கம்பராமாயணம்/சுந்தர காண்டம்/கிங்கரர் வதைப் படலம்

அனுமனைப் பிடித்து வர இராவணன் ஆணையிடுதல்

தொகு

அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி வெருவரு முழக்கும், ஈசன் வில் இறும் ஒலியும், என்ன, குரு மணி மகுட கோடி முடித் தலை குலுங்கும் வண்ணம், இருபது செவியினூடும் நுழைந்தது, அவ் எழுந்த ஓசை. 1

புல்லிய முறுவல் தோன்ற, பொறாமையும் சிறிது பொங்க, எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி, 'வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றி, கொல்லலிர் குரங்கை, நொய்தின் பற்றுதிர், கொணர்திர்' என்றான். 2

அரக்க வீரர் போருக்குச் செல்லுதல்

சூலம், வாள், முசலம், கூர் வேல், தோமரம், தண்டு, பிண்டி, பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர்; ஆலமே அனைய மெய்யர்; அகலிடம் அழிவு செய்யும் காலம் மேல்எழுந்த மூரிக் கடல் என, கடிது செல்வார். 3

'நானிலம்அதனில் உண்டு போர்' என நவிலின், அச் சொல், தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர், தெரிந்தும் என்னின், கானினும் பெரியர்; ஓசை கடலினும் பெரியர்; கீர்த்தி வானினும் பெரியர்; மேனி மலையினும் பெரியர் மாதோ! 4

திருகுறும் சினத்து, தேவர், தானவர், என்னும் தெவ்வர் இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார்; 'வசை ஆம், ஈது ஒர் பொரு குறும்பு ஏன்று, வென்றி புணர்வது; பூ உண் வாழ்க்கை ஒரு குறுங் குரங்கு!' என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்; 5

கட்டிய வாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத் தட்டிய தோளர்; மேகம் தடவிய கையர்; வானை எட்டிய முடியர்; தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக் கொட்டிய பேரி என்ன, மழை என, குமுறும் சொல்லார்; 6

வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள், மற்றைத் தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்; யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர்; ஈன்ற கூனல்வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும் கண்ணர்; 7

சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிசம், சங்கு, முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம், வேல், சூலம், முட்கோல், பொன் கரக் குலிசம், பாசம், புகர் மழு, எழு பொன் குந்தம், வில், கருங் கணை, விட்டேறு, கழுக்கடை, எழுக்கள் மின்ன. 8

பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்; மின் நின்ற படையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்; 'என்?' என்றார்க்கு, 'என்? என்?' என்றார்; எய்தியது அறிந்திலாதார்; முன் நின்றார் முதுகு தீய, பின் நின்றார் முடுகுகின்றார். 9

வெய்துறு படையின் மின்னர்; வில்லினர்; வீசு காலர்; மையுறு விசும்பின் தோன்றும் மேனியர்; மடிக்கும் வாயர்; கை பரந்து உலகு பொங்கிக் கடையுகம் முடியும்காலை, பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார். 10

'பனி உறு செயலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா! தனி ஒரு குரங்கு போலாம்! நன்று நம் தருக்கு!' என்கின்றார்; 'இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின்?' என்று இரைத்துப் பொங்கி, முனிவுறு மனத்தின் தாவி, முந்துற முடுகுகின்றார். 11

எற்றுறு முரசும், வில், நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும், சுற்றுறு கழலும், சங்கும், தெழி தெழித்து உரப்பும் சொல்லும், உற்று உடன்று ஒன்றாய், ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில் நல் திரைக் கடல்களோடு மழைகளை, நா அடக்க. 12

'தெரு இடம் இல்' என்று எண்ணி, வானிடைச் செல்கின்றாரும், புருவமும் சிலையும் கோட்டி, புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும், ஒருவரின் ஒருவர் முந்தி, முறை மறுத்து உருக்கின்றாரும், 'விரிவு இலது இலங்கை' என்று, வழி பெறார் விளிக்கின்றாரும். 13

