கம்பராமாயணம்/சுந்தர காண்டம்/பிணி வீட்டு படலம்

கட்டுப்பட்ட அனுமனைக் கண்ட அரக்கரின் நிலை

தொகு

'எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்;

கொய்யுமின் குடரினை; கூறு கூறுகள்

செய்யுமின்; மண்ணிடைத் தேய்மின்; தின்னுமின்;

உய்யுமேல், இல்லை நம் உயிர்' என்று ஓடுவார். 1


மைத் தடங் கண்ணியர், மைந்தர், யாவரும்,

பைத் தலை அரவு எனக் கனன்று, 'பைதலை

இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ?' எனா,

மொய்த்தனர்; கொலை செய்ய முயல்கின்றார், சிலர். 2


'நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ,

வச்சிர உடல்? மறி கடலின்வாய் மடுத்து,

உச்சியின் அழுத்துமின், உருத்து; அது அன்றுஎனின்,

கிச்சிடை இடும்' எனக் கிளக்கின்றார் சிலர். 3


'

எந்தையை எம்பியை, எம் முனோர்களைத்
தந்தனை போக' என, தடுக்கின்றார் பலர்;
'அந்தரத்து அமரர்தம் ஆணையால், இவன்
வந்தது' என்று, உயிர்கொள மறுகினார் பலர். 4

'ஒங்கல்அம் பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம்; இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம்; இவன் சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம்' என்று அழும் மாதரார் பலர். 5

கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர்
அண்டம் உற்றது, நெடிது ஆர்க்கும் ஆர்ப்புஅது-
கண்டம் உற்றுள அருங் கணவர்க்கு ஏங்கிய
குண்டல முகத்தியர் உவகை கூரவே. 6

இலங்கையின் அழிவுகளை நோக்கிக்கொண்டே அனுமன் செல்லுதல்

வடியுடைக் கனல் படை வயவர், மால் கரி,
கொடியுடைத் தேர், பரி கொண்டு வீசலின்,
இடி படச் சிதைந்த மால் வரையின், இல் எலாம்
பொடிபடக் கிடந்தன கண்டு, போயினான். 7

வழியில் அனுமனைக் கண்ட அரக்கர்களின் நிலை

முயிறு அலைத்து எழு முது மரத்தின், மொய்ம்பு தோள்
கயிறு அலைப்புண்டது கண்டும், காண்கிலாது,
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின், மயங்கினார் பலர். 8

ஆர்ப்பு உற அஞ்சினர்; அடங்கினார் பலர்;
போர்ப்புறச் செயலினைப் புகழ்கின்றார் பலர்;
பார்ப்புற, பார்ப்புற, பயத்தினால் பதைத்து,
ஊர்ப் புறத்து இரியலுற்று ஓடுவார், பலர். 9

'காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு, ஒரு
பூந் துணர் சேர்த்தெனப் பொலியும், வாள் முகம்;
தேர்ந்து, உறு பொருள் பெற எண்ணி, செய்யுமின்;
வேந்து உறல் பழுது' என விளம்புவார், சிலர். 10

'ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி, அன்று, தன்
எளிவரவு; இன்று இதன் எண்ணம் வேறு' எனா,
'களி வரு சிந்தையால் காண்டி! நங்களைச்
சுளிகிலையாம்' எனத் தொழுகின்றார், சிலர். 11

அனுமனைச் சுற்றிய நாகபாசத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் அரக்கர்களின் தன்மை

பைங் கழல் அனுமனைப் பிணித்த பாந்தளை,
கிங்கரர், ஒருபுடைக் கிளர்ந்து பற்றினார்-
ஐம்பதினாயிரர், அளவு இல் ஆற்றலர்.
மொய்ம்பினின் எறுழ் வலிக் கருளன் மும்மையார். 12

அனுமனின் நிலையைக் கண்டோரின் கருத்து

'திண் திறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான்,
தண்டல் இல் தன் உருக் கரந்த தன்மையான்,
மண்டு அமர் தொடங்கினன், வானரத்து உருக்
கொண்டனன், அந்தகன்கொல்?' என்றார் பலர். 13

அரமியத் தலம்தொறும், அம் பொன் மாளிகைத்
தரம் உறு நிலைதொறும், சாளரம்தொறும்,
முரசு எறி கடைதொறும், இரைத்து மொய்த்தனர்-
நிரை வளை மகளிரும், நிருத மைந்தரும். 14

'கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்,
மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியால்,
எயிலுடைத் திரு நகர் சிதைப்ப எய்தினன்,
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய்' என்பார், பலர். 15

அரம்பையர், விஞ்சை நாட்டு அளக வல்லியர்,
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்,
கரும்பு இயல் சித்தியர், இயக்கர் கன்னியர்,
வரம்பு அறு சும்மையர், தலைமயங்கினார். 16

அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர், நெடு மழைக் கண்ணின் நீர்; அது,
விரைக் குழல் சீதைதன் மெலிவு நோக்கியோ?
இரக்கமோ? அறத்தினது எளிமை எண்ணியோ? 17

