கம்பராமாயணம்/கிட்கிந்தா காண்டம்/பிலம் புக்கு நீங்கு படலம்
அனைவரும் நான்கு திசையிலும் செல்லுதல்
தொகுபோயினார்; போன பின், புற நெடுந் திசைகள்தோறு, ஏயினான், இரவி காதலனும்; ஏயின பொருட்கு ஆயினார், அவரும்; அங்கு அன்ன நாள் அவதியில் தாயினார் உலகினை, தகை நெடுந் தானையார். 1
தென் திசைச் சென்றவர்களின் வரலாறு
குன்று இசைத்தன எனக் குலவு தோள் வலியினார், மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய், வன் திசைப் படரும் ஆறு ஒழிய, வண் தமிழுடைத் தென் திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரைசெய்வாம். 2
விந்தமலையின் பக்கங்களில் தேடுதல்
சிந்துராகத்தொடும் திரள் மணிச் சுடர் செறிந்து, அந்தி வானத்தின் நின்று அவிர்தலான், அரவினோடு இந்து வான் ஓடலான், இறைவன் மா மௌலிபோல் விந்த நாகத்தின் மாடு எய்தினார், வெய்தினால். 3
அந் நெடுங் குன்றமோடு, அவிர் மணிச் சிகரமும், பொன் நெடுங் கொடு முடிப் புரைகளும், புடைகளும், நல் நெடுந் தாழ்வரை நாடினார், - நவை இலார் - பல் நெடுங் காலம் ஆம் என்ன, ஓர் பகலிடை. 4
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறாவகையின், அச் சில் அல் ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார், புல்லினார் உலகினை, பொது இலா வகையினால், எல்லை மா கடல்களே ஆகுமாறு, எய்தினார். 5
விண்டு போய் இழிவர்; மேல் நிமிர்வர்; விண் படர்வர்; வேர் உண்ட மா மரனின், அம் மலையின்வாய், உறையும் நீர் மண்டு பார் அதனின், வாழ் உயிர்கள் அம் மதியினார் கண்டிலாதன, அயன் கண்டிலாதனகொலாம். 6
நருமதை நதிக் கரையில் வானரர்
ஏகினார், யோசனை ஏழொடு ஏழு; பார் சேகு அறத் தென் திசைக் கடிது செல்கின்றார், மேக மாலையினொடும் விரவி, மேதியின் நாகு சேர் நருமதை யாறு நண்ணினார். 7
அன்னம் ஆடு இடங்களும், அமரர் நாடியர் துன்னி ஆடு இடங்களும், துறக்கம் மேயவர் முன்னி ஆடு இடங்களும், கரும்பு மூசு தேன் பன்னி ஆடு இடங்களும், பரந்து சுற்றினார். 8
பெறல் அருந் தெரிவையை நாடும் பெற்றியார், அறல் நறுங் கூந்தலும், அளக வண்டு சூழ் நிறை நறுந் தாமரை முகமும், நித்தில முறுவலும், காண்பரால், முழுதும் காண்கிலார். 9
செரு மத யாக்கையர், திருக்கு இல் சிந்தையர், தரும தயா இவை தழுவும் தன்மையர், பொரு மத யானையும் பிடியும் புக்கு, உழல் நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார். 10
வானர வீரர்கள் ஏமகூட மலையை அடைதல்
தாம கூடத் திரைத் தீர்த்த சங்கம் ஆம், நாம கூடு அப் பெருந் திசையை நல்கிய, வாம கூடச் சுடர் மணி வயங்குறும், - ஏமகூடத் தடங் கிரியை எய்தினார். 11
மாடு உறு கிரிகளும், மரனும், மற்றவும், சூடு உறு பொன் எனப் பொலிந்து தோன்றுறப் பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது; வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது; 12
பரவிய கனக நுண் பராகம் பாடு உற எரி சுடர்ச் செம் மணி ஈட்டத் தோடு இழி அருவிஅம் திரள்களும் அலங்கு தீயிடை உருகு பொன் பாய்வ போன்று, ஒழுகுகின்றது; 13
விஞ்சையர் பாடலும், விசும்பின் வெள் வளைப் பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும், குஞ்சர முழக்கமும், குமுறு பேரியின் மஞ்சுஇனம் உரற்றலும், மயங்கும் மாண்பது; 14
