கம்பராமாயணம்/யுத்த காண்டம்/மீட்சிப் படலம்

வீடணன் புட்பக விமானம் கொணர்தல்

'ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ?' என, 'இன்றே
தூண்டு மானம் உண்டு' என்று, அடல் வீடணன் தொழுதான். 1

'இயக்கர் வேந்தனுக்கு அரு மறைக் கிழவன் அன்று ஈந்த,
துயக்கு இலாதவர் மனம் எனத் தூயது, சுரர்கள்,
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு' என்றே
மயக்கு இலான் சொல, 'கொணருதி வல்லையின்' என்றான். 2

அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து, ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடைத் திசை எலாம் விளங்க,
கண்டை ஆயிர கோடிகள் மழை எனக் கலிப்ப,
கொண்டு அணைந்தனன் நொடியினின், அரக்கர் தம் கோமான், 3

இராமன் புட்பக விமானத்தில் ஏற, தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்துதல்

'அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக,
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு, 'இனி நம்
வினையம் முற்றியது' என்று கொண்டு ஏறினன்; விண்ணோர்
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர், ஆசிகள் புகன்றே. 4

சீதையும் இலக்குவனும் விமானத்தில் ஏறுதல்

வணங்கு நுண் இடைத் திரிசடை வணங்க, வான் கற்பிற்கு
இணங்கர் இன்மையாள் நோக்கி, 'ஓர் இடர் இன்றி இலங்கைக்கு
அணங்குதான் என இருத்தி' என்று, ஐயன்மாட்டு அணைந்தாள்;
மணம் கொள் வேல் இளங் கோளரி மானம் மீப் படர்ந்தான். 5

விமானத்தில் நின்ற இராமன் வீடணன் முதலிய துணைவர்க்கு விடை தரல்

அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து, அனிலன்
சண்ட வேகமும் குறைதர, நினைவு எனும் தகைத்தாய்,
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்மேல்
கொண்ட கொண்டல், தன் துணைவரைப் பார்த்து, இவை குனித்தான்: 6

வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன்,
'தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது; உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின்,
நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால். 7

'நீதி ஆறு எனத் தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்!
ஆதி நான்மறைக் கிழவன் நின் குலம் என அமைந்தாய்!
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள், இனி நீ
போதியால்' எனப் புகன்றனன்-நான் மறை புகன்றான். 8

'சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம் படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்பு அற மீண்டு, ஊர்
புக்கு, வாழ்க!' எனப் புகன்றனன்-ஈறு இலாப் புகழோன். 9

வாலி சேயினை, சாம்பனை, பனசனை, வயப் போர்
நீலன் ஆதிய நெடும் படைத் தலைவரை, நெடிய
காலின் வேலையைத் தாவி மீண்டு அருளிய கருணை
போலும் வீரனை, நோக்கி, மற்று அம் மொழி புகன்றான். 10

ஐயன் அம் மொழி புகன்றிட, துணுக்கமோடு அவர்கள்,
மெய்யும் ஆவியும் குலைதர, விழிகள் நீர் ததும்ப,
செய்ய தாமரைத் தாள் இணை முடி உறச் சேர்த்தி,
'உய்கிலேம், நினை நீங்கின்' என்று இனையன உரைத்தார். 11

அயோத்தியில் ஐயன் திருமுடிசூடுதலைக் காண விரும்பி உரைத்தல்

'பார மா மதில் அயோத்தியின் எய்தி, நின் பைம் பொன்
ஆர மா முடிக் கோலமும் செவ்வியும் அழகும்,
சோர்வு இலாது, யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து
பேரவே அருள்' என்றனர்-உள் அன்பு பிணிப்பார். 12

இராமன் உடன்பட்டுக் கூற, யாவரும் மகிழ்தல்

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும், அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும், நோக்கி, 'நீர் துளங்கல்;
முன்பு நான் நினைந்திருந்தது அப் பரிசு; நும் முயற்சி
பின்பு காணுமாறு உரைத்தது' என்று உரைத்தனன்-பெரியோன் 13

ஐயன் வாசகம் கேட்டலும், அரி குலத்து அரசும்,
மொய் கொள் சேனையும், இலங்கையர் வேந்தனும், முதலோர்,
வையம் ஆளுடை நாயகன் மலர்ச் சரண் வணங்கி,
மெய்யினோடு அருந் துறக்கம் உற்றார் என வியந்தார். 14

யாவரும் புட்பகத்தின்மேல் ஏறுதல்

அனையது ஆகிய சேனையோடு அரசனை, அனிலன்
தனயன் ஆதியாம் படைப் பெருந் தலைவர்கள் தம்மை,
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை, 'வந்து இங்கு
இனிதின் ஏறுமின், விமானம்' என்று, இராகவன் இசைத்தான். 15

சொன்ன வாசகம் பிற்பட, சூரியன் மகனும்,
மன்னு வீரரும், எழுபது வெள்ள வானரரும்,
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்,
துன்னினார், நெடும் புட்பகமிசை ஒரு சூழல். 16

பத்து நால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்து யோனிகள் ஏறினும், வெற்றிடம் மிகுமால்;
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்,
இத் தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே! 17

புட்பக விமானத்தில் இராமன் விளங்கிய காட்சி

எழுபது வெள்ளத்தாரும், இரவி கான்முளையும், எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும், வான் பெரும் படையும், சூழ
தழுவு சீர் இளைய கோவும், சனகன் மா மயிலும், போற்ற,
விழுமிய குணத்து வீரன் விளங்கினன், விமானத்து உம்பர். 18

அண்டமே போன்றது ஐயன் புட்பகம்; அண்டத்து உம்பர்,
எண் தரும் குணங்கள் இன்றி, முதல் இடை ஈறு இன்று ஆகி,
பண்டை நான்மறைக்கும் எட்டாப் பரஞ்சுடர் பொலிவதேபோல்,
புண்டரீகக் கண் வென்றிப் புரவலன் பொலிந்தான் மன்னோ. 19

இராமன் சீதைக்கு வழியிலுள்ள காட்சிகளைக் காட்டிச் செல்லுதல்

குட திசை மறைந்து, பின்னர்க் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப, மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி, தாவி வான் படரும் வேலை,
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான்: 20

சேதுவைக் காட்டி, அதன் தூய்மையைப் புகழ்தல்

'இந்திரற்கு அஞ்சி, மேல் நாள், இருங் கடல் புக்கு, நீங்கால்
சுந்தர சயிலம், தன்னைக் கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி, இவண் கிடப்ப கண்டாய்;
பைந்தொடி! அடைத்த சேது பாவனம் ஆயது' என்றான். 21

'கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி,
பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகா;
சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே 22

'நெற்றியின் அழலும் செங் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும், "சேது ஆகப்
பெற்றிலம்" என்று கொண்டே, பெருந்தவம் புரிகின்றாளால்;
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது?-மலர்க்கண் வந்தாய்!' 23

வருணன் சரணம் அடைந்த இடத்தைக் காட்டுதல்

தெவ் அடும் சிலைக் கை வீரன் சேதுவின் பெருமை யாவும்,
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கருங் கண் செவ் வாய்,
நொவ் இடை, மயில் அனாட்கு நுவன்றுழி, 'வருணன் நோனாது
இவ் இடை வந்து கண்டாய், "சரண்" என இயம்பிற்று' என்றான் 24

பொதிய மலை முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

'இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம்; முன் தோன்று
அது வளர் மணிமால் ஓங்கல்; உப் புறத்து, உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு' என்று அருள் தர, 'அனுமன் தோன்றிற்று
எது?' என, அணங்கை நோக்கி, இற்று என இராமன் சொன்னான்: 25

அனுமனைச் சந்தித்த இடம், கிட்கிந்தை ஆகியவற்றைக் காட்டுதல்

'வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகர நீர் சூழ்
வேலையைக் கடக்கப் பாயும் விறல் உடையவனை வீட்டி,
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர்-
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது' என்றான் 26

வானர மகளிரையும் உடன் அழைத்துச் செல்ல, சீதை விரும்பி மொழிதல்

'கிட்கிந்தை இதுவேல், ஐய! கேட்டியால்: எனது பெண்மை
மட்கும்தான், ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி, வானோர்
உட்கும் போர்ச் சேனை சூழ, ஒருத்தியே அயோத்தி எய்தின்;
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து' என்றாள் 27

இராமன் ஆணைப்படி சுக்கிரீவன் அனுமனை அனுப்பி, மகளிர்களை அழைத்து வரச் செய்தல்

அம் மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப, அன்னான்
மெய்ம்மை சேர அனுமன் தன்னை நோக்கி, 'நீ விரைவின், வீர!
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி' என்ன,
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன், சென்று மன்னோ 28

வானர மகளிர் மங்கலப் பொருள்களுடன் வந்து முறைப்படி வணங்குதல்

வரிசையின் வழாமை நோக்கி, மாருதி மாதர் வெள்ளம்
கரைசெயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன், கணத்தின் முன்னம்;
விரைசெறி குழலினார் தம் வேந்தனை வணங்கி, பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது, நின்றார். 29

மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும்
அங்கு அவர் வைத்து, பெண்மைக்கு அரசியைத் தொழுது சூழ,
நங்கையும் உவந்து, 'வேறு ஓர் நவை இலை, இனி மற்று' என்றாள்;
பொங்கிய விமானம் தானும், மனம் என, எழுந்து போன. 30

கோதாவரி, தண்டகாரணியம், முதலியவற்றைச் சீதைக்குக் காட்டுதல்

போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்,
சூது ஆர் முலைத் தோகையை நோக்கி, 'முன் தோன்று சூழல்
கோதாவரி; மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை,
பேதாய்! பிரிவுத் துயர் பீழை பிணித்தது' என்றான். 31

'சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை! கேள்: இது நீள்
தரத்து உவாசவர், வேள்வியர், தண்டகம்; அதுதான்
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம்;
பரத்துவாசவன் உறைவிடம் இது' எனப் பகர்ந்தான். 32

மின்னை நோக்கி, அவ் வீரன் ஈது இயம்பிடும் வேலை,
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து, தன் அகத்தின்,
'என்னை ஆளுடை நாயகன் எய்தினன்' என்னா,
துன்னு மா தவர் சூழ்தர, எதிர் கொள்வான், தொடர்ந்தான். 33

பரத்துவாசன் ஆச்சிரமத்தில் இறங்குதல்

ஆதபத்திரம், குண்டிகை, ஒரு கையின் அணைத்து,
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய,
மா தவப் பயன் உருவு கொண்டு எதிர் வருமாபோல்,
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன், நெடியோன். 34

எண் பக, தினை அளவையும் கருணையோடு இசைந்த
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி, மா மேரு
விட்பு அகத்து உறை கோள் அரி எனப் பொலி வீரன்,
புட்பகத்தினை வதிகென நினைந்தனன், புவியில். 35

இராமன் முதலியோர் முனிவனைத் தொழ, முனிவனும் இராமனை உபசரித்தல்

உன்னும் மாத்திரத்து, உலகினை எடுத்து உம்பர் ஓங்கும்
பொன்னின் நாடு வந்து இழிந்தெனப் புட்பகம் தாழ,
என்னை ஆளுடை நாயகன், வல்லையின் எதிர் போய்,
பன்னு மா மறைத் தபோதனன் தாள்மிசைப் பணிந்தான். 36

அடியின் வீழ்தலும் எடுத்து, நல் ஆசியோடு அணைத்து,
முடியை மோயினன் நின்றுழி, முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர, தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம் அது ஆட்டினன், நெடியோன். 37

கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே,
அருகு சார்தர, அருந் தவன் ஆசிகள் வழங்கி,
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன், உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து, உளம் களித்தனன், பரிவால். 38

வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை
ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி,
ஞான நாதனைத் திருவொடு நன் மனை கொணர்ந்தான்,
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே. 39

பன்ன சாலையுள் புகுந்து, நீடு அருச்சனை பலவும்
சொன்ன நீதியின் புரிந்த பின், சூரியன் மருமான்-
தன்னை நோக்கினன், பல் முறை கண்கள் நீர் ததும்ப,
பின் ஒர் வாசகம் உரைத்தனன், தபோதரின் பெரியோன்: 40

'முனிவர் வானவர் மூவுலகத்துளோர் யாரும்
துனி உழந்திடத் துயர் தரு கொடு மனத் தொழிலோர்
நனி மடிந்திட, அலகைகள் நாடகம் நடிப்ப,
குனியும் வார் சிலைக் குரிசிலே! என், இனிக் குணிப்பாம்? 41

'விராதனும், கரனும், மானும், விறல் கெழு கவந்தன் தானும்,
மராமரம் ஏழும், வாலி மார்பமும், மகர நீரும்,
இராவணன் உரமும், கும்பகருணனது ஏற்றம் தானும்,
அராவ அரும் பகழி ஒன்றால் அழித்து, உலகு அளித்தாய்-ஐய!' 42

இராமன் அனுமனைப் பரதனிடம் அனுப்பல்

'இன்று நாம் பதி போகலம்; மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்' என்று ஏயினன், நெடியோன்;
'நன்று' எனா, அவன், மோதிரம் கைக் கொடு நடந்தான். 43

தந்தை வேகமும், தனது நாயகன் தனிச் சிலையின்
முந்து சாயகக் கடுமையும், பிற்பட முடுகி,
சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம், கூறி, மேல் வான் வழிப் போனான். 44

இன்று இசைக்கு இடம் ஆய இராகவன்
தென் திசைக் கருமச் செயல் செப்பினாம்,
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம்: 45

நந்தியம் பதியில் பரதன் இருந்த நிலை

நந்தியம்பதியின் தலை, நாள்தொறும்
சந்தி இன்றி நிரந்தரம், தம்முனார்
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா,
இந்தியங்களை வென்றிருந்தான் அரோ. 46

துன்பு உருக்கவும், சுற்றி உருக்க ஒணா
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய்,
முன்பு உருக் கொண்டு ஒரு வழி முற்றுறா
அன்பு உருக் கொண்டது ஆம் எனல் ஆகுவான்; 47

நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும், அக்
கனைந்த மூலமும் காயும் கனியும், அவ்
வனைந்த அல்ல அருந்தல் இல் வாழ்க்கையான்; 48

நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்;
ஏக்குற்று, ஏக்குற்று, 'இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான்; வரும், வரும்' என்று, உயிர்
போக்கிப் போக்கி, உழக்கும் பொருமலான்; 49

