கம்பராமாயணம்/யுத்த காண்டம்/இராவணன் வானரத் தானை காண் படலம்

கோபுரத்தின் மேல் இராவணன் நின்ற நிலை

கவடு உகப் பொருத காய் களிறு அன்னான்,

அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும்

சுவடுடைப் பொரு இல் தோள்கொடு, அனேகம்

குவடுடைத் தனி ஒர் குன்று என, நின்றான். 1


பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும்,

நலிந்த நங்கை எழிலால் வலி நாளும்

மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும்

வலிந்து செல்ல, மிசை செல்லும் மனத்தான். 2


செம் பொன் மௌலி சிகரங்கள் தயங்க,

அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக,

வெம்பு காலினை விழுங்கிட, மேல்நாள்,

உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான். 3


தக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு

ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும்,

பக்கமும், நிழல் பரப்பி, வியப்பால்

மிக்கு நின்ற குடை மீது விளங்க, 4


கைத் தரும் கவரி வீசிய காலால்,

நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில்

தத்தி வீழ் அருவியின் திரள் சால,

உத்தரீகம் நெடு மார்பின் உலாவ, 5


வானகத்து உறும் உருப்பசி, வாசத்

தேன் அகத் திரு திலோத்தமை, செவ் வாய்

மேனகைக் குல அரம்பையர், மேல் ஆம்

சானகிக்கு அழகு தந்து, அயல் சார, 6


வீழியின் கனி இதழ், பணை மென் தோள்,

ஆழி வந்த அர மங்கையர், ஐஞ்ஞூற்று -

ஏழ் இரண்டினின் இரட்டி பயின்றோர்,

சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற, 7


முழை படிந்த பிறை முள் எயிறு, ஒள் வாள்

இழை படிந்த இள வெண் நிலவு ஈன,

குழை படிந்தது ஒரு குன்றில், முழங்கா

மழை படிந்தனைய தொங்கல் வயங்க, 8


ஓத நூல்கள் செவியின்வழி, உள்ளம்

சீதை சீதை என ஆர் உயிர் தேய,

நாத வீணை இசை நாரதனார் தம்

வேத கீத அமுது அள்ளி விழுங்க, 9


வெங் கரத்தர், அயில் வாளினர், வில்லோர்,

சங்கரற்கும் வலி சாய்வு இல் வலத்தோர்,

அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர்,

பொங்கு அரத்த விழியோர் புடை சூழ, 10


கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர்,

நல் இலங்கை முதலோர், நவை இல்லோர்,

சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர்,

வில் இலங்கு படையோர், புடை விம்ம, 11


பார் இயங்குநர், விசும்பு படர்ந்தோர்,

வார் இயங்கு மழையின் குரல் மானும்

பேரி, அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும்

தூரியம், கடலின் நின்று துவைப்ப, 12


நஞ்சும் அஞ்சும் விழி நாரியர், நாகர்

வஞ்சி அஞ்சும் இடை மங்கையர், வானத்து

அம் சொல் இன் சுவை அரம்பையர், ஆடி,

பஞ்சமம் சிவணும் இன் இசை பாட, 13


நஞ்சு கக்கி எரி கண்ணினர், நாமக்

கஞ்சுகத்தர், கதை பற்றிய கையர்,

மஞ்சு உகக் குமுறு சொல்லினர், வல் வாய்க்

கிஞ்சுகத்த கிரி ஒத்தனர், கிட்ட. 14


கூய் உரைப்ப குல மால் வரையேனும்,

சாய் உரைப்ப அரியவாய தடந் தோள் -

வாய் உரைத்த கலவைக் களி வாசம்,

வேய் உரைப்பது என, வந்து விளம்ப, 15


வேத்திரத்தர், எரி வீசி விழிக்கும்

நேத்திரத்தர், இறை நின்றுழி நில்லாக்

காத்திரத்தர், மனை காவல் விரும்பும்

சூத்திரத்தர், பதினாயிரர் சுற்ற, 16


இராவணன் இராமனைக் காணலும், துன்னிமித்தம் தோன்றுதலும்


தோரணத்த மணி வாயில்மிசை, சூல்

நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான்,

ஆரணத்தை அரியை, மறை தேடும்

காரணத்தை, நிமிர் கண் எதிர் கண்டான். 17


மடித்த வாயினன்; வயங்கு எரி வந்து

பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின்,

இடித்த வன் திசை; எரிந்தது நெஞ்சம்;

