கம்பராமாயணம்/பால காண்டம்/பரசுராமப் படலம்
விசுவாமித்திரன் ஆசி கூறி, வட மலைக்குச் செல்லுதல்
தான் ஆவது ஓர் வகையே நனி சனகன் தரு தயலும்,
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அந் நாள்வாய்,
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி,
போனான் வட திசைவாய், உயர் பொன் மால் வரை புக்கான். 1
தயரதன் சேனைச் சுற்றமுடன் அயோத்திக்குப் பயணமாதல்
அப் போதினில் முடி மன்னவன், 'அணி மா நகர் செலவே,
இப்போது, நம் அனிகம்தனை எழுக!' என்று இனிது இசையா,
கைப் போதகம் நிகர் காவலர் குழு வந்து, அடி கதுவ,
ஒப்பு ஓத அரு தேர்மீதினில், இனிது ஏறினன், உரவோன். 2
தன் மக்களும், மருமக்களும், நனி தன் கழல் தழுவ,
மன் மக்களும், அயல் மக்களும், வயின் மொய்த்திட, மிதிலைத்
தொல் மக்கள் தம் மனம் உக்கு, உயிர் பிரிவு என்பது ஒர் துயரின்,
வன்மைக் கடல் புக, உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன். 3
இராமன் தம்பியரோடு சென்ற காட்சி
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல, மிதிலை
நன் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல, நடுவே,
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவிச் செல, மழைவாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன். 4
பறவைகள் அபசகுனமாய்ச் செல்வது கண்டு, தயரதன் தயங்கி நிற்றல்
ஏகும் அளவையின் வந்தன, வலமும் மயில், இடமும்
காகம் முதலிய, முந்திய தடை செய்வன; கண்டான்;
நாகம் அனன், 'இடை இங்கு உளது இடையூறு' என, நடவான்;
மாகம் மணி அணி தேரொடு நின்றான், நெறி வந்தான். 5
மன்னன் நிமித்திகனை வினாவ, அவன், 'இடையூறு இன்றே வந்து, நன்றாய்விடும்' எனல்
நின்றே, நெறி உணர்வான், ஒரு நினைவாளனை அழையா,
'நன்றோ? பழுது உளதோ? நடு உரை நீ, நயம்' என்ன,
குன்றே புரை தோளான் எதிர், புள்ளின் குறி தேர்வான்,
'இன்றே வரும் இடையூறு; அது நன்றாய்விடும்' என்றான். 6
பரசுராமனது வருகையும், அது கண்டு தயரதன் சோர்தலும்
என்னும் அளவினில், வானகம் இருள் கீறிட, ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான்; மழு உடையான்;
பொன்னின் மலை வருகின்றது போல்வான்; அனல் கால்வான்;
உன்னும் சுழல் விழியான்; உரும் அதிர்கின்றது ஒர் மொழியான்; 7
கம்பித்து, அலை எறி நீர் உறு கலம் ஒத்து, உலகு உலைய,
தம்பித்து, உயர் திசை யானைகள் தளர, கடல் சலியா
வெம்பித் திரிதர, வானவர் வெருவுற்று இரிதர, ஓர்
செம் பொன் சிலை தெறியா, அயில் முக வாளிகள் தெரிவான்; 8
'விண் கீழுற என்றோ? படி மேல்கீழ் உற என்றோ?