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்,
எண்ணும் கீர்த்தி இராமன், திரு முடி
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி,
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான். 50

இராமன் வரவேண்டிய நாள் குறித்து சோதிடரை அழைத்துப் பரதன் வினவுதல்

அனையன் ஆய பரதன், அலங்கலின்
புனையும், தம்முனார் பாதுகைப் பூசனை
நினையும் காலை, நினைத்தனனாம் அரோ,
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள். 51

'யாண்டு வந்து இங்கு இறுக்கும்?' என்று எண்ணினான்,
'மாண்ட சோதிட வாய்மைப் புலவரை
ஈண்டுக் கூய்த் தருக' என்ன, வந்து எய்தினார்,
'ஆண் தகைக்கு இன்று அவதி' என்றார் அரோ. 52

இராமன் வாராமையால் பரதன் அவலமுற்றுப் பலவாறு சிந்தித்தல்

என்ற போதத்து, இராமன் வனத்திடைச்
சென்ற போதத்தது அவ் உரை, செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன்,
கொன்ற போதத்த உயிர்ப்புக் குறைந்துளான். 53

மீட்டு எழுந்து, விரிந்த செந் தாமரைக்
காட்டை வென்று எழு கண் கலுழிப் புனல்
ஓட்ட, உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும், அவலத்து அழிந்தான் அரோ. 54

'எனக்கு இயம்பிய நாளும், என் இன்னலும்,
தனைப் பயந்தவள் துன்பமும், தாங்கி, அவ்
வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர்
வினைக் கொடும் பகை உண்டு' என விம்மினான். 55

'மூவகைத் திருமூர்த்தியர் ஆயினும்,
பூவகத்தில், விசும்பில், புறத்தினில்,
ஏவர் கிற்பர் எதிர் நிற்க, என்னுடைச்
சேவகற்கு?' என ஐயமும் தேறினான். 56

'என்னை, "இன்னும் அரசியல் இச்சையன்
அன்னன் ஆகின், அவன் அது கொள்க" என்று
உன்னினான்கொல், உறுவது நோக்கினான்?
இன்னதே நலன்' என்று இருந்தான் அரோ. 57

உயிர் துறக்கக் கருதிய பரதன், தூதரை அனுப்பி, சத்துருக்கனை அழைத்தல்

'அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக;
வனத்து இருக்க; இவ் வையம் புகுதுக;
நினைத்து இருந்து நெடுந் துயர் மூழ்கிலேன்;
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன். 58

என்னப் பன்னி, 'இளவலை என்னுழைத்
துன்னச் சொல்லுதிர்' என்னலும், தூதர் போய்,
'உன்னைக் கூயினன், உம்முன்' எனா முனம்,
முன்னர்ச் சென்றனன், மூவர்க்கும் பின் உளான். 59

தொழுது நின்ற தம்பியிடம் பரதன் வரம் வேண்டல்

தொழுது நின்ற தன் தம்பியை, தோய் கணீர்
எழுது மார்பத்து இறுகத் தழுவினான்,
அழுது, 'வேண்டுவது உண்டு, ஐய! அவ் வரம்,
பழுது இல் வாய்மையினாய்! தரற்பாற்று' என்றான். 60

'"என்னது ஆகும்கொல், அவ் வரம்?" என்றியேல்,
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்;
மின்னு தீயிடை யான் இனி வீடுவென்;
மன்னன் ஆதி; என் சொல்லை மறாது' என்றான். 61

சத்துருக்கன் வருந்தி உரைத்தல்

கேட்ட தோன்றல், கிளர் தடக் கைகளால்
தோட்ட தன் செவி பொத்தி, துணுக்குறா,
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்;
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான். 62

விழுந்து, மேக்கு உயர் விம்மலன், வெய்து உயிர்த்து,
எழுந்து, 'நான் உனக்கு என்ன பிழைத்துளேன்?
அழுந்து துன்பத்தினாய்!' என்று அரற்றினான்-
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான். 63

'கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்து, பின்பு
போனானும் ஒரு தம்பி; "போனவன் தான் வரும் அவதி போயிற்று" என்னா,
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி; அயலே நாணாது,
யானாம் இவ் அரசு ஆள்வென்? என்னே, இவ் அரசாட்சி! இனிதே அம்மா! 64

'"மன்னின் பின், வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே, பரதன் என்னும்
சொல் நிற்கும்" என்று அஞ்சி, புறத்து இருந்தும், அருந் தவமே தொடங்கினாயே!
"என்னின் பின் இவன் உளனாம்" என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும்,
உன்னின் பின் இருந்ததுவும், ஒரு குடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும்' என்றான். 65

சத்துருக்கனுக்குப் பரதன் சமாதானம் கூறி, எரி அமைக்குமாறு பணித்தல்

முத்து உருக் கொண்டு அமைந்தனைய முழு வெள்ளிக் கொழு நிறத்து, முளரிச் செங்கண்,
சத்துருக்கன் அஃது உரைப்ப, 'அவன் இங்குத் தாழ்க்கின்ற தன்மை, யான் இங்கு
ஒத்திருக்கலால் அன்றே? உலந்ததன்பின், இவ் உலகை உலைய ஒட்டான்;
அத் திருக்கும் கெடும்; உடனே புகுந்து ஆளும் அரசு; எரி போய் அமைக்க' என்றான். 66

செய்தி அறிந்து கோசலை விரைந்து ஓடி வருதல்

அப்பொழுதின், அவ் உரை சென்று, அயோத்தியினின் இசைத்தலுமே, அரியை ஈன்ற
ஒப்பு எழுத ஒண்ணாத கற்புடையாள், வயிறு புடைத்து, அலமந்து ஏங்கி,
'இப்பொழுதே உலகு இறக்கும், யாக்கையினை முடித்து ஒழிந்தால், மகனே!' என்னா,
வெப்பு எழுதினாலனைய மெலிவுடையாள் கடிது ஓடி, விலக்க வந்தாள் 67

மந்திரியர், தந்திரியர், வள நகரத்தவர், மறையோர், மற்றும் சுற்ற,
சுந்தரியர் எனப் பலரும் கை தலையில் பெய்து இரங்கித் தொடர்ந்து செல்ல,
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த,
அந்தர மங்கையர் வணங்க, அழுது அரற்றி, பரதனை வந்து அடைந்தாள் அன்றே. 68

கோசலை பரதனைத் தீயில் விழாதபடி பற்றிக் கொண்டு, தடுத்துக் கூறுதல்

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஓசிய, மேனி தள்ள,
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து,
சொரிவு அமைப்பது அரிது ஆய மழைக் கண்ணாள் தொடருதலும், துணுக்கம் எய்தா,
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான், அவள் புகுந்து, பற்றிக்கொண்டாள்.69

'மன் இழைத்ததும், மைந்தன் இழைத்ததும்,
முன் இழைத்த விதியின் முயற்சியால்;
பின் இழைத்ததும், எண்ணில், அப் பெற்றியால்;
என் இழைத்தனை, என் மகனே?' என்றாள். 70

'நீ இது எண்ணினையேல், நெடு நாடு எரி
பாயும்; மன்னரும் சேனையும் பாய்வரால்;
தாயர் எம் அளவு அன்று; தனி அறம்
தீயின் வீழும்; உலகும் திரியுமால். 71

'தரும நீதியின் தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றிக் கண்டிலம், கண்களால்;
அருமை ஒன்றும் உணர்ந்திலை; ஐய! நின்
பெருமை, ஊழி திரியினும், பேருமோ? 72

'எண் இல் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ? 73

'இன்று வந்திலனே எனின், நாளையே
ஒன்றும் வந்து, உனை; உன்னி, உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல்; பிழைத்தான் எனின்,
பொன்றும் தன்மை புகுந்தது போய்' என்றாள். 74

'ஒருவன் மாண்டனன் என்று கொண்டு, ஊழி வாழ்
பெரு நிலத்துப் பெறல் அரும் இன் உயிர்க்
கருவும் மாண்டு அறக் காணுதியோ?-கலைத்
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய்! 75

'"இறக்கையும், சிலர் ஏகலும், மோகத்தால்
பிறக்கையும், கடன்" என்று, பின் பாசத்தை
மறக்கைகாண், மகனே! வலி ஆவது; என்,
துறக்கைதானும்?' என்றாள்-மனம் தூய்மையாள். 76

கோசலையின் உரையைப் பரதன் மறுத்து உரைத்தல்

'"மைந்தன் என்னை மறுத்து உரைத்தான்" எனல்;
எந்தை மெய்ம்மையும், இக் குலச் செய்கையும்,
நைந்து போக, உயிர் நிலை நச்சிலேன்;
முந்து செய்த சபதம் முடிப்பெனால். 77

'யானும், மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்,
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால்;
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்?
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ? 78

'தாய் சொல் கேட்டலும், தந்தை சொல் கேட்டலும்,
பாசத்து அன்பினைப் பற்று அற நீக்கலும்,
ஈசற்கே கடன்; யான் அஃது இழைக்கிலேன்;
மாசு அற்றேன், இது காட்டுவென், மாண்டு' என்றான். 79

அனுமன் தோன்றுதல்

என்று தீயினை எய்தி, இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு,
குன்று போல் நெடு மாருதி கூடினான். 80

இராமனது வருகையை உரைத்து, அனுமன் எரியை அவித்தல்

'ஐயன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால்,
உய்யுமே, அவன்?' என்று உரைத்து, உள் புகா,
கையினால் எரியைக் கரி ஆக்கினான். 81

ஆக்கி, மற்று அவன் ஆய் மலர்த் தாள்களைத்
தாக்கத் தன் தலை தாழ்ந்து வணங்கி, கை
வாக்கின் கூடப் புதைத்து, 'ஒரு மாற்றம் நீ
தூக்கிக் கொள்ளத் தகும்' எனச் சொல்லினான். 82

'இன்னம் நாழிகை எண்-ஐந்து உள, ஐய!
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்;
இன்னது இல்லைஎனின், அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து, இவ் எரியில் முடிவெனால். 83

'ஒன்றுதான் உளது; உன் அடியேன் சொலால்,
நின்று தாழ்த்தருள், நேமிச் சுடர் நெடுங்
குன்று தாழ்வளவும்; இது குன்றுமேல்,
பொன்றும், நீயும், உலகமும்-பொய் இலாய்! 84

'எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான்,
பங்கயத்துப் பரத்துவன் வேண்டலால்,
அங்கு வைகினன் அல்லது, தாழ்க்குமோ?
இங்கண், நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால்: 85

அனுமன் இராமனது மோதிரத்தை அடையாளம் காட்ட, அங்குள்ளார் அனைவரும் மகிழ்தல்

'அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஓர் பேர் அடையாளம்; உனக்கு அது
கொண்டு வந்தனென்; கோது அறு சிந்தையாய்!
கண்டு கொண்டருள்வாய்' எனக் காட்டினான். 86

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்,
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம் அரோ,
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும், 87

அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன;
தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை. 88

மோதிரம் பெற்ற பரதனது பெரு மகிழ்ச்சி

மோதிரம் வாங்கி, தன் முகத்தின்மேல் அணைத்து,
'ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ?' எனா
ஓதினர் நாண் உற, ஓங்கினான்-தொழும்
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான். 89

ஆதி வெந் துயர் அலால், அருந்தல் இன்மையால்,
ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்,
'ஏதிலன் ஒருவன்கொல்' என்னல் ஆயது;
மாதிரம் வளர்ந்தன, வயிரத் தோள்களே. 90

அழும்; நகும்; அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும், வெங் களி துளக்கலால்;
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடும் குனிக்கும்; தன் தடக் கை கொட்டுமால். 91

'ஆடுமின், ஆடுமின்!' என்னும்; 'ஐயன்பால்
ஓடுமின், ஓடுமின்!' என்னும்; 'ஓங்கு இசை
பாடுமின், பாடுமின்!' என்னும்; 'பாவிகாள்!
சூடுமின், சூடுமின், தூதன் தாள்!' எனும். 92

'வஞ்சனை இயற்றிய மாயக் கைகையார்
துஞ்சுவர், இனி' எனத் தோளைக் கொட்டுமால்;
குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற,
அஞ்சனக் குன்றின் நின்று ஆடும், பாடுமால். 93

வேதியர்தமைத் தொழும்; வேந்தரைத் தொழும்;
தாதியர்தமைத் தொழும்; தன்னைத் தான் தொழும்;
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும்; நிற்குமால்;-
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே! 94

பரதன் அனுமனைப் பாராட்டி, 'நீ யார்?' எனல்

அத் திறத்து ஆண்தகை, அனுமன் தன்னை, 'நீ
எத் திறத்தாய்? எமக்கு இயம்பி ஈதியால்!
முத் திறத்தவருளே ஒருவன்; மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன்' என்றான். 95

'மறையவர் வடிவு கொண்டு, அணுக வந்தனை;
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்;
"துறை எனக்கு யாது எனச் சொல்லு, சொல்!" என்றான்;
அறை கழல் அனுமனும் அறியக் கூறுவான்: 96

அனுமன் தன் வரலாற்றை உரைத்து, பெரு வடிவையும் காட்டுதல்

'காற்றினுக்கு அரசன் பால் கவிக் குலத்தினுள்
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து, நும் முனாற்கு
ஏற்றிலா அடித் தொழில் ஏவலாளனேன்;
மாற்றினென் உரு, ஒரு குரங்கு, மன்ன! யான். 97

'அடித் தொழில் நாயினேன் அருப்ப யாக்கையைக்
கடித் தடந் தாமரைக் கண்ணின் நோக்கு' எனா,
பிடித்த பொய் உருவினைப் பெயர்த்து நீக்கினான்,
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான். 98

வடிவு கண்டோர் அஞ்ச, பெரு வடிவைச் சுருக்குமாறு பரதன் வேண்டுதல்

வெஞ் சிலை இருவரும், விரிஞ்சன் மைந்தனும்,
'எஞ்சல் இல் அதிசயம் இது' என்று எண்ணினார்;
துஞ்சிலது ஆயினும், சேனை துண்ணென
அஞ்சினது, அஞ்சனை சிறுவன் ஆக்கையால். 99

'ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின், உலப்பு இல் யாக்கையை
வாங்குதி, விரைந்து' என, மன்னன் வேண்டினான். 100

அனுமனுக்குப் பரதன் பரிசு கொடுத்தல்

சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன்,
பொருக்கென நிதியமும், புனை பொன் பூண்களின்
வருக்கமும், வரம்பு இல நனி வழங்கினான். 101

