கொன்றவர்க்கு அன்பு சான்ற
உம்மினத் தலைவன் ஏவ
        யாது எமக்கு உரைக்கலுற்றது.
எம்முனைத் தூது வந்தாய்?
        இகல்புரி தன்மை என்னை?
நொம் மெனக் கொல்லாம்
        நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான்.

“இன்னொருவனை அழைத்து வந்து தனக்கு மூத்தவனைக் கொல்லச் செய்து, அப்படிக் கொன்றவனுடன் நட்புக் கொண்டுள்ள உங்கள் குலத் தலைவன் எமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டது யாது? அஞ்சாமல் சொல். அவசரப்பட்டு உன்னைக் கொல்லமாட்டோம்” என்றான் அரக்கர் கோன்.

***

தம் முனைக் கொல்வித்து – தன்னுடைய முன்னவனை (பிறன் ஒருவனைக் கொண்டு) கொல்லச் செய்து; அன்னான் கொன்றவற்கு – அப்படிக் கொன்றவனுக்கு; அன்பு சான்ற – அன்பு கொண்ட; உம்மினத் தலைவன் ஏவ – உங்கள் இனத்தலைவனாகிய சுக்ரீவன் கட்டளையிட; எமக்கு உரைக்கல் உற்றது யாது? – நீ எனக்குச் சொல்ல வந்தது யாது? எம்முனைத் தூது வந்தாய் – எம் முன் ஒரு தூதனாக வந்த நீ; இகல் புரி தன்மை என்னை? – போர் கோலம் பூண்ட கருத்து யாது? நொம் எனக் கொல்லாம் – எல்லாவற்றையும் கேட்டுத் தெளியாமல் திடீரென்று உன்னைக் கொல்லமாட்டோம். நெஞ்சம் அஞ்சலை – பயப்படாதே; நுவல்தி – சொல்வாய்; என்றான்–என்று கூறினான் இலங்கை வேந்தன்.

***

வெறுப்புண்டாய ஒருத்தியை வேண்டினால்
மறுப் புண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினில்
உறுப்புண்டாய மிக ஓங்கிய நாசியை
அறுப்புண்டாவது அழகெனலாகுமோ.

தன் மீது விருப்பமில்லாத பெண்மணி ஒருத்தியை விரும்பி, அவனால் மறுக்கப்பட்ட பின்பும் உயிர் வைத்துக் கொண்டு வாழ்கிற வாழ்க்கை என்ன வாழ்க்கை? மூக்கறுபட்டபின் முகத்துக்கு அழகுண்டோ?

***

வெறுப்புண்டாய ஒருத்தியை – தன் மீது பிரியமில்லாது வெறுப்புடைய பெண்மணி ஒருத்தியை; வேண்டினால் – விரும்பினால்; மறுப்பு உண்டாய பின் – நேரே மறுக்கப்பட்ட பின்பும்; வாழ்கின்ற வாழ்வில் – வெட்கமில்லாமல் உயிரை வைத்துக்கொண்டு வாழ்கிற வாழ்வை விட; உறுப்பு உண்டாய – பார்வைக்கு அழகிய அவயமாகிய; மிக ஓங்கிய நாசியை – எடுப்பாயுள்ள மூக்கை; அறுப்பு உண்டால் – ஒருவரால் அறுக்கப்படும் ஆயின்; அது – அந்த முகம்; அழகு எனல் ஆமோ – அழகுடையது என்று சொல்ல முடியுமோ.

***

பாரை நூறுவ
        பற்பல பொற்புயம்
ஈரை நூறு தலை
        உள எனினும்



ஊரை நூறுங்
        கடுங்கணலுட் பொதி
சீரை நூறவை
        சேமம் செலுத்துமோ?

உனக்கு இப்பொழுது இருப்பன போல் இருபது தோள்களும், பத்துத் தலைகளும் அன்றி ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கைகளும் கூட இருந்தாலும் அவை உனக்கு நலன் தருமோ? தரமாட்டா. அவை எல்லாம் நெருப்புப் பொறியினை உள்ளடக்கிய கந்தைத் துணி போன்றனவேயாகும்.

***

பாரை நூறுவ பல் பல பொன் புயம் – உலகை அழிக்கவல்ல பற்பல அழகிய தோள்களும்; ஈர் ஐநூறு தலை உள எனினும் – ஆயிரம் தலைகளும் உனக்கு உள்ளன என்றாலும்; சேமம் செலுத்துமோ? அவை உனக்கு நலன் தருமோ (தரா) அவை; ஊரை நூறும் கடும் கணல் உள் பொதி – அவை ஊரையே அழிக்க வல்ல கொடிய கனலினை உள்ளே கொண்டுள்ள; நூறு சீரை – பல சீலைகளே ஆம்.

