கம்பராமாயணம்/சுந்தர காண்டம்/சம்புமாலி வதைப் படலம்

அனுமனைப் பிணித்து வருமாறு சம்புமாலியை இராவணன் ஏவுதல்

தொகு

கூம்பின கையன், நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள், பாம்பு இவர் தறுகண், சம்புமாலி என்பவனைப் பாரா, 'வாம் பரித் தானையோடு வளளத்து, அதன் மறனை மாற்றி, தாம்பினின் பற்றி, தந்து, என் மனச் சினம் தணித்தி' என்றான். 1

சம்புமாலி இராவணனை வணங்கி, போருக்குப் புறப்படுதல்

ஆயவன் வணங்கி, 'ஐய! அளப்பரும் அரக்கர் முன்னர், "நீ இது முடித்தி" என்று நேர்ந்தனை; நினைவின் எண்ணி ஏயினை; என்னப்பெற்றால், என்னின் யார் உயர்ந்தார்?' என்னா, போயினன், இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான். 2

சம்புமாலியுடன் சென்ற சேனைகள்

தன்னுடைத் தானையோடும், தயமுகன், 'தருக' என்று ஏய மன்னுடைச் சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின் மின்னுடைப் பரவையோடும், வேறுளோர் சிறப்பின் விட்ட பின்னுடை அனிகத்தோடும், பெயர்ந்தனன்,-பெரும் போர் பெற்றான். 3

உரும் ஒத்த முழக்கின், செங் கண், வெள் எயிற்று, ஓடை நெற்றி, பருமித்த கிரியின் தோன்றும், வேழமும்-பதுமத்து அண்ணல் நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய, நேமி, சொரி முத்த மாலை சூழும், துகிற்கொடி, தடந் தேர்-சுற்ற; 4

காற்றினை மருங்கில் கட்டி, கால் வகுத்து, உயிரும் கூட்டி, கூற்றினை ஏற்றியன்ன குலப் பரி குழுவ; குன்றின் தூற்றினின் எழுப்பி, ஆண்டு, தொகுத்தென, கழல் பைங் கண்ண வேற்று இனப் புலிஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம். 5

தோமரம், உலக்கை, கூர் வாள், சுடர் மழு, குலிசம், தோட்டி, தாம் அரம் தின்ற கூர் வேல், தழல் ஒளி வட்டம், சாபம், காமர் தண்டு, எழுக்கள், காந்தும் கப்பணம், கால பாசம், மா மரம், வலயம், வெங் கோல், முதலிய வயங்க மாதோ. 6

எத்திய அயில், வேல், குந்தம், எழு, கழு முதல ஏந்தி, குத்திய-திளைப்ப; மீதில் குழுவின மழை மாக் கொண்டல் பொத்து உகு பொரு இல் நல் நீர் சொரிவன போவ போல, சித்திரப் பதாகை ஈட்டம் திசைதொறும் செறிவ செல்வ; 7

பல்லியம் துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரல, பொன் தேர்ச் சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திட, செறி பொன் தாரும் வில்லும் நின்று இசைப்ப, யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப, விண் தோய் ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ; 8

மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற, தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம் என்ன- அன்னவன் சேனை செல்ல, ஆர்கலி இலங்கை ஆய பொன் நகர் தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப. 9

ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம், ஆழி அம் தடந் தேர்; அத் தேர்க்கு ஏயின் இரட்டி யானை; யானையின் இரட்டி பாய் மா; போயின பதாதி, சொன்ன புரவியின் இரட்டி போலாம்- தீயவன் தடந் தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை. 10

வில் மறைக் கிழவர்; நானா விஞ்சையர்; வரத்தின் மிக்கார்; வன் மறக் கண்ணர்; ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார்; தொல் மறக் குலத்தர்; தூணி தூக்கிய புறத்தர்; மார்பின் கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர்-கடுந் தேர் ஆட்கள். 11

பொரு திசை யானை ஊரும் புனிதரைப் பொருவும் பொற்பர்; சுரிபடைத் தொழிலும், மற்றை அங்குசத் தொழிலும், தொக்கார்; நிருதியின் பிறந்த வீரர்; நெருப்பு இடை பரப்பும் கண்ணர்; பரிதியின் பொலியும் மெய்யர்-படு மதக் களிற்றின் பாகர். 12

ஏர் கெழு கதியும், சாரி பதினெட்டும், இயல்பின் எண்ணிப் போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர், போரில், தேர் கெழு மறவர், யானைச் சேவகர், சிரத்தில் செல்லும் தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவப் போனார். 13