கோவொடு தூசு, நல் குல மணிக் குழாம்,
மாவொடு கரித் திரள், வாவு தேர் இனம்,
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்,
எவரும் சிலை வலான், யாவும் நல்கினான். 102

அனுமன் விமானத்திலுள்ளாரைப் பரதனுக்குச் சுட்டிக் காட்டுதல்

அன்னது ஓர் அளவையின், விசும்பின் ஆயிரம்
துன் இருங் கதிரவர் தோன்றினார் என,
பொன் அணி புட்பகப் பொரு இல் மானமும்,
மன்னவர்க்கு அரசனும், வந்து தோன்றினார். 103

'அண்ணலே! காண்டியால்-அலர்ந்த தாமரைக்
கண்ணனும், வாரைக் கடலும், கற்புடைப்
பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. 104

'ஏழ்-இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர்
சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன்
ஊழியான்' என்று கொண்டு, உணர்த்தும் காலையே. 105

இராமனைக் கண்டவர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தல்

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர்
மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும்,
அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன்
தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். 106

இராமனைப் பரதன் காணுதல்

ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென,
கானிடைப் போகிய கமலக்கண்ணனை,
தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். 107

ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன், தொழுத கையினன்,
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன்,
பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். 108

இராமனும் தம்பியைக் கண்டு மகிழ்தல்

தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச்
சான்று என நின்றவன், 'இனைய தம்பியை,
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை,
ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு' எனா, 109

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத்
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால்,
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார்
கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 110

புட்பக விமானம் நிலத்தைச் சார்தல்

ஆனது ஓர் அளவையின், அமரர்கோனொடும்
வானவர் திரு நகர் வருவது ஆம் என,
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும்
தான் உயர் புட்பகம் நிலத்தைச் சார்ந்ததால். 111

இராமனது வருகையால் தாயர் முதலியோர் உற்ற நிலை

தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான்;
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான்;
ஆய் இளையார்க்குக் கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான்;
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் 112

எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்;
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்;
ஒளி வரப் பிறந்தது ஒத்தான், உலகினுக்கு; ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். 113

ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால், அனையன் நீங்க,
காவி அம் கழனி நாடும், நகரமும், கலந்து வாழும்
மா இயல் ஒண்கணாரும், மைந்தரும், வள்ளல் எய்த,
ஓவியம் உயிர் பெற்றென்ன ஓங்கினர், உணர்வு பெற்றார். 114

சுண்ணமும், சாந்தும், நெய்யும், சுரி வளை முத்தும், பூவும்,
எண்ணெயும், கலின மா விலாழியும், எண் இல் யானை
வண்ண வார் மதமும், நீரும், மான்மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும், ஓடிக் கடலையும் கடந்த அன்றே. 115

அடியில் வீழ்ந்து வணங்கிய பரதனை இராமன் அன்புறத் தழுவுதல்

சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி,
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி,
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற நம்பி,
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது சோர்வான். 116

தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் செவ்வி
வழுவுற, பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை அன்னான். 117

இலக்குவன் பரதனது பாதங்களில் விழுந்து வணங்குதல்

அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி அடியது ஆக,
கனை கழல் அமரர் கோமாற் கட்டவன்-படுத்த காளை,
துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் தாளின் வீழ்ந்தான் 118

சத்துருக்கனையும் இராமன் தழுவி, பரத சத்துருக்கனர்களைத் துணைவர்களுக்கு அறிமுகப்படுத்தல்

பின் இணைக் குரிசில் தன்னைப் பெருங் கையால் வாங்கி, வீங்கும்
தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் தம்பிமாருக்கு,
இன் உயிர்த் துணைவர் தம்மைக் காட்டினான்; இருவர் தாளும்,
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் செய்தார். 119

மிகைப் பாடல்கள்

'வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம்
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்
எங்குளார் எனும் இடம் உளது; அதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-1

'வாங்கினான் இரு நிதியொடு தனதனில், வள்ளால்!
ஓங்குமால், வெள்ளம் ஏழு பஃது ஏறினும், ஒல்காது;
ஈங்கு உளார் எலாம் இவருவது; இவரின், நீ இனிது
பூங் குலா நகர் புகுதி, இஞ் ஞான்று' எனப் புகன்றான். 1-2

'மங்கலா நிதி வட திசை வானவன் மானம்;
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால்,
எங்கு உளார்?" எனும் இடம் உளது; இதன்மிசை ஏறி,
பொங்கு மா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-3

'வாங்கினான், அளகேசனைத் துரந்து, இந்த மானம்;
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும், உரவோய்!
ஆங்கு இடம் பினும் உடையதாம்; அதுதனில் ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-4

வாங்கினான் அது, மா நிதியோடு அவன் மானம்;
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால், இன்னும்,
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது; அதனை நீ ஏறி,
பூங் குலா நகர் புகுதி, இப் பொழுதினில்' என்றான். 1-5

என்று, தேரினை வீடணன் எய்தியது என்றான்;
'நன்றுதான்' என நாயகன் ஏறினன், அவரோடு
அன்றுதான் இளங் கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என இரு திசை இருந்தும் ஒக்கும். 1-6

ஏறினன் விமானம் தன்னில் இராமனும், இளைய கோவும்,
மாறு இலாச் சனகியோடு, வள நகர் இலங்கை வேந்தும்,
கூறிய அனுமன், சாம்பன், குமரன், வெங் கவி வந்து ஏற;
மாறிலோர் நிலத்து நின்றார், வயந்தனார் கொத்தில் உள்ளார். 1-7

[இது முதல் 1-19 வரையில் 'இமயப் படலம்' என்றும், 'வசந்தன் உயிர்வரு படலம்' என்றும், சில பிரதிகளில் உள்ளன.]

மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி,
'ஏறும் நீர் தேரில்' என்ன, 'கருணன் வந்து எதிர்த்தபோது,
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட, அரக்கன் சீறி,
நீறு எழப் பிசைந்தே இட்டான் நெற்றியில்' என்னச் சொன்னார் 1-8

என்ற வாசகம் கேட்டலும், வானரர் இறங்கி,
நின்ற போதினில் இராகவன் தேரின்நின்று இழிந்தான்;
'பொன்றுமா வரக் காரணம் என்?' எனப் புழுங்கா'
துன்று தார்ப் புயத்து இலக்குவ! பொறி' எனச் சொன்னான். 1-9

'வரிசிலை இராமன், ஓலை மறம் புரி மறலி, காண்க!
எரிகொளும் இலங்கைப் போரில், இன் உயிர் துறந்து போந்த
குரிசிலை, வயந்தன் தன்னைத் தேடியே கொணர்க; அன்றேல்,
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென்' என்று எழுதிவிட்டான். 1-10

அக் கணத்து அருகு நின்ற அனுமன் கைத் திருமுகத்தைத்
தக்கவன் நீட்ட, வாங்கி, தன் தலைமிசையில் சூடி,
'இக்கணம் வருவென்; வாழி! இராம!' என்று, இரு தோள் கொட்டி,
மிக்க மா மடங்கல் போல, விண்ணிடை விசைத்துப் பாய்ந்தான் 1-11

மண்டிப் புக்கனன், மறலிதன் பெரும் பதம்; நரகில்
தண்டிப்புண்டு, அறுப்புண்டு, எரிப்புண்டவர்தம்மைக்
கண்டு, மாருதி கண் புதைத்து, 'அரி! அரி' என்ன,
மிண்டி ஏறினர், நரகிடை வீழ்ந்தவர் எல்லாம். 1-12

துளங்கி, அந்தகன் வந்து, அடி தொழுதலும், தோலா
வளம் கொள் மாருதி, 'வசந்தனைக் காட்டு' என, அவனும்
உளம் கலங்கி, 'உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்;
விளங்கு கீர்த்தியாய்! தேடு விண்ணவர் புரத்து' என்றான். 1-13

சொன்ன கூற்றுவன் தன்னைத் தன் வாலிடைத் துவக்கி,
பொன்னின் கற்பகப் பதியிடைக் கொண்டு போய்ப் புகலும்,
முன்னை வந்து கண்டு, இந்திரன், 'முனிவு எனோ?' என்ன,
'மன்ன! ஏகுவென்; வயந்தனைக் காட்டுதி' என்றான். 1-14

'வல் அரக்கரை மடித்து, எமை எடுத்த மாருதியே!
இல்லை இங்கு; அயன் உலகிடை அறிதி' என்று இசைப்ப,
சொல்லும் அங்கு அவன் தன்னையும் வாலிடைத் துவக்கி,
பல் உயிர்த் திறம் படைத்தவன் உலகிடைப் பாய்ந்தான். 1-15

சிந்தை தூயவன் செல, உளம் துளங்கு நான்முகனும்,
'வந்த காரியம் எது?' என, 'வயந்தனைப் பார்த்துச்
சுந்தரத் தடந்தோள் வில்லி நின்றனன்; அவன் தான்
உந்தன் நீள் பதத்துளான் எனின், காட்டு' என உணர்த்தும்: 1-16

'என்னுடைப் பெரும் பதத்தின் மேலாகிய எந்தை-
தன்னுடைப் பெருஞ் சோதியின் கீழதாய்த் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான்; விறலோய்!
அன்னவன் தனைக் கொணருதி, ஆங்கு அணைந்து' என்றான். 1-17

என்ற நான்முகன் தன்னையும், இந்திரன் யமனோடு
ஒன்ற, வால்கொடு துவக்கினன், ஒரு குதிகொண்டான்;
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில்
சென்று, கண்டு கொண்டு இழிந்தனன், திசைமுகன் பதியில். 1-18

மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க,
குலவு வாசவன் யமனை விட்டு, இரு நிலம் குறுகி,
இலகு இல் வீரன் தன் அடி, இணை அவனொடும் வணங்கி,
சலமும் தீர்த்தனன்; படையையும் ஏற்றினன், தேர்மேல். 1-19

[வேறு சில பிரதிகளில் 1-6 பாடலுக்குப்பின் 1-20 முதல் 1-27 வரையில் உள்ள பாடல்களுடன் வசந்தன் வரலாறு பற்றி, (1-7 முதல் 1-19) முன் வந்த பாடல்களின் சிலவற்றையும் இடையில் கொண்டு, இவ் வரலாறு வேறு வகையில் அமைந்துள்ளது.]

ஏறினான் இராமன் தேர்மேல் எழில் மலர் மாதினோடும்;
ஏறினான் இளைய கோவும், இராக்கதர் வேந்தனோடும்;
ஏறினான் அனுமன்; சாம்பன், இடபனே, முதலோர் ஏற,
மாறினார் நிலத்து நின்றார், வசந்த கோத்திரத்திலுள்ளார். 1-20

ஏறினன், இளைய கோவும்; இரவி சேய், சாம்பன், நீலன்,
'ஏறினன், வாலி மைந்தன்' என்றனர்; பலரும் ஏற,
சீறிய கும்பகன்னன் சினத்திடைச் சிதைந்து பட்ட,
மாறிலா வசந்தன் சேனை நின்றது, மாறி மண்மேல். 1-21

வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும், மயிலும்,
கண்டு கைதொழ வானரக் கடலும், மற்று யாரும்
எண் தவாத பொன் மானமீது இருந்திடும் இயற்கை
அண்டர் நாதனும், வானமும், அமரரும், ஆமால். 1-22

பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ளப் படை; அவர்தம்மை,
'வாரும் தேரின்மேல்' என, 'கும்பகர்ணன் வந்து ஏன்ற
போரில் எம் படைத் தலைவனோ பொன்றினன்; அவனை
நீர் எழப் பிசைந்து, இட்டனன் நெற்றியில்' என்றார். 1-23

ஆழி வெள்ளம் ஓர் எழுபதும், அனுமனே முதலாம்
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படைத் தலைவரை இராமன்
சூழ நோக்கினன்; சுக்கிரீவன் தனைப் பாரா,
'வாழி மாப் படை அனைத்தும் வந்தன கொலோ?' என்றான். 1-24

இரவி கான்முளை இறங்கி வந்து, இராமனை இறைஞ்சி,
'சுருதியாய்! ஒரு பேர் அரு சொல்லுவ; தொடர்ந்து
வருவதான இச் சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன்; கண்டருளுதி' என உரைத்தான். 1-25

கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன்
இசைந்த போரின் வந்து எய்தலும், இவன் தனை எடுத்துத்
தசைந்த தோல், மயிர், எலும்பு, இவைதமைத் தெரியாமல்,
பிசைந்து மோந்து, உடற் பூசினன், பெரு நுதற்கு அணிந்தே. 1-26

'இசைந்த சீராமன் ஓலை; இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனைக் கண்டதில்லை; மதித்தவாறு அழகிது அம்மா!
வசந்தனைக் கொண்டுதானும் வருக! எனோ? வாராகினாகில்,
நமன் குலம் களைவென்' என்றான் -'நாளை வா' என்ற வீரன். 1-27

[இதன் பின் 1-10, 11, 12, 13 என்ற பாடல்கள் உள்ளன.]

'செல்வனே! இன்னம் கேளாய்; யான் தெரி பாசக் கையால்
அல் எனும் அரக்கர் தம்மை வம்மின்!' என்று அழைத்து, மெள்ள
நல் இருட் பரவை மேனி நாரணன் தமரைக் கண்டால்,
'செல்லவே போமின்' என்று விடுக்குவென், செவியில், செப்பி. 1-32

[இதன்பின் 1-14, 15, 16,17, 18, 19 என்ற பாடல்கள் உள்ளன.]

'மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து, மாதே!
செய்யளாகிய திரு எனப் பொலிந்து, இனிது இருத்தி'
கைகளால் மிகப் புல்கியே, கண்கள் நீர் ததும்ப,
பொய் இலா மனத் திரிசடை, 'விடை' எனப் போனாள். 5-1

என்ற காலையில், எழுந்தவன் இயற்கையை நோக்கி,
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான்;
சென்று சேனையை நாடினன், திரிந்து வந்து எய்தி,
வென்றி வீரரில் வசந்தனைக் கண்டிலர், வெறுத்தார். 16-3

[சில பிரதிகளில், 'சொன்ன வாசகம் பிற்பட' (16) என்ற பாடலுக்குப் பின் 'வசந்தன் உயிர் வரு படலம்' தொடங்குகிறது. 16-3 என்னும் இந்த பாடலுக்கு முன் இதன் முன்னர் தந்துள்ள 1-21, 1-23 என்ற இரு பாடல்களும் காணப்பெறுகின்றன. இதன் பின் 1-24 என்ற பாடல் உள்ளது.]