துடித்த, கண்ணினொடு இடத் திரள் தோள்கள். 18


ஆக, ராகவனை அவ்வழி கண்டான்;

மாக ராக நிறை வாள் ஒளியோனை

ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும்

வேக ராகு என, வெம்பி வெகுண்டான். 19


இராவணன் வினாவும், சாரனது விடையும்


'ஏனையோன் இவன் இராமன் எனத் தன்

மேனியே உரைசெய்கின்றது; வேறு இச்

சேனை வீரர் படையைத் தெரி' என்னத்

தான் வினாவ, எதிர், சாரன் விளம்பும்: 20


'இங்கு இவன், "படை இலங்கையர் மன்னன்

தங்கை" என்றலும், முதிர்ந்த சலத்தால்,

அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும்

கொங்கை, நாசி, செவி, கொய்து குறைத்தான். 21


'அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி,

நிறக் கருங் கடலுள் நேமியின் நின்று,

துறக்கம் எய்தியவரும் துறவாத

உறக்கம் என்பதனை ஓட முனிந்தான். 22


'கை அவன் தொட அமைந்த கரத்தான்,

ஐய! வாலியொடு இவ் அண்டம் நடுங்கச்

செய்த வன் செருவினின் திகழ்கின்றான்

வெய்யவன் புதல்வன்; யாரினும் வெய்யான். 23


'தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர்

அந்தரத்தர் அமுது ஆர்கலி காண,

மந்தரத்தினொடும் வாசுகியோடும்,

சுந்தரப் பெரிய தோள்கள் திரித்தான். 24


'நடந்து நின்றவன், நகும் கதிர் முன்பு

தொடர்ந்தவன்; உலகு, சுற்றும் எயிற்றின்

இடந்து எழுந்தவனை ஒத்தவன்; வேலை

கடந்தவன் சரிதை கண்டனை அன்றே? 25


'நீலன், நின்றவன்; நெருப்பின் மகன்; திண்

சூலமும் கயிறும் இன்மை துணிந்தும்,

ஆலம் உண்டவன் அடுந் திறல் மிக்கான்;

"காலன்" என்பர், இவனைக் கருதாதார். 26


'வேறாக நின்றான், நளன் என்னும் விலங்கல் அன்னான்;

ஏறா, வருணன் வழி தந்திலன் என்று இராமன்

சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த, செந் தீ

ஆறாதமுன்னம், அகன் வேலையை ஆறு செய்தான். 27


'முக் காலமும் மொய்ம் மதியால் முறையின் உணர்வான்,

புக்கு ஆலம் எழப் புணரிப் புலவோர் கலக்கும்

அக் காலம் உள்ளான், கரடிக்கு அரசு ஆகி நின்றான், -

இக் காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான். 28


'சேனாபதிதன் அயலே, இருள் செய்த குன்றின்

ஆனா மருங்கே, இரண்டு ஆடகக் குன்றின் நின்றார்,

ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்;

வானோர் தம் மருத்துவர் மைந்தர்; வலிக்கண் மிக்கார். 29


'உவன்காண் குமுதன்; குமுதாக்கனும் ஊங்கு அவன்காண்;

இவன்காண் கவயன்; கவயாக்கனும் ஈங்கு இவன்காண்;