அந் நெடுந் தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற, பொன் நெடுந் தேரில் போனான் - பொருப்பிடை நெருப்பின் பொங்கி, தன் நெடுங் கண்கள் காந்த, தாழ் பெருங் கவசம் மார்பில் மின்னிட, வெயிலும் வீச,-வில் இடும் எயிற்று வீரன். 14

தோரண வாயில் மேல் ஏறி, அனுமன் ஆர்ப்பரித்தல்

நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்தானும், 'வந்திலர் அரக்கர்' என்னும் மனத்தினன், வழியை நோக்கி, சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து, நின்றான். 15

கேழ் இரு மணியும் பொன்னும், விசும்பு இருள் கிழித்து நீக்கும், ஊழ் இருங் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான், சூழ் இருங் கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி, ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான். 16

செல்லொடு மேகம் சிந்த, திரைக் கடல் சிலைப்புத் தீர, கல் அளைக் கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால, கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம், வீரன் வில் என இடிக்க, விண்ணோர் நடுக்குற, வீரன் ஆர்த்தான். 17

நின்றன திசைக்கண் வேழம் நெடுங் களிச் செருக்கு நீங்க, தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென, சிந்தி வானில் பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர, பூவும் குன்றமும் பிளக்க, வீரன் புயத்திடைக் கொட்டி ஆர்த்தான். 18

அனுமனை அணுக முடியாது அரக்க வீரர் தவித்தல்

அவ் வழி, அரக்கர் எல்லாம், அலை நெடுங் கடலின் ஆர்த்தார்; செவ் வழிச் சேறல் ஆற்றார், பிணப் பெருங் குன்றம் தெற்றி, வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க, 'எவ் வழிச் சேறும்' என்றார்; தமர் உடம்பு இடறி வீழ்வார். 19

சம்புமாலி அணி வகுத்துவர, அனுமன் மகிழ்ந்து போருக்கு அமைந்து நிற்றல்

ஆண்டு நின்று, அரக்கன், வெவ்வேறு அணி வகுத்து, அனிகம்தன்னை, மூண்டு இரு புடையும், முன்னும், முறை முறை முடுக ஏவி, தூண்டினன், தானும் திண் தேர்; தோரணத்து இருந்த தோன்றல், வேண்டியது எதிர்ந்தான் என்ன, வீங்கினன், விசயத் திண் தோள். 20

ஐயனும், அமைந்து நின்றான், ஆழியான் அளவின் நாமம் நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக, மொய் மயிர்ச் சேனை பொங்க, முரண் அயில் உகிர்வாள் மொய்த்த கைகளே கைகள் ஆக, கடைக் கூழை திரு வால் ஆக. 21

அரக்கர்கள் படை துகள் பட அனுமன் கடும் போர் செய்தல்

வயிர்கள் வால் வளைகள் விம்ம, வரி சிலை சிலைப்ப, மாயப் பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப, மூரிப் பல்லியம் குமுற, பற்றி- செயிர் கொள் வாள் அரக்கர், சீற்றம் செருக்கினர்,-படைகள் சிந்தி, வெயில்கள்போல் ஒளிகள் வீச, வீரன் மேல் கடிது விட்டார். 22

கருங் கடல் அரக்கர்தம் படைக்கலம் கரத்தால் பெருங் கடல் உறப் புடைத்து, இறுத்து, உக, பிசைந்தான்; விரிந்தன பொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு, ஆண்டு இருந்தவன், கிடந்தது ஓர் எழுத் தெரிந்து எடுத்தான். 23

இருந்தனன், எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான், திரிந்தனன், புரிந்தனன், என நனி தெரியார்; விரிந்தவர், குவிந்தவர், விலங்கினர், கலந்தார், பொருந்தினர், நெருங்கினர், களம் படப் புடைத்தான். 24

எறிந்தன, எய்தன, இடி உரும் என மேல் செறிந்தன படைக்கலம், இடக் கையின் சிதைத்தான்,- முறிந்தன தெறும் கரி; முடிந்தன தடந் தேர்; மறிந்தன பரி நிரை-வலக் கையின் மலைந்தான். 25

நாற்படைகளும் அழிந்தொழிதல்

இழந்தன நெடுங் கொடி; இழந்தன இருங் கோடு; இழந்தன நெடுங் கரம்; இழந்தன வியன் தாள்; இழந்தன முழங்கு ஒலி; இழந்தன மதம் பாடு; இழந்தன பெருங் கதம்-இருங் கவுள் யானை. 26