அதனை இராவணன் மலை என எண்ணி, சினம் கொள்ளுதல்
அனையது நோக்கினார், அமிர்த மா மயில் இனைய, வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் நினைவினர், உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர், சினம் மிகக் கனல் பொறி சிந்தும் செங் கணார். 15
'இம் மலை காணுதும், ஏழை மானை; அச் செம்மலை நீக்குதும், சிந்தைத் தீது' என விம்மலுற்று, உவகையின் விளங்கும் உள்ளத்தார், அம் மலை ஏறினார், அச்சம் நீங்கினார். 16
ஏமகூடத்தில் சீதையைக் காணாது இறங்கி வருதல்
ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று, உம்பரைத் தொடுவது ஒத்து, உயர்வின் ஓங்கிய, செம் பொன் நல் கிரியை ஓர் பகலில் தேடினார்; கொம்பினைக் கண்டிலர் குப்புற்று ஏகினார். 17
'பல பகுதியாகப் பிரிந்து தேடி, பின் மயேந்திரத்தில் கூடுவோம்' என அங்கதன் கூறல்
வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை, 'தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி, நீர் எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும்' என்று உள்ளினார், உயர் நெடும் ஓங்கல் நீங்கினார். 18
மாருதி முதலியோர் ஒரு சுரத்தை அடைதல்
மாருதி முதலிய வயிரத் தோள் வயப் போர் கெழு வீரரே குழுமிப் போகின்றார்; நீர் எனும் பெயரும் அந் நெறியின் நீங்கலால், சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார். 19
பாலைவனத்தின் வெம்மை
புள் அடையா; விலங்கு அரிய; புல்லொடும் கள் அடை மரன் இல; கல்லும் தீந்து உகும்; உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய; வெள்ளிடை அல்லது ஒன்று அரிது; - அவ் வெஞ் சுரம். 20
நன் புலன் நடுக்குற, உணர்வு நைந்து அற, பொன் பொலி யாக்கைகள் புழுங்கிப் பொங்குவார், தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய என்பு இல் பல் உயிர் என, வெம்மை எய்தினார். 21
நீட்டிய நாவினர்; நிலத்தில் தீண்டுதோறு ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்; காட்டினும் காய்ந்து, தம் காயம் தீதலால், சூட்டு அகல்மேல் எழு பொரியின் துள்ளினார். 22
வருந்திய வானரர் பில வழியில் புகுதல்
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது, உயிர் பிதுங்கல் ஆம் உடலினர், முடிவு இல் பீழையர், பதங்கள் தீப் பருகிடப் பதைக்கின்றார், பல விதங்களால், நெடும் பில வழியில் மேவினார். 23
'மீச் செல அரிது இனி, விளியின் அல்லது; தீச் செல ஒழியவும் தடுக்கும்; திண் பில- வாய்ச் செலல் நன்று' என, மனத்தின் எண்ணினார்; 'போய்ச் சில அறிதும்' என்று, அதனில் போயினார். 24
பிலத்துள் இருட் குகையை அடைந்து வானரங்கள் திகைத்தல்
அக் கணத்து, அப் பிலத்து அகணி எய்தினார், திக்கினொடு உலகு உறச் செறிந்த தேங்கு இருள், எக்கிய கதிரவற்கு அஞ்சி, ஏமுறப் புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார். 25
எழுகிலர்; கால் எடுத்து ஏகும் எண் இலர்; வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்; இழுகிய நெய் எனும் இருட் பிழம்பினுள், முழுகிய மெய்யர் ஆய், உயிர்ப்பு முட்டினார். 26
வானரர்கள் அனுமனை காக்க வேண்ட, அவன் அவர்களைக் கொண்டு செல்லுதல்