என்னும் காலை (யில்), இராமனும் யமபடர் யாரும்
மன்னும் தொல் புரம் நோக்கியே, 'மணி நகை முறுவல்
உன்னின் அன்றி, யான் தேவருக்கு உதவி செய்து' என்னா,
பொன்னின் வார் சிலை எடுத்தனன், பொறுத்தனன், பொரவே. 16-5

எண் திசாமுகம் இரிந்து உக, யமபுரம் குலைய,
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற, அழியாப்
புண்டரீகத்துப் புராதனன் முதலிய புலவோர்
தொண்டை வாய் உலர்ந்து அலமர, தொடு வில் நாண் எறிந்தான் 16-6

பாக வான் பிறையாம் என, பலர் நின்று துதிப்ப,
வாகை கொண்ட வெஞ் சிலையின் வளைவுற வாங்கி,
மேக சாலங்கள் குலைவுற, வெயிற் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-7

வல்லை மாதிரம் மறைந்திட, வானவர் மயங்க,
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக,
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த,
தொல்லை நான்மறை துளங்கிட, சுடு சரம் துரந்தான். 16-8

வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க,
மின் புலம் கொளும் உரும் என்ன, வீக்கிய வில்லைத்
தன் பொலங் கையில் தாங்கியே தொடுத்த அச் சரங்கள்
தென் புலன் தனை நிறைத்தது; செறிந்தன, சேணில். 16-9

தருமராசனும், காலனும், யமபடர் தாமும்,
உருமு வீழ்ந்தென, சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து,
மரும தாரையில் பட்டது ஓர் வடிக் கணை வாங்கி
நிருமியா, 'இது இராகவன் சரம்' என நினைந்தார். 16-10

'கெட்டது இன்று இனித் தென்புலம்; கேடு வந்து எய்தி,
பட்டனம்; இனிப் பிழைப்பு இலம்' என்பது ஓர் பயத்தால்,
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப,
சிட்டர் தம் தனித் தேவனை வணங்கினர், சென்றார். 16-11

'சிறந்த நின் கருணை அல்லால், செய் தவம் பிறிது இலார்மேல்
புறம் தரு முனிவு சாலப் போதுமோ? புத்தேள்! நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ ? மலர்மிசை அயனைத் தந்த,
அறம் தரு சிந்தை ஐய! அபயம், நின் அபயம்' என்றார். 16-12

'ஐயனே! எமை ஆளுடை அண்டர் நாயகனே!
மெய்யனே!' என, சரணில் வந்து, யாவரும் வீழ்ந்தார்;
'பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள்!' என, போர் மூண்டு
எய்ய நேரிலாச் சிலையினை மடக்கினன், இராமன். 16-13

வந்து அடைந்து, 'உனக்கு அபயம்' என்று, அடியினில் வணங்கி,
"எம் தனிப் பிழை பொறுத்தி" என்று, இயம்பினிர்; இதனால்
உம்தம்மேல் சலம் தவிர்ந்தனென்; யூக நாயகன் தான்
தந்த சேனையில் வசந்தன் வந்திலன்; தருக' என்றான். 16-14

தன் தனிச் சரண் வணங்கலும், இராகவன் சாற்றும்:
'"என் தனிப் பிழை பொறுத்தி" என்று இயம்பினை; அதனால்
உன் தன் மேல் சலம் தவிர்ந்தனம்; யூகநாயகன் தான்
தந்த சேனையின் வசந்தன் வந்திலன்; தருக' என்றான். 16-15

அண்ணல் ஆரியன், 'தருதி' என்று அருளலும், அவர் போய்,
விண் எலாம் புகுந்து ஓடியே, வசந்தனை விரைவில்
கண்ணின் நாடி, நல் உயிரினைக் காண்கிலாது இருந்தார்;
'திண்ணன் யாக்கை எங்கே?' என, சாம்புவன் செப்பும்: 16-16

[இதன்பின் 1-25, 1-10, 1-11 என்னும் பாடல்கள் உள்ளன.]

அன்னதே என, 'அவன் உயிர்க்கு அமரர்தம் பதிக்கே
முன்னது ஓர் உடல் கொண்டு, இவண் தருக!' என மொழிய,
சொன்ன வாய்மை கேட்டு, அனுமனும் துணைவரைப் பாரா,
'பொன்னின் பாதுகம் பணிந்தனென், விடை' எனப் போனான். 16-20

[இதன்பின் 1-12, 13, 27, 1-14, 15, 16, 17, 18, என்னும் பாடல்கள் வர 'வசந்தன் உயிர் வரு படலம்' முடிவு பெறுகிறது]

அன்னது ஆதலின் அமரர் அந் நகரிடை, ஆங்கண்
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட, முந்தச்
சொன்ன வாயுவைத் தரிசிக்க, வசந்தனும் தோன்றி,
பொன்னின் பாதுகம் புனைந்தனன்; தருமனும் போனான். 16-29

அன்ன காலையில், புட்பக விமானம் ஆங்கு அடைய,
முன் இராகவன், சானகி, இலக்குவன் முதலா,
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா
உன்னி ஏறலும், உச்சியில் சொருகு பூப் போன்ற. 16-30

என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்;
'நன்றுதான்' என நாயகன் ஏறினன் திருவோடு;
அன்றுதான் இளங்கோவொடும் அக் கவி வெள்ளம்
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும். 17-1

ஆய கண்டு, அமலன் உள்ளம் மகிழ்ந்தனன்; அனுமன் தன்பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க, நெடியவன் சரணம் சூடி,
மேயினன், தமர்களோடு வசந்தனும்; விண்மீதாகப்
போயினது, இராமன் சொல்லின், புட்பக விமானம் அம்மா! 17-2

தேனுடை அலங்கல் மௌலிச் செங் கதிர் செல்வன் சேயும்,
மீனுடை அகழி வேலை இலங்கையர் வேந்தும், வென்றித்
தானையும், பிறரும், மற்றைப் படைப் பெருந் தலைவர்தாமும்,
மானுட வடிவம் கொண்டார்; வள்ளல் தன் வாய்மைதன்னால். 19-1

வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக விமானம் தன்மேல்,
ஒன்றும் நல் சீதையோடும், உம்பரும் பிறரும் காண,
வென்று உயர் சேனையொடும், இராமனும் விரைவின் எய்தி,
தென் திசை இலங்கை ஆதி, தேவிக்குத் தெரியக் காட்டும். 20-1

வென்றி சேர் கவியின் வெள்ளக் கடல் முகந்து எழுந்து, விண்மேல்
சென்றது விமானம்; செல்ல, திசையோடு தேசம் ஆதி
என்றவை அனைத்தும் தோன்ற, இராமனும் இனிது தேறி,
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்குத் தெரிக்கலுற்றான்: 20-2

'மன்னு பொற் கொடிகள் ஆட, மாட மாளிகையின் ஆங்குத்
துன்னு பைம் பொழில்கள் சுற்ற, தோரணம் துவன்றி, "வானோர்
பொன்னகர் ஒக்கும்" என்று புகழ்தலின், புலவராலும்
பன்ன அரும் இலங்கை மூதூர், பவளவாய் மயிலே! பாராய். 20-3

'வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகைக் கனி வாய் வல்லி!
எதிர் பொர வந்த விண்ணோர்-இறைவனைச் சிறையில் வைத்த
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல,
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய். 20-4

'வென்றி வேல் கருங் கண் மானே! என்னொடும் இகலி, வெய்ய
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்;
கன்றிய அரக்கன் சேனைக் காவலன் தன்னை நீலன்
கொன்று, உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் 20-5

'மறத்திறல் வாலி மைந்தன், வச்சிரத்து எயிற்றோன் தன்னைச்
செறுத்து, உயிர் செகுத்து, நின்ற தென் திசை வாயில் நோக்காய்;
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி
வெறுத்து, எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் 20-6

'கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;
மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!
இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய். 20-7

'கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,
அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,
சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய். 20-8

'பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று
ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து
நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய். 20-9

'இலங்கையை வலஞ் செய்து ஏக' என நினைந்திடுமுன், மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர, 'பிரகத்தன், நீலன்
நலம் கிளர் கையின் மாண்டது இவண்' என, நமன் தன் வாயில்
கலந்திட, 'ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது' என்றான். 20-10

குட திசை வாயில் ஏக, 'குன்று அரிந்தவனை வென்ற
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது' என் முன்,
வட திசை வாயில் மேவ, 'இராவணன் மவுலி பத்தும்,
உடலமும் இழந்தது இங்கு' என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11

'நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,
மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட
பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி
சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 20-12

'மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டா;
பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த
சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 20-13

ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,
பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்
மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து
தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார் 22-1

மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,
பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே. 22-2

ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, 'கமலம் அன்ன
பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு' என, இரதம் ஆங்கே
பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்: 23-1

'அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,
செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற
தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர், 23-2

'குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்
செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர் 23-3

'வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,
மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,
கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,
துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர், 23-4

'ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று
நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்
தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர். 23-5

'கண்டிலாது "ஒன்று கண்டோ ம்" என்று கைக்கூலி கொள்வோர்,
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,
மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர், 23-6

'பின்னை வா, தருவென்' என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,
கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,
துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்
இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர் 23-7

'ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,
நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை
வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,
பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர். 23-8

'கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்
வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்
செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,
மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர், 23-9

'கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே
பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,
உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்
தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர், 23-10

'தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வௌவும்
பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து
'கா' எனா, 'அபயம்' என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,
பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர் 23-11

'முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,
மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்
பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர். 23-12

கார்க் கன வரை சேர் கானில் கடுங் குழி கல்லும் கட்டர்,
நீர்க் கரை அதனில் ஒட்டி நெடுங் கலை முயல் மான் கொல்வோர்,
ஊர்க் கெழு கூவல் வீழ்ந்த உயிர்ப் பசு எடாது போவோர்,
வார்க் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள். 23-13

வழி அடித்து உண்போர், கேட்டால் வழி சொல்லாதவர்கள், வைப்பைப்
பொழி இருள் களவு காண்போர், பொய் சொல்லிப் பண்டம் விற்போர்,
அழிவு இலா வாய்மை கொன்றோர், அடைந்தது .....................
............................தெரிசிக்கத் தீர்க" என்றான். 23-14

'ஆதியர் மூவர்க்கு அந் நாள், அரு மறை அறைந்த அந்த
நீதியாம் புராணம் தன்னை இகழ்பவர், நிறையக் கேளார்,
பாதியில் விட்டு வைப்போர், படித்தவர்ப் பிரியப்படுத்தார்,
போதம் இலாதார், "மற்றச் சமயம் பொல்லாதது" என்பார். 23-15

'என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம்
ஒன்றிலர், நன்றிதன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்,
துன்றிய வினைகள் எல்லாம், சுடர் கண்ட இருளே போல,
தென் திசை வந்து, சேது தரிசிக்க, தீரும்' என்றான். 23-16

ஆங்கது கேட்டு, அருந்ததியே அனையாளும், 'அவதியுடன்
தீங்கு அணுகும் செய்ந் நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள்
தாங்க அரும் பாவங்களையும் எனக்காகத் தவிர்க்க' என,
'நீங்கிடுக அதுவும்' என்றான்-நிலமடந்தை பொறை தீர்த்தான். 23-17

'பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும்,
சீர் எழுவு திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க' என,
கார் எழுவு திரு மேனிக் கண்ணன் நினைப்பின் படியே,
ஈர்-எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால். 23-18

'பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்ச மா பாதகமும்
சீர் மேவும் திரு அணையைத் தெரிசிக்கத் தீர்க' எனா,
கார் மேவும் திரு மேனிக் காகுத்தன் கட்டுரைத்து,
வார் மேவும் முலைச் சனகி மாதோடும் வழிக்கொண்டான். 23-19

என்பன பலவும் அந்த ஏந்திழைக்கு இருந்து கூறி,
தன் பெருஞ் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும்
பொன் பொரு விமானம் தன் மேல் போகின்றபோது, மிக்க
இன்புடை இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து, என் செய்வான் 23-20

முன் பெல அரக்கன் தன்னை முனி கொலை தொடரக் கண்டு, ஆங்கு,
'அன்பினால் அரி பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி,
துன்பமே தொடரும் பொல்லாச் சூழ் கொலை தொலையாது' என்று ஆங்கு
இன்புறும் இராமன் வேலைக்கு இப் புறத்து இழிந்து நின்றான். 23-21

திருவணை உயர் பதம் செப்பி மீண்டபின்,
அருகு அணை திருமகட்கு, ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புயச் சனக வல்லிக்கு, ஆம்
கரு வரை முகில் நிற வண்ணன் காட்டுவான். 23-22

கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்,
அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு இருத்தி,
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,
ஒப்பு அரியாள் தன்னுடனே, உயர் சேனைக் கடலுடனே. 23-23

வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே,
வாய்ந்த சாய்கையும் வந்தது; வானவர் வணங்க,
ஏந்து தோள் புயத்து இராமனும், இலக்குவன் தானும்,
வாய்ந்த சீதையும், மானமும், வானர வேந்தும், 23-24

பாய்ந்த வேலையின் கரையிடைப் பரமன் அங்கு உறவே,
சாய்ந்த சாய்கையும் வந்து, அணுகாது அயல் கிடக்க,
ஏந்து திண் புயத்து இராமனும், இளையவன் தானும்,
வாய்ந்த சீதையும், சேனையும், மற்றுள பேரும், 23-25

நின்ற போதினில், நிகர் இலா அகத்தியன் முதலோர்
குன்றுபோல் புயத்து இராகவன் தனை வந்து குறுக,
"நன்று நின் வரவு" என்னவே, நாதனும் வணங்கி,
வென்றி வேந்தனும் வேதியர் தம்மொடு வியந்து, 23-26

சேதுவின் கரை சேர்ந்த அத் திறல் புனை இராமன்,
'ஏது இத் தலம்?' எனக் குறு முனிவனைக் கேட்ப,
'வாத ராசனும் வாசுகிதானும் முன் மலைந்த
போது, தந்தது, இப் பொன் நகர்' என்று அவன் புகன்றான். 23-27