நெரிந்தன தடஞ் சுவர்; நெரிந்தன பெரும் பார்; நெரிந்தன நுகம் புடை; நெரிந்தன அதன் கால்; நெரிந்தன கொடிஞ்சிகள்; நெரிந்தன வியன் தார்; நெரிந்தன கடும் பரி; நெரிந்தன நெடுந் தேர். 27

ஒடிந்தன; உருண்டன; உலந்தன; புலந்த; இடிந்தன; எரிந்தன; நெரிந்தன; எழுந்த; மடிந்தன; மறிந்தன; முறிந்தன; மலைபோல், படிந்தன; முடிந்தன; கிடந்தன-பரி மா. 28

வெகுண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்; மருண்டனர், மயங்கினர், மறிந்தனர், இறந்தார்; உருண்டனர், உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்; சுருண்டனர், புரண்டார், தொலைந்தனர்;-மலைந்தார். 29

அனுமனின் போர் விநோதம்

கரிகொடு கரிகளைக் களப் படப் புடைத்தான்; பரிகொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான்; வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்; நிரை மணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான். 30

மூளையும் உதிரமும் முழங்கு இருங் குழம்பு ஆய் மீள் இருங் குழைபட, கரி விழுந்து அழுந்த, தாளொடும் தலை உக, தட நெடுங் கிரிபோல் தோளொடும் நிருதரை, வாளொடும்-துகைத்தான். 31

மல்லொடு மலை மலைத் தோளரை, வளை வாய்ப் பல்லொடும், நெடுங் கரப் பகட்டொடும், பருந் தாள் வில்லொடும், அயிலொடும், விறலொடும், விளிக்கும் சொல்லொடும், உயிரொடும், நிலத்தொடும்,-துகைத்தான். 32

புகை நெடும் பொறி புகும் திசைதொறும் பொலிந்தான்; சிகை நெடுஞ் சுடர் விடும் தேர்தொறும் சென்றான்; தகை நெடுங் கரிதொறும், பரிதொறும், சரித்தான்; நகை நெடும் படைதொறும், தலைதொறும், நடந்தான். 33

வென்றி வெம் புரவியின் வெரிநினும், விரவார் மன்றல் அம் தார் அணி மார்பினும், மணித் தேர் ஒன்றின்நின்று ஒன்றினும், உயர் மத மழை தாழ் குன்றினும், -கடையுகத்து உரும் எனக் குதித்தான். 34

பிரிவு அரும் ஒரு பெருங் கோல் என, பெயரா இருவினை துடைத்தவர் அறிவு என, எவர்க்கும் வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் தெரிவையர் மனம் என, கறங்கு என,-திரிந்தான். 35

அண்ணல்-அவ் அரியினுக்கு அடியவர் அவன் சீர் நண்ணுவர் எனும் பொருள் நவை அறத் தெரிப்பான், மண்ணினும், விசும்பினும், மருங்கினும், வலித்தார் கண்ணினும், மனத்தினும்,-தனித் தனி கலந்தான். 36

கொடித் தடந் தேரொடும் குரகதக் குழுவை அடித்து, ஒரு தடக் கையின் நிலத்திடை அரைத்தான்; இடித்து நின்று அதிர் கதத்து, எயிற்று வன் பொருப்பை, பிடித்து, ஒரு தடக் கையின், உயிர் உகப் பிழிந்தான். 37

கறுத்து எழு நிறத்தினர், எயிற்றினர், கயிற்றார், செறுத்து எரி விழிப்பவர், சிகைக் கழு வலத்தார், மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார், ஒறுத்து, உருத்திரன் என, தனித் தனி உதைத்தான். 38

சக்கரம், தோமரம், உலக்கை, தண்டு, அயில், வாள், மிக்கன தேர், பரி, குடை, கொடி, விரவி உக்கன; குருதிஅம் பெருந் திரை உருட்டிப் புக்கன கடலிடை, நெடுங் கரப் பூட்கை. 39

எட்டின விசும்பினை;-எழுப் பட எழுந்த- முட்டின மலைகளை; முயங்கின திசையை; ஒட்டின ஒன்றை ஒன்று; ஊடு அடித்து உதைந்து தட்டுமுட்டு ஆடின, தலையொடு-தலைகள். 40

சேனையின் அழிவு கண்டு, சம்புமாலி சீற்றத்தோடு போருக்கு விரைதல்

கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி கொன்ற வானே எய்த, தனியே நின்ற மத மால் வரை ஒப்பான், தேனே புரை கண் கனலே சொரிய, சீற்றம் செருக்கினான், தானே ஆனான்-சம்புமாலி, காலன் தன்மையான். 41