வாள் உறை விதிர்க்கின்றாரும், வாயினை மடிக்கின்றாரும், தோள் உறத் தட்டிக் கல்லைத் துகள்படத் துகைக்கின்றாரும், தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும், கோள் வளை எயிறு தின்று தீ எனக் கொதிக்கின்றாரும், 14

அனைவரும், மலை என நின்றார்; அளவு அறு படைகள் பயின்றார்; அனைவரும், அமரின் உயர்ந்தார்; அகலிடம் நெளிய நடந்தார்; அனைவரும், வரனின் அமைந்தார்; அசனியின் அணிகள் அணிந்தார்; அனைவரும், அமரரை வென்றார்; அசுரரை உயிரை அயின்றார். 15

குறுகின கவசரும், மின்போல் குரை கழல் உரகரும், வன் போர் முறுகின பொழுதின், உடைந்தார் முதுகிட, முறுவல் பயின்றார்; இறுகின நிதியின் கிழவன் இசை கெட, அளகை எறிந்தார்; தெறுகுநர் இன்மையின், வன் தோள், தினவுற உலகு திரிந்தார். 16

'வரைகளை இடறுமின்' என்றால், 'மறி கடல் பருகுமின்' என்றால், 'இரவியை விழ விடும்' என்றால், 'எழு மழை பிழியுமின்' என்றால், 'அரவினது அரசனை, ஒன்றோ, தரையினொடு அரையுமின்' என்றால், 'தரையினை எடும், எடும்' என்றால், ஒருவர் அது அமைதல் சமைந்தார். 17

தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற, வெம் போர் மீளியின் இனம் என, வன் தாள் விரை புவி நிரை என, விண் தோய் ஆளியின் அணி என, அன்றேல், அலை கடல் விடம் என, அஞ்சார், வாளியின் விசைகொடு திண் கார் வரை வருவன என, வந்தார். 18

அனுமன் இருக்கும் பொழிலைக் கிங்கரர் சுற்றி வளைத்தல்

பொறி தர விழி, உயிர் ஒன்றோ? புகை உக, அயில் ஒளி மின்போல் 'தெறி தர, உரும் அதிர்கின்றார்; திசைதொறும் விசைகொடு சென்றார் எறிதரு கடையும் வன் கால் இடறிட, உடுவின் இனம் போய் மறிதர, மழை அகல் விண்போல் வடிவு அழி பொழிலை, வளைந்தார். 19

அரக்க வீரர் போருக்கு வருவது கண்டு அனுமன் உவத்தல்

வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி முரசு ஒலி, மண்பால் உயிர் உலைவுற நிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்; வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட, வெளியிடை, விண் நோய் கயிலையின்மலை என நின்றான்; அனையவர் வரு தொழில் கண்டான். 20

'இத இயல் இது' என, முந்தே இயைவுற இனிது தெரிந்தான்; பத இயல் அறிவு பயத்தால், அதின் நல பயன் உளது உண்டோ? சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் உதவு இயல் இனிதின் உவந்தான்,-எவரினும் அதிகம் உயர்ந்தான். 21

வீரர்கள் படைகளை ஏவ அனுமன் ஒரு மரத்தால் அவர்களை எதிர்த்தல்

'இவன்! இவன்! இவன்!' என நின்றார்; 'இது!' என, முதலி எதிர்ந்தார்;- பவனனின் முடுகி நடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்- புவனியும், மலையும் விசும்பும், பொரு அரு நகரும், உடன் போர்த் துவனியில் அதிர, விடம்போல் சுடர் விடு படைகள் துரந்தார். 22

மழைகளும், மறி கடலும், போய் மதம் அற முரசம் அறைந்தார்; முழைகளின் இதழ்கள் திறந்தார்; முது புகை கதுவ முனிந்தார்; பிழை இல பட அரவின் தோள் பிடர் உற, அடி இடுகின்றார்; கழை தொடர் வனம் எரியுண்டாலென, எறி படைஞர் கலந்தார். 23