சிவன்காண் அயன்காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன்

அவன்காண், நெடுங் கேசரி என்பவன், ஆற்றல் மிக்கான். 30


'முரபன், நகு தோளவன், மூரி மடங்கல் என்னக்

கர பல் நகம் அன்னவை மின் உகக் காந்துகின்றான்;

வர பல் நகம்தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும்

சரபன் அவன்; இவன் சதவலி ஆய தக்கோன். 31


'மூன்று கண் இலன் ஆயினும், மூன்று எயில் எரித்தோன்

போன்று நின்றவன் பனசன்; இப் போர்க்கு எலாம் தானே

ஏன்று நின்றவன் இடபன்; மற்று இவன் தனக்கு எதிரே

தோன்றுகின்றவன் சுடேணன், மூதறிவொடு தொடர்ந்தோன். 32


'வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி, மேதினியை

முதுகு நொய்து எனச் செய்தவன், கனலையும் முனிவோன்,

கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை,

ததிமுகன்; அவன், சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம். 33


'அண்ணல்! கேள்: இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ?

விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையுள் மீனை

எண்ணி நோக்கினும், இக் கடல் மணலினை எல்லாம்

கண்ணி நோக்கினும், கணக்கு இலை' என்றனன், காட்டி. 34


இராவணன் வானரப் படையை இகழ்ந்து சிறு நகை செய்தல்


சினம் கொள் திண் திறல் அரக்கனும், சிறு நகை செய்தான்,

'புனம் கொள் புன் தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்;

வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின்

இனங்களும் பல என் செயும், அரியினை?' என்றான். 35


மிகைப் பாடல்கள்


'ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற, எண்கினாலே

நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலுபாலும்

சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே

கூறிட்ட வயிரத் திண் தோள் கொடுந் தொழில் மடங்கல் போல்வான். 27-1


'மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி, வானவர்களே வந்து

உற்றனர் எனினும், பற்றி உயிர் உகப் பிசைந்திட்டு ஊத,

கொற்றவன் அருளும் கொண்டோ ன்; குடாவடிக்கு இறைவன்; கூற்றம்

பெற்றவன்; அடைந்தோர்தம்மை உயிர் எனப் பேணும் நீரான். 27-2


'ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடகக் குன்றம் ஒன்றை

வாங்கு நீர் மகரவேலை வந்து உடன் வளைந்ததென்ன,

ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான், வெற்றி

ஓங்கிய குவவுத் திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன். 27-3


'அன்னவன் தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம்

தன்னை வந்து இடையில் சுற்ற, தட வரை என்ன நிற்பான்,

கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும்,

வென்னிடக் குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன். 27-4


'பிளக்கும் மன்பதையும், நாகர் பிலனையும்; கிளக்கும் வேரோடு

இளக்கும் இக் குடுமிக் குன்றத்து இனம் எலாம் பிடுங்கி, ஏந்தி,

அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு, ஆர்க்கும்

துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார். 27-5


'குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சேனை

ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற,

மின் தொகுத்து அமைந்த போல விளக்கு எயிறு இலங்க, மேருச்

சென்றென வந்து நிற்பான், திறல் கெழு தீர்க்கபாதன். 27-6


'நூற்றிரண்டாய கோடி நோன் கவித் தாளை சுற்ற,

காற்றின் மா மகற்குக் கீழ்பால் கன வரை என்ன நிற்பான்,

கூற்றின் மா மைந்தன்; கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்தச்

சீற்றமே சிந்தும் செங் கண் தெதிமுகன் என்னும் சீயம். 27-7


'நாடில், இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ-எழுவர்

ஆடல் வெம் படைத் தலைவர்கள் ஆறுபத்து ஏழு

கோடி வீரர்கள், குன்று எனக் குவவிய தோளாய்!

கூடு சேனையும் எழுபது வெள்ளமாய்க் குறிப்பார். 33-1


'அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர்

ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர்

துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர்

எளிய புன் குரங்கு என் செயும்?' என்றனன், இகலோன். 35-1