கம்பராமாயணம்/யுத்த காண்டம்/வீடணன் முடி சூட்டு படலம்

வீடணனுக்கு இராமன் தேறுதல் கூறி, பின் வீடணனுக்கு முடி சூட்டுமாறு இலக்குவனை ஏவுதல்

'வருந்தல், நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்!' எனா,
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்: 1

'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.' 2

என்று கூறி, இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்,
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று, தம் தம செய்கை புரிந்தனர். 3

தேவர்கள் முடி சூட்டுவதற்கு வேண்டுவன செய்தல்

சூழ் கடல் புனலும், பல் தோயமும்,
நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,
பாழி துற்று அரி பற்றிய பீடமும்,
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 4

வாச நாள் மலரோன் சொல, மான்முகன்
காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட,
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன். 5

இலக்குவன் வீடணனுக்கு முடி சூட்டுதல்

மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,
ஐயன் ஆணையினால், இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ. 6

வீடணன் அரியணையில் வீற்றிருத்தல்

கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. 7

தேவர் பூமழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர், வேறு இலா
மூவரோடு, முனிவர், மற்று யாவரும்,
நாவில் ஆசி நறை மலர், தூவினார். 8

முடி புனைந்த வீடணன் இலக்குவனை வணங்கி உபசரித்து, இராமபிரானை அடைந்து, தொழுதல்

முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினா: 9

'விலங்கள் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ
கலங்கலா நெடுங் காவல் இயற்று' எனா,
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான். 10

வணங்கிய வீடணனை இராமன் தழுவி, அவனுக்கு நீதி கூறல்

குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்: 11

'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,
இருமையே அரசாளுதி, ஈறு இலாத்
தரும சீல!' என்றான் - மறை தந்துளான். 12

பன்னும் நீதிகள் பல் பல கூறி, 'மற்று
உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!
மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி,
தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான். 13

மிகைப் பாடல்கள்

மாருதிச் செல, மங்கலம் யாவையும்
மாருதிப் பெயர்கொண்டு உடன் வந்தனன்;
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 4-1

செய்த மா மணி மண்டபத்தே செழுந்
துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,
எய்து வானவ......................................கம்மி......
.................................................................... 5-1

மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி, ஓம விதிமுறை கொண்டிட,
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே, 5-2

பொய்யினுக்கு ஒரு வெ..........................
..............................................................
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார். 5-3

வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட, 6-1

வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர மார்பொடு அழுந்திடப் புல்லினான்,
ஆரினானும் அறிவரும் ஆதியான். 10-1

'ஆதி நாளில், "அருள் முடி நின்னது" என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகம் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய். 11-1

'"வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது" என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய்' என்றான். 13-1