அறவனும் அதனை அறிந்தான்; அருகினில் அழகின் அமைந்தார் இறவினின் உதவு நெடுந் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான்; உற வரு துணை என அன்றோ, உதவிய அதனை, உவந்தான்; நிறை கடல் கடையும் நெடுந் தாள் மலை என, நடுவண் நிமிர்ந்தான். 24

பருவரை புரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால் சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்; ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்- அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான். 25

அனுமனை எதிர்த்து, அரக்க வீரர் பலர் இறந்துபடுதல்

பறை புரை விழிகள் பறிந்தார்; படியிடை நெடிது படிந்தார்; பிறை புரை எயிறும் இழந்தார்; பிடரொடு தலைகள் பிளந்தார்; குறை உயிர் சிதற நெரிந்தார்; குடரொடு குருதி குழைந்தார்;- முறை முறை படைகள் எறிந்தார்-முடை உடல் மறிய முறிந்தார். 26

புடையொடு விடு கனலின் காய் பொறியிடை, மயிர்கள் புகைந்தார்; தொடையொடு முதுகு துணிந்தார்; சுழிபடு குருதி சொரிந்தார்; படை இடை ஒடிய, நெடுந் தோள் பறி தர, வயிறு திறந்தார்; இடை இடை, மலையின் விழுந்தார்-இகல் பொர முடுகி எழுந்தார். 27

புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது புரண்டார்; விதைபடும் உயிரர் விழுந்தார்; விளியொடு விழியும் இழந்தார்; கதையொடு முதிர மலைந்தார், கணை பொழி சிலையர் கலந்தார், உதைபட உரனும் நெரிந்தார்; உயிரொடு குருதி உமிழ்ந்தார். 28

அயல், அயல், மலையொடு அறைந்தான்; அடு பகை அளகை அடைந்தார்; வியல் இடம் மறைய விரிந்தார்; மிசை உலகு அடைய மிடைந்தார்; புயல் தொடு கடலின் விழுந்தார்; புடை புடை சிதைவொடு சென்றார். உயர்வுற விசையின் எறிந்தான்; உடலொடும் உலகு துறந்தார். 29

பற்றித் தாளொடு தோள் பறித்து எறிந்தனன்; பாரின், இற்ற வெஞ் சிறை வெற்புஇனம் ஆம் எனக் கிடந்தார்; கொற்ற வாலிடைக் கொடுந் தொழில் அரக்கரை அடங்கச் சுற்றி வீசலின், பம்பரம் ஆம் எனச் சுழன்றார். 30

வாள்கள் இற்றன; இற்றன வரி சிலை; வயிரத் தோள்கள் இற்றன; இற்றன சுடர் மழுச் சூலம்; நாள்கள் இற்றன; இற்றன நகை எயிற்று ஈட்டம்; தாள்கள் இற்றன; இற்றன படையுடைத் தடக் கை. 31

தெறித்த வன் தலை; தெறித்தன செறி சுடர்க் கவசம்; தெறித்த பைங் கழல்; தெறித்தன சிலம்பொடு பொலந் தார்; தெறித்த பல் மணி; தெறித்தன பெரும் பொறித் திறங்கள்; தெறித்த குண்டலம்; தெறித்தன கண் மணி சிதறி. 32

உக்க பற் குவை; உக்கன, துவக்கு எலும்பு உதிர்வுற்று; உக்க முற்கரம்; உக்கன, முசுண்டிகள் உடைவுற்று; உக்க சக்கரம்; உக்கன, உடல் திறந்து உயிர்கள்; உக்க கப்பணம்; உக்கன, உயர் மணி மகுடம். 33

தாள்களால் பலர், தடக் கைகளால் பலர், தாக்கும் தோள்களால் பலர், சுடர் விழியால் பலர், தொடரும் கோள்களால் பலர், குத்துகளால் பலர், தம் தம் வாள்களால் பலர், மரங்களினால் பலர்,-மடிந்தார். 34

ஈர்க்க, பட்டனர் சிலர்; சிலர் இடிப்புண்டு பட்டார்; பேர்க்க, பட்டனர் சிலர்; சிலர் பிடியுண்டு பட்டார்; ஆர்க்க, பட்டனர் சிலர்; சிலர் அடியுண்டு பட்டார்; பார்க்க, பட்டனர் சிலர்; சிலர் பயமுண்டு பட்டார். 35