அடங்கிச் செல்லும் அனுமனின் கருத்து

ஆண் தொழில் அனுமனும், அவரொடு ஏகினான்;
மீண்டிலன்; வேறலும் விரும்பலுற்றிலன்;
'ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனைக்
காண்டலே நலன்' எனக் கருத்தின் எண்ணினான். 18

'எந்தையது அருளினும், இராமன் சேவடி
சிந்தை செய் நலத்தினும், சீதை, வானவர்,
தந்து உள வரத்தினும், தறுகண் பாசமும்
சிந்துவென்; அயர்வுறு சிந்தை சீரிதால்; 19

'வளை எயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து
அளவுறு முதியரும் அறிய, ஆணையால்
விளைவினை விளம்பினால், மிதிலை நாடியை,
இளகினன், என்வயின் ஈதல் ஏயுமால்; 20

'அல்லதூஉம், அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு
எல்லையும் தெரிவுறும்; எண்ணும் தேறலாம்;
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து, உரை
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே; 21

'வாலிதன் இறுதியும், மரத்துக்கு உற்றதும்,
கூல வெஞ் சேனையின் குணிப்பு இலாமையும்,
மேலவன் காதலன் வலியும், மெய்ம்மையான்,
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால். 22

'ஆதலான், அரக்கனை எய்தி, ஆற்றலும்
நீதியும் மனக் கொள நிறுவி, நின்றவும்
பாதியின் மேல்செல நூறி, பைப்பையப்
போதலே கருமம்' என்று, அனுமன் போயினான். 23

இந்திரசித்து அனுமனுடன், இராவணன் மாளிகைக்கு ஏகுதல்

கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும்,
புடை வரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ,
விடை பிணிப்புண்டது போலும் வீரனை,
குடை கெழு மன்னன் இல், கொண்டு போயினான். 24

தூதுவர் நற்செய்தி சொல்ல, இராவணன் அவர்களுக்குப் பரிசு அளித்தல்

தூதுவர் ஓடினர்; தொழுது, தொல்லை நாள்
மாதிரம் கடந்தவற் குறுகி, 'மன்ன! நின்
காதலன் மரை மலர்க் கடவுள் வாளியால்,
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம்' என்றார். 25

கேட்டலும்-கிளர் சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின், யானையின்
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு, எதிர்
நீட்டினன் - உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான். 26

குரங்கைக் கொல்லாது கொணர இராவணன் ஆணையிடல்

எல்லை இல் உவகையால் இவர்ந்த தோளினன்,
புல்லுற மலர்ந்த கண் குமுதப் பூவினன்,
'ஒல்லையின் ஓடி, நீர் உரைத்து, என் ஆணையால்,
"கொல்லலை தருக" எனக் கூறுவீர்" என்றான். 27

அவ் உரை, தூதரும், ஆணையால், வரும்
தெவ் உரை நீக்கினான் அறியச் செப்பினார்;
இவ் உரை நிகழ்வுழி, இருந்த சீதையாம்
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம்; 28


அனுமனுக்கு உற்றதைத் திரிசடை சீதைக்குக் கூறுதல்

'இறுத்தனன் கடி பொழில், எண்ணிலோர் பட
ஒறுத்தனள்' என்று கொண்டு உவக்கின்றாள், உயிர்
வெறுத்தனள் சோர்வுற, வீரற்கு உற்றதை,
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள். 29

சீதை வருந்திப் புலம்புதல்

ஓவியம் புகையுண்டதுபோல், ஒளிர்
பூவின் மெல்லியல் மேனி பொடி உற,
பாவி வேடன் கைப் பார்ப்பு உற, பேதுறும்
தூவி அன்னம் அன்னாள், இவை சொல்லினாள்: 30

'உற்று உண்டாய விசும்பை உருவினாய்,
முற்றுண்டாய்; கலை யாவையும் முற்றுறக்
கற்றுண்டாய்; ஒரு கள்ள அரக்கனால்
பற்றுண்டாய்; இதுவோ அறப் பான்மையே? 31

'கடல் கடந்து புகுந்தனை; கண்டகர்
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை;
அடல் கடந்த திரள் புயத்து ஐய! நீ
இடர்கள் தந்தனை, வந்து இடர் மேலுமே? 32

'ஆழி காட்டி, என் ஆர் உயிர் காட்டினாய்க்கு,
"ஊழி காட்டுவேன்" என்று உரைத்தேன்; அது
வாழி காட்டும் என்று உண்டு; உன் வரைப் புயப்
பாழி காட்டி, அரும் பழி காட்டினாய். 33

'கண்டு போயினை, நீள் நெறி காட்டிட,
"மண்டு போரில் அரக்கனை மாய்த்து, எனைக்
கொண்டு மன்னவன் போம்" எனும் கொள்கையைத்
தண்டினாய்-எனக்கு ஆர் உயிர் தந்த நீ!' 34

ஏய பன்னினள் இன்னன; தன் உயிர்
தேய, கன்று பிடியுறத் தீங்கு உறும்
தாயைப் போல, தளர்ந்து மயங்கினாள்-
தீயைச் சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள். 35