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ?-
புண் கீறிய குருதிப் புனல் பொழிகின்றன புரையக்
கண் கீறிய கனலான் முனிவு - யாது?' என்று அயல் கருத; 9
போரின்மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய,
தேரின்மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய,
நீரின்மிசை வடவைக் கனல் நெடு வான் உற முடுகி,
பாரின்மிசை வருகின்றது ஓர் படி வெஞ் சுடர் படர, 10
பாழிப் புயம் உயர் திக்கிடை அடையப் புடை படர,
சூழிச் சடைமுடி விண் தொட, அயல் வெண் மதி தோற்ற,
ஆழிப் புனல், எரி, கால், நிலம், ஆகாயமும், அழியும்
ஊழிக் கடை முடிவில், தனி உமை கேள்வனை ஒப்பான்; 11
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய, தனி படரும்
செயிர் சுற்றிய படையான், அடல் மற மன்னவர் திலகன்,
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என, ஓர் ஆயிரம் உயர்தோள்
வயிரப் பணை துணிய, தொடு வடி வாய் மழு உடையான்; 12
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட, நில மன்னவர் குலமும்
கரு அற்றிட, மழுவாள் கொடு களை கட்டு, உயிர் கவரா,
இருபத்தொரு படிகால், இமிழ் கடல் ஒத்து அலை எறியும்
குருதிப் புனல் அதனில், புக முழுகித் தனி குடைவான்; 13
கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்,
சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்
அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா,
சிமையக் கிரி உருவ, தனி வடி வாளிகள் தெரிவான்; 14
சையம் புக நிமிர் அக் கடல் தழுவும்படி சமைவான்;
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான்.
ஐயன்தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்,
'வெய்யன் வர நிபம் என்னைகொல்?' என வெய்துறும் வேலை. 15
எதிரே வந்த பரசுராமனை, 'யார்?' என இராமன் வினாவுதல்
பொங்கும் படை இரிய, கிளர் புருவம் கடை நெரிய,
வெங் கண் பொறி சிதற, கடிது உரும் ஏறு என விடையா,
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர், சென்றான்,
அம் கண் அரசன் மைந்தனும், "ஆரோ?" எனும் அளவில், 16
தயரதன் இடை வந்து வணங்க, சினம் தணியாது, பரசுராமன் பேசுதல்
அரைசன், அவனிடை வந்து, இனிது ஆராதனை புரிவான்,
விரை செய் முடி படிமேல் உற அடி மேல் உற விழவும்,
கரை சென்றிலன் அனையான், நெடு முடிவின் கனல் கால்வான்;
முரைசின் குரல் பட, வீரனது எதிர் நின்று, இவை மொழிவான்: 17
'உன் தோள் வலி அறிய இங்கு வந்தேன்' என இராமனை நோக்கி பரசுராமன் மொழிதல்
'இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்; இனி, யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்;
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன்;
மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது என் வரவு' என்றனன், உரவோன். 18
தயரதன் பரசுராமனிடம் அபயம் வேண்டுதல்
அவன் அன்னது பகரும் அளவையின், மன்னவன் அயர்வான்,
'புவனம் முழுவதும் வென்று, ஒரு முனிவற்கு அருள்புரிவாய்!
சிவனும், அயன், அரியும் அலர்; சிறு மானிடர் பொருளோ?
இவனும், எனது உயிரும், உனது அபயம், இனி' என்றான். 19
'விளிவார் விளிவது, தீவினை விழைவாருழை அன்றோ?
களியால், இவன் அயர்கின்றன உளவோ? - கனல் உமிழும்
ஒளி வாய் மழு உடையாய்! - பொர உரியாரிடை அல்லால்,
எளியாரிடை, வலியார் வலி என் ஆகுவது?' என்றான். 20
'நனி மாதவம் உடையாய்! "இது பிடி நீ" என நல்கும்
தனி நாயகம், உலகு ஏழையும் உடையாய்! இது தவிராய்;
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா,
முனிவு ஆறினை; முனிகின்றது முறையோ?' என மொழிவான். 21
'அறன் நின்றவர் இகழும்படி, நடுவின் தலை புணராத்
திறன் நின்று, உயர் வலி என்? அது ஓர் அறிவின் தகு செயலோ?