புகன்றவன் தனைப் பூங் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறு முனி உரைசெய, அவனும்,
'பகர்ந்த தேவரும், பாற்கடல் பள்ளியான், பரமன்,
புகுந்தது இவ் வழி; பூவில் வந்தவனும், மற்று யாரும், 23-28

'இருப்பது இத் தலம்; ஆகையால், இராவணன் சாய்கை,
அருத்தி இன்றியே, அகன்றது' என்று அருள் முனி அறைய,
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி,
'கருத்து மற்று இனி உரை' என, குறுமுனி கழறும்: 23-29

'இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து,
உன் தன் மா நகர் எய்தினால், சாய்கை போம், உரவோய்!'
'அந்த நீதியே செய்தும்' என்று, அனுமனை அழைத்திட்டு,
'எம் தம் நாதனை இமைப்பினில் கொடு வருக' என்றான். 23-30

அந்த வேலை, முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற,
'கந்த மேவிய கங்கையில் ஓர் சிலை
தந்து காண்' என, மாருதி தாவினான். 23-31

'போதி' என்று, அவற் போக்கிய இராமனும், இந்த
மாது சீதையும், மைந்தனாம் இலக்குவன் தானும்,
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி,
ஆதி நாதனும் இருந்தனன், அமரர்கள் வியப்ப, 23-32

ஆன போதினில், ஐயன் மனத்துளே
தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார்?
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன்
மோனமாகி இருந்தனன், மூவரான். 23-33

காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே,
'ஆலம் உண்ட தே இவர் ஆம்' என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே. 23-34

'முகுத்தம் ஆனதே' என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண் மணல் கூப்பி,
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி,
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும். 23-35

ஒத்த பூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி,
சித்தம் வாழ்தர நின்றனன், தேவர்கள் துதிப்ப. 23-36

நின்ற போதினில், நிறங்களும் படலமும் கொண்டு,
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து,
'நன்று செய்தனை!' என்னப் போய் நாதனைப் பிடுங்கி,
வென்றி வால் அற்று, மேதினி வீழ்ந்தனன், வீரன். 23-37

[இந்தப் பாடல் காணும் இடத்தில், இதற்குப் பிரதியாக, பின்வரும் ஐந்து பாடல்கள் ஒரு பிரதியில் உள்ளன]

ஆய வேலையில், கங்கையின் அருஞ் சிலை வாங்கி,
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான்; தோன்றா,
சீயமாய் மலி அண்ணல் முன் திருச் சிலை வைத்து,
நேயமோடு இரு தாள் பணிந்து, அங்கு அவன் நின்றான். 23-37(அ)

நின்ற காலையில், அமலன் அங்கு அனுமனை நோக்கி,
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து, 'நம் பூசை
சென்றது ஆதலின், திருச் சிலை தாழ்த்தது; இப் புளினக்
குன்றினால் சிவன் தன்னுருக் குறித்தனென், கோடி'. 23-37(ஆ)

என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட, இறைஞ்சி,
முன்னி மாருதி மொழிந்தனன்; 'மூவுலகு உடையோய்!
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடைப் பிழையாது
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை' எனவே. 23-37(இ)

ஈர்த்தனன் வாலினாலே, இராகவன் பூசை கொள்ளும்
கூந்தனை; அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள, வால் விசைத்து, அனுமன் அந்த
மூர்த்தி என்று உணரான், நெஞ்சம் மூச்சு அற, தளர்ந்து வீழ்ந்தான் 23-37(ஈ)

மனுபரன் அனுமன் தன்னை வரவழைத்து, ஈசன் வன்மை-
தனை உரைத்து, 'இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி,
முனம் அதை ஏத்தி, பின் இம் மூர்த்தியை ஏத்தும்' என்ன,
அனைவரும் அமரர்தாமும் அம் முறை ஏத்தி நின்றார். 23-37(உ)

விழுந்தவன்தனை வெந் திறல் இராகவன் நோக்கி,
'அழுந்து சிந்தையாய்! அறிவு இலாது அதனை என் செய்தாய்?
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி' என்று உரைப்ப,
எழுந்து போய், அவன், இறைவனை அருச்சனை செய்தான். 23-38

அவ் இடத்து, 'அனுமன் தந்த, கங்கைமேல்
வவ்விடப்படும் வந்திடுமான் சிலை
இவ் இடத்தினில் யாவரும் ஏத்து' எனா,
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான். 23-39

'எம்தன் நாதன் இவன்' என்று இறைமகன்
தந்த நாமம் சராசரம் சார்ந்த போது,
இந்திரன், பிரமா, முதல் எய்தினார்;
வந்து, வானவர் யாவரும் வாழ்த்தினார். 23-40

'இத் தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார்,
நத்து உலாய கை நாரணன், நான்முகன்,
பித்தன், மூவரும் ஏத்தப் பெறுக' எனா. 23-41

என்று, இராகவன் ஈசன் பெருமையின்
நன்றிதன்னை நவில, அடங்குமோ?
சென்று சென்று, 'செய செய! போற்றி!' என்று,
அன்று இராச குமாரன் அறைகுவான்: 23-42

பூசனைத் தொழில் முடிந்தபின், பூங் கழல் இராமன்
தேவத் தச்சனை அழைத்து, 'நீள் திரைக் கடல் கிடந்த
காவல் மா மலை கொணர்ந்து, நீ கண்ணுதல் கோயில்
பூவில் வந்தவன் சொல்வழிச் சமை' எனப் புகன்றான். 23-43

நந்தியம் பதி இறைவனை நாதனும் அழைத்தே,
'இந்த மா மலை இரும்' என, யாவையும் நல்கி,
'விந்தை தங்கிய தோளினீர்! வேந்தனைப் பூசித்து,
இந்த மா நகர் இரும்' என, இராமனும் அகன்றான். 23-44

போன காலையில், பூங் கழல் இராகவன் பின்னே
சேனை தான் வர, தேவர்கள் யாவரும் வணங்கி,
மேல் நிலத்தவர் சென்றிட, விடை கொடுத்தருளி,
தானும், சீதையும், தம்பியும், சேதுவைச் சார்ந்தார். 23-45

தேர் ஏறி, மா நாகம் சென்னிமிசைச் சென்று ஏற,
கார் ஏறு கண்ணபிரான், காவலன் கமழ் துளபத்
தார் ஏறு தடந் தோளான், தனி வயிரக் குனி சிலைக் கைப்
போர் ஏறு, பொலிவுடனே வட திசையில் போயினனால். 23-46

சேர்ந்து, சேதுவின் தென் கரை கடந்து, வந்து எய்தி,
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகிப்
போந்து, வானரப் புதுமையும் சனகிக்குப் புகன்று,
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன், திறலோன். 23-47

வரையலுற்றான், மலர்க் கரத்து இருந்த வன் சிலையால்,
திரையில் உற்றிட மரக்கலத் தொகுதிகள் செல்ல,
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே;
உரை செய்து உற்றனன், சனகிக்குப் பின்னும் அங்கு உரவோன்: 23-48

'நின்னை மீட்பதே நினைந்து, சில் நெறி எலாம் நீந்தி,
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப,
சொன்ன வேற் படை அரக்கரைக் குறைத்த இச் சேனை
மன்னனால் பெற்ற வலி இது; வென்றியும் அதனால். 23-49

'தேய்ந்த மா மதி போலும் சிலைநுதல்!
வாய்ந்த வானர வாரணம், மாருதி,
ஆய்ந்த மா மணி ஆழியை அன்றுதான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால். 24-1

'மாருதி, நின்னை நாடி வருபவன், ஏறிப் பாயப்
பாரிடைக் குளித்து நின்ற பவள மால் வரையைப் பாராய்;
போரிடைப் பொலன் கொள் பொன் தார்ப் புரவிகள் போக்கு இற்று என்ன,
நீரிடைத் தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய்!' 24-2

ஆரியன் அனைய கூற, அடி இணை இறைஞ்சி, ஐய
வேரி அம் கமலை செப்பும்: 'விரிந்த கிட்கிந்தை உள்ளார்,
சீரிய அயோத்தி சேரத் திருவுளம் செய்தி' என்ன,
கார் நிற அண்ணல், 'மானம் காசினி குறுக' என்றான். 26-1

என்றவன் சேயை நோக்கி, இசைந்து, கிட்கிந்தை உள்ளார்,
நன்று நம் பதியைக் காண, நாயக! அழைத்தி' என்ன,
சென்று அவன் சாம்பன் தன்னை, 'திசை எட்டும் திரியச் சாற்றி,
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு' என்றான். 27-1

என்றபோது, எழுந்து சாம்பன், இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான்; ஓதக் கேட்டே,
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்றென்ன,
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர், மகிழ்ச்சி கூட, 27-2

சந்திர மானம் தன்மேல் தாரகை சூழ்ந்தது என்ன,
இந்திரன் மகனார் தாரத் தாரையும், ருமையும், கூடி
வந்தனர்; வந்து மொய்த்தார், வானர மடந்தைமார்கள்;
இந்திரை கொழுநன் தன்னை ஏத்தினர், இறைஞ்சி நின்றார். 29-1

நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழக் கடைந்தபோது, அங்கு
ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே,
தன்னுடன் பிறந்த முத்து மாலையை, தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள், விரைவில் தாரை. 29-2

தாரையைச் சீதை புல்கி, 'தாமரைக் கன்ணன் அம்பால்
பாரை விட்டு அகன்றான் வாலி; பார் உளோர்க்கு அவதி உண்டோ?
சீரிது மலரோன் செய்கை; தெரியுமோ? தெரியாது அன்றே?
ஆர் இது தெரியகிற்பார், காலத்தின் அளவை அம்மா?' 29-3

என்றிட, தாரை நிற்க; எரி கதிர்க் கடகம் ஒன்று,
மின் திரிந்தனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது,
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது, அன்று
சென்று அடி இணையில் இட்டே, இறைஞ்சியே, ருமையும் நின்றாள் 29-4

நின்றவள் தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று,
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்குச் சூழ,
தன் திருக் கைகளாலே தழுவினள் என்னக் கண்ணால்
ஒன்று அல பலவும் கூற, உணர்ந்து உளம் உவகை உற்றே. 29-5

'கடி கமழ் குழலினாளே! கார்காலம் யாங்கள் வைகும்
வடிவுடைச் சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்;
அடு திறல் பரிதி மைந்தன் நகர் அதன் அழகு பாராய்;
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய். 30-1

'கனி வளர் பவளச் செவ் வாய்க் கனங் குழை! நின்னைக் காணாத்
துனி வளர் துன்பம் நீங்க, தோழமை நாங்கள் கொண்ட
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும்
நனி வளர் நட்புக் கொண்ட நலம் தரு நாகம் நோக்காய். 30-2

'மாழை ஒண் கண்ணாய்! உன்னைப் பிரிந்து யான் வருந்தும் நாளில்,
தாழ்வு இலாத் துயரம் நீங்க, தாமரை உந்தியான் கை
ஆழி அம் ஆற்றலானை, அனுமனை, அரக்கர் அஞ்சும்
பாழியான் தன்னை, கண்ட பம்பையாறு அதனைப் பாராய். 30-3

'பொய் வித்தி, வஞ்சம் காத்து, புலை விளைத்து, அறத்தைத் தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அக் கடல் பெரும் படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து, நம்மை
உய்வித்த வீரன் தன்னைக் கண்ட இடம் உது கண்டாயே. 30-4

'சவரியது இருக்கைதானும், கவந்தனைத் தடிந்த கானும்,
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும்,
சவையுறு சுருட்டன் மைந்தன், சரவங்கள், முதலோர் காதல்
கவை அறு முனிவர் தங்கள் இடங்களும் கருதி நோக்காய். 30-5

'விரை கமழ் ஓதி மாதே! விராதன் வந்து எதிர்ந்து போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை அதனை நோக்காய்;
'சரதம் நான் அரசு வேண்டேன்; தட முடி சூடுக' என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனைப் பாராய். 30-6

'வளை பயில் தளிர்க் கை மாதே! வரு புனல் பெருகக் கண்டு,
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி, யான் துயரம் இன்றி
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப, வெல் போர்
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனைப் பாராய். 30-7

'பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய்;
கயல் பொரு கங்கை யாறும், குகன் உறை நகரும், காணாய்;
அயன் முதல் அமரர் போற்ற அனந்தன்மேல் ஆதிமூலம்
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியைத் தொழுது நோக்காய்.' 30-8

என்று உரைத்து, இளவலோடு சனகியும், இரவிசேயும்,
வென்றி வீடணனும், சேனை வெள்ளமும் விளங்கித் தோன்ற,
பொன் திகழ் புட்பகத் தேர் பூதலத்து இழிய ஏவி,
இன் துணைப் பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே. 30-9

என்று, மன்னவன் பற்பல புதுமையும் யாவும்
மன்றல் அம் குழல் சனகிக்குக் காட்டினன், மகிழ்ந்து,
குன்று துன்றிய நெறி பயில் குட திசைச் செவ்வே
சென்று, கங்கையின் திரு நதித் தென் கரை சேர்ந்தான். 35-1

ஆர்த்து விண்ணவர் ஆடினர்; ஆடகத் தேரும்
பேர்த்த போகினில் நிலமிசை அணுகுற, பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து,
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான். 35-2

மான மானம் மீப்போனது, வட திசை வருவது
ஆன காலையில், அறிவனும் ஆயிழை அறிய,
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப,
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார். 35-3

'பாகம் மங்கையோடு அமர்ந்தவன் பயில்வுறு கங்கை
ஆகும் ஈது' என அறநெறி வழுவுறா அலங்கல்
மேக வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி,
தாகம் நீங்கினர்; அவ் இடைத் தேவரும் சார்ந்தார். 35-4

இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி,
வெறித் துழாய் முடி வேத மெய்ப் பொருளினை வியவா,
'புறத்ததாம் உயிர் பெற்றனம்' என அகம் பொங்க,
திறத்து இராமன்பால் திருமுனி அவனும் வந்துற்றான். 35-5

வந்த மா முனிவோர்களை வணங்கும் முன், அவர்கள்,
'எந்தை! நீ இன்று இங்கு இருந்து, உள வருத்தமும் நீக்கி,
செந்து, நாளை அத் திருநகர் அடைக' எனச் செப்பி,
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார். 39-1