ஓடிக் கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும் கூடிக் கொன்றனன் சிலவரை; கொடி நெடு மரத்தால் சாடிக் கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித் தேடிக் கொன்றனன் சிலவரை-கறங்கு எனத் திரிவான். 36

முட்டினார் பட, முட்டினான்; முறை முறை முடுகிக் கிட்டினார் பட, கிட்டினான்; கிரி என நெருங்கிக் கட்டினார் பட, கட்டினான்; கைகளால் மெய்யில் தட்டினார் பட, தட்டினான்-மலை எனத் தகுவான். 37

உறக்கினும் கொல்லும்; உணரினும் கொல்லும்; மால் விசும்பில் பறக்கினும் கொல்லும்; படரினும் கொல்லும்; மின் படைக் கை, நிறக் கருங் கழல், அரக்கர்கள் நெறிதொறும் பொறிகள் பிறக்க நின்று எறி படைகளைத் தடக் கையால் பிசையும். 38

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய, நீறு சேர் நெடுந் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப, ஆறுபோல் வரும் குருதி, அவ் அனுமனால் அலைப்புண்டு, ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ் இலங்கை. 39

அனுமன் பெரும் போர் விளைத்தல்

கருது காலினும், கையினும், வாலினும் கட்டி, சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான்; நிருதர், எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்; குருதி சாறு எனப் பாய்வது, குரை கடல் கூனின். 40

எடுத்து அரக்கரை எறிதலும், அவர் உடல் எற்ற, கொடித் திண் மாளிகை இடிந்தன; மண்டபம் குலைந்த; தடக் கை யானனகள் மறிந்தன; கோபுரம் தகர்ந்த; பிடிக் குலங்களும் புரவியும் அவிந்தன, பெரிய. 41

தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்; தம் தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்; தம் தம் மாக்களைத் தம் படையால் சிலர் தடிந்தார்;- எற்றி மாருதி தடக் கைகளால் விசைத்து எறிய. 42

ஆடல் மாக் களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளி, 'வீடு நோக்கியே செல்க' என்று, சிலவரை விட்டான்; கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்; ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான். 43

தரு எலாம் உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து உரு எலாம் உடல்; உவரி எலாம் உடல்; உள்ளூர்க் கரு எலாம் உடல்; காயம் எலாம் உடல்; அரக்கர் தெரு எலாம் உடல்; தேயம் எலாம் உடல்-சிதறி. 44

ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்;- தான், எலாரையும், மாருதி சாடுகை தவிரான்;- மீன் எலாம் உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல் வான் எலாம் உயிர்; மற்றும் எலாம் உயிர்-சுற்றி. 45

அரக்கர்களின் நடுவே அனுமன் விளங்கிய காட்சி

ஆக இச் செரு விளைவுறும் அமைதியின், அரக்கர் மோகம் உற்றனர் ஆம் என, முறை முறை முனிந்தார்; மாகம் முற்றவும், மாதிரம் முற்றவும், வளைந்தார், மேகம் ஒத்தனர்-மாருதி வெய்யவன் ஒத்தான். 46

அடல் அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலின், அயரப் புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின் பொலிவின், மிடல் அயில் படை மின் என விலங்கலின், கலங்கும் கடல் நிகர்த்தனர்-மாருதி மந்தரம் கடுத்தான். 47

கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ, நிரை மணித் தலை நெரிந்து உக, சாய்ந்து உயிர் நீப்பார், சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள், தொடரும் உரகர் ஒத்தனர்-அனுமனும் கலுழனே ஒத்தான். 48

மானம் உற்ற தம் பகையினால், முனிவுற்று வளைந்த மீனுடைக் கடல் உலகினின், உள எலாம் மிடைந்த ஊன் அறக் கொன்று துகைக்கவும், ஒழிவு இலா நிருதர் ஆனை ஒத்தனர்-ஆள் அரி ஒத்தனன் அனுமன். 49