அறன் நின்றதன் நிலை நின்று, உயர் புகழ் ஒன்றுவது அன்றோ,
மறன் என்பது? மறவோய்! இது வலி என்பது வலியோ! 22
'சலத்தோடு இயைவு இலன், என் மகன்; அனையான் உயிர் தபுமேல்,
உலத்தோடு எதிர் தோளாய்! எனது உறவோடு, உயிர் உகுவேன்;
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய்! உனது அடியேன்;
குலத்தோடு அற முடியேல்; இது குறை கொண்டனென்' என்றான். 23
பரசுராமன் இராமன் எதிர் செல்லக் கண்டு, தயரதன் துன்பத்தில் ஆழ்தல்
என்னா அடி விழுவானையும் இகழா, எரி விழியா,
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா,
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா, உயிர் தளரா,
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என, வெந் துயர் உற்றான். 24
பரசுராமன் தன் கை வில்லின் பெருமை கூறி, 'நீ வல்லையேல், என் வில்லை வளை' என்று வீரம் பேசுதல்
மானம் மணி முடி மன்னவன், நிலை சோர்வுறல் மதியான்,
தான் அந் நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்;
'ஆன(ம்)முடை உமை அண்ணலை அந் நாள் உறு சிலைதான்
ஊனம் உளது; அதன் மெய்ந்நெறி கேள்!' என்று உரைபுரிவான்: 25
'ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன, உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன, வையம்
அருகா வினை புரிவான் உளன்; அவனால் அமைவனதாம்
இரு கார்முகம் உள; யாவையும் ஏலாதன, மேல்நாள்: 26
'ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன்; மற்றை ஒன்றை
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான்;
என்று இது உணர்ந்த விண்ணோர், "இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது?" என்று விரிஞ்சனை வினவ, அந் நாள், 27
'"சீரிது தேவர்தங்கள் சிந்தனை" என்பது உன்னி,
வேரி அம் கமலத்தோனும், இயைவது ஓர் வினயம்தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை,
மூரி வெஞ் சிலை மேல் இட்டு, மொய் அமர் மூட்டி விட்டான்; 28
இருவரும், இரண்டு வில்லும் ஏற்றினர்; உலகம் ஏழும்
வெருவர, திசைகள் பேர, வெங் கனல் பொங்க, மேன்மேல்,
செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த தேவன்,
வரி சிலை இற்றது ஆக, மற்றவன் முனிந்து மன்னோ, 29
'மீட்டும் போர் தொடங்கும் வேலை, விண்ணவர் விலக்க, வல் வில்
நீட்டினன் தேவர்கோன் கை, நெற்றியில் கண்ணன்; வெற்றி
காட்டிய கரிய மாலும், கார்முகம்தன்னை, பாரில்,
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான்; 30
இரிசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த
வரிசிலை இது, நீ நொய்தின் வாங்குதி ஆயின், மைந்த!
குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென், நின்னொடு; இன்னம் புகல்வது கேட்டி' என்றான். 31
ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால்;
மானவ! மற்றும் கேளாய்: வழிப் பகை உடையன் நும்பால்;
ஈனம் இல் எந்தை, "சீற்றம் நீக்கினான்" என்ன, முன் ஓர்
தானவன் அனைய மன்னன் கொல்ல, யான் சலித்து மன்னோ, 32
'மூ-எழு முறைமை, பாரில் முடியுடை வேந்தை எல்லாம்,
வேவு எழு மழுவின் வாயால், வேர் அறக் களைகட்டு, அன்னார்
தூ எழு குருதி வெள்ளத் துறையிடை, முறையின், எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன்; அருஞ் சினம் அடக்கி நின்றேன். 33
'உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன், உறு பகை ஒடுக்கிப் போந்தேன்,
அலகு இல் மா தவங்கள் செய்து, ஓர் அரு வரை இருந்தேன்; ஆண்டை,
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற, சீறி வந்தேன்;
மலைகுவென்; வல்லைஆகின், வாங்குதி, தனுவை!' என்றான். 34
வில்லை வாங்கி வளைத்து, 'இதற்கு இலக்கு யாது?' என இராமன் பரசுராமனிடம் கேட்டல்
என்றனன் என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி,
நன்று ஒளிர் முகத்தன் ஆகி, 'நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக!' என்ன, கொடுத்தனன்; வீரன் கொண்டு, அத்
துன்று இருஞ் சடையோன் அஞ்ச, தோளுற வாங்கி, சொல்லும்: 35
'பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்;
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்!' என்றான். 36
பரசுராமன் இராமனைப் புகழ்ந்து, தன் தவத்தை அம்புக்கு இலக்கு ஆக்குதல்
'நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி; யான் அறிந்தனென்; அலங்கல் நேமியாய்!