இந்திரசித்து அனுமனை இராவணனது அரண்மனையுள் கொண்டு சேர்த்தல்

பெருந் தகைப் பெரியோனைப் பிணித்த போர்
முருந்தன், மற்றை உலகு ஒரு மூன்றையும்
அருந் தவப் பயனால் அரசு ஆள்கின்றான்
இருந்த, அப் பெருங் கோயில் சென்று எய்தினான்; 36

இராவணன் அரசவையில் வீற்றிருக்கும் காட்சி

தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்தென்ன,
அலங்கல் வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி பரப்ப,
வலம் கொள் தோளினான் மண்நின்றும் வான் உற எடுத்த,
பொலம் கொள் மா மணி, வெள்ளியங்குன்று எனப் பொலிய, 37

புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
தள் இல் முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள்
வள் உகிர்ப் பெருங் குறிகளும், புயங்களில் வயங்க, 38

துன்று செம் மயிர்ச் சுடர் நெடுங் கற்றைகள் சுற்ற,
நின்று திக்குற நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர,
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப,
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன, 39

மரகதக் கொழுங் கதிரொடு மாணிக்க நெடு வாள்
நரக தேயத்துள் நடுக்குறா இருளையும் நக்க,
சிரம் அனைத்தையும் திசைதொறும் திசைதொறும் செலுத்தி,
உரகர்கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப, 40

குவித்த பல் மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்ப,
சவிச் சுடர்க் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க,
புவித் தடம் படர் மேருவைப் பொன் முடி என்னக்
கவித்து, மால் இருங் கருங் கடல் இருந்தது கடுப்ப, 41

சிந்து ராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய,
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப,
இந்து வெண்குடை நீழலில், தாரகை இனம் பூண்டு,
அந்தி வான் உடுத்து, அல்லு வீற்றிருந்ததாம் என்ன, 42

வண்மைக்கும், திரு மறைகட்கும், வானினும் பெரிய
திண்மைக்கும், தனி உறையுளாம் முழு முகம், திசையில்
கண் வைக்கும்தொறும், களிற்றொடு மாதிரம் காக்கும்
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற, 43

ஏகநாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன,
நாகர் வாழ் இடம் முதல் என, நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என, நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள், மைந்தரின் தோன்றினர், சுற்ற, 44

வானரங்களும், வானவர் இருவரும், மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்,
ஏனை நின்றவர் இருடியர் சிலர், ஒழிந்து யாரும்,
தூ நவின்ற வேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற, 45

கூடு பாணியின் இசையொடும், முழவொடும் கூட,
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும்
ஆடல் நோக்குறின், அருந் தவ முனிவர்க்கும் அமைந்த
வீடு மீட்குறும் மேனகைமேல், நகை விளங்க, 46

பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும்
மதம் பெய் வண்டு எனச் சனகிமேல் மனம் செல, மறுகி
வெதும்புவார், அகம் வெந்து அழிவார், நகில் விழி நீர்
ததும்புவார், விழித் தாரை வேல், தோள்தொறும் தாக்க, 47

மாறு அளாவிய, மகரந்த நறவு உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறுஞ் சீகரத் தென்றல்,
ஊறு அளாவிய கடு என, உடலிடை நுழைய, 48

திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
அம் கயத் தடந் தாமரைக்கு அலரியோன் ஆகி,
வெங் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப்
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று, 49

இராவணனைக் கண்ணுற்ற மாருதியின் மன நிலை

இருந்த எண் திசைக் கிழவனை, மாருதி எதிர்ந்தான்;
கருந் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான்;
'திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி,
உருந்து நஞ்சு போல்பவன்வயின் பாய்வென்' என்று உடன்றான். 50

'உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம்' என்று ஒழிந்தேன்;
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்;
திறங்கள் என் பல சிந்திப்பது? இவன் தலை சிதறி,
அறம் கொள் கொம்பினை மீட்டு, உடன் அகல்வென்' என்று அமைந்தான் 51

'தேவர், தானவர், முதலினர், சேவகன் தேவி
காவல் கண்டு இவண் இருந்தவர், கண்புலன் கதுவ,
பாவகாரி தன் முடித் தலை பறித்திலென்என்றால்,
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை?' என்றான். 52

'"மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட, முடித் தலை திசைதொறும் உருட்டி,
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா!
தேடி வந்தது, ஓர் குரங்கு" எனும் வாசகம் சிறிதோ? 53

'நீண்ட வாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே
காண்டல் வேண்டி, இவ் உயிர் சுமந்து, எதிர் சில கழறி,
மீண்ட போது உண்டு வசைப்பொருள்; வென்றிலேன்எனினும்,
மாண்ட போதினும், புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ ?' 54

என்று, தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக,
குன்றின்மேல் எழு கோள் அரிஏறு என, குதியின்
சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா-
நின்று, 'காரியம் அன்று' என, நீதியின் நினைந்தான். 55