***

ஈறில் நாள் உக,
        எஞ்சல் இல்நல் திரு
நூறி, நொய்தினை ஆகி,
        நுழைதியோ?
வேறும் இன்னும் நகை
        ஆம் வினைத் தொழில்
தேறினார் பலர் காமிக்கும்
        செவ்வியோய்.



தெளிந்த அறிவுடைய பலரும் விரும்பும் சிறப்புக்கள் பொருந்தியவனே! நீ பெற்ற மூன்றரைக் கோடி வாழ்நாளும் மூவுலகாளும் இச்செல்வமும் அழிய எளியவன் போலாகி இழித்து நகைத்தற்கான செயலில் நுழைய விரும்புகிறாயா?

***

தேறினார் பலர் – தெளிந்த ஞானமுடையோர் பலரும்; காமிக்கும் – விரும்பும்; செவ்வியோய் – சிறந்த குணங்களை உடையவனே; ஈறில் நாள் உக – அந்தமில்லாத உனது மூன்றரைக் கோடி ஆயுளும் சிந்தி அழிய; எஞ்சல் இல் நல் திருநூறி – குறைவு படாத மூவுலகாளும் நல்ல செல்வங்களையும் அழித்துக் கொண்டு; நொய்தினை ஆகி – எளியவனாகி; வேறும் – இப் பெருவாழ்வினை விட்டு வேறாகிய இன்னும் நகை ஆம் – இன்னும் நகைப்புக்கு இடமாகிய; வினை தொழில் – செய்கையில்; நுழைதியோ – நுழைய விரும்புகிறாயா?

***

ஆதலால் தன்
        அரும் பெறல் செல்வமும்
ஓது பல் கிளையும்
        உயிரும் உறச்
சீதையைத் தருக என்னச்
        செப்பினான்
சோதியான் மகன்
        நிற்கு என்று சொல்லினான்.

“பெறுதற்கு அரிய இச்செல்வமும், உனது சுற்றமும், உனது உயிரும் நிலைத்திருக்க வேண்டுமானால் இராமபிரானிடம் சீதையைக் கொண்டுவந்து கொடுத்துவிடு. என்று உனக்குச் சொல்லுமாறு என் மூலம் சொல்லி அனுப்பினான் சூரியன் மகனாகிய சுக்ரீவன்” என்றான் அநுமன்.

***

ஆதலால் – ஆகையால்; தன் பெறல் அரும் செல்வமும் – பிறர் அடைதற்கு அரிய பெரிய செல்வமும்; ஓது பல் கிளையும் – பல பந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்களும்; உயிரும் – உனது உயிரும்; உற – நிலை பெற்று இருக்க; சீதையைத் தருக என்னச் – சீதையை இராமன் பால் கொண்டு தருவாய் என்று; செப்பினான் – சொன்னான்; சோதியான் மகன் – சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நிற்கு என்று சொல்லினான் – நினக்கு என் மூலம் சொல்லியனுப்பினான்; என்று அநுமன் இராவணனிடம் சொன்னான்.

***

இவ்வாறு அநுமன் சொன்ன உடனே சினங் கொண்டான் இராவணன்; அநுமனை கொன்று போடு என்று கட்டளையிட்டான்.

அப்போது விபீடணன் எழுந்து தமையனை வணங்கினான். தூது வந்தவரைக் கொல்வது அரச நீதி அன்று என்று புகன்றான்.

அதுகேட்ட இராவணன் கோபம் தணிந்தான். “விபீடணன் கூறியதும் சரியே” என்று ஏற்றுக் கொண்டான். அநுமன் வாலிலே தீ வைக்குமாறு கட்டளையிட்டான்.

வாலிலே தீ வைப்பதன் பொருட்டு அநுமனை இழுத்துச் சென்றார்கள் அரக்கர்கள்.

***

ஒக்க ஒக்க உடன் விசித்த
        உலப்பிலாத உடல் பாசம்
பக்கம் பக்கம் இரு கூறாய்
        நூறாயிரவர் பற்றினார்



புக்க படை ஓர் புடை காப்போர்
        புணரிக் கணக்கர் புறம் செல்வோம்
திக்கின் அறிவால் அயல் நின்று
        காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால்.