அனுமன் விழுப் புண் பட்டு நிற்றல்

எய்த, எற்றின, எறிந்தன, ஈர்த்தன, இகலின் பொய்த, குத்தின, பொதுத்தன, துளைத்தன, போழ்ந்த, கொய்த, சுற்றின, பற்றின, குடைந்தன, பொலிந்த ஐயன் மல் பெரும் புயத்தன, புண் அளப்பு அரிதால். 50

விண்ணவர் அனுமனைப் புகழ்தல்

கார்க் கருந் தடங் கடல்களும், மழை முகில் கணனும், வேர்க்க, வெஞ் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் போர்க் குழாத்து எழு பூசலின், ஐயனைப் புகழ்வுற்று ஆர்க்கும் விண்ணவர் அமலையே, உயர்ந்தது, அன்று அமரில். 51

தேவர் முதலியோர் பூமாரி பொழிதல்

மேவும் வெஞ் சினத்து அரக்கர்கள், முறை முறை, விசையால் ஏவும் பல் படை, எத்தனை கோடிகள் எனினும், தூவும் தேவரும், மகளிரும், முனிவரும் சொரிந்த பூவும், புண்களும், தெரிந்தில, மாருதி புயத்தில். 52

அரக்க வீரர்கள் அழிவு

பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும் பெயர்வின், உயர்க்கும் விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து உறலின், அயர்ந்து வீழ்ந்தனர், அழிந்தனர், அரக்கராய் உள்ளார்; வெயர்த்திலன் மிசை; உயிர்த்திலன் - நல் அற வீரன். 53

எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம்; இராவணன் ஏவ, நஞ்சம் உண்டவராம் என அனுமன்மேல் நடந்தார்; துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று, எஞ்சினார் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே? 54

கிங்கரர் மடிந்ததைக் காவலர் இராவணனுக்கு உணர்த்துதல்

வந்த கிங்கரர் 'ஏ' எனும் மாத்திரை மடிந்தார்; நந்தவானத்து நாயகர் ஓடினர், நடுங்கி, பிந்து காலினர், கையினர்; பெரும் பயம் பிடரின் உந்த, ஆயிரம் பிணக் குவைமேல் விழுந்து உளைவார். 55

விரைவின் உற்றனர்; விம்மினர்; யாது ஒன்றும் விளம்பார்; கரதலத்தினால், பட்டதும், கட்டுரைக்கின்றார்; தரையில் நிற்கிலர்; திசைதொறும் நோக்கினர், சலிப்பார்; அரசன், மற்றவர் அலக்கணே உரைத்திட, அறிந்தான். 56

இராவணன் வினாவும், காவலர் விடையும்

'இறந்து நீங்கினரோ? இன்று, என் ஆணையை இகழ்ந்து துறந்து நீங்கினரோ? அன்றி, வெஞ் சமர் தொலைந்தார் மறந்து நீங்கினரோ? என்கொல் வந்தது?' என்று உரைத்தான் - நிறம் செருக்குற, வாய்தொறும் நெருப்பு உமிழ்கின்றான். 57

'சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார் அலந்திலர்; செருக்களத்து அஞ்சினார் அலர்; புலம் தெரி பொய்க் கரி புகலும் புன்கணார் குலங்களின், அவிந்தனர், குரங்கினால்' என்றார். 58

காவலர் உரையை நம்பாது, மீண்டும் இராவணன் வினவுதல்

ஏவலின் எய்தினர் இருந்த எண் திசைத் தேவரை நோக்கினான், நாணும் சிந்தையான்; 'யாவது என்று அறிந்திலிர் போலுமால்?' என்றான் - மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான். 59

மீட்டு அவர் உரைத்திலர்; பயத்தின் விம்முவார்; தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான், 'வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை, கேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர்' என்றான். 60