'கொல்லலாம் வலத்தனும் அல்லன்; கொற்றமும்
வெல்லலாம் தரத்தனும் அல்லன்; மேலை நாள்
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை
வெல்லலாம் இராமனால்; பிறரும் வெல்வரோ? 56

'என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன்-
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால்,
அன்னவே காலங்கள் கழியும்; ஆதலான்,
துன்ன அருஞ் செருத் தொழில் தொடங்கல் தூயதோ? 57

'"ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற,
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை,
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம்" என,
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால். 58

'"இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான்" என,
அம் கண் நாயகன்தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்-
பொங்கு வெஞ் செருவிடைப் பொழுது போக்கினால். 59

'ஆதலான், அமர்த்தொழில் அழகிற்று அன்று; அருந்
தூதன் ஆம் தன்மையே தூய்து' என்று, உன்னினான்;
வேத நாயகன் தனித் துணைவன், வென்றி சால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை, எய்தினான். 60


இராவணனிடம் இந்திரசித்து அனுமனைப் பற்றிக் கூறுதல்

தீட்டிய வாள் எனத் தெறு கண் தேவியர்
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்குக்
காட்டினன், அனுமனை-கடலின் ஆர் அமுது
ஊட்டிய உம்பரை உலைய ஒட்டினான். 61

புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடந்-
தவனை உற்று, 'அரி உருவான ஆண்தகை,
சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்,
இவன்' எனக் கூறி நின்று, இரு கை கூப்பினான். 62

இராவணன் அனுமனைச் சினந்து நோக்கி, 'நீ யார்?' என வினாவுதல்

நோக்கிய கண்களால் நொறில் கனல்-பொறி
தூக்கிய அனுமன் மெய்ம் மயிர் சுறுக்கொள்,
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை
வீக்கிய, அவனுடல் விசித்த பாம்பினே. 63

அன்ன ஓர் வெகுளியன், அமரர் ஆதியர்
துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற,
'என் இவண் வரவு? நீ யாரை?' என்று, அவன்
தன்மையை வினாயினான்-கூற்றின் தன்மையான். 64

'நேமியோ? குலிசியோ? நெடுங் கணிச்சியோ?
தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப்
பூமி தாங்கு ஒருவனோ?-பொருது முற்றுவான்,
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்! 65

'நின்று அசைத்து உயிர் கவர் நீலக் காலனோ?
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ?
தென் திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள், யாவன் நீ? 66

'அந்தணர் வேள்வியின் ஆக்கி, ஆணையின்
வந்துற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ?
முந்து ஒரு மலருளோன், "இலங்கை முற்றுறச்
சிந்து" எனத் திருத்திய தெறு கண் தெய்வமோ? 67

'யாரை நீ? என்னை, இங்கு எய்து காரணம்?
ஆர் உனை விடுத்தவர்? அறிய, ஆணையால்
சோர்விலை சொல்லுதி' என்னச் சொல்லினான்-
வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான். 68

அனுமனின் விடை

'சொல்லிய அனைவரும் அல்லென்; சொன்ன அப்
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென்;
அல்லி அம் கமலமே அனைய செங் கண் ஓர்
வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன். 69

'அனையவன் யார்? என, அறிதியாதியேல்,
முனைவரும், அமரரும், மூவர் தேவரும்,
எனையவர் எனையவர் யாவர், யாவையும்,
நினைவு அரும் இரு வினை முடிக்க, நின்றுளோன்; 70

'ஈட்டிய வலியும், மேல்நாள் இயற்றிய தவமும், யாணர்க்
கூட்டிய படையும், தேவர் கொடுத்த நல் வரமும், கொட்பும்,
தீட்டிய வாழ்வும், எய்தத் திருத்திய வாழ்வும் எல்லாம்,
நீட்டிய பகழி ஒன்றால், முதலொடு நீக்க நின்றான்; 71

'தேவரும் பிறரும் அல்லன்; திசைக் களிறு அல்லன்; திக்கின்
காவலர் அல்லன்; ஈசன் கைலைஅம்கிரியும் அல்லன்;
மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப்
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம்; 72

'போதமும், பொருந்து கேள்விப் புரை அறு பயனும், பொய் தீர்
மா தவம் சார்ந்த தீரா வரங்களும், மற்றும், முற்றும்,
யாது அவன் நினைந்தான், அன்ன பயத்தன; ஏது வேண்டின்,
வேதமும் அறனும் சொல்லும் மெய் அறமூர்த்தி, வில்லோன்; 73

'காரணம் கேட்டிஆயின், கடை இலா மறையின்கண்ணும்,
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும், அன்னான்;
போர் அணங்கு இடங்கர் கவ்வ, பொது நின்று, "முதலே" என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்; 74

'மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய
காலமும், கணக்கும், நீத்த காரணன்-கை வில் ஏந்தி,
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட்டு,-அயோத்தி வந்தான்; 75

'அறம் தலைநிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித்
திறம் தெரிந்து, உலகம் பூணச் செந் நெறி செலுத்தி, தீயோர்
இறந்து உக நூறி, தக்கோர் இடர் துடைத்து, ஏக, ஈண்டுப்
பிறந்தனன் - தன் பொன்-பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான். 76

