கம்பராமாயணம்/ஆரணிய காண்டம்/சடாயு காண் படலம்
கழுகின் வேந்தன் சடாயுவை காணல்
தொகுநடந்தனர் காவதம் பலவும்; நல் நதி
கிடந்தன, நின்றன; கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன, துவன்றின; சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே. 1
உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என, விளங்குவான் தனை, 2
முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின்
சந்திரன் ஒளியடு தழுவச் சார்த்திய,
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய,
மந்தரகிரி என வயங்குவான் தனை. 3
மால் நிற விசும்பு எழில் மறைய, தன் மணிக்
கால் நிறச் சேயளி கதுவ, கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்தென, பொலிகின்றான் தனை, 4
தூய்மையன், இருங் கலை துணிந்த கேள்வியன்,
வாய்மையன், மறு இலன், மதியின் கூர்மையன்,
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை, 5
வீட்டி வாள் அவுணரை, விருந்து கூற்றினை
ஊட்டி, வீழ் மிச்சில் தான் உண்டு, நாள்தொறும்
தீட்டி, மேல் இந்திரன் சிறு கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான் தனை, 6
கோள் இரு-நாலினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை,
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியின் பொலி மௌலியான் தனை, 7
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை,
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை,
சிற்பம் கொள் பகல் எனக் கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப் பல கண்டுளான் தனை, 8
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று, அது
தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற
வீங்கிய வலியினில் இருந்த வீரனை-
ஆங்கு அவர் அணுகினர், அயிர்க்கும் சிந்தையார். 9
ஒருவரை ஒருவர் ஐயுறல்
தொகு'இறுதியைத் தன் வயின் இயற்ற எய்தினான்
அறிவு இலி அரக்கன் ஆம்; அல்லனாம் எனின்,
எறுழ் வலிக் கலுழனே?' என்ன உன்னி, அச்
செறி கழல் வீரரும், செயிர்த்து நோக்கினார். 10
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை,
அனையவன் தானும் கண்டு, அயிர்த்து நோக்கினான் -
'வினை அறு நோன்பினர் அல்லர்; வில்லினர்;
புனை சடை முடியினர்; புலவரோ?' எனா. 11
'புரந்தரன் முதலிய புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென்; நேமியானும், அவ்
வரம் தரும் இறைவனும், மழுவலாளனும்,
கரந்திலர் என்னை; யான் என்றும் காண்பெனால். 12
'காமன் என்பவனையும், கண்ணின் நோக்கினேன்;
தாமரைச் செங் கண் இத் தடங் கை வீரர்கள்
பூ மரு பொலங் கழற் பொடியினோடும், ஒப்பு
ஆம் என அறிகிலென்; ஆர்கொலாம் இவர்? 13
'உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்;
மலர்மகட்கு உவமையாளோடும் வந்த இச்
சிலை வலி வீரரைத் தெரிகிலேன்' எனா, 14
'கரு மலை செம் மலை அனைய காட்சியர்;
திரு மகிழ் மார்பினர்; செங் கண் வீரர்தாம்,
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை, இருவரும் ஒத்துளார் அரோ.' 15
'யார்?' எனச் சடாயு வினவல்
எனப் பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான்,
சினப் படை வீரர்மேல் செல்லும் அன்பினான்,
'கனப் படை வரி சிலைக் காளை நீவிர் யார்?
மனப்பட, எனக்கு உரைவழங்குவீர்' என்றான். 16
தயரதன் மைந்தர் என அறிந்த சடாயு மகிழ்தல்
தொகுவினவிய காலையில், மெய்ம்மை அல்லது
புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால்,
'கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான்,
வனை கழல் தயரதன், மைந்தர் யாம்' என்றார். 17
உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன்,
தரைத்தலை இழிந்து, அவர்த் தழுவு காதலன்,
'விரைத் தடந் தாரினான், வேந்தர் வேந்தன் தன்,
வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான். 18
தயரதன் மறைவு அறிந்த சடாயுவின் துயரம்
தொகு'மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன்
துறக்கம் உற்றான்' என, இராமன் சொல்லலும்,
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்;
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான். 19
தழுவினர், எடுத்தனர், தடக் கையால்; முகம்
கழுவினர் இருவரும், கண்ணின் நீரினால்;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்,
அழிவுறு நெஞ்சினன், அரற்றினான் அரோ. 20
'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக் குடைக்கும் பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும், உடுபதியும், கடல் இடமும், களித்து வாழபுரவல
ர்தம் புரவலனே! பொய்ப் பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!-
இரவலரும், நல் அறமும், யானும், இனி என் பட நீத்து ஏகினாயே? 21
'அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க, நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண் நடந்தனையோ? நாயகனே! தீவினையேன், நண்பினின்றும்,
விலங்கு ஆனேன் ஆதலினால், விலங்கினேன்; இன்னும் உயிர் விட்டிலேனால். 22
'தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனைத் தடிந்த அந் நாள்,
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய, "நீ உடல்; நான் ஆவி" என்று
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய்! செப்பினாய்; திறம்பா, நின் சொல்;
உயிர் கிடக்க, உடலை விசும்பு ஏற்றினார், உணர்வு இறந்த கூற்றினாரே. 23
'எழுவது ஓர் இசை பெருக, இப்பொழுதே, ஒப்பு அரிய எரியும் தீயில்
விழுவதே நிற்க, மட மெல்லியலார்- தம்மைப்போல் நிலத்தின்மேல் வீழ்ந்து
அழுவதே யான்?' என்னா, அறிவுற்றான் என எழுந்து, ஆங்கு அவரை நோக்கி,
'முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர்! கேண்மின்' என முறையின் சொல்வான்: 24
சடாயு இறக்கத் துணிதல்
