கம்பராமாயணம்/யுத்த காண்டம்/மண்டோதரி புலம்புறு படலம்
தன்னைக் காண வந்த தேவர் முதலியோரை இராமன் காணச் செல்லுதல்
அவ் வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எவ் வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண,
செவ்வையின் அவர் முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான் 1
வீடணன் பாசத்தால் தமையன்மேல் விழுந்து அரற்றுதல்
'போழ்ந்தென அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்;
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக் கடன் வகுத்தி' என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலை வீழ்ந்தென்ன 2
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க,
தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர,
தா அரும் பொறையினான் தன் அறிவினால் தகையத் தக்க
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர, 3
வீடணன் புலம்பல்
'உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்; நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் எண்ணுதியோ? -எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே! 4
'"ஓராதே ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள்மேல் உற்ற காதல்
தீராத வசை" என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ?-பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! 5
'"அன்று எரியில் விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு ஓர் அன்னை" என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன் தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே
பொன்றினையே! இராகவனார் புய வலியை இன்று அறிந்து, போயினாயே! 6
'மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல்? 7
'வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 8
'"கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்" என்று, அது குறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளோ?
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார், நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 9
'போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தம் மோயை, தெய்வக் கறிப்ன்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து, பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?' 10
சாம்பன் தேற்ற, வீடணன் தேறுதல்
என்று ஏங்கி, அரற்றுவான் தனை எடுத்து, சாம்பவனும் எண்கின் வேந்தன்,
'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினர்போல், தேறாது வருந்துதியோ?' என்ன, தேறி
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டள், மயன் பயந்த நெடுங் கண் பாவை. 11
இராவணன் இறந்த செய்தி கேட்டு, மண்டோ தரி அவன் வீழ்ந்து கிடக்கும் இடம் அடைதல்
அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, ஏகினாள் என்ப-
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 12
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால்-
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. 13
நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ,
கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்;
'ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்' எனா,
மா புரம் தவிர்ந்து, விண் வழிச் சென்றார் சிலர். 14
அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட,
குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட,
உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக,
மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். 15
அரக்கியர் இராவணன்மேல் விழுந்து அழுதல்
தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து,
அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 16
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்,
எழு உயர் புயங்களும், மார்பும், எங்கணும்,
குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதிலர், உயிர்த்திலர், ஆவி நீத்திலார். 17
வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்,
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்கினார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். 18
இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர்,
மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர்,-
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள்-தம்
துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. 19
'அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 20
மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல்
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்தென
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள்,
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து,
இரங்கினள்-மயன் மகள்,-இனைய பன்னினாள்: 21
'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 22
'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும்,
எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடி, இழைத்தவாறோ?
"கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும்" எனக் கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி? 23
'ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று,
வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!
ஓர் அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ! 24
'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்,
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார், பணிதன்னால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! 25
'"தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங் கண் மாற்கும்,
ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி?" என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற
காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ? 26
'அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு, பேர் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்.27
'ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்; கண் புக்க வேழ வில்லால்,
நார நாள், மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே! 28
இராவணன் உடலை மண்டோ தரி தழுவி, உயிர்விடல்
என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29
வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும், தவப் பாலவர்,
ஆன மங்கையரும், அருங் கற்புடை
மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30
இராவணனையும் மண்டோ தரியையும் முறைப்படி ஈமத்தில் ஏற்றி, உரிய கடன்களை வீடணன் செய்தல்
பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை,
வன்னி கூவி, வரன்முறையால், மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து,
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31
கடன்கள் செய்து முடித்து, கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் -
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32
மற்றையோர்க்கும் உரிய கடன்களை வீடணன் இயற்றி, இராமனை வந்தடைதல்
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து,
உற்ற தீக் கொடுத்து, உண் குறு நீர் உகுத்து,
'எற்றையோர்க்கும் இவன் அலது இல்' எனா,
வெற்றி வீரன் குரை கழல் மேவினான். 33
வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும்,
'சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம்' எனா,
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 34
மிகைப் பாடல்கள்
'வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன், முதல் அமரர் வாழ்த்தி ஏத்த,
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து, வைகிய நீ, தாய் சொல் தாங்கி,
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து, உன்
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட, உளம் நாணினையோ? உயிரும் உண்டோ ? 5-1
'அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே! உன் தன்
திருவினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ,
ஒருபது வாய் உள; வணங்க, ஒண் முடி பத்து உள; இறைஞ்ச,
இருபது கை உள; இலங்கை என்னாக வீந்தாயே! 7-1
'அரு வினை வந்தெய்திய போழ்து ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்? வீட்டின்
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த,
ஒருபது நா உள; வணங்க, ஒண் முடிகள் பத்து உளவே; இறைஞ்ச, மேரு
இருபது கை உள; இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே! 7-2
'அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள்' என்று
உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே!
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ? 28-1
'ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை;
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 28-2
இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து,
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட, 31-1
கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து,
உற்ற ஈம வீதியின் உடம்படீஇ,
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர,
மற்ற வீரன் விதியின் வழங்கினான். 31-2
இனைய வீரன் இளவலை நோக்கி, 'நீ
புனையும் நன் முடி சூட்டுதி, போய்' எனா,
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே,
'அனையனோடும் அனுமனைச் சார்க' எனா. 34-1