நூறாயிரம் அரக்கர் இரு பிரிவாகப் பிரிந்து இரு பக்கமும் நின்றனர். அநுமன் உடலிலே கட்டப்பட்ட கயிறுகளைப் பிடித்துக்கொண்டார்கள். ஆயுதம் ஏந்திய வீரர் பலர் கடல்போல அவர்களுக்குப் பாதுகாவலாகச் சென்றனர். சூழ்ந்து உடன் சென்றார் பலர். அவர்களின் தொகையோ திக்கெட்டும் பரவியது. இவர்களுக்கு அப்பால் வேடிக்கை பார்த்து நின்றவர் தொகையோ இவ்வளவு என்று சொல்ல முடியாதது.

***

புக்க படை ஓர் – அங்கு வந்து புகுந்த ஆயுதங்கள் ஏந்திய வீரர்; புணரிக் கணக்கர் – கடல் போன்றவர்; புறம் செல்வோர் – அவர்களுக்குப் புறமாய்ச் சூழ்ந்து உடன் செல்பவர்கள்; திக்கின் அளவு ஆல் – திக்குகள் உள்ள அளவும் பரந்து நின்றனர்; (ஆதலின்) அயல் நின்று – இவர்களுக்கு அப்பால் நின்று; காண்போர் – பார்க்கின்றவரின்; எல்லை தெரிவதால் – அளவைத் தெரிந்து கொள்ள முடியாததாகும். ஒக்க ஒக்க - பல ஒன்று சேரும்படி; உடன் விசித்த ஒன்றின்மேல் ஒன்றாய் இறுக்கிக் கட்டிய; உலப்பு இலாத – அழியாத; உடல் பாசம் – அனுமன் உடலில் கட்டப்பட்ட கயிறுகளை; பக்கம் பக்கம் – இரு பக்கங்களிலும்; இரு கூறாய் – இரண்டு பிரிவுகளாக; நூறு ஆயிரவர் பற்றினார் – நூறாயிரம் அரக்கர்கள் பிடித்துக் கொண்டார்கள்; புடை காப்போர் – பக்கத்திலிருந்து காவல் புரிபவர்களாய்.

***



அநுமனின் வாலிலே துணியைச் சுற்றினார்கள் அரக்கர்கள். தீ வைத்தார்கள். “இதுவும் நன்மைக்கே” என்று எண்ணினான் அநுமன். மாட மாளிகைகள் மீது தாவினான். இலங்கையைத் தீக்கிரையாக்கினான். இலங்கை தீப்பற்றி எரிந்தது.

***

வில்லும் வேலும் வெங்குந்தமும்
        முதலிய விறகாய்
எல்லுடைச் சுடர் எனப் புகல்
        எஃகெலாம் உருகித்
தொல்லை நன்னிலை தொடர்ந்த
        பேருணர்வினார் தொழில் போல்
சில்லி உண்டையில் திரண்டன
        படைக்கலத் திரள்கள்.

வில், வேல், எரி ஈட்டி முதலிய ஆயுதங்கள் எல்லாம் தீயிலே விறகுகளாய் எரிந்தன. அவற்றின் எஃகு பாகங்கள் உருகித் தம் பழைய நிலையாகிய உருண்டை வடிவம் பெற்றன. அது எப்படியிருந்தது? பெரிய ஆத்ம ஞானிகள் தங்கள் கர்மவசத்தினால் பல்வேறு பிறவிகளில் உழன்று பின் தம் பண்டை உயரிய நிலை அடைவதுபோல் இருந்தது.

***

வில்லும் வேலும் – ஆயுதசாலையிலே இருந்த விற்களும் வேல்களும்; குந்தமும் – கொடிய எரியீட்டிகளும்; முதலிய – முதலிய படைக்கலங்கள் எல்லாம்; விறகாய் – விறகுகளாய் அமைய; எல் உடை சுடர் எனப் புகல் – ஒளியையுடைய சூரியன் என்று சொல்லும்படியாக; எஃகு எலாம் உருகி – எஃகினால் அமைந்த அவற்றின் பகுதிகள் யாவும் உருகி; படைக்கல திரள்கள் – ஆயுதத் தொகுதிகள்; தொல்லை நல் நிலை தொடர்ந்த – (பல்வேறு பிறவிகளில் உழன்றபின்) தமது பழைய உயர் நிலையை நாடிச் சென்ற; பேர் உணர்வினர் தொழில்போல் – பெரிய ஆத்மஞானிகளின் செயலே போல; சில்லி உண்டையில் (அவற்றின் பழைய நிலையாகிய) சிறு உண்டையாக; திரண்டன – திரண்டு கிடந்தன.

***

செய்துடர்க்கன வல்லியும்
        புரசையும் சிந்தி
நொய் தினிட்டவன் தறி பறித்து,
        உடல் எரி நுழைய
மொய் தடச் செவி நிறுத்தி
        வான் முதுகினின் முறுக்கிக்
கையெடுத்து அழைத்தோடின
        ஓடை வெங்களிறு.