தொகு'அருணன் தன் புதல்வன் யான்; அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன்; ஆழி
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு இன் உயிர்த் துணைவன்; இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன்; கழுகின் மன்னன்;-
தருணம் கொள் பேர் ஒளியீர்!- சம்பாதிபின் பிறந்த சடாயு' என்றான். 25
ஆண்டு அவன் ஈது உரைசெய்ய, அஞ்சலித்த மலர்க்கையார் அன்பினோடும்
மூண்ட பெருந் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்க்கண் மொய்த்த நீரார்,-
பூண்ட பெரும் புகழ் நிறுவி; தம் பொருட்டால் பொன்னுலகம் புக்க தாதை,
மீண்டனன் வந்தான் அவனைக் கண்டனரே ஒத்தனர்-அவ் விலங்கல் தோளார். 26
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உறத் தழுவி, 'மக்காள்! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்; உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும், தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம்; பீழை பாராது,
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல், இத் துயரம் மறவேன்' என்றான். 27
சடாயுவை இராம இலக்குவர் தடுத்தல்
தொகு'உய்விடத்து உதவற்கு உரியானும், தன்
மெய் விடக் கருதாது, விண் ஏறினான்;
இவ் இடத்தினில், எம்பெருமாஅன்! எமைக்
கைவிடின், பினை யார் களைகண் உளார்? 28
'"தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர்
வாயின், நீங்கி, வனம் புகுந்து, எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின்" என் எங்களை
நீயும் நீங்குதியோ?-நெறி நீங்கலாய்!' 29
என்று சொல்ல, இருந்து அழி நெஞ்சினன்,
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன்,
'"அன்று அது" என்னின், அயோத்தியின், ஐயன்மீர்
சென்றபின் அவற் சேர்குவென் யான்' என்றான். 30
சடாயு இராம இலக்குவர் வனம் புகுந்த காரணத்தை வினாவுதல்
'வேந்தன் விண் அடைந்தான் எனின், வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது அளியாது, இவண்
போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க்
காந்துகின்றது, கட்டுரையீர்' என்றான். 31
'தேவர், தானவர், திண் திறல் நாகர், வேறு
ஏவர் ஆக, இடர் இழைத்தார் எனின்,-
பூ அராவு பொலங் கதிர் வேலினீர்!-
சாவர் ஆக்கி, தருவென் அரசு' என்றான். 32
இராமன் இலக்குவனுக்கு குறிப்பால் விடையிறுத்தல்
தொகுதாதை கூறலும், தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன்; அவனும், தன் சிற்றவைம
¡தரால் வந்த செய்கை, வரம்பு இலா
ஓத வேலை, ஒழிவு இன்று உணர்த்தினான். 33
இராமனை சடாயு போற்றுதல்
தொகு'உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி,
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர் வல்லார்?' எனா, 34
அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன்,
'வல்லை மைந்த!' அம் மன்னையும் என்னையும்
எல்லை இல் புகழ் எய்துவித்தாய்' என்றான். 35
சடாயு சீதையைப் பற்றி வினவி அறிதல்
தொகுபின்னரும், அப் பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்;
'மன்னர் மன்னவன் மைந்த! இவ் வாணுதல்
இன்னள் என்ன இயம்புதியால்' என்றான். 36
அல் இறுத்தன தாடகை ஆதியா,
வில் இறுத்தது இடை என, மேலைநாள்
புல் இறுத்தது யாவும் புகன்று, தன்
சொல் இறுத்தனன் - தோன்றல்பின் தோன்றினான். 37
பஞ்சவடியில் தங்க உள்ளதை இராமன் உரைத்தல்
தொகுகேட்டு உவந்தனன், கேழ் கிளர் மௌலியான்;
'தோட்டு அலங்கலினீர்! துறந்தீர், வள
நாட்டின்; நீவிரும் நல்நுதல்தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்குவென் யான்' என்றான். 38
'இறைவ! எண்ணி, அகத்தியன் ஈந்துளது,
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு குழல்; அச் சூழல் புக்கு
உறைதும்' என்றனன் -உள்ளத்து உறைகுவான். 39
மூவரும் பஞ்சவடி சேர்தல்
தொகு'பெரிதும் நன்று; அப் பெருந் துறை வைகி, நீர்
புரிதிர் மா தவம்; போதுமின்; யான் அது
தெரிவுறுத்துவென்' என்று, அவர், திண் சிறை
விரியும் நீழலில் செல்ல, விண் சென்றனன். 40
ஆய சூழல் அறிய உணர்த்திய
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்
போய பின்னை, பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார். 41
வார்ப் பொற் கொங்கை மருகியை, மக்களை,
ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் -சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான். 42
மிகைப் பாடல்கள்
தொகு'தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக் கருங் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள். 24-1
தானவரே முதலோரைத் தனு பயந்தாள்; மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை, ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள். 24-2
மழை புரை பூங் குழல் விநதை, வான், இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறுமுதல் பெரும் பறவை தம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல், காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழை எனும் அக்கொடி பயந்தாள், கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம். 24-3
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம் ஆகிய பலவும், தெரிக்குங்காலை. 24-4
'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கந்துருவுடனே, குரோதவசை, தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதி முறையே, இவை அனைத்தும் பயந்தனர்கள்; விநதை சுதன் அருணன் மென் தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப் புணர, உதித்தனம் யாம், புவனிமீதே. 24-5
என்று உரைத்த எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித் தொழுது, கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார். 27-1