கம்பராமாயணம்/அயோத்தியா காண்டம்/திருவடி சூட்டு படலம்

தன்னை வணங்கிய பரதனுக்கு பரத்துவாச முனிவர் ஆசி கூறி வினாவுதல்

தொகு

வந்த மா தவத்தோனை, அம் மைந்தனும்

தந்தை ஆம் எனத் தாழ்ந்து, வணங்கினான்;

இந்து மோலி அன்னானும் இரங்கினான்,

அந்தம் இல் நலத்து ஆசிகள் கூறினான். 1


'எடுத்த மா முடி சூடி, நின்பால் இயைந்து

அடுத்த பேர் அரசு ஆண்டிலை; ஐய! நீ

முடித்த வார் சடைக் கற்றையை, மூசு தூசு

உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது?' என்றான். 2


பரதன் பதிலால் பரத்துவாசன் மகிழ்தல்

தொகு

சினக் கொடுந் திறல் சீற்ற வெந் தீயினான்,

மனக் கடுப்பினன், மா தவத்து ஓங்கலை,

'"எனக்கு அடுத்தது இயம்பிலை நீ" என்றான்;

'உனக்கு அடுப்பது அன்றால், உரவோய்!' என்றான். 3


மறையின் கேள்வற்கு மன் இளந் தோன்றல், 'பின்,

முறையின் நீங்கி, முது நிலம் கொள்கிலேன்;

இறைவன் கொள்கிலன் ஆம் எனின், யாண்டு எலாம்

உறைவென் கானத்து ஒருங்கு உடனே' என்றான். 4


உரைத்த வாசகம் கேட்டலும், உள் எழுந்து

இரைத்த காதல் இருந் தவத்தோர்க்கு எலாம்,

குரைத்த மேனியடு உள்ளம் குளிர்ந்ததால்-

அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே. 5


பரதன் உடன்வந்தோர்க்கும் சேனைக்கும் பரத்துவாசன் விருந்து அளித்தல்

தொகு

ஆய காதலோடு ஐயனைக் கொண்டு, தன்

தூய சாலை உறைவிடம் துன்னினான்;

'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து' எனா,

தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான். 6


துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான்

பறந்து வந்து படிந்தது; பல் சனம்,

பிறந்து வேறு ஓர் உலகு பெற்றாரென,

மறந்து வைகினர், முன்னைத் தம் வாழ்வு எலாம். 7


நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என,

அந்தரத்தின் அரம்பையர், அன்பினர்,

வந்து உவந்து எதிர் ஏத்தினர்; மைந்தரை,

இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார். 8


நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை

ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்;

தான மாமணிக் கற்பகம் தாங்கிய

ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார். 9


கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார்,

செம்பொனின் கல ராசி திருத்தினார்;

அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும்,

உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார். 10


அஞ்சு அடுத்த அமளி, அலத்தகப்

பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவ

நஞ்சு அடுத்த நயனியர், நவ்வியின்

துஞ்ச, அத்தனை மைந்தரும் துஞ்சினார். 11


ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என,

கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார்-

வேந்தர் ஆதி, சிவிகையின் வீங்கு தோள்

மாந்தர்காறும், வரிசை வழாமலே. 12


மாதர் யாவரும், வானவர் தேவியர்

கோது இல் செல்வத்து வைகினர்-கொவ்வை வாய்த்

தீது இல் தெய்வ மடந்தையர், சேடியர்,

தாதிமார் எனத் தம் பணி கேட்பவே. 13


நந்து அம் நந்தவனங்களில், நாள் மலர்க்

கந்தம் உந்திய கற்பகக் காவினின்று,

அந்தர் வந்தென, அந்தி தன் கை தர,

மந்த மந்த நடந்தது வாடையே. 14


மான்று, அளிக் குலம் மா மதம் வந்து உண,-

தேன் தளிர்த்த கவளமும், செங் கதிர்

கான்ற நெல் தழைக் கற்றையும், கற்பகம்

ஈன்று அளிக்க, நுகர்ந்தன-யானையே. 15


நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்;

கர கதக் கரி கால் நிமிர்ந்து உண்டன;

மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல்

குரகதத்தின் குழாங்களும் கொண்டவே. 16


பரதன் காய் கிழங்கு போன்றவை உண்டு, புழுதியில் தங்குதல்

தொகு

இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்

துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்,

அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல்

பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான். 17


சூரியன் தோன்றுதல்

தொகு

நீல வல் இருள் நீங்கலும், நீங்குறும்

மூலம் இல் கனவின் திரு முற்றுற,

ஏலும் நல் வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்

காலம் என்னக் கதிரவன் தோன்றினான். 18


பரதனின் படைகள் தம் நிலையை அடைதல்

தொகு

ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என

பாறி வீந்தது செல்வம்; பரிந்திலர்,

தேறி முந்தைத் தம் சிந்தையர் ஆயினார்,

மாறி வந்து பிறந்தன்ன மாட்சியார். 19


பரதன் சேனையுடன் பாலை நிலத்தை கடத்தல்

தொகு

காலை என்று எழுந்தது கண்டு, வானவர்,

'வேலை அன்று; அனிகமே' என்று விம்முற,

சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ,

பாலை சென்று அடைந்தது - பரதன் சேனையே. 20


எழுந்தது துகள்; அதின், எரியும் வெய்யவன்

அழுந்தினன்; அவிப்ப அரும் வெம்மை ஆறினான்;

பொழிந்தன கரி மதம், பொடி வெங் கானகம்

இழிந்தன, வழி நடந்து ஏற ஒணாமையே. 21


வடியுடை அயிற் படை மன்னர் வெண்குடை,

செடியுடை நெடு நிழல் செய்ய, தீப் பொதி

படியுடைப் பரல் உடைப் பாலை, மேல் உயர்

கொடியுடைப் பந்தரின், குளிர்ந்தது எங்குமே. 22


'பெருகிய செல்வம் நீ பிடி' என்றாள்வயின்

திருகிய சீற்றத்தால் செம்மையான், நிறம்

கருகிய அண்ணலைக் கண்டு, காதலின்

உருகிய தளிர்த்தன-உலவை ஈட்டமே. 23


பரதன் படைகள் சித்திரகூடத்தை அடைதல்

தொகு

வன் நெறு பாலையை மருதம் ஆம் எனச்

சென்றது; சித்திரகூடம் சேர்ந்ததால்-

ஒன்று உரைத்து, 'உயிரினும் ஒழுக்கம் நன்று' எனப்

பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே. 24


தூளியின் படலையும், துரகம், தேரொடு,

மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும்,

ஆள் இருள் குழுவினர் ஆரவாரமும்,

'கோள் இரும் படை இது' என்று, உணரக் கூறவே. 25


பரதன் சேனையின் எழுச்சி கண்ட இலக்குவனின் சீற்றம்

தொகு

எழுந்தனன், இளையவன்; ஏறினான், நிலம்

கொழுந்து உயர்ந்தனையது ஓர் நெடிய குன்றின் மேல்;

செழுந் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்

கழுந்துடை வரி சிலைக் கடலை நோக்கினான். 26


'பரதன், இப் படைகொடு, பார்கொண்டவன், மறம்

கருதி, உள் கிடந்தது ஓர் கறுவு காதலால்,

விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான்; இது

சரதம்; மற்று இலது' எனத் தழங்கு சீற்றத்தான். 27


இராமனை அடைந்து இலக்குவன் சீற்றத்துடன் உரைத்தல்

தொகு

குதித்தனன்; பாரிடை; குவடு நீறு எழ

மிதித்தனன்; இராமனை விரைவின் எய்தினான்;