யானைகள் தீயின் தகிப்புத் தாங்க முடியாமல் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு, கட்டுத் தறிகளைப் பிடுங்கிக் கொண்டுவாலை, முறுக்கி, துதிக்கை தூக்கிக் கதறி ஓடின.

***

ஓடை வெம் களிறு – நெற்றி பட்டம் அணிந்த கொடிய யானைகள்; உடல் எரி நுழைய – தம் உடலிலே தீப்பிடித்து எரிய; துடர் செய் கனவல்லியும் – சங்கிலியாகச் செய்யப்பட கனமான பூட்டு விலங்கையும்; புரசையும் – கழுத்திலுள்ள கயிற்றையும்; சிந்தி – சிதறவிட்டு; நொய்தின் இட்டவல் தறி – தம்மைக் கட்டியிருந்த வலிய கம்பங்களை; பறித்து – எளிதில் பறித்து எறிந்து; மொய் தடசெவி நிறுத்தி – வலிய அகன்ற தம் காதுகளை மேலே தூக்கி நிறுத்தி; வால் முதுகினில் முறுக்கி – தம் வால்களை முதுகுப்புறமாக முறுக்கி; கை எடுத்து அழைத்து – தம் துதிக்கைகளை மேலே தூக்கிக் கொண்டு வாய்விட்டுக் கதறின; ஓடின.

***

மருங்கின் மேல் ஒரு மகவு
        கொண்டு ஒரு தனி மகவை
அருங்கையால் பற்றி மற்றொரு
        மகவு நின்று அரற்ற
நெருங்கி நீள் நெடும் எரிகுழல்
        சுறுக் கொள நீங்கிக்
கருங்கடல் தலை வீழ்ந்தனர்
        அரக்கியர் கதறி.

இடுப்பிலே ஒரு குழந்தை; கையிலே பிடித்த வண்ணம் இன்னொரு குழந்தை. மூன்றாவது குழந்தை பின்னே அழுது கொண்டே வருகிறது. அவர் தம் அடர்ந்த கூந்தல் தீப்பிடித்துச் சுறுசுறு என்று கருகியது. தீயின் வெப்பம் தாங்கமாட்டாது அரக்கப் பெண்கள் கடலிலே போய் விழுந்தார்கள்.

***

மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு – இடுப்பிலே ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை – மற்றொரு குழந்தையை; அரும் கையால் பற்றி – தன் அரிய கையினால் பிடித்துக் கொண்டு; மற்று ஒரு மகவு நின்று அரற்ற – பின்னே நின்று வேறு ஒரு குழந்தை அழ; நெருங்கி நீள் நெடும் எரி குழல் சுறு கொள – அடர்ந்து நீண்ட தம் எரி போன்ற கூந்தல் அந்தத் தீயிலே சுறுசுறு என்று தீய்ந்துபோக; அரக்கியர்– அரக்கப் பெண்கள்; நீங்கி - தம் இடம் விட்டுச் சென்று; கதறி – வாய்விட்டு அழுது கொண்டு; கரும் கடல் தலை வீழ்ந்தனர் – கரிய கடலிலே போய் விழுந்தார்கள்.

***

இவ்வாறு இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அநுமனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. “சீதாபிராட்டிக்கு என்ன நேர்ந்ததோ” என்று எண்ணினான். சீதையிருந்த அசோக வனம் நண்ணினான். சீதை எவ்விதத் துன்பமும் இல்லாதிருப்பது கண்டான். வணங்கினான். பிறகு அங்கிருந்து மகேந்திர மலைக்குத் தாவினான்.

அநுமனின் வரவை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அங்கதன் முதலானோர் அநுமனைக் கண்டு மகிழ்ந்தனர். கூடினர்; குதித்தனர். சீதையை அநுமன் கண்டு வந்த செய்தி அறிந்தனர். பின் எல்லாரும் கிட்கிந்தை நோக்கிப் புறப்பட்டனர்.

அநுமன் முன்னே விரைந்து சென்றான். இராமனைக் கண்டான். தெற்கு நோக்கித் தரையில் வீழ்ந்து வணங்கி நின்றான்.

குறிப்பினால் செய்தி அறியும் இராமன் உணர்ந்து கொண்டான், பின்னே அநுமன் சொல்கிறான்.

