கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/துந்துபிப் படலம்

துந்துபியின் உடலைப் பார்த்து, இராமன் வினாவுதல்

தொகு

அண்டமும், அகிலமும் அடைய, அன்று அனலிடைப்

பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும், வான்

மண்டலம் தொடுவது, அம் மலையின்மேல் மலை எனக்

கண்டனன், துந்துபி, கடல் அனான், உடல் அரோ! 1


'தென் புலக் கிழவன் ஊர் மயிடமோ? திசையின் வாழ்

வன்பு உலக் கரி மடிந்தது கொலோ? மகரமீன்

என்பு உலப்புற உலர்ந்தது கொலோ? இது எனா,

அன்பு உலப்பு அரிய நீ, உரைசெய்வாய்' என, அவன், 2


துந்துபியின் வரலாற்றைச் சுக்கிரீவன் உரைத்தல்

தொகு

'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன், மீது

இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான்,

மந்தரக் கிரி எனப் பெரியவன், மகர நீர்

சிந்திட, கரு நிறத்து அரியினைத் தேடுவான். 3


'அங்கு வந்து அரி எதிர்ந்து, "அமைதி என்?" என்றலும்,

"பொங்கு வெஞ் செருவினில் பொருதி" என்று உரைசெய,

"கங்கையின் கணவன், அக் கறை மிடற்று இறைவனே

உங்கள் வெங் கத வலிக்கு ஒருவன்" என்று உரைசெய்தான். 4


'கடிது சென்று, அவனும், அக் கடவுள்தன் கயிலையை,

கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும், குறுகி, "முன்

நொடிதி; நின் குறை என்?" என்றலும், நுவன்றனன் அரோ

"முடிவு இல் வெஞ் செரு, எனக்கு அருள் செய்வான் முயல்க!" எனா, 5


'"மூலமே, வீரமே மூடினாயோடு, போர்

ஏலுமே? தேவர்பால் ஏகு" எனா, ஏவினான் -

"சால நாள் போர் செய்வாய் ஆதியேல், சாரல்; போர்

வாலிபால் ஏகு" எனா - வான் உளோர் வான் உளான். 6


'அன்னவன் விட, உவந்து, அவனும் வந்து, "அரிகள் தம்

மன்னவன்! வருக! போர் செய்க!" எனா, மலையினைச்

சின்னபின்னம் படுத்திடுதலும், சினவி, என்

முன்னவன், முன்னர் வந்து அனையவன் முனைதலும், 7


'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று

ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள்; எவ் உலகினும்,

வெருவரும் தகைவுஇலர், விழுவர், நின்று எழுவரால்;

மருவ அருந் தகையர், தானவர்கள் வானவர்கள்தாம். 8


'தீ எழுந்தது, விசும்புற; நெடுந் திசை எலாம்

போய் எழுந்தது, முழக்கு; உடன் எழுந்தது, புகை;

தோய நன் புணரியும், தொடர் தடங் கிரிகளும்,

சாய் அழிந்தன; - அடித்தலம் எடுத்திடுதலால். 9


'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில்,

கொற்ற வாலியும், அவன், குலவு தோள் வலியடும்

பற்றி, ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து,

எற்றினான்; அவனும், வான் இடியின் நின்று உரறினான். 10


'தலையின்மேல் அடி பட, கடிது சாய் நெடிய தாள்

உலைய, வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக, மா

மலையின்மேல் உரும் இடித்தென்ன, வான் மண்ணொடும்

குலைய, மா திசைகளும் செவிடுற, - குத்தினான். 11


'கவரி இங்கு இது என, கரதலம்கொடு திரித்து

இவர்தலும், குருதி பட்டு இசைதொறும் திசைதொறும்,

துவர் அணிந்தன என, பொசி துதைந்தன - துணைப்

பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே. 12


'புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர்

இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல்

வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று

உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசு அரோ! 13


'முட்டி, வான் முகடு சென்று அளவி, இம் முடை உடற்

கட்டி, மால் வரையை வந்து உறுதலும், கருணையான்

இட்ட சாபமும், எனக்கு உதவும்' என்று இயல்பினின்,

பட்டவா முழுவதும், பரிவினால் உரைசெய்தான். 14


இலக்குவன் துந்துபியின் உடலை உந்துதல்

தொகு

கேட்டனன், அமலனும், கிளந்தவாறு எலாம்,

வாள் தொழில் இளவலை, 'இதனை, மைந்த! நீ

ஓட்டு' என, அவன் கழல் விரலின் உந்தினான்;

மீட்டு, அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே! 15


மிகைப் பாடல்கள்

தொகு

'புயலும், வானகமும், அப் புணரியும், புணரிசூழ்

அயலும், வீழ் தூளியால் அறிவு அருந் தகையவாம்

மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார்,

இயலும் மா மதியம் ஈர்-ஆறும் வந்து எய்தவே.' 9