'தகும் அருந் தவங்கள் ஈட்டி, தசமுகத்து அரக்கன் பெற்ற
யுகம் அரைக் கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர்
சுகம் உற, சிலை கைக் கொண்ட தொல் மறை அமல! யார்க்கும்
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ ?' 41-1

இந்த வாசகம் இயம்பினன், பின்னரும் இசைப்பான்,
'எந்தை! நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி,
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க!' என்று
அந்தம் இல் பரத்துவன் சொல, அவ் இடத்து அடைந்தான். 42-1

அடைந்த மா முனித் தலைவனை அருச்சனை செய்து,
மிடைந்த சேனை அம் பெருங் கடல் சூழ் தர, மேல் நாள்,
கடைந்த பாற்கடல் கண் துயில் நீங்கி, வானவர்கள்
படிந்து போற்றிட இருந்தென, பரிவுடன் இருந்தான். 42-2

இருந்த போது, இராமன் தன்னை இருடியும் இயம்பும்: 'எந்தாய்!
பெருந் திறல் இலங்கை தன்னை எங்ஙனம், பெரியோய்! நீயே
வருந்தினை, குரங்கு கொண்டு, மாய வல் அரக்கன் தன்னைத்
திருந்த அப் போரில் வென்று மீண்டவா செப்புக!' என்றான். 42-3

இராகவன் அவனை நோக்கி, 'இறந்த வாள் அரக்கர் எல்லாம்
அராவின் மாருதியும், மேன்மை வீடணன் தானும், ஆங்கே
குராவருஞ் சேனை எல்லாம் கொன்றிட, கொற்றம் கொண்டு
விராவியே மீண்டது' என்று, மீளவும் பகரலுற்றான்: 42-4

'தந்திரம் உற்ற சேனை தரைப்பட, மறுப்படாமல்
அந்தரம் உற்றபோது, அங்கு அரு மருந்து அனுமன் தந்தான்;
மந்திர வித்தே! எம்பி வரி சிலை வளைத்த போரில்
இந்திரசித்தும் பட்டான்; இலங்கையும் அழிந்தது அன்றே. 42-5

'கறங்கு கால் செல்லா, வெய்ய கதிரவன் ஒளியும் காணா,
மறம் புகா, நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே;
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர்; தேரும் காலை,
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அப் பதியும், ஐயா! 42-6

'மறக் கண், வெஞ் சினத்தின் வன்கண், வஞ்சக அரக்கர் யாரும்
இறக்க, மற்று இறந்தது எல்லாம் எம்பிதன் ஈட்டின், எந்தாய்!
பிறப்பு மேல் உளதோ? சூழ்ந்த பெருந் திசை பேரின், பேராத்
துறக்கத்தோ, யாதோ, பெற்றார்? அறிந்தருள், சுருதி நூலோய்!' 42-7

என்ற வாசகம் இருந் தவன் கேட்டு, இகல் இராமன்
தன் துணைப் பெருந் தம்பியைத் தழுவி, 'நீ தக்கோய்!
வென்று மீண்டிலை ஆயின, அவ் விண்ணவர் முனிவர்
பொன்றுமாறு அன்றி, ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ? 42-8

மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு, மறையோன்
பாதம் முந்துற வணங்கி, மா முனிவனைப் பாரா,
'ஏதும் யான் செய்தது இல்லை; அவ் இலங்கைமேல் வெகுண்டு
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன்; விளிந்தார். 42-9

'அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென்; அது அத்
துன்று தார் புனை மாருதி பெரும் புயத் துணையால்
வென்றி கொண்டனம், யாங்கள்; மேல் விளம்புவது எவனோ?'
என்று இயம்பினன், இருடிக்கும் இளவலும், இயைந்தே. 42-10

அனுமன் என்பவன் வாள்முகம் நோக்கினன்; அவனும்
புனித மாதவன் தனைத் தொழா, 'புண்ணியப் பொருளாம்
தனு வலம் கொண்ட தாமரைக் கண்ணவன் தனயன்
எனும் அது என்கொலோ? யாவர்க்கும் தந்தை நீ' என்றான். 42-11

அங்கு அவன் சொல, அனுமனும் உரைசெய்வான்: அருணப்
பங்கயந்தனில் சீதையாம் பராபரையாட்டி,
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்-ஏழும்
தங்கு பொன் வயிற்று அன்னைதன் தன்மையை நிகழ்த்தும்: 42-12

'இராகவன் பெருங் குலத்தையும், இப் பெருஞ் செல்வத்
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும், தந்து, என்
பராபரத்தினைப் பங்கயத்து அமுது எனப் பணிந்தாள்;
புராதனர்க்கு அரசே!' என மாருதி புகன்றான். 42-13

அன்ன வாசகம் கேட்டலும், அந்தணர் கோவும்,
'என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது, யாம்?' என்று,
ஒன்றும் வாசகம் உரைத்திலன்; உள் அன்பு குளிர,
'அன்னை வாசவன் திருவினைத் தந்தது' என்று அறைந்தான். 42-14

பண் குலாவிய சுக்கிரீவன்தனைப் பாரா,
கண்குலா மனம் களித்தவன் கழல்மிசைப் பணிந்து,
மண்குலாம் புகழ் வீடணன், 'நீலனே முதலாம்
எண்கின் வேந்தனும் அழித்தனர் இலங்கையை' என்றான். 42-15

என்று அவன் இயம்பக் கேட்டு, அங்கு இருந்த மா தவனும், 'இந்த
வென்றிஅம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மேவிக்
குன்று என வருக!' என்று கூறலும், இமையோர் நாட்டில்
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து, ஆங்கு வந்தார் 42-16

பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண்
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி வந்து, இழிந்தார்;
ஆன மெய்ப்படை தம்முடைப் போகத்துள் அழுந்த,
ஆன கற்பினாளுடன் எழுந்து, இராமனும் அறைவான்: 42-17

முனிவன் வாள் முகம் நோக்கி, 'மெய் முழுது உணர் முனியே!
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால்
நினையவும், உரை நிரப்பவும், அரிது; இனி, நீதிப்
புனித! உண்டி எம்முடன்' எனப் புரவலன் புகன்றான். 42-18

என்ற வாசகம் கேட்டலும், இருந் தவத்து எவரும்,
'நன்று, நாயகன் கருணை!' என்று உவகையின் நவில,
துன்று தாரவன் பாதுகம் தொழுது, 'அருந் தொல்லோய்!
ஒன்று கேள்' என, உவகையின் மாருதி உரைக்கும்: 42-19

'செய்த மா தவம் உடைமையின், நினக்கு அன்பு சிறந்து
பொய் இல் சாதனம் பூண்டனன்; புண்டரீகக் கண்
ஐய! நின் பெருங் கருணைதான் அடியனேற்கு அமையும்;
உய்யுமாறு இதின் வேறு உளதோ?' என்று மொழிந்தான். 42-20

திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய, ஆண்டு
இருந்தபோது, தன் திருவுளத்து இராகவன் நினைந்தான்;
'பொருந்த மா முடி புனைக!' எனப் பொருந்துறான், போத
வருந்து தம்பிக்கு, 'வருவென் யான்' என்பதோர் வாக்கை. 42-21

'சித்திரகூடம் தீர்ந்து, தென் திசைத் தீமை தீர்த்திட்டு
இத் திசை அடைந்து, எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக,
வித்தக! மறந்திலேன் யான்; விருந்தினையாகி, எம்மோடு
இத் திறம் இருத்தி' என்றான், மறைகளின் இறுதி கண்டான். 42-22

'சுரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி,
சரத வானவர்கள் துன்பம் தணித்து, உலகங்கள் தாங்கும்
மரகத மேனிச் செங் கண் வள்ளலே! வழுவா நீதிப்
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென்; கேட்டி' என்றான். 42-23

'வெயர்த்த மேனியன்; விழி பொழி மழையன்; மூவினையைச்
செயிர்த்த சிந்தையன்; தெருமரல் உழந்து உழந்து அழிவான்;
அயிர்த்து நோக்கினும், தென் திசை அன்றி, வேறு அறியான்;
பயத்த துன்பமே உருவு கொண்டென்னலாம் படியான். 42-24

இந்தியம் களைந்து, இருங் கனி காய் நுகர்ந்து, இவுளிப்
பந்தி வந்த புல் பாயலான்; பழம் பதி புகாது,
நந்தியம்பதி இருந்தனன், பரதன் - நின் நாமம்
அந்தியும், பகல் அதனினும், மறப்பிலன் ஆகி.' 42-25

முனிவன் இம் மொழி கூறலும், முது மறைப் பெருமான் -
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும்
மனம் நெகிழ்ந்து, இரு கண்கள் நீர் வார, அங்கு அமலன்
நினைவின் முந்துறும் மாருதிக்கு, இனையன நிகழ்த்தும்: 42-26

என்று உரைத்து, 'அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்
குன்று உரைத்தனைய தோளும், குல வரைக் குவடும் ஏய்க்கும்
என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும், இறுத்த வீர!
நின் தனைப் பிரிந்தது உண்டே, யான்' என நிகழ்த்தினானால். 42-27

'மின்னை ஏய் உமையினானும், விரை மலர்த் தவிசினானும்,
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய்!
உன்னையே வணங்கி, உன் தன் அருள் சுமந்து உயர்ந்தேன்; மற்று இங்கு
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை' என்றான் 42-28

அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி,
'வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன்; கேட்டி, வேண்டிற்று
எவ் வரம் எனினும்; தந்தேன்; இயம்புதி' எனலும், ஐயன்,
'கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க.' 42-29

'"அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம்
சொரி தரு பருவம் போன்று, கிழங்கொடு கனி காய் துன்றி,
விரி புனல் செழுந் தேன் மிக்கு, விளங்குக!" என்று இயம்புக' என்றான்;
புரியும் மா தவனும், 'அஃதே ஆக!' எனப் புகன்றிட்டானால். 42-30

அருந்தவன், 'ஐய! நின்னோடு அனிக வெஞ் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென்' என்னா, விளங்கும் முத் தீயின் நாப்பண்,
புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து, புறப்படும் அளவில், போகம்
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே. 42-31

அன்று அவர் தம்மை நோக்கி, அந்த மாதவனும், 'இந்த
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும்
குன்றினில் அருளும்' என்று கூறலும், வான நாட்டுள்
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து, ஒருங்கு வந்தார். 42-32

அரைசரே ஆதியாக, அடியவர் அந்தமாக,
கரைசெயல் அரிய போகம் துய்க்குமா கண்டு, இராமற்கு
அரைசியல் வழாமை நோக்கி, அறு சுவை அமைக்கும் வேலை,
விரை செறி கமலக் கண்ணன் அனுமனை விளித்துச் சொன்னான்: 42-33

மாருதி விடைகொண்டு ஏக, வரதனும் மறையோன் பாதம்
ஆர் அருளோடு நீட வணங்கினான்; அவனும் ஆசி
சீரிது கூறி, 'சேறி' என்றலும், மானம் சேர்ந்து,
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான். 44-1

'மான் நேர் விழியாளுடனே வனம் முன்
போனான் ஒரு நாள்; வரும் நாள் இலதோ?
தேனே! அமுதே! தெளிவே! தெளிவின்
ஊனே! உயிரே! உலகு ஆளுடையாய்! 44-2

'அம் பவளச் செவ்வாய், அணி கடகச் சேவகன்,
வம்பு அவிழும் சோலைக் கோசல நாடுடை வள்ளல்,
எம் பெருமான், என்னை, இழி குணத்து நாயேனை,
'தம்பி' என உரைத்த தாசரதி தோன்றானோ! 44-3

வாழி மலைத் திண் தோள் சனகன் தன் மா மயிலை,
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை,
"தாழ்வு இல் பெருங் குணத்தாள்தான் உன் கொழுந்தி; நீ
தோழன்" என உரைத்த தோன்றலார் தோன்றாரோ!' 44-4

'துங்க வில் கரத் தோளினார் சொன்ன நாள்,
இங்கு வந்திலர்; யான் இறப்பேன்' எனா,
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும்
அங்கு நீர்க் கங்கை அம்பியில் ஏற்றினான். 44-5

'வேத நாதனும், வில்லியும், விரை மலர்த் திருவும்,
ஏது செய்யினும், என் உயிர் முடிப்பென்' என்று எண்ணி,
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து, உயிர் விடுவான்,
காதலாருடன் கங்கையின் நடுவுறச் சென்றான். 44-6

'கண்ணும் தோளும் வலம் துடிக்கும்; கரை
வண்ணப் புள்ளும் வலியும் வலத்திலே,'
எண்ணும் காலையிலே, எழில் மாருதி,
'அண்ணல் வந்தனன்' என்று உரையாடினான். 44-7

உள்ள வான் கிளை ஏற்றி, உயர் குகன்
வெள்ளக் கங்கையின் ஆக்கி, விரைந்து, அவண்
உள்ளும் நெற்றி உடைப்பளவில், புகும்
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான். 44-8

ஓங்கு வாலினை ஓட்டி, அவ் ஓடங்கள்
தீங்கு உறாவகைச் சுற்றி, திருகி, நீர்
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான்; அவை
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால். 44-9

'கை ஆர் வெய்ய சிலைக் கருணாகரற்குக் காதலுடைத் தோழ-
மை ஆர், சிருங்கவேபுரம் உடையாய்! மிகு கோசலை களிறு,
மை ஆர் நிறத்தான், வந்தொழிந்தான், மிதிலை வல்லி அவளுடனே;
ஐயா! வந்தான் தம்பியொடும்; அடியேம் உய்ய, வந்தானே. 44-10

'ஆர்? உனை உரை' என, அனுமன் கூறுவான்:
'சீரிய வாயுவின் தோன்றல்; சீரியோய்!
குருடை இராமற்குத் தூதன்' என்று எனது
ஏருடைத் தலையின் மேல் எழுதப்பட்டுளேன். 44-11

பரதனைத் தீயையும் விலக்கி, பாருடை
வரதனை, இராமனை, மாறிக் காண்பது
சரதமே; இனி இறை தாழ்க்க ஒணாது' என,
கரதலத்து ஆழியும் காட்டிப் போயினான். 44-12

பரத்துவன் வருதலும், பரிந்து, இராமனும்
கரத்துணை குவித்தனன், இளைய காளையோடு,
எரித் திற முனியும் ஆசிகள் இயம்பிட,
விருப்பொடும் இடவகை இனிது மேயினான். 84-1

நின்றவன், 'இவ் வயின் நெடியவன் தனைச்
சென்று இறைப் பொழுதினில் கொணர்வென், சென்று' எனா,
பொன் திணி பொலங் கழல் வணங்கிப் போயினான்,
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான். 102-1