'மதித்திலன் பரதன், நின்மேல் வந்தான், மதில்

பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான்' என்றான். 28


போர்க் கோலம் பூண்டு இலக்குவன் வீர உரை

தொகு

கட்டினன் சுரிகையும் கழலும்; பல் கணைப்

புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து

இட்டனன்; எடுத்தனன் வரி வில்; ஏந்தலைத்

தொட்டு, அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான்: 29


'இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள்

பருமையும், அன்னவன் படைத்த சேனையின்

பெருமையும், நின் ஒரு பின்பு வந்த என்

ஒருமையும், கண்டு, இனி உவத்தி, உள்ளம் நீ. 30


'படர் எலாம் படப் படும் பரும யானையின்

திடர் எலாம் உருட்டின, தேரும் ஈர்த்தன,

குடர் எலாம் திரைத்தன, குருதி ஆறுகள்

கடர் எலாம் மடுப்பன, பலவும் காண்டியால். 31


'கருவியும், கைகளும், கவச மார்பமும்,

உருவின; உயிரினோடு உதிரம் தோய்வு இல

திரிவன-சுடர்க் கணை-திசைக் கை யானைகள்

வெருவரச் செய்வன; காண்டி, வீர! நீ. 32


'கோடகத் தேர், படு குதிரை தாவிய,

ஆடகத் தட்டிடை, அலகை அற்று உகு

கேடகத் தடக் கைகள் கவ்வி, கீதத்தின்

நாடகம் நடிப்பன-காண்டி; நாத! நீ'. 33


'பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்

எண் முதல் அறுத்து, நான் இமைப்பின் நீக்கலால்,

விண் முதுகு உளுக்கவும், வேலை ஆடையின்

மண் முதுகு ஆற்றவும் காண்டி-வள்ளல்! நீ. 34


'நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்

சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்,

கவந்தமும், "உலகம் நின் கையது ஆயது" என்று

உவந்தன குனிப்பன காண்டி, உம்பர்போல். 35


'சூழி வெங் கட கரி, துரக ராசிகள்,

பாழி வன் புயத்து இகல் வயவர், பட்டு அற,

வீழி வெங் குருதியால் அலைந்த வேலைகள்

ஏழும் ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டியால். 36


'ஆள் அற; அலங்கு தேர் அழிய; ஆடவர்

வாள் அற; வரி சிலை துணிய; மாக் கரி

தாள் அற, தலை அற; புரவி தாளடும்

தோள் அற-வடிக் கணை தொடுப்ப-காண்டியால். 37


'தழைத்த வான் சிறையன, தசையும் கவ்வின,

அழைத்த வான் பறவைகள், அலங்கு பொன் வடிம்பு

இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப்

புழைத்த வான் பெரு வழி போக-காண்டியால். 38


'ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த

பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்

இரு நிலம் ஆள்கை விட்டு, இன்று, என் ஏவலால்

அரு நரகு ஆள்வது காண்டி-ஆழியாய்! 39


'"வையகம் துறந்து வந்து அடவி வைகுதல்

எய்தியது உனக்கு" என, நின்னை ஈன்றவள்

நைதல் கண்டு உவந்தவள், நவையின் ஓங்கிய

கைகயன் மகள், விழுந்து அரற்றக் காண்டியால். 40


'அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்!

விரைஞ்சு ஒரு நொடியில், இவ் அனிக வேலையை

உரம் சுடு வடிக் கணை ஒன்றில் வென்று, முப்

புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான்' என்றான். 41


இலக்குவனுக்கு பரதனைப் பற்றி இராமன் தெளிவுறுத்தல்

தொகு

'இலக்குவ! உலகம் ஓர் ஏழும், ஏழும், நீ,

"கலக்குவென்" என்பது கருதினால் அது,

விலக்குவது அரிது; அது விளம்பல் வேண்டுமோ?-

புலக்கு உரித்து ஒரு பொருள், புகலக் கேட்டியால்: 42


'நம் குலத்து உதித்தவர், நவையின் நீங்கினர்

எங்கு உலப்புறுவர்கள்? எண்ணின், யாவரே

தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்?-

பொங்கு உலத் திரளடும் பொருத தோளினாய்! 43


'எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன,

பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே;

அனைத் திறம் அல்லன அல்ல; அன்னது

நினைத்திலை, என் வயின் நேய நெஞ்சினால். 44


'"பெருமகன் என்வயின் பிறந்த காதலின்

வரும் என நினைகையும், மண்ணை என்வயின்

தரும் என நினைகையும்" தவிர, "தானையால்

பொரும்" என நினைகையும் புலமைப்பாலதோ? 45


'பொன்னொடும், பொரு கழல் பரதன் போந்தனன்,

நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே,

என்னொடும் பொரும் என இயம்பற்பாலதோ?-

மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய்! 46


'சேண் உயர் தருமத்தின் தேவை, செம்மையின்

ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ?

பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு, எனைக்

காணிய; நீ இது பின்னும் காண்டியால்'. 47


சேனையைத் தவிர்த்து சத்துருக்கனனுடன் பரதன் இராமனை நெருங்குதல்

தொகு

என்றனன், இளவலை நோக்கி, ஏந்தலும்

நின்றனன்; பரதனும், நிமிர்ந்த சேனையை,

'பின் தருக' என்று, தன் பிரிவு இல் காதலின்,

தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான். 48


பரதன் நிலையைக் கண்ட இராமன், இலக்குவனனிடம் கூறுதல்

தொகு

தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்

அழுது அழி கண்ணினன்; 'அவலம் ஈது' என

எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை

முழுது உணர் சிந்தையான், முடிய நோக்கினான். 49


கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான்,

'ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய! நீ,

தேர்ப் பெருந் தானையால் பரதன் சீறிய

போர்ப் பெருங் கோலத்தைப் பொருந்த நோக்கு' எனா. 50


இலக்குவன் நெஞ்சழிந்து நிற்றல்

தொகு

எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் -

மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது

சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர,

வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே. 51


பரதன் இராமனின் திருவடி வணங்குதல்

தொகு

கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய

நாதனைப் பிரிந்தனன், நலத்தின் நீங்கினாள்,

வேதனைத் திருமகள் மெலிகின்றாள், விடு

தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். 52


'அறம்தனை நினைந்திலை; அருளை நீத்தனை;