'அன்னவற்கு அடிமை செய்வேன்; நாமமும் அனுமன் என்பேன்;
நன்னுதல் தன்னைத் தேடி நாற் பெருந் திசையும் போந்த
மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி-
தன் மகன், அவன்தன் தூதன் வந்தனென், தனியேன்' என்றான். 77

அனுமனிடம் இராவணன் வாலியின் நலனை உசாவுதல்

என்றலும், இலங்கை வேந்தன், எயிற்றினம் எழிலி நாப்பண் மின் திரிந்தென்ன நக்கு, 'வாலி சேய் விடுத்த தூத! வன் திறல் ஆய வாலி வலியன்கொல்? அரசின் வாழ்க்கை நன்றுகொல்?' என்னலோடும், நாயகன் தூதன் நக்கான். 78

வெஞ் சின வாலி; மீளான்; வாலும் போய் விளிந்தது அன்றே;

அஞ்சன மேனியான்தன் அடு கணை ஒன்றால் மாழ்கித் துஞ்சினன்; எங்கள் வேந்தன், சூரியன் தோன்றல்' என்றான். 79

நடந்த நிகழ்ச்சிகள் குறித்து இராவணன் கேட்டல்

'என்னுடை ஈட்டினான், அவ் வாலியை எறுழ் வாய் அம்பால் இன் உயிர் உண்டது? இப்போது யாண்டையான் இராமன் என்பான்? அன்னவன் தேவிதன்னை அங்கதன் நாடலுற்ற தன்மையை உரைசெய்க' என்ன, சமீரணன் தனயன் சொல்வான்: 80

நிகழ்ந்தனவற்றை அனுமன் விவரித்தல்

'தேவியை நாடி வந்த செங்கணாற்கு, எங்கள் கோமான், ஆவி ஒன்று ஆக நட்டான்; "அருந் துயர் துடைத்தி" என்ன, ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன், உருமையோடும் கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து, வாலியையும் கொன்றான்; 81

'ஆயவன் தன்னொடு, ஆண்டு, திங்கள் ஓர் நான்கும் வைகி, மேய வெஞ் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன், "போயினிர் நாடும்" என்ன, போந்தனம், புகுந்தது ஈது' என்று, ஏயவன் தூதன் சொன்னான். இராவணன் இதனைச் சொல்வான்: 82

இராவணன் சுக்கிரீவன் முதலியோரது செய்கையை இகழ்தல்

'உம் குலத் தலைவன், தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சியோனை வெங் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள்-தொழில் மேற்கொண்டீரேல், எங்கு உலப்புறும் நும் சீர்த்தி? நும்மொடும் இயைந்தது என்றால், மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ! 83

'தம்முனைக் கொல்வித்து, அன்னாற் கொன்றவற்கு அன்பு சான்ற உம் இனத் தலைவன் ஏவ, யாது எமக்கு உரைக்கலுற்றது? எம் முனைத் தூது வந்தாய்! இகல் புரி தன்மை என்னை? நும்மினைக் கொல்லாம்; நெஞ்சம் அஞ்சலை; நுவல்தி' என்றான். 84

அனுமன் இராவணனை நோக்கி உரைத்தல்

துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களைப் புணர்த்து நோக்கி, 'பொது நின்ற நீதியை உணர்த்தினால், அது உறும்' என, உன்ன அருங் குணத்தினானும், இனையன கூறினான்: 85

'தூது வந்தது, சூரியன் கான்முளை ஏது ஒன்றிய நீதி இயைந்தன; சாது என்று உணர்கிற்றியேல், தக்கன, கோது இறந்தன, நின் வயின் கூறுவாம்: 86

'வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம் சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்; இறுதி உற்றுளது; ஆயினும், இன்னும் ஓர் உறுதி கேட்டி; உயிர் நெடிது ஓம்புவாய்! 87

'"போய் இற்றீர், நும் புலன் வென்று போற்றிய வாயில் தீர்வு அரிதாகிய மா தவம்- காயின் தீர்வு அருங் கேடு அருங் கற்பினாள், தீயின் தூயவளைத் துயர் செய்ததால். 88

'"இன்று வீந்தது; நாளை, சிறிது இறை நின்று வீந்தது; அலால், நிறை நிற்குமோ? ஒன்று வீந்தது, நல் உணர் உம்பரை வென்று வீங்கிய வீக்கம், மிகுத்ததால். 89

'"தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது" எனும் வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த தூய்மை, தூயவள்தன்வயின் தோன்றிய நோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்! 90

'"திறம் திறம்பிய காமச் செருக்கினால் மறந்து, தம்தம் மதியின் மயங்கினார், இறந்து இறந்து, இழிந்து ஏறுவதே அலால், அறம் திறம்பினர், ஆர் உளர் ஆயினார்? 91

'"நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர், ஈமத்தால் மறைந்தார், இள மாதர்பால் காமத்தால் இறந்தார், களி வண்டு உறை தாமத் தாரினர், எண்ணினும் சால்வரோ? 92