நின்றனர், செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர், 'பொன்றினம் யாம்' எனப் பொருமும் புந்தியர், 'வன் திறல் மாருதி! வல்லையோ எமை இன்று இது காக்க?' என்று, இரந்து கூறினார். 27
'உய்வுறுத்துவென்; மனம் உலையலீர்; ஊழின் வால் மெய்யுறப் பற்றுதிர்; விடுகிலீர்' என, ஐயன், அக் கணத்தினில், அகலும் நீள் நெறி கையினில் தடவி, வெங் காலின் ஏகினான். 28
பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன், மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட, துன் இருள் தொலைந்திட, துருவி ஏகினான் - பொன் நெடுங் கிரி எனப் பொலிந்த தோளினான். 29
வானரர் ஓர் அழகிய நகரைக் கண்டு, 'இராவணன் ஊர்' என எண்ணி புகுந்து தேடுதல்
கண்டனர், கடி நகர்; கமலத்து ஒண் கதிர் - மண்டலம் மறைந்து உறைந்தனைய மாண்பது; விண்தலம் நாணுற விளங்குகின்றது; புண்டரிகத்தவள் வதனம் போன்றது; 30
கற்பகக் கானது; கமலக் காடது; பொன் பெருங் கோபுரப் புரிசை புக்கது; அற்புதம் அமரரும் எய்தலாவது; சிற்பமும், மயன் மனம் வருந்திச் செய்தது; 31
இந்திரன் நகரமும் இணை இலாதது; மந்திர மணியினின், பொன்னின், மண்ணினில், அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும், உந்த அரும் இருள் துரந்து, ஒளிர நிற்பது; 32
புவி புகழ் சென்னி, பேர் அமலன், தோள் புகழ் கவிகள் தம் மனை என, கனக ராசியும், சவியுடைத் தூசும், மென் சாந்தும், மாலையும், அவிர் இழைக் குப்பையும், அளவு இலாதது; 33
பயில் குரல் கிண்கிணிப் பதத்த பாவையர், இயல்புடை மைந்தர், என்று இவர் இலாமையால், துயில்வுறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா, உயிர் இலா, ஓவியம் என்ன ஒப்பது; 34
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும், தமிழ் நிகர் நறவமும், தனித் தண் தேறலும், இமிழ் கனிப் பிறக்கமும், பிறவும், இன்னன கமழ்வுறத் துவன்றிய கணக்கு இல் கொட்பது; 35
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார்; 'இந் நகரம் ஆம், இகல் இராவணனது ஊர்' என்று, உன்னி உரையாடினர்; உவந்தனர்; வியந்தார்; பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார். 36
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார்; மக்கள் கடை, தேவர் தலை, வான் உலகின், வையத்து, ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால், மற்று எக் குறியின் உள்ளவும், எதிர்ந்திலர், திரிந்தார். 37
மனிதர்களைக் காணாது வானரர் திகைத்தல்
வாவி உள; பொய்கை உள; வாச மலர் நாறும் காவும் உள; காவி விழியார் மொழிகள் என்னக் கூவும் இள மென் குயில்கள், பூவை, கிளி, கோலத் தூவி மட அன்னம், உள; தோகையர்கள் இல்லை. 38
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார்; 'மாயைகொல்?' எனக் கருதி, மற்றும் நினைகின்றார், 'தீய முன் உடற் பிறவி சென்ற அது அன்றோ, தூயது துறக்கம்?' என நெஞ்சு துணிவுற்றார். 39
'இறந்திலம்; இதற்கு உரியது எண்ணுகிலம்; ஏதும் மறந்திலம்; மறப்பினொடு இமைப்பு உள; மயக்கம் பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ? திறம் தெரிவது என்?' என இசைத்தனர், திசைத்தார். 40
சாம்பனின் கலங்கம்