துறந்தனை முறைமையை' என்னும் சொல்லினான்,

மறந்தனன், மலர் அடி வந்து வீழ்ந்தனன் -

இறந்தனன் தாதையை எதிர்கண்டென்னரே. 53


இராமன் உள்ளம் கலங்கி பரதனை தழுவுதல்

தொகு

'உண்டுகொல் உயிர்?' என ஒடுங்கினான் உருக்

கண்டனன்; நின்றனன் - கண்ணன் கண் எனும்

புண்டரீகம் பொழி புனல், அவன் சடா

மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே. 54


அயாவுயிர்த்து, அழு கணீர் அருவி மார்பிடை,

உயாவுற, திரு உளம் உருக, புல்லினான் -

நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் -

தயா முதல் அறத்தினைத் தழீஇயது என்னவே. 55


தந்தை இறந்தது கேட்டு இராமன் கலங்குதல்

தொகு

புல்லினன் நின்று, அவன் புனைந்த வேடத்தைப்

பல் முறை நோக்கினான்; பலவும் உன்னினான்;

'அல்லலின் அழுங்கினை; ஐய! ஆளுடை

மல் உயர் தோளினான் வலியனோ?' என்றான். 56


அரியவன் உரைசெய, பரதன், 'ஐய! நின்

பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக்

கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு

உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்' என்றான். 57


'விண்ணிடை அடைந்தனன்' என்ற வெய்ய சொல்,

புண்ணிடை அயில் எனச் செவி புகாமுனம்,

கண்ணொடு மனம், சுழல் கறங்கு போல ஆய்,

மண்ணிடை விழுந்தனன் - வானின் உம்பரான். 58


இரு நிலம் சேர்ந்தனன்; இறை உயிர்த்திலன்;

'உரும் இனை அரவு' என, உணர்வு நீங்கினான்;

அருமையின் உயிர் வர, அயாவுயிர்த்து, அகம்

பொருமினன்; பல் முறைப் புலம்பினான் அரோ: 59


தந்தையை நினைத்து இராமன் புலம்புதல்

தொகு

'நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்

தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!

எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!

அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?' என்றான். 60


'சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி,

நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி,

எற் பெற்று, நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ?-

கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய்! 61


'மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க,

பொன் உயிர்க்கு தாரோய்!- பொறை உயிர்த்த ஆறு இதுவோ?

உன் உயிர்க்குக் கூற்றாய் உலகு ஆள உற்றேனோ?-

மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்! 62


'எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை, இந்தியர்கள்

வெம் பவத்தின் வீய, தவம் இழைத்தவாறு ஈதோ?-

சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளி, சதமகற்கு, அன்று,

அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய்! 63


'வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி

பூண்டு, இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன்,

மாண்டு முடிவது அல்லால், மாயா உடம்பு இது கொண்டு

ஆண்டு வருவது, இனி, யார் முகத்தே நோக்கவோ? 64


'தேன் அடைந்த சோலைத் திரு நாடு கைவிட்டுக்

கான் அடைந்தேன் என்னத் தரியாது, காவல! நீ

வான் அடைந்தாய்; இன்னம் இருந்தேன் நான், வாழ்வு உகந்தே!-

ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய்! 65


'வண்மை இயும், மானமும், மேல் வானவர்க்கும் பேர்க்கிலாத்

திண்மை இயும், செங்கோல் நெறியும், திறம்பாத

உண்மை இயும், எல்லாம் உடனே கொண்டு ஏகினையே!-

தண்மை இ தகை மதிக்கும் ஈந்த தனிக் குடையோய்!' 66


பலரும் இராமனை பரிகரித்தல்

தொகு

என்று எடுத்துப் பற்பலவும் பன்னி, இடர் உழக்கும்

குன்று எடுத்த போலும் குலவுத் தோள் கோளரியை,

வன் தடக் கைத் தம்பியரும், வந்து அடைந்த மன்னவரும்,

சென்று எடுத்துத் தாங்கினார்; மா வதிட்டன் தேற்றினான். 67


முனிவர்கள் இராமனை நெருங்குதல்

தொகு

பன்ன அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம்

பின்னு சடையோரும், பேர் உலகம் ஓர் ஏழின்

மன்னவரும், மந்திரியர் எல்லாரும், வந்து அடைந்தார்;

தன் உரிமைச் சேனைத் தலைவோரும்தாம் அடைந்தார். 68


வசிட்டனின் உரை

தொகு

மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து,

சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும்

கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன்

பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான்: 69


துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது

புறத்து ஒரு துணை இலை, பொருந்தும் மன்னுயிர்க்கு;

"இறத்தலும் பிறத்தலும் இயற்கை" என்பதே

மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ? 70


'"உண்மை இல் பிறவிகள், உலப்பு இல் கோடிகள்,

தண்மையில் வெம்மையில் தழுவின" எனும்

வண்மையை நோக்கிய, அரிய கூற்றின்பால்,

கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ? 71


'பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்?