'"பொருளும், காமமும், என்று இவை போக்கி, வேறு இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும், அருளும், காதலின் தீர்தலும், அல்லது, ஓர் தெருள் உண்டாம் என எண்ணலர் - சீரியோர். 93

'"இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை நச்சி, நாளும் நகை உற, நாண் இலன், பச்சை மேனி புலர்ந்து, பழி படூஉம் கொச்சை ஆண்மையும், சீர்மையில் கூடுமோ? 94

'"ஓதநீர் உலகு ஆண்டவர், உன் துணைப் போத நீதியர், ஆர் உளர் போயினார்? வேத நீதி விதி வழி மேல்வரும் காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ? 95

'"வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால், மறுப்பு உண்டாயபின், வாழ்கின்ற வாழ்வினின், உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை அறுப்புண்டால், அது அழகு எனல் ஆகுமே. 96

'"பாரை ஞூறுவ பற் பல பொற் புயம், ஈர்-ஐஞ்ஞூறு தலை உள; என்னினும்,- ஊரை ஞூறும் கடுங் கனல் உட்பொதி சீரை ஞூறு, அவை-சேமம் செலுத்துமோ? 97

'"புரம் பிழைப்பு அருந் தீப் புகப் பொங்கியோன், நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய வரம் பிழைக்கும்; மறை பிழையாதவன் சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ? 98

'"ஈறு இல் நாண் உக, எஞ்சல் இல் நல் திரு நூறி, நொய்தினை ஆகி, நுழைதியோ?- வேறும், இன்னும் நகை ஆம் வினைத் தொழில் தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்! 99

'"பிறந்துளார், பிறவாத பெரும் பதம் சிறந்துளார், மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய் இறந்துளார், பிறர் யாரும், இராமனை மறந்துளார் உளர் ஆகிலர்; வாய்மையால். 100

'"ஆதலால், தன் அரும் பெறல் செல்வமும், ஓது பல் கிளையும், உயிரும் பெற, சீதையைத் தருக" என்று எனச் செப்பினான், சோதியான் மகன், நிற்கு' எனச் சொல்லினான். 101

தூதனாகிய நீ அரக்கரைக் கொன்றது ஏன் என இராவணன் வினவுதல்

என்றலும், 'இவை சொல்லியது, எற்கு, ஒரு குன்றின் வாழும் குரங்குகொலாம்! இது நன்று! நன்று!' என மா நகை செய்தனன் - வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான். 102

'குரக்கு வார்த்தையும், மானிடர் கொற்றமும், இருக்க; நிற்க; நீ, என்கொல், அடா! இரும் புரத்தினுள் தரும் தூது புகுந்தபின் அரக்கரைக் கொன்றது? அஃது உரையாய்!' என்றான். 103

அனுமன் அளித்த விடை

'காட்டுவார் இன்மையால், கடி காவினை வாட்டினேன்; என்னைக் கொல்ல வந்தார்களை வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உந்தன் - மாட்டு வந்தது, காணும் மதியினால். 104

சினம் மிக்க இராவணன், 'அனுமனைக் கொல்மின்' என, வீடணன் தடுத்து உரைத்தல்

என்னும் மாத்திரத்து, ஈண்டு எரி நீண்டு உக, மின்னும் வாள் எயிற்றின், சினம் வீங்கினான்; 'கொல்மின்' என்றனன்; கொல்லியர் சேர்தலும், 'நில்மின்' என்றனன், வீடணன் நீதியான். 105

ஆண்டு, எழுந்து நின்று, அண்ணல் அரக்கனை, நீண்ட கையன் வணங்கினன்; 'நீதியாய், மூண்ட கோபம் முறையது அன்றாம்' எனா, வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்: 106

'அந்தணன், உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் தந்தவன், அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து, தக்கோய்! இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ: "இயம்பு தூது வந்தனென்" என்ற பின்னும், கோறியோ, மறைகள் வல்லோய்? 107

'பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள், பொய் தீர் வேதம் உற்று இயங்கு வைப்பின், வேறு வேறு இடத்து வேந்தர், மாதரைக் கொலை செய்தார்கள் உளர் என வரினும், வந்த தூதரைக் கொன்றுளார்கள் யாவரே, தொல்லை நல்லோர்? 108

'பகைப் புலன் நணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார் மிகைப் புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட தகைப் புலக் கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும் நகைப் புலன் பிறிது ஒன்று உண்டோ ? நம் குலம் நவை இன்றாமே! 109

'முத் தலை எஃகன், மற்றை முராந்தகன், முனிவன், முன்னா அத் தலை நம்மை நோனா அமரர்க்கும், நகையிற்றாமால்; எத் தலை உலகும் காக்கும் வேந்த! நீ, வேற்றோர் ஏவ, இத் தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம்; இன்னும், 110