வேதியா இறுவதே அன்றி, வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதுமோ? 37
'பொன்னுடை வனை கழல் பொலம் கொள் தாளினாய்!
மின்னுடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்;
என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும், உன் உரத்துக்கு ஈடு அன்றால், 38
'எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!' என,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே. 39
பரசுராமன் வாழ்த்தி, விடை பெற்றுச் செல்லுதல்
'எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய
புண்ணிய! விடை' எனத் தொழுது போயினான். 40
இராமன் தந்தையைத் தொழுது, அவரது துயரைப் போக்குதல்
அழிந்து, அவன் போனபின், அமலன், ஐ - உணர்வு
ஒழிந்து, தன் உயிர் உலைந்து, உருகு தாதையை,
பொழிந்த பேர் அன்பினால், தொழுது, முன்பு புக்கு,
இழிந்த வான் துயர்க் கடல் கரை நின்று ஏற்றினான். 41
தயரதன் மகிழ்ந்து, இராமனை உச்சி மோந்து, பாராட்டுதல்
வெளிப்படும் உணர்வினன், விழுமம் நீங்கிட,
தளிர்ப்பு உறு மத கரித் தானையான், இடை
குளிப்ப அருந் துயர்க் கடற் கோடு கண்டவன்,
களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன். 42
பரிவு அறு சிந்தை, அப் பரசுராமன் கை
வரி சிலை வாங்கி, ஓர் வசையை நல்கிய
ஒருவனைத் தழுவிநின்று, உச்சி மோந்து, தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான். 43
'பொய்ம்மை இல், சிறுமையில் புரிந்த, ஆண் தொழில்,
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ?
மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு,
இம்மையும் மறுமையும் ஈயும்' என்றனன். 44
தேவர்கள் மலர் மழை பொழிய இராமன் வருணனிடம், 'சேமித்து வை' என்று, பரசுராமனின் வில்லைக் கொடுத்து, அயோத்தி சேர்தல்
பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்
வாம வேல் வருணனை, 'மான வெஞ் சிலை
சேமி' என்று உதவி, தன் சேனை ஆர்த்து எழ,
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான். 45
தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல்
நண்ணினர், இன்பத்து வைகும் நாளிடை,
மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான்,
அண்ணல், அப் பரதனை நோக்கி, ஆண்தகை,
எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்: 46
'ஆணையின் நினது மூதாதை, ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன்; ஆதலால்,
கேணியில் வளை முரல் கேகயம் புக,
பூண் இயல் மொய்ம்பினாய்! போதி' என்றனன். 47
இராமனை வணங்கிப் பரதன் கேகய நாட்டிற்குப் புறப்படுதல்
ஏவலும், இறைஞ்சிப் போய், இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து, போயினான் -
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான்,
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்றென்னவே. 48
சத்துருக்கனோடு பரதன் ஏழு நாளில் கேகய நாடு சென்று சேர்தல்
உளை விரி புரவித் தேர் உதயசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்,
இளையவன் தன்னொடும், ஏழு நாளிடை,
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான். 49
ஆனவன் போனபின், அரசர் கோமகன்
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை,
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்,
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம் அரோ. 50
மிகைப் பாடல்கள்
கயிலைக் கிரிதனை மூடிய அன்றிற்கிரி கந்தன்
அயிலைப் புக விடர்விட்டது போல் ஏழ் வழியாகச்
சயிலத் துளைபட எய்தனை, அயில் தெற்றிய அதனால்
முயலுற்றவர் நிருபக்குலம் மூ-ஏழ் முறை முடித்தான். 14-1