மறு அது கற்பினில் வையம் யாவையும்

அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்

இறுவது கண்டு அவற்கு, இரங்கல் வேண்டுமோ? 72


சீலமும், தருமமும், சிதைவு இல் செய்கையாய்!

சூலமும், திகிரியும், சொல்லும், தாங்கிய

மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும்

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ? 73


'கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,

உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன,

மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,

எண்முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ? 74


'புண்ணிய நறு நெயில், பொரு இல் காலம் ஆம்

திண்ணிய திரியினில், விதி என் தீயினில்,

எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்,

அண்ணலே! அவிவதற்கு, ஐயம் யாவதோ? 75


'இவ் உலகத்தினும் இடருளே கிடந்து,

அவ் உலகத்தினும் நரகின் ஆழ்ந்து, பின்

வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள்,

எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ? 76


'உண்டுகொல் இது அலது உதவி நீ செய்வது?

எண் தகு குணத்தினாய்! தாதை என்றலால்,

புண்டரீகத் தனி முதற்கும் போக்கு அரு

விண்டுவின் உலகிடை விளங்கினான் அரோ! 77


இராமனிடம் தந்தைக்கு நீர்க்கடன் செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்

தொகு

'ஐய! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை;

உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ?

செய்வன வரன் முறை திருத்தி, சேந்த நின்

கையினால் ஒழுக்குதி கடன் எலாம்' என்றான். 78


'விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை

எண்ணி, நீ அழுங்குதல் இழுதைப் பாலதால்;

கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்

மண்ணு நீர் உகுத்தி, நீ மலர்க்கையால்' என்றான். 79


இராமன் நீர்க்கடன் செய்தல்

தொகு

என்றபின், ஏந்தலை ஏந்தி வேந்தரும்,

பொன் திணிந்தன சடைப் புனிதனோடும் போய்ச்

சென்றனர், செறி திரைப் புனலில்; 'செய்க' என,

நின்றனர்; இராமனும் நெறியை நோக்கினான். 80


புக்கனன் புணலிடை, முழுகிப் போந்தனன்,

தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான்,

முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்-

ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான். 81


ஆனவன் பிற உள யாவும் ஆற்றி, பின்,

மான மந்திரத்தவர், மன்னர், மா தவர்

ஏனையர் பிறர்களும், சுற்ற ஏகினன்;

சானகி இருந்த அச் சாலை எய்தினான். 82


சீதையின் பாதங்களில் பரதன் வீழ்ந்து புலம்புதல்

தொகு

எய்திய வேலையில், தமியள் எய்திய

தையலை நோக்கினன்; சாலை நோக்கினான்;

கைகளின் கண்மலர் புடைத்து, கால்மிசை,

ஐயன், அப் பரதன் வீழ்ந்து அரற்றினான் அரோ! 83


வெந் துயர் தொடர்தர விம்மி விம்மி, நீர்

உந்திய நிரந்தரம்; ஊற்று மாற்றில;

சிந்திய-குரிசில் அச் செம்மல் சேந்த கண்இந்

தியங்களில் எறி கடல் உண்டு என்னவே! 84


இராமன் சீதைக்கு தயரதன் இறந்ததை கூறுதல்

தொகு

அந் நெடுந் துயர் உறும் அரிய வீரனைத்

தன் நெடுந் தடக் கையால் இராமன் தாங்கினான்;

நல் நெடுங் கூந்தலை நோக்கி, 'நாயகன்,

என் நெடும் பிரிவினால், துஞ்சினான்' என்றான். 85


சீதையின் துக்கம்

தொகு

துண்ணெனும் நெஞ்சினாள்; துளங்கினாள்; துணைக்

கண் எனும் கடல் நெடுங் கலுழி கான்றிட,

மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள்,

பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள். 86


கல் நகு திரள் புயக் கணவன் பின் செல,

நல் நகர் ஒத்தது, நடந்த கானமும்;

'மன்னவன் துஞ்சினன்' என்ற மாற்றத்தால்

அன்னமும் துயர்க் கடல் அடிவைத்தாள் அரோ! 87


முனி பத்தினிகள் சீதையை நீராட்டுதல்

தொகு

ஆயவள்தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர்,

தாயரின், முனிவர்தம் தருமப் பன்னியர்;

தூய நீர் ஆட்டினர்; துயரம் நீக்கினர்;