ஆய காலையில், ஐயனைக் கொண்டு, தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான்;
'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து' எனா,
தீயின் ஆகுதி செங் கையின் ஓக்கினான். 102-2

பான நெய்யொடு, நானமும், சாந்தமும், பலவும்,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய், கருப்பூரம்,
தேன் அளாவிய முக்கனி காயொடு தேன், பால்,
வான நாட்டு அர மங்கையர் மகிழ்ந்து கொண்டு இழிந்தார். 102-3

கங்கை தரு கழலாற்கும், இளவலுக்கும், காரிகைக்கும்,
துங்க முடி வீடணற்கும், சுக்கிரிவப் பெருமாற்கும்,
தங்கு பெருஞ் சேனைக்கும், தனித்தனியே, பொன் கலந்தால்
அங்கு அடைவின் மண்டலம் இட்டு, அணி விளங்க நிறைத்தனரால் 102-4

வெள்ளை நறும் போனகமும், மிகு பருப்பும், பொரிக் கறியும்,
தள்ள அரிய முக்கனியும், சருக்கரையும், நறு நெய்யும்,
எள்ள அரிய பலவிதத்துக் கறியமுதும், இமையவர்தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் 102-5

நீர் உலவி, நீர் குடித்து, நினைந்திருந்து, ஆகுதி பண்ணி,
கார் உலவு மேனியனும், காரிகையும், இளங் கோவும்,
தேர் இரவி திருமகனும், தென் இலங்கைப் பெருமானும்,
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர், பொலிவால். 102-6

அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத்
திக்குறு மானத்தைச் செவ்வன் எய்தி, அச்
சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்;
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். 102-7

'உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப்
பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன்,
திருப்பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்;
இருப்பன ஆயின, உலகம் யாவையும், 102-8

'தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா
வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்!
நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்தனை;
ஆயினும், அன்பினால் யாம் செய் மா தவம்' 102-9

என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்;
ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், எந்தைக்கும்,
இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?' என்றனன் -
குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 102-10

'இரவி காதலன், இலங்கையர் கோன், இவர் உதவி
அரசின் ஆசையது என்னலாம்; அனுமனே! என்பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை, உடன் உணும் தரமது அல்லால்.' 102-11

[இதன்பின் 42-18, 19, 20 எண்ணுள்ள பாடல்கள் உள்ளன].

'கொற்றவன் உடன் உண்ணுமோ?-கோது இல் மாதவனே!
வெற்றி வீரனே!' என அஞ்சி நின்றனன்; விமலன்
மற்றப் போனகம் ஒரு கை வாய் வைத்தபின், வாராப்
பற்றி, அப்பொழுது அனுமனும் பரிகலம் பறித்தான். 102-12

பரிகலத்து அமுது ஏந்தியே, பந்திகள் தோறும்
இரவி காதலற்கு, அங்கதற்கு, இலங்கையர் வேந்தற்கு,
உரிய வீரர்கட்கு அளித்து, தான் அவர்கள் ஓபாதி
வரிசையால் உண்ண, மா முனி விருந்தும் உண்டனரால். 102-13

பரிகலத்து ஒ(வ்)வோர் பிடிகொடு, பந்திகள் தோறும்
இரவி புத்திரற்கு, இலங்கையர் வேந்துக்கும் உதவி,
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி, பின், அவனும்
வரிசையின் கொண்டு, மா முனி விருந்தும் உண்டனனால். 102-13(அ)

அன்ன காலையில் போனகம் அமரர் பொற்கலத்தே
முன்னம் போல் படைத்து, திருமுன்பு வைத்தனரால்;
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும், பசி தீரா
மன்னன் மா முனி விருந்தும் உண்டு, அகம் மகிழ்ந்தனனால். 102-14

பான நல் அமுதுடன் கருப்பூரமும், பலவும்,
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி, முன் நிற்ப,
தான மெய்ப் படைத் தம்முடைப் போகத்துள் தந்த
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான். 102-15

அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர்-
வண்ணனே முதல் வானரக் கடல் எலாம் வாய்ப் பெய்து,
உண்ணும் வாசகம் கேட்டு, இமையோர், முனிவோரும்,
மண்ணும், நாகரும் யாவரும், அருந்துயர் மறந்தார். 102-16

மான வேந்தரும் வள்ளலும் மலர்க் கரம் விளக்கி,
ஆன வெள்ளிலையோடு அடைக்காய் அமுது அருந்தி,
ஞான மா முனி பெருமையைப் புகழ்ந்து, நாயகனும்
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து, 102-17

ஆர் இருள் அகலும் காலை, அமலனும், மறையோன் பாதம்,
ஆர்வமோடு எழுந்து சென்று, வணங்கலும், அவனும் ஆசி
சீரிது கூறி, 'சேறி' என்றலும், தேர்மேல் கொண்டு,
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான். 102-18

விருந்தும் உண்டு, மா முனிவனை விடைகொண்டு, தேர்மேல்
அருந்ததிக் கற்பினாளொடும் படையொடும் அமைந்தான்;
வருந்து கோசல நாடுடன் அயோத்தியும் வாழ,
பரிந்து, இராமனும் ஏகினன், பரதனைக் காண்பான். 102-19

இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான் அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ, சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-20

இளவலை, '"அண்ணலுக்கு எதிர் கொண்ம்" என்று, நம்
வளை மதி அயோத்தியில் வாழும் மக்களை,
"கிளையொடும் ஏகு" எனக் கிளத்தி, எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய்' என்றான். 102-21

'"தோரணம் நட்டு, மேல் துகில் பொதிந்து, நல்
பூரணப் பொற் குடம் பொலிய வைத்து, நீள்
வாரணம் இவுளி தேர் வரிசைதான் வழாச்
சீர் அணி அணிக!" எனச் செப்புவாய்' என்றான். 102-22

பரத்துவன் உறைவிடத்து அளவும், பைம் பொன் நீள்
சிரத் தொகை மதில் புறத்து இறுதி சேர்தர,
வரத் தகு தரள மென் பந்தர் வைத்து, வான்
புரத்தையும் புதுக்குமா புகறி, போய்' என்றான். 102-23

என்றலும், அவன் அடி இறைஞ்சி எய்தி, அக்
குன்று உறழ் வரி சிலைக் குவவுத் தோளினான்,
நன்று உணர் கேள்வியன், நவை இல் செய்கையன்
தன் துணைச் சுமந்திரற்கு அறியச் சாற்றினான். 102-24

அவ் உரை கேட்டலும், அறிவின் வேலையான்,
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான்,
'வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று, அறை பறை எற்றுக!' என்றிட, 102-25

'வானையும் திசையும் கடந்த வான் புகழ்க்
கோனை இன்று எதிர்கொள்வான், கோல மா நகர்த்
தானையும் அரசரும் எழுகதான்' எனா,
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார். 102-26

முரசு ஒலி கேட்டலும், முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும்,
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர,
திரை செறி கடல் என, எழுந்து சென்றவால். 102-27

'அனகனை எதிர்கொள்க' என்று அறைந்த பேரி நல்
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டென்னவும்,
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடிப் பேரியும், ஒத்த ஆம் அரோ. 102-28

அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும், ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும், தெரிவைமார்களும்,
உறுபொருள் எதிர்ந்தென, உவந்து போயினார். 102-29

அன்னையர் மூவரும், அமரர் போற்றிட,
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின்,
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர,
மன்னவன் மாருதி மலர்க்கை பற்றுறா. 102-30

திருவடி இரண்டுமே செம் பொன் மௌவியா,
இரு புறம் சாமரை இரட்ட, ஏழ் கடல்
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ,
பொரு அரு வெண்குடை நிழற்ற, போயினான். 102-31

எல்லவன் மறைந்தனன் - என்னை ஆளுடை
வில்லியை எதிர் கொள, பரதன் மீச் செல்வான்,
அல்லி அம் கமலமே அனைய தாள்களில்
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே. 102-32

அவ் வழி மாருதி அம் கை பற்றிய
செவ் வழி உள்ளத்தான், 'திருவின் நாயகன்,
எவ் வழி உறைந்தது? அச் செயல் எலாம் விரித்து,
இவ் வழி எமக்கு நீ இயம்புவாய்' என்றான். 102-33

என்றலும், மாருதி வணங்கி, 'எம்பிரான்,
மன்றல் அம் தொடையினாய்! அயோத்தி மா நகர்
நின்றதும், மணவினை நிரப்பி மீண்டு கான்
சென்றதும், நாயினேன் செப்பல் வேண்டுமோ?' 102-34

சித்திரகூடத்தைத் தீர்ந்த பின், சிரம்
பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம்,
இத் தலை அடைந்ததும், இறுதி ஆய, போர்
வித்தகத் தூதனும் விரிக்கும் சிந்தையான். 102-35

'குன்று உறழ் வரி சிலைக் குரிசில், எம்பிரான்
தென் திசைச் சித்திரகூடம் தீர்ந்தபின்,
வன் திறல் விராதனை மடித்து, மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான். 102-36

'ஆங்கு உறை தபோதனர், "அரக்கர்க்கு ஆற்றலேம்,
நீங்கினம் தவத்துறை, நீதியோய்!" என,
'நீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம்; நீர்
வாங்குமின் மனத் துயர், வாய்மையால்' என்றான். 102-37

'ஆறு நால் ஆண்டு அவண் வைகி, அப் புறத்து
ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால்
மாறு இலாத் தமிழ் முனி வனத்தை நண்ணினான்,
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர. 102-38

'குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன்
தடங் கணான் தனை எதிர் தழுவி, சாபமும்,
கடுங் கணைப் புட்டிலும், கவசம் தானும், அத்
திடம் படு சுரிகையும், சேர ஈந்தனன். 102-39

'அப் புறத்து எருவையின் அரசைக் கண்ணுறா,
துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன்
மெய்ப் புகழ்த் தம்பியும் வீரன்தானும் போய்,
மைப் பொழில் உறு பஞ்சவடியின் வைகினார். 102-40

'பல் பகல் இறந்த பின்றை, பாதக அரக்கி தோன்றி,
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி, இளைய வீரன்
அல்கிய திருவைத் தேற்றி, அவளுடைச் செவியும் மூக்கும்
மல்கிய முலையும் கொய்தான்; மறித்து, அவள் கரற்குச் சொன்னாள் 102-41

'கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும், காந்தி
எரியும் மூன்று அனலே ஒப்பார், எழுந்து, வெஞ் சேனையோடும்
விரவினர்; ஐயன் செங் கை வில்லினை நோக்கும் முன்பு, ஓர்
எரி தவழ் பஞ்சின் உக்கார்; அரக்கியும், இலங்கை புக்காள். 102-42

'இருபது தடக் கையான் மாட்டு இசைத்தலும், எழுந்து பொங்கி,
ஒருபது திசையும் உட்க, வஞ்சக உழை ஒன்று ஏவி,
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு,
திருவினை நிலத்தொடு ஏந்தி, தென் திசை இலங்கை புக்கான் 102-43

'போகின்ற காலை, ஏற்ற சடாயுவைப் பொருது வீட்டி,
வேகின்ற உள்ளத்தாளை வெஞ் சிறை அதனில் வைத்தான்;
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன்-கொன்று, இளவலோடு,
பாகின்ற கீர்த்தி அண்ணல் தந்தையைப் பரிவின் கண்டான். 102-44

'அன்னவன் தனக்கு வேண்டும் அருங் கடன் முறையின் ஆற்றி,
நன்னுதல் தன்னைத் தேடித் தென் திசை நடக்கும் ஐயன்,
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி,
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான். 102-45

'ஆங்கு அவள் தனது சொல்லால், அருக்கன் மா மகனை அண்மி,
பாங்குற நட்டு, "வாலி பருவரல் கெடுப்பல்" என்னா,
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு,
ஆங்கு அவன் தனக்குச் செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் 102-46

'கால மா மாரி நீங்க, கயவனோடு இடபன், காந்து
நீலன், மா மயிந்தன், சாம்பன், சதவலி, பனசன், நீடு
வாலி மா மைந்தன், என்று இவ் வானரத் தலைவரோடு
கூல வான் சேனை சூழ, அடைந்தனன், எங்கள் கோமான். 102-47

'எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி,
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி, அருக்கன் மைந்தன்,
தழுவிய திசைகள் தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம்
பொழுது இறை தடாது மீளப் போக்கினன், திருவை நாடி. 102-48

'தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும், வாலி சேயும்
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ, நாயேன்
குன்றிடை இலங்கை புக்கு, திருவினைக் குறித்து மீண்ட
பின்றை வந்து, அளக்கர் வேலைப் பெரும் படை இறுத்தது அன்றே 102-49

'அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்,
செறி புயந்து அரக்கன் தம்பி, "திருவினை விடுதி; அன்றேல்,
இறுதி உற்றன, நின் வாணாள்" என அவன் உரைப்ப, சீறிக்
கறுவுற, பெயர்ந்து போந்து, கருணையான் சரணம் பூண்டான். 102-50

'ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு, முடியும் ஈந்து,
பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பதைப்பு இலாது
தாங்கினன் சிறிது போது, தாமரை நயனஞ் சேப்ப,
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே. 102-51

'மற்று அவன் அவயம் என்ன, மலர்ச் சரண் அடைந்த வேலை,
வெற்றி வானரர்கள் பொங்கி, வெற்பினால் வேலை தட்டல்
முற்றுற நன்கு இயற்றி, மொய் ஒளி இலங்கை புக்கு,
பற்றினர் சுற்றி ஆர்த்தார், வானவர் பயங்கள் தீர்ந்தார். 102-52

'மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்,
தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பிதன் தோளும் தாளும்
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ,
சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண் தீர்ந்தான் 102-53

'இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும்
விலக்க அரு வலத்தினானும் இளைஞரும் கிளையும் வீழ்ந்தார்;
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து, அன்று
உலக்குநர் குழுக்கள் தோறும் உடற் குறை ஆடல் கண்டார். 102-54

'தேவரும் முனிவர்தாமும், சித்தரும் தெரிவைமாரும்,
மூவகை உலகுளோரும், முறை முறை தொழுது மொய்ப்ப,
பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு
யாவையும் இயம்பி, "மாண்டோ ர்க்கு இயற்றுதி கடன்கள்" என்றான் 102-55