காற்றின் கடிய கலினப் புரவி நிருதர் களத்து உக்கார்; ஆற்றுக் குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெருங் கொள்ளைச் சேற்றில் செல்லாத் தேரின் ஆழி ஆழும்; நிலை தேரா, வீற்றுச் செல்லும் வெளியோ இல்லை; அளியன் விரைகின்றான். 42

தனித்து நின்ற சம்புமாலியிடம் அனுமன் இரக்கமுற்று மொழிதல்

'ஏதி ஒன்றால்; தேரும் அஃதால்; எளியோர் உயிர் கோடல் நீதி அன்றால்; உடன் வந்தாரைக் காக்கும் நிலை இல்லாய்! சாதி; அன்றேல், பிறிது என் செய்தி? அவர் பின் தனி நின்றாய்! போதி' என்றான் -பூத்த மரம்போல் புண்ணால் பொலிகின்றான். 43

சம்புமாலி சினந்து, பற்பல அம்பு எய்ய, அனுமன் எழுவால் தடுத்தல்

'நன்று, நன்று, உன் கருணை!' என்னா, நெருப்பு நக நக்கான்; 'பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை' என்னா, வன் திண் சிலையின் வயிரக் காலால், வடித் திண் சுடர் வாளி, ஒன்று, பத்து, நூறு, நூறாயிரமும், உதைப்பித்தான். 44

'செய்தி, செய்தி, சிலை கைக் கொண்டால், வெறுங் கை திரிவோரை, நொய்தின் வெல்வது அரிதோ?' என்னா, முறுவல் உக நக்கான்; ஐயன், அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன, எய்த எய்த பகழி எல்லாம், எழுவால் அகல்வித்தான். 45

அனுமன் கை எழுவைச் சம்புமாலி அறுத்து வீழ்த்தல்

முற்ற முனிந்தான் நிருதன்; முனியா, முன்னும் பின்னும் சென்று, உற்ற பகழி உறாது, முறியா உதிர்கின்றதை உன்னா, சுற்றும் நெடுந் தேர் ஓட்டித் தொடர்ந்தான்; தொடரும் துறை காணான்; வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான். 46

சம்புமாலியை அனுமன் கொல்லுதல்

சலித்தான் ஐயன்; கையால், எய்யும் சரத்தை உகச் சாடி, ஒலித் தார் அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரினுள் புக்கு, கலித்தான் சிலையைக் கையால் வாங்கி, கழுத்தினிடை இட்டு வலித்தான், பகு வாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ. 47

குதித்து, தேரும், கோல் கொள் ஆளும், பரியும், குழம்பு ஆக மிதித்து, பெயர்த்தும், நெடுந் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்; கதித் துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு, களத்து அஞ்சி, உதித்துப் புலர்ந்த தோல்போல் உருவத்து அமரர் ஓடினார். 48

பரிந்து புலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி, விரிந்த குருதிப் பேராறு ஈர்த்து மனைகள்தொறும் வீச, இரிந்தது இலங்கை; எழுந்தது அழுகை; 'இன்று, இங்கு, இவனாலே சரிந்தது, அரக்கர் வலி' என்று எண்ணி, அறமும் தளிர்த்ததால். 49

சம்புமாலி இறந்த செய்தியைக் காவலர் இராவணனுக்கு அறிவித்தல்

புக்கார் அமரர், பொலந் தார் அரக்கன் பொரு இல் பெருங் கோயில் விக்காநின்றார்; விளம்பல் ஆற்றார்; வெருவி விம்முவார்; நக்கான் அரக்கன்; 'நடுங்கல்' என்றான்; 'ஐய! நமர் எல்லாம் உக்கார்; சம்புவாலி உலந்தான்; ஒன்றே குரங்கு' என்றார். 50

'யானே குரங்கைப் பிடிப்பேன்' என்று இராவணன் எழ, சேனைத் தலைவர் ஐவர் பேசுதல்

என்னும் அளவில், எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான், உன்ன, உன்ன, உதிரக் குமிழி விழியூடு உமிழ்கின்றான், 'சொன்ன குரங்கை, யானே பிடிப்பென், கடிது தொடர்ந்து' என்றான், அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார். 51

மிகைப் பாடல்கள்

அது கண்டு அரக்கன் சினம் திருகி, ஆடற் பகழி அறுநூறு முதிரும் வயப் போர் மாருதிதன் புயத்தில் மூழ்க விடுவித்தான்; புதையுண்டு உருவிப் புறம் போக, புழுங்கி அனுமன் பொடி எழும்பக் குதிகொண்டு, அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதறக் குதித்தனனால் 45-1