நாயகற் சேர்த்தினர்; நவையுள் நீங்கினார். 88


சுமந்திரனும் தாயரும் வருதல்

தொகு

தேன் தரும் தெரியல் அச் செம்மல் நால்வரை

ஈன்றவர் மூவரோடு, இருமை நோக்குறும்

சான்றவர் குழாத்தொடும், தருமம் நோக்கிய

தோன்றல்பால், சுமந்திரன் தொழுது தோன்றினான். 89


இராமனும், தாயாரும் ஏனையோரும் அழுதல்

தொகு

'எந்தை யாண்டையான் இயம்புவீர்?' எனா,

வந்த தாயர்தம் வயங்கு சேவடிச்

சிந்தி நின்றனன், சேந்த கண்ண நீர்-

முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான். 90


தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ,

ஓய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்;

ஆய சேனையும், அணங்கனார்களும்,

தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார். 91


சீதையைத் தழுவி தாயர் வருந்துதல்

தொகு

பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப்

பொன் அனார்களும், சனகன் பூவையைத்

துன்னி, மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்;

இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார். 92


அனைவரும் இராமனிடம் வந்து சேர்தல்

தொகு

சேனை வீரரும், திரு நல் மா நகர்

மான மாந்தரும், மற்றுளோர்களும்,

ஏனை வேந்தரும், பிறரும், யாவரும்,-

கோனை எய்தினார்-குறையும் சிந்தையார். 93


கதிரவன் மறைதல்

தொகு

படம் செய் நாகணைப் பள்ளி நீங்கினான்

இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால்,

தடம் செய் தேரினான், தானும் நீரினால்

கடம் செய்வான் என, கடலில் மூழ்கினான். 94


மறுதினம் அனைவரும் சூழ்ந்திருக்க இராமன் பரதனை வினாவுதல்

தொகு

அன்று தீர்ந்தபின், அரச வேலையும்,

துன்று செஞ் சடைத் தவரும், சுற்றமும்,

தன் துணைத் திருத் தம்பிமார்களும்,

சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான், 95


'வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால்,

சரதம் நின்னதே; மகுடம் தாங்கலாய்,

விரத வேடம், நீ என்கொல் வேண்டினாய்?

பரத! கூறு' எனாப் பரிந்து கூறினான். 96


பரதன் தன் கருத்தை உரைத்தல்

தொகு

என்றலும் பதைத்து எழுந்து, கைதொழா

நின்று, தோன்றலை நெடுது நோக்கி, 'நீ

அன்றி யாவரே அறத்து உளோர்? அதில்

பின்றுவாய் கொலாம்?' என்னப் பேசுவான்: 97


'மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்,

நினக்கு ஒன்றா நிலை நிறுவி, நேமியான்-

தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால்,

எனக்கு ஒன்றா, தவம் அடுப்பது எண்ணினால்? 98


'நோவது ஆக இவ் உலகை நோய் செய்த

பாவகாரியின் பிறந்த பாவியேன்,

சாவது ஓர்கிலேன்; தவம் செய்வேன் அலேன்;

யாவன் ஆகி, இப் பழிநின்று ஏறுவேன்? 99


'நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்,

பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள்

துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர்

முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? 100


'பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் பதம்

துறந்து, மா தவம் தொடங்குவாய் என்றால்,

மறந்து, நீதியின் திறம்பி, வாளின் கொன்று

அறம் தின்றான் என, அரசு அது ஆள்வெனோ? 101


'தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச, நீ

புகையும் வெஞ் சுரம் புகுத, புந்தியால்

வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ, யான்

பகைவனேகொலாம்? இறவு பார்க்கின்றேன்! 102


'உந்தை தீமையும், உலகு உறாத நோய்

தந்த தீவினைத் தாய் செய் தீமையும்,

எந்தை! நீங்க, மீண்டு அரசு செய்க' எனா,

சிந்தை யாவதும் தெரியக் கூறினான். 103


பரதன் வேண்டுகோளுக்கு இராமனின் மறுப்பு உரை


சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின்,

'இற்றதோ இவன் மனம்?' என்று எண்ணுவான்,

'வெற்றி வீர! யான் விளம்பக் கேள்' எனா,

முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான்: 104


'முறையும், வாய்மையும், முயலும் நீதியும்,

அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம்

துறையுள் யாவையும், சுருதி நூல் விடா

இறைவர் ஏவலால் இயைவ காண்டியால். 105


'பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,

விரவு சீலமும், வினையின் மேன்மையும்,-

உர விலோய்!-தொழற்கு உரிய தேவரும்,

"குரவரே" எனப் பெரிது கோடியால். 106


'அந்த நல் பெருங் குரவர் ஆர் எனச்

சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்,

"தந்தை தாயர்" என்று இவர்கள் தாம் அலால்,

எந்தை! கூற வேறு எவரும் இல்லையால். 107


'தாய் வரம் கொள, தந்தை ஏவலால்,

மேய நம் குலத் தருமம் மேவினேன்;

நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ?-

ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய்! 108


'தனையர் ஆயினார் தந்தை தாயரை

வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ?