சாம்பன் அவன் ஒன்று உரைசெய்வான், 'எழு சலத்தால், காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன், நாம் புக அமைத்த பொறி நன்று; முடிவு இன்றால்; ஏம்பல் இனி மேலை விதியால் முடியும்' என்றான். 41
அஞ்சவேண்டாம் என மாருதி சாம்பனைத் தேற்றுதல்
'இன்று, பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின், பார் தின்று, சகரர்க்கு அதிகம் ஆகி, நனி சேறும்; அன்று அது எனின், வஞ்சனை அரக்கரை அடங்கக் கொன்று எழுதும்; அஞ்சல்' என மாருதி கொதித்தான். 42
அந் நகர் நடுவில் சுயம்பிரபையைக் காணுதல்
மற்றவரும் மற்று அது மனக் கொள வலித்தார்; உற்றனர், புரத்தின் இடை; ஒண் சுடரினுள் ஓர் நல் தவம் அனைத்தும் உரு நண்ணி, ஒளி பெற்ற கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார். 43
சுயம்பிரபையின் தோற்றம்
மருங்கு அலச வற்கலை வரிந்து, வரி வாளம் பொரும், கலசம் ஒக்கும், முலை மாசு புடை பூசி, பெருங் கலை மதித் திரு முகத்த பிறழ் செங் கேழ்க் கருங் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண, 44
தேர் அனைய அல்குல், செறி திண் கதலி செப்பும் ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி, உற ஒல்கும் நேர் இடை சலிப்பு அற நிறுத்தி, நிமிர் கொங்கைப் பாரம் உள் ஒடுக்குற, உயிர்ப்பு இடை பரப்ப, 45
தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர்க் கை, பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த, காமம் முதல் உற்ற பகை கால் தளர, ஆசை நாமம் அழிய, புலனும் நல் அறிவு புல்ல, 46
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம் செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல, பறிந்து வினை பற்று அற, மனப் பெரிய பாசம் பிறிந்து பெயர, கருணை கண்வழி பிறங்க, 47
'சீதையோ இவள்' என்ற வானவர்க்கு அனுமனின் மறுமொழி
இருந்தனள் - இருந்தவளை எய்தினர் இறைஞ்சா, அருந்ததி எனத் தகைய சீதை அவளாகப் பரிந்தனர்; பதைத்தனர்; 'பணித்த குறி, பண்பின் தெரிந்து உணர்தி; மற்று இவள்கொல், தேவி?' எனலோடும் 48
'எக் குறியொடு எக் குணம் எடுத்து இவண் உரைக்கேன்? இக் குறியுடைக் கொடி இராமன் மனையாளோ? அக்கு வடம், முத்தமணி ஆரம் அதன் நேர் நின்று ஒக்கும் எனின், ஒக்கும்' என, மாருதி உரைத்தான். 49
சுயம்பிரபை 'நீவிர் யார்?' வந்தது என்?' என வினாவுதல்
அன்ன பொழுதின்கண் அ(வ்) அணங்கும், அறிவுற்றாள்; முன், அனையர் சேறல் முறை அன்று, என முனிந்தாள்; 'துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர்; என்ன வரவு? யாவர்? உரைசெய்க!' என இசைத்தாள். 50
வானரரின் மறுமொழி
'வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார்; சீதையை ஒளித்தனர்; மறைத்த புரை தேர்வுற்று ஏதம் இல் அறத் துறை நிறுத்திய இராமன் தூதர்; உலகில் திரிதும்' என்னும் உரை சொன்னார். 51
என்றலும், இருந்தவள் எழுந்தனல், இரங்கி, குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள்; 'நன்று வரவு ஆக! நடனம் புரிவல்' என்னா, நின்றனள்; நெடுங் கண் இணை நீர் கலுழி கொள்ள, 52
சுயம்பிரபை இராமனைப் பற்றி வினாவ, அனுமன் விடையுறுத்தல்