'கண்களால் கண்டனம்' என்றனர் காவலர்

'கண்டனம், ஒருபுடை நின்று, கண்களால்; தெண் திரைக் கடல் என வளைந்த சேனையை, மண்டலம் திரிந்து, ஒரு மரத்தினால், உயிர் உண்டது, அக் குரங்கு; இனம் ஒழிவது அன்று' என்றார்; 61

மிகைப் பாடல்கள்

ஓசையின் இடிப்பும் கேட்டு, ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி, 'ஈசன் மால் எனினும் ஒவ்வாது, ஈது ஒரு குரங்கு போலாம்! கூசிடாது இலங்கை புக்கு, இக் குல மலர்ச் சோலையோடு மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று!' என்ன நக்கான். 1-1

என்றலும், இரு கை கூப்பி, இரு நிலம் நுதலில் தோய, சென்று அடி பணிந்து, 'மண்ணும் தேவரும் திசையும் உட்க, வென்றி அன்று எனினும், வல்லே விரைந்து நாம் போகி, வீரக் குன்று அன குரங்கைப் பற்றிக் கொணர்தும்' என்று இசைத்துப் போனார். 2-1

அதுபொழுது, அவர் அது கண்டார்; அடு படை பலவும் எறிந்தார்; கதிகொடு சிலவர் தொடர்ந்தார்; கணை பலர் சிலைகள் பொழிந்தார்; குதிகொடு சிலவர் எழுந்தே குறுகினர், கதைகொடு அறைந்தார்; மதியொடு சிலவர் வளைந்தார்; மழு, அயில், சிலவர் எறிந்தார். 24-1

அனுமனும், அவர் விடு படையால், அவர் உடல் குருதிகள் எழவே, சின அனல் எழ, ஒரு திணி மா மரம்அதில் உடல் சிதறிடவும், தனுவொடு தலைதுகள்படவும், சர மழை பல பொடிபடவும், தினவு உறு புயம் ஒடிபடவும், திசை திசை ஒரு தனி திரிவான். 24-2

உரைத்த எண்பதினாயிர கோடி கிங்கரரோடு இரைத்து வந்த மாப் பெரும் படை அரக்கர் எண்ணிலரைத் தரைத்தலத்தின் இட்டு அரைத்து, ஒரு தமியன் நின்றது கண்டு, உருத்து அவ் எண்பதினாயிர கோடியர் உடன்றார். 39-1

சினந்து மற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி, கனம் துவன்றியது என, கரு மலை என, கடல் போல்- அனந்தனும் தலை துளக்குற, அமரர்கள் அரவின் மனம் துளக்குற, வளைத்தனர்,-எண் திசை மருங்கும். 39-2

எடுத்து எறிந்தனர் எழு மழுச் சிலர்; சிலர் நெருக்கித் தொடுத்து எறிந்தனர் சூலங்கள்; சுடு கதைப் படையால் அடித்து நின்றனர் சிலர்; சிலர் அருஞ் சிலைப் பகழி விடுத்து நின்றனர்-வெய்யவர் விளைந்த வெஞ் செருவே. 39-3

ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார்இனங்கள் வளைந்து பொன் கிரிமேல் விழும் இடி என, மறவோர் பொழிந்த பல் படை யாவையும் புயத்திடைப் பொடிபட்டு அழுந்த, மற்றவரோடும் வந்து அடுத்தனன், அனுமன். 39-4

'கட்டும்' என்றனர்; 'குரங்கு இது கடிய கைப் படையால் வெட்டும்' என்றனர்; விழி வழி நெருப்பு உக, விறலோர் கிட்டி நின்று அமர் விளைத்தனர்; மாருதி கிளர் வான் முட்டும் மா மரம் ஒன்று கொண்டு, அவருடன் முனைந்தான். 39-5

தலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின் நிலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; நெருக்கிச் சிலை ஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; வயப் போர்க் கலை ஒடிந்திட அடித்தனன், அரக்கர்கள் கலங்க. 40-1

என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி, கன்றிய பவழச் செவ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி, ஒன்று உரையாடற்கு இல்லான், உடலமும் விழியும் சேப்ப, நின்ற வாள் அரக்கர்தம்மை நெடிதுற நோக்கும்காலை. 61-1