நினையல் ஓவிடா நெடிய வன் பழி

புனைதலோ?-ஐய! புதல்வர் ஆதல்தான். 109


'இம்மை, பொய் உரைத்து, இவறி, எந்தையார்

அம்மை வெம்மை சேர் நரகம் ஆள, யான்,

கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ்

செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ? 110


'வரன் நில் உந்தை சொல் மரபினால், உடைத்

தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்,

உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால்,

அரசு நின்னதே; ஆள்க" என்னவே,- 111


தான் கொடுக்க இராமனை முடிசூட்டுமாறு பரதன் வேண்டல்

தொகு
'முன்னர் வந்து உதித்து, உலகம் மூன்றினும்

நின்னை ஒப்பு இலா நீ, பிறந்த பார்

என்னது ஆகில், யான் இன்று தந்தனென்;

மன்ன! போந்து நீ மகுடம் சூடு' எனா. 112


'மலங்கி வையகம் வருந்தி வைக, நீ,

உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ?

கலங்குறாவனம் காத்தி போந்து' எனா,

பொலம் குலாவு தாள் பூண்டு, வேண்டினான். 113


பரதனை அரசாட்சி ஏற்க இராமன் கட்டளையிடுதல்

தொகு

'பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்

வசம் செய்தால், அது முறைமையோ? வசைக்கு

அசைந்த எந்தையார் அருள, அன்று நான்

இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ? 114


'வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம்,

"தூய்மை" என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ?

தீமைதான், அதின் தீர்தல் அன்றியே,

ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே? 115


'எந்தை ஏவ, ஆண்டு ஏழொடு ஏழ் எனா

வந்த காலம் நான் வனத்துள் வைக, நீ

தந்த பாரகம் தன்னை, மெய்ம்மையால்

அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால். 116


'மன்னவன் இருக்கவேயும், "மணி அணி மகுடம் சூடுக"

என்ன, யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி;

அன்னது நினைந்தும், நீ என் ஆணையை மறுக்கலாமோ?

சொன்னது செய்தி; ஐய! துயர் உழந்து அயரல்' என்றான். 117


வசிட்டனின் உரை

தொகு

ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும், உரைக்கலுற்ற

பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி, 'பண்டு

தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு அறச் சிந்தை நோக்கி,

'வள்ளியோய்! கேட்டி' என்னா, வசிட்ட மாமுனிவன் சொன்னான்: 118


'கிளர் அகன் புனலுள் நின்று, அரி, ஒர் கேழல் ஆய்,

இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ-

உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை

வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே. 119


'ஆதிய அமைதியின் இறுதி, ஐம் பெரும்

பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்கபின்,

நாதன் அவ் அகன் புனல் நல்கி, நண்ண அருஞ்

சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான். 120


'ஏற்ற இத் தன்மையின், அமரர்க்கு இன் அமுது

ஊற்றுடைக் கடல்வணன் உந்தி உந்திய

நூற்று இதழ்க் கமலத்தில், நொய்தின் யாவையும்

தோற்றுவித்து உதவிட, முதல்வன் தோன்றினான். 121


'அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது

உன் தனிக் குலம்; முதல் உள்ள வேந்தர்கள்

இன்று அளவினும் முறை இகந்துளார் இலை;

ஒன்று உளது உரை இனம்; உணரக் கேட்டியால். 122


'"இத இயல் இயற்றிய குரவர் யாரினும்,

மத இயல் களிற்றினாய்! மறுஇல் விஞ்சைகள்

பதவிய இருமையும் பயக்க, பண்பினால்

உதவிய ஒருவனே, உயரும்" என்பரால். 123


'என்றலால், யான் உனை எடுத்து விஞ்சைகள்

ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்,

"அன்று" எனாது, இன்று எனது ஆணை; ஐய! நீ

நன்று போந்து அளி, உனக்கு உரிய நாடு' என்றான். 124


இராமனின் தன்னிலை விளக்கம்

தொகு

கூறிய முனிவனைக் குவிந்த தாமரை

சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,

'ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை

கூறுவது உளது' எனக் கூறல் மேயினான்: 125


'சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்

போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான்-

தேன் தரு மலருளான் சிறுவ!-"செய்வென்" என்று

ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? 126


'தாய் பணித்து உவந்தன, தந்தை, "செய்க" என

ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்

தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா

நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ? 127


'முன் உறப் பணித்தவர் மொழியை யான் என

சென்னியில், கொண்டு, "அது செய்வென்" என்றதன்

பின்னுறப் பணித்தனை; பெருமையோய்! எனக்கு

என் இனிச் செய்வகை? உரைசெய் ஈங்கு' என்றான். 128


தானும் காடு உறைவதாக பரதன் உரைத்தல்

முனிவனும், 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்

இனி' என இருந்தனன்; இளைய மைந்தனும்,

'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான்

பனி படர் காடு உடன் படர்தல் மெய்' என்றான். 129


தேவர்களின் உரை

தொகு

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,

'இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,

செவ் வழித்து அன்று நம் செயல்' என்று எண்ணினார்,

கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்: 130


'ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப்

போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்;

ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம்

காத்தல் உன் கடன்; இவை கடமை' என்றனர். 131


இராமன் வானவர் உரைப்படி பரதனை அரசாள கட்டளையிடுதல்

தொகு

வானவர் உரைத்தலும், 'மறுக்கற்பாலது அன்று;

யான் உனை இரந்தனென்; இனி என் ஆணையால்

ஆனது ஓர் அமைதியின் அளித்தி, பார்' எனா,

தான் அவன் துணை மலர்த் தடக் கை பற்றினான். 132


பரதன் உடன்படுதல்

தொகு

'ஆம் எனில், ஏழ்-இரண்டு ஆண்டில் ஐய! நீ

நாம நீர் நெடு நகர் நண்ணி, நானிலம்

கோ முறை புரிகிலை என்னின், கூர் எரி

சாம் இது சரதம்; நின் ஆணை சாற்றினேன்.' 133


பரதன் கருத்திற்கு இராமன் உடன்படுதல்

என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்

துன்பு இலன்; அவனது துணிவை நோக்கினான்

அன்பினன், உருகினன்; 'அன்னது ஆக' என்றான்-

தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான். 134


பரதன் இராமனின் திருவடிகளைப் பெற்று முடிமேற் சூடிச் செல்லல்

தொகு

விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று

இன்மையின், 'அரிது' என எண்ணி, ஏங்குவான்,

'செம்மையின் திருவடித்தலம் தந்தீக' என,

எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். 135



அடித்தலம் இரண்டையும், அழுத கண்ணினான்,

'முடித்தலம் இவை' என, முறையின் சூடினான்;

படித்தலம் இறைஞ்சினன், பரதன் போயினான்-

பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான். 136


அனைவரும் திரும்புதல்

தொகு

ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும்,

சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்,

வான் தரு சேனையும், மற்றும் சுற்றுற,

மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான். 137


பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்;

மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்;

விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்;

கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான். 138


இராமனின் பாதுகை ஆட்சி செய்ய, பரதன் நந்தியம் பதியில் தங்குதல்

தொகு

பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல்

மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்;

போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்;

ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான். 139


நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்

செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்

இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,

அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான். 140


இராமன் தென் திசை நோக்கிச் செல்லுதல்

தொகு

'"குன்றினில் இருந்தனன்" என்னும் கொள்கையால்,

நின்றவர் நலிவரால், நேயத்தால்' எனா,

தன் துணைத் தம்பியும் தானும் தையலும்

தென் திசை நெறியினைச் சேறல் மேயினான். 141


மிகைப் பாடல்கள்

தொகு

அன்ன காதல் அருந் தவர், 'ஆண் தகை!

நின்னை ஒப்பவர் யார் உளர், நீ அலால்?'

என்ன வாழ்த்திடும் ஏல்வையில், இரவியும்

பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டதே. 5-1


இன்ன ஆய எறி கடல் சேனையும்,

மன்னர் யாவரும், மன் இளந் தோன்றலும்,

அன்ன மா முனியோடு எழுந்து, ஆண்தகை

துன்னு நீள் வரைக்கு ஏகிய சொல்லுவாம். 19-1


'ஐய! நின்னுடைய அன்னை மூவரும்,

வைய மன்னரும், மற்றும் மாக்களும்,

துய்ய நாடு ஒரீஇத் தோன்றினார்; அவர்க்கு

உய்ய நல் அருள் உதவுவாய்' என்றான். 89-1


கங்குல் வந்திடக் கண்டு, யாவரும்

அங்கணே துயில் அமைய, ஆர் இருள்

பொங்கு வெம் பகை, போக மற்றை நாள்,

செங் கதிர் குண திசையில் தோன்றினான். 94-1


'வானின் நுந்தை சொல் மரபினால் உடைத்

தானம் நின்னது என்று இயைந்த தன்மையால்,

ஊனினில் பிறந்து உரிமையாகையின்

யான் அது ஆள்கிலேன்' என, அவன் சொல்வான். 111-1