'எவ் உழை இருந்தனன் இராமன்?' என, யாணர்ச் செவ் உழை நெடுங் கண் அவள் செப்பிடுதலோடும், அவ் உழை, நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம், வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான். 53
சுயம்பிரபை விருந்து அளித்து, தன் வரலாறு கூறல்
கேட்டு, அவளும், 'என்னுடைய கேடு இல் தவம் இன்னே காட்டியது வீடு!' என விரும்பி, நனி சால் நீர் ஆட்டி, அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு ஊட்டி, மனன் உள் குளிர, இன் உரை உரைத்தாள். 54
மாருதியும், மற்று அவள் மலர்ச்சரண் வணங்கி, 'யார் இ(ந்) நகருக்கு இறைவர்? யாது நின் இயற் பேர்? பார் புகழ் தவத்தினை! பணித்தருளுக!' என்றான்; சோர்குழலும், மற்று அவனொடு, உற்றபடி சொன்னாள்: 55
'நூல்முகம் நுனிந்த நெறி நூறு வர, நொய்தா மேல் முகம் நிமிர்ந்து, வெயில் காலொடு விழுங்கா, மான் முக நலத்தவன், மயன், செய்த தவத்தால், நான்முகன் அளித்துளது, இ(ம்) மா நகரம் - நல்லோய்! 56
'அன்னது இது; தானவன் அரம்பையருள், ஆங்கு ஓர், நல் நுதலினாள் முலை நயந்தனன்; அ(ந்) நல்லாள் என் உயிர் அனாள்; அவளை யான், அவன் இரப்ப, பொன்னுலகின் நின்று, ஒளிர் பிலத்திடை புணர்த்தேன். 57
'புணர்ந்து, அவளும் அன்னவனும், அன்றில் விழை போகத்து உணர்ந்திலர், நெடும் பகல் இ(ம்) மா நகர் உறைந்தார்; கணங் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று, இணங்கி வரு பாசமுடையேன் இவண் இருந்தேன். 58
'இருந்து, பல நாள் கழியும் எல்லையினில், நல்லோய்! திருந்திழையை நாடி வரு தேவர் இறை சீறி, பெருந் திறலினானை உயிர் உண்டு, "பிழை" என்று, அம் முருந்து நிகர் மூரல் நகையாளையும், முனிந்தான். 59
'முனிந்து, அவளை, "உற்ற செயல் முற்றும் மொழிக" என்ன, கனிந்த துவர் வாயவளும், என்னை, "இவள்கண் ஆய், வனைந்து முடிவுற்றது" என, மன்னனும், இது எல்லாம் நினைந்து, "இவண் இருத்தி; நகர் காவல் நினது" என்றான். 60
என்றலும்; வணங்கி, "இருள் ஏகும் நெறி எந் நாள்? ஒன்று உரை, எனக்கு முடிவு" என்று உரைசெயாமுன், "வன் திறல் அவ் வானரம், இராமன் அருள் வந்தால், அன்று முடிவு ஆகும், இடர்" என்று, அவன் அகன்றான். 61
'உண்ண உள; பூச உள; சூட உள; ஒன்றோ? வண்ண மணி ஆடை உள; மற்றும் உள; பெற்று என்? அண்ணல்! அவை முற்றும் அற விட்டு, வினை வெல்வான், எண்ண அரிய பல் பகல் இருந் தவம் இழைத்தேன். 62
'ஐ - இருபது ஓசனை அமைந்த பிலம், ஐயா! மெய் உளது; மேல் உலகம் ஏறும் நெறி காணேன்; உய்யும் நெறி உண்டு, உதவுவீர் எனின்; உபாயம் செய்யும்வகை சிந்தையில் நினைத்தீர், சிறிது' என்றாள். 63
சுயம்பிரபைக்கு அனுமனின் மறுமொழி
அன்னது சுயம்பிரபை கூற, அனுமானும் மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் சென்னியின் வணங்கி, 'நனி வானவர்கள் சேரும் பொன்னுலகம் ஈகுவல், நினக்கு' எனல் புகன்றான். 64
இருளிலிருந்து மீள வழி செய்யுமாறு, அனுமனை வானரர் வேண்டுதல்
'முழைத்தலை இருட் கடலின் மூழ்கி முடிவேமைப் பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே! இழைத்தி, செயல் ஆய வினை' என்றனர் இரந்தார்; வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான், 65
அனுமன் வானுற ஓங்கி, பிலத்தைப் பிளந்து நிற்றல்