***

“கண்டனன் கற்பினுக்கு
        அணியைக் கண்களால்
தெண் திரை அலைகடல்
        இலங்கைத் தொல் நகர்
அண்டர் நாயக இனித்
        துறத்தி ஐயமும்
பண்டுள துயரும்” என்று
        அநுமன் பன்னுவான்.

“தேவர்கள் தலைவனே! இலங்கைத் தீவிலே கற்புக்கு அணியாக விளங்கும் சீதையைக் கண்டேன். இனித் தங்களுக்கு எவ்வித ஐயமும் வேண்டாம்” என்றான் அநுமன்.

***

அண்டர் நாயக – தேவர்கள் தலைவனே! தெள் திரை அலைகடல் – தெளிவான அலைகளை அலைக்கின்ற; இலங்கைத் தொல் நகர் – இலங்கையென்னும் பழம் நகரிலே; கற்பினுக்கு அணியை – கற்புக்கு அணியாய் விளங்கும் சீதையை; கண்களால் – எனது கண்களாலே; கண்டனன் – பார்த்தேன்; இனி – இனிமேல்; ஐயமும் – சீதை உயிருடன் இருக்கிறாளோ இல்லையோ, எங்கே இருக்கிறாளோ எனும் ஐயப்பாடும்; துயரமும் – துன்பமும்; துறத்தி – நீங்குவாயாக; என்று – என்று சொல்லி; அநுமன் பன்னுவான் – அநுமன் மேலும் சொன்னான்.

***

வில் பெருந் தடந்தோள் வீர!
        வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நல் பெரும் தவத்தள் ஆய
        நங்கையைக் கண்டேன் அல்லன்.



இல் பிறப்பு என்பது ஒன்றும்
        இரும் பொறை என்பது ஒன்றும்
கற்பு எனும் பெயரது ஒன்றும்
        களி நடம் புரியக் கண்டேன்.

வில் ஏந்திய வீரனே! நீர் சூழ்ந்த அந்த இலங்கைத் தீவிலே நல்ல கற்பு ஒழுக்கமாகிய தவம் செய்யும் நங்கையைக் கண்டேன் அல்லன். உயர்குடிக் குணமும், பொறுமை எனும் குணமும், கற்பு எனும் குணமும் ஒருங்கு கூடிக் களிநடம் புரியக் கண்டேன்.

***

வில் பெரும் தடம் தோள் வீர – வில் ஏந்திய நீண்ட பெரும் கையுடைய வீரனே; வெற்பு – திரிகூட மலையின் மீதுள்ள; வீங்கு நீர் இலங்கையில் – மிக்க நீரினால் சூழப்பட்ட இலங்கையில்; நல் பெரும் தவத்தள் ஆய – நல்ல பெரிய கற்பு ஒழுக்கமான தவத்தை செய்கிற; நங்கையை – சீதையை; கண்டேன் அல்லன் – கண்டேன் அல்லேன்; இல்பிறப்பு என்பது ஒன்றும் – உயர்குடிப் பிறத்தலால் மேவும் பெருங் குணமும்; இரும்பொறை என்பது ஒன்றும் – சிறந்த பொறுமை எனும் குணமும்; கற்பு எனும் பெயரது ஒன்றும் – கற்பு எனும் பெயர் கொண்ட ஒன்றும்;(ஒருங்கு கூடி) களிநடம் புரிய – களிப்போடு நடம் புரியக்; கண்டேன் – கண்டேன்.

***

இவ்வாறு சொல்லிவிட்டுப் பிராட்டி அளித்த சூடாமணியை இராமபிரானிடம் கொடுத்தான் அநுமன்.

சூடாமணியைக் கண்ட இராமன் மெய்ம்மறந்து உணர்ச்சி வசப்பட்டான். உரோமங்கள் சிலிர்த்தன. கண்கள் தாரை தாரையாக நீர் சொரிந்தன. மார்பும் தோள்களும் துடித்தன. அழகிய வாய் மடிப்புண்டது. மூச்சு உள்ளே போவதும் வெளியே வருவதுமாக உடல் பூரித்தது. அப்போது சுக்கிரீவன் இராமனைப் பார்த்துச் சொல்கிறான்.

“ஐயனே! சீதாப்பிராட்டி இருக்கும் இடம் அறிந்து கொண்டோம். இனியும் தாமதம் ஏன்?” என்று தூண்டினான்.

உடனே இராமன் எழுந்து நின்றான். “எழுக வானரப்படை” என்றான்.

எழுபது வெள்ளம் வானர சேனைகள் எழுந்தன.

அநுமன் வழிகாட்டி முன்னே சென்றான்.

பன்னிரண்டு நாட்கள் வழி நடந்து சென்று தென்திசைக் கடல் கண்டார்கள்.