'இளையவள்தன்னைக் கொல்லாது, இரு செவி மூக்கொடு ஈர்ந்து, "விளைவு உரை" என்று விட்டார், வீரர் ஆய், மெய்ம்மை ஓர்வார்; களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணின் கண்ட அளவு உரையாமல் செய்தி ஆதி' என்று, அமையச் சொன்னான். 111

அனுமன் வாலைச் சுட்டு, பின் துரத்துமாறு இராவணன் ஆணையிடல்

'நல்லது உரைத்தாய், நம்பி! இவன் நவையே செய்தான் ஆனாலும், கொல்லல் பழுதே' - 'போய் அவரைக் கூறிக் கொணர்தி கடிது' என்னா, 'தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு, நகரைச் சூழ்போக்கி, எல்லை கடக்க விடுமின்கள்' என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார். 112

அயன் படையை இந்திரசித்து விடுவிக்க, அரக்கர்கள் கயிறுகளால் அனுமனைப் பிணித்தல்

ஆய காலத்து, அயன் படையோடு இருப்ப, ஆகாது அனல் இடுதல்; தூய பாசம் எனைப் பலவும் கொணர்ந்து பிணிமின் தோள்' என்னா, மேய தெய்வப் படைக்கலத்தை மீட்டான், அமரர் போர் வென்றான்; 'ஏ' எனாமுன், இடைபுக்கு, தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார். 113

நாட்டின், நகரில், நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே- வீட்டின் ஊசல், நெடும் பாசம் அற்ற; தேரும், விசி துறந்த; மாட்டும் புரவி ஆயம் எலாம், மருவி வாங்கும் தொடை அழிந்த; பூட்டும் வல்லி மூட்டோ டும் புரசை இழந்த, போர் யானை! 114

மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற, எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த-தமக்கு இயைந்த பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த- கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார். 115

அகமகிழ்வுடன் அனுமன் அவர்க்கு அடங்கி, உடன்போதல்

'கடவுள்-படையைக் கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே விடுவித்து அளித்தார், தெவ்வரே; வென்றேன் அன்றோ இவர் வென்றி; சுடுவிக்கின்றது, "இவ் ஊரைச் சுடுக" என்று உரைத்த துணிவு' என்று, நடு உற்று அமைய உற நோக்கி, முற்றும் உவந்தான் - நவை அற்றான். 116

நொய்ய பாசம் புறம் பிணிப்ப, நோன்மை இலன்போல் உடல் நுணங்கி வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா ஐயன், விஞ்சைதனை அறிந்தும் அறியாதான் போல், அவிஞ்சை எனும் பொய்யை மெய்போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான். 117

அனுமன் வாலில் அரக்கர் தீயிடல்

வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து, வெள்ளிடையின் போந்து, புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற, ஏந்து நெடு வால் கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார், இழுது எண்ணெய்; காந்து கடுந் தீக் கொளுத்தினார்; ஆர்த்தார், அண்டம் கடி கலங்க. 118

ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உரப் பாசம், பக்கம் பக்கம் இரு கூறு ஆய், நூறாயிரவர் பற்றினார்; புக்க படைஞர் புடை காப்போர் புணரிக் கணக்கர்; புறம் செல்வோர், திக்கின் அளவால்; அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் 119

'அந்த நகரும் கடி காவும் அழிவித்து, அக்கன் முதலாயோர் சிந்த நூறி, சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப வந்த குரங்கிற்கு உற்றதனை, வம்மின், காண வம்' என்று, தம்தம் தெருவும், வாயில்தொறும், யாரும் அறியச் சாற்றினார். 120

செய்தி கேட்டுச் சானகி வருந்தி, 'சுடாதே' என எரியை வேண்டுதல்

ஆர்த்தார், அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார்போல்; அங்கோடு இங்கு ஈர்த்தார்; முரசம் எற்றினார்; இடித்தார்; தெழித்தார், எம் மருங்கும் பார்த்தார்; ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார்; அவளும் உயிர் பதைத்தாள்; வேர்த்தாள்;உலந்தாள்;விம்மினாள்;விழுந்தாள்;அழுதாள்;வெய்து உயிர்த்தாள்.121

'தாயே அனைய கருணையான் துணையை, ஏதும் தகைவு இல்லா நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ? நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும் கற்பு; அதனில் தூயேன் என்னின், தொழுகின்றேன்,-எரியே!-அவனைச் சுடல்!' என்றாள். 122

அனல் குளிர்ந்தமை கண்டு அனுமன் மகிழ்தல்

வெளுத்த மென் தகையவள் விளம்பும் ஏல்வையின், ஒளித்த வெங் கனலவன் உள்ளம் உட்கினான்; தளிர்த்தன மயிர்ப் புறம் சிலிர்ப்ப, தண்மையால், குளிர்ந்தது, அக் குரிசில் வால், என்பு கூரவே. 123

மற்று இனிப் பல என்? வேலை வட அனல், புவி அளாய கற்றை வெங் கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர் காக்கும் முற்றுறு மும்மைச் செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே. 124

அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது; அங்கிக் குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச் சண்ட வெங் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தா இல் மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ. 125

வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி, வெந் தீ நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி, அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், 'சனகன் பாவை கற்பினால் இயன்றது' என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான். 126

அரக்கர் காட்ட, இலங்கை நகர் முழுதும் அனுமன் காணுதல்

அற்றை அவ் இரவில், தான் தன் அறிவினால் முழுதும் உன்னப் பெற்றிலன் எனினும், ஆண்டு, ஒன்று உள்ளது பிழை உறாமே, மற்று உறு பொறி முன் செல்ல, மறைந்து செல் அறிவு மான, சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின், தெரிய, கண்டான். 127

அனுமன் விண்ணில் எழ, பற்றிச் சென்ற அரக்கர்கள் தோள் அற்று விழுதல்

முழுவதும் தெரிய நோக்கி, முற்றும் ஊர் முடிவில் சென்றான், 'வழு உறு காலம் ஈது' என்று எண்ணினன், வலிதின் பற்றித் தழ்வினன், இரண்டு நூறாயிரம் புயத் தடக் கை தாம்போடு எழு என நால, விண்மேல் எழுந்தனன்; விழுந்த எல்லாம். 128

விசும்பில் பொலிந்த அனுமனின் தோற்றம்

இற்ற வாள் அரக்கர் நூறாயிரவரும், இழந்த தோளார், முற்றினார் உலந்தார்; ஐயன், மொய்ம்பினோடு உடலை மூழ்கச் சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின் சுற்றம் பற்றிய கலுழன் என்ன, பொலிந்தனன் விசும்பின் ஓர்பால். 129

இலங்கையை எரியூட்ட அனுமன் தன் வாலை நகர்மீது நீட்டுதல்

துன்னவர் புரத்தை முற்றும் சுடு தொழில் தொல்லையோனும், பன்னின பொருளும், நாண, 'பாதகர் இருக்கை பற்ற, மன்னனை வாழ்த்தி, பின்னை வயங்கு எரி மடுப்பென்' என்னா, பொன் நகர் மீதே, தன் போர் வாலினைப் போக விட்டான். 130

அப்பு உறழ் வேலைகாறும் அலங்கு பேர் இலங்கைதன்னை, எப் புறத்து அளவும் தீய, ஒரு கணத்து எரித்த கொட்பால், துப்பு உறழ் மேனி அண்ணல், மேரு வில் குழைய, தோளால் முப்புரத்து எய்த கோலே ஒத்தது-அம் மூரிப் போர் வால். 131

வெள்ளியின் பொன்னின், நானா விளங்கு பல் மணியின், விஞ்சை தெள்ளிய கடவுள்-தச்சன் கை முயன்று அரிதின் செய்த தள்ள அரு மனைகள்தோறும், முறை முறை தாவிச் சென்றான்; ஒள் எரியோடும், குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான். 132

இலங்கை நகரை எரியுண்ணுதல்

நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க, பால் வரு பசியன், அன்பால் மாருதி வாலைப் பற்றி, ஆலம் உண்டவன் நன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும் காலமே என்ன மன்னோ, கனலியும் கடிதின் உண்டான். 133

மிகைப் பாடல்கள்

'நீரிடைக் கண் துயில் நெடிய நேமியும், தாருடைத் தனி மலர் உலகின் தாதையும், ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர், பாரிடைப் புகுந்தனர் பகைத்து' என்பார் பலர். 16-1

இனையன பற்பலர் இசைப்ப, வெந்திறல் அனுமனை அமர்க் களம் நின்று, வஞ்சகர் புனை திரு நகரிடைக் கொண்டு போதலை நினையினர், நெடிதுற நெருக்கி நேர்ந்துளார். 16-2

நரம்பு கண்ணகத்துள் உறை நறை, நிறை பாண்டில், நிரம்பு சில்லரிப் பாணியும், குறடும், நின்று இசைப்ப, அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலன்ன பாடல் வரம்பு இல் இன்னிசை, செவிதொறும் செவிதொறும் வழங்க, 45-1

ஊடினார் முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண, கூடினார் முகக் களி நறை ஒரு முகம் குடிப்ப, பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக, ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த, 46-1

தேவரொடு இருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த, மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல, பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில, பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த, 46-2

'காந்தள் மெல் விரல் சனகிதன் கற்பு எனும் கடலை நீந்தி ஏறுவது எங்ஙன்?' என்று ஒரு முகம் நினைய, சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார் ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க, 46-3

என்னக் கேட்ட அரக்கனுக்கு ஈறு இலாத் தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான்: 'என் ஒர் நாயகன் ஏவலின், வாரிதி- தன்னைத் தாண்டி வந்தேன், உனைக் காணவே'. 103-1

தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு, 'இன்னே, அன்னவர்க்கு இறுதி ஆக, அணி நகர் அழிப்பல்' என்னா, செந் நிறச் சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஒக்கும்- அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால். 130-1

உகக் கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன் நாட்டம் சிகைக் கொழுங் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல, மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய; போர் வால்- தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் - சேணில் உய்த்தான். 131-2