'"ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன்; அவனுக்கு இன்னே
சூடுக மௌலி" என்ன, சுந்தர இராமன் தம்பி
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான். 102-56

'நான்முகன், விடையை ஊரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்,
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற,
ஊன்முகம் கெழுவு வேலாய்! உம்பர் நாயகியைச் சீறி,
தேன் முகம் மலரும் தாரான், அரி சொல, சீற்றம் தீர்ந்தான். 102-57

'மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்கோன் விமானத்தை எய்த,
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ,
கையினால் பொருந்தப் புல்லி, கண்ணின் நீர்க் கலசம் ஆட்டி,
"செய்யவட்கு அருள்க" என்றான்; திருவின் நாயகனும் கொண்டான் 102-58

'"என்னை நன் கருணைதன்னால் ஈன்று எடுத்து, இனிது பேணும்
அன்னையும் மகனும் முன்போல் ஆக" என, அருளின் ஈந்து,
மன்னவன் போய பின்றை, வானரம் வாழ்வு கூர,
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கிப் போனார். 102-59

'வெள்ளம் ஓர் ஏழு பத்தும், விலங்க அரும் வீரர் ஆகி
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும், ஒற்றை ஆழி
வள்ளல் தன் மகனும், உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் -
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன், இலங்கை வேந்தன். 102-60

'ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து, காதல்
சூரியன் மகனும், தொல்லைத் துணைவரும், இலங்கை வேந்தும்,
பேர் இயல் படையும், சூழ, பெண்ணினுக்கு அரசியோடும்
சீரிய விமானத்து ஏறி, பரத்துவன் இருக்கை சேர்ந்தான். 102-61

'அன்பினால் என்னை, நின்பால் ஆழியும் காட்டி, "ஆன்ற
துன்பு எலாம் துடைத்தி" என்று துரந்தனன், தோன்றல்' என்று,
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் - முது நீர் தாவி
வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன். 102-62

காலின் மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர,
'வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட
நீல மா முகில் பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன்,
போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழ் உடைத்து, அடிமை மன்னோ' 102-63

என்று அவன் இரங்கி ஏங்கி, இரு கணும் அருவி சோர,
வன் திறல் அனுமன் செங் கை வலக் கையால் பற்றி, காலின்
சென்றனன் இருளினூடு, செறி புனல் கங்கை சேர்ந்தான்,
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் 102-64

இராவணன் வேட்டம் போய் மீண்டு, எம்பிரான், அயோத்தி எய்தி,
தராதல மகளும் பூவின் தையலும், மகிழ சூடும்
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி, குணபால் அண்ணல்
விராவுற எடுத்தாலென்ன, வெய்யவன் உதயம் செய்தான். 102-65

காலை வந்து இறுத்த பின்னர், கடன் முறை கமலக் கண்ணன்
கோல நீள் கழல்கள் ஏத்தி, குரக்கினத்து அரசை நோக்கி,
'சாலவும் கலைகள் வல்லோய்! தவறு உண்டு போலும், வாய்மை;
மூலமே உணரின், உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ ? 102-66

'எழுபது வெள்ளம் சேனை வானரர், இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால்,
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ?
விழுமிது, "எம்பிரான் வந்தான்" என்று உரைத்தது, வீர!' என்றான் 102-67

'ஓசனை இரண்டு உண்டு அன்றே, பரத்துவன் உறையும் சோலை;
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும்
மூசிய பழுவம் இங்ஙன் கிடப்பதோ, முரற்றல் இன்றி?
பேசியது அமையும்; நம் கோன் எங்கு உளன், பெரும!' என்றான் 102-68

பரதன் அஃது உரைத்தலோடும், பணிந்து மாருதியும், 'சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய்! விண்ணவர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால், மலரும் தேனும்
சரதமே மாந்தி மாந்தித் துயின்றது, தானை எல்லாம். 102-69

'வானவர் கொடுக்க வந்த வரத்தினால், மதுபம் மூசும்
தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்துக்
கானகம் பொலிதலாலே, கவிக் குலம் அவற்றை மாந்தி,
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும்; நீ துயரல், எந்தாய்! 102-70

'இனி ஒரு கணத்தின், எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டுப்
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி' என்று உரைத்தான்; இப்பால்,
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன், வண்ணக்
குனி சிலைக் குரிசில், செய்தது இற்று எனக் குணிக்கலுற்றாம்: 102-71

அருந்தவன் சுவைகள் ஆறோடு அமுது இனிது அளிப்ப, ஐயன்
கருந் தடங் கண்ணியோடும் களைகணாம் துணைவரோடும்,
விருந்து இனிது அருந்தி, நின்ற வேலையின், வேலை போலும்
பெருந் தடந் தானையோடும், கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் 102-72

தொழுதனன்; மனமும் கண்ணும் துளங்கினன்; சூழ ஓடி
அழுதனன்; கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான்;
தழுவினன் எடுத்து, மார்பில் தம்பியைத் தழுவுமாபோல்;
'வழு இலா வலியர் அன்றோ, மக்களும் மனையும்?' என்றான். 102-73

'அருள் உனது உளது, நாயேற்கு; அவர் எலாம் அரிய ஆய
பொருள் அலர்; நின்னை நீங்காப் புணர்ப்பினால் தொடர்ந்து போந்து
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்;
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ, வாழ்வு மன்னோ?' 102-74

ஆயன பிறவும் பன்னி, அழுங்குவான் தன்னை, 'ஐய!
நீ இவை உரைப்பது என்னே; பரதனின் நீ வேறு உண்டோ?
போய், இனிது இருத்தி' என்ன, புளிஞர் கோன் இளவல் பொன் தாள்
மேயினன் வணங்கி, அன்னை விரை மலர்த் தாளின் வீழ்ந்தான். 102-75

தொழுது நின்றவனை நோக்கி, துணைவர்கள் தமையும் நோக்கி,
முழ்து உணர் கேள்வி மேலோன் மொழிகுவான்; "முழு நீர்க் கங்கை
தழுவு இரு கரைக்கும் நாதன்; தாயினும் உயிர்க்கு நல்லான்;
வழுவு இலா எயினர் வேந்தன்; குகன் எனும் வள்ளல் என்பான்.' 102-76

அண்ணல் அஃது உரைத்தலோடும், அரி குலத்து அரசன் ஆதி
நண்ணிய துணைவர் யாரும் இனிது உறத் தழுவி, நட்டார்;
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல,
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன், இரவி என்பான் 102-77

அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி,
பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போலும்
இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும்,
கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான். 102-78

கதிரவன் உதிப்ப, காலைக் கடன் கழித்து, இளவலோடும்
அதிர் பொலன் கழலினான் அவ் அருந் தவன் தன்னை ஏத்தி,
விதி தரு விமானம் மேவி, விளங்கிழையோடும், கொற்றம்
முதிர் தரு துணைவரோடும், முனி மனம் தொடரப் போனான். 102-79

தாவி வான் படர்ந்து மானம் தடையிலாது ஏகும் வேலை,
தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவ்வி
ஓவியம் உயிர் பெற்றென்ன உம்பர்கோன் நகரும் ஒவ்வா
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே. 102-80

பொன் மதில் கிடக்கை சூழப் பொலிவுடை நகரம் தோன்ற,
நன் மதிக் கிழவர்தம்மை நோக்கிய ஞான மூர்த்தி,
'சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று'
என்னலும், கரங்கள் கூப்பி எழுந்தனர், இறைஞ்சி நின்றார். 102-81

தோன்றலும், சுமந்திரன் தொழுத கையினன்,
ஈன்று, காத்து, அழித்து, அவை இயற்றும் அவ் உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல்
சான்றினைப் பரதற்குச் சுட்டி, சாற்றுவான். 103-1

கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம்
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன், மானவன்-தொழுதல் உன்னியே,
விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். 107-1

[இதன் பின் சில பிரதிகளில் 102-7, 8, 9, 10 பாடல்கள் உள்ளன]

அப்பொழுது அவ் வயின் அடந்துளோர்களைத்
'தப்பு அறக் காண்பென்' என்று ஐயன் தன் மனத்து
ஒப்பு அற எண்ணும் முன், உம்பர் நாடு வந்து
இப் புறத்து இழிந்தென இழிந்த, மானமும். 111-1

அவ் வயின், 'அயோத்தி வைகும் சனமொடும், அக்குரோணி
தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும், தாயரோடும், இவ் வயின் அடைந்துளோரைக் காண்பென்' என்று இராமன் உன்ன,
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது, விமானம் தானும். 110-2

எவ் வயின் உயிர்கட்கும், இராமன் ஏறிய
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும்
அவ் அவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் 110-3

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் வேலை-
தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும்
புனையும் நூல் முனிவன் தானும், பொன் அணி விமானத்து ஏற,
வனை கழல் குரிசில் முந்தி, மாதவன் தாளில் வீழ்ந்தான். 115-1

எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி கூறி
அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, அன்பு கூர்ந்து,
விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ,
வடித்த நூல் முனியும் ஏந்தி, வாழ்த்தினான், ஆசி கூறி. 115-2

கைகான் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, மற்றை
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செங் கண்
ஐயனை, அவர்கள் தாமும் அன்புறத் தழுவி, தம் தம்
செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார். 115-3

அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள்;
தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள்
பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் புல்லி,
'மன்னவற்கு இளவல் நீயே; வாழி!' என்று ஆசி சொன்னார். 115-4

நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின் மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர,
சூடிய கடி மலர் தூவி ஆர்த்தனன்;
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி, எய்தினான். 118-1

ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிதறி ஓட,
தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் -'தனிமை நீங்கி,
காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை கூர
நாடு மறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?' என்று உலகம் நைய 118-2

மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த கையன்,
தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல் தாளும்,
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் பொருந்தப் புல்லி,
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து வீழ்ந்தான். 118-3

ஆயிடைக் குகனும் வந்து, ஆங்கு, ஆண்டவன் அடியில் வீழ,
நாயகன் உவந்து புல்லி, 'நண்ணி, என் பின்பு வந்த
தூயனே! கிளையினோடும் சுகம் இருந்தனையோ?' என்று
வாயிடை மொழிந்தான்,-மற்றை மறைகளும் காணா அண்ணல். 119-1

குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, சாம்பன் தன்னை,
செருக்கிளர் நீலன் தன்னை, மற்றும் அத் திறத்தினோரை,
அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி,
மருக் கமழ் தொடையல் மாலை மார்பினன், பரதன் நின்றான். 119-2

மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு தானைத்
தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும்
சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், சேனையோடும்,
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன் தோன்றினானால். 119-3

அழுகையும் உவகைதானும் தனித்தனி அமர் செய்து ஏற,
தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் நிற்றலோடும்,
தழுவினன் இராமன்; மற்றைத் தம்பியும் அனைய நீரான்,
'வழு இனி உளது அன்று, இந்த மா நிலக் கிழத்திக்கு' என்றான் 119-4

வேறு வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி
கூறிய குழுவினோரும் குழுமி, அங்கு இராமன் பாதம்,
ஊறிய உவகை தூண்ட, தொழுதனர்; உவந்த பின்பு
தேறிய கமலக் கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான். 119-5

'ஏறுக சேனை எல்லாம் விமான மீது' என்று, தன்போல்
மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்
ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமாபோல்
ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது அன்றே. 119-6

'உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா,
கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,
விரை செறி அலங்கள் மாலைப் புட்பக விமானம்' என்று என்று,
உரை செய்து, வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார். 119-7

அசனியின் குழுவும், ஆழி ஏழும் ஒத்து ஆர்த்ததென்ன,
விசையுறு முரசும், வேதத்து ஓதையும், விளி கொள் சங்கும்,
இசையுறு குரலும், ஏத்தின் அரவமும், எழுந்து பொங்கி,
திசை உறச் சென்று, வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த. 119-8

நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி,
'வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென்' என்று விம்மும்
கொம்பு இயல் மருங்குல் தெய்வக் கோசலை குளிர் பொன் பாதம்
தம்பியரோடும் தாழ்ந்தான், தாமரைக் கண்ணீர் தாழ. 119-9

மூன்று என நின்ற தன்மைக் குணங்களின் உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மானச் சிறுவனைத் தலைப்பட்டாட்குத்
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ?
ஈன்ற போது ஒத்தது அன்றே, எதிர்ந்த போது ஒத்த தன்மை! 119-10

இணை மலர்த் தாளின் வீழ்ந்த இலக்குவன் தன்னை ஏந்தி,
பணை முலைப் பாலும், கண்ணீர்த் தாரையும் பாய, நின்றாள்;
பிணை எனத் தகைய நோக்கின் சீதையை, பேடை அன்னத்
துணையினை, உலகில் கற்பின் பெருங் கதித் துறையை, கண்டாள் 119-11

நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி, விம்மி,
பால் முலை சோர நின்ற பல் பெருந் தவத்தினாளை,
கால் முதல் தொழுது, தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார்,
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம். 119-12

அவ் வயின் விமானம் தாவி, அந்தரத்து, அயோத்தி நோக்கி,
செவ்வையின் படரல் உற்ற, செகதல மடந்தையோடும்;
இவ் உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான்,
கவ்வையின் ஏகுகின்ற நீர்மையைக் கடுக்கும் அன்றே. 119-13

வளம் கெழு கயிலை ஈசன், மலர் அயன், மறைகள் நான்கும்,
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து, உயர் வெளிப் பாழ் மேலாய்,
விளங்குறும் நேமிப் புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார். 119-14

விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற,
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட,
களங்கணி அனைய அக் கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை, விளைவு கூரவே. 119-15

புகுந்தனர் நகரிடை-பொங்கும் ஓசையின்
மிகுந்துள கவிப் பெருங் கடலும், மேதகு
மகம் பயில் முனிவனும், மற்று உளோர்களும்,
அகம் தனில் அருங் களிப்பு எழுந்து துள்ளவே. 119-16

நம்பியும் வசிட்டன் கூற, நந்தியம்பதியில் சென்று,
வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர்,
உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பம் செய்தார். 119-17

உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும்
மயிர் வினை செய்வித்து, ஆங்கே மாசு அற மண்ணில் தாழும்
செயிர் அறு கடிலக் கற்றைத் திரள் அறக் களைந்து நீக்கி,
குயில் புரை மொழியர் ஆவி கொள்வது ஓர் கோலம் கொண்டார் 119-18