'நடுங்கல்மின்' எனும் சொலை நவின்று, நகை நாற மடங்கலின் எழுந்து, மழை ஏற அரிய வானத்து ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற, நெடுங் கைகள் சுமந்து, நெடு வான் உற நிமிர்ந்தான். 66
எருத்து உயர் சுடர்ப் புயம் இரண்டும் எயிறு என்ன, மருத்து மகன் இப் படி இடந்து, உற வளர்ந்தான்; கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க, உருத்து, உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான். 67
மா வடிவுடைக் கமல நான்முகன் வகுக்கும் தூ வடிவுடைச் சுடர் கொள் விண் தலை துளைக்கும் மூஅடி குறித்து முறை ஈர் - அடி முடித்தான் பூ வடிவுடைப் பொரு இல் சேவடி புரைத்தான். 68
பிலத்தினைப் பிளந்து மேலைக்கடலில் எறிந்து, அனுமன் ஆரவாரித்தல்
ஏழ்-இருபது ஓசனை இடந்து, படியின்மேல் ஊழுற எழுந்து, அதனை, உம்பரும் ஒடுங்க, பாழி நெடு வன் பிலனுள் நின்று, படர் மேல்பால் ஆழியின் எறிந்து, அனுமன் ஆழி என ஆர்த்தான். 69
சுயம்பிரபை பொன்னுலகம் செல்லுதல்
என்றும் உள மேல் கடல் இயக்கு இல் பில தீவா நின்று, நிலைபெற்றுளது; நீள் நுதலியோடும், குன்று புரை தோளவர், எழுந்து நெறி கொண்டார்; பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள். 70
வானரர் ஒரு பொய்கைக் கரையை அடைதலும், சூரியன் மறைதலும்
மாருதி வலித் தகைமை பேசி, மறவோரும், பாரிடை நடந்து, பகல் எல்லை படரப் போய், நீருடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார்; தேருடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான். 71
மிகைப் பாடல்கள்
'இந் நெடுங் கிரிகொலோ, எதுகொலோ?' என அந் நெடு மேருவோடு அயிர்க்கலாவது; தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய பொன் நெடு முடி எனப் பொலியும் பொற்பது; 12-1
பறவையும், பல் வகை விலங்கும், பாடு அமைந்து உறைவன, கனக நுண் தூளி ஒற்றலான், நிறை நெடு மேருவைச் சேர்ந்த நீர ஆய், பொறை நெடும் பொன் ஒளி மிளிரும் பொற்பது; 12-2
இரிந்தன, கரிகளும், யாளி ஈட்டமும்; விரிந்த கோள் அரிகளும் வெருவி நீங்கின; திரிந்தனர் எங்கணும்; திருவைக் காண்கிலார் பிரிந்தனர்; 'பிறிது' எனப் பெயரும் பெற்றியார். 16-1
வச்சிரமுடைக் குரிசில் வாள் அமரின் மேல் நாள், மெச்சு அவுணர் யாவரும் விளிந்தனர்களாக, அச்சம் உறு தானவர்கள் கம்மியனும் அஞ்சி, வைச்ச பிலமூடிதன் மறைந்து அயல் இருந்தான். 55-1
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர்; வாசப் போது உறை நறைக் குழல் ஒருத்தி; - புகழ் மேலோய்! - ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார்; சீதள முலைச் சிறுமி தாதையொடு சென்றாள். 59-1
மத்த நெடு மா களிறு வைத்த குலிசி வன் தாள் சித்தமொடு மான் முகன் வணங்கி, அயல் சென்றான்; வித்தகனும், ஆயிர விலோசனனும், மேன்மேல், முத்த நகையாளை நனி நோக்கினன், முனிந்தான். 59-2
மேரு சவ்வருணி எனும் மென்சொலினள், விஞ்சும் ஏர் உறு மடந்தை, யுகம் எண்ண அரு தவத்தாள், சீர் உறு சுயம்பிரபை, ஏமை செறிவு எய்தும் தாரு வளர் பொற்றலமிசைக் கடிது சார்ந்தாள். 70-1
மேரு வரை மா முலையள், மென்சொலினள், - விஞ்சு மாருதியினைப் பல உவந்து, மகிழ்வுற்றே,- ஏர் உறு சுயம்பிரபை, ஏமை நெறி எய்த, தாரு வளர் பொன்-தலனிடைக் கடிது சார்ந்தாள். 70-2